Katre-12

Katre-12

 1. தலையில் கை வைத்த வண்ணம் மயங்கி விழுந்த தேன்மதியை கவிகிருஷ்ணா ஒரே நொடியில் தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.

  சூழ நின்றவர்கள் அனைவரும் பதட்டத்துடன் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள அவர்களை விலக்கி கொண்டு தேன்மதியை தன் கையில் ஏந்தியபடி கவிகிருஷ்ணா அவர்கள் கார் நின்ற இடத்திற்கு விரைந்து சென்றான்.

  அந்த நொடி சுற்றி என்ன நடக்கிறது என்று எதையும் கவனிக்கும் மனநிலையில் கவிகிருஷ்ணா இருக்கவில்லை.

  தேன்மதிக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற எண்ணம் மாத்திரமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.

  கவிகிருஷ்ணா வேகமாக முன்னால் செல்ல அவனைப் பின் தொடர்ந்து மற்ற அனைவரும் பதட்டத்துடன் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தனர்.

  தேன்மதியை காரின் பின் இருக்கையில் கிடத்தியவன் சம்யுக்தாவையும், சுரேந்திரனையும் தன்னோடு காரில் வருமாறு கூறியவாறு மற்றைய காரில் விருத்தாசலத்தோடு நரசிம்மன் மற்றும் ஜானகியை வர சொல்லி விட்டு வேகமாக தன் காரை ஹாஸ்பிடல் நோக்கி செலுத்தினான்.

  தன்னால் முடிந்த மட்டும் வேகமாகவும், அதே நேரம் கவனத்துடனும் காரை ஓட்டி சென்றவன் ஹாஸ்பிடல் வளாகத்தை அடைந்ததும் அவசரமாக தேன்மதியை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லும் படி பணித்து விட்டு விருத்தாசலத்துடன் தேன்மதிக்கு சிகிச்சை அளிக்க விரைந்து சென்றான்.

  கவிகிருஷ்ணா தேன்மதிக்காக ஒவ்வொரு விடயத்தையும் வெகு சிரத்தையுடன் செய்வதைப் பார்த்து ஜானகி மற்றும் நரசிம்மன் அர்த்தமுள்ள ஒரு பார்வையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

  ஒரு மணி நேரம் கழித்து சிகிச்சை முடிவடைந்து தேன்மதி சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட பின்னரே அங்கிருந்த அனைவராலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

  தேன்மதி மயக்கத்தில் இருந்ததால் பெரியவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து விட்டு அமைதியாக கனத்த மனதோடு அங்கிருந்த வரவேற்பறையில் அமர்ந்திருக்க விருத்தாசலம் மற்றும் கவிகிருஷ்ணா தங்களுக்குள் ஏதோ பேசியபடி அவர்களை நோக்கி வந்தனர்.

  “டாக்டர் திடீர்னு மதிக்கு ஏன் இப்படி ஆச்சு?” கவலையுடன் கேட்ட சம்யுக்தாவைப் பார்த்த விருத்தாசலம்

  “நீங்க கவலைப்படுற மாதிரி அவங்களுக்கு எதுவும் ஆகல அவங்களுக்கு அந்த இடத்தை பார்த்ததும் பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப ஆரம்பித்திருக்கு இப்போ கூட ‘மலையில் இருந்து கவி’ என்கிற வசனம் தான் அவங்க திரும்பி திரும்பி சொல்லிட்டு இருக்காங்க இன்னும் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் பண்ணா முழுமையாக அவங்களுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வரக்கூடும்” என்று கூற கண்கள் கலங்க தன் கைகளை கூப்பி கடவுளுக்கு நன்றி செலுத்தினர் சம்யுக்தா மற்றும் ஜானகி.

  “ரொம்ப சந்தோஷமாக இருக்கு டாக்டர் என் பொண்ணு எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பி வந்துட்டாளே போதும் எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” கண்ணீர் மல்க விருத்தாசலத்தின் கரங்களை பற்றி கொண்ட சுரேந்திரனின் தோளில் தட்டி கொடுத்த விருத்தாசலம்

  “கண்டிப்பாக தேன்மதி நிறைய குழப்பங்களை மனதில் தேக்கி வைத்து இருக்காங்க இன்னும் சில நாட்களில் எந்த குழப்பங்களும் இல்லாமல் உங்க கூட பழைய மாதிரி வருவாங்க” என்றவாறே ஓரக் கண்ணால் கவிகிருஷ்ணாவைப் பார்க்க அவனோ அங்கே பேசும் விடயங்களுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.

  சிறிது நேரம் அவர்களோடு பேசி விட்டு விருத்தாசலம் திரும்பி செல்ல கவிகிருஷ்ணாவும் அவரை அமைதியாக பின் தொடர்ந்து சென்றான்.

  “என்ன கிருஷ்ணா யோசனை பலமாக இருக்கு?”

  “ஆஹ்! அப்படி எல்லாம் எதுவும் இல்லை டாக்டர்”

  “வாய் தான் எதுவும் இல்லைனு சொல்லுதே தவிர முகம் அப்படி சொல்ல மாட்டேங்குதே!” கவிகிருஷ்ணாவின் முகத்தை ஒற்றை கையால் பிடித்து இருபுறமும் திருப்பி பார்த்தபடி விருத்தாசலம் கூற

  அவசரமாக அவரை விட்டு விலகி நின்றவன்
  “சும்மா கிண்டல் பண்ணாதீங்க டாக்டர் எனக்கு வேலை இருக்கு நான் வர்றேன்” என்று விட்டு வேகமாக அவரை தாண்டி செல்ல போக அவனது கை பிடித்து தடுத்தவர் அங்கிருந்த இருக்கையில் அவனை அமரச் செய்து விட்டு அவனருகில் அமர்ந்து கொண்டார்.

  “கிருஷ்ணா நான் நேரடியாகவே விஷயத்திற்கு வர்றேன் நீ தேன்மதியை விரும்புற தானே?” விருத்தாசலத்தின் திடீர் நேரடிக் கேள்வியில் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தவன் பேச வார்த்தையின்றி விக்கித்துப் போய் அவரை பார்த்து கொண்டு இருந்தான்.

  “நான் எத்தனை வகையான மனிதர்களை சந்தித்து வந்திருக்கேன்னு உனக்கு சொல்லத் தேவையில்லை ஒவ்வொருத்தர் மனமும் என்ன நினைக்கும் என்ற ஒரே யூகம் என்னால் கண்டுபிடிக்க முடியும் அது மட்டுமில்லாமல் உன்னோட ஒவ்வொரு செயலையும் நான் இந்த கொஞ்ச நாட்களாகவே கவனித்து தான் வர்றேன் உனக்கு தேன்மதி மேல ஒரு அபிப்பிராயம் இருக்கு தானே?”

  “………”

  “நான் உன்னை தப்பாக எதுவும் சொல்லல கிருஷ்ணா தேன்மதி இப்போ பழைய நினைவுகள் சிலவற்றை மறந்து போய் இருக்கா அது எப்போ வேண்டுமானாலும் திரும்பி அவங்களுக்கு வரக்கூடும் அந்த நேரம் அவங்க உன்னை இப்போ பார்க்குற மாதிரி பார்ப்பாங்களானு சொல்ல முடியாது அவங்க கவியரசன் இப்போ அவங்க கூட இல்லை என்ற உண்மை அவங்களுக்கு கண்டிப்பாக தெரிய வரும் இப்போ அவங்க உன்னை கவியரசனாக நினைத்து இருக்காங்க அதற்காக அதை நீ பாவித்து”

  “டாக்டர்!” அதிர்ச்சியில் கவிகிருஷ்ணா சத்தமாக கத்தவிட சுற்றி நின்ற அனைவரும் அவர்களை திரும்பி பார்த்தனர்.

  “ஸாரி! ஸாரி!” என்றவாறே அங்கு நின்ற நபர்களைப் பார்த்து கூறிய படி எழுந்து கொண்ட விருத்தாசலம் கவிகிருஷ்ணாவின் கை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

  “டாக்டர் நீங்க என்னை இப்படி தப்பாக நினைத்து பார்ப்பீங்கனு நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கல” கவலையுடன் கூறியவன் தோளில் தட்டியவர்

  “நீ சரியான அவசரம் பிடித்தவன் டா நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காமலேயே! ஐயோ!” தன் தலையில் கை வைத்த விருத்தாசலம்

  “அப்படி அந்த பொண்ணோ அவங்க குடும்பமோ நினைத்து விடக்கூடாதுனு சொல்ல வந்தேன் உன் மனசில் உண்மையாகவே அந்த பொண்ணு மேல ஒரு அபிப்பிராயம் இருந்தால் அவ பூரணமாக குணமாகுற வரை பொறுமையாக இரு அதற்கு அப்புறம் உண்மையான நிலவரத்தை அவ உணர்ந்து கொள்ளுவா அதற்கு பின்னால் உன் மனசில் இருக்குறதை நீ சொல்லு இப்போ அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதேனு தான் சொல்ல வந்தேன்” என்று கூற

  கவிகிருஷ்ணாவோ
  “அய்யோ!” என்றவாறு தன் தலையில் தட்டி கொண்டான்.

  “ஸாரி டாக்டர்! அவசரத்தில் நீங்க சொல்ல வர்றதை கேட்காமலேயே! ஸாரி!” என்றவனின் தோளில் புன்னகையோடு தட்டி கொடுத்தவர்

  “பரவாயில்லை கிருஷ்ணா நான் சொன்னது உன் மனதில் இருக்கட்டும் நீ தவறுதலாக கூட உன் மனசில் இருக்குறதை வெளிப்படுத்தப் போய் அது கடைசியில் உனக்கு கெட்டதாக மாறிடக் கூடாது பார்த்து நடந்துக்கோ” எனவும் ஆமோதிப்பாக தலை அசைத்தவன் மனதளவில் சிறிது தெளிவு பெற்று இருந்ததைப் போல உணர்ந்தான்.

  தன் மனதிற்குள் என்ன இருக்கிறது என்று அவனுக்கே சரியாக தெரியவில்லை இதில் எப்படி தேன்மதியிடம் தன் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது என்று எண்ணி பார்த்தவன் புன்னகையோடு தன்னறைக்குள் வந்து சேர்ந்தான்.

  ‘தேன்மதி முழுமையாக குணமாகட்டும் அது வரை என் மனதில் இருக்கும் விடயத்தை நான் ஆராய்ந்து பார்க்கணும் அப்போது தான் என்னால் சரியாக ஒரு தீர்வுக்கு வர முடியும்’ என தன் மனதிற்குள் முடிவெடுத்து கொண்டவன் வழக்கம் போல தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான்.

  தேன்மதி சிறிது நேரத்தில் மயக்கத்தில் இருந்து எழுந்து விட விருத்தாசலம் மற்றும் கவிகிருஷ்ணா உட்பட மற்றவர்களும் அவளை பார்க்க விரைந்து சென்றனர்.

  மயக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தவள் சுற்றி நின்ற தன் உறவுகளை எல்லாம் பார்த்து ஒரு முறை புன்னகத்து கொண்டாள்.

  தேன்மதியின் இந்த அமைதி கவிகிருஷ்ணாவின் மனதை ஏனோ எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது.

  “தேன்மதி இப்போ தலையில் ஏதாவது வலி இருக்கா?” விருத்தாசலத்தின் கேள்வியில் அவரை திரும்பி பார்த்து இல்லை என்று தலை அசைத்தவள் அப்போது தான் அங்கு நின்ற கவிகிருஷ்ணாவை நிமிர்ந்து பார்த்தாள்.

  அவனைப் பார்த்த அந்த நொடி அவள் முகம் கலவையான உணர்ச்சிகளை வெளிக்காட்டியது.

  “என்ன ஆச்சு தேன்மதி?”

  “ஒண்ணும் இல்லை டாக்டர்” பதில் சொன்னவளது பார்வையோ கவிகிருஷ்ணாவின் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்தது.

  “எதுவும் பிரச்சினையா தேன்மதி?” கவிகிருஷ்ணா பொறுமை தாளாமல் கேட்டு விட விழிகள் விரிய ஆச்சரியமாக அவனை பார்த்தவள் இல்லை என்பதை போல தலை அசைத்து விட்டு மீண்டும் யோசனையாக அவனை பார்த்தாள்.

  “தேன்மதி நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நாங்க கொஞ்சம் லேட்டாக வர்றோம்” என்று விட்டு எழுந்து கொண்ட விருத்தாசலம்

  “வா கிருஷ்ணா போகலாம்” என்றவாறே கவிகிருஷ்ணாவைக் கடந்து செல்ல

  “கிருஷ்ணா!” என ஆச்சரியமாக அவனை நோக்கியவள் கண்களை மூடி தன் நெற்றியை நீவி விட்டு கொண்டாள்.

  “என்ன ஆச்சு மதி?” பதட்டத்துடன் அவளருகில் ஜானகி மற்றும் சம்யுக்தா நெருங்கி வர அவர்கள் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த கவிகிருஷ்ணா மற்றும் விருத்தாசலம் அவளருகில் சென்று நின்றனர்.

  “தேன்மதி என்ன ஆச்சு சொல்லுங்க? நீங்க சொன்னால் தான் எங்களால் ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்” என்று விருத்தாசலம் கூறவும்

  கண்களைத் திறந்து அவரை பார்த்தவள்
  “இது! இது! என்னோட கவி தானா?” என்று கவிகிருஷ்ணாவை நோக்கி கை காட்டிக் கேட்க கவிகிருஷ்ணாவோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

  “எதனால் நீங்க இப்படி கேட்குறீங்க தேன்மதி? இவ்வளவு நாளாக நீங்க தானே இவரை கவினு சொல்லி சொன்னீங்க இப்போ எதனால் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்தது?” விருத்தாசலம் கேட்கவும்

  மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டவள் கண்களை திறவாமலேயே
  “தெரியல டாக்டர் இவ்வளவு நாளாக நீங்க எல்லோரும் இவர் கவி இல்லைனு சொல்லும் போது எதுவும் தோணல ஆனா இப்போ இன்னைக்கு அந்த இடத்திற்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறமாகவே எனக்கு இது என் கவி தானானு கேள்வியாக இருக்கு” என்றவள் விழிகளோ அவளையும் மீறி கண்ணீரை துளிர்த்தது.

  அவள் கண்ணீரை துடைக்க கவிகிருஷ்ணாவின் கைகள் முன்னேறினாலும் அவள் மனநிலை கருதி தன் மனதை கட்டுப்படுத்தியவன் சற்று பின் தள்ளி நின்றான்.

  சிறிது நேரம் கழித்து தன் கண்களை துடைத்து கொண்டே தன் கண்களை திறந்த தேன்மதி சோர்வாக அங்கு நின்ற தன் பெற்றோரை கவலையுடன் நோக்கினாள்.

  “இங்க பாருங்க தேன்மதி நீங்க யோசிக்குற விடயம் சரி தான் பட் எல்லா பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்க்க முடியாது இல்லையா? இப்போ நீங்க இந்த மருந்தைப் போட்டு தூங்குங்க காலையில் மறுபடியும் உங்களோட நான் வந்து பேசுறேன்” என்றவாறு விருத்தாசலம் மாத்திரை ஒன்றை தேன்மதியிடம் கொடுக்க அதை வாங்கி போட்டு கொண்டவள் கவிகிருஷ்ணாவை நிமிர்ந்து பார்த்தாள்.

  அவள் கண்களில் தெரிந்த குழப்பம், வேதனை, ஏமாற்றம் எல்லாம் கவிகிருஷ்ணா மனதை ரணமாக தாக்க அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்து செல்ல அவன் சென்ற வழியையே இலக்கின்றி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் தேன்மதி.

  தன்னறைக்குள் வந்து சேர்ந்த கவிகிருஷ்ணாவின் மனமோ தேன்மதியின் வார்த்தைகளை எண்ணி கவலை கொண்டது.

  இத்தனை நாளாக அவளாக அவனை நெருங்கி வரும் போது அதை ஏற்க முடியாமல் தவித்தவன் இன்று அவள் அவனை விட்டு விலகி செல்வதைப் போல இருப்பதை பார்த்து முற்றிலும் உடைந்து போனான்.

  இந்த நிலைக்கு என்ன தான் தீர்வு என்று புரியாமல் கவிகிருஷ்ணா இலக்கின்றி சுவரை வெறித்துப் பார்த்து கொண்டிருக்க தேன்மதி கண்களை மூடி மீண்டும் மீண்டும் தன் மனதிற்குள் எழுந்த கேள்விகளை மீட்டு பார்த்து கொண்டிருந்தாள்.

  மனம் நிறைந்த குழப்பத்தோடு தேன்மதி ஒரு புறம் அவளது வேறுபாடான பேச்சை தாங்க முடியாமல் கவிகிருஷ்ணா ஒரு புறம் கவலையுடன் அமர்ந்திருக்க அவர்கள் இருவரையும் மெல்லிய காற்று வந்து தீண்டிச் சென்றது……

  JF. Husna,
  B.Sc in Health Promotion,
  Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!