KarisalKattuPenne11

KarisalKattuPenne11

கரிசல் காட்டுப் பெண்ணே 11

 

தன் கிராமத்திற்கு வந்து வெற்றிகரமாக நான்கு மாதங்களைக் கடந்து இருந்தான் ஸ்ரீராம்.

அவன் புது வீடும் மூன்று தளங்களோடு கம்பீரமாக உயர்ந்து எழும்பி இருந்தது. கட்டிடத்தின் சிமெண்ட் பூசு வேலைகள், தொடர் பணிகள் இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருந்தன.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆனதால் வழக்கம்போல சக்திவேலுடன் கழனி காட்டில் நேரம்போக்க வந்திருந்தான்.

அங்கே, அகன்ற புன்னை மர நிழலில்,

“தாப்பூ தாமரப்பூ தாத்தா தந்த தாழம்பூ,

மாப்பூ மல்லிகப்பூ மாமா தந்த மகிழம்பூ,

சேப்பூ செவ்வந்திப்பூ சித்தி தந்த
செம்பருத்திப்பூ,

ஆப்பூ அரளிப்பூ அக்கா தந்தாளாம் அல்லிப்பூ…”

சீதா தலையை ஆட்டி அசைத்து கண்கள் விரித்து பாட, அவளெதிரில் அமர்ந்து இருந்த இரண்டு குழந்தைகளும் பொக்கைவாய் விரிய குலுங்கி குலுங்கி சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.

தங்கள் மஞ்சள் காட்டில் களை எடுத்துக் கொண்டிருந்த பெண்களின் குழந்தைகளை வேடிக்கை காட்டி கவனித்துக் கொண்டிருந்தாள் சீதா.

அவளின் குழந்தைப்பாடலை ஸ்ரீராமும் ரசித்தபடி, தன் பைக் மீது சாய்ந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவளிடம் பேசுவதை தவிர்த்து கொண்டு தான் வருகிறான். ஆனால் அவளின் பாடலை கேட்க எப்போதும் கசப்பதில்லை இவனுக்கு. அவளின் தேன் குரலில் அப்படியொரு ஈர்ப்பு இருந்தது.

முன்பு அவளின் மீதிருந்த கோபம் இப்போதும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்வான். ஆனாலும் அவளுடன் சாதாரணமாக பேச இவன் முயலவில்லை. அதைப்பற்றி யோசிக்க நேரமின்றி,
புதுவீட்டு வேலைகள் அவனை முழுவதுமாக ஆக்கரமித்துக் கொண்டிருந்தன.

ஒருவேளை சீதா இவனிடம் பேச முயன்றிருந்தால் பேசி இருப்பானோ என்னவோ! அவளும் இவனிடம் வலிய சென்று பேச முயலவில்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்று விலகிக் கொண்டாள் தன்னால் மேலும் அவனுக்கு மன உளைச்சல் வேண்டாம் என்று.

“க்கா என்கு…” என்று மாறாத மழலை பேச்சில் ஒரு குழந்தை அவளிடம் தன் கையை நீட்டி விளையாட கேட்க, சீதா அந்த பிஞ்சு விரல்களை ஒவ்வொன்றாக பிடித்து,

“சின்னான் சின்ன விரலு

சீனத்தான் பொன்னுக் குட்டி

வாழை இளங்குறுத்து

வந்தாரைக் கைகாட்டி

பேரை பெருவிரலு

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறு…!”

என்று கிச்சு கிச்சு மூட்டி விட, குழந்தை கூச்சத்தில் கிளுக்கி கிளுக்கி சிரித்தது.

இதனை பார்த்திருந்த அவனுக்குள் இப்போதும் அந்த கேள்வி எழுந்தது. கண்கள் சுருக்கி அவளின் முகத்தை சற்று யோசனையாக பார்த்தான்.

மாலையோடு களை எடுத்து முடித்திருக்க, கூலியை பெற்றுக் கொண்டு, தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அந்த பெண்கள் சென்றிருந்தனர்.

மாடுகளுக்கு தேவையான தீவன தட்டை அறுத்து கத்தைக் கட்டி தனது டிவிஎஸ்ஸில் வைத்துக் கட்டியவர்,‌ “சக்தி, நீயும் அக்காவும் ஸ்ரீராம் கூட வந்திடுங்க, இவங்கள வீட்டுல விட்டுடு ராமா” என்று சொல்லிவிட்டு சங்கரன் சென்று விட்டார்.

“கபடி விளாட பசங்க கூப்புறாங்க க்கா, நான் இப்படியே போறேன், நீ அம்மா கிட்ட சொல்லிடு, பாய் ஸ்ரீராம்” சக்திவேல் அவசரமாக சொல்லிவிட்டு தன் வாண்டு நண்பர்களோடு ஓட,

“சக்தி, இருட்றத்துக்குள்ள வீடு வந்து சேரணும்” சீதா கத்தி சொல்ல, “சரி க்கா” அவன் குரல் தூர தேய்ந்து ஒலித்தது.

சீதா தலையசைப்போடு மூங்கில் கூடையை எடுத்து இடுப்பில் வைத்து கொண்டு வீடு நோக்கி நடை போட, ஸ்ரீராமின் வண்டி அவளருகில் வந்து நின்றது. இவள் நின்று திரும்ப, அவனுக்கு வரட்டு வீம்பு, இவளை பார்க்கவும் இல்லை, ஏறு என்று சொல்லவும் இல்லை பைக்கை உறும விட்டபடி இருந்தான்.

அவளும் குறையாத வீம்போடு விலகி நடக்க, “சீதா வண்டியில ஏறு” வெகுநாளைக்கு பிறகு அவளிடம் பேசி இருந்தான்.

“பரவால்ல சின்னா, குறுக்கால நடந்தா பத்து நிமிசத்துல வீடு போய் சேர்ந்திடுவேன்” என்று பதில் தந்து திரும்பி நடக்க, ‘இந்த வீம்பு திமிரு பேச்சுக்கு ஒண்ணும் சளச்சவ இல்ல’ என்று எண்ணிக் கொண்டவன், வண்டியில் அமர்ந்தபடியே அவளின் கைப்பற்றி நிறுத்தினான்.

“நான் தான் வண்டியில ஏற சொல்றேன் இல்ல, அதை கேக்காம நீ பாட்டுக்கு நடந்து போனா என்ன அர்த்தம்?”

“முதல்ல கைய விடு சின்னா, யாராவது பாக்க போறாங்க” சீதா பதற, தான் பிடித்திருந்த அவள் கையை ஒரு நொடி பார்த்தவன், “அப்ப, யாரும் பார்க்காதப்போ நான் உன் கைய பிடிச்சா பரவால்லையா?” என்று கேட்டு வைக்க, அவள் இவனை உறுத்து பார்த்தாள்.

“ஆமா, கைய புடிச்சா கற்பு போயிடும்னு உனக்கு யார் சொன்னாங்க பாப்பு?” பிடித்த கையை விடாமல் அவன் கேலியாக கேட்க,

“நீ எதை பேசறதா இருந்தாலும் கைய விட்டு பேசு சின்னா” என்று தன்கையை அவள் விலக்க முயல, அவன் பிடி மேலும் இறுகியது தான் மிச்சம்.

“அச்சோ சின்னா விளையாடாத, இது டவுன் இல்ல கிராமம், இங்க யாராவது நம்ம பார்த்து தப்பா நினைக்க போறாங்க” அவள் பதற்றமாக சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றினாள்.

இவனும் அவளை போலவே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “நீ வீணா டென்ஷன் ஆகுற, இங்க நம்மள தவிர வேற யாரும் இல்ல, அப்படியே பார்த்தாலும் நமக்கு என்ன?” அவன் வேண்டும் என்றே பிடிவாதம் பிடிக்க,

“இப்ப நான் என்ன செஞ்சா, நீ என் கையை விடுவ?” அவள் இறங்கி வந்தாள்.

“குட், வந்து வண்டியில ஏறு” என்று அவன் கையை விடுவிக்க, இவள் அவனை முறைத்து விட்டே வண்டியில் அமர்ந்து கொண்டாள்.

வாய்க்கால் வரப்பின் ஒற்றையடி பாதையில் அந்த வண்டி மெதுவாகவே ஊர்ந்து சென்றது.

“நான் இங்க வந்தப்போ நீ வீணை வாசிச்சு, கர்னாடிக் பாட்டெல்லாம் பாடின, இப்பெல்லாம் நாட்டுபுற பாட்டு பாடுற… இந்த பாட்டெல்லாம் எங்க கத்துக்கிட்ட?” ஸ்ரீராம் தன் பலநாள் சந்தேகத்தை கேட்க, அவனுக்கு அவளின் மௌனமே பதிலாக கிடைத்தது.

“பாப்பு, நான் உன்கிட்ட கேள்வி கேட்டேன் பதில் சொல்லு” அவன் மறுபடி கிளற,

“ஏதோ கத்துக்கிட்டேன், ஏதோ பாடுறேன் விடேன்… உனக்கும் பிடிக்கலைனா இனி உன் முன்ன பாடல…” எத்தனை அலட்சியமாக பதில் தந்தாலும் அவளின் குரலில் பிசிர் தட்டியது.

வண்டியை நிறுத்தி விட்டு அவளிடம் திரும்பியன், “நீ பாடறது பிடிக்கலன்னு சொன்னேனா உன்கிட்ட, ஒண்ணு கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா நீ?” அவளிடம் கடுகடுத்தான்.

“நீ முதல்ல வண்டி எடு, நடந்து போயிருந்தா இந்நேரம் வீடு போய் சேர்ந்திருப்பேன்” அவளும் அவனுக்கு இணையாய் சிடுசிடுத்தாள்.

“அப்ப இறங்கி நடந்து போ” என்று தன் பங்கிற்கு அவனும் சிடுசிடுக்க, சீதா இறங்கிக் கொண்டாள்.

கழனியில் இருந்து குறுக்கு வழியில் சென்றிருந்தால் பதினைந்து நிமிடங்களில் வீட்டை அடைந்திருக்கலாம். ஆனால், இப்போது சுற்று பாதையில் பாதி தூரம் கடந்து வந்திருக்க, இங்கிருந்து சாலையை அடைந்து நடந்து வீட்டை அடைய குறைந்தது முப்பது நிமிடங்களாவது எடுக்கும் என்று எண்ணமிட்டவள், அவனை ஏகத்துக்கும் முறைத்து விட்டு நடக்க தொடங்கினாள்.

ஸ்ரீராம் தன் பைக்கை தள்ளியபடி அவளுடனே நடந்தான். “நீ போக வேண்டியது தான, ஏன் என்னோடவே வர” சீதா அவனை எரிச்சலோடு விரட்ட,

“உன்ன பத்திரமா வீட்ல விட சொல்லி மாமா சொல்லிட்டு போனாரு, வழியில ஏதாவது சித்தெரும்பு உன்ன தூக்கிட்டு போயிடுச்சுன்னா, நான் தான மாமாவுக்கு பதில் சொல்லணும் அதான் துணைக்கு வரேன்.”

“பெரிய இன்ஜினியரிங் படிப்பெல்லாம் படிச்சிட்டு சின்னபுள்ள தனமா என்கிட்ட விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்க சின்னா.”

“சின்னபுள்ள தனமா விதண்டாவாதம் செய்யறது நானா? இல்ல நீயா? பாப்பு?”

“இப்ப என்ன உனக்கு?”

“ம்ம் நான் கேட்டதுக்கு உறுப்படியா பதில் சொல்ல உனக்கு என்ன கஷ்டம்?”

“நான் பாட்டு போட்டில நல்லா பாடினேன்னு எங்க ஸ்கூல் டீச்சர், என்னை பாட்டு கத்துக்க சொல்லி என்கரேஜ் பண்ணாங்க, அவங்க தான் டவுன்ல ஒருதங்க கிட்ட பாட்டு கத்துக்க என்னை சேர்த்துவிட்டாங்க, அவங்ககிட்ட தான் வீணை வாசிக்கவும், கர்னாடிக் பாடவும் கத்துட்டு இருந்தேன்”

“ஓகே, இவ்வளவு இன்டரெஸ்டா பாட்டு கத்துக்கிட்ட சரி, ரெகுலர் பிராக்டீஸ் பண்ணாம இருந்தா வேஸ்ட் தான, டச் விட்டு போயிடும் இல்ல” அவள் இதுவரை பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பதை கவனித்து சுட்டிக் கேட்டான்.

“ம்ம் ஆனா… நான் பாடறது மாமாக்கு பிடிக்கல, இனி நான் பாட கூடாதுன்னு சொல்லிட்டாரு… அதால அப்பா என்னை பாட்டு கிளாஸ் போக வேணாம்னு பாதியில தடுத்துட்டாரு” கனமாக உதிர்ந்தன அவர் வார்த்தைகள்.

“கிருஷ்ணாவா உன்ன பாட வேணாம்னு தடுத்தான்?” இறங்கிய குரலில் கேட்டவன்,

“அவன் பாட வேணாம்னு சொன்னா நீயும் அப்படியே விட்டுடுவியா? அவன்கிட்ட நீ பேசி இருக்கணும், உனக்கு பாடறதுல எவ்வளவு இன்டரெஸ்ட் இருக்குனு அவனுக்கு புரிய வச்சு இருக்க வேணாமா?” என்று ஆதங்கமாக கேட்டான்.

நமக்கு தேவையானதை நாம் தானே ஏதேனும் ஒரு வகையில் போராடி பெற வேண்டும். சின்ன தடைகளுக்கு எல்லாம் நம் விருப்பங்களை கைவிடுவது கோழைத்தனமல்லவா!

“எங்ககிட்ட எல்லாம் சரிக்கு சரியா வாயடிக்கிற இல்ல, கிருஷ்ணா கிட்டயும் அப்படி பேச வேண்டியது தான?” அவன் இவள் மீது தான் கோபம் காட்டினான்.

“நான் மாமா கிட்ட பேசினேன் சின்னா…” என்றவள் கண்கள் அவனை நேராய் நோக்கின.
.
.
.

அப்போது பூப்பெய்தி சில மாதங்கள் தான் ஆகி இருந்தது சீதாவிற்கு. பள்ளி செல்லும் சிறு பெண்ணானவள்
மிகுந்த தயக்கத்துடன் தான் கைப்பேசியில் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.

“மாமா… எனக்கு பாட்டுனா ரொம்ப இஷ்டம்… நான் பாட்டு கத்துக்கிறேன் மாமா… மறுப்பு சொல்லாதீங்க…” எடுத்ததுமே இவள் கெஞ்சி கேட்க,

“இப்ப பாட்டு கத்துட்டு என்ன கிழிக்க போற நீ? ஒழுங்கா பப்ளிக் எக்ஸாம்க்கு ப்ரபேர் பண்ற வேலை பாரு” ராமகிருஷ்ணன் அவள் மன்றாடலை தட்டிக் கழித்தான்.

“நான் படிச்சிட்டு சுலுவா இருக்கற நேரத்துல தான் பாட்டு கத்துக்கிறேன்…”
சின்னவள் அதற்கும் சமாதானம் சொல்ல,

“படிப்பு முடிஞ்சு உனக்கு ஃப்ரீ டைம் இருந்தா, கம்ப்யூட்டர் கிளாஸ்‌ போ, இல்ல, டைப்பிங், ஸாட்டர்ன், ஸ்போக்கன் இங்கிலீஷ், பியூட்டீஷியன் கிளாஸ் இப்படி ஏதாவது ஒண்ணு எடுத்து போறேன்னு கேட்டா, நீ புத்திசாலி பொண்ணுனு நானும் சரி சொல்லி இருப்பேன்… போயும் போயும் பாட்டு கிளாஸ்…” அவன் தலையில் அடித்து கொள்வது இவளுக்கு கேட்டது.

“பிளீஸ் மாமா நான் பாடணும்…” சின்னவள் மனம் பாட்டிலேயே சிக்கிக் கொண்டு நின்றது.

அவள் எதற்கும் இதுவரை இத்தனை தூரம் தன்னிடம் பேசியதில்லை என்பதை நினைத்து பார்த்தவன்,
“உன்ன பாட வேணானு நான் சொல்லல, நாலு சுவத்துக்குள்ள, வீட்டுக்குள்ள எவ்வளவு பாடணுமோ பாடிக்க…” என்றான்.

“அப்ப பாட்டு கிளாஸ்…?”

“ஒரு மண்ணும் வேணா, என் பொண்டாட்டி எனக்கு மட்டும் பாடினா போதும், ஊருக்கெல்லாம் கச்சேரி வைக்கணும்னு தேவையில்ல புரியுதா?” ராமகிருஷ்ணன் முடிவாக முடித்திருந்தான்.

சீதா அதற்கு மேல் அவனிடம் கெஞ்சவில்லை. கேட்கவில்லை. தன் விருப்பமும் பாட்டின் மீது தனக்கு இருக்கும் பற்றுதலும் தெரிந்த பின்னும் தன் பிடிவாதமே பெரிதென்று மறுப்பவனிடம் வேறென்ன சொல்லி கேட்க, அந்த இளங்குறுத்தின் மனம் அப்போதே விட்டிருந்தது.
.
.
.

அவள் சொன்னதை கேட்டு ஸ்ரீராமும் கசந்து போனான். ‘சின்ன குழந்தை பெண்ணிடம் இப்படியா பேசி வைப்ப கிருஷ்ணா? ச்சே உனக்கு புத்தின்னு ஒண்ணு இருக்கா இல்லையா? அவளோட விருப்பத்தை, திறமையை பத்தி கொஞ்சம் கூட யோசனை வரலையா உனக்கு?’ ராமகிருஷ்ணனை மனதிற்குள் கடிந்தும் கொண்டான்.

தன் முன்னால் வாடிய முகமாக நடமிடுபவளிடம் என்ன தேறுதல் மொழி சொல்வதென்று தெரியாமல் இவனும் நடந்தான். இருவரின் குறுக்காக வண்டியை நகர்த்தியபடி,

“எனக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும் சின்னா… யாருக்கு தான் பாட்டு பிடிக்காது… என்னை பாட வேணாம்னு சொல்லுவாங்கன்னு நான் அப்பெல்லாம் நினச்சு பார்த்தது கூட இல்ல… ஆனா, என்னை சேர்ந்தவங்களே சொல்லும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… அழுக அழுகையா வரும்…” என்று வெறுமையாக சிரித்தாள். அந்த கனத்த மனநிலையை அவள் கடந்து வந்து விட்டாள் என்று சாட்சியம் கூறி போனது அந்த வெற்று சிரிப்பு.

ஸ்ரீராம் அன்றைய சிறு பெண்ணின் சிறகொடிந்த உணர்வுகளை உள்வாங்கியபடி குறுக்கிடாமல் வந்திருந்தான்.

“ப்ச் அப்புறம் என் மனசை தேத்திக்கிட்டேன் சின்னா, ராகம், தாளம்னு எல்லையிட்டு பாடுற பாட்டை தான் கத்துட்டு பாடணும்… அதுபோல எந்த எல்லையும் இல்லாம என்னை சுத்தியும் பாட்டு இருந்ததை அப்புறம் தான் கவனிச்சேன்… தாலாட்டு, விளையாட்டு பாட்டு, ஒப்பாரி, நடவு பாட்டு, திருவிழா, மழைப்பாட்டுன்னு ஒவ்வொரு செயலோடவும் இங்க பாட்டு கலந்து இருந்துச்சு… நானும் அந்த கிராமிய பாட்டோட என்னை கலந்துக்கிட்டேன்… இங்க லைப்ரரில நாட்டுபுற பாடல்கள் பத்தி புத்தகங்களை எடுத்து படிச்சு இன்னும் நிறைய பாட்டை கத்துக்கிட்டேன்…”

“…”

“பாட்டு என்னோட கலந்தது… எனக்காக, என் ஆத்ம திருப்திக்காக நான் பாடுறேன்… கல்யாணத்துக்கு அப்புறமும் தனியா இருக்கும் போது என்பாட்டு எனக்கு துணையா இருக்கும்…”

ஸ்ரீராம் வியந்து நின்றான் ஒருநிமிடம். இப்போது இருவரும் சாலைக்கு வந்திருந்தனர்.

“என்ன சின்னா, அமைதியாகிட்ட” சீதா கேட்க, “நீ என்னை வாயடைக்க வச்சுட்ட பாப்பு” என்றவன் வண்டியை உயிர்பித்து, “நேரமாச்சுன்னு அத்த வழிய பார்த்துட்டு இருப்பாங்க, ஏறு கிளம்பலாம்” என்க, சீதாவும் மறுக்க தோன்றாமல் அமர்ந்து கொண்டாள்.

அவளை வீட்டில் இறக்கிவிட்டு வந்தவன் மனம் அவள் சொல்லிச்சென்ற வார்த்தைகளை திருப்பி திருப்பி இவனிடம் ஒப்புவித்தப்படியே இருக்க, சற்று தளர்ந்து போனான்.

சீதாவின் நிலையை எண்ணி ஒருபுறம் வேதனையாக இருக்க, மறுபுறம் ‘என் ஆத்ம திருப்திகாக நான் பாடுறேன்’ என்ற அவளின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்து கொண்டான்.

********
வருவாள்…

error: Content is protected !!