KarisalkaattuPenne2

KarisalkaattuPenne2

கரிசல் காட்டுப் பெண்ணே 2

 

ஸ்ரீராம் பெரிய வீட்டை நோக்கி நடந்தான். பக்கத்து தெருவில் நான்காவது வீடு. அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது.

ஏதோ இனம் புரியாத பூரிப்போடு வீட்டு பூட்டைத் திறந்து உள்ளே வர, அவன் பூரிப்பு மொத்தமாய் வடிந்து போனது.

அந்த பெரிய வீட்டின் நிலை அவ்வளவு சொல்லும்படியாக இல்லை. எங்கும் தூசி படிந்து விட்டங்களில் ஒட்டடை செறிந்து காணப்பட்டது.

அவன் பிறந்து, வளர்ந்து, விளையாடி மகிழ்ந்த வீடு இந்த நிலையில்!

அந்த காலத்து ஓரடுக்கு மாடி வீடு. பெயருக்கேற்றாற் போல அகன்ற பெரிய வீடு. ஸ்ரீராம் மட்டுமல்ல அவன் அப்பன், பாட்டன், பூட்டன், ஓட்டன், சேயோன், பரன் என்று பரம்பரையாய் வாழ வைத்த பூர்வீக வீடு!

தொழில், வியாபாரம், கல்வி, வசதி வாய்ப்பு என்று இந்த வீட்டை நிர்க்கதியாக விட்டுச் சென்றுவிட்டோம் என அவன் எண்ணங்கள் ஓட, ஏனோ அந்த வீட்டிற்கும் உயிரோட்டம் உள்ளதைப் போல முதன்முறை உணர்ந்தான் அவன்.

இயல்பில் ஸ்ரீராம் எதைப் பற்றியும் இத்தனை ஆழமாக யோசிப்பவன் கிடையாது தான். ஆனால், ஏனோ இந்த ஊருக்குள் வந்து அவன் எதிர்கொள்கின்ற ஒவ்வொன்றும் அவனை பின்னோக்கி தன் குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்வதைப் போல உணர்ந்தான். ஆம், இதோ இந்த வீடும் கூட.

அவன் நிற்காமல் ஓடித்திரிந்த முன்வாசல் நடை குப்பையாய் கிடக்க, அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தூசி பறந்து அவன் மூக்கில் ஏற தும்மலானான். கைக்குட்டையை எடுத்து மூக்கில் ஒற்றிக் கொண்டவன் வீட்டின் கூடத்தைப் பார்த்தான்.

அங்கிருந்த சோஃபா, மேஜை, ஊஞ்சல் என அனைத்து பொருட்களும் துணியால் நன்றாக மூடப்பட்டிருந்த போதிலும் அந்த துணிகளிலேயே வண்டி தூசி படிந்து கிடந்தது.

“ச்சே வீட்டை பாத்துக்கிற பொறுப்பை போயும் போயும் அப்பா சங்கரன் மாமாகிட்டையா கொடுக்கணும்? அவர் கொஞ்சமாவது நம்ம வீட்டை சுத்தமா வச்சிருக்கலாம், இப்படியா பேய் பங்களா மாதிரி வச்சிருப்பார்!” ஸ்ரீராம் கோபத்தில் வாய்விட்டே சலித்துக் கொண்டான்.

கதவுகளைத் திறந்து கொண்டு அறைக்குள் வர, அவன் படுத்துருண்ட தேக்கு மரக்கட்டில் அதே கம்பீரத்துடன் காட்சியளித்தது.

இந்த கட்டிலின் அடியில் அவன் ஒளிந்து விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டம் நினைவு வரவே, அந்த கட்டிலின் பிடியை மெல்ல அவன் தடவ, அவன் கைகளில் தூசி ஒட்டிக் கொண்டது.

தூசியைத் தட்டிவிட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்க எட்டிப் பார்த்தான். சங்கரன் உள்ளே வர, மெல்லிய இதழ் விரிப்போடு ஸ்ரீராம் அவரை எதிர்க் கொண்டான்.

“எப்படி இருக்க பா ஸ்ரீராமா?” அவர் வாஞ்சையோடு வினவ, “நல்லாயிருக்கேன் மாமா” பவ்வியமாக பதில் தந்தான்.

அந்த பெரிய வீட்டின் நிலையை பார்த்த சங்கரன் முகம் சங்கடமாய் வாடிப்போனது.

“போனமுறை பரமு வந்து போன போது பூட்டின வீடு தம்பி, நடவு, பயிர் காப்பு, அறுவடைன்னு எனக்கும் வீட்டை சுத்தம் செய்ய பொழுது கிடைக்கல. நீ இம்புட்டு சீக்கிரம் வருவேன்னு தெரிஞ்சு இருந்தா நேத்தே சுத்தம் செஞ்சு வச்சிருப்பேன். தப்பா நினைக்காத பா.”

சங்கரன், ஸ்ரீராமின் மனநெருடலை சரியாக உணர்ந்தவராய் சங்கடமாய் பேச, அவன் சற்றே துணுக்குற்றான்.

“அதெல்லாம் பரவால்ல மாமா” இயல்பு மாறாமலே சொன்னான்.

அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் சங்கரன் தன் லுங்கியை தூக்கி மடித்து கட்டிக் கொண்டு, ஒட்டடை குச்சி எடுத்து வீட்டை சுத்தம் செய்ய தொடங்கினார்.

அவர் பின்னோடு வந்த அவரது மகளும் தன் துப்பட்டாவை குறுக்கே வாகாய் கட்டிக்கொண்டு, துடைப்பம் எடுத்து பெருக்க தொடங்க, வீடு முழுவதும் தூசும் தும்மும் பறந்தது. ஸ்ரீராம் அந்த நெடியில் மறுபடி மறுபடி தும்மலானான்.

“நீ கொஞ்சம் தோட்டத்து பக்கம் போ பா, இதோ இன்னும் கொஞ்ச நேரம் வீடு சுத்தமாகிடும்” சங்கரன் சொல்ல, ஸ்ரீராம் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பின் வாசல் கதவை திறக்க, இதமான இயற்கை காற்று அவனை தாவி அணைத்துக் கொண்டது.

தூசி நெடி படிந்த அவன் நாசிக்குள் ஈர மண்ணின் மணமும், பூக்களின் மணமும் கலந்து சுகந்தமாய் நுழைந்த காற்று புத்துணர்வை தந்தது.

வீடே குப்பை கூலமாய் மாறி கிடந்ததால், தோட்டமும் கல்லும் முள்ளும் காடாய் மாறி இருக்கும் என்று எண்ணி வந்தவனுக்கு தன் வீட்டு தோட்டம் மிக நேர்த்தியாக பராமரித்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவன் உள்ளம் குளிர்ந்து போனது.

முன்பிருந்த தென்னை, வேம்பு, மா, கொய்யா, நெல்லி, புன்னை, மரமல்லி மரங்கள் அவனை போலவே உயரமாய் வளர்ந்து நின்றிருப்பதைப் பார்த்தவன்,
தோட்டத்தில் அதிகப்படியாக குலை தள்ளியிருந்த வாழை மரங்களும், செம்பிஞ்சுகள் ஆடிக் கொண்டிருந்த மாதுள மரங்களும் அந்த தோட்டத்தின் புதுவரவாய் தோன்றின அவனுக்கு.

மேலும் மரநிழல் விழாத இடங்களில் லாவகமாக அரைவட்டமாய் வெண் முத்துக்களை தலையில் சுமந்து சிரித்துக் கொண்டிருந்த குண்டு மல்லி செடிகளும், அவற்றோடு கைக்கோர்த்திருந்த கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செடிகளும் வண்ண பூக்களின் கலவையாய் பார்வையைக் கவர்ந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிவப்பு, மஞ்சள், பிங்க், வெள்ளை போன்ற வண்ணங்களில் சிரித்து கொண்டிருந்த ரோஜா செடிகள், கூட்டு குடும்பத்தில் பேர பிள்ளைகளைப் போல காற்றில் அசைந்தாடி அழகு சேர்த்தன.

சம்பங்கி, ஜாதி மல்லி கொடிகள் வீட்டின் சுவரில் படர்ந்து ஏறி மாடியின் கைப்பிடிச் சுவரைப் பற்றி எங்கும் வியாபித்து இருந்தது. அதிலிருந்த கொடி ஜாதி மல்லி சிறு மொட்டுகள் காற்றில் தலையசைக்க, சற்றே விரிந்திருந்த சம்பங்கி மலர்களும் அதே காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

நகரத்தின் சாலை நெரிசல்களையும் புகை காக்கும் வாகனங்களையும் பார்த்துப் பழகிப்போன அவன் மனம் அந்த தோட்டத்தின் இயற்கை அழகில் காற்றின் சுகந்தத்தில் லயித்துப் போனது.

அந்த புத்துணர்வான மனநிலையோடு இங்கு எதற்காக அவன் வந்தானோ, அதற்கான முதல் படியான திட்டங்களை வகுக்கத் தொடங்கினான்.

“வீடு சுத்தமாயிடுச்சு உள்ள வா பா, உன்ன ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன்!” என்ற சங்கரன் அழைப்பில் உள்ளே வந்த ஸ்ரீராமுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.

மிஞ்சி போனால் இரண்டு மணிநேரம் கூட முடிந்திருக்காது அதற்குள் குப்பையாய் கிடந்த வீடு சுத்தமாய் புதிதாய் மாறி போயிருந்தது. திறந்திருந்த கம்பி சாளரங்கள் வழியே வந்த வெளிச்சமும் காற்றும் அந்த வீட்டின் பழைய உயிரோட்டத்தை மீட்டு தந்ததிருந்தது.

‘இந்த அப்பா, மகளின் கைகளில் இத்தனை வேகமா!’ மனதிற்குள் வியந்து கொண்டான்.

“அப்பா, மாடியில இருக்க அறையையும் சுத்தம் பண்ணியாச்சு” என்று சொன்னபடியே ஒரு சிறுவன் இறங்கி வர, அவனுடன் வாளியும் துடைப்பமும் பிடித்தபடி அந்த பெண்ணும் இறங்கி வந்தாள்.

“ஸ்ரீராம் இவன நீ பார்க்கல இல்ல, இவன் சக்திவேல், என் பையன் பா” என்று அறிமுகம் செய்ய, இங்கிருந்து கடைசியாய் விடைபெற்று செல்லும்போது மரகத அத்தையின் வயிறு வீங்கியிருப்பதைப் பற்றி தான் அம்மாவிடம் காரணம் கேட்டது, இப்போது நினைவில் வந்து போகச் சிரித்துக் கொண்டான்.

அப்போதே மரகதம் கையில் தூக்கு பாத்திரத்துடன் வீட்டிற்குள் நுழைந்தார். “நீங்கெல்லாம் வருவீங்கனு காத்து கிடந்தேன், புள்ள எப்ப சாப்பிட்டதோ என்னவோ! அதான் சாப்பாட இங்கன கொண்டு வந்துட்டேன்” என்றவர், தரையில் சிறு பாய் விரித்து அதில் ஸ்ரீராமை அமரச் சொன்னார்.

தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாததால் சற்று தயங்கியவன், மரகதத்தின் மறு அழைப்பில் வந்து உட்கார்ந்தான்.

அவன்முன் தலைவாழை இலை விரித்து, சாதம், கூட்டு, பொரியல், வறுவல், துவையலென அவன் போதும் போதுமென்ற அளவு அவர் உணவு பரிமாறினார்.

மரகதத்தின் கைமணத்தாலோ அல்லது பாசத்தாலோ ஸ்ரீராம் இன்று சற்று கூடுதலாகச் சாப்பிட்டு விட்டான். அவனை நன்றாக ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு அவர்கள் சென்று விட, கட்டிலில் உடல் சாய்ந்த ஸ்ரீராமிற்கு நேற்று அவன் அம்மா சொன்னது நினைவில் ஓடியது.

‘நீ நம்ம கிராமத்தில போய் தனியா இருக்க போறன்னு நினச்சு வருத்தபடாத ஸ்ரீ, அங்க சங்கரன் அண்ணனும் மரகதமும் உன்ன தான் பெத்த புள்ள மாதிரி பார்த்துப்பாங்க” என்று அம்மா சொன்ன வார்த்தைகள் சிறிதும் கலப்படமற்றவை என்பதை உணர்ந்தவன் பயண களைப்பில் கண் அயர்ந்தான்.

# # #

வாசற்கதவின் தடதடவென்ற சத்தம் ஸ்ரீராமின் தூக்கத்தைக் கலைக்க, சோர்வுடன் எழுந்து வந்து கதவைத் திறந்தான்.

அங்கே சக்திவேல் நின்றிருக்க, “கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்கு அப்பா உங்களை அழைச்சிட்டு வர சொன்னார் ஸ்ரீராம் மாமா” என்றழைக்க, “நான் இனிமே தான் குளிக்கணும் சக்தி” என்றான் ஸ்ரீராம் சோர்வு நீங்காமலேயே.

“பரவால்ல மாமா, நான் காத்திருக்கேன். அம்மா உங்களை கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க.”

“சக்தி, இந்த மரியாதை எல்லாம் வேணாம், நீ என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்” என்க.

“அப்ப, சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா ஸ்ரீராம்” சக்திவேல் சட்டேன சொல்லிவிட, பெரியவனின் புருவங்கள் உயர்ந்தன.

அவர்கள் இருவரும் வீட்டு வாசலை அடையும்போதே பூஜை தொடங்கி இருந்தது.

வானம் மெல்ல செம்மை பூசி கொள்ளும் நேரம், ஸ்ரீராம் அவர்கள் வீட்டுக்குள் வர,

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா!
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!”

இனிமையும் எளிமையும் கலந்த பாரதியின் தீஞ்சுவை பாடல் அவன் செவிகளை நிறைத்தது.

கிளியின் கொஞ்சலையும் குயிலின் இனிமையையும் குழைத்துச் சேர்த்தது போன்ற அற்புதமான குரலில், வீணை இசையுடன் சேர்ந்தே பாடலும் வர, இதமாய் ரசித்தபடி உள்ளே வந்தவன் அந்த பாடலின் முகவரியானவளைக் கண்டு தனக்குள் வியந்து நின்றான்.

சங்கரன் அவனை அமரச் சொல்லி பணிக்க, ஸ்ரீராமனும் அவர்களுடன் பூஜையறை முகப்பில் உட்கார்ந்தான்.

பூஜை அறையின் சிறு மேடையில் வெண்ணெய் உண்ணும் சின்ன கண்ணனின் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருபுறமும் குத்துவிளக்கு சுடர்விட்டு கொண்டிருக்க, கண்ணனின் முன் பூஜைக்கான பொருட்களும், விரிக்கப்பட்ட தலைவாழை இலையில் பால், வெண்ணெய், அடை, முறுக்கு, சீடை, அதிரசம், பாயாசம், லட்டு, பழங்கள் போன்ற குழந்தைகளுக்கு பிடித்தமான பலகாரங்கள் படைக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து அவள் அமர்ந்திருந்தாள் சின்ன கண்ணனை தரிசித்தப்படியே.

காலை அவளை பார்த்ததிற்கும் இப்போதிற்கும் அவள் வேறாய் காட்சி தந்தாள்.

பூஜைக்கெனவே அவள் வெண்ணிற பட்டு தாவணியும், தங்கநிற பூக்களிட்ட சந்தனநிறப் பட்டு பாவாடையும் உடுத்தி, சம்மணமிட்டு மடியில் வீணையை வாகாய் சாய்த்து வைத்து லாவகமாய் தந்திகளை மீட்டி, வெற்றுக் காற்றில் ஸ்வரங்களை மிதக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீராம் அவளை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வரங்கள் மாறின. அவளின் தெய்வீக குரலில் பக்தி சுவை சொட்டியது.

“என்ன தவம் செய்தனை – யசோதா
என்ன தவம் செய்தனை,
எங்கும் நிறை பரபிம்மம்
அம்மா என்றழைக்க,
என்ன தவம் செய்தனை – யசோதா
என்ன தவம் செய்தனை,
ஈரேழு புவனங்கள் படைத்தவனை…
கையிலேந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ,
என்ன தவம் செய்தனை – யாசோதா
என்ன தவம் செய்தனை,
பிரம்மனும் இந்திரனும் மனதில்‌ பொறாமை கொள்ள…
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கண்ணனை தாயே…
என்ன தவம் செய்தனை – யசோதா
என்ன தவம் செய்தனை…”

அங்கிருந்த அனைவரும் தன்னை போலவே அவள் குரலில் மெய்மறந்து இருப்பதை ஸ்ரீராம் கவனித்தான். இப்போழுது தான் அவனுக்குள் அந்த கேள்வி எழுந்தது.

‘இவள் பெயர் என்ன?’

“தீராத விளையாட்டுப் பிள்ளை பாடுக்கா, பிளீஸ்” சக்திவேல் கேட்க, சிறு தலையசைப்புடன் அவள் ஸ்வரங்களைக் கூட்டினாள்.

இராகம்: கேதாரம், தாளம்: கண்டஜாதி ஏகதாளம், மீசை பாரதியின் பாடல் அவளின் தேன் குரலில் அத்தனை துள்ளலாய் உருக்கமாய் ஒலித்தது.

“தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை,
தீராத விளையாட்டுப் பிள்ளை…

தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்,
என்அப்பன் என்யைன் என்றால் – அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

தீராத விளையாட்டு பிள்ளை…

புல்லாங்குழல் கொண்டு வருவான் – அமுது
பொங்கித் ததும்பும் நற் கீதம் படிப்பான்,
கள்ளால் மயங்குவது போலே – அதை
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்.
எங்காகி லும்பார்த்த துண்டோ? – கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ?

தீராத விளையாட்டுப் பிள்ளை…”

பாடல் முடிந்து கண்ணனின் குறும்புகளை மனதிற்குள் ரசித்து சிரித்தப்படியே அவள் எழுந்து வணங்கி நின்றாள். மற்றவர்களும் அதே மலர்ச்சியுடன் எழுந்து வணங்க, மரகதம் கற்பூர ஆராதனைக் காட்டி பூஜையைத் தொடங்கினார்.

ஸ்ரீராம் திக்குமுக்காடிப் போனான். “அத்த, இவ்வளவா!” என்று. அவன் இலையில் பரிமாறிய பதார்த்தங்களைப்‌ பார்த்து.

“ஜன்மாஷ்டமி அதுவுமா கண்ணனே வீட்டுக்கு வந்த மாதிரி நீ வந்திருக்க, மறுப்பு சொல்லாம எல்லாத்தையும் சாப்பிடு டா” என்ற மரகதத்தின் உரிமை கண்டிப்பும் அவனுக்கு பிடித்து தான் இருந்தது.

பலகாரங்கள் எல்லாம் சுவையாக இருந்தன. ஆனால் சாப்பிட வயிற்றில் இடம் தான் போதாமல் போனது அவனுக்கு.

உணவு முடிந்ததும், தான் இங்கு வந்த வேலையைப் பற்றி ஸ்ரீராம் சங்கரனிடம் சொன்னான்.

“அப்ப, பெரிய வீட்டை இடிக்க போறீயா ஸ்ரீராமா?” மரகதம் வருத்தமாகவே கேட்க, “பழசை இடிக்காம எப்படி புது வீடு கட்ட முடியும் அத்த?” ஸ்ரீராம் அவரின் கேள்வியைத் திருப்பினான்.

சங்கரன், “இந்த கட்டடம் கட்டற படிப்பு தான் நீ படிச்சிருக்கியா பா?” என விசாரிக்க,

ஸ்ரீராம் புன்னகையுடன், “ஆமா மாமா, நம்ம ஊர்ல எல்லா வசதிகளும் இருக்கிற மாதிரி அழகான பெரிய வீடா கட்டணும்னு அப்பாவோட ஆசை, அதை நிறைவேத்தி வைக்கிறது என் கடமை தான மாமா, அதான் வந்திருக்கேன்” என்று மேலோட்டமாக விளக்கம் தந்தான்.

“பெரிய வீட்டை பரமு விக்க போறதா அரசல் புரசலா கேள்விப்பட்டேன், இப்ப உங்க அப்பாவுக்கும் இந்த ஊருக்கும் இருக்கிற உறவே அந்த வீடு மட்டும் தான், அதையும் வித்துட்டா? எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பா, இப்ப நீ புதுசா வீடு கட்டறேன்னு சொல்றது சந்தோசமான விசயம் தான். உனக்கு என்னென்ன உதவி வேணுமோ கேளுப்பா, எல்லாத்தையும் நான் செஞ்சு தாரேன்” என்று சங்கரன் உறுதி தந்தார்.

# # #

வருவாள்…

error: Content is protected !!