Kanne Kadhal Penne–EPI 8

239948099_925484634705538_288795760143811764_n-72c301e0

அத்தியாயம் 8

 

இந்தியர்களின் ஐஸ்க்ரீம் என அழைக்கப்படும் குல்பி, முகலாய ஆட்சியின் போதே உணவுப் பொருளாக இருந்தது என சரித்திரம் சொல்கிறது. ரோஜா, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, மாங்காய், பிஸ்தா இப்படி பல வகை ருசிகளில் கிடைக்கிறது இந்த குல்பி. சென்னை ரோட்டோரக் கடை வியாபாரத்தில் குல்பியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

 

அன்று மாலை வெயிலும் அல்லாத மழையும் அல்லாத ஒரு ஏகாந்த பொழுதாக இருந்தது. வியாபாரத்துக்கு அவரசமாகக் கிளம்பிக் கொண்டிருந்த ஆண்கள் இருவரின் முன்னே வந்து நின்றாள் பவளமல்லி.

“என்ன கண்ணு?” என பாசமாகக் கேட்டார் கோபால்.

“அப்பா! இன்னிக்கு நானும் வியாபாரத்துக்கு வரவா?”

“அதெல்லாம் முடியாது! நீ சொகுசா வூட்டுலயே இரு! அங்கிட்டு வந்து இன்னா பண்ண போற நீ! அடுப்பு சூடெல்லாம் தாங்காது உன் ஒடம்பு” என பட்டென கூறினான் ஜெய்சங்கர்.

இத்தனை நாட்களில் ஓரளவு அவனைக் கண்டு வைத்திருந்தாள் பவளமல்லி. ஓரளவுதான்! ‘பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும்’ என பாடி வைத்தவர்கள், ஆண் மனது என்ன கோலமென்று சொல்லி வைக்கவில்லையே! இரவில் மல்லி என் கள்ளி, பவளா என் அமலா, தேவா என் ஜீவாவென காதுக்குள் முணுமுணுப்பாய் கொஞ்சுபவன், பகலில் உர்ரெனத்தான் இருப்பான். உள்ளுக்குள் பாச ஊற்றே இருந்தாலும், அதை அதட்டலாகத்தான் காட்ட வரும் சங்கருக்கு.

முதல் நாள் சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்து முடித்த நொடி,

“உன் மேல நான் கொல காண்டுல இருந்தேன்டி! என்ன பண்ணியோ என்ன மாயம் பண்ணியோ, என்னைக் கன்னன் கழிய வச்சிட்ட!” என்றான்.

“கன்னன் கழிஞ்சிட்டீங்களா?” அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் குழப்பமாகக் கேட்டாள்.

“ஆமாடி! பொண்ணுக்குன்னா கன்னி கழிஞ்சிருச்சுன்னு சொல்வாய்ங்க! பையனுக்குனா கன்னன் கழிஞ்சிருச்சுன்னுதானே சொல்லனும்?”

அவன் சொல்லிய விதத்தில் அப்படி ஒரு சிரிப்பு மல்லிக்கு. அவனை இன்னும் இறுக்கிக் கொண்டவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். வாழ்நாளில் சிரித்திறாத சிரிப்பையெல்லாம் அன்றுதான் சிரித்தாள் பவளமல்லி.

“இப்ப இன்னா ஜோக்கு சொல்லிட்டேன்னு இந்த சிரி சிரிக்கற?” என கேட்டவனின் வாயில் அழுத்தமாக முத்தமிட்டாள் மல்லி.

“விட்றி!” என வாய் சொன்னாலும் கைகள் அவளை வாகாக அணைத்துக் கொண்டன.

புதிதாய் கற்றுக் கொண்ட வித்தையை மறுபடியும் பரீட்சித்துப் பார்க்க இவன் முயல,

“போதும் மாமா! மாவு பிசையனும்” என தடுத்தாள் இவள்.

“பெசைஞ்டிட்டுத்தான்டி இருக்கேன்” என்றவன் வாயை இறுகப் பொத்தியவள்,

“எந்திரிங்க மாமா” என எழுப்பிவிட்டாள்.

அதன் பிறகு இன்னொரு குளியல். மறுபடியும் மாவு பிசையும் படலம். சற்றுத் தள்ளி அமர்ந்து அவன் வேலை செய்வதையேப் பார்த்திருந்தாள் மல்லி. மாவு பிசையும் போது ரிதமாய் அசைந்த அவனது புஜங்களையும் வலுவான கரங்களையும் எப்பொழுதும் போல ஆசையாகப் பார்த்திருந்தாள் இவள். எல்லோருக்கும் முகத்தைப் பார்த்துக் காதல் வருமென்றால், இவளுக்கு அவன் கைகளைப் பார்த்தல்லவா காதல் வந்திருந்தது.

ஆம், காதல்தான்! மற்ற ஆண்களைப் போல ஆரம்பத்தில் இவனையும் கடந்துதான் போனாள் பவளமல்லி. கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு ரோமியோ போல இவளை சைட்டடித்தவனின் மேல் எரிச்சலாகத்தான் வந்தது. இவளை மடக்கவென கூடுதல் பரோட்டா வைத்தவனின் மீது ஆத்திரமாய் வந்தது. மற்றவர்கள் காசு கொடுத்து மடக்கப் பார்த்தால், மாஸ்டர் பரோட்டா கொடுத்து மடக்கப் பார்க்கிறானா என கோபம் கிளர்ந்தது. ஆனால் அதன் பிறகு, அவளுக்காக அந்த இரண்டு புறம்போக்குகளை வெளுத்து எடுத்தவன் மீது ஒரு மரியாதை வந்திருந்தது. பசி என்றவளுக்கு உணவிட்டவன் மீது அன்பு வந்திருந்தது. தனது பாதுகாப்புக்காக அறிவில்லையா என ஆத்திரமாகத் திட்டியவனின் மீது பாசம் வந்திருந்தது. இது எல்லாவற்றையும் விட ஓங்கி ஓங்கி அடித்த அந்தக் கரங்களின் மீது தனி ஈர்ப்பு வந்திருந்தது. அன்றிரவு உறங்கும் முன் செய்யும் கற்பனையில், இன்ஸை அவன் அடி வெளுப்பது போல நினைத்துப் பார்த்து அவ்வளவு சந்தோஷமாகத் தூங்கினாள் பெண்.

மறுநாளில் இருந்து அவன் முகம் பார்த்து மெலிதாக சிரிக்க ஆரம்பித்தாள் மல்லி. ஆரம்பத்தில் சிரித்தவன், அவள் கிளினெரென தெரிந்ததில் இருந்து, அவளுக்கு பரோட்டா சுட்டுக் கொடுப்பதைக் கூட செய்யாமல், அறுவறுப்பில் ஒதுங்கவும் அவள் மனம் பெரிதாய் அடி வாங்கியது. அன்றிரவு கண்ணீரில் தலையணை நனைந்துப் போனது. யாரும் தமக்கு வேண்டாமென அறிவு நினைத்தாலும், வெட்கம் கெட்ட மனது தனக்காக மெனக்கெட்டவன் திரும்பிப் பார்க்க மாட்டானாவென ஏங்கி அழுதது.

‘விடு விடு! பரோட்டாவுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான்!’ என தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டவளுக்கு இடியாய் வந்து இறங்கியது கந்தமாறனின் செயல்.

எங்கே செல்வது என அறிவு வேகமாய் யோசிக்க, சங்கரின் கரமே இவள் நினைவில் வந்து நின்றது. அடிக்கும் அந்தக் கரம் தன்னைக் கண்டிப்பாய் அரவணைக்கும் என தோன்றியது. எப்படியாவது அவனிடம் அடைக்கலமாகி விட்டால், மற்றதை அவன் பார்த்துக் கொள்வான் என தோன்றவும்தான் கோபாலுக்கு போன் செய்தாள். இப்பொழுதெல்லாம் தன்னை வெறுக்கிறானே அவன் என மனம் லேசாக சஞ்சலப்பட்டாலும், ஆரம்பத்தில் அவனுக்கு ஏதோ தன்னிடம் பிடிக்கப் போய்தானே வழிய ஆரம்பித்தான். அதை மீண்டும் ஊதிப் பெரிதாக்கி பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டுதான் இவனிடம் வந்திருந்தாள்.

“என்ன ரோசனை?”

இரு கால் முட்டிகளையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அதில் தலை வைத்து அவனைப் பார்த்திருந்தவள்,

“என் மேல ஏன் கொல காண்டு மாமா?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

தூர ஓடி இருந்த கோபம் மீண்டும் மூக்கின் மேல் அமர்ந்துக் கொண்டது இவனுக்கு. பரோட்டா மாவை உருண்டைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தவன், உருண்டைகளைப் பொத்பொத்தென தூக்கிப் போடுவதில் ஆத்திரத்தைக் காட்டினான்.  

“ஏன்னு மேடத்துக்குத் தெரியாதோ?”

“இல்ல, தெரியல! சொல்லுங்க மாமா”

“உன்னைப் பொண்டாட்டியா வச்சுக் குடும்பம் நடத்த எனக்குத் துப்பில்லன்னு நெனைச்சுத்தானே அப்படி ஒரு வார்த்தை கேட்ட? இருக்கற வரைக்கும் இவனுக்கு வைப்பாட்டியா இருந்துட்டு, பெரச்சனை முடிஞ்சதும் விட்டுட்டுப் எஸ்ஸாகிடலாம்னுதானே நெனைச்ச? இந்த சங்கர விட்டு எங்கயும் போ மிடியாதபடி கட்டுனேன்ல தாலி. அது ஒனக்கு வேலிடி! யார்கிட்ட!” என மிதப்பாய் சொன்னவனை முறைத்தாள் இவள்.

“இன்னா, இன்னா லுக்கு?”

“என்னைப் பார்த்து என்னமோ தீண்டத் தகாதவளப் போல தள்ளி நின்ன மனுஷன் பேசற பேச்சா இது?” என கேட்டவள், எழுந்து போய் அவன் கன்னத்தில் பட்டென ஓர் அறை வைத்து விட்டு குடுகுடுவென ஓடிப் போய் கதவருகே நின்றுக் கொண்டாள்.

முதலில் அதிர்ந்தவன், அவள் தைரியத்தைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான்.

“நீ பெரிய பிஸ்கோத்துன்னா அடிச்சிட்டு இங்கயே நிக்க வேண்டியதுதானேடி? எதுக்கு அம்மாம் தூரம் ஓடிப் போய் நிக்கிற?”

“நீ அடிக்க வந்தா, கதவு தொறந்து ஓடிடலாம்ல! அதான்!”

“அடச்சீ! பொண்டாட்டி மேல கைய வைக்க நான் இன்னா பொறம்போக்கு சொங்கியா? அதெல்லாம் அடிக்க மாட்டேன், கிட்ட வா”

“நெஜமா அடிக்கமாட்டியா?”

“வாடிங்கறேன்!”

மெல்ல எட்டெடுத்து வைத்து அவன் அருகே வந்து நின்றாள் மல்லி. பட்டென அவளை இழுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“இந்த மாமன் கையால அடிக்க மாட்டேன்டி. வாயால அடிப்பேன்” என வசனம் வேறு பேச, இவளுக்கு முகமெல்லாம் புன்னகை.

“இந்த கோவாலுதான் உன்னைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, பழகக் கூடாதுன்னு கன்டிஷனா சொல்லுட்டாருடி! நீ போலிஸ் வீட்டுப் பொண்ணாம்! நல்ல எடத்துல சீரோட கட்டிக் குடுப்பாங்களாம். அதனால நான் ஒதுங்கிடனும்னு ஒத்தக் காலுல நின்னாரு நைனா. நான் இன்மா பண்ணட்டும் சொல்லு? என் கூட இருந்தா, தோ இப்போ வாழுற மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்குப் பார்த்து வாழனும். எங்கயோ யார் கூடவோ ஜபர்தஸ்தா நீ வாழ்வன்னு நெனைச்சுத்தான் நான் ஒதுங்கிக்கினேன் தேவா! சத்தியமா உன்னையோ உன் வேலையையோ கேவலமா நான் நெனைக்கல! அப்படி நெனைக்க நான் இன்னா கலேக்டரு ஜோலியா பார்க்கறேன்!”

மனதில் பெரிய பாரம் நீங்கியதைப் போல இருந்தது மல்லிக்கு. அவன் வயிற்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டவள்,

“உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு சொல்லக் கூடாத வார்த்தை சொல்லிட்டேன் மாமா! என்னை மன்னிச்சிரு! நீ என்னைத் திரும்பி பார்க்கலைன்னதும் ரொம்ப மனசு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த அனாதைய அதுவும் சுத்தம் செய்யறவள நிமிர்ந்துப் பார்க்கக் கூட தகுதியில்லாதவளா நெனைச்சிட்டியோன்னு துடிச்சுப் போயிட்டேன்” என்றாள்.

“அனாதை பனாதைன்னுலாம் சொன்னின்னா, கொன்னுடுவேன்டி. நானும் நைனாவும் இருக்கற வரை நீ அனாதை இல்ல.” என ஆத்திரமாகப் படபடத்தான் இவன்.

அவன் காட்டிய கோப முகத்தில் இவளுக்கு பயம் வரவில்லை. ஆறுதலே வந்தது.

“அந்த இன்சு இருக்கானே, அவன் என் மேல தப்பா கைய வச்சதில்லைனாலும், அவன் பார்வையே சரியில்ல மாமா. எல்லா வேலையையும் நான் பார்த்தாலும் அந்தாளுக்கு பரிமாறதுலாம் எங்கம்மாத்தான் செய்வாங்க. அவன் என் கிட்ட நெருங்காத மாதிரி கண் கொத்திப் பாம்பா என்னை கவனிச்சிக்கிட்டாங்க. என் மேல பாசத்துனால இப்படி செஞ்சாங்கன்னு நெனைச்சிடாதே மாமா. எங்க அந்தாளு என்னைப் புடிச்சிக்கிட்டு அவங்கள டீல்ல விட்டிருவானோன்னு பயமா வேணும்னா இருக்கலாம். ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்த ஆம்பளைல இருந்து, என்னை சுத்தி வந்த ஆம்பளை வரைக்கும் இந்த மாதிரி கேவலமான பிறவிகளத்தான் நான் பார்த்துருக்கேன். இவனுங்க என் கிட்ட எதிர்ப்பார்த்தத உனக்குக் குடுத்துட்டா, என்னை காப்பாத்தி விட்ருவேனு தப்பா நெனச்சுட்டேன் மாமா. கட்டிக்கத்தானே தகுதி தராதாரம்லாம் வேணும். வச்சிக்க அதெல்லாம் தேவைப்படாதேனு நெனைச்சு கிறுக்குத்தனமா பேசிட்டேன். தப்புத்தான்! தப்புத்தான்” என கண்ணீரோடு கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டான் சங்கர்.  

“தோ பாரு தேவா! அழாதே. இந்தக் கதை அப்பவே தெரிஞ்சிருந்தா அந்த இன்ஸ இன்னும் பலமா டேமேஜ் பண்ணிருப்பேன்.” என கொதித்தவனை அடக்கும் பொருட்டு,

“என்னை ஏன் மாமா அடிக்கடி தேவான்னு கூப்புடற?” என கேட்டாள் இவள்.

“தேவதைய சுர்க்கி தேவான்னு கூப்புடறேன்டி”

இன்னும் கண்ணீர் உற்பத்தியானது இவளுக்கு.

“என்னை தேவதையா நெனைச்சு வச்சிருக்க நீ! உண்ட்ட போய் வச்சிக்க சொல்லிக் கேட்டுருக்கேனே! அடி மாமா! அப்படிக் கேட்ட இந்த வாய அடி மாமா” என புலம்பியவளின் வாயை அடிக்கத்தான் செய்தான் ஜெய்சங்கர்.

“அடிக்க சொன்னா, எச்சிப் பண்ணி வைக்கற மாமா நீ!”

“எனக்கு பொம்பளைய அப்படித்தான்டி தேவா அடிக்க வரும்”

“என்னைத் தவிர எத்தனைப் பேர அப்படி அடிச்சிருக்க?” என கோபமாய் இவள் கேள்வி எழுப்ப,

“அடியே! நான் கன்னன் கழிஞ்சது உன் கிட்ட மட்டும்தான்டி!” என பதறினான் இவன்.

“கப்ஸாவுடாத மாமா” என மங்கை இவன் பாஷை பேச, சங்கருக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.

“நீதான்டி என் மொதலும் முடிவும்! அதைப்பத்தி நீ கவலையேப் பட வேணா!” என்றவன், சிறிய அமைதிக்குப் பின்,

“என் மேலத்தான் ராங்கு மல்லி! ஒரு பொண்ணு இப்படி பேசறாளே, இன்னா மேட்டருன்னு விசாரிக்காம சட்டுன்னு எகிறிட்டேன். நைனா சொல்ற மாதிரி கோபம்தான் எனக்கு மொதோ எதிரி. அப்படியே வளந்துட்டேன். என்னை மன்னிச்சுருடி. என் முட்டாள்தனத்துனாலே எப்படியோ போயிருக்க வேண்டிய இந்தனை நாள, முறைச்சிக்கிட்டே வேஸ்ட்டுப் பண்ணிட்டேன்!” என்றான்.

இருவரும் மன்னிப்புக் கேட்கும் படலம் முடித்து ஒருத்தருக்கு ஒருத்தர் சமாதானமாகி, மாவு வேலையையும் முடித்தனர். அதன் பிறகு மறுபடியும் பக்கெட்டில் மோப் முங்கியதை நான் சொல்லத்தான் வேண்டுமா! அல்லது சால்னாவில் பரோட்டா மூழ்கியதை விளக்கத்தான் வேண்டுமா!

மனதளவில் புரிதல் கொஞ்சமாய் வசப்பட்டிருந்தாலும், உடலளவில் நன்றாகவே புரிதல் வந்திருந்தது இருவருக்கும். அடிக்கடி தோஸ்த்து வீட்டுக்கு சென்ற கோபாலை,

“அப்பா, இங்கயே படுங்கப்பா! அடுத்தவங்க வீட்டுக்கு அடிக்கடி போனாலும் தொல்லையாத்தான் நெனைப்பாங்க!” என தடுத்து விட்டாள் இவள்.

“நீங்க சின்னஞ் சிறுசுங்க!” என தடுமாறியவரை,

“கூட்டுக் குடும்பத்துலயும்தான் கல்யாணம் நடக்குது. அங்கெல்லாம் பெரியவங்கள வெளிய தொரத்திடறாங்களா என்ன? ஏன், இந்த ஹவுசிங் போர்ட்ல மாமியாரு, மாமனாரு, மகன் ரெண்டு பேரு, மருமகளுங்கன்னு ஒரே கும்பலா குடும்பமா ஒத்த வீட்டுல வாழறது இல்லையா! நீங்க இங்கயே இருங்கப்பா” என கறாராக சொல்லிவிட்டாள் மல்லி.  

கோபால் மேல் காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வரவேற்பறையில் தூங்கிய பெரிய குழந்தை இப்பொழுதெல்லாம் மல்லியின் மேல் கையைப் போட்டுக் கொண்டு ரூமில் தூங்கப் பழகியிருந்தான்.  

காலையில் எழுந்து பரோட்டாவையே நாஸ்தாவாக சாப்பிட்டுக் கொள்வார்கள். அதன் பிறகு சங்கரோடு சேர்ந்து வியாபாரத்துக்கான சமையலில் உதவி செய்வாள் மல்லி. பின், மூவருக்குமான மதிய சமையலைப் பார்ப்பாள். வியாபாரத்துக்கு இருவரும் கிளம்பியதும், வீட்டை சுத்தம் செய்து விட்டு காந்திமதியுடன் சற்று நேரம் அரட்டையடிப்பாள். மாலையில் சுவற்றில் இவள் ஒட்டி வைத்திருந்த காலேண்டர் விநாயகரை கைக் கூப்பி வணங்கி விட்டு இரவுக்காக எதாவது சிம்பிளாக சமைப்பாள். ஆண்கள் இருவரும் வீடு வந்ததும், பேச்சு சிரிப்பு, மாவு வேலை, கணவனின் அணைப்பு என நேரம் ஓடிவிடும்.

ஆனாலும் இவளுக்கு என்னவோ குறையாக இருந்தது. நாள் முழுதும் வேலை வேலை என ஓடியவளுக்கு, தேவைக்கும் மேலாகவே கிடைத்த ஓய்வு பிடிக்கவில்லை. மூன்று நாட்கள் இனித்தப் பொழுதுகள், சீக்கிரமாகவே அலுத்துப் போனது. அதனால்தான் வியாபாரத்துக்கு வருகிறேன் என அடம் பிடித்தாள் பெண்.

பழைய வேலையை தூக்கி கடாசியிருந்தாள் மல்லி. கந்தமாறனுக்கு தெரிந்தவனின் கீழே வேலை செய்யப் பிடிக்கவில்லை இவளுக்கு. சம்பளம் தனக்கு வருமா வராதா என தெரியாத நிலையில் அங்கே போய் உழைக்க இவளுக்கென்ன பைத்தியமா!

“ப்ளிஸ் மாமா! ஒரு வேலையும் இல்லாம இங்க உக்காந்துருக்கறது கடுப்பா இருக்கு. நான் அடுப்பு கிட்ட வரமாட்டேன். வேணும்னா ப்ளேட்டுலாம் தேய்ச்சுத் தரேன்!”

“டீவிப் பொட்டி பாரு! இல்லாங்காட்டி கொஞ்ச நேரம் தூங்கு! அங்கெல்லாம் நீ வர வேணா” என சத்தம் போட்டான் இவன்.

“வரட்டுமேடா மவனே!”

“நீ சும்மா கெட நைனா! எல்லாம் கண்ணு, பொண்ணுன்னு நீ குடுக்கற செல்லம்தான்! அதான் சொன்ன பேச்சுக் கேக்க மாட்டீங்கறா” என அவருக்கும் டோஸ் விழுந்தது.

யோசனையாக அவனைப் பார்த்தவள்,

“அப்போ சரி, நான் வரல! காந்தி அக்கா படத்துக்கு வரியான்னு கூப்டுச்சு! டிக்கெட்டுக்கு, பாப்கார்ன்னுக்கு எல்லாம் சேர்த்து ஒரு ஐநூறு ரூபா குடுத்துட்டுப் போ மாமா” என அடமாய் நின்றாள் மல்லி.

“அங்க வந்து ப்ளேட்டு மட்டும்தான் தேய்க்கனும்! அப்பப்ப உக்காந்து ரெஸ்ட்டு எடுத்துக்கனும்! அதுக்கு ஓகேன்னா, கெளம்பி வா” என சட்டென கீழிறங்கி வந்தான் ஜெய்சங்கர்.

கோபால் நமுட்டு சிரிப்பு சிரிக்க, இவள் வந்த சிரிப்பை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். ஆனாலும் உள்ளுக்குள் லேசாய் வலிக்கத்தான் செய்தது. பாசத்தைக் கொட்டினாலும், பணத்தைக் கொட்ட மாட்டான் கணவன் என பல தடவைப் புரிய வைத்திருந்தான் இவன். பெருமூச்சுடன் கிளம்பி வியாபாரத்துக்குப் போனாள் மல்லி.

பவளமல்லி வரவும், அன்று ஆண்கள் இருவருக்கும் வேலை கொஞ்சம் குறைந்தது. டீ ஊற்றிக் கொடுப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலைகளை இவள் பார்க்க, மற்ற வேலைகளை கோபாலும் சங்கரும் பார்த்தார்கள். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிய சங்கர், அதற்கென வைத்திருக்கும் டப்பாவில் போடுவதை யோசனையாகப் பார்த்தப்படியே வேலைப் பார்த்தாள் மல்லி.

அன்றிரவு கூடல் முடிந்து ஆசுவாசமாக அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் கேட்ட கேள்வியில் திகைத்து விழித்தான் ஜெய்சங்கர்.

 

(காதல் மலரும்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்த எபில சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்! டேக் கேர்)