Katre-19
Katre-19
“அம்மா பசியில் சிறு குடல் பெருங்குடலை சாப்பிடுதுமா வந்து சாப்பாடு போடமால் அங்கே எதைம்மா பார்த்துட்டு நிற்குறீங்க? வந்து சாப்பாடு போடுங்கம்மா ப்ளீஸ்” டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு தட்டை கையில் ஏந்தியபடி கௌசிக் கூறவும் தன் முகத்தை உடனே சரி செய்து கொண்டு டைனிங் டேபிளின் அருகில் சென்ற வேதவல்லி சாப்பாட்டை பரிமாறத் தொடங்கினார்.
கவிகிருஷ்ணா அவரது மன எண்ணங்களை புரிந்து கொண்டாலும் இப்போது எதுவும் பேசக்கூடாது என்று முடிவெடுத்து கொண்டு அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
கௌசிக் மற்றும் காயத்ரி சாப்பிட்டு விட்டு தங்கள் அறைகளுக்கு சென்று விட கவிகிருஷ்ணா மாத்திரம் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.
சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த வேதவல்லியின் கை பிடித்து தன் அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தவன் அவர் முகத்தை பார்க்க அவரோ வேறு எங்கோ பார்த்து கொண்டு இருந்தார்.
“அம்மா! அம்மா இங்கே பாருங்க ம்மா!” தன் புறம் வேதவல்லியின் முகத்தை அவன் திருப்ப முயல அவரோ அவனது கைகளை தட்டி விட்டார்.
“அம்மா ஸாரி ம்மா! உங்க கிட்ட தான் இந்த விஷயத்தை முதலில் சொல்லி இருக்கணும் அந்த நேரம் நான் ஏதோ ஒரு அவசரத்தில் அப்படி ப்ச் என்ன பண்ணுறனு புரியாமல் நான் அப்படி பண்ணி இருக்க கூடாது ம்மா” தன் மகன் கலங்கிப் போய் அமர்ந்திருப்பதை தாங்க முடியாமல் அவனது கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்ட வேதவல்லி
“என்ன ஆச்சு கண்ணா உனக்கு? ஆரம்பத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக தானே இருந்த இப்போ என்ன ஆச்சு?” என்று கேட்கவும் அவர் கையில் தன் முகத்தை புதைத்து கொண்டான் கவிகிருஷ்ணா.
“கிருஷ்ணா!” அவனது தலையை மற்ற கையால் வருடிக் கொடுத்தவாறே வேதவல்லி அவனை அழைக்க
கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்தவன்
“நான் ஆரம்பத்தில் தேன்மதியை எண்ணி கவலைப்பட்டது உண்மை தான் அந்த நேரம் என் மனதில் அவ மேல் எந்த ஒரு அபிப்பிராயமும் இருக்கல ஆனா நாளாக நாளாக என்னை அறியாமலே அவ பக்கம் நான் போயிட்டேன் அவ என்னை வேறு யாரோ மாதிரி பார்க்கும் போது தான் எனக்கே என் மனதில் இருக்குறது புரிந்தது அவ நேற்று அப்படி நடந்துகிட்டதைப் பார்த்து என்னால சாதாரணமாக இருக்க முடியல ம்மா அவ நெருங்கி வரும் போது எனக்கு அது சரியாக தோணல நான் விலகி போனேன் ஆனா அவ இப்போ விலகி போகும் போது எனக்கு என்ன பண்ணுறதுனே புரியலம்மா நான் தான் அவ நிலைமை தெரிந்து இருந்தும் என் மனசில் ஆசை வளர்த்துட்டேன் அது என் தப்பு தானேம்மா?” என சிறு குழந்தையாக தன் அன்னையின் முகம் பார்த்து கேட்க அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் வேதவல்லி.
“என்னால் அவளை மறக்க முடியுமானு தெரியலைம்மா அதேநேரம் அவ இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? அதுவும் தெரியலைம்மா காலையில் அவ பேசப் பேச என்னை விட்டு அவ போயிடுவாளோனு ஒரு பயம் எனக்கு வந்துடுச்சு அது தான் நான் அவ கிட்ட என் மனதில் இருக்குறதை எல்லாம் சட்டுன்னு சொல்லிட்டேன் ஆனா அதற்கு அப்புறமாக தான் நான் பண்ண காரியமே எனக்கு புரிந்தது அது தான் தேன்மதி கிட்ட நான் மன்னிப்பு கேட்டுட்டேன் அவ சந்தோஷமாக இருக்கட்டும்மா நான் அவளை இனி தொந்தரவு பண்ண மாட்டேன்”
“கிருஷ்ணா!” அதிர்ச்சியாக அவன் முகம் பார்த்த வேதவல்லியைப் பார்த்தவன்
“என்னால சட்டென்று இந்த நிலையில் இருந்து வெளியே வர முடியாது ம்மா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” எனவும் கவலையுடன் தன் மகனை பார்த்தார் வேதவல்லி.
“கிருஷ்ணா! அதற்காக நீ இப்படியே இருக்க போறியா?”
“எனக்கு தெரியலையேம்மா ஆனா எதுவாக இருந்தாலும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”
“சரி கண்ணா எனக்கு எப்போதும் உங்க சந்தோஷம் தான் முக்கியம் உங்க சந்தோஷத்திற்காக அம்மா என்ன வேணும்னாலும் பண்ண தயாராக இருக்கேன் நீ எதை பற்றியும் கவலைப்படாமல் போய் தூங்கு உன் நல்ல மனதிற்கு எந்த கெடுதலும் வராது போ கண்ணா போய் தூங்கு” வேதவல்லியைப் பார்த்து சரியென்று தலை அசைத்து விட்டு கவிகிருஷ்ணா எழுந்து செல்ல அவரோ கனத்த மனதோடு படியேறி தன் மகனை பார்த்து கொண்டு இருந்தார்.
தன் மகன் மனதில் இருந்த கவலைகள் எல்லாவற்றையும் எண்ணி கவலை கொண்ட அந்த தாயின் மனம் அமைதியை நாடி கண்களை மூடி அமர்ந்திருக்க அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த தேன்மதியோ கண்களில் கண்ணீர் வடிய அதை துடைத்து விடும் எண்ணம் கூட இன்றி நின்று கொண்டிருந்தாள்.
அவளருகில் நின்ற சம்யுக்தா அவள் தோளில் கை வைக்க தன் வாயை இறுக மூடிக் கொண்டவள் அழுது கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடி சென்றாள்.
தன் அறைக்குள் வந்து கதவை சாத்திக் கொண்டவள் அந்த கதவிலேயே சாய்ந்து நின்று அழுது கொண்டிருக்க ஹாலில் நின்று கொண்டிருந்த மற்றவர்களோ குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.
சம்யுக்தா வருவதைப் பார்த்ததும் அவரருகில் சென்ற ஜானகி
“சம்யுக்தா என்ன ஆச்சு? எதற்காக தேன்மதி இப்படி அழுதுட்டே வர்றா? ஏதாவது பிரச்சினையா?” பதட்டத்துடன் கேட்கவும் அவரை பார்த்து மறுப்பாக தலை அசைத்த சம்யுக்தா கவிகிருஷ்ணா வேதவல்லியிடம் கூறிய விடயங்கள் எல்லாவற்றையும் கூற அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியாகி நின்றனர்.
“இது இந்தளவிற்கு போகும்ணு நான் எதிர்பார்க்கல மாமா” நரசிம்மன் கவலையுடன் சுரேந்திரனைப் பார்த்து கூற சிந்தனையோடு தன் நெற்றியை நீவி விட்டு கொண்டவர் தேன்மதியின் அறையை நோக்கி சென்றார்.
“தேன்மதி! அப்பா வந்திருக்கேன்மா கதவைத் திறடா”
“இல்லை ப்பா நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ப்ளீஸ் ப்பா ப்ளீஸ்” அழுது கொண்டே கூறிய தேன்மதியின் மன எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
“யாரும் தேன்மதி கிட்ட இதைப் பற்றி பேச வேண்டாம் அவளாக எதுவும் சொல்ல நினைத்தால் சொல்லட்டும்” சுரேந்திரனின் கூற்று சரியென்று படவே அனைவரும் தங்கள் தங்களது அறையை நோக்கி சென்றனர்.
அறைக்குள் தன் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த தேன்மதியோ கவிகிருஷ்ணா பேசிய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் நினைத்து தன் மனதிற்குள் மறுகிக் கொண்டு இருந்தாள்.
ஹாஸ்பிடலில் இருந்து வந்ததுமே நாளை ஊருக்கு செல்வதற்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்தவள் நேரத்தைப் பார்க்க கடிகாரம் ஒன்பது மணியைக் காட்டியது.
காலையில் நேரத்திற்கு சென்னைக்கு செல்ல முடிவெடுத்து இருந்ததால் அப்போதே வேதவல்லியிடம் சொல்லி விட்டு வரலாம் என்று முடிவெடுத்தவள் சம்யுக்தாவோடு வேதவல்லியின் வீட்டை நோக்கி சென்றாள்.
அவரது வீட்டு வாசலை நெருங்கும் போதே கவிகிருஷ்ணா வேதவல்லியுடன் பேசுவதை கேட்டு திரும்பி செல்ல போன தேன்மதி கவிகிருஷ்ணாவின்
“என்னால அவளை மறக்க முடியுமானு தெரியலைம்மா” என்ற வசனத்தில் அப்படியே அந்த இடத்தில் உறைந்து நின்றாள்.
அவன் ஒவ்வொரு விடயமாக வேதவல்லியிடம் கூறி கொண்டிருக்க அவளோ அதை எல்லாம் கேட்டு கண்ணீர் வடித்து கொண்டு நின்றாள்.
அவளருகில் நின்ற சம்யுக்தாவோ அவளை ஆறுதல் படுத்தும் வழி தெரியாமல் கவலையுடன் அவளை பார்த்து கொண்டு நின்றார்.
“நான் தானே அவர் மனதில் ஆசையை வளர்க்குற மாதிரி நடந்து இருக்கேன்! என்னால தானே அவருக்கு இவ்வளவு கஷ்டம்! இப்போ எப்படி நான் இந்த பிரச்சினையை இல்லாமல் செய்வேன்? நான் அவரை விட்டு தூரமாக தள்ளி போனால் அவர் பழைய படி மாறிடுவாரா?” கவலையுடன் யோசித்து கொண்டிருந்தவள் அப்படியே கதவில் சாய்ந்தவாறே உறங்கிப் போனாள்.
காலையில் சம்யுக்தா வந்து கதவைத் தட்டிய பின்பே தன் கண்களை திறந்து பார்த்தவள் தான் இருந்த நிலையிலேயே உறங்கிப் போய் இருப்பதை எண்ணி தன் தலையில் தட்டி கொண்டாள்.
சம்யுக்தா நேற்று இரவு நடந்த சம்பவத்தை எண்ணி சிறிது அச்சம் கொண்டவராக மீண்டும் அவள் அறைக் கதவை தட்ட இம்முறை அவரை காத்திருக்க வைக்காமல் தன் அறைக் கதவை திறந்தவள் சம்யுக்தாவைப் பார்த்து புன்னகத்தாள்.
“ஸாரி ம்மா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு நான் ஒரு பதினைந்து நிமிடத்தில் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்று விட்டு அவரது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட அவரோ வியப்பாக அவளை பார்த்து கொண்டு நின்றார்.
“என்ன அண்ணி இங்கே நின்னுட்டு யோசிச்சுட்டு இருக்கீங்க?” தங்கள் அறையில் இருந்து வெளியேறி வந்தவாறே கேட்ட ஜானகியை பார்த்து புன்னகத்து கொண்ட சம்யுக்தா
“எல்லாம் இந்த தேன்மதியைப் பற்றி தான் எப்போ என்ன பண்ணுறானே தெரியல சரி அதை விடு நான் போய் டிபன் ரெடி பண்ணுறேன் நீ போய் எல்லாம் பெக் பண்ணியாச்சானு பார்த்துக்கோ ஜானகி” என்று விட்டு சென்று விட ஜானகியும் சரியென்று விட்டு அவர் வேலைகளை கவனிக்க சென்றார்.
குளித்து விட்டு தயாராகி வந்த தேன்மதி எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சென்னை செல்வதற்காக அந்த வீட்டில் இருந்து வெளியேறி வந்தாள்.
“அம்மா வேதவல்லி ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு வந்துடலாம் வாங்க”
“ஆமா வாங்க சொல்லிட்டு வந்துடலாம்” சம்யுக்தா முன்னால் செல்ல அவரைப் பின் தொடர்ந்து மற்ற அனைவரும் வேதவல்லியின் வீட்டை நோக்கி சென்றனர்.
வாசலில் அமர்ந்து பூக்களை தொடுத்து கொண்டிருந்த வேதவல்லி அவர்கள் எல்லோரையும் பார்த்து புன்னகை முகமாக எழுந்து நின்றார்.
நேற்று இரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து வேதவல்லியினாலும், தேன்மதியினாலும் முழுமையாக வெளியே வர முடியவிட்டாலும் இரவு நடந்த சம்பவம் ஒருவருக்கொருவர் தெரியாது என்று எண்ணி சகஜமாக ஒருவரையொருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.
“வல்லி ஆன்ட்டி! ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி நீங்க இவ்வளவு நாளாக எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்திருக்கீங்க”
“இதில் என்னடா இருக்கு? நீயும் காயத்ரி மாதிரி என் பொண்ணு தானே”
“இருந்தாலும் நீங்க எங்களுக்கு ரொம்ப உதவி பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றிங்க இந்தாங்க வீட்டு சாவி அப்புறம் சென்னை வந்தால் கண்டிப்பாக எங்க வீட்டுக்கும் நீங்க வரணும்” சம்யுக்தா சாவியை வேதவல்லியிடம் கொடுத்தவாறே கூறவும்
புன்னகையோடு அவர்களைப் பார்த்து தலை அசைத்தவர்
“கண்டிப்பாக வருவோம்” என்று கூறினார்.
“ஆமா பசங்க எல்லோரும் எங்கே?” ஜானகியின் கேள்வியில் சட்டென்று அவரை திரும்பி பார்த்த தேன்மதி கலவரத்தோடு வேதவல்லியை நோக்கினாள்.
“கிருஷ்ணாவும், கௌசிக்கும் ஜாக்கிங் போய் இருக்காங்க காயத்ரி குளிச்சுட்டு இருக்கா எல்லோரும் உள்ளே வந்து உட்கார்ந்து பசங்களையும் பார்த்துட்டே போகலாமே!”
“அதுவும் சரிதான் கிருஷ்ணாவையும் பார்த்துட்டு போயிடலாம் இல்லையாங்க” நரசிம்மனைப் பார்த்து ஜானகி கேட்கவும் அதற்கு மேல் யாராலும் மறுத்து பேச முடியவில்லை.
தேன்மதி சகஜமாக இருப்பதைப் போல தன்னை காட்டி கொள்ள பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து
“குட் மார்னிங் ம்மா” என்றவாறே வீட்டிற்குள் கவிகிருஷ்ணாவும், கௌசிக்கும் நுழைந்தனர்.
தேன்மதி அத்தனை நேரம் தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் கவிகிருஷ்ணாவைப் பார்த்ததுமே அவளையும் அறியாமல் கலங்கி போனாள்.
யாரும் அறியாமல் தன் கண்களை துடைத்து விட்டவள்
“ஹாய் தேன்மதி!” என்ற காயத்ரியின் குரலில் அவளை பார்த்து புன்னகத்து கொண்டாள்.
சிறிது நேரம் காயத்ரியோடு பேசி கொண்டு இருந்தவள் மெதுவாக
கவிகிருஷ்ணாவின் புறம் திரும்பி பார்க்க அவனோ மறந்தும் கூட அவள் இருந்த பக்கமாக திரும்பியும் பார்க்கவில்லை.
தான் அவளை பார்ப்பதால் அவளுக்கு மனக் கஷ்டம் வந்து விடக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தவன் அதை கடைப்பிடிக்கவும் செய்தான்.
சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த தேன்மதியின் குடும்பத்தினர் சிறிது நேரம் கழித்து அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர்.
“கிருஷ்ணா சென்னை வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வரணும் சரியா?” ஜானகியின் கேள்விக்கு புன்னகையோடு அவரை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்
“கண்டிப்பாக வருவேன் ம்மா” என்று கூறவும் புன்னகையோடு அவனது தலையை வருடிக் கொடுத்தார் ஜானகி.
எல்லோரும் வீட்டில் இருந்து வெளியேறி செல்லும் போது கவிகிருஷ்ணாவின் முன்னால் வந்து நின்ற தேன்மதி அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே
“உங்க மனதில் ஆசையை வளர்க்குற மாதிரி நான் தான் நடந்துகிட்டேன் இதில் உங்க மேல தப்பு இல்லை இதற்காக உங்க லைஃப்பை ஸ்பாயில் பண்ணிடாதீங்க நான் வர்றேன்” என்று விட்டு விறுவிறுவென்று வெளியேறி சென்று விட அவனோ இறுகிய முகத்துடன் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
எல்லோரிடமும் சொல்லி விட்டு தேன்மதி காரின் பின் இருக்கையில் ஏறி கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து கொள்ள
அவர்களது கார் தங்கள் வீட்டு கேட்டை தாண்டும் வரை தேன்மதியையே பார்த்து கொண்டு நின்ற கவிகிருஷ்ணா பெருமூச்சு விட்டவாறே தன் தலையை கோதிக் கொண்டு தங்கள் வீட்டிற்குள் திரும்பி சென்றான்……
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.