Kathiruntha kathaladi 11

Kathiruntha kathaladi 11

11

ஆதி, ஆருஷின் அலுவலக அறையின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து வெளிவரவுமே அதிர்ந்தவள், ‘அய்யோ! இவன் எப்ப வந்தான்? எல்லா விஷயமமும் இவனுக்கு தெரிஞ்சுடுச்சா! இவ்ளோ நேரமா இவன் இங்கதான் இருந்தானா! கண்டிப்பா இது ஆருஷ்க்கு தெரியாம இருந்திருக்காது! இப்படி பத்த வச்சிட்டயே பரட்ட’ என ஆருஷை பங்கமாய் முறைக்க, அந்த நிலையிலும் ஆருஷிற்கு சிரிப்பாக இருந்தது.

இரு கைகளையும் உயர்த்தியவன், “சாரி பேபி, நான் எதுவுமே ப்ளான் பண்ணல. நீயா வந்த வாக்குமூலம் கொடுத்த. பத்தாததுக்கு ஆதி பேதி, ஜோக்கர்னுலாம் சொன்ன” என சிரிப்பின் இடையில் பேசினான்.

பல்லைக் காட்டியவள், “நீங்க இவ்ளோ நல்லவங்கன்னு தெரியாம போச்சே.” என முணுமுணுத்துக் கொண்டாள்.

ஆதி இவளை முறைப்பாய் பார்த்தவாறு அவளருகே வந்தான், “ஜோக்கர்னா சொல்ற, உன்ன கவனிக்க வேண்டிய நே…ரத்துல கவனிச்சுக்கறேன்” என அழுத்திக் கூறியவனைக் கண்டு திகில் படர்ந்தது அவளுக்கு. “உட்கார்” என அதட்டவும் சட்டென அமர்ந்துவிட்டாள்.

இருவரும் இயல்பாய் இருப்பதை மாறிமாறி பார்த்தவள், “அப்ப உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே நல்ல பழக்கமா?” என வியப்போடு கேட்டாள்.

அதில் ஆருஷ் ஆதியின் தோளில் கை போட்டு, “எனக்கு இவன காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும். எங்க காலேஜ்க்கும், அவங்க காலேஜ்க்கும் பிரச்சனையானப்ப பாத்திருக்கேன். அப்பறம் பிஸினஸ் மீட்டிங்ல பார்த்துதான் பழக்கம் ஏற்பட்டுச்சு. இப்போ நல்ல ஃபிரண்ட்ஸ்ம் கூட.” என நண்பேன்டா ஸ்டைலில் நின்றனர்.

‘அடப்பாவிகளா இந்த தளபதி படத்த முன்னமவே ஓட்டியிருந்தா நான் சுதாரிச்சிருப்பனே! இப்ப என்னை ஜோக்கராக்கிட்டானுங்களே’ என மனதோடு புலம்பினாலும் வெளியில் சிரித்து வைத்தாள்.

“நாங்க மால்ல பேசிகிட்டோமே கவனிக்கல” என ஆருஷ் கேட்க, “அது சும்மா தெரிஞ்சவங்கன்னு நினைச்சேன். ஆனா இப்படி பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்ன்னு தெரியாது” எனவும் ஆதி இவளை மீண்டும் முறைக்க, “சாரி” என வாயசைத்தாள். “அது” என மிதப்பாய் அவளைப் பார்த்தவன் அவளருகில் வந்து அமர, ஆருஷும் அவன் இருக்கையில் அமர்ந்தான்.

ஆருஷ், “என்ன சாப்பிடறீங்க” எனக் கேட்டு வரவழைத்துக் கொடுத்தான். சற்று கனமான மௌனம்!!!

” ஆக்ஸிடென்ட்க்கு அப்பறம் எனக்கு ஹர்ஷி பத்தி ஒன்னுமே தெரியல, அந்த சமயத்துல ஹர்ஷி இல்லங்கறத நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல, கொஞ்சம் சந்தேகம் வந்திருந்தாலும் தேட ஆரம்பிச்சிருப்பேன்.

உங்க வீட்டு அட்ரஸ கண்டுபிடிச்சு கூட போய்க் கேட்டேன் ஆனா அங்கயும் ஹர்ஷியப் பத்தி அப்படித்தான் சொன்னாங்க” என ஆருஷ் இறுக்கமான முகத்துடன் கூறினான்.

இதழை ஒரு பக்கமாக இழுத்தவள், “அதுவும் எங்கப்பாவோட ப்ளான்தான்” எனக் கூறவும் ஆருஷ் கலங்கித்தான் போனான்.

“எப்படி? பெத்த பொண்ணையே செத்… சொல்ல மனசு வந்தது.” அந்த வார்த்தையை ஹர்ஷிக்காக கூறக்கூட அவனால் முடியவில்லை ஒரு தந்தையாய் எப்படி? முடிந்தது என கொதித்தான்.

“அதெல்லாம் எங்கப்பாவுக்கு வரும்” என்றவள், ஆதியின் புறம் திரும்பி, “உங்களுக்கு எப்ப? இவங்களப் பத்தி தெரியும்.” எனக் கேட்க,

அவளைப் பார்த்துக் கொண்டே,”ஏழு வருஷத்துக்கு முன்னவே தெரியும்” என்றவன், “ஹாஸ்பிட்டல், தாடி, கூலிங் கிளாஸ், நீ ஒருத்தர் கிட்ட ஹெல்ப் கேட்டியே?” என நிறுத்த,

“அவன் உங்களுக்கு தெரிஞ்சவனா? அவன் மட்டும் நான் சொன்ன விஷயத்த இவர்கிட்ட சொல்லியிருந்தான்னா? இவர் எப்பவோ அக்காவ தேடி வந்திருப்பார். தடிப்பய! கூலிங் கிளாஸ் போட்ட அவன் முகரக் கட்டைய பாத்ததுமே யோசிச்சிருக்கனும்!” எனப் பேசிக் கொண்டே சென்றவள் ஆருஷ் சிரிப்புடனும், ஆதி முறைப்புடனும் அமர்ந்திருப்பதைப் பார்த்து,

“ஏ…ன்? என்னாச்சு”

ஆருஷ் சிரித்தவாறே, “நீ திட்டின அந்த தடிப்பய இவன்தானாம்” என ஆதியைக் கைக் காட்டினான்.

‘கடவுளே கணேசா! உனக்கு சதுர்த்தியானா லட்டு தரேனே! நீ என்னை கொஞ்சமாவது காப்பாத்தக்கூடாதா! இப்படி இவன்கிட்ட மாட்டிக்கிட்டே இருக்கனே’ என மனதோடு மகேசன் மகனிடம் மல்லுகட்டினாள்.

ஆருஷ், “இதெல்லாம் அப்பறம் பேசிக்கோங்க, ஹர்ஷியோட ஹெல்த் இப்போ எப்படி இருக்கு?” என அக்கரையாய் வினவ,

“அது சரியா சொல்ல தெரியல, இன்னமும் அந்த டேப்லெட்ஸ் எடுத்துக்கறா! ஆனா இந்தியா வந்த பிறகு நான் கொடுக்கறதில்ல, ஏன்னா? அந்த டேப்லெட்ஸ் எடுக்கற வரை அவளுக்கு உங்கள ஞாபகம் வராது. அண்ட் அவளுக்கு இப்ப பழசு ஞாபகம் வந்தாலும் அவள் மூளை எப்படி? ரியாக்ட் பண்ணும்னும் தெரியாது, சோ ரிஸ்க் சிச்சுவேஷன்தான்.” என நிலைமையை விளக்கினாள்.

ஆருஷின் வேதனைகளை அப்பட்டமாய் முகம் காட்டியது என்றால், ஆதியோ ‘இவ இவ்வளவுத் தெளிவா பேசறா யோசிக்கறா?’ என ஆச்சர்யமாய் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆதியின் பார்வையைக் கண்டு என்னவென்று கேட்க, அவன் நினைத்ததைக் கேட்டும் விட்டான். அதற்கு அவள் கூறிய பதில்தான் அவள் இந்த விஷயத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறாள் எனக் காட்டியது.

“அக்காக்கு இப்படின்னு தெரிஞ்சதும் நிறைய இது சம்மந்தமான புக்ஸ் தேடிதேடிப் படிச்சேன். நிறைய டாக்டர்ஸ்கிட்ட சஜெஷன் கேட்டேன். அவளுக்கு யாரையும் கஷ்டப்படுத்த தெரியாது. ஆனா அவ கஷ்டப்படும்போது என்னால ஒன்னும் பண்ண முடியலன்னு குற்ற உணர்ச்சி! நான் அவளுக்கு அக்காவா இருந்திருக்கலான்னு ரொம்ப நினைச்சுப்பேன்.” என சாதாரணமாக அவள் சொன்ன பதில் ஆண்களை வியப்படைய வைத்தது.

சாதாரணமாக கூறினாலும் அதன் பின்னிருந்த நேசம், அக்கறை அவளை ஆருஷ் பாசம் பொங்க பார்த்தான் என்றால், ஆதி பொங்கல் வைக்கப் பார்த்தான்! ஆனால் சூழ்நிலை அவனைக் கட்டிப்போட்டது.

“சரி இனி என்ன செய்யலாம்?” ஆதி

“நான் ஹர்ஷியப் பாக்கனும்!” ஆருஷ்

“அப்படினா ஓ.கே. இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம்.” என தர்ஷி கூறினாள்.

ஆருஷிற்கு இந்த நாள் தனக்கு என்ன வைத்திருக்கிறது, ஹர்ஷியின் நிலை இது எதுவும் நினைவில் இல்லை. மனம் முழுதும் ஹர்ஷியைக் காணப் போகிறோம் என்ற நினைவே தித்தித்தது.

ஆதியும் தர்ஷியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். தர்ஷிக்கு ஆதியிடம் பேச வேண்டும். ஆனால் எப்படி ஆரம்பிக்க எனத் தெரியாமல் இவனை திரும்பித்திரும்பிப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.

“எதுக்கு என் மூஞ்ச மூஞ்ச பாக்கற?” என்ற ஆதியின் குரலில், “இல்ல உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்”

காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவள் புறம் திரும்பி அமர்ந்தான், “இப்ப சொல்லு”

“நீங்க எப்படி ஹர்ஷியப் பத்தி தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்க! என்னோட கெஸ் சரின்னா நீங்க ஹர்ஷி, ஆருஷ் மாமாவப் பத்தி தெரிஞ்சேதான் பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க. ”

“வாவ்! ப்ரில்லியண்ட். ஆனா ஒரு சின்ன கரெக்ஷன். பொண்ணு கேட்டது அப்பா அம்மாதான். ஏதோ சொந்தம்னு சொன்னாங்க. அப்பறம் உங்கக்கா போட்டோவ பார்த்தேன். எனக்கும் பிடிச்சது சரின்னு அம்மாட்ட பேச சொன்னேன்.

அப்பதான் ஒருநாள் ஆருஷ்கிட்ட ஒரு வேலை சொல்லி வச்சிருந்தேன். அவன் எனக்கு உடம்பு முடியல வீட்ல தான் இருக்கேன். நீ வா நான் ரெடி பண்ணிட்டேன் வந்து வாங்கிட்டு போன்னு சொன்னான்.

நானும் அவனோட வீட்டுக்கு போனேன். அங்கதான் ஹர்ஷியோட போட்டோ பார்த்தேன். பயங்கர ஷாக்! பையனுக்கு அவ்ளோ லவ்ஸ் ஹர்ஷி மேல, ஒரு பக்க சுவர் அளவுக்கு ஹர்ஷி போட்டோ! ஏதோ டேன்ஸ் ஆடும் போது எடுத்த போட்டோ போல, வித்தியாசமான காஸ்ட்யூம்ல இருந்தது அந்த போட்டோ.

ஹர்ஷிய தெரியாத மாதிரி அவன்கிட்ட விசாரிச்சேன், கதை கதையா சொன்னான். ஆனா நான் அவனோட முகத்ததான் பார்த்திட்டு இருந்தேன். அதுல அவ்ளோ உணர்ச்சிகள். அதிகம் பாத்துக்கல, பேசிக்கல ஆனா ஹர்ஷி அவனோட ஒவ்வொரு அணுவுலயும் கலந்த மாதிரி ஃபீல். அப்பறம் ஹர்ஷி இறந்துட்டதா சொன்னான். எனக்கு குழப்பமா இருந்தது. பேர், உருவம் எல்லாம் ஒண்ணா இருக்கப்போ அது கண்டிப்பா ஹர்ஷியாதான் இருக்கனும்.

ஆருஷும் பொய் சொல்ற மாதிரி இல்ல. அவன் கண்ணுல ஹர்ஷிக்கான பாசம் அப்பட்டமா தெரிஞ்சது. இத்தன வருஷம் கடந்தும் இன்னும் மறக்காம இருக்கறயேன்னு கேட்டேன்! அதுக்கு ஹர்ஷி என்கூடவேதான் இருக்கா, தினமும் அவளோடதான் என்னோட காலை தொடங்குது, இரவு முடியுதுன்னு பேசி என்னை கவுத்திட்டான்.

நான் வந்துட்டேன். அவன்கிட்ட ஒன்னும் ஹர்ஷியப் பத்தி சொல்லல. இத அப்படியே விட மனசில்லாம டிடெக்டிவ்கிட்ட விசாரிக்க சொன்னேன். அவங்கதான் உங்கப்பாவோட விளையாட்ட கண்டுபுடிச்சு சொன்னாங்க! அத உங்க வீட்டுல வேலை செஞ்ச அம்மாவும் உறுதி படுத்த, நான் என்னோட அப்பா அம்மாட்ட சொன்னேன்.

அவங்களுக்கும் ஷாக்! சரி இந்த சம்மந்தம் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு எப்படியாவது ஹர்ஷியப் பாக்கனும், ஆருஷப் பத்தி சொல்லனும்னு தோணிச்சு. நானே ஒரு ப்ளான் பண்ணேன்! அப்பா அம்மாவும் அதுக்கு சம்மதிச்சாங்க.

அங்க உங்க வீட்டுக்கு வந்தோம், பார்த்தோம். அங்க எனக்கு இன்னொரு ஷாக் நீ! உன்னை இங்க ஹாஸ்பிடல்ல பாத்தது, பேசினது எல்லாம் இன்னும் ஞாபகம் இருந்தது.”

இப்போது தர்ஷி முறைக்க “கோபப்படாத இது இவ்ளோ சீரியஸான விஷயம்னு எனக்கு அப்போ தெரியாது. இல்லனா அப்பவே நானே சொல்லியிருப்பேன்”

“அப்ப யாராவது ஹெல்ப் கேட்டா இப்படிதான் பண்ணுவீங்களா! அப்பவே கேட்டேன் முடியுமான்னு. நீங்க சரி சொன்ன பிறகுதான் உங்ககிட்ட சொன்னேன். இல்லனா வேற யார்ட்டயாவது கேட்றுப்பேன்” என எகிற,

“கொஞ்சம் நிறுத்தறியா!” என ஆதி கத்திய பிறகே அமைதியானாள். அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி அமரப் போனவளை தன்புறம் திருப்பி, நானே சொல்லலன்னுதான் சொன்னேன். ஆனா அப்படியே விட்டேன்னு சொன்னேனா. அங்க வேலை பார்த்த ஒரு வார்ட் பாய்கிட்ட சொல்லிட்டுதான் போனேன். அவன் மறந்தானோ என்னவோ? அதுக்கு நான் பலியாடா!” எனக் காட்டமாக கேட்க,

தர்ஷிக்கும் அவனது நிலை புரியவே அமைதியானாள். அவள் அமைதியாகவே, ” சாரி, லண்டன்ல உன்னை பார்த்ததும்தான் இவங்க பிரிஞ்சிருக்கறதுக்கு நானும் ஒரு காரணமோன்னு குற்றவுணர்ச்சியா இருந்தது. இவங்கள எப்படியாவது சேர்த்து வச்சே ஆகனும்னு தோணினது அப்பதான்.

ஆனா ஹர்ஷிக்கும் ஆருஷப் பத்தி ஞாபகம் இல்ல”

இதுவரை அவன் கூறியதைக் கேட்டவள் “நீங்க கேட்டீங்களா ஹர்ஷிகிட்ட” என ஆர்வமாய் வினவினாள்.

“நேரடியா கேக்கல, லைட்டா ஆருஷ்ன்ற பேர் யூஸ் பண்ணேன். ஆனா ஒரு ரியாக்ஷனும் இல்ல. எனக்கு அங்கதான் புரியல. என்னாச்சு! ஒருவேளை ஹர்ஷி லைஃப் லீட் பண்ண முடிவெடுத்துட்டாளான்னு.

குழப்பத்தோடதான் இங்க கூட்டிட்டு வந்தேன். ஏர்போர்ட்லயே ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சிருப்பேன், ஜஸ்ட் மிஸ்!

அன்னைக்கு மால் போனது கூட ஆருஷ மீட் பண்ணத்தான். இதுல நானே எதிர்பாராதது ஹர்ஷி, ஆருஷ் மீட்டிங். ஆனா அப்பவும் ஹர்ஷிக்கு ஞாபகம் வரல. இனியும் லேட் பண்ணகூடாது, ஆருஷ்கிட்ட சொல்லிடனும்னு காலைல அவனுக்கு போன் பண்ணேன். ஆபீஸ் வரச் சொன்னான், வந்தேன் மீட் பண்ணேன் .

பையன் என்மேல செம காண்டுல இருந்தான். ஒருவழியா எனக்கு தெரிஞ்ச அளவுல அவனுக்கு புரிய வச்சேன். ஆனா எங்களுக்கு புரியாதது ஆக்ஸிடன்ட்க்கு அப்பறம் என்ன நடந்திருக்கும், ஹர்ஷிக்கு ஆருஷ எப்படி மறந்தது? இதுதான். அதையும் நீ வந்து புரிய வச்சிட்ட.” எனக் கூறி முடித்தான்.

தர்ஷி புன்னயோடு அவனை ஏறிட, “என்ன அப்படியே பூரிக்கற?”

“இல்ல, நீங்க அவ்ளோ மோசமில்ல, கொஞ்ஞ்ஞ்சமா நல்ல்லவங்கன்னு நினைச்சேன்” என இரு விரல்களை வைத்து அளவு காட்ட,

தானும் புன்னகைத்தவன், “கொஞ்சம்தானா!”

“ம் பரவால்ல, கொஞ்சம் அதிகமாவே” என்று அவனுக்கு நற்சான்றிதழ் அளித்தாள். அந்த உல்லாச மனநிலையோடே வீட்டிற்குச் செல்ல அங்கு அவளது பெற்றோரைப் பார்த்த தர்ஷி அரண்டுதான் போனாள். அவர்கள் நாளை வருவதாகத்தான் இருந்தது.

தர்ஷிதான் அதிர்ச்சியானாளே தவிர, ஆதி இயல்பாகவே அவர்களை வரவேற்றான், “ஹாய் அங்கிள், ஹாய் ஆன்ட்டி எப்போ வந்தீங்க?” என இயல்பாகப் பேசியவாறேச் சென்றான். இவள் தான், “அடப்பாவி என்னமா? நடிக்கறான்” என நினைத்து அவன்பின் சென்றாள்.

இரவு ஏழு மணி. ஆதி இரு சகோதரிகளையும் அந்த ஆடம்பர ஹோட்டலிற்கு அழைத்து வந்திருந்தான்.

தோட்டம் போல பராமரிக்கப்பட்டு, அதன் நடுவில் ஆங்காங்கே டேபிள்கள் போடப்பட்டிருந்தன. மலர்கள் வாசம் பரப்ப, முழுமதி தன் ஒளி முழுவதையும் வாரியிறைத்துக் கொண்டிருந்தது.

சுற்றிலும் இளம் ஜோடிகள் . அன்று ஏதோ சிறப்பு நாள் போலும் அலங்காரங்கள் இந்திர சபையையே தோற்கடிக்கும் வண்ணம் மிளிர்ந்தன.

ஹர்ஷி இளஞ்சிவப்பு நிறத்திலும், தர்ஷி இளமஞ்சள் நிறத்திலும் உடையணிந்திருக்க, ஆதி மஞ்சள் நிற முழுக்கை ஃபார்மல் அணிந்திருந்தான்.

ஹர்ஷிக்கு இந்தச் சூழ்நிலை மிகவும் பிடித்துவிட ரசித்துப் பார்த்தவாறே வந்தாள். மூவரும் ஒரு டேபிளில் சென்று அமர்ந்தனர்.

“ரொம்ப அழகா இருக்குல்ல ஹர்ஷ்”

“ம்…ஃபீலிங் இன் ஹெவன்” என ஹர்ஷி கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தாள் மாலை நேர மலர்களின் சுகந்தமான வாசனை. கூடவே இன்னொரு வாசனையும் அவளை அடைந்தது.

கண்ணை மூடியவாறே என்ன வாசனை அது? என யோசிக்கத் தொடங்கினாள். “தர்ஷ் பூ வாசனையோட வேற எதோ வாசனை வருதே! கேன் யூ ஸ்மெல் தட்.”

“அப்படியா அப்படி ஒன்னும் தெரியலயே!”

“நோ தர்ஷ் எனக்கு பிடிச்ச வாசனை, ஆனா என்னன்னு தெரியல? அதான் யோசிக்கறேன்” கருமணிகள் அங்கும் இங்கும் ஓட மூக்கைச் சுருக்கி விரித்து ஆராய்ந்துப் பார்த்தாள்.

“தெரியல ஹர்ஷ், ஆனா ஐ லைக் தட் ஃப்ராகரன்ஸ்” எனக் கூறியவாறே கண்களைத் திறக்க அருகில் இவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான் ஆருஷ்.

அவனைக் கண்டதும் ஆச்சர்யத்தில் கண்ணோடு சேர்ந்து முகமெல்லாம் சிரித்தது. ஆனால் அடுத்த நொடி அது மாயையோ? என்னும் அளவிற்கு அமைதியானது. ‘என்ன ஹர்ஷி எதற்காக இவனைக் கண்டு இப்படி மகிழ்ச்சி கொள்கிறாய்! உனக்கானவனாக இருக்கும் ஆதியைப் பார்க்கும் போது வராத சந்தோஷம் நேற்று பார்த்த இவனிடம் தோன்றிவிட்டதா?’ என்ற கேள்வி அவள் மனதில் தோன்றியவுடன் ‘ஆமாம்!’ என்ற விடை உடனே வந்தது. ஆனால் ஏன்? என்ற கேள்விக்கான விடையை தேட அவள் விரும்பவில்லை. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டு அமைதியானாள்.

மூவரும் ஹர்ஷியைத்தான் காணாமல் கண்டு கொண்டிருந்தனர். தர்ஷி சாதாரணமாக காட்டிக் கொண்டு, “ஹாய் ஆருஷ்” எனப் புன்னகைக்க, “ஹாய்” என்றான்.

அவளிடம் பேசினாலும் வெகு அருகில் அமர்ந்திருக்கும் ஹர்ஷியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அன்றைக்கும் இன்றைக்கும் பல வித்தியாசங்கள். அன்று படிய வாரிய கூந்தல், இன்றோ சுருள் சுருளாய் தோகை போல துள்ளி ஆடியது. ஒட்டிய கன்னங்கள் இன்று கொஞ்சம் சதை போட்டு புசுபுசுவென்று இருந்தது. தொட்டு அதன் மென்மையை பரிசோதிக்க நினைத்த கைகளை அடக்க மிகவும் சிரமப்பட்டான் ஆருஷ்.

ஆனால் அன்று நேசத்தோடு பார்க்கும் அவள் பார்வையை ஆவலாக எதிர்பார்த்தவனுக்கு இந்த குழப்பமான பார்வை வேதனையைத் தந்தது.

இவனது எண்ண ஓட்டத்தைத் தடை செய்தது ஆதியின் குரல், “ஹர்ஷி இது ஆருஷ் என்னோட ஃப்ரண்ட், அன்னைக்கு மால்ல பார்த்தோமே!” என அறிமுகப்படுத்த,

“ஹாய்” எனக் கூறியவள், கட்டுப்படுத்த முடியாமல் கனவில் அவன் கண்களில் பார்த்த நேசத்தை நேரில் தேடினாள். அவனும் அதே நேசப் பார்வையைப் பார்த்து வைக்க இவளும் அவனைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

எவ்வளவு நேரமோ! “ஹலோ லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்ஸ், வெல்கம் யூ ஆல், டூ தி பியூட்டிஃபுல் ஈவ்னிங்!” என்ற குரல் கலைத்தது.

அப்போதுதான் ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’ என உணர்ந்தவள், இரண்டு நாளில் நிச்சயம் செய்யப் போகிறவன் அருகில் இருக்க யாரோ ஒருவனை கண்ணெடுக்காமல் பார்க்கிறோமே! தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான்? எனக் கூனிக் குறுகி போனாள்.

‘ச்சே நான் ஏன்? இப்படி நடந்துக்கறேன். இதுவரை கட்டிக்கப் போற ஆதிய கூட இப்படி பாத்ததில்லையே! என்ன ஆச்சு எனக்கு, ஹையோ ஆதி இதப் பார்த்திருந்தா ‘ என அதிர்ந்தவள் ஆதியைப் பார்க்க, அவன் மைக்கில் பேசும் நபரை பார்த்துக் கொண்டிருந்தான். தர்ஷியும் இவளைக் கண்டதாகவே தெரியவில்லை. இப்போதுதான் இவளுக்கு மூச்சே வந்தது.

ஆருஷ் சிறிது நேரம் அவள் பார்வையில் நனைந்தவன் அவளது முகத்திருப்பலில் வறண்டுதான் போனான். என்னதான் ஹர்ஷிக்கு நினைவில்லை என்று அறிந்தாலும் ‘என்னைப் பார்த்ததற்காகவா இத்தனை பதற்றம்?, அடி முட்டாள் பெண்ணே என்னைக் கண்ணெடுக்காமல் கண்டவளடி நீ!’ எனக் கவிதைப் பேசியது மனது.

“முழு நிலவு நாளான இன்று ஒரு சின்னக் கொண்டாட்டத்தை எங்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரொமான்டிக் மூன் லைட் டின்னர்! இப்போது இசை இசைக்கப்படும், டேன்ஸில் ஜோடியாக கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஜோடியுடன் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.” என்ற நபர் அங்கிருந்த் டி.ஜே. வைப் பார்க்க, அவர் மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தார்.

இதில் பல இளம்ஜோடிகள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். ஆருஷ் ஹர்ஷியையே பார்த்திருக்க, ஹர்ஷிதான் ‘அவனைப் பாக்காத ஹர்ஷி பாக்காத!’ என உருப்போட்டபடி கைகளைப் பிசைந்தவாறு தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

இவர்களைப் பார்த்து ‘ இதுங்க தேறாதுங்க’, என நினைத்த ஆதி, “ஹேய் தர்ஷி ஷல் வீ?” எனக் கை நீட்ட, அவனை முறைத்தவளை அவர்களைப் பார் எனச் சைகை காட்டினான்.

அவனது எண்ணம் புரிந்தவள், “ய்யா ஷ்யூர்” என அவன் கைப்பற்றினாள். “ஆருஷ் நீயும் வா” என அழைக்க, அவன் ஹர்ஷியைப் பார்த்தான். அவள் எங்கே இவனைக் பார்த்தாள். அவனது எண்ணத்தைப் படித்தவன் போல, “ஹர்ஷி நீயும் வா, ஆருஷ் உனக்கு கை கொடுப்பான்! என்ன ஆருஷ்” என இவனையும் இழுக்க, “நோ ஆதி யூ கைஸ் மூவ் ஆன், நான் வரல” எனக் கூறினாள்.

“ம்ச், வா ஹர்ஷ் லெட்ஸ் என்ஜாய்! நீதான் நல்லா டேன்ஸ் ஆடுவயே!”

டேன்ஸ் என்றதும் ஆருஷோடு கனவில் ஆடிய நடனமே கண்முன் வந்தது. ஒரு நொடி ஏக்கத்தோடு அவனைத் தழுவிய அவள் விழிகள் மறுநொடி குடையாய் கவிழ்ந்தது, “நோ தர்ஷ் என்னை விட்டுடேன்” என எழும்பாத குரலில் கூற, “டோன்ட் ஃபோர்ஸ் ஹெர்” என ஆரூஷ் அவளுக்கு ஆதரவாக கூறினான்.

ஆதி ‘ஏன்டா’ என முறைக்க இவனோ ‘ப்ளீஸ்” என முகம் சுருக்கினான் எப்படியோ போய்த் தொலை பாவனைக் காட்டியவன் தர்ஷியைப் பார்த்து “வாவ் நம்ம ட்ரெஸ் கூட சேம் யா” என சிலாகித்தவாறே அவளை அழைத்துச் சென்றான். “என்ன இவங்க இப்படி இருந்தா எப்படி!” என ஆதங்கப்பட்டவளை “பாத்துக்கலாம் வா” என அழைத்துச் சென்றான்.

அங்கு பல ஜோடிகள் மெல்ல அசைந்தும், பாடலுக்கு ஏற்பவும் ஆடிக் கொண்டிருந்தனர். ஆதி, தர்ஷியும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

அடுத்தடுத்த ரொமான்டிக் பாடல்களில் இளமைத் ததும்ப ஒரு ஆடல் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கே இருந்த இரண்டு உள்ளங்களோ ஒன்றை ஒன்று சேர இயலாத் தவிப்புடன் அமர்ந்திருந்தது.

ஆம்! ஹர்ஷிக்கு எப்போது கனவில் ஆருஷின் முகம் தோன்றியதோ அப்போதே அவன் பால் மனது சாய்ந்து விட்டது. ஆனால் ஆதியைக் கொண்டு அதை மறைக்கவே அவளும் போராடி வருகிறாள். ஆதியைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு இன்னொருவரை விரும்புவது என்பது தகாத செயலாக எண்ணியே இத்தனை தவிப்பு. இவனை இனிப் பார்க்கக் கூடாது என நினைக்க இன்றே இவனைக் காண வைத்த விதியை எண்ணிச் சபித்தாள்.

அப்போது காற்றில் மிதத்து வந்த அந்த பாடலைக் கேட்ட ஹர்ஷி சட்டெனத் திரும்பி ஆருஷைப் பார்த்தாள். கனவில் வந்த அதே பாடல் அவனோ இந்தப் பாடலைக் கேட்டதும் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

விழிகள் ஒன்றை ஒன்றுத் தழுவ, கைகளோ தாங்கள் இணையும் தருணத்திற்காகக் காத்திருந்தது. அன்று அவளுடன் ஆடிய ஞாபகம் அவனைத் தாக்க கை தானாக அவளை நோக்கி நீண்டது.

‘வேண்டாம்’ என மறுக்க நினைத்தவள், அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்றில் ஈர்க்கப் பட்டு தன் கையை இணைத்தாள்.

அதில் பேருவகை அடைந்தவன் அவளுடன் ஆடல் மையத்திற்கு வந்தான். அனைவரும் அவர்கள் போக்கில் ஆடிக் கொண்டிருக்க, முழு நிலவு அனைத்தையும் ரசனையோடு பார்த்திருந்தது.

ஆதியைப் பற்றி நினைக்கும் போது வராத படபடப்பு, தொடும் போது வராத குறுகுறுப்பு இவனிடம் வருகிறதே! நான் என்ன செய்ய?

ஒரு கை அவன் தோள் மேல் வைக்க மறு கை அவன் கையோடு சேர்ந்தது. ஆருஷ் ஒரு கை அவள் கையைப் பற்றியிருக்க, மறு கையால் இடைவளைத்து மெல்ல அவளை அருகிழுத்தான்.

அவன் மூச்சு இவள் வதனத்தை தொட்டுச் செல்லும் தூரம். அப்போதுதான் அந்த வாசனையை உணர்ந்தாள். அதே வாசனை! இவனிடமிருந்தா வருகிறது . இவன் வாசனை எனக்கு ஏன்? பரிச்சயமானதாக தோன்றுகிறது! என நினைத்தது.

ஆனால் அத்தனைக் குழப்பத்திலும் அவனது அருகாமையில் மத்தாப்பூவாய் அவள் பெண்மை படபடவென்று பூத்துக் கொண்டிருந்தது உண்மை.

ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன் எரியும் தீயை நான் என்னில் கண்டேன்

அவளை ஒரு சுழற்று சுழற்றி கண்களைப் பார்த்தவாறு அவன் காதல் கொண்ட தருணத்தை பாடினான்.

உயிரின் உயிராய் உன்னைக் கண்டேன் என்னை அள்ளி உன் கையில் தந்தேன்

என் உயிரின் திறவுகோலாய் உன்னைக் கண்டேன், அதனால் என்னை உன்னிடமே தந்து விட்டேன், என அவளும் கனவில் அவனைக் கண்டதிலிருந்து தடுமாறிய மனதை அவனிடம் மறைமுகமாக கூறினாள்.

காதல் கொண்டு கண்கள் கெஞ்ச, அடி கைமீறி உயிரோடுதே

நம் காதலைக் காப்பாற்றச் சொல்லி கெஞ்சும் கண்களை விட என் உயிர் என்னை விட்டு வேகமாக ஓடுகிறதடி பெண்ணே! என தனது நிலையைப் பாட்டாய்க் கூறினான்.

திடீரென மாயாஜாலம் நடந்ததைப் போல விதி தன் மந்திரக் கோலை சுற்றிய நிமிடங்கள் அவை. கனவென்றால் அது தனக்கு மட்டும்தானே தோன்றும். ஆனால் அதில் ஆடிய நடன அசைவுகளை அச்சுப் பிசகாமல் இவனும் ஆடுகிறானே! என அதிர்ந்தாள் ஹர்ஷி.

அப்படியென்றால் அது கனவு மட்டும் இல்லையா! என யோசிக்க யோசிக்க மண்டை தெறித்துவிடும் அளவுக்கு வலித்தது.

முழுதாய் நிலவு நம்மைப் பார்க்க காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க வெட்கம் தாண்டி நான் என்னைத் தோற்க

ஆம் முழு நிலவு மாயம்தான் செய்தது. கைகள் நான்கும் கோர்த்து அவனின் வெப்பம் இவளையும் தாக்க, இன்னொருவனை மணக்க இருக்கும் இவ்வேளையிலும் வெட்கமில்லாமல் உன்னில் கரைகிறேனே! என அவள் கண்களில் நீர் வழிந்தது.

மரணம் தாண்டி வாழும் காதல் உன் விழியோடு நான் காண்கிறேன்.

மரணித்த பின்னாலும் வாழும் காதலை இப்போது உன் விழிகளில் காண்கிறேனடி! என உள்ளம் உருகினான் ஆருஷ். இந்த உருகல், காதல் நான் பார்த்திருக்கிறேனே! எங்கே? எங்கே? கண்கள் அலைபாய்ந்தது நினைவுகள் பின்னோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து ஆருஷின் நினைவுகளை மீட்டெடுத்தன. தலைக்குள் சுர்ரென்ற வலி பலமாய்த் தாக்க கண்களை மூடி சமாளித்தவள் மீண்ட நினைவுகளோடு கண் திறக்க கலங்கிய கண்களில் மங்கலாய் ஆருஷின் உருவம் இவளை பதற்றத்துடன் நோக்கியது. அவனேதானா! அவன்தான்! இப்போது அனைத்தும் மறந்து அவளும் ஆருஷும் மட்டும் தெரிய, பாடல் அதன்போக்கில் இசைத்துக் கொண்டிருந்தது.

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி

நீராவியாய் என்னை நீ மோதினாய் அன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்

நீ தொடத்தொட நானும் பூவாய் மலர்ந்தேன் நான் என் பெண்மையின் வாசம் அறிந்தேன்

நீ அருகில் வரவர ஆவல் அறிந்தேன் நான் என் ஆண்மையின் காபல் துறந்தேன்

முன் ஜூன்மம் எல்லாம் பொய்யென்று நினைத்தேன உன் கண்ணைப் பார்த்தேன் மெய்தானடா

உருவங்கள் எல்லாம் உடல் விட்டுப்போகும் உள்ளத்தின் காதல் சாகாதடி

ஆதியும், தர்ஷியும் இவர்களின் நடனத்தைப் பார்த்து அசந்து நின்றுவிட்டனர். அத்தனை காதல் வழிந்தது இருவர் கண்ணிலும். ஆருஷ் சரி! ஆனால் ஹர்ஷி?

காதல், பிரிவு, மீண்ட நினைவுகளுடன் இத்தனை வருடங்கள் கழிந்து ஆருஷை சந்தித்தது என அனைத்தும் சேர்ந்து ஹர்ஷி கண்களில் நீராய் வழிய ‘ஆருஷ்! என்னோட ஆருஷ், எனக்கு ஞாபகம் வந்துடுச்சு ஆருஷ்’ எனக் கூற நினைத்தவள் அதீத மகிழ்ச்சி, அதிக அழுத்தம் இவற்றைத் தாங்க முடியாமல் ஆ…ரூரூரூஷ் என முனகியவாறே ஆருஷின் கைகளில் மயங்கிச் சரிந்தாள்.

error: Content is protected !!