Katre-13
Katre-13
இரண்டு நாட்கள் வழக்கம் போல தேன்மதியிடம் விருத்தாசலம் அவளது பழைய நினைவுகளை திரும்பி வர வைக்கும் முகமாக கேள்விகளை கேட்டு கொண்டிருக்க அவளிடமோ எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை.
எப்போதும் சிந்தனை வயப்பட்டவளாக அமர்ந்திருந்த தேன்மதியைப் பார்த்து கவிகிருஷ்ணாவிற்கும் சரியாக வேலைகளை கவனிக்க முடியாமல் இருந்தது.
அன்று வழக்கம் போல ஹாஸ்பிடல் வந்த கவிகிருஷ்ணா தேன்மதி இருந்த பக்கமாக நடந்து சென்றான்.
வெளியில் ஜன்னலூடாக தெரிந்த மலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேன்மதியின் அருகில் வந்து நின்றவன்
“குட்மார்னிங் தேன்மதி!” எனவும்
அவனை திரும்பி பார்த்து சிறிது புன்னகைத்தவள்
“குட் மார்னிங் கவி!” என்றவாறே மீண்டும் ஜன்னலினூடு வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தாள்.
“என்ன ஆச்சு தேன்மதி? இரண்டு, மூன்று நாளாக ரொம்ப அமைதியாக இருக்குறீங்க? அம்மா எங்கே இன்னும் வரலயா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அம்மா இப்போ வந்துடுவாங்க சாப்பாடு எடுத்து வரப் போய் இருக்காங்க” கவிகிருஷ்ணாவின் கேள்விக்கு அளந்து வைத்தாற் போல பதில் கூறியவள் மீண்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“தேன்மதி!” கவிகிருஷ்ணாவின் குரலில் சற்று சலிப்போடு திரும்பி அவனைப் பார்த்தவள்
“என்ன கவி?” என்று கேட்கவும்
அவளை கூர்மையாக பார்த்தவன்
எதுவும் பேசாமல் கைகளை கட்டி கொண்டு அவள் கண்களையே பார்த்து கொண்டு நின்றான்.
அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் அவள் தன் தலை குனிந்து கொள்ள அவளெதிரில் அமர்ந்து கொண்டவன்
“உன் மனசில் என்ன இருக்குன்னு வெளியே சொன்னால் தான் தெரியும் நான் முன்னாடியே உன் கிட்ட சொல்லி இருக்கேன் எந்த விடயத்தையும் உன் மனசில் போட்டு காம்ப்ளீகேட் பண்ணாதேனு சொல்லி இருக்கேன்னா இல்லையா?”
“ஆமா கவி சொல்லி இருக்க தான் ஆனா அன்னைக்கு அந்த ஹோட்டல் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இருந்து எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு அந்த இடத்தில் எனக்கு ஏதோ நடந்து இருக்குன்னு தோணிட்டே இருக்கு அந்த யோசனையோடு எனக்கு வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியல” கவலையுடன் கூறிய தேன்மதிக்கு என்ன பதில் சொல்வது என்று கவிகிருஷ்ணாவிற்கு தெரியவில்லை.
பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு தன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டவன்
“தேன்மதி எனக்கு இதற்கு எப்படி பதில் சொல்வதுனு தெரியல ஆனா அதே நேரம் நான் சொல்றது எல்லாம் உன்னால ஏற்றுக் கொள்ள முடியுமானும் எனக்கு தெரியல” எனவும்
புன்னகையோடு அவனை நோக்கியவள்
“ஏற்கனவே நான் குழம்பி போய் இருக்கேன் அது போதாதுனு நீ வேற ஒண்ணும் புரிந்து கொள்ள முடியாத மாதிரி பேசுறியே கவி” என்று கூற அவளது பேச்சில் கவிகிருஷ்ணாவின் முகத்திலும் சிறு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
“சரி நான் ஒரு விஷயம் கேட்குறேன் பதில் சொல்லுவியா?”
“மறுபடியும் என்ன குழப்பம்னு மட்டும் கேட்டுடாதே கவி திரும்பவும் என்னால அதே வசனத்தை சொல்ல முடியல” சற்று கேலி கலந்த குரலில் தேன்மதி கூறவும்
அவளைப் பார்த்து சிரித்த கவிகிருஷ்ணா
“அப்படி எல்லாம் எதுவும் கேட்க மாட்டேன் பயப்படாதே சின்ன வயதில் உன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தை சொல்லு” எனவும்
விழிகள் விரித்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள்
“சரி நீ ஆசையாக கேட்குறதனால் சொல்லுறேன்” என்று கூறினாள்.
“இது நாள் வரைக்கும் இந்த விஷயம் என் மனதிற்கு மட்டுமே தெரிந்த விஷயம் உனக்கு கூட நான் இவ்வளவு நாளாக சொன்னது இதை சொன்னது இல்லை இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ”
“சரி சொல்லு”
“நான் ஆறாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது ஒரு நாள் என் கிளாஸ் மேட் கீதாவோட சண்டை போட்டு வந்தேன் தெரியுமா? அம்மா நான் சண்டை போட்டது தெரிந்து என்னை செமயாக அடிச்சாங்க ஞாபகம் இருக்கா? நீ தான் வந்து அம்மா கிட்ட பேசி என்னை அந்த தர்ம அடியில் இருந்து காப்பாற்றுன அந்த சண்டைக்கான காரணம் இது நாள் வரைக்கும் உங்க யாருக்குமே தெரியாது”
“அப்படி என்ன காரணம்?” ஆர்வமாக கேட்ட கவிகிருஷ்ணாவைப் பார்த்து புன்னகத்தவள்
“என்ன ஒரு ஆர்வம்?” என்று கேலி செய்ய
பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகத்தவன்
“மேலே சொல்லு” என்று கூறினான்.
“அவ அன்னைக்கு என்ன சொன்னா தெரியுமா? நீ எப்போவும் அவளைப் பார்த்து தான் சிரிச்சுட்டு போறதாம் அதுவும் இல்லாமல் அவளைப் பார்க்குறதுக்காக தான் நீ டெய்லி ஸ்கூலுக்கே வர்றியாம் என்னை விட அவளைத் தான் உனக்கு பிடிக்குமாம்னு எல்லாம் சொன்னா எனக்கு கோபம் கோபமாக வந்தது எதுவும் பேசாமல் நான் நின்னேன் அதற்கு அப்புறமாக அவ ஒண்ணு சொன்னா பாரு எனக்கு வந்த கோபத்திற்கு அவ முகத்தில் ஓங்கி ஒரு குத்து தான் விட்டேன் அதற்கு அப்புறமாக அவ என்னை அடிக்க நான் அவளை அடிக்க பிரின்சி வந்து அம்மா கிட்ட வத்தி வைச்சுட்டாங்க”
“அப்படி அவ என்ன சொன்னா?”
“நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்க?”
“ஹேய் சும்மா சொல்லு! அப்படி அந்த பொண்ணு என்ன சொன்னா?”
“நீ அவளைத் தான் பெரியவனாக ஆனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா அது தான் எனக்கு கோபம் வந்துச்சு அடிச்சுட்டேன்”
“வாட்? மதி இட்ஸ் ஷோ சைல்டிஸ் அதற்கு போய் அடிச்சுக்கலாமா? அவ விளையாட்டுக்கு கூட சொல்லி இருக்கலாம் இல்லையா?” சிரித்துக் கொண்டே கூறியவனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
“விளையாட்டுக்கு கூட என் கவியை நான் அப்படி விட்டு கொடுக்க முடியுமா சொல்லு?”
“……….”
“அந்த நேரம் எனக்கு உன்னை விட்டு கொடுக்க தோணல அது தான் அப்படி நடந்துகிட்டேன் அதற்கு அப்புறமாக நாளாக நாளாக தான் கீதாவை பார்க்கும் போதெல்லாம் நான் இப்படி எல்லாம் சண்டை போட்டு இருக்கேன்னு எனக்கே சிரிப்பாக வரும் ஆனா நான் அதற்காக வருத்தப்படல என் கவியை அந்த வயதிலேயே நான் விட்டு கொடுக்க நினைக்கலனு எனக்கு பெருமையாக தான் இருக்கும்” புன்னகையோடு கண் சிமிட்டிக் கூறியவளை ஆச்சரியமாக பார்த்தான் கவிகிருஷ்ணா.
“என்ன கவி அப்படி பார்க்குற? இத்தனை நாளாக நீ என் கிட்ட பல தடவை கேட்டு இருக்க எப்போ என் கிட்ட உன் மனதில் இருக்குறதை சொல்லுவேனு! இப்போ சொல்லணும்னு தோணுது சொல்லட்டுமா கவி?” கண்களில் ஆசையைத் தேக்கி கேட்டவளைப் பார்த்து அதிர்ந்து போனவன் அவசரமாக எழுந்து கொண்டான்.
“தேன்மதி ஏற்கனவே நீங்க நிறைய குழப்பத்தோடு இருக்குறீங்க இப்போ இது பற்றி பேச வேண்டாம் நீங்க கொஞ்ச நாளாக ரொம்ப அமைதியாக இருந்தீங்க அது தான் உங்களை பழைய மாதிரி பேச வைக்கணும்னு உங்க கிட்ட பேசிட்டு இருந்தேன் இப்போ நீங்க மனதளவில் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குறீங்கனு நம்புறேன் நான் சொல்றது சரி தானே?” கவிகிருஷ்ணாவின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“ஆமா கவி இப்போ கொஞ்சம் எனக்கு குழப்பம் எல்லாம் குறைந்து விலகி போன மாதிரி இருக்கு” எனவும்
புன்னகையோடு அவளை பார்த்து தலை அசைத்தவன்
“குட் இனி எப்போவும் இப்படி எல்லோர் கூடவும் பேசிட்டு இருக்கணும் சரியா?” என்று கேட்க சரியென்று தலை அசைத்தவள் அவனிடம் தன் மனதில் இருந்ததைப் பற்றி சொல்ல வந்ததை மறந்து போனாள்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சம்யுக்தா வந்து விட அவருடன் சிறிது நேரம் பேசி விட்டு கவிகிருஷ்ணா தனது வேலைகளை கவனிக்க சென்றான்.
விருத்தாசலமும் சிறிது நேரத்தில் வந்து விட தேன்மதியிடம் வழக்கம் போல அவர் தனது சிகிச்சையை ஆரம்பித்து இருந்தார்.
தனது வீடு பற்றிய விபரங்கள், குடும்ப விபரங்கள் மற்றும் தனது நண்பர்கள் பற்றிய பல விபரங்களை தேன்மதி வெகு சாதாரணமாக விருத்தாசலத்திடம் பகிர்ந்து கொள்ள அவளது இந்த முன்னேற்றத்தை பார்த்து அனைவரும் சிறிது ஆச்சரியம் கொண்டனர்.
சிறிது நேரம் தேன்மதியை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறி விட்டு சென்ற விருத்தாசலத்தை பின் தொடர்ந்து வந்த சுரேந்திரன்
“டாக்டர் மதி அவ பிரண்ட்ஸ் பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து இருக்கா அப்படினா அவளுக்கு எல்லாம் ஞாபகம் வர ஆரம்பித்துடுச்சா?” சந்தோஷத்தில் கண்கள் கலங்க கேட்க
புன்னகையோடு அவரை பார்த்து தலை அசைத்தவர்
“ஆமா தேன்மதி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை பற்றி உணர்ந்து கொள்ள ஆரம்பித்துட்டாங்க ஆனா இரண்டு நாளாக சரியாக எதுவும் பேசாமல் இருந்தவங்க திடீர்னு எப்படி இவ்வளவு தெளிவாக எல்லாம் சொல்ல ஆரம்பித்தாங்கனு எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கு காலையில் தேன்மதி கிட்ட நீங்க யாராவது ஏதாவது பேசுனீங்களா?” என்று கேட்க சுரேந்திரன் மறுப்பாக தலை அசைத்தார்.
“நாங்க யாரும் எதுவும் பேசல டாக்டர் கிருஷ்ணா தம்பி தான் மதி கூட காலையில் நான் வீட்டுக்கு போயிட்டு வர்ற வரைக்கும் பேசிட்டு இருந்தாங்க” சம்யுக்தாவின் பதிலில் யோசனையோடு தன் நெற்றியை நீவி விட்டு கொண்டவர்
“ஓஹ்! சரி நான் கிருஷ்ணா கூட அடுத்து என்ன பண்ணலாம்னு பேசிட்டு வந்து உங்களோடு பேசுறேன்” என்று விட்டு சென்று விட சம்யுக்தாவும், சுரேந்திரனும் தேன்மதியை நோக்கி சென்றனர்.
“குட் மார்னிங் கிருஷ்ணா!”
“குட் மார்னிங் டாக்டர்!” தன் கையில் இருந்த பைலை மூடி வைத்தவன் புன்னகையோடு அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“தேன்மதியை பார்த்தீங்களா டாக்டர்? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?”
“அது பற்றி தான் உன் கிட்ட பேச வந்தேன் அதற்கிடையில் நீயே அதை பற்றி கேட்டுட்ட தேன்மதி கிட்ட இன்னைக்கு பெரிய முன்னேற்றம் இருக்கு கிருஷ்ணா”
“அப்படியா? என்ன முன்னேற்றம் டாக்டர்?”
“இது நாள் வரைக்கும் கவி, அம்மா, அப்பா, மாமா, அத்தை இவங்களைப் பற்றி மட்டுமே பேசிட்டு இருந்தவங்க இன்னைக்கு அவங்க வீடு, பிரண்ட்ஸ், பேமிலி பற்றி எல்லாம் சொன்னாங்க”
“உண்மையாகவா? அப்படினா இது பெரிய முன்னேற்றம் தான் இல்லையா டாக்டர்?”
“ஆமா கிருஷ்ணா ஆனா தேன்மதியோட இந்த முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான காரணம் நீ தான்”
விருத்தாசலத்தின் பதிலில் ஆச்சரியமாக அவரைப் பார்த்தவன்
“நானா? எப்படி?” எனப் புரியாமல் கேட்டான்.
“காலையில் நீ தேன்மதியோடு பேசுனதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு இந்தளவிற்கு எல்லாம் பற்றி சொல்ல முடியுமாக இருந்திருக்கு”
“ஆனா டாக்டர்! இது எப்படி?”
குழப்பமாக கேட்டவனைப் பார்த்து புன்னகைத்தவர்
“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் கிருஷ்ணா தேன்மதி உன் கிட்ட தான் ஒரு பாதுகாப்பான உணர்வை உணர்ந்து கொள்ளுறாங்க நீ அவங்க கூட பேசும் போது தான் அவங்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை பற்றி யோசிக்க ஆரம்பிக்குறாங்க”
என்று கூற
“ஆனா டாக்டர் எனக்கும் அவங்க கவியரசனுக்கும் அவங்களால வித்தியாசத்தை உணர முடியலையே அதற்கு என்ன பண்ணுறது?”
என கேட்டவனைப் பார்த்து சிரித்தவர்
“நான் ஆரம்பத்தில் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன் ஞாபகம் இருக்கா? உன் மனதில் தேன்மதியின் மேல் ஏதாவது எண்ணம் இருக்கான்னு கேட்டேன் இப்போ அதற்கு பதில் உனக்கும், எனக்கும் தெரியும் அந்த வித்தியாசத்தை நீ உணர்ந்து கொண்ட மாதிரி கவிகிருஷ்ணாவிற்கும், கவியரசனிற்கும் வித்தியாசம் கண்டிப்பாக தேன்மதிக்கு புரியும் அதற்கு அவங்களுக்கு அவங்க திருமணம் பற்றிய அவங்க நினைவுகள் திரும்ப வந்தால் மட்டுமே முடியும் அதற்கு தான் சொல்லுறேன் அவங்க கிட்ட பேசு அவங்களை கொஞ்சம் கொஞ்சமாக பழைய விடயம் பற்றி யோசிக்க வை இதெல்லாம் பண்ண போறது டாக்டர் கவிகிருஷ்ணாவே தவிர தேன்மதி மேல காதல் இருக்கும் கவிகிருஷ்ணா இல்லை” என்று கூற கவிகிருஷ்ணா அமைதியாக அமர்ந்திருந்தான்.
“நாளைக்கு தேன்மதியை அவங்க ஊருக்கு கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன் அங்கே போய் மீதி ட்ரீட்மெண்ட் பண்ணப் போறேன் அவங்க வாழ்ந்து வளர்ந்த இடம் நிச்சயமாக அவங்களுக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவும்”
“நாளைக்கே போறீங்களா டாக்டர்?”
“போறீங்களா இல்ல போறோம் இது நீ டீல் பண்ணுற பேஷண்டோட கேஸ் ஷோ நீயும் வரணும் இரண்டு, மூன்று நாள் அங்கே வைத்து ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு மறுபடியும் இங்கே வந்து அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணால் சரி ஒரு வேளை அங்கேயே வைத்து எல்லாம் அவங்களுக்கு நினைவு வந்துடுச்சுனா திரும்பி அவங்க இங்க வர தேவை இருக்காதுனு நம்புறேன்”
விருத்தாசலம் கூறிய வார்த்தைகள் ஏனோ கவிகிருஷ்ணாவிற்கு சந்தோஷத்தை தராமல் கவலையையே தந்தது.
“நீ என்ன நினைக்குறேன்னு எனக்கு புரியுது கிருஷ்ணா”
“அய்யோ! டாக்டர் உங்களை முன்னால் வைத்துட்டு எதுவும் யோசிக்கவே முடியாது எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுறீங்க” போலியாக அலுத்துக் கொண்ட கவிகிருஷ்ணாவின் தோளில் தட்டியவர் அந்த அறைக் கதவு தட்டும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தார்.
“எஸ் கம் இன்” கவிகிருஷ்ணா சொல்லவும் ஒரு நர்ஸ் கையில் கவர் ஒன்றுடன் அவர்களை நோக்கி வந்து அந்த கவரை விருத்தாசலத்திடம் நீட்டினார்.
“டீ.என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு டாக்டர்” நர்ஸ் கொடுத்த கவரை வாங்கி கொண்டவர் கவிகிருஷ்ணாவை திரும்பி பார்க்க அவனோ கேள்வியாக அவரது கையில் இருந்த கவரையே பார்த்து கொண்டு இருந்தான்.
“சரி நீங்க போங்க சிஸ்டர்”
“ஓகே டாக்டர்” நர்ஸ் அந்த அறையை தாண்டியதுமே விருத்தாசலத்தின் அருகில் வந்த கவிகிருஷ்ணா அவரது கையில் இருந்த கவரை வாங்கி பிரித்து பார்த்தான்…….
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.