Katre-22

Katre-22

கவிகிருஷ்ணா தன் காண்பது கனவா? நனவா? என்ற சிந்தனையோடு தேன்மதியை இமைக்காமலேயே பார்த்து கொண்டு நின்றான்.

ஒரு வேளை இது கனவாக இருந்தால் தான் இமைக்கும் அந்த ஒரு நொடியில் அவள் மறைந்து போய் விடக்கூடும் என்று எண்ணியவன் தன் கண்களை சிறிது கூட இமைக்காமல் அவள் கண்களையே பார்த்து கொண்டு நின்றான்.

கவிகிருஷ்ணாவின் சட்டைக் காலரை தேன்மதியின் ஒரு கை பற்றி இருக்க மற்றைய கையோ அவன் தோளை அழுத்தமாக பற்றி இருந்தது.

“தம்பி இது கோவில் கொஞ்சம் வெளியே போய் தள்ளி நின்று உங்க ரொமான்ஸை பண்ணுங்கபா” அவர்களை கடந்து சென்ற ஒரு வயதான நபர் கூறி கொண்டு செல்ல அந்த சத்தத்தில் கவிகிருஷ்ணாவை விட்டு தேன்மதி அவசரமாக விலகி நின்றாள்.

தான் எந்த விடயத்தை மறக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தளோ அந்த விடயம் இன்று அவள் கண் முன்னால் இருந்து கொண்டு இருக்கிறது.

இந்த இரண்டு வருடங்களில் மறந்து போய் இருந்த அழுகை மீண்டும் வந்து விடக்கூடாது என்று எண்ணிக் கொண்டவள் வேகமாக அங்கிருந்து நடக்க தொடங்கினாள்.

ஆனால் அதற்குள் கவிகிருஷ்ணாவின் கை அவள் கையை பற்றி இருந்தது.

தேன்மதி பதட்டத்துடன் திரும்பி பார்க்க கவிகிருஷ்ணாவோ புன்னகை முகமாக அவளை பார்த்து கொண்டு நின்றான்.

“எப்படி இருக்க தேனு?”
அவனுடைய தேனு என்ற அழைப்பில் கோபமாக அவன் கையில் இருந்து தன் கையை பிரித்து எடுத்துக் கொண்டவள்

“என்னுடைய பெயர் தேன்மதி ஞாபகம் இருக்கட்டும் மறுபடியும் மறுபடியும் தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்காதீங்க” என்று விட்டு அதே கோபத்துடன் திரும்பி நடந்து செல்ல கவிகிருஷ்ணாவோ புன்னகையோடு அவளை பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

“ஏன் இவ்வளவு பதட்டம்? என்னைப் பார்த்து பயமா? இல்லை எங்கே என்னை லவ் பண்ணிடுவியோனு பயமா?” இயல்பாக அவளருகில் நடந்து வந்து கொண்டே கவிகிருஷ்ணா கேட்கவும்
திரும்பி அவனை முறைத்து பார்த்தவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் நடந்து சென்றாள்.

தேன்மதி அவளது காரில் ஏறும் வரை அவளுடனேயே நடந்து சென்றவன் அவள் காரில் ஏறியதும் அவள் இருக்கையின் புறமாக இருந்த ஜன்னல் பக்கம் வந்து நின்றான்.

“இரண்டு வருடங்களுக்கு அப்புறம் பார்த்து இருக்கோம் கொஞ்சம் ஷாக் ஆகத்தான் இருக்கும் அதற்காக நைட் ட்ரீம்ஸ்லயும் என்னையே நினைச்சுட்டு இருக்கக் கூடாது ஓகே வா தேனு?” வேண்டுமென்றே தேனு என்ற வார்த்தையை அவன் அழுத்தி சொல்ல அவனுக்கு முறைப்பு ஒன்றை பதிலாக கொடுத்தவள் தன் காரை வேகமாக அந்த இடத்தில் இருந்து ஓட்டிச் சென்றாள்.

கவிகிருஷ்ணாவோ புன்னகையோடு கோவிலின் புறமாக திரும்பி
“உங்களுக்கு இவ்வளவு பவர் இருக்குன்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சே முருகா! இப்போ தான் என் பிரச்சினையை உங்க கிட்ட சொன்னேன் உடனே அதற்கு தீர்வைக் காட்டிட்டீங்க இரண்டு வருஷம் பொறுமையாக இருந்தது போதும் இனிமேல் என் கிட்ட இருந்து நீ ஓட முடியாது தேனு மா! இந்த கிருஷ்ணாவோட ஆட்டத்தை இனிமேல் தான் நீ பார்க்கப் போற!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் புன்னகையோடு தன் தலையை அழுந்த கோதிக் கொண்டே தன் காரில் ஏறி கொண்டான்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த தேன்மதி வேகமாக படியேறி சென்று தன் அறைக்குள் அடைந்து கொள்ள கீழே ஹாலில் அமர்ந்திருந்த பெரியவர்களோ எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.

“என்ன ஆச்சு இவளுக்கு? சென்னை வந்த நாள்ல இருந்து ஒரு தடவை கூட அவ இப்படி நடந்துகிட்டது இல்லையே! திடீர்னு இவ இப்படி பண்ணுறான்னா? எனக்கு பயமாக இருக்கு ஜானகி!” பதட்டமும், கவலையும் ஒன்று சேர கூறிய சம்யுக்தாவின் கரங்களை ஆதரவாக பற்றி கொண்ட ஜானகி

“எனக்கு என்னவோ அவ மனசில் ஏதோ ஒரு மாற்றம் வந்த மாதிரி இருக்கு அண்ணி கொஞ்ச நேரம் போகட்டும் எப்படியும் அவ சாப்பிட கீழே வரத் தானே வேணும் அப்போ அவளாகவே சொல்லுவா இப்போ நாமாகவே போய் கேட்டால் அவ எதுவும் சொல்ல மாட்டா”

“என்னை விட நீ தான் ஜானகி அவளை நல்லா புரிந்து வைத்திருக்க உன் நல்ல எண்ணத்திற்காகவாவது அவ மனசு மாறிடணும்”

“நிச்சயமாக நடக்கும் அவளுக்கு எப்போவோ மனசு மாறிடுச்சு ஆனா ஏதோ ஒரு தயக்கம் தன்னை தானே ஏமாற்றிட்டு இருக்கா இன்னைக்கு ஒரு சாதகமான மாற்றம் பார்த்தாச்சு நீங்க வேணும்னா பாருங்க அண்ணி இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கும்” ஜானகி உறுதியான குரலில் கூற சம்யுக்தாவும் புன்னகையோடு ஜானகியின் கரங்களை அழுத்தி கொடுத்தார்.

தன் அறைக்குள் வந்து அடைந்து கொண்ட தேன்மதியோ இலக்கின்றி அங்கிருந்த சுவரை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

கவிகிருஷ்ணாவை அவள் நிச்சயமாக சென்னையில் பார்க்க கூடும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை.

அப்படி இருக்கும் நிலையில் இன்று அவனை அதுவும் அத்தனை நெருக்கத்தில் பார்த்ததும் அவள் மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போனதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

இத்தனை நாள் நினைவுகளாக அவளை தொடர்ந்து வந்தவன் இன்று நேரிலும் அவளை காண வந்து விட்டான்.

மனதளவில் குழப்பமடைந்து இருந்தவள் இப்போது அவனை நேரில் பார்த்த நொடி முதல் மேலும் குழம்பி போய் அமர்ந்திருந்தாள்.

எல்லோரும் சொல்வது போல தான் கவிகிருஷ்ணாவை ஏற்றுக் கொண்டு வாழ முடியுமா என்பது அவளுக்கு இன்று வரை தெரியாது.

மனம் ஒன்றும் ஆடை இல்லையே உடனே ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று என்று மாற்றி கொள்ள.

சிறிது நேரத்திற்கு முன்பு கோவிலில் அவனது வலிய கரங்களுக்குள் அவள் கட்டுண்டு நின்ற அந்த கணத்தை எண்ணி பார்க்கும் போதே அவள் மேனி முழுவதும் ஒரு சிலிர்ப்பு வந்து சென்றது.

அவனைப் பார்த்தால் தான் தான் பலவீனமாக மாறிச் செல்கிறேன் என்று எண்ணி அவனை விட்டு விலகி வந்தாள் தேன்மதி.

ஆனால் கடவுளோ அவளுக்கு விதித்தது வேறு ஒன்றாக இருக்கும் போது அவளால் எத்தனை காடு, மலைகள் சென்று ஒளிந்து கொள்ள கூடும்?

தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவள் கண்களோ இத்தனை நாள் மறந்திருந்த அழுகையை தத்தெடுத்து கொண்டது.

நிற்காமல் அருவி போல தேன்மதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க மறுபுறம் கவிகிருஷ்ணா தன் காரில் புன்னகை மாறாத முகத்துடன் சென்று கொண்டிருந்தான்.

“எனக்கு தெரியும் தேனு உன் மனசில் என் மேல ஒரு பாசம் இருக்கு அதை நீ வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க அதற்கான காரணமும் தெரியும் கடவுள் இன்னாருக்கு இன்னாருனு எப்போவோ எழுதி வைத்துட்டாரு அதற்கிடையே என்ன வேணும்னா நடக்கலாம் ஆனா நம்ம உறவு அது எப்போதும் மாறாது அது கூடிய சீக்கிரம் உனக்கே புரியும் புரிய வைப்பேன் இனிமேல் உன் மனசை உனக்கு புரிய வைக்காமல் இந்த சென்னையில் இருந்து நான் போகப் போறது இல்லை தேனுமா! உன்னையும் சம்மதிக்க வைத்து என் அம்மாவோட ஆசையையும் நான் நிறைவேற்றுவேன்” தன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டவன் தன் காரை ஒரு பெரிய ஹாஸ்பிடல் முன்னால் கொண்டு போய் நிறுத்தினான்.

“ஐ யம் டாக்டர் கவிகிருஷ்ணா ஊட்டி லோட்டஸ் ஹாஸ்பிடலில் இருந்து வர்றேன் டாக்டர் விருத்தாசலத்தை மீட் பண்ணணும்” ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் கவிகிருஷ்ணா கூற

“ஒரு நிமிஷம் ஸார்” என்று விட்டு தன் முன்னால் இருந்த இண்டர்காமை எடுத்து சிறிது நேரம் பேசிய அந்த பெண் மறுபடியும் இண்டர்காமை வைத்து விட்டு

“டாக்டர் இங்கேயே வர்றேன்னு சொன்னாங்க நீங்க அப்படி உட்கார்ந்து இருங்க ஸார் டாக்டர் இப்போ வந்துடுவாரு” என்றவாறே சற்று தள்ளி இருந்த ஷோபாவைக் காட்ட சரியென்று விட்டு கவிகிருஷ்ணா அங்கு சென்று அமர்ந்து கொண்டான்.

“ஹலோ கிருஷ்ணா! என்ன மறுபடியும் வந்து இருக்க? ஹான்பிரஸ் ஹாலில் ஏதாவது மறந்து வைச்சுட்டியா?” கவிகிருஷ்ணாவின் தோளில் தட்டி கொடுத்தவாறே அவனெதிரில் விருத்தாசலம் அமர்ந்து கொள்ள அவரருகில் சென்று அமர்ந்து கொண்டு அவரை இறுக அணைத்துக் கொண்டான் கவிகிருஷ்ணா.

“டேய்! கிருஷ்ணா! என்னடா பண்ணுற?” விருத்தாசலம் பதட்டத்துடன் அவனை தள்ளி விட அவரைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவன்

“டாக்டர் நீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் பண்ணுறதுனே தெரியல” என்று விட்டு மீண்டும் அவரை அணைத்துக் கொள்ள போக அவனை தன் அருகில் வர விடாதவாறு தள்ளி விட்டவர்

“கிருஷ்ணா எதுவாக இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லுடா! ஒரு சைக்காட்ரிஸ்ட் என்னையே நீ ரொம்ப கன்பியுஸ் பண்ணுற!” எனவும் அவரைப் பார்த்து மீண்டும் கவிகிருஷ்ணா சிரித்துக் கொண்டான்.

“நீங்க இங்க சென்னையில் கான்பிரஸ் வைத்தது எனக்கு ரொம்ப நல்லதாக போச்சு நான் எந்த விஷயத்தை மறந்ததாக இத்தனை நாளா நினைத்து இருந்தேனோ அந்த விஷயத்தை உண்மையாக நான் மறக்கல அப்படி நானாக நினைத்து இருந்து இருக்கேன் இன்னைக்கு மறுபடியும் அந்த விஷயம் என் கண்களில் பட்டாச்சு அப்போவே முடிவெடுத்துட்டேன் இனிமேல் எதற்காகவும் என் முடிவில் இருந்து நான் மாறப்போறது இல்லை”

“யூ மீன் தேன்மதி?” கேள்வியாக கேட்ட விருத்தாசலத்தை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்

“எஸ் டாக்டர்” என்று கூறினான்.

“எப்படி டா கிருஷ்ணா? எங்க பார்த்த? இவ்வளவு பெரிய சென்னையில் எங்கேன்னு அவளை கண்டு பிடித்த?”

“அது தான் டாக்டர் கடவுளோட விளையாட்டு! இல்லேன்னா நான் சென்னையில் அவளை பார்த்து இருக்க முடியுமா? அதுவும் கோவிலுக்கே போகாதவன் இன்னைக்கு கோவிலுக்கு போய் அங்கே அவளும் வந்து! எல்லாம் அவரோட விளையாட்டு” மேல் நோக்கி கவிகிருஷ்ணா தன் கையை காட்ட புன்னகையோடு அவனது தோளில் தட்டி கொடுத்தார் விருத்தாசலம்.

“எப்படியோ நீ சந்தோஷமாக இருந்தால் சரி பட் இன்னைக்கு தான் நீ ஊட்டி போயிடுவியே அப்புறம் எப்படி தேன்மதி கூட பேசுவ? அவளை பார்ப்ப?”

“அதற்கு தான் என் ஆசான், குரு நீங்க இருக்கீங்களே!”

“என்னது? நானா? நான் என்ன பண்ணுறது?”
குழப்பமாக கேட்ட விருத்தாசலத்தை பார்த்து புன்னகத்தவன்

“உங்களுக்கு இன்னுமா புரியல?” என்று கேட்டான்.

“இல்லையே நீ….டேய் கிருஷ்ணா! கடைசியில் என்னை நல்லா சிக்க வைக்குறடா நீ!”

“ஹா! ஹா! ஹா! டாக்டர் நான் உங்கள் சிஷ்யன்”

“இப்படியே பேசி பேசி என்னை நல்லா மடக்கி வைச்சுட்டடா நீ! இரண்டு வருஷத்தில் எதைக் கத்துக்கிட்டியோ இல்லையோ நல்லா பேசக் கத்துக்கிட்ட”

“எல்லாம் தானா நடக்குது டாக்டர்! வாட் கேன் ஐ டூ?”

“நீ எதுவும் பண்ண வேண்டாம் ஒரு மூணு மாசம் இங்க உன்னை தற்காலிகமாக அப்பாயிண்ட்மெண்ட் பண்ணுறேன் அப்புறம் உன் முடிவைப் பொறுத்து நிரந்தரமாக இங்கே வைக்கலாமா? இல்லை ஊட்டிக்கே பார்ஸல் பண்ணலமானு பார்க்கலாம்!”

“டாக்டர் கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் ஊட்டிக்கு தானே போகணும் அங்கே தானே தேனுக்காக நான் எல்லாம் பண்ணி வைத்து இருக்கேன்”

“அடப்பாவி! இது எப்போ?”

“அதெல்லாம் அப்போ அப்போ நடந்தது அப்படியே அம்மா கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு வர்றேன் டாக்டர் ஸார் என்னை மூணு மாதம் சென்னையில் தங்க சொல்லிட்டாருனு”

“டேய்! என் தலையில் கடைசியில் எல்லாவற்றையும் போட்டுட்டு போறியேடா!”

“பயப்படாதீங்க டாக்டர்! எதுவும் ஆகாது வீட்டில் நான் கான்பிரஸிற்காக சென்னைக்கு வர்றேன்னு சொன்ன போதே எல்லோரும் ஷாக் ஆகி நின்னாங்க இப்போ மூணு மாதம் இங்கே நிற்குறேன்னு சொன்னா கன்பர்மா அவங்க நான் என்ன முடிவோடு இருக்கேன்னு புரிந்துப்பாங்க”

“நல்ல புரிந்துணர்வு! சரி உன் அப்பாயிண்ட்மெண்ட் விஷயத்தை பற்றி மற்றவங்க கிட்டயும் பேசிட்டு வர்றேன்”
என்று விட்டு விருத்தாசலம் எழுந்து கொள்ள

“ஓகே டாக்டர் நைட் பார்க்கலாம் ஒரு முக்கியமான வேலையாக போறேன்” என்றவாறே கவிகிருஷ்ணாவும் வெளியேறி சென்றான்.

வெளியேறி சென்ற கவிகிருஷ்ணாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே
“நல்ல பையன்” என்று விட்டு விருத்தாசலமும் மற்றைய புறமாக நடந்து சென்றார்.

கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்ற தேன்மதி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

உடல் களைப்பும், மனக் களைப்பும் போக குளித்து முடித்தவள் சாதாரண காட்டன் சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு தன் அறைக் கதவின் முன்னால் தயங்கி நின்றாள்.

கவிகிருஷ்ணாவை கோவிலில் பார்த்ததை சொல்வதா? வேண்டாமா? என்று தன் மனதிற்குள்ளேயே பலமுறை கேட்டு பார்த்து கொண்டவள்
‘அவனைப் பார்த்தால் கட்டாயம் சொல்லணுமா? ஒண்ணும் தேவையில்லை’ என தன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டு தன் அறைக்குள் இருந்து வெளியேறி படியிறங்கி ஹாலை நோக்கி சென்றாள்.

“வாடாம்மா மதி! உன்னை தேடி வரலாம்னு இப்போ தான் ஜானகி எழுந்து நின்னா அதற்குள்ள நீயே வந்துட்ட நம்ம வீட்டுக்கு முக்கியமான ஒரு விருந்தாளி வந்து இருக்காங்க பாரு” புன்னகையோடு கூறிய வண்ணம் சம்யுக்தா விலகி நிற்க அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டு தேன்மதியைப் பார்த்து சிரித்த வண்ணம் அமர்ந்திருந்தான் கவிகிருஷ்ணா……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!