Katre-17
Katre-17
அதிர்ச்சியில் உறைந்து நின்ற தேன்மதி உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு கவிகிருஷ்ணா கையில் இருந்த தன் கையை வேகமாக உருவிக் கொண்டு பின்னால் நகர்ந்து போக அவனோ மனம் நிறைந்த வேதனையுடன் அவள் முகத்தையே பார்த்து கொண்டு நின்றான்.
“இல்லை இது நடக்காது நடக்கவும் கூடாது இது ஒரு நாளும் நடக்காது” கவிகிருஷ்ணா அளித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் அரற்றிக் கொண்டு பின்னால் நகர்ந்து சென்ற தேன்மதி சம்யுக்தாவின் மேல் மோதி நின்றாள்.
தன் மேல் மோதி தடுமாறி விழப்போனவளை தாங்கிப் பிடித்துக் கொண்ட சம்யுக்தா கவலையுடன் சுரேந்திரனைப் பார்க்க அவரோ கவிகிருஷ்ணாவை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நின்றார்.
“அம்மா அவங்க கிட்ட சொல்லுங்கம்மா இது சரியில்லை அவங்களைப் போய் நான் எப்படி?
அவருக்கு எடுத்து சொல்லுங்கம்மா” கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருக்க சம்யுக்தாவின் கை பிடித்து கெஞ்சலாக கேட்ட தேன்மதியைப் பார்த்து கவிகிருஷ்ணா மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே கலங்கிப் போயினர்.
‘நான் அவசரப்பட்டு இருக்க கூடாதோ?’ மனதிற்குள் தன்னை தானே கேள்வி கேட்ட கவிகிருஷ்ணா விருத்தாசலத்தை திரும்பி பார்க்க
அவரோ
“என்ன கிருஷ்ணா இதெல்லாம்? நான் தான் உன்னை பொறுமையாக இருக்க சொன்னேன் இல்லையே? அப்புறமும் ஏன் இப்படி?” என்று கவலையாக கேட்க அவனோ பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான்.
“தேன்மதி கொஞ்சம் நான் சொல்ல வர்றதையும் கேளுமா” என்றவாறே விருத்தாசலம் தேன்மதியின் அருகில் வந்து நின்று கூறவும்
நிமிர்ந்து அவரைப் பார்த்தவள்
“இத்தனை நாளாக நீங்க சொன்னதை எல்லாம் கேட்டேன் தான் டாக்டர் ஆனா இந்த விஷயத்தை மட்டும் என்னால ஏற்றுக் கொள்ள முடியாது என்னோட கவியை என்னால எப்படி டாக்டர் மறக்க முடியும்?” என்று கேட்க கவிகிருஷ்ணாவோ அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு விரக்தியாக புன்னகத்தான்.
“தேன்மதி நான் உங்களை இந்த விஷயத்தை பற்றி யோசிக்க சொல்லல கிருஷ்ணா உங்க மேல அன்பு வைத்து இருக்கான் அது எனக்கும் தெரியும் இப்போ நான் உங்களை அந்த விடயத்தை பற்றி பேசிக் கஷ்டப்படுத்த விரும்பல உங்களுக்கு எல்லாக் குழப்பங்களும் தீர்ந்ததா? இல்லையா? அது தான் இப்போ இங்க எங்களுக்கு கவனிக்க வேண்டிய விஷயம்”
தன்னால் முடிந்த மட்டும் தேன்மதியின் கவனத்தை திசை திருப்பும் வகையில் விருத்தாசலம் கேள்வி கேட்கவும்
தன் கண்களை துடைத்து கொண்டு அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“எஸ் டாக்டர் எல்லாம் தெளிவாகிடுச்சு” என்று கூற கவிகிருஷ்ணாவோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்றான்.
“டாக்டர் அவர்!”
“தேன்மதி! நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்க உங்க கவனம் இங்கே மட்டும் தான் இருக்கணும்” சிறு கண்டிப்போடு விருத்தாசலம் கூறவும் முகம் வாட அவரைப் பார்த்து சரியென்று தலை அசைத்தவள் பார்வையோ கவிகிருஷ்ணா சென்ற வழியையே நோக்கி இருந்தது.
‘இந்த பொண்ணு என்ன எதிர்பார்க்குறான்னே தெரியலையே’ சிந்தனையோடு தேன்மதியின் முகத்தை பார்த்த விருத்தாசலத்திற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
“சரி மிஸ்டர் சுரேந்திரன் தேன்மதி இப்போ பழைய படி மாறிட்டாங்க இன்னும் இரண்டு, மூன்று நாள் அவங்களை செக் பண்ணிட்டு அதற்கு அப்புறமாக அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணுறேன் இப்போ மறுபடியும் அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க” என்று விட்டு திரும்பி செல்ல போன விருத்தாசலம்
“டாக்டர் ஒரு நிமிஷம்” என்ற தேன்மதியின் குரலில் திரும்பி கேள்வியாக அவளை நோக்கினார்.
“நீங்க எந்த மறுப்பும் சொல்ல கூடாது சொல்ல முடியாது மிஸஸ். தேன்மதி கவியரசன்!” உறுதியாக ஒலித்த விருத்தாசலத்தின் குரலில் தலை குனிந்து கொண்டவள்
“நான் ஹாஸ்பிடல் வர்றேன் டாக்டர்” என்று கூற அவர்களைப் பார்த்து தலை அசைத்து விட்டு விருத்தாசலம் வெளியேறி சென்றார்.
வெளியில் தோட்டத்தில் கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு மனம் நிறைந்த கவலையுடன் இலக்கின்றி வெறித்துப் பார்த்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்த விருத்தாசலம் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு அவனை நெருங்கி சென்றார்.
“கிருஷ்ணா!” விருத்தாசலம் கவிகிருஷ்ணாவின் தோள் மேல் கை வைக்கவும்
அவசரமாக தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு அவரைப் பார்த்து புன்னகத்தவன்
“போகலாமா டாக்டர்?” என்று கேட்டான்.
“கிருஷ்ணா என்ன ஆச்சு உனக்கு? நீ இப்படி உன் கட்டுப்பாட்டை இழந்து நான் பார்த்ததே இல்லையே! நீ ஒரு டாக்டர் அதை மறந்துடாதே! ஒவ்வொரு பேஷண்டையும் அன்னைக்கு பிறந்த குழந்தை மாதிரி தான் நாம கையாள வேணும் அப்படி இருக்கும் போது தேன்மதி கிட்ட நீ இப்படி அதிரடியாக பேசுவது சரியா சொல்லு?”
“டாக்டர் அது தப்பு தான் நான் ஒத்துக்கிறேன் அந்த நேரம் எனக்கு என்ன பண்ணுறோம்னு தெரியல அவ அப்படி பேசப் பேச என்னை அறியாமலே அப்படி நடந்துகிட்டேன் நான் வேணும்னா இப்போவே தேன்மதி கிட்ட ஸாரி சொல்லிட்டு வரட்டுமா டாக்டர்? எனக்கே
நான் பண்ணது தப்புன்னு புரியுது டாக்டர்” என்ற கவிகிருஷ்ணாவின் தோளில் ஆதரவாக தட்டி கொடுத்த விருத்தாசலம்
“கிருஷ்ணா உன் மனதை நீ மறைக்காமல் ஓபனா சொல்லிட்ட அது நல்ல விஷயம் தான் ஆனா நீ சொன்ன நேரமும், சூழ்நிலையும் தான் சரி இல்லை இப்போ மறுபடியும் நீ தேன்மதி கிட்ட பேசப் போனால் வேற ஏதாவது குழப்பம் வரலாம் கொஞ்ச நேரம் போகட்டும் அதற்கு அப்புறமாக இதை பற்றி பேசலாம் இப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்” எனவும்
“டாக்டர் நீங்க இன்னும் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலயே! வாங்க சாப்பிட்டுட்டு போகலாம்” என்றவாறே விருத்தாசலத்தை தன்னோடு தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் கவிகிருஷ்ணா.
கவிகிருஷ்ணா வீட்டினுள் வருவதைப் பார்த்ததும் அவசரமாக அவனருகில் செல்லப் போன வேதவல்லி அவன் பின்னால் வந்த விருத்தாசலத்தை பார்த்ததும் சட்டென்று நின்ற இடத்திலேயே நின்றார்.
“அம்மா டாக்டருக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வைங்கம்மா”
“ஹான்…ஆஹ் சரி டா கண்ணா” தன் முகத்தை முயன்று சாதாரணமாக வைத்து கொண்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்த தன் அன்னையை கவனித்த கவிகிருஷ்ணா விருத்தாசலம் தன் அருகில் இருக்கவும் எதுவும் பேசாமல் அமைதியாக அவரது நடவடிக்கைகளை பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான்.
சாப்பிட்டு விட்டு விருத்தாசலம் கை கழுவுவதற்காக எழுந்து சென்று விட தன் அன்னையின் அருகில் வந்த கவிகிருஷ்ணா
“அம்மா நீங்க எதைப் பற்றி யோசிச்சுட்டு இருக்கீங்கனு தெரியும் நான் நைட் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமாக இதை பற்றி உங்க கிட்ட முழுமையாக பேசுறேன் இப்போ அந்த யோசனையோடு இருக்காதீங்கம்மா” என்றவன் விருத்தாசலம் வருவதைப் பார்த்ததும் அவரைப் பார்த்து புன்னகத்து விட்டு அவரைக் கடந்து சென்றான்.
சிறிது நேரத்தில் விருத்தாசலத்தோடு, கவிகிருஷ்ணா புறப்பட்டு சென்று விட வேதவல்லி கவிகிருஷ்ணா சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளையே மனதிற்குள் மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்த்து கொண்டு நின்றார்.
ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த தேன்மதியோ முதன்முதலாக ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வில் தவித்து கொண்டு இருந்தாள்.
அவளது மனமோ அந்த ஹாஸ்பிடலினுள் செல்லும் ஒவ்வொரு நொடியையும் எண்ணி அச்சம் கொண்டது.
சிறிது நேரம் அந்த ஹாஸ்பிடல் வாசலிலேயே தயங்கி நின்றவள்
தனக்கு ஏன் இப்படி ஒரு அச்சம்? என்றெண்ணி தன்னை தானே கடிந்து கொண்டு ஆழ்ந்து மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டு முன்னே நடந்து சென்றாள்.
சம்யுக்தா, சுரேந்திரன், நரசிம்மன் மற்றும் ஜானகி நடப்பது என்னவென்று புரியாமல் தேன்மதியைப் பின் தொடர்ந்து செல்ல அவர்களைப் பார்த்த
விருத்தாசலம் புன்னகையோடு அவர்களை நோக்கி வந்தார்.
“வாங்க தேன்மதி! இப்போ எல்லாம் ஓகே ஆகிடுச்சா? இங்கே இருக்குறதுல எதுவும் பிரச்சினை இல்லை தானே?”
“இல்லை டாக்டர் ஐ யம் ஓகே” என்றவளது பார்வையோ அவரையும் தாண்டி பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் மீது சென்று விழுந்தது.
அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டாற் போல தன் பின்னால் திரும்பி பார்த்த விருத்தாசலம்
“வா கிருஷ்ணா உன்னை தான் கூப்பிட நினைச்சேன் அதற்கிடையில் நீயே வந்துட்ட” எனவும்
அவரைப் பார்த்து புன்னகத்து கொண்டவன்
“டாக்டர் நீங்க கேட்ட ரிப்போர்ட்ஸ்” என்று ஒரு பைலை அவரிடம் கொடுத்து விட்டு தேன்மதியையும், சுற்றி நின்றவர்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி மீண்டும் தன் அறையை நோக்கி சென்றான்.
“வாங்க நம்ம இந்த பக்கமாக போகலாம்” என்று அவர்களை மற்றைய புறம் அழைத்து சென்ற விருத்தாசலம் அவர்கள் அனைவரையும் தனது அறைக்குள் அழைத்துச் சென்று அமரச் சொல்லி விட்டு தன் கையில் இருந்த பைலை பிரித்து பார்க்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் அந்த பைலில் இருந்த ரிப்போர்ட்களை எல்லாம் பார்த்து கொண்டு நின்றவர் அந்த பைலை மூடி வைத்து விட்டு அவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டார்.
“இந்த ரிப்போர்ட் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்னால் எடுத்தது இப்போ தேன்மதிக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு இல்லையா? அதனால மறுபடியும் இந்த ரிப்போர்ட் எல்லாம் எடுத்து பார்க்கணும் அதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வந்தால் உங்களை உடனே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்”
“இப்போவே எடுத்துக்கலாமா டாக்டர்?” அவசரமாக கேள்வி கேட்டவளை பார்த்து புன்னகத்த விருத்தாசலம்
“ஸ்யூர் மா எடுக்கலாம் பட் கிருஷ்ணா இப்போ வேறு ஒரு பேஷண்டை பார்க்க போய் இருக்கான் அவன் வந்ததும் செக் அப்க்கு போகலாம்” என்று கூற
தேன்மதியின் முகமோ சுருங்கி போனது.
“அப்புறம் சுரேந்திரன் நீங்க எல்லோரும் இங்க இருக்கணும்னு அவசியம் இல்லை யாராவது ஒருத்தர் தேன்மதியோட இருக்க மற்றவங்க விசிட்டிங் டைம்க்கு வரலாம் உங்களுக்கு புரியுது தானே?” என விருத்தாசலம் கேட்கவும்
ஆமோதிப்பாக தலை அசைத்த சுரேந்திரன்
“புரியுது டாக்டர் ஜானகி தேன்மதியோட இருப்பாங்க நாங்க எல்லோரும் ஈவ்னிங் வர்றோம் எப்படியாவது மதி சரியாகி
வந்தாலே போதும்” என்றவர் தேன்மதியை அவள் ஏற்கனவே அந்த ஹாஸ்பிடலில் இருந்த இடத்தில் விட்டு விட்டு செல்ல அவளோ ஜானகியின் கையை பற்றி கொண்டு அவர்கள் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றாள்.
“மதி இப்படியே நின்னுட்டு இருந்தால் கால் வலிக்கும் இப்படி உட்கார்ந்துக்கோமா” என்றவாறே அங்கிருந்த கட்டிலில் அவளை அமரச் செய்தவர் அவளருகில் கதிரை ஒன்றை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்டார்.
“என்ன கண்ணு நல்லா இருக்கியா?” தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்தவள் அங்கு நின்ற அந்த வயதான பெண்மணியைப் பார்த்து முகம் மலர புன்னகத்தாள்.
“பாட்டி! எப்படி இருக்கீங்க? ஒரு வாரமாக உங்களை இங்கே காணவே இல்லையே” புன்னகை மாறாத முகத்துடன் கேட்ட தேன்மதியை பார்த்து பதிலுக்கு புன்னகத்தவர்
“வீட்டுக்காரருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை கண்ணு அது தான் வரல” என்று கூறினார்.
“அய்யோ! என்ன ஆச்சு பாட்டி? இப்போ எப்படி இருக்காங்க?” பதட்டத்துடன் தேன்மதி கேட்க
“பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை கண்ணு சாதாரண காய்ச்சல் தான் இப்போ நல்லா இருக்காரு ஆமா இது யாரு உன்னோட அம்மாவா கண்ணு?”
“ஆமா பாட்டி அம்மா தான் என்னோட செல்ல அத்தை என் கவியோட அம்மா” என்றவள் புன்னகையோடு ஜானகியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“ரொம்ப சந்தோஷம்மா உனக்கு உடம்பு குணமாகி நீங்க எல்லோரும் ஊருக்கு போகப் போறதாக நர்ஸ் அம்மா சொன்னாங்க எப்போ கண்ணு போறீங்க?”
“இன்னும் இரண்டு, மூணு நாளைக்குள்ள போயிடுவோம் பாட்டி அப்புறம் நீங்க சென்னை வந்தால் கண்டிப்பாக எங்க வீட்டுக்கும் வரணும் சரியா?”
“நிச்சயமாக வருவேன் கண்ணு ஆமா கவின்னு ஒரு தம்பி பற்றி அடிக்கடி சொல்லுவியே அந்த தம்பி வரலயா?” அவரது கேள்வியில் சட்டென்று முகம் வாடி போனவள் ஜானகியை திரும்பி பார்க்க அவளை பார்த்து வேண்டாம் என்று தலை அசைத்தவர்
அந்த வயதான பெண்மணியின் புறம் திரும்பி
“அவன் வரமாட்டான் மா நிம்மதியான ஒரு இறுதியான இடத்திற்கு போயிட்டான்” என்று கூற
“அட கடவுளே!” என்று அதிர்ச்சியாக தன் வாயில் கை வைத்து நின்றார் அந்த வயதான பெண்மணி.
“ஒரு சோதனை முடிந்ததும் மற்றொரு சோதனையா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தேன்மதியின் தலையை வருடிக் கொடுத்தவார் சிறிது நேரம் அமைதியாக அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றார்.
பின்னர் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே
“எதற்கும் கவலைப்படாதே கண்ணு! கடவுள் நிச்சயமாக உனக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்” என்று கூறிக்கொண்டிருந்த வேளை
“எக்ஸ்கியுஸ் மீ தேன்மதி செக் அப்க்கு போகலாமா?” என்றவாறு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் கவிகிருஷ்ணா……
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.