Katre-14
Katre-14
தன் கையில் இருந்த காகிதத்தையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் அருகில் சென்ற விருத்தாசலம் அவன் கையில் இருந்த காகிதத்தை வாங்கி பார்த்தார்.
டீ.என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவாக வந்து இருந்தது.
“உப்ப்ப்ப்ப்” என்று பெருமூச்சு விட்டு கொண்டவர் கவிகிருஷ்ணாவின் தோளில் கை வைக்க தன் சுய நினைவுக்கு வந்தவன் அவரை திரும்பி பார்த்தான்.
“என்ன ஆச்சு கிருஷ்ணா?”
“எனக்கு இது முன்னாடியே தெரியும் டாக்டர் ஆனாலும் மனதில் ஒரு ஓரத்தில் என்னை அறியாமலே எனக்கு ஒரு பயம் இருந்தது இப்போ இதை பார்த்ததும் எனக்கு எதுவும் பேசவே வரல”
“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான் என்ன தான் ஒரு விடயத்தின் மேல் நம்பிக்கை மனதில் முழுமையாக இருந்தாலும் அது பற்றி ஒரு முடிவு சரியாக தெரியுற வரை அதைப் பற்றிய பயம் இருக்கத்தான் செய்யும் இந்த டெஸ்ட் ரிசல்ட் பற்றி நான் நரசிம்மன் கிட்ட சொல்லிட்டு வர்றேன் நீயும் அம்மா கிட்ட சொல்றதுனா சொல்லிடு”
“சரி டாக்டர்” என்றவன் தன் போனை எடுத்து கொள்ள விருத்தாசலம் வெளியே தேன்மதி இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்த நரசிம்மனை நோக்கி சென்றார்.
“வாங்க டாக்டர் எப்படி இருக்கீங்க?” சினேகமாக புன்னகையோடு கேட்ட நரசிம்மனைப் பார்த்து பதிலுக்கு புன்னகத்த விருத்தாசலம் சற்று தள்ளி அவரை அழைத்துச் சென்று தன் கையில் இருந்த காகிதத்தை அவரின் புறமாக நீட்டினார்.
“என்ன இது டாக்டர்?” குழப்பமாக கேட்டுக் கொண்டே நரசிம்மன் அந்த காகிதத்தை பிரித்து பார்க்க ஜானகியும் அவர்கள் அருகில் வந்து நின்றார்.
“டீ.என்.ஏ ரிசல்டா?” ஆர்வமாக கேட்ட ஜானகியை பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்த நரசிம்மன் கவலையுடன் விருத்தாசலத்தையும், ஜானகியையும் ஏறிட்டுப் பார்த்தார்.
“என்னங்க போட்டு இருக்கு?” ஜானகியின் கண்களிலும், முகத்திலும் தெரிந்த ஆர்வத்தை பார்த்து நரசிம்மன் பேச்சிழந்து நிற்க
அவரது தோளில் தட்டி கொடுத்த விருத்தாசலம் ஜானகியின் புறம் திரும்பி
“ரிசல்ட் நெகட்டிவ்னு வந்து இருக்கு அதாவது கவிகிருஷ்ணா வேதவல்லி அம்மாவோட பையன் தான்னு உறுதியாகி இருக்கு” எனவும்
ஜானகியின் முகத்தில் நிறைந்து இருந்த ஆர்வம் எல்லாம் மொத்தமாக வடிந்து போனது.
உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு அவர்களை பார்த்து புன்னகத்தவர்
“கிருஷ்ணா என் வயிற்றில் பிறக்கலனாலும் எனக்கு அவன் மகன் மாதிரி தானே பரவாயில்லை கவிப்பா நீங்க எதுவும் யோசிக்காமல் வாங்க நம்ம மதியோட பேசிட்டு இருக்கலாம்” என்றவாறே கலங்கிய தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்து விட்டு கொண்டு முன்னே நடந்து செல்ல அவரை கவலையுடன் பார்த்து கொண்டு நின்றார் நரசிம்மன்.
“உங்க மனைவிக்கு எப்போவும் நீங்க தான் துணையாக இருக்கணும் நரசிம்மன்” என்று விட்டு விருத்தாசலம் அவர் தோள் மேல் ஆறுதலாக தட்டி விட்டு செல்ல தன் கையில் இருந்த காகிதத்தை மடித்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்தவர் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டு தேன்மதியை நோக்கி சென்றார்.
“என்ன ஆச்சு நரசிம்மா? டாக்டர் என்ன சொன்னார்?” என்று
சுரேந்திரன் கேட்கவும்
“ஆஹ் அது ஜானகியோட டெஸ்ட் ரிசல்ட் பற்றி சொன்னார்” என்ற நரசிம்மன் கண்களால் ஜாடையாக தேன்மதியைக் காட்ட அதைப் புரிந்து கொண்டவர்
“ஓஹ் என்ன ரிசல்டோட முடிவு?” என்று கேட்டார்.
“எதுவும் இல்லையாம் மாமா” என்ற நரசிம்மனின் குரல் அவரையும் அறியாமல் தழுதழுக்க அவசரமாக அவர் அருகில் வந்த சுரேந்திரன் அவரது கைகளை பற்றி கொண்டார்.
தேன்மதியோ அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருக்க அவளை பார்த்து புன்னகத்த நரசிம்மன்
“என்னடா மதி அப்படி பார்க்குற? அன்னைக்கு உங்க அத்தை மயக்கம் போட்டு விழுந்தாங்க இல்லையா அது பற்றி பேசிட்டு இருக்கோம்டா” எனவும்
“அப்படியா? நான் கூட வேற எதுவும் பிரச்சினையோனு பயந்துட்டேன் அத்தைக்கு எதுவும் இல்லை தானே?” என்ற தேன்மதியைப் பார்த்து இல்லை என்று தலை அசைத்தவர் அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.
தன் அறை வாயிலில் நின்று அவர்கள் பேசுவதை பார்த்து கொண்டு நின்ற கவிகிருஷ்ணா அவர்கள் பேசுவதை கேட்காவிட்டாலும் அவர்கள் அனைவரது முக மாற்றங்களை வைத்தே அவர்கள் மனநிலையை உணர்ந்து கொண்டான்.
எத்தனை மனக் கஷ்டங்கள், எத்தனை குழப்பங்கள் என எல்லாவற்றையும் யோசித்து பார்த்தவன் சிறிது நேரம் தேன்மதியைப் பார்த்து கொண்டு நின்றான்.
சிறு குழந்தையை போல தன் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு மற்றவர்களிடம் கதை பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவன் விழிகள் ஆசையாக அவளைத் தழுவி சென்றது.
பேசி கொண்டே யதேச்சையாக கவிகிருஷ்ணாவின் புறம் திரும்பி பார்த்தவள் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்து கொண்டு நின்றவனைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த
அதை சற்றும் எதிர்பார்க்காத அவனோ
“ஒண்ணும் இல்லையே” என்றவாறு தன் தோளைக் குலுக்கிய வண்ணம் மற்றைய புறமாக நடந்து சென்றான்.
தேன்மதி அவன் செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் பேச்சை தொடர கவிகிருஷ்ணா மறுபுறம்
புன்னகையோடு தன் முடியை கோதி விட்டவாறே நடந்து சென்றான்.
அடுத்த நாள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று விருத்தாசலம் தேன்மதியின் பெற்றோரிடம் கூறி இருக்க அன்று இரவே அவர்கள் தேன்மதியை தாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருந்தனர்.
இது நாள் வரை ஹாஸ்பிடல் வளாகத்தையே பார்த்து வந்த தேன்மதி அந்த இடத்தை பார்த்ததும் ஆச்சரியத்தில் விழி விரித்து நின்றாள்.
சுற்றிலும் ஓர்கிட் பூக்கள் வேலியாக அந்த இடத்தை நிறைத்து இருக்க அந்த வளாகத்தின் நடுவில் குட்டி அரண்மனை போல அந்த வீடு வீற்றிருந்தது.
பலவிதமான மலர்களின் நறுமணம் காற்றோடு கலந்து வந்து அவள் நாசியை நிறைக்க முகம் நிறைந்த புன்னகையோடு அந்த வாசனையை ஆழ்ந்து உள் இழுத்தவள் தன் அருகில் நின்ற சம்யுக்தாவின் தோளில் சாய்ந்து கொண்டு
“ம்மா மறுபடியும் அந்த ஹாஸ்பிடல் போக வேண்டாம்மா அங்கே ஒரே மருந்து வாசம் தாங்க முடியல இங்க எவ்வளவு அழகாக பூவோட வாசமும், காற்றும் வீசுது டாக்டர் கிட்ட சொல்லி ட்ரீட்மெண்ட் இங்கேயே பண்ண சொல்லும்மா ப்ளீஸ்” என அவர் தாடையை பிடித்து ஆட்ட
“சரிடாம்மா டாக்டர் கிட்ட சொல்லுறேன் சரியா?” என்று புன்னகையோடு கூறிய சம்யுக்தாவின் கன்னத்தில் முத்தமிட்டவள் துள்ளிக் குதித்து கொண்டு சந்தோஷமாக வீட்டிற்குள் ஓடி சென்றாள்.
இந்த சந்தோஷம் நீடித்து இருக்கப் போவதில்லை என்ற நிதர்சனம் நினைவு வர முகம் வாடி நின்ற சம்யுக்தாவின் கைகளை ஆதரவாக பற்றி கொண்ட ஜானகி
“கவலைப்படாதீங்க அண்ணி எல்லாம் நல்ல படியாக முடியும்” என்று கூற புன்னகையோடு அவரை பார்த்தவர் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு வீட்டிற்குள் நடந்து சென்றார்.
தேன்மதி வீட்டிற்கு வந்த விடயம் கேள்விபட்டு அவளைப் பார்ப்பதற்காக வேதவல்லி மற்றும் காயத்ரி அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.
வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்த சம்யுக்தா
“அட நீங்களா? வாங்க வாங்க இரண்டு, மூன்று நாளாக உங்களைப் பார்க்கவே முடியல. ரொம்ப வேலையோ?” என்று கேட்கவும்
அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட வேதவல்லி
“கொஞ்சம் வேலை தான் ஆமா தேன்மதி எங்கே?” என்று கேட்டார்.
“மதி குளிச்சுட்டு இருக்கா நீங்க வாங்க வந்து உட்காருங்க இப்போ அவ வந்துடுவா” என்றவாறே அவர்களை உள்ளே அழைத்து சென்றவர்
“இப்படி உட்கார்ந்துக்கோங்க நான் போய் மதியை கூட்டிட்டு வர்றேன்” என்று விட்டு செல்ல வேதவல்லியும், காயத்ரியும் புன்னகையோடு அவரை பார்த்து தலையசைத்தனர்.
சிறிது நேரத்தில் தேன்மதியோடு ஜானகி, நரசிம்மன் மற்றும் சுரேந்திரனும் வந்து விட தேன்மதி புன்னகை முகமாக வேதவல்லி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“வல்லி ஆன்ட்டி ஏன் இரண்டு, மூன்று நாளாக என்னை பார்க்க வரல? அவ்வளவு பிஸியா நீங்க? இது யாரு?” என்று காயத்ரியின் புறமாக கை நீட்ட
அவள் கைகளை பற்றிக் கொண்ட காயத்ரி
“ஐ யம் காயத்ரி பைனல் இயர் பி.இ ஸ்டூடண்ட் அன்ட் இவங்க தான் எனக்கு அம்மாவாக இருந்துட்டு வர்றாங்க” என்றவளின் தோளில் தட்டிய வேதவல்லி
“இவ எப்போவும் இப்படி தான் மா சரியான வாயாடி என் கடைசி வாரிசு” என்று கூறவும்
“ஹை அப்போ எனக்கு ஒரு பார்ட்னர்” என்றவாறு தேன்மதி காயத்ரி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
காயத்ரியும், தேன்மதியும் சகஜமாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு இருக்க பெரியவர்கள் அனைவரும் மற்ற புறமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
ஜானகி தன் மனக்கவலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு வேதவல்லியோடு சகஜமாக பேச தொடங்க அதை பார்த்து நரசிம்மன் சிறிது நிம்மதியாக உணர்ந்தார்.
பேச்சு சுவாரஸ்யத்தில் நேரத்தைக் கவனிக்காமல் அனைவரும் இருந்து விட கவிகிருஷ்ணாவோ அவர்களது வீட்டில் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
கௌசிக் ஓரக் கண்ணால் அவனைப் பார்ப்பதும் கையில் வைத்திருந்த சஞ்சிகையைப் பார்ப்பதுமாக அமர்ந்திருக்க பொறுமை தாளாமல் அவனருகில் வந்து அமர்ந்து கொண்ட கவிகிருஷ்ணா கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான்.
“அண்ணா நான் வேணும்னா அம்மாவை போய் கூட்டிட்டு வரவா?” தயங்கி தயங்கி கேட்ட கௌசிக்கை பார்த்த கவிகிருஷ்ணா
“ஸார்க்கு இப்போ தான் அந்த ஐடியா வருதா?” என்று கேட்க அவனோ நாக்கை கடித்து கொண்டு மீண்டும் தன் கையில் வைத்திருந்த சஞ்சிகைக்குள் தன் முகத்தை புதைத்து கொண்டான்.
“டேய் கௌசிக்! முடியலடா டைம் பத்து முப்பது ஆச்சு அம்மாவை வரச்சொல்லுடா பசி தாங்க முடியல இரண்டு பேரும் போனை வேற வைத்துட்டு போயிட்டாங்க” சோர்வாக கூறிய கவிகிருஷ்ணாவை பார்க்கவே கௌசிக்கிற்கு பாவமாக இருந்தது.
‘எவ்வளவு கெத்தான டாக்டர் இப்படி ஆகிட்டார்’ என மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டவன்
“சரி ண்ணா இருங்க போய் கூட்டிட்டு வர்றேன்” என்று விட்டு எழுந்து கொள்ள
“ஒரு நிமிஷம் கௌசிக்” என்று எழுந்து நின்ற கவிகிருஷ்ணா
“உன்னை நான் நம்பமாட்டேன் நீயும் உள்ளே போய் பேசிட்டு இருந்தாலும் இருப்ப நான் வாசல் வரைக்கும் வர்றேன் நீ உள்ளே போய் அம்மாவையும், காயத்ரியையும் கூட்டிட்டு வா” என்று கூற
“எல்லாம் என் நேரம்” என முணுமுணுத்துக் கொண்டே கௌசிக் வெளியேறி சென்றான்.
கௌசிக்கை உள்ளே அனுப்பி விட்டு வாசலில் நின்று தோட்டத்தை கை கட்டி பார்த்து கொண்டு நின்றவன்
“கவி…கிருஷ்ணா” என்ற குரலில் திரும்பி பார்த்தான்.
ஜானகி புன்னகையோடு அவனைப் பார்த்து கொண்டு நிற்க அவரை அங்கு எதிர்பார்க்காதவனோ புன்னகையோடு சற்று சங்கடமாக அவரை பார்த்தான்.
“என்ன கிருஷ்ணா வெளியே நிற்குற? உள்ளே வா கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்” என்றவாறே வந்த தன் அன்னையைப் பார்த்து
“அம்மா” என்று சொல்ல வந்தவன்
ஜானகியின் முகத்தைப் பார்த்து விட்டு
“டைம் பத்து முப்பது ஆச்சு ம்மா அவங்க நாளைக்கு காலையில் சென்னைக்கு வேறு போகணும் அவங்களை கஷ்டப்படுத்தாம வாங்கம்மா” எனவும்
வேதவல்லியின் பின்னால் நின்ற கௌசிக்கோ
“அம்மா அண்ணா சும்மா சொல்லுறாங்க அவருக்கு செம்ம பசி” என்று கூற அவன் கூறியதை கேட்டு ஜானகி சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
கௌசிக் தன் அன்னையின் பின்னால் நின்றதைப் பார்த்த கவிகிருஷ்ணா
“எனக்கு அப்போவே தெரியும் டா நீ இப்படி ஏதாவது பண்ணுவேன்னு” என்றவாறே அவனை நோக்கி செல்ல
அவனோ
“அய்யோ! அம்மா!” என்று அலறி கொண்டு வீட்டிற்குள் ஓடிச்சென்றான்.
“டேய் கிருஷ்ணா! விடுடா ஏதோ சின்ன பையன் தெரியாமல் பண்ணிட்டான்” என்ற வேதவல்லியைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவன்
“நோ வே ம்மா இன்னைக்கு அவன் காலி” என்றவாறே வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.
கௌசிக்கின் சத்தத்தில் திரும்பிப் பார்த்த அனைவரும் கௌசிக்கின் பின்னால் ஓடி வந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்து புன்னகத்து கொண்டனர்.
“அய்யோ! இன்னைக்கு கௌசிக் அண்ணா செத்தான் கிருஷ்ணா அண்ணா கிட்ட வம்பு பண்ணா அவர் சும்மா விடமாட்டாரு ஓரளவுக்கு தான் அவர் பொறுமை எல்லாம் அதை கடந்து போயிட்டார்னா அவ்வளவு தான் இன்னைக்கு செம்ம எண்டர்டெயிண்ட்மண்ட் இருக்கும் தேன்மதி எப்போதாவது தான் இந்த அரிய சம்பவங்களை எல்லாம் பார்க்கலாம்” என்று சிரித்துக்கொண்டே கூறிய காயத்ரியின் வார்த்தைகள் எல்லாம் தேன்மதியின் செவிகளில் விழுந்தாலும் அவள் பார்வை முழுவதும் கவிகிருஷ்ணாவின் மீதே இருந்தது.
சிரித்த முகமாக கௌசிக்கை விரட்டி ஓடிச்சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணா இந்த இரண்டு, மூன்று வாரங்களில் அவள் பார்த்திராதவன்.
“என்னோட கவி திரும்பவும் வந்துட்டான்” என்று மனதிற்குள் கூறி கொண்டவள் ரசனையோடு அவனைப் பார்த்து கொண்டு இருந்தாள்.
கௌசிக் படியேறி மேலே செல்ல கவிகிருஷ்ணாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.
அவனது பிடிக்குள் சிக்கி கொள்ளாமல் லாவகமாக ஓடி வந்த கௌசிக் மறுபடியும் படியிறங்கி ஓட கவிகிருஷ்ணாவோ கீழே இருந்த தேன்மதியைப் பார்த்து கொண்டே படியை நோக்கி ஓடி வந்தான்.
தேன்மதியின் பார்வை கவிகிருஷ்ணாவை நோக்கி இருக்க அவனது பார்வையோ தேன்மதியின் மீதும், கௌசிக்கின் மீதுமே இருந்தது.
தேன்மதியைப் பார்த்து கொண்டே படியில் கால் வைக்க போனவன் கால் தடுமாறி விழப் போக
“கவி!” என்ற கூவலோடு தேன்மதி வேகமாக படி நோக்கி ஓடி வந்தாள்.
தேன்மதியின் சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்க அதற்குள் கவிகிருஷ்ணா தன்னை நிலைப்படுத்தி நின்று கொண்டான்.
“கிருஷ்ணா!” எனப் பதட்டத்துடன் வேதவல்லியும், ஜானகியும் ஒன்றாக தேன்மதியின் அருகில் ஓடி வர
“அம்மா பார்த்து வாங்க” என்றவாறே படியிறங்கி வந்தவன்
“ஒண்ணும் இல்லை ம்மா கால் சிலிப் ஆகிடுச்சு” எனவும்
“நல்ல வேளை எதுவும் ஆகல எல்லாம் இவனால வந்தது” என்றவாறே வேதவல்லி கௌசிக்கின் காதை திருக கவிகிருஷ்ணா சிரித்துக்கொண்டே அவனின் மற்றைய காதைப் பிடித்து கொண்டான்.
தேன்மதியோ எதுவும் பேசாமல் விக்கித்துப் போய் நிற்க குழப்பமாக அவளை பார்த்த கவிகிருஷ்ணா
“தேன்மதி! தேன்மதி” என்று அழைக்க அப்போதும் அவள் அப்படியே எந்த மாற்றமும் இன்றி நின்றாள்.
எல்லோரும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் அருகில் வந்து சேர்ந்தனர்.
சம்யுக்தா பதட்டத்துடன்
“மதி!” என்றவாறே அவள் தோள் தொட கனவில் இருந்து விழிப்பதைப் போல தன் முன்னால் நின்றவனைப் பார்த்தவள்
மேலிருந்து கீழாக அவனைப் பார்த்து விட்டு
“கவி உனக்கு அடி எதுவும் படல தானே? மலையில் இருந்து விழுந்ததில் உனக்கு எதுவும் ஆகல தானே?” என்று கேட்க அவனோ அவளது கேள்வியில் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்……
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.