கரிசல் காட்டுப் பெண்ணே 15
சட்டென ஒரு வானிலை மாற்றம்!
நீல வானில் நீச்சல் தொடங்கி இருந்தன மேகங்கள்!
தரையில் இருந்த இலைகளையும் காகிதங்களையும் தன் மாயக் கரங்களில் ஏந்தி சுழற்றியது காற்று!
திரண்டு வரும் மழையில் இருந்து தப்பிக்க சிலர் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்க, சிறுவர்கள் சிறுமியர் உற்சாகமாய் கூச்சலிட்டு ஆட்டமிட்டனர்.
அனைத்தையும் கவனித்தபடி சீதா அந்த மண்சாலையில் இறங்கி நடந்தாள். அது அவளுக்கு பழக்கப்பட்ட சாலை தான், இப்போது சில வித்தியாசங்களோடு காணப்பட்டது.
மேகத்தின் முதல் துளி மண்ணில் விழுந்து தெறிக்க, எங்கும் மண்வாசனை பரப்புவதாய்.
தன் சகாக்களோடு பேசியபடி சீதாவை பார்த்தவிட்ட அவன் காந்த விழிகளில் சிறு மின்னல், அவளை நோக்கி நடந்து வந்தான்.
அவனை தூரத்தில் பார்த்து விட்ட இவளின் இதயத்திற்குள் இனந்தெரியாத தடதடப்பு…
ஏனோ தன் முகத்தை பாதி மறைத்து குறுக்கே துணி கட்டி இருந்தான் அவன்!
தன்னை சுற்றி அனைத்தையும் மறந்துவிட்டு எதிரில் வருபவனை மட்டும் பார்வையில் நிறுத்தி தயங்கி நடந்தாள். யார் அவன்?
அவனும் இவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் நெருங்கி வந்திருந்தான்.
அவன் கொக்கி பார்வை இவளை சிக்க வைக்க விழைய, தடுமாறியவள், பாதையில் கால் தடுக்கி கீழே சரிய, அதற்கெனவே காத்திருந்த அவன் கைகள் இவளின் இடைவளைத்து தாங்கிக் கொண்டன.
பெண்ணவளால் மொழிப்பெயர்க்க இயலாத ஆயிரம் கதைகளை அவன் கண்கள் பேச, இவள் தன் உணர்வு துறந்து அவன் பார்வையில் தொலைந்துக் கொண்டிருந்தாள்.
இதென்ன புது உணர்வு?
யாரிவன் என்னை என்னிலிருந்து பிரித்திழுப்பவன்?
அவனை யாரென்று அறியும் ஆவல் அவளுக்கு. நிச்சயம் அவன் தன் நெஞ்சிற்கு நெருக்கமாவன் என்று அவளின் உள்ளுணர்வு சொன்னது.
அவன் கண்கள் இவளிடம் சிரித்தன. இன்னும் அவளை தன் கைகளில் தாங்கியபடி தான் இருந்தான்.
துணிந்து அவன் முக கட்டை விலக்கியவள், அதிர்ச்சியையும் சந்தோசத்தையும் ஒருங்கே கொண்டாள்.
‘நீயா சின்னா?’
‘நானே தான் பாப்பு!’
‘இங்க எதுக்கு வந்த?’
‘உனக்காக தான்… உனக்காக மட்டும் தான் வந்தேன்!’
ஸ்ரீராம் மயக்கும் இளநகையோடு சொல்ல, இவளின் பேதை உள்ளம்
எம்பி துள்ளி குதித்து குத்தாட்டம் இட்டது.
‘எனக்காகவா?!’
உள்ளம் முழுதும் புது வெள்ளம் போங்கி பெருகியதை போன்ற உணர்வு.
இத்தனை உணர்ச்சி பெருக்கை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல், சீதா அவனிடமிருந்து விலகி ஓடினாள்.
ஸ்ரீராம் அவளை பின் தொடரவில்லை. இளநகை மாறாமல் அங்கேயே நின்று அவள் பார்வைக்கு மறையும்வரை பார்த்திருந்தான்.
நேராக தோட்டத்திற்குள் வந்து புகுந்து கொண்டாள் சீதா. அது இவள் அதிக நேரம் செலவழித்த பெரிய வீட்டின் தோட்டம்.
அவள் இதயம் சிறகு முளைத்து பறப்பது போன்ற உணர்வு! ஒரு நொடியில் உலகையே சுற்றி வந்து மீண்டும் அவளிடம் சேர்ந்தது மனம்!
‘சின்னா எனக்கே எனக்காக வந்தவனா?’
அந்த கேள்வியில் சீதாவின் இமைகள் திறந்து கொண்டன. இரவு விடியலோடு கைக்கோர்க்கும் நேரம், படுத்திருந்த பாயில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள்.
நிஜத்தை போல ஒரு கனவு!
நிச்சயம் அழகான கனவு!
சீதா தனக்கு தானே சிரித்துக் கொண்டாள்.
எதற்கிந்த கனவு? சின்னா எனக்காக இங்கே வந்தானா? இப்படியொரு விசித்திர கனவை அவனிடம் சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டானா?
தொடர் கேள்விகள் மனதில் எழ, தன் தலையை தானே தட்டிக் கொண்டவள், ‘சின்னாவ நினைச்சிட்டு படுத்திருப்பேன் போல, அதான் ஏடாகூடமா கனவு வந்திருக்கு’ என்று தனக்கான சமாதானத்தை தானே சொல்லிக் கொண்டு எழுந்தாள்.
பின்பக்கம் சென்று முகம் கழுவி வாளியில் தண்ணீர் தூக்கி வந்து வாசலில் தெளித்து பெருக்கி கோலமிட்டாள்.
இன்றைய விடியல் இதமாய் விடிந்தது சீதாவிற்கு.
வழக்கம் போல மரகதம் எழுந்து குளித்து விட்டு தேநீர் கலந்தார். சங்கரனும் எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து விட்டு வந்தவர், தேநீரை பருகிவிட்டு வானம் வெளுக்கும் போதே சென்னையை நோக்கி கிளம்பி விட்டார்.
அன்றாட காலை வேலைகள் நடந்தபடி இருக்க, கண்ட கனவின் தாக்கம் சீதாவின் மனதோரம் குறுகுறுத்தபடி இருந்தது. தானும் குளித்து உடை மாற்றி, சமையலில் அம்மாவிற்கு உதவிக்கு வந்திருந்தாள்.
அப்போது வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு வந்து பார்க்க, இவள் விழிகள் விரிந்தன. கனவில் வந்தது போன்றே ஸ்ரீராம் முகத்தின் குறுக்கே கைக்குட்டையை கட்டியபடி காரிலிருந்து இறங்கி வந்தான்.
“காலங்காத்தால கார எடுத்துட்டு எங்க கிளம்பிட்ட சின்னா? எதுக்கு பகல் கொள்ளைக்காரன் மாதிரி மூஞ்சில துணிய கட்டிகிட்டு வந்திருக்க?” சீதா படபடக்க,
“ஹாஹாஹா” காருக்குள் இருந்து பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்டது.
சீதா விழிக்க, மரகதமும் வெளியே வர, கீர்த்திவாஷினி காரிலிருந்து இறங்கி வந்து அவர்கள் முன் நின்றாள் விரிந்த சிரிப்புடன்.
“ஹாய் சீதா, கரெக்டா சொன்ன இவன் பகல் கொள்ளைக்காரன் மாதிரி தான இருக்கான்” என்று மேலும் சிரிக்க, விடியற்காலை பனி தாக்காதிருக்க முகத்தில் கட்டியிருந்த கைக்குட்டையை இருவரையும் முறைத்துக் கொண்டே கழட்டி விட்டான் ஸ்ரீராம்.
“அத்த இது கீர்த்தி, என்னோட” ஸ்ரீராம் அறிமுகம் செய்ய குறுக்கிட்டவள், “நீங்க தான் மரகதம் அத்தையா, சோ ஸ்வீட் ஆன்ட்டி, உங்கள பத்தி இவன் இவ்ளோ இவ்ளோ இவ்ளோ… சொல்லி இருக்கான்” என்று கைவிரித்து காட்டியவள், படாரென்று அவர் காலைத் தொட்டு வணங்கினாள். ஒரு நொடி குழம்பிய மரகதம், “நல்லா இரும்மா, ரெண்டு பேரும் உள்ள வாங்க” என்று உள்ளே அழைத்து வந்தார்.
அப்போது தான் கண்ணைகசக்கி கொண்டு எழுந்து வந்த சக்திவேல் புதியவளை மேலும் கீழுமாக பார்த்து நின்றான். இறுக்கிய பிளாக் ஜீன்ஸ் பேண்ட்டும் ஸ்லீவ்லெஸ் ஆஃப்வொய்ட் டாப்பும் அணிந்து பளீர் சிரிப்புடன் வெளீர் சரும பளபளப்புடன் இருந்தாள் அவள்.
“ம்ம் நீதானே சக்தி, ஐ அம் கீர்த்தி” என்று இவள் கைநீட்ட, திருதிருத்தபடியே சின்னவனும் கைக்குலுக்கினான்.
மற்ற இரு பெண்களின் முகத்திலும் கூட அதே திருதிருப்பு தெரிய, “ஃப்ரண்டு அத்த, பேங்களூர்ல இருந்து வந்திருக்கா, உடனே கிளம்பி வந்ததால நேத்தே உங்ககிட்ட சொல்ல முடியல, இப்ப தான் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து பிக்கப் பண்ணி நேரா இங்க கூட்டிட்டு வரேன்” என்றான் ஸ்ரீராம் வழக்கமான தன் அதிராத பேச்சில்.
அதுவரை அந்த வீட்டை பார்வையால் சுற்றி அளந்த கீர்த்தி, சீதா பரிமாறிய தேநீரை புன்னகையோடு பெற்றுக் கொண்டாள்.
“ப்ளீஸ் ஸ்ரீ, இங்க மட்டும் என்னை தங்க சொல்லாத, நான் அட்ஜஸ் பண்ணிக்கிறது கஷ்டம், ஒரு ஏசி கூட இங்க இருக்க மாதிரி தோணல” என்று அவன் காதோடு கிசுகிசுக்க,
“ஏன் இங்க இருக்கிறவங்க எல்லாம் மனுசங்களா தெரியலையா உனக்கு?” இவனும் கிசுகிசுக்க, கீர்த்தி முகம் சுருங்கி சிணுங்கி கொண்டாள்.
“என்ன ஸ்ரீராம் சொல்றாங்க?” மரகதம் வினவ, “அது அத்த, கீர்த்தி இனிமே இங்க தான் இருக்க போறா, இவளை உங்க கூட தங்க வச்சுக்கிறீங்களா?” ஸ்ரீராம் கேட்க,
“இதென்னடா கேள்வி, உன் பிரண்டுன்னு சொல்ற தாராளமா தங்கட்டும்” என்றார்.
“என்னது ஃபிரண்ட் மட்டும் தானா? அடாபாவி, இங்க இருக்கறவங்க எல்லார் பத்தியும் எங்கிட்ட கதைகதையா சொல்லிட்டு, இவங்க யார் கிட்டையும் என்ன பத்தி ஒன் வேர்ட் கூட சொல்லல இல்ல. இவ்ளோ தான் நீ என்மேல வச்சிருக்க லவ்வா” கீர்த்தி முறைத்து நிற்க,
ஸ்ரீராம் தலையில் அடித்துக் கொண்டான். அவள் கைபிடித்து இழுத்து அமர வைத்துவிட்டு, சங்கடமாக நிமிர்ந்தான். அங்கிருந்த மூவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்.
கீர்த்தி வாய் துடுக்கு என்பது இவனுக்கு தெரியும் தான் ஆனாலும் இப்படியா எல்லாவற்றையும் போட்டு உடைப்பாள் என்று அவளை ஏகத்திற்கும் முறைத்து வைத்தவன், “சாரி அத்த, தப்பா நினைக்காதீங்க, நானும் கீர்த்தியும் லவ் பண்றோம். நான் முன்னவே சொல்லி இருக்கணும்” ஸ்ரீராம் தயங்கியபடி சொல்ல,
“இந்த விசயம்… அண்ணாக்கும் அண்ணிக்கும் தெரியுமா ராமா?” மரகதம் சற்று கலவரமாக கேட்க,
“டோண்ட் வொர்ரி அத்த, அப்பா, அம்மாவுக்கு எங்க லவ் மேட்டர் முன்னவே தெரியும். கீர்த்தி இங்க வர போறதையும் நைட்டே ஃபோன்ல சொல்லிட்டேன்” என்று சமாதானம் சொன்னான்.
இருந்தாலும் மரகதம் முகம் தெளியவில்லை. திருமணத்திற்கு முன்னரான காதலை அத்தனை சுலபமாக ஜீரணிக்கும் பக்குவம் அவருக்கு இருக்கவில்லை.
அதேநேரத்தில் தொலைபேசி அழைப்பு விடுக்க, மரகதம் எடுத்து பேசினார். மறுமுனையில் கௌதமி தான் பேசினார்.
“என்ன அண்ணி இது? ராமு திடீர்னு காதலிக்கிறேன்னு ஒரு பேண்ட்டு போட்ட பொண்ணோட வந்து நிக்கிறான். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல, இப்பன்னு பார்த்து அவகளும் வெளியூர் போயிருக்காக, நான் என்ன செய்ய” ஓரே மூச்சாக படபடத்தார்.
“மரகதம், கீர்த்தி நல்ல பொண்ணு மா, கொஞ்சம் துடுக்குதனமா பேசுவா அவ்ளோதான், நம்ம ஸ்ரீராமுக்கு கீர்த்திய தான் பேசி இருக்கோம். அதால நீ தைரியமா அவள தங்க வச்சுக்கோ” கௌதமி பொறுமையாக எடுத்து சொல்ல,
“நீங்க சொன்னா சரிதான் அண்ணி, பொண்ணும் பார்க்க மெழுகுசிலை மாதிரி லட்சனமா தான் இருக்கா, நான் பாத்துக்கிறேன் அண்ணி” என்று வைத்துவிட்டு திரும்பினார்.
“முன்னமே ஒத்த வார்த்தை சொல்ல மாட்டியா ராமா, பதறிடுச்சு போடா எனக்கு” என்று அவன் தோளில் தட்ட, அவன் ஈஈஈஎன்று இளித்து சமாளித்தான்.
“சீதா அந்த கீழ அறையை இவங்களுக்கு ஒதுக்கி கொடு மா” மகளிடம் சொல்ல,
“என்ன இதுக்கும் கீழ ரூம் இருக்கா? என்ன அன்டர்கிரைவுண்டா ஸ்ரீ?” கீர்த்தி விழி விரித்து பதறி கேட்க, கடுப்பாகி அவள் தலையை தட்டியவன், “கீழ அறைன்னா, அடியில இருக்க அறை இல்ல மக்கு, கிழக்கு பக்கமா இருக்க அறை” என்று விளக்கினான்.
“ஓஹ்” கீர்த்தி அசடு வழிய தலையசைத்து கொள்ள, மற்றவர்கள் முகத்தில் சின்ன சிரிப்பு வந்து போனது.
“எனக்கு ஓரளவு நல்லாவே நீங்க பேசறது புரியுது, அறைன்னா ரூம் தானே கரெக்டா கண்டுபிடிச்சேன் இல்ல” கீர்த்தி வளவளக்க, அங்கே இன்னும் சிரிப்பு பரவியது.
“மாமா எங்க அத்த?” ஸ்ரீராம் கேட்க,
“அவரு மெட்ராஸ் வரைக்கும் கிளம்பி இருக்காரு ராமா” என்றதும், “மாமா நல்லசேதியோட வருவாரு, நீங்க கவலைபடாதீங்க அத்த” அவன் நம்பிக்கை கூற, அவர் நிறைவாக தலையசைத்து விட்டு நகர்ந்தார்.
“சின்னா, அறைய ஒதுக்கி வச்சுட்டேன், அவங்கள அழைச்சிட்டு வா” சீதா உள்ளிருந்து குரல் கொடுக்க, ஸ்ரீராம், கீர்த்தியின் பொதிகளை எடுத்து கொண்டு அவளையும் அழைத்து கொண்டு உள்ளே வந்தான்.
கீர்த்தியின் கண்கள் அந்த அறையை மிரட்சியாக பார்த்தது. வெகு சாதாரணமாக தான் இருந்தது அந்த அறை. சன்னலோரம் மரத்தாலான ஒரு சிறிய கட்டில் அதன்மீது தடிமனற்ற மெத்தை, துவைத்து சுத்தமான விரிப்பு தலையணைகள் இருந்தன.
மறுபுறம் மூலையில் கண்ணாடி பதித்த பழையகால அகல மரபீரோவும் அதன் எதிரே மரமேஜையும் மர நாற்காலி ஒன்றும் இருந்தது.
“இங்க அட்டாச்ட் பாத்ரூம் கூட இல்ல ஸ்ரீ” கீர்த்தி சிணுங்க, “பின்னால பாத்ரூம் இருக்கு நீங்க யூஸ் பண்ணிக்கலாம். சுத்தமா தான் இருக்கும் கவலைபடாதீங்க” சீதா பதில் தந்தாள்.
“இது கிராமம்னு தெரிஞ்சு தான வந்த டேடி, அப்ப எல்லாத்தையும் அட்சஸ்ட் பண்ணிட்டு தான் இருந்தாகனும், சும்மா எடுத்ததுகெல்லாம் சிணுங்கிட்டு இருந்தா நல்லாயில்ல” ஸ்ரீராம் கண்டித்து சொல்ல, “ஓகே பாஸ் விடு” கீர்த்தி சரணடைந்து விட்டாள் வந்தவுடன் அவனின் அட்வைஸ் மழையில் நனைய இவள் தயாராக இல்லை.
சீதா அவர்களை புதிராக பார்த்து விட்டு விலகி கொண்டாள்.
‘இன்று தனக்கு வந்த கனவிற்கும், நடந்தேறும் நிஜத்திற்கும் எத்தனை முரண்பாடு?’
‘இப்படி ஒரு காதல் இருக்கும் விசயத்தை ஏன் சின்னா இதுவரை தன்னிடம் கூட சொல்லாமல் மறைத்தான்?’
அவளின் மனதின் ஓரம் சிறு சுணக்கம் உண்டானது.
‘வந்த கனவு நினைவாகணும்னு ஆசைபடுறியா சீதா?’ அவளுள் எழுந்த கேள்வியில் ஆடிப்போனவள்,
‘சே சே அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல, எனக்கு சின்னாவ பிடிக்கும் அவ்ளோதான், வேறெதுவும் தப்பா இல்ல’
சாதாரண கனவைப் பற்றி தான் தேவையில்லாமல் யோசித்து குழம்பிக் கொள்வது புரிய, தலையை குலுக்கி தன்னை மீட்டுக் கொண்டு வேலையில் கவனம் செலுத்த முயன்றாள்.
“போய் குளிச்சிட்டு வா, சாப்பிட்டு வீடு பார்க்க கிளம்பணும், எனக்கு டைம் இல்ல வேலைக்கு ஆள் வந்திடுவாங்க, குயிக்” ஸ்ரீராம் இன்னும் கீர்த்தியை விரட்டி கொண்டிருந்தான்.
“இப்பவேவா, நோ வே, நைட் டிராவல் பண்ணது டையர்ட்டா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்க போறேன், அப்புறம் வீடு பார்த்துக்கிறேன்” அவள் கண்கள் சுருக்கி கெஞ்சினாள்.
“என்னவோ ரயிலுக்கு நீதான் கரி அள்ளி போட்டவ மாதிரி பேசற, டிரெயின்ல நல்லா இழுத்து போத்திட்டு தூங்கிட்டு தான வந்திருப்ப, ஹாப் ன் ஹவர் தான் டைம் ஃபிரஷ் ஆகிட்டு வர” என்று அவன் நகர,
“முடியாது போடா” என்று அவள் முறுக்கி கொண்டாள். ‘இவன் வான்னு கூப்பிட்ட உடனே ஓடி வந்தேன் பாரு என்னை சொல்லணும், கொஞ்ச நாள் நான் கூட இல்லாம இவனுக்கு குளிர் விட்டு போச்சு போல, ஓவரா தான் மிரட்டுறான்,
இருடா உனக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன்’ கீர்த்தி மனதிற்குள் கரித்துக் கொண்டாள்.
கீர்த்தி அசைந்து ஆடி தயாராகி வர முழுதாக ஒருமணிநேரம் கடந்து இருந்தது. அதற்குள் சீதா தயாராகி கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள். சக்திவேல் பள்ளிக்கு சென்றிருந்தான். மரகதம் பறிமாறிய சுடசுட இட்லியையும், பாசி பருப்பு சாம்பாரையும் சுவைத்து சாப்பிட்டவளைப் பார்க்க ஸ்ரீராமிற்கும் சிரிப்பு தான் வந்தது. உண்டு முடித்து அவளை இழுத்து கொண்டு பெரிய விட்டை நோக்கி நடந்தான்.
“அச்சோ ஸ்ரீ, டேஸ்டா இருக்குன்னு எட்டு இட்டலி சாப்பிட்டேன்டா, என்னோட டயட் என்னாகும்? ஓ மை காட்” அவள் பதற, “நீ குண்டானா கூட அழகா தான் இருப்ப டெடி” என்றான் குறும்பாய் கண்ணடித்து.
“இப்ப இப்படி தான் சொல்லுவ, குண்டானதுக்கு அப்புறம் கேலி பண்ணுவ போடா, நான் இனிமே கண்ரோலா தான் சாப்பிட போறேன்” கீர்த்தி சபதம் எடுத்துக் கொள்ள, “நானும் பார்க்க தானே போறேன்” என்று ஸ்ரீராம் இடக்காக சொல்லவும் வீடு வந்திருந்தது.
அத்தனை நேரம் இருந்த குழந்தைத்தனம் மாறி கீர்த்திவாஷினியின் விழிகள் விரிந்தன. கட்டிடத்தின் ஒவ்வொரு இடத்தையும் சென்று பார்வை இட்டவள், அவளுக்கு தெரிந்த வரையில் நிறை குறைகளை பட்டியல் இட, சில இடங்களில் விளக்கம் தந்ததும் சில இடங்களில் ஆமோதித்தபடி உடன் வந்தான் ஸ்ரீராம்.
“சாதிச்சுட்ட ஸ்ரீ, ரியலி ஃபென்டாஸ்டிக் ஹவுஸ் ரா, மாடல்ல பார்த்தத விட நேர்ல செமயா இருக்கு, பெருசா எக்யூப்மென்ட்ஸ் இல்லாம ஃபியூ மன்த்ஸ்ல ஃபினிஷிங்க் வரைக்கும் வந்துட்ட சூப்பர் அமுல் பேபி” அவனை அணைத்து பாராட்டினாள். “தேங்க்ஸ் டெடி, இன்டீரியல் வொர்க் எல்லாம் உன்னோடது தான்” என்று சொல்ல, அவள் உற்சாகமாய் தலையாட்டினாள்.
இவர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசியபடி வந்ததால், அங்கே வேலை செய்து கொண்டிருந்த யாருக்கும் சரியாய் விளங்குவதாக இல்லை. அந்த புது பெண் யாரென்று தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது.
“இஞ்சினியரே, அம்மணி யாருன்னு சொல்ல மாட்டீங்களா?” ரஜினி மேஸ்திரி தான் கேட்டார்.
“இவங்க கீர்த்திவாஷினி, என்னோட படிச்சவங்க, அதோட… நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” அவளை தோளோடு அணைத்து விரிந்த சிரிப்போடு ஸ்ரீராம் சொல்ல, அங்கிருந்த அனைவருமே வாய் பிளந்தனர்.
“என்ன இன்ஜீனியரே, பொசுக்குனு இப்படி சொல்லிபுட்டீங்க” மாரி நம்பமுடியாமல் கேட்க,
“ஏன் நான் உங்க இன்ஜினியருக்கு செட் ஆக மாட்டேனே?” கீர்த்தி விழிவிரித்து சண்டைக்கு நின்றாள்.
அவளின் பேட்டும் டாப்பும் அளவாய் வெட்டப்பட்டு விரித்து விட்டிருந்த குழலும், ஹைஹீல்ஸ் பாதங்களும், லிப்ஸ்டிக் பூசிய இதழ்களும் கொஞ்சமும் கருக்காத வெளீர் நிறமும் என பார்ப்பவர்களை ஆண், பெண் பேதமின்றி மூச்சுமுட்ட வைத்தது.
“சொல்லுங்க சொல்லுங்க என்னைவிட வேற யாரு உங்க இன்ஜினியருக்கு கிடைப்பாங்க?” கீர்த்தி கைகளை தோரணையாக அசைத்து கேட்க,
“ஆத்தா பளிங்குல வடிச்சு வச்ச சிலையாட்டம் இருக்க தாயீ, உங்களைவிட எங்க மவராசனுக்கு ஏத்த சோடி ஆரு இருப்பா” பெண்ணொருத்தி சிலாகித்து சொல்ல, மறுத்து பேச அங்கு எவருக்கும் வாய் வரவில்லை.
ஸ்ரீராம் சிரித்துக் கொண்டான். “ஹேய் அவங்க கிட்ட போய் சண்டைக்கு நிக்கிற?”
“பின்ன, நான் உன் ஆளுன்னு சொன்னா நம்பமுடியாத மாதிரி முழிக்கிறானுங்க, என்னபத்தி சொல்லிவை உன் ஊர்காருங்க கிட்ட” கீர்த்தி மிரட்டல் தோணியில் சொல்ல அதற்கும் சிரித்தவன், “ரியலி உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்டி” அவளின் தலையை பிடித்து ஆட்டிவிட்டு உணர்ந்து சொன்னான் அவன்.
மாலை வீடு திரும்பி இருந்த சங்கரன், கையோடு வரும் புதன்கிழமை சீதாமஹாலட்சுமி, ராமகிருஷ்ணன் திருமணத்திற்கு நிச்சய தேதியை குறித்து விட்ட சந்தோச சேதியை சொல்ல, குடும்பத்தில் அனைவரின் மனதிலும் நிம்மதி பரவியது.
“மகராசி மா நீ, எங்க வீட்டுக்கு நீ வந்தவேளை, தள்ளி போன சீதா கல்யாணம் கைகூடி வந்திருக்கு” என்று கீர்த்தியின் கன்னம் வழித்து நெகிழ்ந்து போனார் மரகதம். மகளின் திருமணத்தை எண்ணி ஒரு பேதை தாயின் பரிதவிப்பு அவரிடம்.
கீர்த்தி சங்கோஜமாக நெற்றி சுருக்கி ஸ்ரீராமை பார்க்க, அவன் ஆதூரமாக கண்களை மூடி திறந்து மென்மையாய் புன்னகைத்தான்.
என்றும் போல இன்றும் அங்கே பார்வையாளராக மட்டுமே அமைதியாக நின்றிருந்தாள் சீதா.
***********
வருவாள்…