Katre-21

Katre-21

தேன்மதி இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது இருந்த குறும்புத் தனமான தேன்மதியில் இருந்து முற்றிலும் மாறிப் போய் இருந்தாள்.

ஒரு கம்பெனியை தனியாக நடத்தக் கூடிய அளவுக்கு இந்த இரண்டு வருடங்களில் அவள் வளர்ச்சி கண்டிருக்கிறாள்.

தன் அயராத உழைப்பால் பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தன் கம்பெனி மீண்டும் ஒரு நல்ல நிலையில் இருப்பதை பெருமிதம் கொண்டவள் புன்னகையோடு தன் கம்பெனியை பார்த்து வண்ணம் நின்றாள் தேன்மதி.

தேன்மதி முன்னால் நடந்து செல்ல அவளைப் பின் தொடர்ந்து அந்த இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

“மீரா இன்னைக்கு ஒன்பது மணிக்கு திவ்யா மேடமை பார்க்க போற அப்பாயிண்ட்மேண்டை கன்பர்ம் பண்ணிடுங்க”

“ஓகே மேடம்”

“லஞ்ச்க்கு அப்புறம் தாஸ் ஸாரை இங்க வரச் சொல்லுங்க”

“ஓகே மேடம்”

“ஈவ்னிங் நாலு மணிக்கு அப்புறம் எந்த பிளானும் வைக்க வேண்டாம்”

“ஓகே மேடம்! அய்யோ! மேடம் இன்னைக்கு ஐந்து மணிக்கு தானே நம்ம கடைசியாக எடுத்த டெண்டர் பற்றி பேசுறதாக சொல்லி இருந்தீங்க”

“பரவாயில்லை எதுவாக இருந்தாலும் கேன்ஸல் பண்ணுங்க இன்னைக்கு நாலு மணிக்கு அப்புறம் எனக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது” கண்டிப்பான குரலில் கூறி விட்டு தேன்மதி அவளது அறைக்குள் நுழைந்து கொள்ள தேன்மதியால் மீரா என்றழைக்கப்பட்ட பெண்ணோ பாவமாக நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மீரா இன்னைக்கும் மேடம் கிட்ட பாராட்டு வாங்கிகிட்டியா?” கண்ணடித்து சிரித்துக் கொண்டே மீராவின் அருகில் வந்து நின்ற பெண் கேட்க

அவளைத் திரும்பி பார்த்து முறைத்தவள்
“நான் திட்டு வாங்குறதில் உனக்கு எவ்வளவு ஆனந்தம் இல்லை? இரு மேடம் கிட்ட சொல்லி உனக்கு ஸ்பெஷல் கவனிப்பு வாங்கி தர்றேன்” என்று கூற

அவளருகில் நின்ற பெண்ணோ
“அய்யோ! அம்மா தாயே! அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதேமா!” என்று கையெடுத்து கும்பிட்டு கூறிக் கொண்டு நிற்கையில் சட்டென்று தேன்மதியின் அறைக் கதவு திறக்கப்பட அங்கு நின்ற இரு பெண்களும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தனர்.

“மீரா கம் இன் ஸைட்!” தேன்மதியின் கோபமான வார்த்தைகளைக் கேட்டு

“இன்னைக்கு எவ்வளவு நேரம் பாராட்டு மழை பொழியப் போகுதோ!” என்று முணுமுணுத்துக் கொண்டே தேன்மதியைப் பின் தொடர்ந்து சென்றாள் மீரா.

எப்போதும் போல அடிக்கடி இப்படி நடப்பதால் அங்கிருந்த யாருக்குமே இந்த விடயம் பெரிதாக படவில்லை.

அவரவர் அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்.

தேன்மதி வேலை என்று வந்து விட்டால் மாத்திரம் அத்தனை கண்டிப்பாக மாறி விடுவாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊட்டியில் இருந்து வரும் போது அவள் இத்தனை கண்டிப்பான ஒருவளாக மாறக் கூடும் என்று சொல்லி இருந்தால் நிச்சயமாக அவள் நம்பி இருக்க மாட்டாள்.

ஆனால் இன்று அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்
சென்னை வந்து சேர்ந்த தேன்மதி தங்கள் வீட்டிற்குள் நுழையும்போதே தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் பெரிதாக மாட்டப்பட்டிருந்த கவியரசனது புகைப்படத்தை பார்த்து அந்த இடத்திலேயே அமர்ந்து கதறி அழுதவள் அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில் ஒரு தடவை கூட அழுதது இல்லை.

அழுதது இல்லை என்பதை விட அழுவதற்காக காரணத்தை சிந்திக்க கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை.

சரியான கவனிப்பின்றி இருந்த தங்கள் கம்பெனியை பழைய படி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் மாத்திரமே அந்த சமயம் அவள் மனதில் உறுதியாக இருந்தது.

அதற்கேற்றார் போல வேலைகள் செய்தவள் அதில் இன்று வெற்றியும் கண்டிருக்கிறாள்.

இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தாலும் ஒரு விடயம் மட்டும் மாறவில்லை.

திருமணம் பற்றிய பேச்சு மாத்திரம் அவளது கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கும் ஒரு விடயமாக இருந்து கொண்டே இருந்தது.

எத்தனையோ தடவைகள் ஜானகி மற்றும் சம்யுக்தா அவளிடம் கவிகிருஷ்ணா பற்றி பேச்சு வார்த்தை நடத்த முயன்றும் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்து இருந்தது.

திருமணம் பற்றி பேச்சு எடுத்தாலே ‘எனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை’ என்று ஒற்றை வரியில் அனைவரது வாயையும் அடைத்து விடுவாள்.

கவியரசன் பற்றிய ஞாபகங்கள் அவளது மனதில் அழகிய கவிதையாக பதிந்து இருக்க கவிகிருஷ்ணா பற்றிய ஞாபகங்களோ வேறு விதமாக மாற்றி இருந்தது.

அவள் தனிமையில் இருக்கும் நேரங்களில் அவள் ஊட்டியில் ஹாஸ்பிடலில் செலவிட்ட அந்த நேரத்தை சில சமயங்களில் நினைத்து பார்ப்பதுண்டு.

அந்த நேரம் எல்லாம் கவிகிருஷ்ணாவோடு அவள் நெருங்கி பழகிய அந்த தருணங்களே அவள் மனக் கண் முன்னால் காட்சியாக விரியும்.

அந்த நினைவுகளை அவள் தன் மனதை விட்டு ஒதுக்க நினைத்தாலும் ஏனோ அதை மட்டும் அவளால் இலகுவாக செய்ய முடியவில்லை.

தன் தொழிலில் பல மடங்கு முன்னேற்றம் கண்டவள் இந்த ஒரு விடயத்தில் மாத்திரம் தான் நினைத்ததை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாள்.

முழுமையாக இந்த நிலையில் இருந்து அவளால் விடுபட முடியாவிட்டாலும் தற்காலிகமாக அந்த எண்ணங்களை ஒதுக்க தன்னை சுற்றி போர்த்திக் கொண்ட ஒரு ஆயுதமே இந்த கடுமையான முகம்.

என்ன தான் வெளி உலகிற்கு அவள் தன்னை இத்தனை தூரம் கடுமையானவளாக காட்டிக் கொண்டாலும் அவளது வீட்டினர் அவளது மனநிலையை அறியாமல் இல்லை.

அவளாக தன் மனதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி பெரியவர்கள் சிறிது இடைவெளி அவளுக்கு கொடுத்து இருக்க அந்த இடைவெளியை அவள் சந்தோஷத்தினால் அவள் மனம் கவர்ந்தவன் நிரப்ப போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தன் கையில் இருந்த பைல்களை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த தேன்மதி தன் அறைக் கதவு தட்டும் சத்தத்தில் பைலை மூடி விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“எக்ஸ்கியுஸ் மீ மேடம்! மே ஐ கம் இன்?” கதவை தட்டி விட்டு எட்டிப் பார்த்து கொண்டு நின்ற சுரேந்திரனைப் பார்த்து சிரித்த வண்ணம் எழுந்து நின்றவள்

“அப்பா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?” என்று கேட்டாள்.

“ஹா! ஹா! ஹா! என்ன பண்ணுறது முதலாளி கிட்ட அனுமதி வாங்கனும் இல்லையா? அப்புறம் வேலை எல்லாம் எப்படி மா போகுது?”

“அதற்கு என்ன சூப்பராக போகுது? ஏன் அங்கேயே நிற்குறீங்க? உள்ளே வாங்க ப்பா!” தேன்மதி சுரேந்திரனின் கை பற்றி உள்ளே அழைத்து சென்று தன் இருக்கையில் அவரை அமரச் செய்து விட்டு அவரெதிரில் அமர்ந்து கொண்டாள்.

“அப்புறம் என்ன வக்கீல் ஸார் காற்று இந்த பக்கமாக வீசுது?” கேலியாக கேட்ட தன் மகளை பார்த்து புன்னகத்து கொண்டவர்

“என் பிரண்ட் ராமநாதனை மீட் பண்ண வந்தேன் அவன் வீடு இந்த பக்கம் தானே அவன் வீட்டில் இருந்து திரும்பி வரும் போது உன் ஆபிஸைப் பார்த்ததும் உன் ஞாபகம் வந்தது அது தான் வந்துட்டேன்”

“அது தானே பார்த்தேன்! நான் கூட வீட்டிற்குள் என்னை பார்க்காமல் இருக்க முடியாமல் வந்துட்டீங்களோனு நினைச்சேன்” கவலையுடன் கூறுவது போல ஓரக் கண்ணால் அவரை பார்த்து கொண்டே கூற

சிரித்துக் கொண்டே எழுந்து சென்று அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டவர்
“வீட்டுக்கு நீ வந்தால் ஒரே அதிரடி தடாலடி தான் அப்படி இருக்கும் போது வீட்டில் நீ இல்லாத நேரம் எங்களுக்கு என்ஜாய் பண்ணாமல் உன்னை தேடி வருவோமா?” என்று கேட்கவும்

“அப்பா!” சிணுங்கலோடு அவர் கையில் தட்டியவள் புன்னகையோடு அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“இன்னைக்கு ராமநாதன் வீட்டில் அவன் பசங்க, பேரப் பசங்க எல்லோரும் வந்து இருந்தாங்க அவன் வீடே நிறைந்து போய் இருந்தது” தன் தந்தையின் குரலில் தெரிந்த ஏக்கத்தில் தேன்மதியின் கண்களோ சட்டென்று கலங்கிப் போனது.

எதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விலகி அமர்ந்தவள் தன் கைகளையே பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் அந்த இடம் அமைதியை தத்தெடுத்து கொண்டது.

“சரி டா மா நீ உன் வேலையை கன்டினியூ பண்ணு ஈவ்னிங் பார்க்கலாம் சரியா? டேக் கேர் மா” அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கூறி விட்டு சுரேந்திரன் சென்று விட தேன்மதியோ மனதளவில் உடைந்து போய் அமர்ந்திருந்தாள்.

‘தன்னால் எத்தனை பேருக்கு கஷ்டம்?’ என்ற உணர்வு அவள் மனம் முழுவதும் மேலோங்கி நிற்க அதற்கு மேல் அவளால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

தன் முன்னால் இருந்த இண்டர்காமை எடுத்தவள்
“மீரா இன்னைக்கு இருக்கும் மீதி ப்ரோக்ராம் எல்லாம் கேன்ஸல் பண்ணிடுங்க நான் முக்கியமான வேலையாக வெளியே போறேன்” என்றவள் வேகமாக அவளது ஆபிஸில் இருந்து வெளியேறி தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

மனம் முழுவதும் ஏதோ ஒரு பாரம் அவளை அழுத்தி கொண்டே இருந்தது.

எவ்வளவு தூரம் முயன்றும் இந்த ஒரு மன நிலையில் இருந்து மாத்திரம் அவளால் விடுபட முடியவில்லை.

அவளை அறியாமலேயே ஒரு வேலி அவளை சூழ்ந்து இருப்பதை அவளால் உணர முடிந்தாலும் அதை தகர்த்து எறியும் நிலை தான் இன்னும் அவளுக்கு பிடிபடவில்லை.

கால் போன போக்கில் தன் காரை செலுத்தி கொண்டு சென்றவள் எங்கே செல்வது என்று தெரியாமல் தன் காரை சட்டென்று நிறுத்தியவள் சுற்றிலும் ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டாள்.

தூரத்தில் தெரிந்த முருகன் கோவிலைப் பார்த்து விட்டு தன் காரை அந்த கோவிலை நோக்கி செலுத்தியவள் அதே குழப்பமான மனநிலையோடு கோவிலுக்குள் நுழைந்து கொண்டாள்.

கண் மூடி கடவுளை வணங்கி கொண்டவள் மெதுவாக அந்த கோவிலை சுற்றி வந்து கொண்டு இருக்க மற்றைய புறம் கவிகிருஷ்ணா தன் போனில் பேசி
கொண்டே அந்த கோவிலுக்குள் நுழைந்தான்.

தேன்மதி ஒரு புறம் கவிகிருஷ்ணா ஒரு புறம் என இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை.

“ஆமா காயத்ரி கோவிலுக்கு தான் வந்து இருக்கேன்”

“அய்யோ! என்ன அதிசயம் இது? நீங்க ஊட்டியில் இருக்கும் போது ஒரு நாள் கூட கோவிலுக்கு வந்தது இல்லை அப்படி இருக்கும் போது சென்னையில் கான்பிரஸ் போனதுக்கு அப்புறம் மட்டும் எப்படி இப்படி எல்லாம்? நம்பவே முடியலயே ண்ணா!” ஆச்சரியமாக ஒலித்த தன் தங்கையின் குரலில் புன்னகத்து கொண்ட கவிகிருஷ்ணா

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை காயத்ரி மா! அம்மா மனசு மாறி பழைய படி என் கூட பேசணும்னு ஒரு வேண்டுதல் பண்ணலாம்னு வந்தேன்” என்று கூற மறுமுனையில் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

“என்ன அம்மா வேண்டுதல் பண்ணிடலாமா?” சிரித்துக் கொண்டே கவிகிருஷ்ணா கேட்கவும்

மறுமுனையில் வேதவல்லி
“இதற்கு தான் போனை ஸ்பீக்கரில் போடாதேனு சொன்னேன் கேட்டியா? அவனுக்கு எல்லாம் தெரியும்” என கோபமாக கூறி கொண்டு இருப்பதை கேட்டவன் சிரித்துக் கொண்டே தன் போனை கட் செய்தான்.

போனை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டு விட்டு சந்நிதானத்தை நோக்கி சென்றவன் கண்களை மூடி நீண்ட நேரம் கடவுளை வணங்கி கொண்டு நின்றான்.

“என்ன தம்பி ரொம்ப நேரமாக வேண்டிட்டு இருக்கேள்?” பூசாரி பூஜை தட்டை கவிகிருஷ்ணாவின் புறமாக நீட்டிக் கொண்டே கேட்கவும்

அதில் இருந்த விபூதியை எடுத்து தன் நெற்றியில் வைத்து கொண்டவன்
“வாழ்க்கையில் ஒண்ணு, இரண்டு பிரச்சினையாக இருந்தால் சட்டுன்னு சாமி கும்பிட்டுட்டு போயிடலாம் சாமி ஆனா நமக்கு பிரச்சினைக்கு உள்ளே தானே வாழ்க்கையே நடக்குது அப்படி இருக்கும் போது எவ்வளவு நேரம் தான் கடவுள் கிட்ட சொல்லுறது என்ன தான் இருந்தாலும் ஓடராக சொல்லணும் இல்லையா? இல்லைன்னே ஓடர் மறந்துடாது!”

“நல்லா பேசுற தம்பி! உனக்கு எல்லாம் நல்லாதாகவே நடக்கும் கூடிய சீக்கிரம் நீ ஆசைப்பட்ட எல்லாம் நடக்கும்டா தம்பி!” என்று விட்டு அந்த பூசாரி சென்று விட

“என்ன நடக்க காத்திருக்கோ?” என்று முணுமுணுத்துக் கொண்டே கவிகிருஷ்ணா திரும்பி நடந்தான்.

சிறிது நேரம் கோவிலை சுற்றி விட்டு வரலாம் என்று முடிவெடுத்து கொண்டவன் அந்த கோவில் பிரஹாரத்தை சுற்றி நடந்து வந்தான்.

எப்போதும் போல சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தவன் தூரத்தில் நான்கு, ஐந்து சிறுவர்கள் கையில் எதையோ வைத்து கொண்டு கும்பலாக நின்று பேசிக் கொண்டு நிற்பதைப் பார்த்து கொண்டே நடந்து சென்றான்.

தன் மனம் என்றும் இல்லாதவாறு ஏதோ ஒரு பதட்டமான உணர்வில் சிக்கி கொண்டு இருக்க என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரு அச்ச உணர்வோடு தேன்மதி சிந்தனை வயப்பட்டவளாக நடந்து வந்து கொண்டிருக்க தேன்மதி நடந்து சென்று கொண்டிருந்த பக்கத்தின் மற்றைய புறமாக கவிகிருஷ்ணா அந்த கோவில் கட்டடத்தைப் பார்த்து கொண்டே நடந்து சென்றான்.

மெது மெதுவாக தேன்மதி தன் நடையின் வேகத்தை குறைத்து கொள்ள கவிகிருஷ்ணாவோ தன் கடிகாரத்தை பார்த்து விட்டு
“அச்சோ! டைம் ஆச்சே! சீக்கிரமாக போகணும் இன்னும் ஒரு நான்கு சுற்று நடந்துட்டு போகலாம்” என்று எண்ணிக் கொண்டே வேகமாக நடக்கத் தொடங்கினான்.

கவிகிருஷ்ணா பார்க்கும் போது கும்பலாக நின்று பேசிக் கொண்டு இருந்த அந்த சிறுவர்கள் இப்போது ஆளுக்கொரு பக்கமாக ஓடி சென்று விளையாடிக் கொண்டு இருக்க தேன்மதியோ அதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

அவள் சிந்தனை முழுவதும் வேறு ஏதோ ஒரு உலகத்திலேயே இருந்தது.

கவிகிருஷ்ணா வேகமாக நடந்து வந்து தேன்மதியில் இருந்து இரண்டு அடி தூரம் பின்னால் வந்து கொண்டிருக்க அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனோ தேன்மதியின் பக்கமாக ஓடி வந்து அவள் மீது மோதி விட்டு செல்ல அதை எதிர்பார்க்காத தேன்மதியோ தடுமாறி கீழே விழப் போனாள்.

தன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண் திடீரென்று கீழே விழப் போகவும் அவசரமாக அவளை நெருங்கி வந்து அவளை விழ விடாமல் தன் கையில் தாங்கிக் கொண்டவன் அந்த பெண்ணின் முகம் பார்த்து அதிர்ந்து போய் நிற்க அவளது கைகளோ அவனது சட்டைக் காலரை இறுக்கமாக பற்றி இருந்தது.

“தேனு!” அதிர்ச்சியில் கவிகிருஷ்ணா அவள் பெயரை உச்சரிக்க அவனது குரல் கேட்டு அதிர்ச்சியாக தன் விழிகள் திறந்து கொண்ட தேன்மதியோ தன்னை தாங்கிப் பிடித்து நின்ற கவிகிருஷ்ணாவை பார்த்து அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றாள்……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!