Katre-2

Katre-2

காற்றே-2

ஊட்டியின் காலை நேரத்துக் காற்று ஜன்னலின் ஊடாக தன் முகம் வந்து மோத அதை உணர்ந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அங்கே மேஜை மீதிருந்த தன் பெயர்ப்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா என்கிற கவிகிருஷ்ணா.

தன் வீட்டில் உள்ளவர்களைத் தவிர வேறு எவருக்குமே தன் முழுப் பெயரை சொல்ல விரும்பாதவன் கவிகிருஷ்ணா.

ஆனால் இன்று யாரென்றே தெரியாத பெண் ஒருத்தி தன்னை அத்தனை பேரின் முன்னிலையில் கட்டி அணைத்தது மட்டுமின்றி ‘கவி’ என்று உரிமையுடன் அழைக்க வேறு செய்தது அவனது கோபத்தை எல்லை மீறச் செய்திருந்தது.

‘யார் அவள்? அவளுக்கும் எனக்கும் என்ன உறவு? இதற்கு முன்னால் தன் வாழ்வில் ஒரு தடவை கூட அவளை சந்தித்ததே இல்லையே! ஆனால் அவளது அந்த உரிமையான அழைப்பு?’ யோசித்துப் பார்க்கும்போதே கவிகிருஷ்ணாவிற்கு தலையை சுற்றி கொண்டு வந்தது.

தலையில் கை வைத்து கொண்டு அங்கிருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தவன் நினைவுகளோ அவளையே சுற்றி சுற்றி வந்தது.

சட்டென்று ஒரு பெண் தன்னை அணைத்துக் கொள்ள தடுமாறி போனவன் உடனே தன்னை சரி செய்து கொண்டு தன் மேல் இருந்து அவளை விலக்கி நிறுத்தினான்.

“கவி என்னடா இது டாக்டர் கோட் எல்லாம் போட்டு இருக்க? இங்க எதுக்கு என்னை தனியா விட்ட? ப்ளீஸ் கவி என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு இங்கே இருக்க எனக்கு பயமாக இருக்கு” விசும்பிக் கொண்டே மீண்டும் தன் மேல் சாயப் போனவளை தடுத்து நிறுத்தியவன்

தன் அருகில் நின்ற நர்ஸிடம் “இவங்களை ரெஸ்ட் எடுக்க வைங்க நான் அப்புறமாக வந்து இவங்களைப் பார்க்குறேன்” என்று விட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் நகர்ந்து செல்ல

அவளோ
“கவி…கவி…என்னையும் உன் கூட கூட்டிட்டு போ கவி…” என விடாமல் சத்தம்  போட்ட வண்ணம் நின்றாள்.

அவளின் அருகில் நின்ற நர்ஸோ “மேடம் ப்ளீஸ் இப்படி உட்காருங்க அவர் பெயர் கவி இல்ல டாக்டர் கிருஷ்ணா” என்று கூற

அதிர்ச்சியாக அவரை திரும்பி பார்த்தவள் “இல்லை இல்லவே இல்லை அது என் கவி தான் எனக்கு நல்லா தெரியும் என்னோட சின்ன வயதிலிருந்தே பழகுன என் கவியை எனக்கு நல்லாவே தெரியும் ப்ளீஸ் என்னை கவியோடு அனுப்பி வைங்க ப்ளீஸ்” என்று கெஞ்சி கொண்டு நிற்க அவளது ஒவ்வொரு வார்த்தையும் கவிகிருஷ்ணாவிற்கு குழப்பத்தையே அதிகரிக்க செய்தது.

சட்டென்று தன் கண்களை திறந்து கொண்டவன் “கிருஷ்ணா நீ என்ன பண்ணிட்டு இருக்க? அவ ஒரு பேஷண்ட் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்திருந்த ஒரு பொண்ணு அதைப் பற்றி யோசிக்காமல் நீ இப்படி உட்கார்ந்து இருக்க இது சரியா? அவ இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை பற்றி உணர்ந்துட்டு வர்றா இந்த நேரத்தில் போய் இப்படி தடுமாறி போய் வந்திருக்கியே இது தான் நீ வேலை பார்க்குற முறையா?” என தனக்குத்தானே கேள்வி கேட்டு கொண்டான்.

உடனே தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு எழுந்து நின்றவன் நேராக அவள் இருந்த இடத்தை நோக்கி சென்றான்.

அப்போது கூட அவள் அவன் சென்ற வழியையே பார்த்து “கவி…கவி…” என அழைத்து கொண்டு நிற்க ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து தன்னை சமன் செய்து கொண்டவன் அவளை நோக்கி சென்றான்.

தன்னை நோக்கி கவிகிருஷ்ணா வருவதைப் பார்த்தவள் புன்னகையோடு “பார்த்தீங்களா என் கவி வந்துட்டான்” எனவும் அவளருகில் அருகில் நின்ற நர்ஸ் பாவமாக தேன்மதியை பார்த்து கொண்டு நின்றார்.

“ஸார் நான்…”

“இட்ஸ் ஓகே தமயந்தி நீங்க போங்க நான் இவங்க கிட்ட பேசிக்கிறேன்”

“ஓகே ஸார்…” நர்ஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட கவிகிருஷ்ணாவின் அருகில் வந்த தேன்மதி அவன் கைகளை ஆதரவாக பற்றி கொண்டாள்.

“கவி எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலடா ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போடா” சுற்றிலும் பார்த்து முகத்தை சுளித்தவள் கைகளில் இருந்து தன் கையை மெல்ல விலக்கி எடுத்தவன் அவளை அங்கிருந்த கட்டிலில் அமரச் செய்து விட்டு கட்டிலின் அருகில் இருந்த கதிரையில் அவன் அமர்ந்து கொண்டான்.

“மிஸ் பர்ஸ்ட் நான் சொல்லுறதைக் கேளுங்க”

“முடியாது”

“ஏன்?”

“அது என்ன மிஸ்? யாரோ மூணாவது மனுஷனை பேசுற மாதிரி எப்போவும் போல மதின்னே பேசு கவி” அவளது ‘கவி’ என்ற அழைப்பில் கோபம் ஏற சிரமப்பட்டு கைகளை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன்

“மிஸ் இங்கே பாருங்க நீங்க இந்த இடத்தை விட்டு போகணும் தானே ஷோ நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ப்ளீஸ் புரிஞ்சுதா?” என்று கேட்கவும்

அவனை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தவள் “நீ மதின்னு என்னை கூப்பிட்டாத்தான் நான் உன் கூட பேசுவேன் நீ கேட்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவேன் இல்லேனா பேசமாட்டேன் ப்ராமிஸ்” கோபமாக மறுபுறம் திரும்பி அமர்ந்து கொள்ள இந்த முறை அவள் செய்கையைப் பார்த்து கவிகிருஷ்ணாவின் இதழ்கள் புன்னகயில் விரிந்தது.

சிறு குழந்தையை போல அவள் தன்னிடம் நடந்து கொள்வது ஏனோ அவனுக்கு புதிதாக தோன்றியது.

வீட்டினுள் தன் உடன் பிறந்த தம்பி, தங்கை கூட அவன் முன்னால் நின்று பேசியதில்லை.

அவனது அன்னைக்கு அடுத்து அவனிடம் இத்தனை உரிமையை எடுத்துக் கொண்ட ஒரே பெண் இவள் தான் என்பதை நினைத்து பார்த்தவன் புன்னகையோடு அவள் முன்னால் எழுந்து வந்து நின்றான்.

தேன்மதி வேண்டுமென்றே அவன் முகத்தை பார்க்காமல் இருக்கவும் “மதி” என்று கவிகிருஷ்ணா அழைக்க சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் குதூகலத்துடன் அவன் கை பற்றி புன்னகைத்தாள்.

“சரி ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க மதி உங்க முழுப்பெயர் என்ன?” கோபமாக பதில் கூற வந்தவளைப் பார்த்து கை காட்டி வேண்டாம் என்று தலை அசைத்தவன்

“மறுத்து பேசக்கூடாது நான் மதி ன்னு பெயர் சொல்லி பேசுனா நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொன்னீங்க தானே?” ஆமென்று தலை அசைத்தவள் கோபம் மாறாமலேயே

“என் பெயர் தேன்மதி” என்றாள்.

“தேன்மதி ஓகே உங்க ஊர் எது?”

“என்ன கேள்வி டா இது எல்லாம்?”

“உஸ் மறுத்து பேசக்கூடாது ப்ராமிஸ் ஞாபகம் இருக்கு தானே?”

“ஆமா ப்ராமிஸ் புடலங்காய் ப்ராமிஸ்! இப்போ என்ன என்னை பற்றி என் வாயால நானே சொல்லணும் அது தானே உனக்கு வேணும்? சரி சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ”

“அப்பா பேரு சுரேந்திரன். ரிடையர்ட் ஜட்ஜ். அம்மா பேரு சம்யுக்தா. பேங்க்ல அக்கௌண்ட்டண்ட். அப்புறம் எனக்கு ஒரே ஒரு மாமா. அதாவது அம்மாவோட கூட பிறந்த தம்பி அவர் பேரு நரசிம்மன். அவர் ஹைகோட்டில் வக்கீலாக இருக்காரு. அவருக்கு ஒரே ஒரு வைஃப் பேரு ஜானகி. எங்க அப்பாவோட தங்கச்சி. அவங்களுக்கு ஒரே ஒரு தடிமாட்டு பையன் பேரு கவியரசன். அவன் தான் இப்போ என் முன்னாடி அமர்ந்து என்னை இம்சை படுத்திட்டு இருக்கான்”
இறுதியாக சொன்ன வார்த்தைகளை வேண்டுமென்றே சற்று சத்தமாக தேன்மதி கூறவும் கவிகிருஷ்ணா புன்னகையோடு அவளை பார்த்து கொண்டு நின்றான்.

“என்ன அது தான் எல்லாம் சொல்லிட்டேனே இன்னும் எதுக்கு என் முகத்தையே பார்த்துட்டு இருக்க?” கோபமாக தேன்மதி கேட்கவும் அவளெதிரில் அமர்ந்து கொண்டவன்

“நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்க பதில் சொல்லணும் சரியா? நீங்க எப்படி யார் கூட ஊட்டிக்கு வந்தீங்க?” என்று கவிகிருஷ்ணா கேட்கவும்

புருவம் சுருக்கி சிறிது நேரம் யோசித்த தேன்மதி தலை வலிப்பது போல் இருக்கவே தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டாள்.

“நோ…மதி ரிலாக்ஸ் கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டாம் முதல்ல இந்த தண்ணீரை கொஞ்சம் குடிங்க ரிலாக்ஸ்” என்றவாறே அவளின் புறம் தண்ணீர் நிரம்பிய டம்ளரை நீட்ட அதை வாங்கி குடித்து முடித்தவள்

“எனக்கு தெரியலையே கவி நான் எப்படி இந்த ஊருக்கு வந்தேன்?” என மறுபடியும் அவனிடமே கேள்வி கேட்டாள்.

“சரி உங்க வீடு எங்க இருக்கு? அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என கவிகிருஷ்ணா கேட்க சட்டென்று அவனைத் திரும்பி பார்த்தவள்

“போதும் கவி நடிச்சது எனக்கு இப்போ நீ கேட்ட கேள்விக்கு யோசித்து பதில் சொன்னதுக்கே தலை எல்லாம் வலிக்குது இதில் நீ திரும்ப திரும்ப பேசி என் தலைவலியை கூட்டிட்டு இருக்க” என்றவாறே தேன்மதி தன் தலையை பிடித்து கொள்ள பதட்டத்துடன் அவளருகில் வந்தவன்

“மதி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஓவரா ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம் கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கோங்க நான் மறுபடியும் ஈவ்னிங் வர்றேன் நீங்க ரெஸ்ட் எடுங்க எதையும் யோசிக்க வேண்டாம் பீ கூல்” என்றவாறே அவளை சாய்ந்து தூங்குவதற்கு ஏற்ற வகையில் தலையணையை சரி செய்து அமைத்து கொடுத்தவன் சிறிது நேரத்தில் தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டான்.

“அந்த பொண்ணு பேசுறதை எல்லாம் வைத்து பார்த்தால் அவ பழைய சம்பவம் எல்லாவற்றையும் மறந்த மாதிரி இல்லை இடையில் நடந்த ஒரு சில விஷயங்களை தான் மறந்து இருக்கலாம்னு தோணுது அதனால தான் என்னை அவ மாமா பையன்னு நினைச்சுட்டு இருக்கா போல ஒரு வேளை அந்த பையன் என்னை மாதிரியே இருப்பானோ? சே சே இருக்காது. இப்போ என்ன பண்ணலாம்? சீஃப் டாக்டர் கிட்ட இதை பற்றி பேசிப் பார்க்கலாமா? யெஸ் அது தான் சரி” என்றெண்ணிக் கொண்டவன் தன் போனை எடுத்துக் கொண்டு மறுபுறம் நகர்ந்து சென்றான்.

மறுபுறம் தேன்மதியோ ‘கவி ஏன் தன்னிடம் வித்தியாசமாக நடந்து கொள்கிறான்?’ என்று யோசிக்க அந்த நேரம் பார்த்து அவளது தலையின் ஓரம் விண்ணெண்று ஒரு வலி எழுந்தது.

“அம்மா!” என்று அலறலோடு தன் தலையை தாங்கிக் கொண்ட தேன்மதி அப்படியே மயங்கி சரிந்தாள்….

error: Content is protected !!