KarisalKattuPenne7

KarisalKattuPenne7

கரிசல் காட்டுப் பெண்ணே 7

 

மாலை தொடக்கப்பள்ளி மணியடித்திருக்க, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து குட்டி சீதாமஹாலட்சுமியும் வாயாடியபடி வெளியே வர, ‘பாப்பு… பாப்பு… சீக்கிரம் வா’ என்று கூச்சலிட்டான் சின்ன ஸ்ரீராம். உடன் அவன் அண்ணன் ஜெயராமும்.

அருகிருந்த சிறுவர், சிறுமியர் அவன் அழைப்பில் சத்தமாக சிரித்தபடி, சீதாவை பார்த்து ‘பாப்பு பாப்பு’ என கேலி பேசி கிண்டலடிக்க, இவளுக்கு உதடு பிதுங்கி கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

‘என்னை அப்படி கூப்பிடாதன்னு சொன்னேல்ல’ என்று ஸ்ரீராமை இரண்டு கைகளால் மாறி மாறி அவள் அடிக்க, ‘ஏய் நீ குட்டி பாப்பாவா இருந்ததுல இருந்து பாப்புனு தான கூப்புறேன்’ அடி தாங்காமல் அவளை கீழே தள்ளி விட்டிருந்தான் ஸ்ரீராம்.

புத்தக பையோடு கீழே விழுந்தவள் அழ ஆரம்பிக்க, பெரியவனான ஜெயராம் வந்து அவளை எழுப்பி ஆடையில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு, ‘உனக்கு அறிவில்ல ஸ்ரீ, பாப்பாவ இப்படியா தள்ளி விடுவ? இப்ப பாரு அழறா’ என்று தம்பியை கடிந்து கொண்டான்.

‘அவ மட்டும் என்னை அடிச்சால்ல’ என்று சின்னவன் கோபித்துக் கொள்ள, ‘என்னை இனிமே பாப்புனு கூப்பிட வேணானு அவன்கிட்ட சொல்லு ஜெய் மாமா” பெரியவனை துணைக்கு பற்றிக் கொண்டு தேம்பினாள்.

‘நீ மட்டும் சின்னானு கூப்பிடுற இல்ல’ ஸ்ரீராம் எதிர்த்து வாதிட, ‘இனி சின்னானு கூப்பிட மாட்டேன். உன் பேச்சு கா போ’ என்று அங்கிருந்து வேகமாக நடந்து விட்டாள்.

சிறுவர்களின் இந்த சண்டை அடுத்த நாளே சமாதானமாகி இருந்தது. ஆனால் சமயத்தில் வேண்டும் என்றே ஸ்ரீராம் அவளை ‘பாப்பு’வென அழைத்து வெறுப்பேற்றுவதும் அழ வைப்பதும் வழக்கமாகி இருந்தது.

எல்லாம் அடுத்த வருடம் ஸ்ரீராம் குடும்பத்துடன் ஊரைவிட்டு செல்லும் வரை தான்.

தங்கள் தொடக்கப்பள்ளியின் குழு புகைப்படத்தைப் பார்த்தபடி சீதாவின் நினைவுகள் பள்ளிப்பருவம் சென்று திரும்பியது.

சிறுவயது நினைவுகளில் அவள் முகத்தில் புன்னகை பரவ, ‘இப்போதும் யார் முன்பாவது ஸ்ரீராம் அப்படி மறுபடி அழைத்து வைத்தால் தனக்கு அசிங்கம் தான்’ என்று எண்ணி சிறிது சங்கடமும் கொண்டாள்.

ஸ்ரீராம் பேசிய பிறகு அவளின் கலக்கமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல அவள் மனம் லேசாகி இருந்தது. ஏதோ நிம்மதியாகவும் உணர்ந்திருந்தாள்.

அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீராமின் வேலைகள் அவனை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டன. கட்டுமான பொருட்கள் ஒவ்வொன்றாய் வந்து இறங்கி குவியத் தொடங்கின.

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் முடிந்திருக்க, வீட்டின் அஸ்திவாரம் அகழும் வேலைகள் தொடங்கி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

காலை ஒன்பது மணியளவில் தொடங்கும் வேலை, மதிய உணவு இடைவேளை தவிர, மாலை ஐந்து மணிவரை தொடர்ந்தது. ஸ்ரீராம் ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து சிரத்தையுடன் நடத்திக்கொண்டு வந்தான்.

இரவு நேரங்களில் தன் நண்பர்களிடம் கலந்தாலோசித்தும், வல்லுனர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெளிந்தும் தன் பார்வையை விரிவுபடுத்தி கொண்டிருந்தான். அவனது முழு கவனமும் தான் அமைக்கவிருக்கும் வீட்டின் மீது மட்டுமே நிலைத்திருந்தது.

# # #

உச்சி வெயிலில் மிதிவண்டியை மிதித்தபடி வீட்டை நோக்கி வந்தவளின் வழியில் குறுக்கே நின்றவனைப் பார்த்து இவள் தடுமாறி மிதிவண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிக் கொண்டாள்.

எதிரே நின்றிருந்த நெடியவனைப் பார்த்து சீதா மஹாலட்சுமியின் சப்த நாடியும் அடங்கி போனது. எப்போதும் போல அவன்முன் இவள் முகம் வெளிர, தலைத்தாழ்த்தி நின்றாள்.

“எங்க போயிட்டு வர?” அதிகாரமாக கேட்டவன் பார்வையில் அத்தனை மிடுக்கு தெறிக்க,

“அப்பாக்கு… சோறு கொடுத்துட்டு வரேன்” என்றாள் எச்சிலை விழுங்கியபடி சிறுகுரலாய்.

அவன் முகத்தில் இகழ்ச்சி தளும்ப, “சோறு…! ப்ச்” என்று சலிப்பாக தலைக்குலுக்கிக் கொண்டவன், இப்போது தான் அவள் கோலத்தை கவனித்தான்.

வெகு சாதாரண பூப்போட்ட பாவாடையும் அடர்சிவப்பில் சற்று சாயம் வெளுத்து தெரிந்த தாவணியும் அணிந்திருந்தாள்.‌ மிதிவண்டியை மிதிப்பதற்கு வாட்டமாக பாவாடையைச் சற்றே தூக்கி, முந்தானையோடு சேர்த்து இடுப்பில் சொருகி இருந்தாள். பின்னலிட்ட கூந்தல் வேக காற்றில் கலைந்து கிடக்க,‌ உச்சி வெயிலின் தாக்கத்தால் முகமும் கறுத்து வியர்வை வழிந்திருக்க, கைகளில் சைக்கிளை பிடித்தப்படி நின்றிருந்தவளை மேலும் கீழும் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.

“முதல்ல போய் முகம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு கொஞ்சமாவது பார்க்கிறமாதிரி வீட்டுக்குள்ள வர, இல்ல…” அவன் எச்சரிக்கையில் தலையை வேகமாக ஆட்டிவிட்டு, வீட்டின் பின்பக்கம் நோக்கி திரும்பினாள்.

“ஏ நில்லு, மாமாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா?” அவன் மேலும் சந்தேகமாக வினவ,‌

“அது… உச்சி வெயிலுல மாடு, கன்னுக்கெல்லாம் தண்ணீ காட்டி, நிழலா பார்த்து மேய்ச்சலுக்கு கட்டிட்டு வர தாமதமா போச்சு… மாமா” என்ற அவள் பதிலில் இவன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டு, “உன்னல்லாம்… போ…” அவன் விரட்டலில் ஓடியே போய்விட்டாள்.

மதிய உணவுக்கு அங்கு வந்த ஸ்ரீராம் பார்த்தது இதைத் தான். இந்த நெடியவன் ஏதோ அதட்டல் இட, சீதா பின்கட்டு வழி ஓடி மறைந்து இருந்தாள்.

‘யாரிவன்?’ என்று யோசித்தப்படி அருகே வந்தவன் கண்கள் பளிச்சிட்டன.

“கிருஷ்ணா…” அவன் மெல்லமாய் முணுமுணுக்க, திரும்பியவன் கண்களைச் சுருக்கி இவனை பார்த்தான்.

நெடுநெடுவன்ற உயரமும் கட்டுதிடமான உடற்கட்டும், மாநிறத்தை மிஞ்சிய சற்று சிவப்பேறிய நிறத்துடன், அதே கடுகடுத்த முகத்துடன் இருந்த ராமகிருஷ்ணனை புன்னகை விரிய பார்த்து நின்றான் ஸ்ரீராம். எத்தனை வருடங்கள் கடந்த சந்திப்பு என்ற உவகையோடு.

தன் தோள் தொட்ட உயரமும், சற்றே பூசினாற்போன்ற உடற்கட்டும், மாநிறத்துடன் துறுதுறு கண்களுடன் நின்றிருந்தவனை இவனும் அடையாளம் கண்டு கொண்டான்.

“டேய் ஸ்ரீராம், நீ இங்க வந்திருக்கன்னு அம்மா சொன்னாங்க, எப்படி டா இருக்க” என்று வாஞ்சையோடு கட்டிக் கொண்டான்.

“நல்லா இருக்கேன் கிருஷ்ணா, நீங்க எப்படி இருக்கீங்க? பெரியம்மா, பெரியப்பாவும் வந்திருக்காங்களா?” என்று ஆவலாய் விசாரிக்க,

“அம்மா மட்டும் தான் வந்து இருக்காங்க, உன்ன பார்த்தா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க வாடா” என்று வீட்டிற்குள் அழைத்து வந்தான்.

அவர்கள் உள்ளே வரும் போது பார்வையில் பட்டது, ஒருவரையொருவர் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த சீதாவையும் கோதாவரியும் தான்.

“என்ன சீதா, முன்னைக்கு இப்ப மெலிஞ்சு தெரியற, சரியா ஆகாரம் எடுத்துக்கிறியா? இல்லையா?” கோதாவரி அவளின் வாட்டமான தோற்றம் கவனித்து வினவ,

“நான் நல்லா தான் இருக்கேன் அத்தம்மா, நேத்து போன்ல பேசும்போது கூட இன்னிக்கு வர போறேன்னு சொல்லவே இல்ல” அவரிடம் சலுகையாக கோபித்துக் கொண்டாள்.

“என் தங்கத்தை பாக்க, நான் சொல்லிட்டு தான் வரணுமாக்கும்” என்று கோதாவரியும் தம்பி மகளோடு பேச்சு வளர்த்தார்.

ராமகிருஷ்ணனின் பார்வை சீதாவை அளவெடுக்க, ஸ்ரீராம் பார்வையும் கவனமும் கோதாவரியிடம் ஒட்டி நின்றது.

தான் சொன்னபடியே முகம் கழுவி, தலை திருத்தி, சுடிதாரில் அமர்ந்திருந்தவளை மிதப்போடு கவனித்தவன், “ஏ உனக்கு என்ன இன்னும் சின்ன குழந்தன்னு நினப்பா? நீங்க தான் ம்மா இவளுக்கு செல்லம் கொடுத்து உறுப்படாம வச்சிருக்கீங்க” என்று அம்மாவிடமும் மாமன் மகளிடமும் ஒன்றாக சிடுசிடுத்தான் ராமகிருஷ்ணன்.

சீதா முகவாட்டத்துடன் விலகி எழுந்து சென்று விட, “ஏன் டா எப்ப பார்த்தாலும் என் மருமகள கரிச்சு கொட்டிட்டே இருக்க, எத்தனை சொன்னாலும் உன் மரமண்டையல ஏறாதில்ல” கோதாவரி மகனை கடிந்து கொண்டார்.

“ஆமா, உன் மருமக ஒழுங்கா நடந்துகிட்டா, நான் ஏன் திட்டறேனாம்” என்று சத்தமாகவே முணுமுணுத்தவன், “அவளை தவிர உங்களுக்கு எதுவும் கண்ணுக்கு படாதே, இங்க பாரு யாரு வந்திருக்கான்னு” என்று பக்கத்தில் நின்றவனைக் கைக்காட்டினான்.

ஸ்ரீராமை பார்த்ததும் கோதாவரியின் முகம் மாறிப்போக எழுந்து வந்தார். சற்றே நரை காட்டிய தலையில் நிறைந்த பூவும், பழுக்க மஞ்சள் பூசிய முகத்தில் பெரிய குங்கும பொட்டும், கழுத்து நிறைந்த தங்க சங்கிலியும், பாந்தமான பட்டு புடவையும் என பார்வைக்கு நிறைவாக வந்தவரின் காலில் பட்டென விழுந்து விட்டான் ஸ்ரீராம்.

கோதாவரி அவன் காதை பிடித்து திருகி எழுப்ப, “ஆ பெரிம்மா, வலிக்குது…” அவன் அலற, “நல்லா வலிக்கட்டும், வருச கணக்கா ஊரு பக்கம் வராம போக்கு காட்டிட்டு, இப்ப தான் எங்களை எல்லாம் அடையாளம் தெரிஞ்சதா உனக்கு? போதா குறைக்கு யாரை கேட்டு டா பெரிய வீட்டை இடிச்சு தள்ளி வச்சிருக்க?” என்று சின்னவனிடம் சண்டைக்கு நின்றார்.

“பெரிய வீடு இல்லாம வெறிச்சோனு கிடந்த தெருவ பார்த்ததும் மனசே பதறி போச்சுடா படவா” என்று ஆதங்கப்பட்டவரின் கையை தன் காதிலிருந்து பிரித்தெடுத்தவன், “சாரி பெரிம்மா, நான் வேணும்னு இடிக்கல, இடிச்சு கட்ட வேண்டிய நிலைமைல தான் நம்ம வீடு இருந்தது அதான்” என்று சமாதானம் பேசினான்.

கோதாவரி, சங்கரனின் உடன் பிறந்த அக்கா என்றால், பரமேஸ்வரனுக்கு உடன் பிறவாத சகோதரி. ஒரே ஊரினர் என்பதால் இரத்த உறவைத் தாண்டி இரு வீட்டாருக்கும் வழிவழியான பாச பிணைப்பு தொடர்ந்து வந்திருந்தது.

சின்னவனின் சமாதானத்தில் முகம் இளகியவர், “பெரிய பொறுப்பை ஒத்தையா கைல எடுத்திருக்க ராமா, நாங்கெல்லாம் அசந்து போற மாதிரி பெரிய வீடு எழுந்து நிக்கணும் பாத்துக்க” என்று கட்டளையாக ஆசி வழங்க, ஸ்ரீராம் மகிழ்வோடு அவரின் ஆசியை கட்டளையாக ஏற்று தலையசைத்தான்.

“சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க, ‘வீட்டை கட்டி பாரு, கல்யாணத்தைப் பண்ணி பாரு’ன்னு” அவர் மேலும் சொல்லி செல்ல,

அப்போது விரிந்த சிரிப்போடு உள்ளே வந்த சங்கரன், “வாங்க மாப்பள, வா க்கா, மாமா வரலையா க்கா” என்று விசாரித்தார்.

“மாமாக்கு வர நேரமில்லன்னு தான் என்னய அனுப்பினாரு சங்கரா, எல்லா நல்ல விசயந்தான் கொண்டு வந்திருக்கேன்” என்க, அனைவரின் முகத்திலும் ஆர்வம் கூடியது.

“சொல்லு க்கா” என்று கேட்க,

“நம்ம ராமகிருஷ்ணாவுக்கு குருதிசை கூடி வந்திருக்காம் ஜோசியர் சொல்லி இருக்காரு. அதான் திசை மாறத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்னு யோசனை. புள்ளைங்களுக்கும் வயசு ஏறிட்டே போகுதில்ல. இனி தள்ளி போட வேணாம்” கோதாவரி நிதானமாக சொல்லிவிட்டு, தம்பியின் முகம் பார்த்தார்.

“இதுல நான் சொல்ல என்னக்கா இருக்கு, நீங்க நாள் குறிச்சிட்டு சொல்லுங்க, அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம்” என்று சங்கரன் உற்சாகமாக சொல்ல,

“அத்தனை அவசரம் வேணாம் மாமா, சீதாவுக்கு இதான லாஸ்ட் செமஸ்டர், அது முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்” ராமகிருஷ்ணன் பிடிவாதமாக மறுக்க,

“கண்ணாலம் முடிஞ்சு பரிச்சை எழுதிகிட்டா போவுது, குருதிசை போனா திரும்ப வருமா?” மரகதம் தன் மருமகனிடம் நிலையை விளக்க முற்பட்டார்.

“நான் முன்ன சொன்னது தான் அத்த, சீதா அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது முடிச்சப்புறம் தான் எங்க கல்யாணம். மேரேஜ்க்கு அப்புறமும் உங்க மகளுக்கு டியூசன் எடுக்கற ஐடியா எல்லாம் எனக்கு இல்ல” ராமகிருஷ்ணன் உறுதியாக சொல்லிவிட, மருமகனிடம் எதிர்த்து வாதாட முடியாமல் சங்கரன், மரகதம் இருவரும் கவலையாக கோதாவரி முகம் பார்த்தனர்.

“டேய் சும்மா குதிக்காத பொறுடா” என்று மகனை நிதானப்படுத்திவிட்டு தம்பியிடம் திரும்பியவர், “இப்போதைக்கு நாள் குறிச்சு நிச்சயத்தை வச்சுக்கலாம் பா, நாம கல்யாண வேலை கவனிக்கறத்துக்கும் சீதாவுக்கு படிப்பு முடியறத்துக்கும் சரியா இருக்கும்னு மாமா சொன்னாரு” என்று சொல்ல அனைவரது முகத்திலும் நிம்மதி பரவியது.

“என்ன ராமகிருஷ்ணா உனக்கு சம்மதம் தான?” மகனிடம் அபிப்ராயம் கேட்க, “நல்ல ஐடியா தான் மா எனக்கு ஓகே” என்றான் சம்மதமாய்.

“ஹேய்ய் அக்காவுக்கு கல்யாணம்…” அதுவரை பொறுத்திருந்த சக்திவேல் ஆர்பாட்டமாக குதிக்க, “ஹே சூப்பர், கங்க்ராட்ஸ் கிருஷ்ணா” என்று ஸ்ரீராம், ராமகிருஷ்ணனை கட்டி அணைத்து உற்சாகமாக வாழ்த்துச் சொன்னான்.

சுபமான பேச்சு கூடி வந்திருக்க, மகிழ்ச்சியாக மரகதம் அனைவருக்கும் பனங்கற்கண்டை தந்தார். “என் மருமகளுக்கு தான் முதல் இனிப்பு” என்று கோதாவரி சீதாவை அழைக்க, தயக்கத்துடன் கூடத்திற்கு வந்தவளின் வாயில் கற்கண்டை ஊட்டிவிட்டு, “இப்ப உனக்கு சந்தோசம் தான சீதாம்மா” என்று அவளை அன்போடு அணைத்துக்கொள்ள, சீதாவும் பாந்தமாக அத்தையின் தோள் சாய்ந்து கொண்டாள்.

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தாண்டவமாட, சீதா மஹாலட்சுமியின் மனம் மட்டும் புரியாத தயக்கத்திலும் தெளியாத பயத்திலும் திண்டாடிக் கொண்டிருந்தது.

“நிச்சயதார்த்த வேலையெல்லாம் நீ தான் முன்னெடுத்து செய்யணும் ராமா புரிஞ்சதா?” கோதாவரி ஆணையிட, ஸ்ரீராம் விரிந்த சிரிப்புடன் தலையாட்ட,

ராமகிருஷ்ணனோ, “என் எங்கேஜ்மெண்ட்க்கு நானே எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யணுமா போ மா” என்று அலுத்துக்கொண்டான்.

“டேய், நான் சொன்னது உன்ன இல்லடா, நம்ம ஸ்ரீராமை” கோதாவரி திருத்த, அங்கு கொல்லென்று சிரிப்பு சத்தம் வந்தடங்கியது.

“இந்த கன்பியூசனுக்கெல்லாம் ஒரே காரணம் நீ தான் ம்மா… உனக்கு கம்பராமாயணம் பிடிக்கும்ன்னு குடும்பத்தில பொறந்த பசங்களுக்கெல்லாம் ராமகிருஷ்ணன், ஜெயராமன், ஸ்ரீராமன், சீதான்னா பேரை வச்சு தொலைப்ப, பேசாம இந்த ஊருக்கு அயோத்தின்னு பேரை மாத்தி வச்சுடு” என்று சலிப்பாக கடுப்படித்தான் ராமகிருஷ்ணன்.

“என் பசங்களுக்கு நான் பாத்து பாத்து வச்ச பேரை நீ குத்தம் சொல்லுவியா டா, நம்ம கடைக்குட்டிக்கு கூட, ‘ஜானகிராமன்’னு பேர் வைக்கலாம்னு எம்புட்டு ஆசையா கிடந்தேன் தெரியுமா? நீ தான் ‘இருக்கற ராமனுங்களே போதும்னு’ சொல்லி, ‘சக்திவேல்’னு பேரை வச்சிபுட்ட” என்று மகனுக்கு ஈடாக கோதாவரியும் பேச,

“மாமா… என் பேரை காப்பாத்துன குல தெய்வம் நீங்க தான், இல்லனா, ஸ்கூல்ல எல்லாரும் என்னை ‘ஜானகி ஜானகி’னு கிண்டல் பண்ணியே ஒருவழி ஆக்கி இருப்பானுங்க” என்று சக்திவேல் அப்படியே ராமகிருஷ்ணனின் காலில் விழுந்துவிட, அங்கே மீண்டும் கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்க நேரமானது.

மதியவேளை விருந்து முடித்துக்கொண்டு ராமகிருஷ்ணன், ஸ்ரீராமுடன் வீடு கட்டும் இடத்திற்கு வந்திருந்தான்.

அஸ்திவாரம் மூன்று அடிகளுக்கு மேல் ஏறியிருக்க, ஜல்லி, சிமெண்ட் கலவை இட்டு கெட்டி படுத்தும் பணிகள் வேகமாய் நடந்து கொண்டிருந்தது.

“உயரமா அஸ்திவாரம் போட்டிருக்க போல?” ராமகிருஷ்ணன் வினவ,

“ஆமா கிருஷ்ணா, பேஸ் ஹைட்ல வைக்கிறது நமக்கு பெனிஃபிட் தான், மேல ரோட் போடும் போது உயரம் குறையாம இருக்கும், மழைக்காலத்தில வெள்ளம் உள்ள புகாம தடுக்கும்” என்றான்.

ஆமோதிப்பாக தலையாட்டியவன், சிறிது நேரம் அங்கு நடைபெறும் வேலைகளை வேடிக்கை பார்த்து நின்றிருக்க, “சீதா எங்ககிட்ட எல்லாம் சரிக்கு சரியா வாயடிப்பா, ஆனா நீ ஒரு அதட்டல் போட்டா சிட்டா பறந்து போயிடுவா, நீ அவள மிரட்டினதுக்கெல்லாம் சேர்த்து வச்சு லைஃப் லாங் அவகிட்ட அடங்கி போக போற பாரு” என்று ஸ்ரீராம் கிண்டலடித்து சிரித்தான்.

“ப்ச் நானாவது அவகிட்ட அடங்கி போறதாவது சான்ஸே இல்ல” ராமகிருஷ்ணன் மடங்காமல் பேச, “நானும் பார்க்க தானே போறேன்” ஸ்ரீராம் கேலியை விடுவதாக இல்லை.

“அதில்ல டா, ஆள் வளர்ந்து இருக்காளே தவிர, அறிவு இம்மி கூட வளரல டா அவளுக்கு” ராமகிருஷ்ணன் சலித்து கொள்ள,

“ஏன் அப்படி சொல்ற கிருஷ்ணா, சீதா நல்ல பொண்ணு, எல்லார்கிட்டயும் அன்பா இருக்கா, ரொம்ப அழகா பாடுறா, கொஞ்சம் பயந்த சுபாவம் அவ்வளவு தான்” அவன் எடுத்து சொல்ல,

“அட நீ வேற, இப்ப அவளை பாட சொல்லி யார் அழுதா, கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்ல டா அவளுக்கு. ஒழுங்கா டிரஸ் பண்ணிக்க தெரியல, தன்னை அழகா வச்சுக்க தெரியல, கோர்வையா பேச கூட தெரியல…” இவனும் குறைகளை அடுக்கினான்.

“விலேஜ்ல வளர்ந்ததால இப்படி இருக்கா, போக போக மாத்திப்பா, நீ அவளுக்கு சொல்லிக்குடு”

“சொன்னா மட்டும் அவளுக்கு புரிஞ்சிடவா போகுது? மாடு மேய்கிறது, சாணி அள்ளறது, தெரு பசங்களோட உக்கார்ந்து அஞ்சாங்கல்லு விளையாடறது, வயசான கிழகட்டைகளோட சேர்ந்து பாட்டு பாடுறேன்னு கும்மாளம் அடிக்கிறது… இது தவிர வேற ஒரு மண்ணும் அவ மர மண்டையல ஏறதில்ல”

“சரி காலேஜ் போய் படிச்சாலாவது கொஞ்சமாவது மாறுவான்னு எதிர்பார்த்தேன்… அதுவும் சுத்தம்… இந்த பட்டிகாட்ட கட்டிட்டு போய் என் ஃப்ரண்ஸ் கிட்ட கொலிக்ஸ் கிட்ட எப்படி இன்டிடியூஸ் பண்றதுன்னு நினைச்சாலே ஷிட்” மேலும் ராமகிருஷ்ணன் ஆதங்கமாக பேசிக் கொண்டே போக,

“உனக்கு சீதாவ பிடிக்கலையா கிருஷ்ணா?” அவன் பேச்சில் ஸ்ரீராம் அதிர்ந்த முகத்துடன் கேட்டு விட்டான்.

“அதெல்லாம் பிடிக்கும் டா, சின்ன வயசுல இருந்து அவ தான் எனக்குன்னு நினச்சிருக்கேன்”

“வேற என்ன பிரச்சனை உனக்கு?”

“ப்ச் இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் எவ்ளோ கிளவரா இருக்காங்க, ஆனா இவ இன்னும் எய்டீஸ்லயே இருக்கா… என்னோட லைஃப் பார்னர் அழகா இருக்கணும், அறிவா செயல்படணும்… எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்னு நினைக்கிறது தப்பா டா?” அவனின் ஆதங்கமான கேள்வியும் நியாயமானதாகவே தோன்றியது ஸ்ரீராமிற்கு.

“நீ நினைக்கிறதுல எந்த தப்பும் இல்ல கிருஷ்ணா, அதேபோல சீதா மேலயும் குறை சொல்ல முடியாது, அவ வளர்ந்த, வாழற சூழல் அப்படி… உங்க கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி அவ மாறிடுவா பாரேன். இடத்துக்கு தக்க மாதிரி தங்களை மாத்திக்கிற மைண்ட்செட் பெண்களுக்கு நேச்சுரலாவே இருக்கு. சோ நீ இதையெல்லாம் பத்தி ஓவரா யோசிச்சு குழப்பிக்காம, புது மாப்பிள்ளையா சமத்தா இருப்பியாம் சரியா” ஸ்ரீராம் நீளமாக பேச,

இளகுவாய் சிரித்தவன், “அந்த நம்பிக்கைல தான் நானும் இருக்கேன். சரி, நேரமாச்சு கிளம்புறேன். பை ஸ்ரீராம்” என்று ராமகிருஷ்ணன் விடைபெற்று கிளம்பினான்.

நிச்சயதார்த்த விசயங்களைப் பற்றி விவரமாக பேசிவிட்டு நிறைவான மனதுடன் கோதாவரியும் மகனுடன் கிளம்பினார்.

இருவரும் இவளிடம் விடைப்பெற, தலையசைப்பை மட்டும் பதிலாக தந்திருந்தாள் சீதாமஹாலட்சுமி.

# # #

வருவாள்…

error: Content is protected !!