Kathalukku Enna Vayathu – 10

Love

வயது – 10

“ஏய்!!! நல்லா பாரு ஆரா…உன் பக்கத்துல அந்த சைட்ல மறைஞ்சு இருக்கா பாரு…நல்லா பாரு ” என்று ரன்னிங் கமென்ட்ரி போல் விடாமல் ஆராதனாவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான் அரவிந்த்.

“பாத்துட்டேன் பாத்துட்டேன் ஆர்வி….இரு கன் மாத்துறேன்” என்று அவளும் சுற்றம் மறந்து கத்த

அந்த டைனிங் டேபிளில் ஒரு சாப்பாட்டு மேஜையாக இல்லாமல் ஒரு போர்க்களமாக மாற்றி இருந்தனர் அரவிந்த்,அனிஷா மற்றும் ஆராதனா.

இன்றோடு செழியனுக்கு திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது.திருமணம் முடிந்த மூன்று நாட்கள் கழித்து அவன் தன் மனைவியோடு தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டான்.அனுராதாவும் அதற்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லவில்லை இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவரும் அதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தார்.அவர்கள் தனிமையில் இருந்தால் தான் அவர்களுக்குள் அன்பும்,புரிதலும் உருவாகும் என்று அவர் எண்ணினார்.

ஏனோ தம்பியின் குணம் அறிந்தவராக அப்படியே விட்டு விடவும் முடியவில்லை அதனால் இந்த 2 வாரங்களில் வார இறுதி நாட்களில் தன் பிள்ளைகளோடு வந்து அவர்களைப் பார்த்து விட்டு செல்வார்.

அப்படிப் பார்க்கும் போதெல்லாம் அவருக்குப் பெரிதாக எந்த ஒரு மாற்றமோ இல்லை நெருக்கமோ அவர்களிடமும் அல்லது செழியனிடமும் அவர் கண்டதில்லை.

மாற்றம் உடனே நிகழவில்லை என்றாலும் மெல்ல மெல்ல நேரும் என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டார்.வேறு வழி எதுவும் இல்லையே கல்யாணம் முடிந்ததே பெரும் கதை இதில் மேற்கொண்டு தன் தம்பியிடம் மறுபடியும் கோரிக்கையை வைத்தால் வாதத்தை கூட கேட்காமல் கண்ணை மூடி மரண தண்டனைதான் விதிப்பான்.அப்படி ஒரு கோபமும் இறுக்கமுமாக இந்த இரண்டு வாரங்களாக வலம் வருகிறான்.

இதோ இப்பொழுது கூட அந்த மேஜையில் தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவனின் உஷ்ணம் தான் அவன் முகத்தில் தென்படுகிறது.அவர் எண்ணத்தை கலைக்கும் விதமாக ஆராதனாவின் குரல் இருந்தது.

“ஹேய் சுட்டுட்டேன்…அனி காலி…லூசர்” என்று சத்தமிட்டு கொண்டே தன் எதிரில் இருந்த அரவிந்திடம் ஹை-ஃபை கொடுத்துவிட்டு அனிஷாவை பார்த்து இருவரும் கூச்சலிட்டு வெறுப்பேற்ற இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு தன் எதிரில் உள்ள தட்டில் தலையை மூடிக் கொள்ளலாம் போலிருந்தது.

அவனும் தன் கோபத்தைக் கூட வெளிப்படுத்த கூடாது,ஆராதனாவை கல்லையும் மண்ணையும் போல தான் பார்க்க வேண்டும் அது போல்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.

அதற்கு காரணம் அவனின் திருமணம் முடிந்த மறுநாள் நடந்த நிகழ்வு.அதை நினைத்தாலே எரிச்சல் வரும் என்றாலும் மனம் என்னும் குரங்கு கேட்குமா அந்த நிகழ்வில் தான் சுற்றி வந்து நின்றது.

அன்று அவளை அறைக்கு அழைத்து சென்று மூச்சு வாங்காமல் தன் ஆதங்கத்தை கொட்டியவனை இறுக்க அணைத்து அவனுக்கு இன்னும் அதிர்ச்சி கொடுத்தாள் நம் நாயகி ஆராதனா.

கண் மூடி கண் திறப்பதற்குள் அங்கு நிலைமை தலைகீழாக மாறி இருந்தது.அதோ பரிதாபம் செழியனுக்கு கோபம் மறைந்து தேகம் முழுவதும் பதற்றமும் படப்படப்பும் நிறைந்தது.அவன் நெஞ்சில் சாய்ந்தவளின் காதிற்க்கு அவனின் இதயத்துடிப்பு அதிவேகமாக துடிப்பதை உணர்ந்தாள்.

இதற்கு மேல் இதை தாங்க முடியாது என்று எண்ணியவன் அவளை பிரித்தெடுப்பதற்குள் அவனிடமிருந்து அவளே விலகி நின்றாள்.

“இப்போ உங்களுக்கு கொஞ்சம் ஆச்சு கோபம் குறைஞ்சுதா?!” என்று அவனை பார்த்து கேட்க

உண்மையில் அவனிற்கு எதற்கு கோபப்பட்டு வந்தோம் என்று சற்று குழம்பியது.காரணம் ஆராதனாவின் ஷாக் வைத்தியம் தான்.பின் தெளிந்தவன் “உன்னை…” என்று பல்லைக் கடித்து பழைய பல்லவியை பாட ஆரம்பிப்பதற்குள்

“ஒரு நிமிஷம்!!!இப்ப எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுறீங்க?! இப்படி எல்லாம் டென்ஷன் ஆனா அதனால உங்க உடம்பு தான் கெட்டுப் போகும்…அப்புறம் BP தான் வரும்…கொஞ்சம் அமைதியா பேசுங்க” என்று அப்பாவியாக சொல்லி அவனைப் பார்க்கஅவனோ அவளை புரியாமல் ஒரு பார்வை பார்த்தான்.

“அப்படி சொல்ல எனக்கு ஆசை தான்.ஆனால் எனக்கு நீங்க கோபப்பட்டது எவ்வளவு பிடிச்சது தெரியுமா…பாத்துட்டே இருக்கணும் போல தோனுச்சு…ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தவளை அற்ப புழுவைப் பார்ப்பது போல் பார்த்தான் செழியன்.

“ச்சை!!! நான் இங்க கொதிச்சு போய் கத்துக்கிட்டு இருக்கேன்…நீ சந்தோஷமா இருக்கேன்னு சொல்ற நீ எல்லாம் பொண்ணா இல்லை பேயா” என்று முகத்தை சுளித்தவாறு வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

‘என்ன பெண் இவள்…எவ்வளவு திமிரு ,எகத்தாளம்,நக்கல்…இவ பொண்ணே கிடையாது என் இரத்தத்தை குடிக்க வந்த ராட்சஷி” என்று அவன் மனதுக்குள் எண்ணினான்.

“ஹலோ…ஹலோ…ஒரு நிமிஷம் இருங்க…முதல்ல எதுக்கு இப்ப கோபப்பட்டிங்க? அத யோசிங்க?”

“உனக்கு என்ன பைத்தியமா? இல்லை என்னை பைத்தியக்காரனா மாற்ற முயற்சி பண்றியா?” என்று அவன் கத்திக் கொண்டிருக்கும்போதே

இடப்பக்கம் தன் முகத்தை சிறிது திருப்பி வலது கையின் ஆள்காட்டி விரலை காதின் பின்புறத்தை தீண்டியவாரே “உங்க மேலதான் எனக்கு பைத்தியம் சொன்னா நம்பவா போறீங்க” என்று அவள் முனக

“என்ன?! என்ன சொன்?!”

“உங்களுக்கு புரியலையா? இப்ப நீங்க ஏன் கோபப்பட்டிங்க…உங்க ஆபீஸ்ல யாரோ ரெண்டு பேரு தப்பா பேசினாங்கனு அவங்க யார பேசுனாங்க கொஞ்சம் நிதானமாக யோசிங்க உங்களையா இல்ல என்னையா” என்று கேட்டாள் பின்

“என்னை தானே தாக்கி பேசினாங்க அதுக்கு ஏன் நீங்க கோபப்பட்டு பேசணும்…அவங்க அப்படி பேசினது தாங்க முடியாம வந்தது தானே இந்த கோபம்…மொத்தத்தில என் மேல ஒரு வித உரிமை இருக்குறதுனால உங்களுக்கு இந்த கோபம் வருது அதனால தான் எனக்கு சந்தோஷமா இருக்குனு சொன்னேன்” என்றவள்

“ஆனா அந்த கோபத்தை அங்க காட்டாம இங்கு வந்து என்கிட்ட கொட்டுறதுலயும் ஒரு வித சந்தோஷம் தான்” என்று சொன்னவளை புரியாமல் பார்க்க

” ‘இந்த அடிக்கிற கைதான் அணைக்கும்’, ‘உரிமை உள்ள இடத்தில தான் கோபம் வரும்’ இந்த டயலாக்கை கேட்டு இருக்கிங்களா…அந்த கணக்குப்படி பார்த்தா உங்களுக்கு என் மேல ஒரு ஸ்ட்ரோங் பீலிங் இருக்குல்ல…இதை தான் மஞ்சக் கயிறு மேஜிக் சொல்லுவாங்களோ” என்று ஒரு வித நமட்டு சிரிப்புடன் அவனிடம் பதில் எதிர்பார்க்க

செழியனோ “உன் தல…நீ நினைக்கிற மாதிரி ஒரு இழவும் கிடையாது” என்று அவளை கடுப்படிட்டு விட்டு அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தவனின் மூளையோ ‘அடக்கொடுமையே!!! என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நமக்கு தலையே வெடிச்சிடும் என்று கூற அவனின் உண்மையின் உரைகல்லான மனசாட்சியோ ‘டேய்!!!அவ சொல்லுறதுலயும் ஒரு நியாயம் இருக்கு டா தம்பி…கரெக்டா பாயிண்ட் புடிச்சா’ என்று அவனை இடித்துரைக்க வழக்கம்போல் அதை சிறிதும் மதிக்காமல் அதை திட்டி விட்டு வந்ததைப் போல வேகமாக கீழே இறங்கி சென்றான்.

அவன் மனைவியோ அவன் பின்னால் “என்னங்க சொல்லிட்டு போங்க…கேட்டுகிட்டு இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்க” என்று நிலைமை தலைகீழாக மாறி செழியனை ஆராதனா துரத்திக்கொண்டு வர கோவிலில் இருந்து அப்பொழுதுதான் உள்நுழைந்த அனுராதா செழியனை இந்நேரத்தில் எதிர்பார்க்காததால் என்ன என்று வினவ ஏதேதோ சொல்லி சமாளித்து கிளம்பினான்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவனை அங்கு இருந்த அவர்களின் கூச்சல் நிகழ் காலத்துக்கு கொண்டுவந்தது. அவனின் பொறுமையை அவள் மிகவும் சோதிப்பதாக அவனுக்குத் தோன்றியது.

சாப்பிடாமல் அவர்களையே வெறித்து பார்த்து கொண்டிருக்கும் தன் தம்பியிடம் “செழியா சாம்பார் ஊத்தவா” என்று அனுராதா கேட்க

“ஊத்து,அதை எடுத்து என் தலைல ஊத்துகா” என்று சொல்லியவனின் பேச்சில் அந்த மேஜையில் நிறைந்திருந்த கூச்சல் எல்லாம் கப்சிப்பென்று ஆனது.

“என்ன ஆச்சு!!! அம்மையார் தான் பெரிய ராணுவ தாக்குதலை நாட்டுக்காக நிகழ்த்திட்டு வந்து இருக்காங்க… ஏன் கொண்டாட்டத்தை நிறுத்திட்டீங்க இன்னும் சத்தம் போடுங்க”

“இல்ல மாம்’ஸ் சும்மா பப்ஜி ஆடிட்டு இருந்தோம்” என்று அரவிந்த் சொல்லி முடிப்பதற்குள் அவனிடம் பாய்ந்தான் செழியன்.

“ஏன் டா விளையாடுறதுக்கு நீ என்ன சின்ன பையனா,மாமா உன்னை பெரிய லாயர் பாக்கணும்னு நினைக்கிறாரு…அவர் ஆசையை நிறைவேற்றலைனாலும் கெட்ட பேரு வாங்கி கொடுக்காமல் இருந்தாலே போதும்”

‘அப்பாடா நல்லவேளை இன்னைக்கு தோத்தது கூட நல்லதா போச்சு …நம்ம பக்கம் புயல் வீசலப்பா’ என்று நினைத்த அனுஷா ‘இப்பொழுது என்ன ஆச்சுனு மாம்ஸ் இப்படி அனல் அடிக்கிறார்’ என்று புரியாமல் ஆராதனை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்பதுபோல் கண்ணையும் மூக்கையும் சுருக்கி அவளிடம் கேட்டாள்.

அதற்கு ஆராதனா ‘எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்’ என்று சொல்வது போல் மேல் நோக்கி தன் தலையையும் தன் இரு கைகளையும் திருப்பி காட்ட அந்த சம்பாஷணைகளை ஒன்று கூட விடாமல் சரியாக பார்த்த செழியன் இப்பொழுது ஆராதனாவை நோக்கி தன் கணையை திருப்பினான்.

“ஹலோ மகாராணி!!!! என்ன பண்றீங்க?! இல்ல தெரியாம தான் கேக்குறேன் நீங்க இங்க என்ன பண்றீங்க கெஸ்ட் ரோல்ல ?! இல்ல கெஸ்ட் அப்பியரன்ஸ்ஸ?!”

“வீட்டுக்கு வந்தவங்களை நீ தான் கவனிக்கணும் ஆனா இங்க தலைகீழா இருக்கு என்னோட அக்கா தான் அங்கையும் சரி இங்கையும் சரி கவனிக்கிறாங்க…உன்னால வச்சுட்டு ச்சை” என்ற தன் தட்டில் கைகழுவி விட்டு மேலே தன் அறைக்கு சென்றான்.

அங்கு உள்ளவர்களுக்கு யாருக்கும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அனுராதா “இவனுக்கு என்னாச்சுனு தெரியல கொஞ்ச நாளா ஒரு மாதிரியா தான் இருக்கான்.இப்ப எதுக்கு கோபம் புரியல,கத்திட்டு போறான்…சாப்பாடு கூட சாப்பிடாம போயிட்டான்…நான் போய் அவன கூட்டிட்டு வரேன்” என்று எழப்போனவரை தடுத்த ஆராதனா

“விடுங்கமா…அவருக்கு என் மேல கோபம் அதுதான் இப்படி காட்டிட்டு போறாரு…எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு”

“நான் போய் பேசுனா அவன் கேட்பான் ஆரா”

“என்ன கேட்டா அவரெல்லாம் விட்டுத்தான் பிடிக்கணும்…இப்ப நீங்க போய் பேசினால் ஏன்டா பேச வந்தோம்னு உங்களை நினைக்க வச்சிருக்காரு…கொஞ்சம் அமைதியாவே இருப்போம்”

அனுராதாவிற்கும் சமாதானம் சொன்னாலும் அவளுக்கு எப்படி அனைத்தையும் சரி செய்வது என்று சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.அவளுக்கும் கோபம் தான் இந்த வாழ்க்கை மீதும்,அதை அதைக் கொடுத்த அந்த ஆண்டவனின் மீதும் தான். ஆனால் அதை காட்டுவதனால் யாருக்கு என்ன பயன்.

அவனும் அவளும் திருமணம் முடிந்த பிறகு வந்த நாட்களில் நேருக்கு நேராக அவர்கள் பார்த்து கொண்ட தருணங்கள் மிகவும் அரிது தான்.அந்த சில நேரங்களிலும் அவளை முழுவதுமாக தவிர்த்து விட்டு சென்று விடுவான்.ஆரம்பத்தில் அதையும் நல்லதாக எண்ணிய ஆராதனாவிற்கு போக போக இது என்ன வாழ்க்கை, இந்த வாழ்க்கைகாகவா அத்தனை கஷ்டத்தையும் கடந்து வந்தோம் என்று அவளுக்குத் தோன்றியது.

பேசாமல் அனைத்தையும் அவனிடம் சொல்லி விடலாமா சொன்னால் புரிந்து கொள்வாரா என்று ஒரு மனம் எண்ண புத்தியோ அதுக்கு அப்புறம் உனக்கு வாழ்க்கையே இல்லை நீ நினைக்கிற செழியன் எப்பவோ செத்துடான் இந்த செழியன் உனக்கு புதுசு என்று சொல்லியது.

இன்னும் தான் எத்தனை சோதனைகளை தாங்கி கொள்வது.இதற்கு இந்த பிறப்பை எடுக்காமல் இருந்திருக்கலாம் என்று எண்ணி தன் கண்ணில் துளிர்ந்த நீரை யாருக்கும் தெரியாமல் மறைத்தாள்.

இங்கே இவள் கண்ணீர் விடுவதை போல் அங்கே ஒரு ஜீவன் இவளை நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டது கொடிய பேச்சுகளையும்,அடிகளையும் தன் கணவனிடம் வாங்கி கொண்டு மௌனமாய்.

ஜெயபிரகாசம்

ஜானகியின் கணவர்!!!

ஆராதனாவின் பிறப்புக்கு காரணமானவர்!!!

 

 

” வெளியிலே ஓர் புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வேலியாய்
தீ ஒன்றின் பொறியாக நான்
எனை சூடும் திரியாக நீ என் அன்பே… ஹே..

என் கையை கோர் யவ்வனா…
என் கண்கள் பார் யவ்வனா…
என் நெஞ்சில் சேர் யவ்வனா…
திரன திரன… னா… னா…

யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே
விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே… ஹே… “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!