Kanne Kadhal Penne–EPI 9

239948099_925484634705538_288795760143811764_n-8c985997

அத்தியாயம் 9

ஜிலேபி, பாரசீக மொழியின் ஸோல்பியா எனும் வார்த்தையிலிருந்து மருவி வந்தது என அறியப்படுக்கிறது. இந்த இனிப்பை பாரசீக மொழி பேசும் துருக்கி படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக வரலாறு சொல்கிறது. சென்னையின் பல இடங்களில் இருக்கும் ரோட்டோரக் கடைகளில் சூடான, சுவையான ஜிலேபி கிடைக்கும்.

 

 

“ண்ணா! மெதுவடை செம்ம டேஸ்ட்டா இருக்கு! இன்னும் ரெண்டு எடுத்துக்கறேன்” எனும் குரலில் திரும்பித் தன் மனைவியைப் பார்த்தான் ஜெய்சங்கர்.

வேர்க்க விறுவிறுக்க, எண்ணெய் சட்டியின் முன் நின்றிருந்தாள் பவளமல்லி. கொஞ்சமாய் மாவை எடுத்து, ஈரமாய் இருந்த உள்ளங்கையில் வைத்து, பெருவிரலால் நடுவே ஓட்டைப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் லாவகமாக நழுவ விட்டுப் பொரித்து எடுத்துக் கொண்டிருந்தாள் மெது வடையை. கீழுதட்டை மடக்கிப் பல்லால் கடித்துக் கொண்டே கவனமாக வேலையில் ஆழ்ந்திருந்தவளை புன்னகையுடன் பார்த்திருந்தான் ஜெய்சங்கர்.

“ஹ்க்கும்! இந்த ஈடு பரோட்டா தீஞ்சிப் போனா நீதான்டா மவனே துன்னனும். இதுக்கு மெல என் வயித்துல எடம் இல்லடா டேய்!” என நக்கலாக சொன்ன கோபால், வடைக்கான பணத்தை கஸ்டமரிடம் வாங்கி இன்னொரு டப்பாவில் போட்டார்.

ஆம்! இப்பொழுது இந்தக் கோபால் கையேந்தி பவனுக்கு கல்லா இரண்டாகி இருந்தது.

ஜெய்சங்கர் வலது மூலையில் பரோட்டாவைக் கொத்த இவள் இடது மூலையில் எண்ணெய் சட்டிக்கு இடம் பிடித்திருந்தாள். யார் சொன்னது கீப் லெப்ட் என்று, மனைவியும் லெப்டில் இருக்கலாம் என நிரூபித்திருந்தாள் பவளமல்லி.

பல நாட்களுக்கு முன், சொகுசாய் கணவனின் நெஞ்சில் சாய்ந்தபடி, அவன் நெஞ்சில் நிறைந்திருக்கும் சுருண்ட ரோமங்களை இழுத்து நேராக்கிக் கொண்டே,

“மாமா” என அழைத்தாள் மல்லி.

“ஏம்மா?” என்றான் இவன்.

“வீட்டு செலவுக்குப் போக மாசா மாசம் என் கைச் செலவுக்குன்னு தனியா ரெண்டாயிரம் குடுக்கறீங்களா?” என கெஞ்சலா கொஞ்சலா என பிரித்தறிய முடியாத குரலில் கேட்டாள் இவள்.   

அவள் கேள்வியில் திகைத்துப் போனவன், தன் நெஞ்சில் அளைந்துக் கொண்டிருக்கும் பெண்ணவளின் கரத்தைப் பட்டென தட்டி விட்டு எழுந்தமர்ந்தான்.

“ஆத்தாடி! என்னடி நெனைச்சிட்டு இருக்க ஒன் மன்சுல! காசு மரத்துல காய்ச்சி தொங்குது, உன் புருஷன் அதைக் கல்லைக் கொண்டு அடிச்சு வூட்டுக்கு எடுத்துட்டு வரான்னா! கையைப் பாத்தியா, என் கைய? எத்தினி வெட்டு எத்தினி தீக்காயம்னு! ஒத்தை ஒத்தை ரூவாக்கும் வெந்து வெந்து சாகறேன்டி! ஒனக்குத் தேவைப்பட்டதெல்லாம் வாங்கிக் குடுத்திருக்கேனே! இன்னும் என்னடி காசு காசுன்னு போட்டு அரிச்சு எடுக்கற மனுஷன? சாவுகிராக்கி!” என படபடவென பொரிந்தவன், சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, அந்த அர்த்த ராத்திரியில் விடுவிடுவென வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

அவ்வளவு நேரம் கண்ணே மணியே என கொஞ்சித் தீர்த்தவன், பட்டென சாவுகிராக்கி என சொல்லிவிட, மனதளவில் நொறுங்கிப் போனாள் பவளமல்லி. ஏற்கனவே கணவன் இதை செய்வான், அதை செய்வான் எனும் கற்பனையை விட்டொழித்திருந்தாள். பணத்தை படகாக்கி, துட்டை துடுப்பாக்கி, காசை கடலாக்கி அவளை ஊர்கோலம் அழைத்துப் போவான் எனும் பேராசையெல்லாம் மூட்டைக் கட்டி பரோட்டா அடுப்பில் போட்டுத் தீயிட்டுக் கொழுத்தியிருந்தாள். ஆசை இருக்கு யானை மேல் ஏற, அதிர்ஸ்டம் இருக்கு மண் சுமக்க என்பது போலத்தான் தன் விதி என்பதை ஏற்றுக் கொண்டிருந்தாள் மல்லி. என்னதான் மனதை சமாதானப் படுத்தி வைத்திருந்தாலும், அவனின் திடீர் தாக்குதல் மனதை நொறுக்கிப் போட்டது.

பொங்கி வந்த காவேரியை அழுத்தமாக அணைக்கட்டி நிறுத்தினாள் மாது. அதென்ன முனுக்கெனும் முன் கண்ணீர் விடுவது! இதுதான் வாழ்க்கை, இவன்தான் ஆதரவு என தேடி வந்து ஆசையாக தாலியையும் வாங்கிக் கொண்டாகி விட்டது. தாலியோடு பேக்கேஜாக வரும் வலிகளையும் சகித்துத்தான் ஆக வேண்டும் என கண்ணீருக்கு தடா போட்டவள், கண்ணை மூடிப் படுத்துக் கொண்டாள்.

உடம்பு சுகமாய் அலுத்திருக்க, மனமோ கனமாய் கனத்திருக்க தூக்கமோ நாடி வராமல் அழிச்சாட்டியம் செய்தது.

‘ஓர் ஊர்ல நூறு செம்மறி ஆடு இருந்துச்சாம். அந்த நூறும் பசிக்குதுன்னு புல்லு மேய போச்சாம். காட்டுப் புலி பதுங்கி வந்து ஒரு செம்மறியாட்ட அடிச்சு சாப்பிட்டிருச்சாம். மீதி தொன்னுத்து ஒம்பது செம்மறி ஆடும் குடுகுடுன்னு தொழுவத்துக்கு ஓடிப் போச்சாம். மறுநாள் தொன்னுத்து ஒம்பது செம்மறி ஆடும் மறுபடி புல்லு மேய போச்சாம்! மறுபடியும் புலி இன்னொரு ஆட்டை அடிச்சி தின்னிருச்சாம். மீதி தொன்னுத்து எட்டு ஆடும் குடுகுடுன்னு ஓடிப்போச்சாம்!’ இப்படியே ஒவ்வொரு ஆடாக கொன்று தூக்கத்தை வரவழைக்க முயன்றாள். பாதி கணக்கில் ‘செம்மறி ஆடே, செம்மறி ஆடே செய்வது சரியா சொல்’(ரொம்ப நாள் ஆச்சு இந்தப் பாட்ட கேட்டு. ரொம்ப் நல்லா இருக்கும். கண்டிப்பா கேளுங்க) என பாட்டு வேறு குறுக்கே வந்து கணக்கைத் தடுமாற வைத்தது. மறுபடியும் நூறில் இருந்து ஆரம்பித்தாள் மல்லி. (இது நான் செய்வேன்! நீங்களும் செஞ்சுப் பார்க்கலாம் தூக்கம் வரலனா!)

கணக்கு நாற்பதை நெருங்கும் நேரம் அறைக்குள் நுழைந்தான் ஜெய்சங்கர். இவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். இருட்டில் அவள் அருகில் வந்துப் படுத்து பின்னால் இருந்து அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன்,

“ஆயிரம் ரூபா தரேண்டி” என இறங்கி வந்தான்.

இவள் பதில் சொல்லாமல் இருக்கவும்,

“என் செல்லம்ல, சரின்னு சொல்லுடி” என கொஞ்சினான்.

அதற்கும் பதில் வராமல் போக,

“தேவா! இப்படிலாம் ரவுசு பண்ணாதடி! குடுக்கறத வாங்கிக்கோ” என கெஞ்சலில் இறங்கினான்.

“இந்த சாவுகிராக்கிக்கு யாரும் ஒன்னும் குடுக்க வேணா!” என்றவளுக்கு தன்னையும் மீறி அழுகை வந்தது.

கணவன் கோபமாய் திட்டும் போது பனிப்பாறையாய் இறுகி நிற்கும் பெண்கள், அவன் கீழிறங்கி வந்து சமாதானப் படுத்தும் போது தானாகவே இளகிப் போய் கண்ணீரை சிந்துவது வழமையல்லவா! இங்கும் அதுதான் நடந்தது.  

“மன்னிச்சுக்கோடி! கோபத்துல ஆஃபாயிலு மாதிரி பேசிட்டேன்!”

“எல்லாருக்கும்தான் கோபம் வரும். எனக்கும்தான் வரும்! அதுக்குன்னு, சொல்லறதெல்லாம் சொல்லிட்டு சாரின்னா எல்லாம் சரியாப் போயிடுமா? வள்ளுவர் தாத்தா சொல்லிருக்காரு,

தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடுன்னு.

எனக்கு நீயும் வேணா உன் சாரியும் வேணா” என அழுகையோடே சொன்னாள் மல்லி.

எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல், அவளை முன்னே திருப்பி இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பில் இருந்து இவள் விலக போராட, விடவேயில்லை இவன்.

“சாரிடி, சாரிடி தேவா! இனிமேங்காட்டி இப்டிலாம் பேச மாட்டேன்!” என கெஞ்சியவனின் நெஞ்சில் படபடவென அடித்தாள்.

“எவ்ளோ வேணா அட்சிக்கோ! தள்ளி மட்டும் போவாதடி!” என்றவனின் குரல் கரகரத்தது.    

அவன் கெஞ்சல் குரலில், அடிப்பதை நிறுத்தி விட்டு அப்படியே அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள் மல்லி. அவள் கண்ணீர் ஆணவன் நெஞ்சை நனைக்க, மனது பாரமாகிப் போனது இவனுக்கு.

தன் தேவாவிடம் மட்டும் அவனது கொள்கைகள், கோபங்கள் இல்லாம் சற்று நேரத்திலேயே ஆட்டம் கண்டு போய் விடுகிறது. திட்டி விட்டு வெளியேறி போனவனுக்கு, இருப்புக் கொள்ளவேயில்லை. தான் திட்டியதில் அழுது கொண்டிருக்கிறாளோ என மனம் பாடாய்பட்டது. இரண்டு பீடி புகையாகிப் போயும், மனம் சமன்படவில்லை.

‘தம்மாத்துண்டு இருந்துட்டு மனுஷன பிச்சி பேஜார் பண்ணுறா’ என மனதில் புலம்பினான் மல்லியின் மணாளன்.

பணமா பவளமா எனும் போராட்டத்தில் பவளம் வெற்றிப் பெறவும் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான் ஜெய்சங்கர்.

உண்மையில் அவள் மனதில் உதித்திருந்த திட்டத்தை செயல்படுத்தத்தான் மாதா மாதம் செலவுக்குப் பணம் வேண்டும் என ஆரம்பித்திருந்தாள் பவளமல்லி. இவன் எப்பொழுதும் போல முடியாது என சொல்வான், பின் தனது திட்டத்தை விவரிக்கலாம் என நினைத்திருந்தாள். இவனோ ‘என்னைப் புரிந்துக் கொள்ள நீ இன்னும் நூறு ஜென்மம் எடுக்க வேண்டுமடி பெண்ணே’ என மண்டையில் அடித்துப் புரிய வைத்திருந்தான். ஏகாந்த மனநிலையில் இருந்தவன், சட்டென திட்டிவிட்டு வெளியேறியதை இவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

கணவனிடம் பணத்துக்கு கையேந்திதான் ஆக வேண்டுமா? அதற்கு பதில் அவன் கையேந்தி பவனில் தானும் ஒரு அடுப்பை வைத்தால் என்னவென யோசனை வந்திருந்தது இவளுக்கு. தான் பார்க்கும் வியாபாரத்தில் வரும் பணத்தைத் தனக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கல்லா டப்பாவைப் பார்த்ததில் இருந்து மூளை கணக்குப் போட ஆரம்பித்து விட்டிருந்தது. நேரிடையாக நானும் வியாபாரம் செய்கிறேன் என கேட்டால், அடுப்பில் வேக உனக்கென்ன தலையெழுத்தா என மறுப்பான் என புரிந்துதான் இப்படி பிட்டைப் போட்டாள் மல்லி. ஆனால் அது சண்டையில் வந்து முடிந்திருந்தது.

“மாமா!”

“ஹ்ம்ம்”

“எனக்கு உன்னோட ஆயிரம் ரூபா வேணா”

“இன்னும் இன்னா கோபம் மல்லி! நான் சொன்னதெல்லாம் ராங்குதான். என்னை மன்னிச்சு சமாதானம் ஆய்க்கோடி!”

“அதுக்கு பதிலா உன் கடைல ஒரு ஓரத்துல வடை சட்டி வைக்க எனக்கு இடம் குடுப்பியா?”

“எதே!!!!!!!”

“ஆமா மாமா! தாயும் பிள்ளையுமா இருந்தாலும் கூட, வாயும் வயிறும் வேறதான்! எனக்கு ஒன்னு வேணும்னு அடிக்கடி வந்து உன் கிட்ட நிக்கப் பிடிக்கல மாமா. அந்த வீட்டுலத்தான் ஒவ்வொன்னுக்கு அவங்க கைய எதிர்ப்பாத்து நின்னேன்! காலம் முச்சூடும் இப்படியே அடுத்தவங்கள எதிர்ப்பாத்து நிக்கறது எனக்கு கஸ்டமா இருக்கு.”

“அதெல்லாம் முடியாது மல்லி! அடுப்பு வேலை ஜுஜூபின்னு நெனச்சியா! காஞ்சி கருவாடா போய்டுவடி”

“இந்தப் பூனைக்கு ஏத்த கருவாடா இருந்துட்டுப் போறேன்! முடியாதுன்னு மட்டும் சொல்லாதே மாமா! மெதுவடை, மசால்வடைன்னு ரெண்டு ஐட்டம் மட்டும் போட்டு பார்க்கறேன். அதுவும் நாலுல இருந்து ஆறு மணி வரைக்கும்தான். சரின்னு சொல்லு மாமா”

“நீ கேட்ட மாதிரியே மாசத்துக்கு ரெண்டாயிரம்  குடுக்கறேன்டி! வூட்டுலயே இரு”

“முடியாது மாமா”

“மல்லி!!!”

கோபமாய் இவன் அரட்ட, அவன் பிடியில் இருந்து பட்டென எழுந்துக் கொண்டாள் பவளமல்லி. விரிந்துக் கிடந்த முடியை அள்ளி முடித்தவள், தனது பாயை சுருட்ட ஆரம்பித்தாள்.

“இன்னாடி பண்ணற?”

“இனிமே மல்லி மல்லின்னு பின்னாலே வராத நீ! நான் போய் ஹால்லயே ஒரு மூலையில படுத்துக்கறேன்”

“அடியே ராங்கி! உன் மேல கைப் போடாம தூக்கம் வராதுடி எனக்கு”

“அப்போ முழிச்சிட்டேப் படுத்துக் கிடங்க”

“கொய்ந்தைப் புள்ளன்னு பாத்தா, என்க்கே விபூதி அடிக்கப் பார்க்கறல்ல நீ! போடி போ! பன்னீர் செல்வத்த பாம்பு கொத்துனா, அவன் வாயில நொறை வருமே தவுர பன்னீர் வராதுடி!”

“யாரு பன்னீர் செல்வம்? ஏன் அவன பாம்பு கொத்தனும்?”

“அதெல்லாம் பழமொழிடி! அனுபவிக்கனுமே தவுர ஆராயக்கூடாது. நீ வள்ளுவர் தாத்தா என்னமோ சொன்னருன்னு சொன்னியே, புர்லனாலும் நான் அனுபவிக்கல!”

அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

“நல்லா கேட்டுக்குங்க! இன்னிக்கு மட்டும்தான் இந்த வெளி நடப்புன்னு நெனைச்சுக்காதீங்க மிஸ்டர் நாட் நாட் செவென்! என் கோரிக்கைக்கு ஒத்துக்காத வரைக்கும் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’னு பாடிக்கிட்டுப் பக்கம் வந்துடாதீங்க! இனிமே ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே!’தான் உங்களுக்கான பாட்டு! வர்ட்டா!” என சொல்லி கதவருகே போனவளைப் பாய்ந்துப் பிடித்திருந்தான் ஜெய்சங்கர்.

“கில்லி மாதிரி ப்ளானு போட்டு நல்லா கவுக்கறீங்கடி ஆம்பளைங்கள! சரிடி, ஒனக்கு ஒரு அடுப்பு வச்சுத்தரேன்டி, என் பொண்டாட்டி. நீ குடுக்கற சொகத்துக்காக ஆமாம் சொல்ட்டேன்னு மட்டும் நெனைச்சுக்காதே! ஒழைக்கனும்னு நெனைக்கறப் பாத்தியா, அதுக்கா வேண்டி ஒத்துக்குறேன்! ஆனாலும் என்னண்ட ஒரு ப்ராமிஸ் பண்ணிக்குடு”

“என்னன்னு?”

“செஞ்சுப் பார்த்துட்டு மிடிலனா, வேலையை வுட்டுறனும். நான் போடற மொதலு காந்தி கணக்குல போனாலும் பர்வால்ல! டீலா?”

“டீலோ டீல் மாமா” என முகம் மலர புன்னகைத்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

அவள் வேலையைத் தொடங்குவதற்கான மூலப் பொருட்கள், பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் வாங்கிப் போட்டான் சங்கர். மல்லி சொன்னது போலவே நான்கில் இருந்து ஆறு வரைதான் சுட சுட வடை சுட்டாள். ஆரம்பத்தில் மெதுவாகப் போன இவளது வியாபாரம், அடுத்த வாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தேநீர் இடைவெளியின் போது, இவள் வடைக்காகவே வர ஆரம்பித்தார்கள் எம்.என்.சியில் வேலைப் பார்ப்பவர்கள்.

இவளை அறிந்திருந்த சிலர்,

“ஓய் பாப்பம்மா!” என கலாட்டா செய்ய,

“எச்சுஸ்மீ தம்பிங்களா! இனி அவங்க பாப்பம்மா இல்ல, என் வீட்டம்மா!” என கொத்து பரோட்டா கரண்டியை ஆட்டி ஆட்டி இவன் சொல்ல, அத்தோடு அந்த கிண்டல் பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது.  

இவளோ யாரையும் கண்டுக் கொள்ளாமல், தனது வேலையை மட்டும் பார்த்தாள். ஆறு மணிக்கு மேல், மற்ற இருவருக்கும் உதவியாய் இருந்தாள். அவளுக்கென ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை பின்னால் கொண்டு வந்து வைத்திருந்தனர் ஆண்கள் இருவரும். அவள் கொஞ்சம் களைப்பாய் தெரிந்தால்,

“ஏ மல்லி! கொஞ்சம் உக்காரு” என இவனும்,

“கண்ணு! கொஞ்சம் ரெஸ்ட்டு எடும்மா” என கோபாலும் மாற்றி மாற்றி கவனித்துக் கொள்வார்கள்.

“மல்லி!”

“என்ன மாமா?”

வடை வேலையை முடித்துவிட்டு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள், நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டாள்.

“நமக்கு மேரேஜூ பண்ணி வச்ச இன்சு போன் போட்டாருடி”

“என்னவாம்?”

“உங்க அம்மா புருஷன் கந்தமாறன் கதை கந்தலாய்டுச்சாம்”

“என்னாச்சி?” என யாருக்கோ வந்த விருந்து போல அக்கறையில்லாமல் கேட்டாள் இவள்.

“கந்து வட்டிக்குப் பணம் வாங்கனா சும்மா வுடுவானுங்களா! இன்ஸா இருந்தாலும் எதாச்சும் பார்த்து செஞ்சிருப்பானுங்க! அதான் வேலையும் போச்சே! நேத்து வீடு பூந்து பைக்கு, நகை, பணம்னு அள்ளிட்டு, இன்ஸையும் பிரிச்சு மேஞ்சிட்டானுங்களாம்.”

“பிள்ளைங்களுக்கு ஒன்னும் இல்லைல?”

பெரியவர்கள் மேல் மட்டும்தானே வெறுப்பு இவளுக்கு.

“அந்தம்மா புள்ளைங்க கூட வெளியே போயிருந்த டைம்மு போல! இன்ஸ்க்கும் வூட்டுக்கும் மட்டும்தான் சேதாரமாம்”

“வினை வெதச்சா வினைத்தான் அறுப்பான். நீ வேலையைப் பாரு கண்ணு! அப்பான்னு நான் இர்க்கேன்! புருஷன்னு இவன் இருக்கான்! கண்டவங்க பத்தி இன்னாத்துக்குப் பேச்சு!” என அவர்கள் பேச்சை முடித்து வைத்தார் கோபால்.

அதன் பிறகு சின்ன சின்ன சண்டைகள் சமாதானங்கள் என சீராகப் போனது இருவரின் வாழ்க்கை. சீராகப் போனால் சிலிர்த்துக் கொள்ளுமே விதி! அந்த விதியின் சதியால் பரோட்டாவும் மெது வடையும் பலமாய் மோதிக் கொண்டன. இவர்கள் நடுவில் அப்பாவி கோபால் அப்பளமாய் நொறுங்கிப் போனார். அப்பா என்பவளை சமாதானப்படுத்துவாரா? நைனா என்பவனை சமாளிப்பாரா? கோபால், கோபால்!!!!!! இப்படி சிக்கிட்டீங்களே கோபால்!!!!!

 

(காதல் மலரும்…)

 

போன எபிக்கு லைக், கமேன்ட், மீம் போட்ட செல்லங்களே, நன்றியோ நன்றி. அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம். லய் யூ ஆல்)