Katre-11

Katre-11

காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த கவிகிருஷ்ணா வீடு முழுவதும் அதிர்ந்து ஒலித்த சிரிப்பு சத்தத்தில் திடுக்கிட்டு போய் அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்.

நிமிர்ந்து பார்த்தவனது விழிகளுக்கு தன் அன்னை மற்றும் தங்கை, தம்பியோடு சிரித்துப் பேசி கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் பின்புறத் தோற்றமே தென்பட்டது.

பேசிக் கொண்டே யதேச்சையாக வாசல் புறமாக திரும்பிய வேதவல்லி அங்கே நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் புன்னகத்து கொண்டே
“என்ன கண்ணா அங்கே நிற்குற? உள்ளே வா” எனவும் மற்றைய மூவரும் கவிகிருஷ்ணா புறமாக திரும்பினர்.

தன் தங்கையின் அருகில் சந்தன நிற காட்டன் சுடிதாரில் எவ்வித ஒப்பனையுமின்றி எல்லா வித ஒப்பனையையும் மிஞ்சும் புன்னகையோடு நின்ற அந்த புதியவளைப் பார்த்து கொண்டே நடந்து வந்தவன் தன் அன்னையின் அருகில் சென்று நின்றான்.

“அண்ணா இது யாருனு தெரியுதா?” காயத்ரியின் கேள்விக்கு இல்லை என்று தலை அசைத்தவன்

வேதவல்லியின் காதில் மெதுவாக
“யாரும்மா இது உங்களுக்கு தெரிந்த பொண்ணா?” என்று கேட்டான்.

“உண்மையாகவே உனக்கு அடையாளம் தெரியலயா? இது நம்ம மேனேஜரோட பொண்ணு ராகிணி டா காயத்ரியோட ஸ்கூலில் ஒண்ணாப் படிச்சாளே” என்று வேதவல்லி கூறவும்

“ஓஹ்! எவ்வளவு வளர்ந்துட்டா இல்ல?” என்று கேட்டுக் கொண்டவன் ராகிணியைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைக்க பதிலுக்கு அவளும் அவனைப் பார்த்து புன்னகத்து கொண்டாள்.

“இவ்வளவு நாள் சென்னையில் ஆர்கிடெக்சரிங் செய்யுறேன்னு குப்பை கொட்டிட்டு இப்போ தான் இங்கே வந்து சேர்ந்து இருக்கா” என்று கௌசிக் கூறவும்

அவனை முறைத்து பார்த்த ராகிணி
“இங்க மட்டும் என்ன வாழுதாம்? எங்க அப்பா கூட சேர்ந்து ஊர் சுற்றி திரியுறீங்க கேட்டால் எஸ்டேட் பொறுப்புகளை பார்க்குறேன்னு பில்டப்பு” என்று நொடித்துக் கொள்ள காயத்ரி, மற்றும் வேதவல்லி அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றனர்.

“உங்க இரண்டு பேருக்கும் இன்னும் இந்த பழக்கம் மாறவே இல்லை எப்போ பார்த்தாலும் வாய்க்கு வாய் பேசிட்டே இருக்குறது” கவிகிருஷ்ணா கௌசிக்கின் தோளில் தட்டிய வண்ணம் கூற

“அவ தான் என்னை மதிக்குறதே இல்லண்ணா வயதில் பெரியவன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா?” என்று கூறிய கௌசிக் யாரும் அறியாமல் ராகிணியைப் பார்த்து பழிப்புக் காட்டினான்.

ராகிணி மீண்டும் ஏதோ கோபமாக கூற வரவும் அவள் வாய் மீது கை வைத்து மூடிய காயத்ரி
“அண்ணா விட்டால் இதுங்க இரண்டும் இன்னைக்கு பேசிட்டே இருக்கும் நீங்க போய் குளிச்சிட்டு வாங்க உங்களுக்காக தான் சாப்பிட ரொம்ப நேரமாக வெயிட்டிங்” என்று கவிகிருஷ்ணாவை பார்த்து கூற அவர்கள் அனைவரது விளையாட்டையும் பார்த்து புன்னகையோடு தலை அசைத்தவன் சிரித்துக் கொண்டே படியேறி தன்னறையை நோக்கிச் சென்றான்.

அதன் பிறகு கவிகிருஷ்ணா வரும் வரை கௌசிக் மற்றும் ராகிணியின் பேச்சிலும், சிரிப்பிலும் அவர்கள் வீடு நிறைந்து போய் இருந்தது.

இரவுணவை முடித்து கொண்டு சிறிது நேரம் எல்லோரும் பேசிக் கொண்டு இருக்க கவிகிருஷ்ணா மாத்திரம் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான்.

“என்ன கிருஷ்ணா இன்னும் யோசிச்சுட்டு இருக்க?” வேதவல்லி கவிகிருஷ்ணாவின் தோள் தொட

அவரை பார்த்து புன்னகத்தவன்
“ஒண்ணும் இல்லை ம்மா நாளைக்கு தேன்மதிக்கு ட்ரீட்மெண்ட்க்காக வெளியே கூட்டிட்டு போறோம் இல்லையா? அதைப் பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தேன் வேற ஒண்ணும் இல்லை” எனவும்
அவனை பார்த்து புன்னகத்தவர் அதன் பிறகு அதை பற்றி அவனிடம் பேசவில்லை.

சிறிது நேரத்தில் ராகிணியின் தந்தை ராமச்சந்திரன் வந்துவிட ராகிணி அவர்களிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றாள்.

“ஹப்பா! ஒரு புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கு இல்லை!” என்ற காயத்ரியைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்த வேதவல்லி

“ஆமா டா கண்ணா எப்போவும் அவ இங்கே இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இல்லை!” என்று விட்டு சென்று விட

“எப்போவுமா?” என்று தன் அன்னையை ஆச்சரியமாக பார்த்தவள் படியேறி சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவையையும் பார்த்து விட்டு புன்னகையோடு தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

காலை வேளை அவசர அவசரமாக தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வேகமாக தயாராகி வந்த கவிகிருஷ்ணா வேதவல்லிக்கு வேறு வேலை ஒன்று அன்று இருந்ததனால் அவரிடம் கூறி விட்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்து சென்றான்.

தேன்மதி வெளியில் செல்வதற்கு ஏற்ற வகையில் வெண்ணிற சுடிதார் அணிந்து அதற்கேற்றார் போல தலையில் வைத்த ஒற்றை வெண்ணிற ரோஜாவுடன் சம்யுக்தாவோடு பேசிக் கொண்டே நடந்து வர அதைப் பார்த்த கவிகிருஷ்ணாவோ அசந்து போய் நின்றான்.

இங்கு வந்த நாள் முதல் அவளை பார்த்து அவன் சிறிது மன சஞ்சலம் அடைந்து இருந்தாலும் இது நாள் வரை இப்படி முழுமையாக அவளை பார்த்து வியந்து போய் நின்றதில்லை.

ஆனால் இன்று அவனையும் அறியாமல் அவன் மனம் ஒட்டுமொத்தமாக தேன்மதியின் வசமாக நழுவி சென்று கொண்டிருந்தது.

தூரத்தில் நின்று கவிகிருஷ்ணாவையே பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் அவனது முக மாற்றத்தை பார்த்து புன்னகத்து கொண்டே அவனருகில் வந்து அவன் தோள் தொட்டார்.

அந்த தொடுகையில் அவரைப் பார்த்து சங்கடமாக புன்னகத்தவன் எதுவும் பேசாமல் அவரைப் பார்த்து கொண்டு நின்றான்.

“என்ன கிருஷ்ணா எல்லாம் சரியாக இருக்கா? போகலாமா?” விருத்தாசலத்தின் கேள்வியில் தன் நிதானம் அடைந்தவன்

“எஸ் டாக்டர் போகலாம்” என்று கூறினான்.

சம்யுக்தா மற்றும் சுரேந்திரனோடு தேன்மதி ஒரு காரில் ஏறி கொள்ள ஜானகி, நரசிம்மன் மற்றும் விருத்தாசலம் கவிகிருஷ்ணாவோடு மற்றைய காரில் ஏறி கொண்டனர்.

ஜானகியின் பார்வை எப்போதும் கவிகிருஷ்ணாவின் மீதே இருந்து கொண்டிருக்க அவர் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்ட நரசிம்மன் மெதுவாக அவர் கைகளை அழுத்தி கொடுத்தார்.

தன் கணவரின் கை ஸ்பரிசத்தில் அதன் அர்த்தம் உணர்ந்தவர் புன்னகையோடு தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார்.

அரை மணிநேரப் பயணித்திற்கு பின்னர் அவர்களது கார் ஹோட்டலின் முன்னால் சென்று நின்றது.

தேன்மதி காரில் இருந்து இறங்கிய வண்ணம் சுற்றிலும் வேடிக்கை பார்க்கத் தொடங்க கவிகிருஷ்ணா அவளது முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தென்படுகிறதா? என்று கவனிக்க தொடங்கினான்.

ஏற்கனவே அந்த ஹோட்டலில் அனுமதி பெற்று இருந்ததால் தேன்மதியை அவர்கள் தங்கி இருந்த அறைப் புறமாக விருத்தாசலம் அழைத்து சென்றார்.

“மிஸ். தேன்மதி!”

“சொல்லுங்க டாக்டர்”

“இதற்கு முன்னாடி இந்த இடத்திற்கு நீங்க வந்து இருக்கீங்களா?”

“இந்த இடத்திற்கா?” சிறிது நேரம் யோசித்தவள்

“தெரியல டாக்டர் பட் இந்த இடம் எனக்கு பழக்கப்பட்ட இடமாக இருக்குற மாதிரி தான் தோணுது ஆனா இங்க வந்த மாதிரி ஞாபகம் இல்ல” எனவும் விருத்தாசலம் புன்னகையோடு அவள் கூறுவதை கேட்டு கொண்டே அவளோடு இணைந்து நடந்து சென்றார்.

“இங்க பின்னாடி ஒரு அழகான தோட்டம் இருக்குன்னு சொன்னாங்க பார்க்க போகலாமா தேன்மதி?”

“தோட்டமா? ஸ்யூர் டாக்டர்” குதூகலத்துடன் கூறிக் கொண்டே அந்த ஹோட்டலின் பின்புறத்தை வந்து சேர்ந்தாள் தேன்மதி.

அந்த இடத்தை பார்த்ததும் சட்டென்று அவள் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளத் தொடங்கியது.

தன் நெஞ்சில் கை வைத்து கண்களை இறுக மூடிக் கொண்டவள்
“கவி!” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டாள்.

தேன்மதியின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்து அவசரமாக அவளருகில் வந்த விருத்தாசலம்
“தேன்மதி என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் வினவினர்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவள் ஒரு சில கணங்கள் கழித்து தன் கண்களை திறந்து கொண்டாள்.

“என்ன ஆச்சு தேன்மதி?”

“தெரியல டாக்டர் திடீர்னு இதயம் வேகமாக அடிச்சுக்குது ஆமா அம்மா, அப்பா எல்லாம் வந்தாங்களே எங்கே அவங்க?” சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டபடி தேன்மதி கேட்க

“அவங்க பின்னாடி வந்துட்டு இருக்காங்க நான் தான் உங்க கூட தனியா பேசணும்னு உங்களை முன்னாடி கூட்டிட்டு வந்தேன் இப்போ அவங்க வந்துடுவாங்க” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே கவிகிருஷ்ணாவோடு மற்றைய அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

தேன்மதியின் முகம் சற்று சோர்ந்து போய் இருப்பதை பார்த்து பதட்டம் கொண்ட கவிகிருஷ்ணா
“டாக்டர் என்ன ஆச்சு? மதி ஆர் யூ ஓகே?” என்றவாறே அவர்கள் இருவரையும் நெருங்கி வந்தான்.

“ஒண்ணும் இல்லை கிருஷ்ணா ஜஸ்ட் அவங்களுக்கு ஒரு பீல் அவ்வளவு தான்” என்ற விருத்தாசலம்

“தேன்மதி நீங்க கொஞ்ச நேரம் அம்மா, அப்பாவோடு பேசிட்டு இருங்க” என்றவாறே
கவிகிருஷ்ணாவைப் பார்த்து தன்னோடு வருமாறு சைகை செய்தார்.

“என்ன ஆச்சு டாக்டர்? ஏதாவது பிரச்சினையா?” பதட்டத்துடன் கேட்டு கொண்டே வந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்து புன்னகத்த விருத்தாசலம்

“நீ பதட்டமடையுற அளவுக்கு எதுவும் ஆகல கிருஷ்ணா தேன்மதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தோட அவளோட நினைவுகள் வெளியே வர ஆரம்பித்து இருக்கு அதற்கான அறிகுறிகள் தான் இது நீ வேணும்னா பாரு இந்த இடத்தில் இருந்து போறதுக்கு இடையில் கண்டிப்பாக தேன்மதிக்கு ஏதாவது ஒரு சம்பவம் ஞாபகம் வந்து விடும்” என்று கூற கவிகிருஷ்ணாவின் மனதோ தேன்மதிக்கு எதுவும் இல்லை என்ற விடயத்தையே மீண்டும்
மீண்டும் எண்ணி நிம்மதி கொண்டது.

சம்யுக்தாவோடு பேசிக் கொண்டே சற்று தூரம் நடந்து சென்ற தேன்மதி சட்டென்று கால்கள் தடுமாறி நின்றாள்.

தூரத்தில் பச்சை கம்பளம் போர்த்திய மலைகளின் அடிவாரத்தில் தெரிந்த அருவி ஒன்றில் அவளது பார்வை நிலை குத்தி நிற்க சம்யுக்தாவோ தேன்மதியின் திடீர் அமைதியில் அவளை திரும்பி பார்த்தார்.

“என்ன ஆச்சு மதி?”

“அம்மா அந்த இடம்! அந்த இடம்! இங்கே இருந்து…நான்…”

“என்ன ஆச்சு மதி உனக்கு? எதுவாக இருந்தாலும் சொல்லுடாம்மா!”

பதட்டத்துடன் தேன்மதியின் கைகளை சம்யுக்தா பற்றி கொள்ள அவளோ அந்த அருவியை நோக்கி கை காட்டிய வண்ணம் தடுமாற்றத்துடன் பேசிக் கொண்டு நின்றாள்.

தேன்மதியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த விருத்தாசலம் மற்றும் கவிகிருஷ்ணா சம்யுக்தாவின் பதட்டமான குரலைக் கேட்டு வேகமாக அவர்கள் அருகில் நெருங்கி வந்தனர்.

“என்ன ஆச்சு அம்மா?” கவிகிருஷ்ணாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கவலையாக அவனை பார்த்தவர்

“தெரியல தம்பி திடீர்னு அந்த பக்கம் பார்த்துட்டு ஏதோ சொல்லுறா! ஆனா என்ன சொல்ல வர்றான்னு புரியல” எனவும்

தேன்மதியின் அருகில் வந்த கவிகிருஷ்ணா
“தேன்மதி! இங்க பாருங்க என்ன ஆச்சு தேன்மதி? தேன்மதி!” என்று அழைத்து கொண்டே இருக்க அவளோ அவர்கள் யாரின் பேச்சையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

பலமுறை அழைத்து பார்த்தும் தேன்மதியிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவள் முன்னால் வந்து அவள் கையை பிடித்த கவிகிருஷ்ணா
“தேன்மதி! இங்க பாருங்க! தேன்மதி!” என்று சற்று அதட்டலாக அழைக்க திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் கண்கள் கலங்கி நின்றாள்.

“தேன்மதி இப்போ எதற்காக அழுதுட்டு இருக்கீங்க? முதல்ல கண்ணைத் துடைங்க” என்றவாறே கவிகிருஷ்ணா தேன்மதியின் கையில் இருந்து தன் கையை எடுக்க தன் கண்களை துடைத்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள்

தன் தலையில் கை வைத்த வண்ணம்
“என்னோட கவி! மலையில் இருந்து…என்னை விட்டு…” என்றவாறே மயங்கி சரிந்தாள்……
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!