7
அன்று ஆண்டு விழாவில் கண்டவள்தான் அதன் பிறகு ஆருஷை காண முடியவில்லை. தேர்வுகள் முடிந்து விடுமுறை வரையிலும் கூட காண முடியவில்லை.
முதலில் சாதாரணமாக நினைத்தவள். பிறகுதான் தன்னைத் தவிர்க்கிறானோ! என சந்தேகம் கொண்டாள். தவிர்க்கும் அளவிற்கு,என்ன செய்தேன் நான்? அவனை தொந்தரவு கூட செய்ததில்லையே!
அருகில் சென்று பேசினால்தான் தொந்தரவா? அதைவிட இவளது தூரத்து இமைக்கா பார்வை தினமும் அவனை தூங்கவிடுவதில்லை என்பதை அறிவாளா?
அன்று அவளின் நடனம் முடிந்து விடுதிக்கு வந்தவன் மிகுந்த சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான். ஏனென்றால் இப்போதே உன் மனதைச் சொல் எனக் கட்டளையிடும் மூளையைத் திசைத் திருப்பப் பட்ட பாடு அப்படி.
மெல்ல மெல்ல அவனே அறியாமல் அவனை ஆண்டு கொண்டிருந்தாள் ஹர்ஷி. வெறும் பார்வைக்கே இப்படியா…! வேண்டாம் ஆருஷ் அவளை நினையாதே…. உன் நிலையை யோசித்துப் பார் என, “கொக்குக்கு ஒன்றே மதி” என்பதைப் போல சீரிக் கொண்டிருந்த மூளையை தட்டித் தள்ளி வேறு பக்கம் திருப்பி விட்டான். மீண்டும் அவளைப் பார்க்க கூடாது என, பார்க்கக்கூடிய அனைத்து வாய்ப்பையும் அடைத்தான்.
ஒரு வழியாக விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி ஆரம்பித்தது. இப்போதும் அவனைக் காண முடியவில்லை. ஒரு சோர்வு, ஆதங்கம் இதெல்லாம் மறைந்து கோபம் தொற்றிக் கொண்டது ஹர்ஷிக்கு.
ஒரே கேம்பஸில் இருந்து கண்ணாமூச்சி ஆடுபவனை என்ன செய்வது. இவளும் தள்ளி நின்றாள். ஆனால் விதி மீண்டும் சந்திக்க வைத்தது.
இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கும், இன்னொரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஆனது. அதில் ஆருஷின் வகுப்பு மாணவர்கள் மற்றொரு கல்லூரி மாணவனை ரத்தம் வருமளவு தாக்கி விட்டனர்.
பெரும் கலவரம் நடக்க வேண்டியது ஆனால் இரு கல்லூரி முதல்வர்களும் மாணவர்களை அழைத்துப் பேசி தவறு செய்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்தும் மற்றவர்களை கண்டித்தும் அனுப்பினர்.
இதனால் இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறை வேறு விடப்பட்டிருந்தது. மீண்டும் கல்லூரி தொடங்கி எவ்வித சலசலப்பும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
நான்காம் ஆண்டு மாணவர்கள் இது அவர்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம். “அரியர் இல்லாதவன் அர மனுசன்” என்ற கொள்கைகளோடு அரியரை வைத்திருந்தவர்கள் மொத்தமாக எழுதிமுடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓரளவு படிப்பில் கவனம் செலுத்தும் வருடமது.
ஆருஷ் இன்னும் படிப்பில் கவனம் செலுத்தினான். அவளின் நினைவு எழாமல் இல்லை. இருந்தாலும் படிப்பின் மீது இருந்த அதிக கவனத்தால் இவனால் நிம்மதியாக படிக்க முடிந்தது.
அன்று காலையில் வழக்கம் போல வகுப்புகள் தொடங்கின. ஷர்ஷிக்கு ஒன்றிலும் பிடிப்பில்லை. அவனைத் தேடிச் செல் என்று ஒரு மனமும், வேண்டாம் அவனைத் தொந்தரவு செய்யாதே என்று இன்னொரு மனமும் இம்சை செய்து கொண்டிருந்ததால் அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அவளின் தோழிகள் கூட பலவாறு கிண்டல் செய்தும் பார்த்து விட்டனர். ஆனால் அதற்கும் பிரதிபலிப்பில்லை. அந்தப் பாடவேளை ஆசிரியர் அன்று விடுமுறை ஆதலால் ஒன்றிரண்டு பேர் தவிர மீதி மாணவர்கள் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஹர்ஷி டெஸ்கில் தலை சாய்ந்தவாறு கண்மூடி அமர்ந்திருந்தாள். அதைக் கண்ட வகுப்புத் தோழி ஒருத்தி அவளை சீண்டும் நோக்குடன் அங்கிருந்த இன்னொரு மாணவியை அழைத்து,
“ஹேய் ப்ரீத்தி உனக்கு விஷயம் தெரியுமா? கொஞ்ச நாளைக்கு முன்ன நம்ம காலேஜ்க்கும் இன்னொரு காலேஜ்க்கும் நடுவுல பிரச்சனை வந்ததே…”
“ஆமாம், அதுல கூட நம்ம சீனியர்ஸ் ஆப்போசிட் காலேஜ் பையன அடிச்சு ஆஸ்பத்திரில படுக்க வச்சாங்களே?”
“ம்..ஆமா, ஆனா பிரச்சனை அதோட முடியல போல இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க வந்து நம்ம சீனியர்ஸ போட்டு அடிக்க, அதுல நடுவுல வந்த ஆருஷ் சீனியர போட்டு அடிச்சுட்டானுங்க.. தலைல பயங்கர அடி அவங்க க்ளாஸ்ரூம் பூரா ரத்தமாம் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகப் போறாங்களாம் இப்பதான் பசங்க வந்து சொன்னாங்க” என ஹர்ஷியைய் பார்த்தவாறே கூறி முடித்தாள்.
நல்ல நினைவோடு இருக்கும் சிறு குழந்தைக் கூட நம்பாது இவளின் கூற்றை. ஆனால் ஹர்ஷிதான் ஆருஷ் நினைவாகவே இருந்தாளே! அப்பெண் கூறி முடித்தவுடன் ஹர்ஷி அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தாள்.
அப்படி ஒரு ஓட்டம்… கதை கூறிய அப்பெண்ணே திகைத்து விட்டாள். இவள் இப்படி ஓடியதும். அவளும் பின்னாடியே ஓட உள்ளிருந்த மற்றொரு மாணவி தலையில் அடித்துக் கொண்டு அவளும் பின்னே ஓடினாள்.
ஹர்ஷி, அவளின் நினைவு முழுதும் ஆருஷைப் பார்க்க வேண்டும் என்பதே…. அரக்கப் பறக்க ஓடியவள் ஆருஷின் வகுப்பறையின் முன் சென்றுதான் நின்றாள்.
மேலும் கீழும் மூச்சு வாங்க சுவற்றில் சாய்ந்தவாறு குனிந்து நின்றவள், அவ்வாறே வகுப்பறையினுள் தன் தேடலைத் தொடங்க ஆருஷ் எப்போதும் போல அமைதியாய் அமர்ந்து ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும்தான் சற்று ஆசுவாசமானாள்.
ஹர்ஷி வந்ததைக் கூட கவனிக்கவில்லை அவன். அவனருகில் அமர்ந்திருக்கும் மாணவன் இவனின் தோள் தட்டி அவளைக் கைகாட்ட, பார்த்து விட்டான்…!
வெகுநாள்…இல்லை இல்லை மாதங்கள் கழித்து இன்றுதான் காண்கிறான் அவளை. செத்தொழிந்த செல்களும், ஹார்மோன்களும் மீண்டும் உயிர்ப் பெறத் தொடங்கியது.
எப்படிச் சொல்ல! வெகுநாள் கழித்து தாயைப் பார்க்கும் குழந்தையைப் போல் குதூகளித்தது உள்ளம்… ஆனால் அழகாய்ப் பிரகாசிக்கும் அகச்சூரியனை பாதி மறைத்தும் மறைக்காத மேகமாய் முகம்…!
ஹர்ஷி வந்துவிட்டாள்தான் அவனிற்கு ஒன்றென்றதும்…யோசிக்கவில்லை… இங்கும் அவனின் பத்திரம் கண்டவள் மனமெங்கும் அவன் மேலான ஈர்ப்பு, அதைக் கொண்டு உருவான எதிர்பார்ப்பு, அது கொடுத்த ஏமாற்றம், அந்த ஏமாற்றத்தால் அவன் மேல் உண்டான கோபம், அவனிற்கு ஒன்றென்றதும் அந்த கோபத்தை மீறி வெளிவந்த நேசம், அந்த நேசத்தால் தான் இங்கு வந்திருக்கும் முட்டாள்தனம் , அந்த முட்டாள்தனத்தால் கண்ணெனும் வைகையில் உருவான வெள்ளம் அவள் இமையெனும் கரையுடைத்து கன்னங்களில் பாய்ந்தது.
அதுவரை பார்த்திருந்தவன் இவளின் கண்களில் நீரைக் கண்டதும் தானாக ஆருஷின் கால்கள் அவளை நோக்கி எட்டி நடைபோட்டது. என்னவாயிற்று இவளுக்கு ஏதேனும் பிரச்சனையா என்று….!
ஆருஷ் தன்னை நோக்கி வருவது அறிந்து திகைத்தவள் சட்டெனத் திரும்பிச் செல்ல முனைய, அவள் முன் நின்றாள் ஆருஷைப் பற்றிக் கூறிய அவள் வகுப்புப் பெண். அவள் பின்னால் இன்னொரு பெண்ணும்.
ஆருஷ் அவளருகே சென்று, “என்னாச்சு” என அந்தப் பெண்களையும் இவளையும் மாறி மாறி பார்த்துக் கேட்க, வகுப்பே இவர்களைத்தான் பார்த்தது. அவளது கண்ணீர் இவனை வெகுவாய் அசைத்துப் பார்த்தது என்னவோ உண்மை.
“அய்யயோ! இவ இப்படி வருவான்னு நான் என்னத்த கண்டேன்…சீனியர் வேற கேக்கறாங்க என்ன சொல்றது” என மற்ற இரு பெண்கள் கையைப் பிசைந்தபடி நின்றிருந்தனர். கண்கள் இரண்டும் கோபத்தில் சிவக்க உக்கார தேவியாய் நின்ற ஹர்ஷியைப் பார்க்கவே அவர்களுக்கு பயமாய் இருந்தது.
ஹர்ஷிக்கு கண்மண் தெரியாத கோபம் ‘என்ன கூறி விட்டாள்! இவனைக் காணும் வரை என் உயிர் என்னிடமில்லை என்பதை அறிவாளா? என் நேசம் என்ன இவர்களுக்கு விளையாட்டா’ என நினைத்தவள்
“சாரி ஹர்ஷி…நா…” என ஏதோ கூற வந்த பெண்ணவளை சப்பென்று அறைந்தாள். இடி போல அடி. அடித்த இவளே அதன் வீச்சு தாங்காமல் கைகளை உதறிக் கொண்டு, “இன்னொரு தடவ யாரக்கிட்டயாவது இப்படி விளையாண்ட” என ஒரு விரலை நீட்டி மெல்லிய குரலில் அடித்தொண்டையிலிருந்து கூறியவள் விடுவிடுவென சென்று விட்டாள்.
ஆருஷிற்கோ எதுவும் புரியவில்லை. ஏன் வந்தாள், இவனைப் பார்த்தாள், இந்தப் பெண்ணை ஏன் அடித்தாள் இப்படி எதுவும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இதில் நான் சம்மந்தப் பட்டிருக்கிறேன்.
வகுப்பறையினுள் இருந்த நண்பர்களும் வாசலுக்கு வந்திருக்க, என்னவாயிற்று என கேட்டனர். அடிவாங்கிய மாணவிக்கோ இவங்ககிட்ட சொன்னா மறுபடியும் அடிப்பாங்களோ! என்று பயம் வர ஆரம்பித்தது.
அவர்கள் மேலும் மேலும் கேட்கவும் ஒரு வழியாக நடந்ததைக் கூறிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டி விட்டனர். இதைக் கேட்டதும் ஆருஷிற்கு எபபடி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் தொண்டையிலிருந்து அடிவயிறு வரை ஏதோஒன்று சில்லென்று வழுக்கிச் சென்றது.
அப்படியே நின்றவனை நண்பர்கள் உலுக்க சுயநினைவடைந்தவன் உடனே ஹர்ஷியை பார்க்க வேண்டும் என்ற எண்ணத் தூண்டுதலில் வேகமாக அவளது வகுப்பறையை நோக்கி ஓடினான். ஆனால் அவள் அங்கே இல்லை.
“ச்சே எங்க போயிருப்பா” என தவிப்புடன் தலையைக் கோதிக் கொண்டவன் அவளைத் தேடத் தொடங்கினான்.
ஆம் தவிப்புதான்! இத்தனை மாதங்களாய் இல்லாத தவிப்பு இந்த இரண்டு நிமிடத்தில் புயலாய் மாறி அவனை சுழன்றடித்தது. இனியும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என கட்டவிழ்த்து விட்டான். அது நேரடியாக அவள் முன் சென்றுதான் நின்றது.
ஹர்ஷிக்கு அப்படி ஒரு ஆத்திரம். இதுநாள் வரை என்னுடைய காதல் எனக்கு போதும் என்று இருந்தவளால் இப்போது அப்படி எண்ண முடியவில்லை. வேண்டும்…! அவனுடைய நேசமும் பாசமும் ஆறுதலும் எனக்கு வேண்டும் வேண்டும் என மனம் அடம்பிடித்தது.
அவர்கள் காலேஜ் மொட்டைமாடி. அங்கிருந்த கைப்பிடிச்சுவரை பிடித்தவாறு தொடுவானை பார்த்திருந்தாள். பல நிமிடங்களாய் தேடியவன் இறுதியில் அவளைக் கண்டு தானும் மூச்சு வாங்கியவனாய், அவளருகில் வந்து அதே கைப்பிடி சுவரின் மீது சாய்ந்து அவளுக்கு முகம் காட்டி, கைக்கட்டி நின்றான்.
கார்க்கால மேகக்கட்டங்கள் ஹர்ஷியைப் போல் எந்நேரமும் மழை பொழிய தயாராக நின்றன. அவன் வந்ததை அறிந்தும் ஹர்ஷியும் கண்டுகொள்ளவில்லை. எனினும் அவன் தன்னை சமாதானப் படுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டாள். ஆனால் வந்தவன் அமைதியாக நிற்கவே, இன்னும் என்ன…. என்று சலிப்பு தோன்ற ஆரப்பித்தது.
ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் இன்று செய்கையின் மூலம் இவன் மேலான நேசத்தை உறுதிப் படுத்திவிட்டு வந்திருக்கிறேன். இவன் என்னடாவென்றால் அமைதியாக நிற்கிறானே! அப்படியானால் இவனுக்கு என்மேல் நேசமில்லையா என நினைக்க நினைக்க அழுகையாய் வந்தது.
ஆனால் அவன்முன் அழ விருப்பப்படாமல் அவன் முகத்தை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தவள், பின் விலகிச் செல்ல எத்தனித்தாள். ஆனால் செல்லத்தான் முடியவில்லை. அவளது கை அவனது கைக்குள் சிக்குண்டிருந்தது.
“ரொம்ப பயந்துட்டயா!” நெருக்கத்தில் அவன் குரல்.
ஆமாமென்று கூறி அவன் தோள் சாய ஆவல் வந்தாலும் இத்தனை நாள் தவிக்கவிட்டானே என்ற வீம்பும் சேர்ந்ததில் இவனுக்கு முதுகு காட்டியபடி அமைதியாய் நின்றிருந்தாள்.
“ஹர்ஷி” முதல்முறையாய் அவள் பெயர் அவனிதழில். செல்கள் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது இருவருக்கும். இருந்தாலும் பிடிவாதமாய் நின்றிருந்தாள்.
“என்னைப் பாரு ஹர்ஷி…. இப்படி என்கிட்ட முகத்த திருப்பாத”
சட்டென்று திரும்பியவள் ‘நீ என்கிட்ட அப்படித்தான் நடந்துக்கறியா’ என்பதைப் போல பார்த்தாள். அவள் விழி மொழியைப் படித்தவன் போல, ” என்ன? உன்னைப் பார்க்காம இருந்திருக்கேன். ஆனா பார்த்ததுக்கு அப்பறம் முகம் திருப்பிருக்கேனா” என நியாயம் பேசினான்.
உண்மைதானே! முதல் முதலாய் பார்த்த பொழுதே முகம் திருப்பியதில்லையே இவன். ஆனாலும் அமைதியாய் நின்றிருந்தாள்.
அவள் முன் வந்து நின்றவன், “ஷர்ஷி” என ஆழ்ந்த குரலில் அழைத்தான், கண்கள் கலங்க அவனை ஏறிட்டவளை கண்டு, அவள் கண்களை துடைத்தவாறே பேசத் தொடங்கினான்.
“என்னோட அப்பாக்கு பிஸினஸ்ல லாஸ். அதனால அவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு. அவர் பின்னாடியே அம்மாவும்…”என்றவன் கலங்கத் தொடங்கிய கண்களையும் கரகரத்த தொண்டையையும் கட்டுப்படுத்தியவாறே,
“ரொம்பவும் கஷ்டப்பட்டேன் அப்ப…. ஸ்கூல் போற பையன். எல்லாத்துக்கும் அம்மா வேணும். சின்ன வயசுல இருந்தே பழகியிருந்தா எப்படியோ…ஆனா திடீர்னு ஏற்பட்ட இழப்பால காசுக்கும் ரொம்ப கஷ்டம். சாப்பாட்டுக்கே மாமாதான் பாத்துக்கிட்டாங்க….
ஸ்கூல் முடிச்சாச்சு காலேஜ் சேரனும் …நல்ல மார்க்ஸ் இருந்தது ஆனா கைல காசு இல்ல…மெரிட்ல சீட் கிடைச்சாலும் மத்த செலவுக்கு என்ன பண்ண…மாமாகிட்டயும் கேக்க தோணல, அப்பதான் ஒரு ட்ரஸ்ட் மூலமா உதவி கிடைச்சு இந்த காலேஜ் சேர்ந்தேன்.
நல்லா படிக்கனும் அது மட்டும்தான் என் மனசுல, வேற எதையும் நினைச்சதில்ல உன்ன பாக்கற வரை…” என்று நிறுத்தினான்
அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள், “என்னைக்கு உன்னை க்ரௌணட்ல பாத்தேனோ அன்னைல இருந்து நீயும் என்னோட வட்டத்துல வந்துட்ட, ஆனா கிட்ட வரல. எனக்கும் அது நிம்மதியா இருந்தது. ஆனா அது உன்னோட டேன்ஸ் பாக்கற வரைதான்”என்றவன் விரிந்த அவள் விழிகளை சிரிப்புடன் பார்த்தவாறு
“அதுவரைக்கும் நீ கிட்ட வரலன்னு நிம்மதியா இருந்தேன்…ஆனா அன்னைக்குதான் தெரிஞ்சது என்னை உன்கிட்ட இழுத்திட்ட நீ. உனக்கும் எனக்கும் இடைவெளியே இல்லன்னு அப்பதான் புரிஞ்சது. மூச்சு முட்டுச்சு எனக்கு இடைவெளி தேவைப்பட்டது உன்கிட்டயிருந்து, உன்னோட எண்ணங்கள்கிட்ட இருந்து. என்னை நிரூபிக்கனும், என்னை படிக்க வைக்கற முகம் தெரியாத மனுசன நினைச்சு என்னை நானே கட்டுப்படுத்திக் கிட்டேன். அதான் இந்த விலகல்… ஆனா அதுவும் உன்னோட ஒரு பார்வை, துளி கண்ணீர்ல காணாம போயிடுச்சு. இப்ப சொல்லு நான் என்ன பண்ண” என தன் நிலையை மொத்தமாக விளக்கினான்.
அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவள், தான் கேட்ட ஒரு கேள்வியில் அவனில் முழுவதுமாய் நிறைந்திருந்தாள்