KarisalKattuPenne17

KarisalKattuPenne17

கரிசல் காட்டுப் பெண்ணே 17

 

குலோத்துங்கன் பேசிய பிறகு, அன்று மாலையே ராமகிருஷ்ணன் போன் செய்து, சங்கரன், மரகதத்திடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டான். இனி அத்தனை கோபமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியும் கொடுத்துவிட்டு, சீதாவிடம் பேசினான்.

“சாரி சீதா, நீ மறுத்த ஆத்திரத்தில தான் தள்ளி விட்டேன். உன்ன காயப்படுத்தணும்னு நான் நினைக்கில. இனி கோவத்தை குறைச்சுக்கிறேன்” ராமகிருஷ்ணன் எந்த அலட்டலும் இல்லாமல் மன்னிப்பு கேட்க, சீதா வாயடைத்து தான் போனாள்.

“…”

“என்னை நம்புற இல்ல?”

“ம்ம்”

“தட்ஸ் மை கேர்ள்.”

அந்த சமாதானமே பெற்றவர்களுக்கு போதுமானதாக இருந்தது சீதாவிற்கும்!

கீர்த்திவாஷினி தான் ஆடி தீர்த்துவிட்டாள் சீதாவிடம்.

“அவன் சாரி கேட்டா எல்லாம் சரியா போயிடுமா? நீயும் அவனை அறைவிட்டு இருந்து சாரி சொன்னா அவன் ஒத்துக்குவானா?”

சீதா அமைதியாகவே இருக்க, “இப்படி முதுகெலும்பில்லாத பூச்சி மாதிரி இருக்காத மஹா. நீ என்னவோ தைரியசாலி, புத்திசாலின்னு என்கிட்ட பெருசா லெக்சர் வாசிச்சான் உன் சின்னா, இந்த மைனர் மாப்பிள்ளை முன்ன உன் தைரியம் எல்லாம் எங்க போச்சு?” கீர்த்தி நிறுத்தாமல் படபடக்க,

“நம்ம சேர்ந்தவங்கள நாமே எப்படி எதிர்க்கிறது அக்கா? மாமா கோவகாரர் தான் ஆனா கெட்டவர் இல்லக்கா… அவங்கவங்களுக்கு ஒவ்வொரு காரணம் இருக்கும்! வெவ்வேறு நியாயம் இருக்கும்! என்ன? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எங்களோட தனிப்பட்ட காரணங்களும் நியாயங்களும் ஒத்து போகல…” அதிராமல் வந்தது சீதாவின் பதில்.

“இப்படி எதுவுமே ஒத்து போகாம இந்த கல்யாணம் அவசியமா?” கீர்த்தி விடுவதாக இல்லை.

“எல்லா விதத்திலையும் ஒத்து போனா மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு இங்க எந்த சட்டமும் இல்லயே… கதையிலையும் சினிமாலையும் மட்டும் தான்க்கா ஹீரோ, ஹீரோயின் எல்லா விசயத்திலையும் ஒத்து இருக்க மாதிரி காட்டுவாங்க… அதெல்லாம் நிசத்தில எதிர்பார்க்க முடியாதில்லையா! வாழ்க்கையில நம்மோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்ப விட்டு கொடுத்தா மட்டும் தான்க்கா குடும்பமா சேர்ந்து வாழ முடியும்”

கீர்த்தி திகைத்து விட்டாள் தான். தன்னைவிட வயதில் சிறியவளான இந்த பட்டிக்காட்டு பெண்ணிடம் இத்தனை பக்குவமான பேச்சை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“உன் மாமா இதுவரைக்கும் உனக்காக எந்த விசயத்திலையாவது அட்சஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்காரா? எல்லாத்திலையும் உன்ன மட்டும் பிளேம் பண்ணிட்டு தான இருக்காரு. நீயும் உங்க ஃபேமிலியும் அவர் சொல்றதுக்கெல்லாம் அடங்கி போயிட்டு இருக்கீங்க. இதுக்கு பேர் ஆணாதிக்கம்” எதிர்வாதம் செய்தவள், ‘மேல்சேவனிஸ்ட்’ என்று தனக்குள்ளே முணுமுணுத்துச் சொன்னாள்.

சீதாவின் பேச்சை கேட்ட பிறகு அவள் மாமனை மரியாதையின்றி ‘அவன், இவன்’ என்று சுட்ட வரவில்லை கீர்த்திக்கு.

“மாமாக்கு எதிலையும் அட்சஸ்ட் பண்ணிட்டு போற பழக்கம் கிடையாது. பரவாயில்லக்கா, அவருக்கும் சேர்த்து நானே விட்டு கொடுத்துட்டு போறேன்” என்றவளை அடிக்கவா குத்தவா என்று இருந்தது கீர்த்திக்கு.

“அவ்வளவு இறங்கி போக என்ன அவசியம் வந்தது உனக்கு? உன் மாமாவ நீ… லவ் பண்றீயா?” வேகமாக பொரிந்தவள் தாமதித்து சற்று சந்தேகமாக கேட்டு நிறுத்தினாள்.

“ஏன் கீர்த்திக்கா, காதல் வந்தா தான் கல்யாணம் செஞ்சிக்கணும்னு சட்டம் வந்திருக்கா என்ன? மாமாவ பார்த்தா எனக்கு காதல், கத்தரிக்கா எல்லாம் வரலக்கா, பயம் தான் வருது… எப்படி இருந்தாலும் என் அம்மா, அப்பாவுக்காக, அத்த, மாமாவுக்காக, எங்க குடும்ப சந்தோசத்துக்காக மாமாவ கல்யாணம் செஞ்சுக்க எனக்கு சம்மதம் தான்” சீதாவின் மென்மையான பேச்சிலும் அத்தனை உறுதி இருந்தது.

“முட்டாள், உன் வாழ்க்கைய மத்தவங்களுக்காக விட்டு கொடுப்பியா? ச்சே இதுக்கு மேல உன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல” என்று கீர்த்தி கோபமாக வெளியேறி விட்டாள்.

நேராக ஸ்ரீராம் அறைக்கு வந்து கோப மூச்சுக்கள் வாங்க அவன் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

அவன், “என்னாச்சு டெடி?” என்று வினவ, சீதா பேசியதை எல்லாம் மூச்சு விடாமல் அவனிடம் கொட்டினாள்.

“என்னால முடியல ஸ்ரீ, பொண்ணோட சந்தோசத்தைவிட கல்யாணம் முக்கியம்ன்ற அவங்க ஃபேமிலி கான்செப்ட் சுத்தமா பிடிக்கல, இனி என்னால அங்க தங்க முடியாது, இங்க உன்கூடவே ரூம் ஷேர் பண்ணிக்கிறேன்” கீர்த்தி சாதாரணமாக சொல்லிவிட, ஸ்ரீராம் ஜெர்க்கானான்.

“ஹே இதென்ன சிட்டின்னு நினச்சியா நாம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்க? கிராமம் டெடி, அதெல்லாம் சரிவராது”

“டோண்ட் அஃப்ரைட் யா, நான் உன்ன எதுவும் செய்ய மாட்டேன் ஓகே” கீர்த்தி அசராமல் சொல்ல, “மொக்கையா கடிக்காத தாங்கல” என்றபடி தன் காதை தேய்த்துக் கொண்டான்.

கீர்த்தி முறைக்க, “இங்க வரும் முன்னவே நான் சொன்னதுக்கெல்லாம் ஓகேனு தலைய ஆட்டிட்டு தானே வந்த, இங்க நீ இருக்கிற வரை மாமா வீட்ல தான் தங்கற. அதான் உனக்கு சேஃப் கூட” என்றான்.

“அதான் முடியாதுன்னு சொல்றேனில்ல, இந்த வில்லேஜ்ல வேற வீடு ரென்ட்க்கு கிடைக்காதா?”

அவள் பிடிவாதம் பிடிக்க, “மாமா வீட்ல தங்கறதா இருந்தா இரு, இல்ல கிளம்பு, இன்டீரியல் வொர்க் எல்லாம் கவனிக்க நான் ஷிவானிய வர சொல்லிக்கிறேன்” ஸ்ரீராம் அலட்டாமல் சொல்ல,

“அடாபாவி… அவ இந்த வில்லேஜ்ல ஒன் டே கூட தாக்கு பிடிக்க மாட்டா, நான் தான் போனா போகுதுன்னு உனக்காக அட்சஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்” இவள் குதிக்க, அவன் கண்டு கொள்ளாமல் தன் லேப்டாப்பில் தலைக் கவிழ்ந்து இருந்தான்.

தன் கண்களை ஒருமுறை உருட்டிக் காட்டியவள், “சரி சரி நீ இவ்ளோ ஃபீல் பண்றதால, அங்கேயே இருக்கேன்” இவள் தடாலாக இறங்கிவிட, அவன் கண்கள் மட்டும் சிரிப்போடு அவளை பார்த்தன.

கீர்த்தி பார்வையால் வெட்டிவிட்டு எழுந்து திரும்பி நடக்க, “டெடி… சீதா இந்த கல்யாணத்துல தெளிவா தான் இருக்கா, நீ வீணா எதையாவது பேசி அவள பிரைன் வாஷ் பண்ண ட்ரை பண்ணாத” ஸ்ரீராம் எச்சரிக்க,

“கண்ணை திறந்துட்டே பள்ளத்துல விழுறது தான் அவளோட தெளிவு போல, ப்ச் நான் எதையும் பேசல” என்று விட்டு சென்றிருந்தாள். அதன் பிறகு அதைப்பற்றி கீர்த்தி பேச்செடுக்கவில்லை. புது வீட்டின் உள் வடிவமைப்பு வேலைகளில் கவனமானாள்.

அன்று முதல் அவ்வப்போது ராமகிருஷ்ணன், சீதாவிடம் கைப்பேசி வழி பேசலானான். அவன் ஏதேதோ வளவளத்து கொண்டிருக்க, இவள் அமைதியாகவே கேட்டிருப்பாள். சிலநேரம் பேசச் சொல்லி வற்புறுத்துவான் ஏதேனும் இரண்டு வார்த்தைகளை உதிர்ப்பாள். சிலநேரம் சிடுசிடுத்து விட்டு பட்டென துண்டித்து விடுவான். பாவம் அவனுக்கும் இவளின் நிலை தெரிய வாய்ப்பில்லை தான்.

இவர்கள் வீட்டில் சங்கரனிடம் மட்டுமே கைப்பேசி இருப்பதால், கிருஷ்ணா பேசும் போது அவர்தான் இவளிடம் தரவேண்டும். அங்கு முன் வாசலில் மட்டுமே சிக்னல் கிடைக்கும் என்பதால் அங்கே நின்று தான் பேசியாக வேண்டும். சீதா கைப்பேசியை காதில் ஒற்றியதும் மரகதம் உட்பட அக்கம்பக்கத்து பெண்களும் அவள் அருகில் வந்திருப்பர். பெண்ணுக்கு துணையாக இருக்கிறார்களாம்.

இவள் தனிமையிலேயே அவனிடம் பெரிதாக பேசி வைக்க மாட்டாள். இப்போதோ ‘சரி, ம்ம்’ தவிர அவள் வாய் வேறு உரைப்பதில்லை.

அனைத்தையும் விட அவனிடம் பெரிதாக பகிர்ந்து கொள்ள இவளிடம் எதுவும் இருக்கவில்லை. இவளுக்கு பிடித்தவைகளை சொன்னாலும் அவன் கேட்க போவதுமில்லை என்று மனம் விட்டிருந்தாள்.

ஒத்த மனங்களாய் இருந்தால் பேச ஒன்றுமே இல்லையென்றாலும் பேச்சுக்கள் நீண்டிருக்கும்! இங்கோ பொருந்தாத மனங்கள் பேச ஆயிரம் இருந்தும் பகிர்ந்து கொள்ளும் உந்துதல் எழவில்லை.

தோட்டத்து பறவைகளின் இன்னிசையில், காற்றில் உரசும் தென்னங்கீற்றுகளின் பின்னிசையில், மனதை அடைக்கும் அழுத்தங்கள் கரைய வானம்பாடி பெண்ணவள் பாட்டிசைத்தாள்.

“மனதில் உறுதி வேண்டும்!

வாக்கினிலே இனிமை வேண்டும்!

நினைவு நல்லது வேண்டும்!

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!

கனவு மெய்பட வேண்டும்!

கைவசமாவது விரைவில் வேண்டும்!

கண் திறந்திட வேண்டும்!

காரியத்தில் உறுதி வேண்டும்!

பெண் விடுதலை வேண்டும்!

பெரிய கடவுள் காக்க வேண்டும்!

பெண் விடுதலை வேண்டும்…!

பெரிய கடவுள் காக்க வேண்டும்…!”

தளர்ந்த பொழுதுகளில் இழந்த உறுதியை மீட்டெடுக்கும் பாரதியின் வரிகள், வீட்டினுள் இருந்த ஸ்ரீராம், கீர்த்தி செவிகளில் கேட்க, இருவரும் தோட்டத்திற்கு வந்தனர்.

ஏதோ விதைகளை விதைத்து தண்ணீர் விட்டபடி பாடிக் கொண்டிருந்தாள் சீதா.

“என்ன பண்ணிக்கிட்டிருக்க சீதா?” சற்று இறுக்கமான ஸ்ரீராமின் குரல் கேட்டு திருப்பியவள், “வாடாமல்லி விதை கிடைச்சது, அதான் விதைச்சேன் சின்னா” என்றாள்.

“இதை நீ உங்க தோட்டத்திலயே விதைச்சு இருக்கலாம்?” அவனின் குறுக்கு கேள்விக்கு என்ன பதில் தர தெரியவில்லை இவளுக்கு.

அவனருகில் நின்றிருந்த கீர்த்தியை பார்க்க, அவளும் இவள் பார்வையை தவிர்த்து நின்றிருந்தாள்.

“அங்க தோட்டத்தில இடமில்ல, அதான்… இங்க நான்”

“நீ இனிமே இந்த தோட்டத்து பக்கம் வராத சீதா” ஸ்ரீராம் சட்டென சொல்ல, பேதையவள் அவனை விளங்காமல் பார்த்தாள்.

“நீ புரிஞ்சுப்ப, இந்த பக்கம் நீ வர வேணாம் ப்ளீஸ்” ஸ்ரீராம் அழுத்தமாக சொல்ல, சீதா எதிர் கேள்வி இன்றி தலைத் தாழ்ந்து திரும்பி நடந்தாள்.

தன் விருப்பமான பொம்மையை பறிக்கொடுத்த குழந்தையின் கலங்கிய நிலை அவளுடையது!

# # #

மாதங்கள் விரைவாக கடந்து போயிருந்தன.

புது வீட்டின் வேலைகளும் ஸ்ரீராமை முழுதாக இழுத்துக் கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட எட்டு மாதகால தொடர் உழைப்பில் ஸ்ரீராம் தன் முதல் முயற்சியை வெற்றியாக்கி இருந்தான்.

பெரிய வீடு புதுப் பொலிவுடன் புதுமையின் பிரம்மாண்டத்துடன் உயர்ந்து நின்றது. வண்ண பூச்சு முடிந்திருக்க, கட்டிடத்தின் வேலைகளும் முடிவுப்பெற்று இருந்தன.

இறுதிகட்ட வேலையாக வீட்டை சுற்றிலும் காம்பௌண்ட் சுவர் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்தேறிக் கொண்டிருந்தன.

அந்த கிராமத்து மக்கள் பொருட்காட்சி, கண்காட்சி போல தினமும் பெரிய வீட்டிற்குள் வந்து ஒவ்வொரு இடத்தையும் வியந்து பார்த்து சென்றபடி இருந்தனர்.

வெளி கேட்டை கடந்து ஐந்து சதுரடி இடைவெளியில் வீட்டின் வாயிற்கால் நுணுக்க மரவேலைப்பாடுகளோடு அமைந்திருக்க, அதற்கிணையான வேலைப்பாடுளோடு கதவும் அமைத்து பொருத்தப்பட்டு இருந்தது. அதனை கடந்து உள்ளே வந்தால், வரவேற்பறை, அடுத்து பெரிய கூடம் பார்வையில் விரிந்தது. தரை முழுவதும் மார்பிலின் பளபளப்பு. பார்வையை உருத்தாத வண்ணகலவை பூச்சு.

மேற்கூறையின் புதுவித வேலைப்பாடுகளும், சுவற்றில் அமைந்திருந்த நேர்த்தியான வடிவமைப்புகளும் பார்ப்பவர்களை வாய்பிளக்கவே செய்தன. பணத்தை தகுந்த வகையில் பயன்படுத்தி எல்லாவற்றையும் உயர்தரத்தில் அமைத்திருந்தான் ஸ்ரீராம். அதற்கு அவன் அமைத்திருந்த அலங்கார மின் விளக்குகளே சாட்சியம் கூறி பிராகசித்தன.

தேவையான இடங்களில் செழிப்பையும் மற்ற இடங்களில் எளிமையையும் கலந்திருந்தான். கீழ் தளத்தில் ஹாலின் இருபுறமும் பக்கத்திற்கு இரண்டாக நான்கு பெரிய அறைகள். முன்பக்க முதல் அறை மாடுலர் கிச்சன் வகையில் சமைப்பதற்கான அனைத்து வசதிகளோடு காற்றோட்டமாகவும் அமைக்கப்பட்டிருந்த சமையலறை.

எதிர்புற அறை, மற்றதை விட சற்று அளவில் சிறியதாக மேடை அமைத்து மனதிற்கு அமைதி தரும் வண்ணப்பூச்சு கலவையில் அமைந்த பூஜை அறை.

அடுத்த இரு அறைகளும் தங்கும் அமைப்பில் இருந்தன. அறையோடு இணைந்த குளியலறை, கம்போர்ட் வசதிகளோடு.

அறைகளைத் தாண்டி நேரான நடைப்பாதை பின்பக்க தோட்டத்தை இணைத்தது. அதன் பக்க அமைப்பில் ஸ்டோர் ரூம் போன்ற சிறிய அறை ஒன்று.

கூடத்தின் நடுவே வளைந்து நீண்டு அமைய பெற்றிருந்த படிகட்டுகள் மாடிக்கு அழைத்துச் சென்றன. அங்கும் இருபுறங்களிலும் இரண்டிரண்டு பெரிய அறைகள், எல்லா அறைகளின் பின்பக்கமும் வசதியாக அமைக்கப்பெற்ற பால்கனி.
அனைத்து அறைகளிலும் ஆளுயர சன்னல்கள் கிராமத்து காற்றை தடைச்சொல்லாமல் வீட்டிற்குள் அலைய விட்டிருந்தன. அங்கிருந்து படிகள் வழி மேலே சென்றால், பாதி திறந்திருந்த மொட்டை மாடி. அதன் ஒரு புறத்தில் இரு தூண்கள் தாங்கி கொண்டிருப்பதை போன்ற வளைந்து நெளிந்திருந்த மேற்கூறை, அதன் கீழே ஊஞ்சல் இடுவதற்கான அமைப்பு வைக்கப்பட்டு இருந்தது.

“கதவு, ஜன்னல் எல்லாம் எம்மாம் பெருசு, அப்புட்டும் அழகா தான் இருக்கு, வச்ச கண்ண எடுக்க முடியல”

“தரைக்கு என்ன பளிங்கு கல்லையா பதிச்சு வச்சீக, இத்தன வழுவழுக்குது, நாளாக இந்த பளபளப்பு போயிடுமோ!”

“இதென்ன சமையல்கட்டா! எட்டூருக்கும் ஒண்ணா சமைச்சு வைக்கலாம் போலவே!”

“வீடெல்லாம் அம்சமா தான் கட்டி இருக்கீக, ஏய்யா, போயும் போயும் மொட்ட மாடியில ஊஞ்சல கட்டி வைப்பீக, பட்டணத்து புள்ளங்க மூளையெல்லாம் இப்படி தான் வேல செய்யும் போல” ஒவ்வொருவரும் ஒவ்வொருவாறு விமர்சனத்தை தந்து விட்டு செல்ல, ஸ்ரீராம் அனைத்திற்கும் புன்னகையை சிந்திவிட்டு கடந்து சென்றான்.

மாலையில் வேலை முடிய, தோட்டத்தை நோக்கி நடந்தான். சில நாட்களில் காம்பௌன்ட் வேலைகளும் முடிந்து விடும். காலையில் தான் புதுமணை புகுவதற்கான நாளை குறித்து பரமேஸ்வரன் சொல்லி இருந்தார். அப்பாவின் பேச்சில் இருந்த சந்தோசத்தை இவனாலும் உணர முடிந்தது.

வீட்டின் வேலை நிறைவு பெற்றதில் அவனின் மனதும் நிறைந்து தான் இருந்தது. ‘இன்னும் இரண்டு வாரங்களில் புதுமணை புகுவிழா முடிய, இங்கு தான் வந்த வேலையும் முடிந்துவிடும். தொழில் தொடங்குவதற்கான வேலைகளை இனி நண்பர்களுடன் சேர்ந்து தானும் கவனிக்க வேண்டும்’ என்று சிந்தனை ஓட, முன்பைவிட தனக்குள் தன்னம்பிக்கை கூடியிருப்பதை போல உணர்ந்தான். புது வீட்டை பார்வையால் வருடியபடி சற்று நிமிர்வோடு நடந்தான்.

முதல்முறை போலவே இப்போதும் அவனை இதமாய் கொள்ளை கொண்டது அந்த தோட்டம்.

வழக்கத்திற்கு மாறாக அக்காவும் தம்பியும் களைப்பறித்து பாத்திகட்டி, தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.

“காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புச்சோளம் தினை விதைச்சு
காலமால காட்டைக் காக்க – தங்கரத்தினமே
கண்விழிச்சிருந்தாளாம் – பொன்னுரத்தினமே

கறுப்பானை ஓடிவர
கள்ளரெல்லாம் தினை விதைக்க
வெள்ளானை ஓடிவர – தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினை விதைக்கப் – பொன்னுரத்தினமே

ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுதே
ஆராரைக் காவல் வைப்போம் – தங்கரத்தினமே
அழகானத் தினைப்பயிருக்குப் – பொன்னுரத்தினமே

தெவ்வானையைக் காவல் வைத்தால்
தீஞ்சுமே தினைப் பயிரு
வள்ளியைக் காவல் வைத்தால் – தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்ல – பொன்னுரத்தினமே”

சீதா மெல்லிய குரலில் பாடி களை கலைய, சக்திவேல் பாட்டு கேற்ப தாளமிட்டபடி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான்.

“சரிதான், எங்க தோட்டத்துக்கு வள்ளி, தெவ்வானை காவல் தேவையில்ல” என்ற பதிலோடு ஸ்ரீராம் அவர்களிடம் வந்து நின்றான்.

அவனைப் பார்த்து சீதா சற்று சங்கடமாக எழுந்து நிற்க, சக்திவேல், “ஆமா உன் இத்து போன தோட்டத்துக்கு நாங்களே போதும் வள்ளி, தெவ்வானை வேற வருவாங்களோ!” வழக்கம் போல வாயடித்தான்.

“முதல்ல உங்க ரெண்டு பேரையும் இங்க யாரு வர சொன்னது?” ஸ்ரீராம் விடாமல் கேட்க,

“பெருசா வூட்ட கட்டி வச்சுட்டா, தோட்டத்துக்கு வரவும் தட சொல்லுவியோ? நாங்க வாரதால தான் தோட்டம் தோட்டமா இருக்கு இல்ல கல்லுமுள்ளாகி கிடக்கும்” சக்திவேல் சரிக்கு மேல் பேச,

ஒற்றை கையால் அவன் தலையை தட்டி வளைத்து வாயைப் பொத்தி பிடித்துக் கொண்டவன், “இங்க வராதன்னு உனக்கு முன்னவே சொல்லி இருந்தேன் இல்ல சீதா” என்று நேர் பார்வையாக அவளை கேட்க, சீதா அவனை சுருங்கிய முகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் வர வேண்டாம் என்று சொன்னபிறகு இவளும் இந்த பக்கம் வருவதில்லை தான். கடைசி செமஸ்டர் என்பதால் படிப்பு, செய்முறை தேர்வு, எழுத்துமுறை தேர்வு என அதில் கவனமாக இருந்தவரை பெரிதாக ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு.

ஆனால் பரீட்சை எல்லாம் முடிந்து முழுதாய் ஒருவாரம் கூட அவளின் காலைகட்டி வைக்க முடியவில்லை. மரகதத்திடம் சம்மதம் கேட்டு, பள்ளியில் இருந்து இப்போதுதான் வந்திருந்த தம்பியை இழுத்து கொண்டு வந்திருந்தாள்.

இன்னும் அவனின் சாயாத நேர்பார்வை அவளை கேள்வி கேட்டபடியே பார்த்திருக்க, “வா சக்தி போயிடலாம், என்ன இருந்தாலும் இது அவக தோட்டம்! வாராதன்னு சொல்லியும் ரோஷங்கெட்டு வந்தது எந் தப்பு தான்” என்று திரும்பி நடந்தாள்.

அவளுக்குள் தன்னிரக்கம் மேலோங்கி மனதை அழுத்தியது. ஸ்ரீராமின் மீது கோபம் கோபமாகவும் வந்தது.

தன் வாயை மூடி இருந்த அவன் கையை விலக்கிய சக்திவேல், “தோட்டம் உங்களோடதா இருந்தா, என் அக்காவ வர வேணாம்னு சொல்லுவியா நீ? அக்கா வீட்டுல இருந்ததை விட இந்த தோட்டத்தில இருந்தது தான் அதிகம்னு உனக்கு தெரியுமா?” சின்னவன் சண்டைக்கு நிற்க,

“டேய் பாசமலரு போதும் டா, கல்யாணம் நெருங்கி வர நேரத்துல முள்ளுல, சேத்துல வேலை செய்ய வேணாம்னு தான் சீதாவ இங்க வர கூடாதுனு சொல்லி இருந்தேன்” என்று ஸ்ரீராம் விளக்கம் தர,

“ஓ அப்படின்னா சரி” என்று அவனை மேலும் கீழுமாக பார்த்து விட்டு, “இருந்தாலும் நீ இம்புட்டு நல்லவனா இருக்க கூடாது ஸ்ரீ, என்னய மாதிரி கொஞ்சம் விரப்பா பேச கத்துக்கோ, இல்லனா கஷ்டம்” என்று உதட்டை பிதுக்கி விட்டு ஓடினான்.

“டேய் என்கிட்ட மறுபடி மாட்டுவ இல்லடா அப்ப உனக்கு இருக்கு” ஸ்ரீராம் கடுப்பாக கத்தி சொன்னது காற்றில் தான் கரைந்தது.

**************

வருவாள்…

error: Content is protected !!