KarisalKattuPenne6

KarisalKattuPenne6

கரிசல் காட்டுப் பெண்ணே 6

 

அன்றைய நாளில் தலைமுறையாய் நிமிர்ந்து நின்ற பெரிய வீட்டு சுவர்கள் எந்திரக்கரங்களின் தாக்குதலில் சிதைய ஆரம்பித்திருந்தன.

 

அவ்வீட்டில் இருந்த கதவுகள், கழிகள், ஜன்னல்கள் போன்றவை மறு பயன்பாட்டிற்காக சேதமின்றி பிரித்து எடுத்து வைக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தோட்டத்திற்கு சேதமின்றி கவனமாகவே பின்பக்க சுவர்களும் தகர்த்தப்பட்டன.

 

அவ்வழியே சென்ற ஊர் மக்கள் சற்று நேரம் நின்று அவ்வீட்டின் அழிவை பாரமான மனதோடு கண்டு பெருமூச்செறிந்தனர். இதுபோன்ற தலைமுறைகளை வாழ வைக்கும் வீடுகள் ஒரு குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அந்த ஊருக்கே நெடுங்காலமாய் அடையாளமாக அமைந்தவை. 

 

அன்றைய மாலைக்குள் பொட்டழிந்த பெண்ணின் நெற்றி போல, பெரிய வீட்டை இழந்த அச்சிற்றூரும் களைமங்கி தோற்றம் அளித்தது.

 

கல்லூரி விட்டு மாலையில் பேருந்து இறங்கி வந்த சீதாமஹாலட்சுமி, மண்ணோடு சரிந்து கிடந்த பெரிய வீட்டின் நிலையை வெறுமையாக பார்த்தபடி கடந்து வந்தாள். அங்கே புது வீடு வரும் எனும் சமாதானத்தையும் மீறி பெரிய வீட்டின் அழிவு மனதை அழுத்தவே செய்தது.

 

அவள் முகத்தின் சோகத்தை கவனித்த ஸ்ரீராம் தலைக் குலுக்கிக் கொண்டு வீட்டின் இடிபாடுகளை அகற்றும்  வேலைகளைக் கவனிக்கலானான். காலையில் இருந்து பெரிய வீட்டின் இடிபாடுகளைப் பார்த்த அனைவரின் முகமும் இதே கனமான பாவனையைத் தான் காட்டிக் கொண்டிருந்தது.

 

அடுத்த இரண்டு நாட்களில் இடிப்பாட்டு கற்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட, அந்த வாரத்தின் நல்ல நாளில், விடியற்காலையில் பூமி பூஜை ஏற்பாடானது.

 

பூமி பூஜையில் பரமேஸ்வரன், கௌதமி, சங்கரன், மரகதம், சீதா மஹாலட்சுமி, சக்திவேல், மேஸ்திரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மனதார வேண்டி புது வீட்டின் முதல் செங்கல்லை பரமேஸ்வரன், கௌதமி எடுத்து வைத்து வணங்க, தன் முதல் ஆரம்பம் ஸ்ரீராமிற்குள் பெரும் தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாய். 

 

எல்லா பெரிய வேலைகளுக்கும் சின்ன தொடக்கப்புள்ளி ஒன்று உண்டல்லவா, அந்த ஆதாரப்புள்ளியைத் தொட்டிருந்தான் அவன்.

 

மகனின் தோளை தட்டி கொடுத்துவிட்டு பரமேஸ்வரன் விடைப்பெற, “உன்னோட வேகத்தை பார்த்து உங்கப்பா வாயடைச்சு போயிருக்காரு… எனக்கும் பெருமையா இருக்குடா… வேலை வேலைன்னு இருக்காம நேரத்துக்கு சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ ஸ்ரீ” மகனின் கைப்பிடித்து அழுத்திவிட்டு கௌதமியும் கிளம்பினார்.

 

“அடுத்த வாட்டி வரும் போது ரெண்டு நாள் புள்ள கூட தங்கற மாதிரி வாங்க அண்ணா, ஸ்ரீராம நாங்க பாத்துக்கறோம் கவலைபடாம இருங்க அண்ணி” மரகதம் சொல்ல,‌ அவர்கள் நிறைந்த மனதோடு விடைபெற்றுக் கிளம்பினர்.

 

ஸ்ரீராம் முகத்தில் புது தெம்பு கூடி தெரிய, நாள் முழுவதும் அங்கிங்கென நிற்காமல் அலைந்துக் கொண்டு இருந்தான்.‌ இடத்திற்கான அளவைகளைக் குறித்து, வீட்டு அஸ்திவாரம் அகழ்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு நேராக சங்கரன் வீட்டிற்கு வந்திருந்தான்.

 

சீதா தானிய அறையின் பூட்டைத் திறந்து விட, அந்த நீண்ட அறையின் முக்கால்வாசி இடத்தையும் இவன் வீட்டு பொருட்கள் தான்‌ அடைத்திருந்தன. 

 

“கார்பெண்டரை வர சொல்லி இருக்கேன். இதுல ரீ யூஸ் பண்ண முடியறதை எல்லாம் எடுத்துட்டு போக சொல்லி இருக்கேன்” என்றவன் சொல்ல, அதேநேரம் தச்சரும் தன் ஆட்களுடன் அங்கே வந்தார். 

 

அவர் தேவையான மரச்சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, அறையில் கால்வைக்கவும் இடமின்றி கலைந்திருந்த பொருட்களை சீதா ஓரங்கட்டி தள்ளி வைக்க தொடங்கினாள். 

 

ஸ்ரீராம் கனமான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “அய்யோ சின்னா…” சீதா அலறலோடு, பதற்றமாக அவன் கைப்பிடித்து இழுத்து விட்டாள்.

 

அவளின் எதிர்பாராத இழுவை விசையில் இழுப்பட்டு தடுமாறி அவள் மீதே சரிந்தவனை தாங்கி பிடிக்க வலுவின்றி இவளும் அவனோடே சரிய, பெண்ணவள் பட்டு கன்னத்தில் ஆணவன் மீசை இதழ்கள் அழுத்தமாக புதைந்தபடி இருவரும் ஏடாகூடமாக கீழே விழுந்தனர்.

 

அதேநேரத்தில் ஆங்கே ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கனமான பொருட்கள் பெரும் சத்தத்துடன் கீழே சரிந்து விழுந்தன. 

 

அதை திரும்பி பார்த்த ஸ்ரீராமின் இதயம் ஒருமுறை நடுங்கி அடங்கியது. ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த பொருட்களுக்கிடையில் இவன் உடல் நசுங்கி போயிருக்கும்! குறைந்தது இரத்த காயமோ, எலும்பு முறிவோ நிச்சயம் ஏற்பட்டு இருக்கும்!

 

நன்றியோடு அவன் சீதாவிடம் திரும்ப, அவள் முகத்தில் அதீத அதிர்ச்சி ரேகைகள், விழிகளில் கலக்கத்தின் ஈர கசிவுகள்!

 

இன்னும் அவள்மீது விழுந்தபடி கிடப்பதை உணர்ந்தவன், விலகி எழுந்துக் கொள்ள, தடுமாறி எழுந்து கொண்டவள் தலை நிமிராமல் அங்கிருந்து வேகமாக ஓடி விட்டாள். 

 

சில கவனக்குறைவுகளால், எதிர்பாராத சில அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுகின்றன!

 

ஸ்ரீராமை பொருத்தவரை நடந்தது எந்தவிதத்திலும் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் கிராமத்தில் வளர்ந்த பெண்ணான அவள் மனதளவில் இதை பெரும் களங்கமாக எண்ணி துன்புறுவாள் என்று யோசித்தவன் தன் தோழிக்காக வருத்தம் ஏந்தி நின்றான்.

 

இந்நேரத்தில் அவர்களைத் தவிர்த்து வீட்டில் யாரும் இல்லாதிருக்க, மேலும் அங்கேயே நிற்க முடியாமல், தலையை‌ அழுத்த கோதியபடி அங்கிருந்து வெளியேறி விட்டான்.

 

சுப நிகழ்வோடு தொடங்கிய அன்றைய நாள் சங்கடத்தோடு முடிந்திருந்தது அவர்களுக்கு!

 

இரவு எட்டு மணியளவில் மின்சாரம் தடைபட, சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி போயின.

 

இதுபோல் அங்கெல்லாம் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவது சகஜம் தான் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் சிம்னி விளக்குகள் கண்சிமிட்ட தொடங்கின.

 

வீட்டினுள் புழுக்கம் தாங்காமல் ஒவ்வொருவராய் வெளிவந்து, தங்கள் வீட்டின் திண்ணையிலும், படிகளிலும் அமர்ந்துக் கொள்ள, இரவு உணவை முடித்தவர்கள் முன் வாசலில் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டுப் படுத்துக் கொள்ள ஆயத்தமாகினர்.

 

“வையாபுரி அண்ணா, கரண்ட் எப்ப வரும்?” ஸ்ரீராம் பொறுமையிழந்து குரல் கொடுக்க,

 

“நான் என்னவோ கரெண்ட் ஆபீஸ்ல வேலை செய்யற மாதிரியே கேக்குறியே தம்பீ, அதுவா வரும் போது வரும்” என்று கிராமத்து குசும்புடன் பதில் தந்தவர், தேநீர் கடை முன்னிருந்த நீள பென்ச்சில் மல்லாந்து படுத்துக் கொண்டார்.

 

அவர் பதிலில் அலுப்புடன் தலையசைத்துக் கொண்ட ஸ்ரீராம், அறைக்கு வெளியே சேரை எடுத்து போட்டு அமர்ந்துகொண்டு அலைபேசியை நோண்ட தொடங்கி விட்டான்.

 

வளர்பிறை பாதி நிலவின் மங்கிய ஒளியில், இரவின் இதமான காற்றில் அந்த கிராமத்துவாசிகள் வெளியே உட்கார்ந்தபடி கதையளந்துக் கொண்டிருந்தனர்.

 

“ஏந்தாயீ உம்முகம் வாடிகிடக்கு?” பக்கத்து வீட்டு பவுனு மூதாட்டி சீதாவின் முகம் பார்த்து கேட்க, “நானும் கேட்டு பாத்தேன், ஏதும் சொல்ல மறுக்கிறா ஆத்தா, நீயே உம்ம பேத்திய கேட்டு சொல்லு” என்று மரகதம் ஆதங்கமாக சொன்னார்.

 

கண்டாங்கி சேலை அணிந்த அந்த மூதாட்டியின் மடியில் சாய்ந்து கொண்ட சீதாவின் கண்களில் கண்ணீர் முட்டியது. கூடாதது நடந்துவிட்ட குற்றவுணர்ச்சியில் அவளின் பேதைமனம் பரிதவித்துப் போயிருந்தது.

 

“ஏந்தாயீ, என்ன விசனம் உம்மனசுகுள்ளார?” தோள் சுருங்கிய கையால் அவளின் தலைக்கோதியபடி அவர் கேட்க,

 

“தெரியல ஆத்தாயீ, ஏதோ தப்பு செஞ்சிட்ட போல, மனசுக்குள்ள மரமரன்னு கிடக்கு” சீதா கலக்கமாக தன் உள்ளக்கிடக்கைச் சொன்னாள்.

 

“தப்புன்னு பேசறதெல்லாம் பெரிய வார்த்தை தாயீ, நீ யாருக்கு மனசறிஞ்சு கெடுதல் செஞ்சுபுட்ட இப்படி மறுகி கிடக்க?” அவர் வாஞ்சையாக கேட்க, இவள் மறுப்பாக தலையசைத்து அவர் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.

 

அவன்மீது பொருட்கள் சரிவதை பார்த்து அனிச்சை செயலாக தான் அவனை தன்புறம் இழுத்திருந்தாள். ஆனால்?! 

 

இப்போதும் அவன் இதழ் தடமும், மீசை முட்களின் ஊசி வலியும் இன்னும் தன் கன்னத்தில் ஒட்டி இருப்பதை போன்ற பிரமையில் கண்ணீரின் ஈரத்தோடு சேர்த்து கன்னங்களை அழுத்தித் துடைத்து விட்டு கொண்டாள்.

 

அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தது ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், யாராவது இருந்து இருந்தால் இப்படி எதுவுமே நடந்து இருக்காதே என்று ஆற்றாமையாகவும் இருந்தது.

 

“உப்பும் உரப்பும் கலந்தா தான் குழம்பு ருசிக்கும், சரியும் தப்பும் சேர்ந்து தான் வாழ்க்கையும் இருக்கும். இதுக்கு போயி கலங்குவியா புள்ள?” பொன்னம்பலம் தாத்தா கணீர் குரலாக கேட்க, எப்போதும் தாத்தாவுடன் வாயடிப்பவள், இப்போது அமைதியாகவே அவரின் மனையாட்டி மடியில் தலைசாய்த்தபடி இருந்தாள்.

 

“என் பொஞ்சாதி மடியில நீ படுத்துக்கிட்டா, நான் எங்குட்டு தலை சாஞ்சிக்க புள்ள?” என்று அவர் மேலும் வம்படியாக கேட்டு வைக்க, 

 

“அந்த கயித்து கட்டில்ல, இல்ல, இந்த கட்டாந்தரையில தலைசாஞ்சிக்க வேண்டியது தான தாத்தா” சக்திவேல் அதே குறும்பாக பதில் தந்தான்.

 

“அட போடா, கயித்துக் கட்டிலோ, கட்டாந்தரையோ என் பவுனு பக்கம் இல்லாம உறக்கம் கண்ணு சேருமாடா?” என்று வெள்ளை மீசையை முறுக்கி விட்டபடி, தன் மனைவியைப் பார்த்து புருவம் உயர்த்திக் காட்டி பொக்கை வாய் சிரிப்பு சிரித்து வைக்க,

 

“கூறுகெட்ட மனுசா, சின்ன புள்ளைங்க கிட்ட என்ன பேச்சு பேசி வக்கிறீக?” என்று கணவனை கடிந்து கொண்டார் அவரின் மணவாட்டி.

 

அதற்கு அசறாத பொன்னம்பலம் பெரியவரோ,

 

“பூத்தமரம் பூக்காதடி – குட்டி

பூவில்வண்டு ஏறாதடி

கன்னிவந்து சேராவிட்டால் – என்

காதடைப்பும் தீராதடி”

 

தன் வெண்கலக் குரலில் காதல் வடிய, மனைவியைப் பார்த்துக் கைநீட்டி வழக்கம் போல பாட்டெடுக்க, “அச்சோ மானம் போகுது, சிறுசுங்கெல்லாம் பாக்குது, கம்முனு இருங்களேன்” பவுனு பாட்டி வெட்கத்தில் நெளிந்தபடியே கடிந்தார்.

 

பெரியவர் அடங்குவதாக இல்லை.

 

“இடுப்புச் சிறுத்தவளே

என் குணத்துக் கேத்தவளே

நடையுஞ் சிறுத்தவளே

நான் வாரேன் உன்னைத் தேடி…” 

 

அவர் மறுபடி பாட்டெடுக்க, அங்கிருந்த அனைவரும் கலகலத்து சிரித்து விட, சீதாவும் தன் தவிப்பை மறந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

அவர்களின் மகள்கள் திருமணம் முடிந்து பேர பிள்ளைகள் எடுத்த பிறகு வாய்த்த தனிமையை இப்படியான வம்பு பேச்சுக்களால் தள்ளி வைத்து கொள்கின்றனர் அந்த முதியவர்கள்.

 

ஆண்டு அனுபவித்து ஆன பின்னும், அழகு, ஆசையெல்லாம் தீர்ந்த பின்னும், உனக்கு நான் எனக்கு நீ என்று வாழும் அவர்களின் அன்பை எப்போதும் போல நெகிழ்வோடு ரசித்திருந்தாள் சீதா.

 

மின்சாரம் வந்துவிட, அனைவரும் சலசலத்தப்படி வீட்டிற்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.

 

முதியவர்களின் பேச்சு சுவாரஸ்யத்திலும், தெம்மாங்கு பாட்டிலும் லயித்திருந்த சீதா இன்று நடந்த அசம்பாவிதத்தை சற்று மறந்து இருக்க, உறங்கும் போது மீண்டும் அவளுள் கலக்கம் பரவி துன்பம் செய்தது. இனி ஸ்ரீராமிடம் பேசவே கூடாது என்று முடிவெடுத்துக் கொண்ட பிறகு தான் மனம் சற்று அமைதியடைந்தது. 

 

ஏனோ அவனைவிட்டு விலகி இருப்பதே நல்லது என்று தோன்றியது அவளுக்கு.

 

# # #

 

மறுநாள் விடுமுறை தினமாதலால் சக்திவேலுடன் சேர்ந்து காடு, கரை, ஏரி, கழனி, கோயில், ஊர் சந்தை என சுற்றி விட்டு வந்திருந்தான் ஸ்ரீராம். 

 

நகரத்தின் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் கிராமத்தின் எளிமையான வாழ்க்கை முறைக்கும் குறைந்தது ஆயிரம் வித்தியாசங்களை இப்போது சொல்ல முடியும் அவனால்.

 

நீண்ட நேரத்திற்கு பின் தாய்மடி கிடைத்த பிள்ளைபோல தன் கிராமச் சூழலை அவன் மனம் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருந்தது.

 

மாலை வீட்டுக்கு வந்தவனின் பார்வை சீதாவை தான் தேடியது, காலையில் இருந்து அவளைக் காணாதது மனதிற்குள் நெருடிக் கொண்டிருக்க, அவளை தேடி வீட்டின் பின்பக்கம் சென்றான்.

 

பெரிய வீட்டின் தோட்டத்தை விட சற்று அளவில் சிறியதாக இருந்தது சங்கரன் வீட்டின் பின்பக்க தோட்டம்.

 

நடுநாயகமாக கிணறு அமைந்திருக்க, வலப்பக்கம் மாட்டு கொட்டகையும் இடப்பக்கம் துளசி மாடமும் அமைந்திருந்தது. மீதமுள்ள இடத்தில், கத்தரிக்காய், தக்காளி, செம்பருத்தி, நித்தியமல்லி போன்ற செடிகளும் முருங்கை, தென்னை, வாழை மரங்களும் பராமரிக்கப்பட்டு இருந்தன. சுவற்றின் பக்கம் மண்ணடுப்பு அமைந்திருக்க, அதில் தான் அவள் சமைத்து கொண்டிருந்தாள்.

 

விறகு அடுப்பில் அரிசி உலை கொதித்துக் கொண்டிருக்க, எதிரே அமர்ந்து எரிமூட்டிக் கொண்டிருந்த சீதா,

“இப்ப என்ன நடந்து போச்சுன்னு என்னை அவாய்ட் பண்ற?” அழுத்தமான கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினாள்.

ஸ்ரீராம் அவளை நேர் பார்வையாக பார்த்து நின்றிருந்தான். 

 

சீதாவின் பார்வை வீட்டுக்குள் பாய, மரகதம் சமையற்கட்டில் காய்கறிகளை அரிந்துக் கொண்டிருந்தார்.

 

“நமக்குள்ள எந்த தப்பும் நடக்கல, நீ இப்படி பயந்து நடுங்க” என்று அதே அழுத்தத்துடன் சொன்னவன், அவளின் சிவந்து கிடந்த கன்னத்தை பரிதாபமாக பார்த்தான். அவள் தேய்த்து தேய்த்து அவளின் கன்னம் சிவப்பேறி இருந்தது. தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக பொருட்களை அகற்றி இருந்தால், இவளுக்குள் இத்தனை பரிதவிப்பு வராமல் இருந்திருக்கும் என்று நொந்து கொண்டான்.

 

அவள் தலைகவிழ்ந்து அமைதியாக நின்றிருக்க, “சின்ன வயசுல நீயும் நானும் கட்டிப்பிடிச்சு மண்ணுல உருண்டு சண்டை போட்டிருக்கோம், ஞாபகம் இருக்கா உனக்கு? இப்பவும் நம்மை சின்ன குழந்தைகளா நினைச்சுக்க, வீணா கண்டதை நினைச்சு குழப்பிக்காத” அவன் நிதானமாக அவள் கலக்கத்தை மாற்ற முயன்றான்.

 

“ஒருவேளை நான் உன்ன தப்பா நினைப்பேன்னு யோசிச்சு கஷ்டபடுறியா? ஒரு செகண்ட் நீ தாமதிச்சு இருந்தாலும் இப்ப நான் முழுசா நின்னு பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்! என் உயிரை காப்பாத்தி இருக்க நீ, உனக்கு புரியற மாதிரி சொல்லணும்னா கடவுள் மாதிரி வந்து என்னை காப்பாத்தி இருக்க” ஸ்ரீராம் சொல்ல, சீதா சங்கடமாக அவன் முகம் பார்த்தாள்.

 

“தேங்க்ஸ் சீதா, தேங்க் யூ சோ மச்” அவன் கண்கள் பனிக்க நன்றி சொல்ல, அவன் தன்னை தவறாக எண்ணவில்லை என்ற நிம்மதியில் சீதாவின் மன கலக்கமும் சற்று தெளிந்தது.

 

மரகதம் அவர்களிடம் வர ஸ்ரீராம், நேற்று பொருட்கள் சரிந்து தன்மேல் விழ இருந்ததையும், சரியான நேரத்தில் சீதா காப்பாற்றியதையும் அவரிடம் சொன்னான். இது பகிர வேண்டிய விசயமே தவிர, மறைத்து மறுக வேண்டிய விசயமல்ல என்று தோன்றியது அவனுக்கு.

 

ஆனால் மரகதம் பதறி விட்டார். “ஆண்டவா, உனக்கு ஒண்ணும் ஆகல இல்லப்பா, எல்லாம் கண் திருஷ்டி தான் ஸ்ரீராமா, இந்த ஊரு கண்ணே உன்மேல தான் கிடக்கு” என்று உள்ளே சென்றவர், கல்லுப்பு, காய்ந்த மிளகாய், கரித்துண்டு எடுத்து வந்து அவனை கிழக்கு நோக்கி அமர வைத்து கண்ணேறு கழித்தார்.

 

“என்னத்த இதெல்லாம்” ஸ்ரீராம் சிரித்தபடி கேட்க, “அமைதியா உக்காரு டா, சோத்துக்கு போடறது, தாளிப்புக்கு போடறது, நெருப்புக்கு போடறது மூணையும் சேர்த்து சுத்தி போட்டா, எல்லா கண் திருஷ்டியும் கழிஞ்சு போகும்” என்று அவற்றை அடுப்பு நெருப்பில் இட, அது படபட பட்டாசு போல சத்தமிட்டு அடங்கியது.

 

“இதுக்குதான் நேத்தைக்கெல்லாம் முகத்தை பேயரைஞ்ச மாதிரி வச்சிருந்தியா சீதாம்மா, ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல, ரொம்ப பயந்து போயிட்டியா?” மகளிடம் வாஞ்சையாக வினவ, சீதா, ஆமென்றதை போல தலையாட்டி விட்டு, தன் கைவேலையைக் கவனிக்கலானாள்.

 

அடுப்பில் சாதம் வெந்திருக்க, பதம் பார்த்து, தீயை அணைத்து, வடி தட்டை மூடி வடித்தாள்.

 

அவள் ஏதேனும் பேசுவாள் என்று எதிர்பார்த்தவன், அவள் அமைதியாக தன் வேலையை பார்க்கவே, மரகதத்திடம், “யாராவது நன்றி சொன்னா பதிலுக்கு ஏதாவது சொல்லணும்னு கூட பாப்புக்கு சொல்லி தரலையா அத்த நீங்க?” என்று அவளை முன்னிருத்தி சீண்டலானான்.

 

சீதா சட்டென திரும்பினாள். “அம்மா, சின்னாவ என்னை அப்படி கூப்பிட வேணாம்னு சொல்லுங்க” என்று கண்களை உருட்ட, “அவ சின்னானு கூப்பிடும்போது நான் பாப்புன்னு கூப்பிட கூடாதா அத்த?” அவளுக்கு அப்படி அழைப்பது பிடிக்காது என்பது நினைவிலிருந்தும் வேண்டுமென்றே கடுப்படித்தான். 

 

அவர்கள் பேச்சில் மரகத்தின் முகத்தில் மென்மை கூடியது. “என் மடியில வளர்ந்த புள்ள நீ, இத்தனை வருசமா, பார்க்காம, பேசாம இருந்ததால எங்களையெல்லாம் சுத்தமா மறந்துட்டேன்னு நினைச்சிருந்தேன், எதையும் யாரையும் மறக்கல டா நீ, சந்தோசமா இருக்கு பா” என்று அவர் அவன் தலை கோதி விட,

 

“அங்கிருந்த வரைக்கும் எதுவும் தெரியல அத்தம்மா, இங்க வந்தபிறகு எல்லாமே என் நினைவுல வருது, சாரி இத்தனை நாளா உங்களை எல்லாம் மிஸ் பண்ணிட்டேன்” என்றான் அவனும் நெகிழ்வாய்.

 

‘இவனுக்கு எதுவுமே நினைவுக்கு வராம போயிருக்கலாம்’ என்று சீதா சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டாள். தன் ஒடுக்கத்தை முழுதாய் உதறிவிட்டு அவனிடம் சிடுசிடுப்பாய் முகம் காட்டினாள்.

 

# # #

 

வருவாள்…

 

error: Content is protected !!