Katre-20

Katre-20

இரண்டு வருடங்களுக்கு பின்னர்..

ஊட்டி

பூஜையறை முழுவதும் ஊதுபத்தி வாசனையும், புகையும் நிறைந்து இருக்க கண்களை மூடி கை கூப்பி கடவுள் படத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தாள் ராகிணி.

இரண்டு வருடங்களில் அவளது முகத்தில் சிறிது முதிர்ச்சி தென்பட்டது.

புன்னகையோடு கண்களை திறந்து கொண்டவள்
தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டே குங்குமச் சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்து கொண்டாள்.

புன்னகையோடு கண்களை மறுபடியும் மூடி கடவுளை வணங்கி கொண்ட ராகிணி பூஜையறையில் இருந்து வெளியேறி சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தட்டில் இரண்டு கப்களில் ஆவி பறக்க சுடச்சுட காஃபி எடுத்துக் கொண்டு வந்தவள் வெளியில் முற்றத்தில் அமர்ந்து மலர் தொடுத்து கொண்டிருந்த வேதவல்லியின் முன்னால்
“அத்தை காஃபி!” என்றவாறே வந்து நின்றாள்.

“வாடாம்மா! பூஜை எல்லாம் முடிந்ததா?”

“சிறப்பாக முடிஞ்சுது அத்தை! இந்தாங்க காஃபி”
புன்னகத்து கொண்டே காஃபி கப்பை அவரின் புறமாக நீட்டினாள் ராகிணி.

“என்னம்மா உன் புருஷன் எழுந்துட்டானா? இப்போ எல்லாம் வர வர ரொம்ப சோம்பேறியாக மாறிட்டான் காலையில் ஜாக்கிங் கூட போறது இல்லை”

“அவர் எப்போ அத்தை சுறுசுறுப்பாக இருந்து இருக்கார் கிருஷ்ணா அத்தானையாவது பார்த்து இவர் திருந்தனுமே!” போலியாக சலித்து கொள்வது போல ராகிணி கூறவும்

அவளை பார்த்து சிரித்த வேதவல்லி
“இது மட்டும் அவன் கேட்டான் வானத்திற்கும், பூமிக்குமாக குதிப்பான் என் பொண்டாட்டியை நீங்க உங்க சைட் இழுத்துக்குறீங்கனு அப்புறம் சின்ன பையனாட்டம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவான்” என்று கூற ராகிணியும் அவரோடு இணைந்து சிரித்துக் கொண்டே பூக்களை தொடுத்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ஜாக்கிங் முடித்து விட்டு காதில் இருந்த ஹெட்போனை கழட்டி கொண்டே
“குட் மார்னிங் ம்மா” என்றவாறே வீட்டிற்குள் நுழைந்தான் கவிகிருஷ்ணா.

பல நாட்கள் சவரம் செய்யப்படாதது போல வளர்ந்து இருந்த அவனது தாடி அவன் முகத்தில் பாதியை மறைத்து இருந்தும் அதையும் மீறி அவனது புன்னகை அவன் வசீகரத்தை மேலும் அதிகரிக்க செய்தது.

“அத்தான் இருங்க காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று விட்டு ராகிணி எழுந்து கொள்ள

“தாங்க்ஸ் ராகிணி” என அவளை பார்த்து புன்னகத்து கொண்டவன் வேதவல்லியின் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான்.

“அப்புறம் அம்மா என் மேல கோபம் போச்சா? இல்லை இன்னும் அதே கோபம் தானா?” கவிகிருஷ்ணாவின் கேள்வி தன் காதில் விழாதது போலவே தன் வேலைகளை உன்னிப்பாக செய்து கொண்டிருந்தார் வேதவல்லி.

“அம்மா ஆறு மாதம் ஆச்சு நீங்க என் கூட பேசி! இப்படியே போனால் நான் ஒரேயடியாக மேல போய் சேர்ற வரைக்கும் பேசவே மாட்டிங்க போல”

“என்ன வார்த்தைடா பேசுற நீ?” கோபமாக அதே நேரம் கண்கள் கலங்க கேட்ட தன் அன்னையின் அருகில் சென்று அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டவன்

“இப்படி திட்டுறதுக்காகவாவது என் கூட பேசுங்க ம்மா” கலங்கிய தன் அன்னையின் கண்களை துடைத்து விட்ட படியே கூறிய கவிகிருஷ்ணாவின் கையை மெதுவாக கீழே எடுத்து வைத்தவர்

“எப்போ நீ என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்குறியோ அப்போ தான் நான் உன் கூட பேசுவேன்” எனவும்

சட்டென்று அவர் தோளில் இருந்த தன் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தவன்
“நான் உங்க பையன் உங்களுக்கு இருக்கும் அதே அளவு ரோஷம் எனக்கும் இருக்கும் நீங்க பேசுற வரை நானும் உங்க கூட பேசல பார்த்துக்கோங்க” என்று விட்டு கோபமாக வீட்டிற்குள் சென்றான்.

“அத்தான் காஃபி!” என்றவாறே சமையலறைக்குள் இருந்து வெளியேறி வந்த ராகிணி கவிகிருஷ்ணா கோபமாக படியேறி செல்வதை பார்த்து விட்டு வேதவல்லியை நோக்கி சென்றாள்.

“அத்தை என்ன ஆச்சு? இரண்டு பேரும் மறுபடியும் சண்டை போட்டீங்களா?”

“நான் எதுக்கு அவன் கூட சண்டை போடுறேன் அவன் தான் ஒரே பிடிவாதமாக இருக்குறான் என் பேச்சை கேட்குறதே இல்லை போகட்டும் எத்தனை நாளைக்கு நடக்குதுனு பார்க்கலாம்” அது வரை தொடுத்த பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வேதவல்லியும் உள்ளே சென்று விட ராகிணியோ பாவமாக உள்ளே சென்ற வேதவல்லியையே பார்த்து கொண்டு நின்றாள்.

அறைக்குள் வந்து கதவை கோபமாக சாத்திக் கொண்ட கவிகிருஷ்ணா அதே கோபத்தோடு தன் அறையின் பின்னால் இருந்த பால்கனியில் போய் நின்றான்.

அவனது நினைவுகளோ தேன்மதி ஊட்டியில் இருந்து சென்ற அந்த நாளை நோக்கி நகர்ந்து சென்றது.

தேன்மதி ஊட்டியில் இருந்து சென்று ஒரு சில நாட்கள் சுமுகமாக சென்றாலும் கவிகிருஷ்ணாவிற்கோ அவளது நினைவுகளை விட்டு வெளியே வர முடியவில்லை.

எந்த வேலை செய்தாலும் எந்த பக்கம் திரும்பினாலும் அவள் ஞாபகங்களே அவனது மனம் முழுவதும் நிறைந்து இருந்தது.

பெரும் கஷ்டப்பட்டு தன்னை தன் வேலைகளுக்குள் மூழ்கடித்து கொண்டவன் விருத்தாசலத்திடம் இருந்து சைக்கோலோஜி பற்றியும் கற்றுக் கொள்ள தொடங்கினான்.

ஒன்றரை வருடம் எந்த பிரச்சினையும்
இல்லாமல் சீராக சென்று கொண்டிருந்தது அவர்களது வாழ்க்கை.

ஆனால் மறுபுறம் வேதவல்லியோ தினம் தினம் கவிகிருஷ்ணா பற்றி எண்ணி தனக்குள்ளேயே மருகி கொண்டு இருக்க அதை உணர்ந்து கொண்ட கவிகிருஷ்ணாவோ அன்று ஒரு நாள் அவரிடம் அதைப் பற்றி பேச வேண்டும் என்று ஒரு முடிவோடு வேதவல்லியைத் தேடி அவரது அறைக்குச் சென்றான்.

கையில் இருந்த புத்தகத்தை பார்த்து கொண்டிருந்த வேதவல்லியின் சிந்தனையோ அந்த இடத்தில் இருக்கவில்லை.

“அம்மா!” அறைக் கதவை தட்டி விட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவை ஆச்சரியமாக பார்த்த வேதவல்லி

“வாடா கண்ணா! ஏன் வாசலிலேயே நிற்குற?” என்று கேட்டார்.

“உங்க கூட கொஞ்சம் பேசணும் ம்மா” தயங்கி தயங்கி நின்ற கவிகிருஷ்ணாவை பார்த்து புன்னகத்த வேதவல்லி

“வாடா கண்ணா! இப்படி வந்து உட்கார்ந்து என்ன பேசணுமோ சொல்லு” தன் அருகில் இருந்த இடத்தை சுட்டிக் காட்டி அவர் சொல்லவும் சரியென்று தலை அசைத்து விட்டு அவரருகில் சென்று அமர்ந்து கொண்டவன் தயக்கத்துடன் அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

“சொல்லுப்பா என்ன பேசணும்?” கவிகிருஷ்ணாவின் தலையில் வருடி விட்டவாறே கேட்ட வேதவல்லியை பார்த்து புன்னகத்தவன்

“அம்மா கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமாக நான் பெரும் கஷ்டப்பட்டு என் வேலையில் என்னை முழுவதும் ஈடுபடுத்தி கொண்டேன் இப்போ முதல் இருந்ததை விட ரொம்ப நல்லா என் வேலையில் நான் முன்னேறி இருக்கேன் என்ன தான் நான் வேலையில் முன்னேறி இருந்தாலும் என்னால தேன்மதியோட நினைவுகளை மறக்க முடியலம்மா”

“கிருஷ்ணா!”

“ஆமா ம்மா நான் ஒன்றரை வருஷத்திற்கு முன்னாடி உங்க கிட்ட எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டேன் ஆனா எனக்கு போகப்போக தான் புரிஞ்சது எவ்வளவு நாட்கள் போனாலும் அவளை விட்டு என்னால விலக முடியாது”

“கிருஷ்ணா! இதெல்லாம் என்ன? நீ என்ன பேசுறேன்னு தெரிந்து, புரிந்து தான் பேசுறியா? காலம் பூராவும் நீ இப்படியே இருக்கப் போறியா? என் பசங்க கல்யாணத்தைப் பார்க்கணும், என் பேரக் குழந்தைங்க இந்த வீடு முழுவதும் நிறைந்து இருக்கணும்னு எனக்கு எவ்வளவு ஆசைகள் இருக்கும் அதைப் பற்றி நீ கொஞ்சம் கூட யோசித்து பார்க்க மாட்டியா கண்ணா? உன் சந்தோஷம் முக்கியம்னு தான் நான் இத்தனை நாளாக எல்லாம் பார்த்து பார்க்காத மாதிரி இருந்தேன் இனிமேலும் இப்படி இருக்க முடியுமா?”

“…….”

“உனக்கு இப்போ இருந்தே கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போறேன்”

“அம்மா!”

“அம்மா தான் டா! அம்மா தான்! இத்தனை நாளாக உனக்கு தந்த டைம் முடிஞ்சு போச்சு நடக்காத ஒரு விஷயத்தை நினைத்து என் பையன் வாழ்க்கை வீணாக போவதை நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்”

“அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க உங்க சந்தோஷத்திற்காக நான் கல்யாணம் பண்ணிப்பேன் ஆனா வரப் போற பொண்ணோட வாழ்க்கை! அதையும் கொஞ்சம் யோசிங்கம்மா ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாக போனால் அது அப்போ பரவாயில்லையா?”

“……..”

“அம்மா ப்ளீஸ்…”

“சரி நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்லை அது தானே உன் முடிவு இப்போ என் முடிவையும் தெரிஞ்சுக்கோ நான் இனிமேல் கௌசிக், காயத்ரியோட கல்யாணத்துக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்குறேன் ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ கிருஷ்ணா நீ எப்போ உன் மனசை மாத்திக்குறியோ அப்போ தான் இனி நான் உன் கூட பேசுவேன்”

“அம்மா!”

“எதுவும் பேச வேண்டாம் எனக்கு வேலை இருக்கு”
வேதவல்லி அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அந்த அறையில் இருந்து வெளியேறி சென்று விட கவிகிருஷ்ணாவோ மனம் நிறைந்த கவலையுடன் தன் அன்னை சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றான்.

அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து கௌசிக் மற்றும் ராகிணியின் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

மனதின் ஓரம் தன் அன்னையின் சந்தோஷத்தை அழித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி கவிகிருஷ்ணாவின் மனதை அரித்து கொண்டிருந்தாலும் அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைக்க அவன் விரும்பவில்லை.

என்றாவது ஒரு நாள் தன் அன்னையின் மனம் தன்னை பற்றி உணர்ந்து கொள்ள கூடும் என்ற நம்பிக்கையில் கவிகிருஷ்ணா காத்து இருக்க காலமோ அதற்காக காத்திராமல் ஆறு மாதங்களை கடந்து இருந்தது.

வேதவல்லியிடம் பலமுறை பேச முயன்றும் அது எல்லாம் தோல்வியிலேயே முடிந்து இருக்க மனதளவில் வெகுவாக சோர்ந்து போனவன் உற்சாகமே இன்றி ஹாஸ்பிடல் செல்வதற்காக தயாராகி வந்தான்.

வேதவல்லி சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க தயக்கத்துடன் ஒரு சில நிமிடங்கள் சாப்பிட செல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்து பார்த்தவன்
‘நமக்கு ரோஷம் தான் முக்கியம்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டே வேகமாக வீட்டில் இருந்து வெளியேறி சென்றான்.

“அம்மா அண்ணா சாப்பிடாமலேயே போறாங்க” கவலையுடன் கூறிய காயத்ரியைப் பார்த்து புன்னகத்து கொண்ட வேதவல்லி

“அவன் சாப்பிடாமல் போனால் அது உலக அதிசயத்திற்கு சமன் ஐந்து நிமிஷத்தில் தானாக உள்ளே வருவான் பாரு” என்று கூற காயத்ரியும் ஆவலுடன் வாசலையே பார்த்து கொண்டு இருந்தாள்.

பல தடவை கவிகிருஷ்ணா அப்படி செய்து இருந்ததால் அந்த நம்பிக்கையோடு வேதவல்லியும் வாசலையே பார்த்து கொண்டு இருக்க அவனோ மீண்டும் வீட்டினுள் வரவில்லை.

காயத்ரி யோசனையோடு எழுந்து வாசல் வரை சென்று வெளியே எட்டிப் பார்க்க கவிகிருஷ்ணாவோ அவனது காரோ அந்த இடத்தில் இருந்ததற்கான தடயமே இருக்கவில்லை.

“என்ன காயத்ரி அவன் நான் சொன்ன மாதிரியே வர்றானா?” ஆவலுடன் கேட்ட வேதவல்லியைப் பார்த்து கவலையுடன் இல்லை என்று தலை அசைத்தவள்

“அண்ணா எப்போவோ போயிடுச்சு” என்று விட்டு செல்ல அவரோ அதிர்ச்சியாகி நின்றார்.
“எப்போவும் இவன் இப்படி பண்ணுணது இல்லை ஆனால் இன்னைக்கு! நான் என் பையன் நல்லா இருக்கணும்னு நினைக்குறது தப்பா?” கவலையுடன் சிந்தனை வயப்பட்டவராக வேதவல்லி நின்று கொண்டிருக்க திடீரென்று தட்டுகள் எல்லாம் தூக்கி வைக்கும் சத்தம் கேட்டு அவர் திடுக்கிட்டு பார்த்தார்.

அங்கே டைனிங் டேபிளில்
கவிகிருஷ்ணா எதுவுமே நடக்காதது போல மும்முரமாக சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்த வேதவல்லியின் அதிர்ச்சியாக காயத்ரியை தேடி பார்த்தார்.

அவளோ சற்று தள்ளி நின்று அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்துக் கொண்டே ஓடி செல்ல போலிக் கோபத்தோடு வேதவல்லி அவளை முறைத்து பார்த்தார்.

கவிகிருஷ்ணா சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட மனதில் இருந்த கவலைகள் சிறிது விலகினாற் போல நிம்மதியாக உணர்ந்தார் வேதவல்லி.

சென்னை கே.எம் அன்ட் கோ

கறுப்பு நிற பலகையில் தங்க நிற எழுத்துக்களில் ஜொலித்து கொண்டிருந்தது கே.எம் அன்ட் கோ.

மூன்று மாடிக் கட்டடமாக இருந்தாலும் அந்த கட்டடத்தின் நேர்த்தியும், அமைப்பும் அந்த வழியாக செல்லும் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க செய்யும்.

முக்கோண வடிவத்தில் அந்த கட்டடம் அமைக்கப்பட்டு இருக்க சுற்றிலும் கண்ணாடியினால் அந்த கட்டடம் சூழ்ந்து இருந்தது.

காலை நேரப் பரபரப்பு அந்த கட்டடத்திலும் நிறைந்து இருக்க அங்கிருந்த அனைவருமே மும்முரமாக தங்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சில நிமிடங்கள் கழித்து அந்த கட்டடத்தின் கேட்டின் முன்னால் ஒரு கறுப்பு நிற கார் வேகமாக வந்து நின்றது.

வாசலில் நின்று கொண்டிருந்த வாட்ச்மேன் அவசரமாக ஓடி வந்து கேட்டை திறந்து விட்டு சல்யூட் அடிக்க அந்த கார் முன்பை விட சற்று வேகமாக வந்து அந்த கட்டடத்தின் முன்னால் நின்றது.

காரின் முன் பக்கத்தில் இருந்து ஒரு இளம்பெண் இறங்கி நிற்க காரின் பின் புறமாக இருந்த பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து கொண்டு இறங்கி நின்றாள் தேன்மதி…..

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!