Katre-23
Katre-23
கவிகிருஷ்ணாவை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை தேன்மதியின் அதிர்ச்சியான தோற்றமே நன்கு புலப்படுத்தியது.
“என்ன மதி அப்படியே நிற்குற? யாருனு தெரியுதா? நம்ம கவிகிருஷ்ணா ஊட்டியில் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி நம்ம பார்த்தோமே! ஞாபகம் இருக்கா?”
“ஹான் இருக்கு இருக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு” வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெகு அழுத்தமாக தேன்மதியின் வாயில் இருந்து வெளி வந்தது.
“சரி நீ தம்பியோடு கொஞ்ச நேரம் பேசிட்டு இரும்மா அப்பாவும், நரசிம்மனும் இப்போ வந்துடுவாங்க நானும், ஜானகியும் சட்டுன்னு சமைச்சுட்டு வர்றோம்” என்று விட்டு ஜானகியும், சம்யுக்தாவும் சமையலறையை நோக்கி சென்று விட தேன்மதியோ எதுவும் பேசாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.
“என்ன தேன்மதி நீங்க நம்பியார் ரசிகையோ?” கவிகிருஷ்ணாவின் கேள்வியில் குழப்பமாக அவனை பார்த்தாள் தேன்மதி.
“இல்லை ரொம்ப நேரமாக அவர் பண்ணுற மாதிரி கையை பண்ணிட்டு இருந்தீங்க”
“இரண்டு வருஷத்தில் நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க போல!” நக்கலாக கேட்டு கொண்டே அவனெதிரில் அவள் அமர்ந்து கொண்டாள்.
“சில பேரை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் அதற்கு தான் இரண்டு வருஷமாக ட்ரெயினிங் எடுத்து வர்றேன் பிற்காலத்தில் ரொம்ப ரொம்ப யூஸ் ஆகும் இல்லையா?”
ரொம்ப என்ற வார்த்தையை தேன்மதியின் கண்களைப் பார்த்து கொண்டே அழுத்தி கூறினான் கவிகிருஷ்ணா.
“மிஸ்டர் என்ன சொல்ல வர்றீங்க நீங்க?”
“எதற்கு இவ்வளவு டென்ஷன் தேன்மதி நான் என் பேஷண்ட்ஸை டீல் பண்ணுறதைப் பற்றி தானே சொல்லுறேன் ஒரு சைக்காட்ரிஸ்ட் நல்லா பேசக் கத்துக்கணும் இல்லையா?” தன் இதழில் தவழ்ந்த புன்னகையோடு கவிகிருஷ்ணா கேட்கவும் தேன்மதியோ தன் முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.
“பார்த்து கழுத்தை திருப்புங்க தேன்மதி அப்புறம் கழுத்தில் சுளுக்கு வந்துடும் அதற்கு அப்புறமாக கை வசம் டாக்டர் இருக்காருனு என்னை ட்ரீட்மெண்ட் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணக் கூடாது இல்லையா?”
“அய்யோ! ரொம்ப கற்பனை எல்லாம் பண்ணாதீங்க எனக்கு கழுத்தில் பெரிய பேண்டேஜ் போடும் நிலைமை வந்தாலும் உங்க கிட்ட மட்டும் சத்தியமாக ட்ரீட்மெண்ட் பார்க்க வரமாட்டேன்”
தேன்மதியின் பதிலில் கவிகிருஷ்ணாவின் முகமோ சட்டென்று வாடிப் போனது.
அத்தனை நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தவன் திடீரென்று தான் சொன்னதைக் கேட்டு அமைதியாகி விட அவளுக்கோ சற்று கவலையாகிப் போனது.
“நான் தப்பாக எதுவும் சொல்லலயே!”
தேன்மதி அவனை பார்த்து கூற அவளைப் பார்த்து புன்னகத்து கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
அவனது இந்த திடீர் அமைதி ஏனோ அவளை இம்சை செய்தது.
“மிஸ்டர் கிருஷ்ணா ஐ யம் ஸாரி நீங்க ஜாலியாக பேசுனதுக்கு நானும் பதிலுக்கு ஜாலியாக பேசுனேன் நான் ஏதாவது தப்பாக சொல்லி இருந்தால் ஸாரி” தேன்மதி அவன் முகமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவனை சமாதானப்படுத்த தன்னால் முடிந்த மட்டும் பணிந்து பேசத் தொடங்கினாள்.
அப்போதும் கவிகிருஷ்ணா எதுவும் பேசாமல் இருக்க தேன்மதியோ என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்ப்பதும் கவிகிருஷ்ணாவைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்.
“கிருஷ்ணா ஐ யம் ஸாரி நான் சும்மா ஜாலியாக தான் அப்படி பேசுனேன் ஐ யம் ஸாரி”
“இப்போ எதற்காக இவ்வளவு ஸாரி கேட்குற தேன்மதி?”
“இல்லை நீங்க திடீர்னு சைலண்ட் ஆகிட்டீங்க அது தான்”
“ஏன் நான் சைலண்டா இருந்தால் உனக்கு என்ன வந்தது?”
“……..”
“சொல்லு தேன்மதி நான் சைலண்டா இருந்தால் உனக்கு என்ன வந்தது? நீ ஏன் இந்தளவிற்கு ரியாக்ட் பண்ணணும்? நான் கவலையாக இருக்கிறதைப் பார்த்தால் உனக்கு ஏன் இவ்வளவு பீல் ஆகுது? சொல்லு தேன்மதி ஏன்?”
“…..”
“உன்னால பதில் சொல்ல முடியாதுடி உன் மனதில் என்ன இருக்குன்னு உனக்கும் நல்லாவே தெரியும் எனக்கும் நல்லாவே தெரியும் இருந்தும் அதை தைரியமாக உன்னால ஏற்றுக் கொள்ள முடியல ஏன்னா நீ ஒரு தைரியம் இல்லாதவ உன் மனசைப் பார்த்து பயந்து ஓடுற ஒரு தைரியம் இல்லாதவ உண்மையை தைரியமாக எதிர்த்து நிற்க துணிச்சல் இல்லாதவ”
“போதும் கிருஷ்ணா ஸ்டாப் இட்” பெரியவர்களுக்கு தங்கள் சண்டை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சற்று தணிந்த குரலில் அதே நேரம் கோபமாக எழுந்து நின்று பேசினாள் தேன்மதி.
“நான் யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட மாட்டேன் எதையும் தைரியமாக என்னால பேஸ் பண்ண முடியும் என்ன சொன்னீங்க என் மனதில் என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரிந்து இருந்தால் இங்க நீங்க இப்படி நிற்க வேண்டிய தேவையே வந்து இருக்காது மிஸ்டர்.கிருஷ்ணா”
“ஓஹ் அப்படியா? அப்போ உன் மனசில் நான் இல்லை அப்படி தானே?” தேன்மதியைப் பார்த்து கேட்டு கொண்டே அவளெதிரில் வந்து நின்றான் கவிகிருஷ்ணா.
“ஆமா நீங்க இல்லை இப்போ கூட நான் உங்க கிட்ட ஸாரி கேட்டது நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன் அதற்காக தானே தவிர வேற எந்த ரீசனுக்காகவும் இல்லை”
“ஓஹ் ரியலி? அப்போ வேறு எந்த ரீசனும் இல்லை அப்படிதானே?”
“ஆமா அப்படி தான்” கவிகிருஷ்ணாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்து கூறினாள் தேன்மதி.
இருவரும் ஒருவரை ஒருவர் பேச்சால் சீண்டிக் கொண்டே வெகு அருகில் நின்று கொண்டிருந்ததை அவர்கள் இருவரும் அறியவில்லை.
“எத்தனை நாள் நீ இப்படி உன்னையே ஏமாற்றிட்டு இருக்கப் போற தேன்மதி? உன் மனசில் கை வைத்து சொல்லு என் மேல உனக்கு எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லைன்னு! சொல்லு தேன்மதி!”
” கிருஷ்ணா தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தாதீங்க நானே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சீரான மனநிலைக்கு என்னை கொண்டு வந்துட்டு இருக்கேன் நீங்க மறுபடியும் என்னை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட பார்க்குறீங்க!”
“நான் உன்னை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப் பார்க்குறேனா? ரொம்ப நல்லா இருக்கு நீ சொல்றது உன்னை எந்த கஷ்டமும் நெருங்கி வரக்கூடாதுனு தானே இந்த இரண்டு வருஷமாக உன்னை விட்டு விலகி உன் நினைவுகளோடு வாழ்ந்துட்டு இருந்தேன் உன் நினைவுகளே போதும்னு தான் இருந்தேன் மறுபடியும் உன்னை பார்க்க முடியாதுனு தான் நினைச்சு இருந்தேன் ஆனா கடவுளோட விளையாட்டு அவரோட இடத்திலேயே உன்னை மறுபடியும் என் கண்களில் காட்டிட்டாரு”
“கிருஷ்ணா ப்ளீஸ்! புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க நீங்களும், நானும் ஒரு நாளும் சேர முடியாது! ப்ளீஸ் உங்க மனசை மாற்றுங்க!”
“ஏன் முடியாது? முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கு உன் மனதில் நான் இருக்கேன் அந்த கடவுள் முடிவு பண்ணுணது எனக்கு நீ உனக்கு நான் இடையில் நடந்தது எல்லாம் கடவுள் நமக்கு வைத்த சோதனைகள் இல்லேன்னா எதற்காக நீ ஊட்டி வர சம்மதிக்கணும்? ஊட்டியில் அத்தனை ஹாஸ்பிடல் இருக்கும் போது நான் இருக்கும் ஹாஸ்பிடலிற்கு உன்னை கொண்டு வரணும்?”
“…….”
“தேன்மதி இங்கே பாரு!” தன் ஒற்றை விரலால் அவள் தாடையை நிமிர்த்தி தன் பார்வையோடு அவள் பார்வையை கலக்க விட்டான்.
“எனக்கு ஆரம்பித்தில் கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது ஆனா இப்போ நம்புறேன் அந்த கடவுள் நிச்சயமாக உன்னையும், என்னையும் சேர்த்து வைப்பாரு”
“ப்ளீஸ்! ஸ்டாப் இட் கிருஷ்ணா!” அவனது கையை தட்டி விட்டவள் மறுபுறம் திரும்பி நின்று தன் முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினாள்.
“தேனு!” பதட்டத்துடன் அவள் முன்னால் வந்து நின்றவன்
“நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு இப்படி எல்லாம் பண்ணல தேனு! ஐ யம் ஸாரி” அப்போதும் தேன்மதியின் அழுகை நிற்கவில்லை.
“தேனு நான் பண்ணுறது சரியா? தப்பா? எனக்கு தெரியாது எனக்கு உன்னை பிடித்து இருக்கு உன் கூட ரொம்ப நாள் சந்தோஷமாக வாழணும்னு ஆசைப்படுறேன் அதற்காக நான் எத்தனை வருஷம் வேண்டுமானாலும் காத்து இருப்பேன் உன் மனசு மாறும் வரைக்கும் நான் இப்படியே உனக்காக காத்து இருப்பேன் அதற்காக உன்னை விட்டு விலகி எல்லாம் என்னால இருக்க முடியாது”
கவிகிருஷ்ணாவின் கூற்றில் தன் கண்ணீர் நிற்க அதிர்ச்சியாக அதே வேளை குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் தேன்மதி.
“பர்ஸ்ட் கல்யாணம் பண்ணிக்கலாம் அதற்கு அப்புறமாக உன் மனசு மாறுனாலும் ஓகே மாறலனாலும் ஓகே எப்படியும் சண்டை போடுறதுக்காவது என் பக்கத்தில் நீ இருப்ப இல்லையா?”
அவனது ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு அழுது கொண்டிருந்தவள் இப்போது அவன் கூறியதை கேட்டு கோபமாக அவனை முறைத்து பார்த்தாள்.
“சூப்பர் இது தான் தேன்மதிக்கு அழகு! இப்படி என்னை முறைத்து பார்க்கும் தேன்மதி தான் எனக்கு வேணும்! அழுமூஞ்சி தேன்மதி இல்லை!” அவளது கன்னத்தில் படிந்து இருந்த அவளது கண்ணீர் தடத்தை துடைத்து விட்டபடி கவிகிருஷ்ணா கூறவும் அவனது கைகளை விலக்கி விடும் எண்ணம் கூட சிறிதும் தோன்றாமல் தேன்மதியோ ஆச்சரியமாக அவனை பார்த்து கொண்டு நின்றாள்.
அவளது அந்த ஆச்சரியமான பார்வையில் கவிகிருஷ்ணாவின் கரங்களோ அப்படியே வேலை நிறுத்தம் செய்தது.
அவளது ஒரு பார்வைக்காக இரண்டு வருடங்களாக காத்து இருந்தவன் அவன்.
இனி இந்த கண்களை பார்க்கவே முடியாதோ? என்று எண்ணி பல நாட்களை தூங்கா இரவாக கழித்தவன் அவன்.
இன்று அந்த கண்கள் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து அவனது மனம் மொத்தமாக தன் வசமிழந்து போனது.
அவனையும் அறியாமல் தேன்மதியின் அருகில் சென்று நின்றவன் தன் கைகளால் அவளது கன்னத்தை வருடிக் கொடுத்தான்.
தேன்மதியின் நிலையோ என்னவென்று சொல்ல முடியாத ஒரு வலயத்தில் அடைபட்டு கிடந்தது.
அவனை வேண்டாம் வேண்டாமென்று ஒதுக்கி வைத்தவள் இன்று அவனை தன் அருகில் பார்த்ததுமே எந்த ஒரு எதிர்ப்பும் காட்ட முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
அவனது ஸ்பரிசமும், அவனது அந்த கூர்மையான விழிகளில் இருந்து வந்த அந்த ஆழமான பார்வையும் அவளை மொத்தமாக கட்டி போட்டு பிடித்து வைத்திருந்தது.
மனமோ அவனது செய்கையை ஏற்றுக் கொள்ள சொல்லி அவளைத் தூண்ட அவளது மூளையோ சட்டென்று அவளை தட்டி எழுப்பியது.
கவிகிருஷ்ணாவின் கரங்கள் அவளது கன்னத்தில் இருந்து இதழ்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனவள் சட்டென்று அவனை தள்ளி விட்டு
விலகி நின்று தன் கண்களை மூடிக் கொண்டாள்.
தேன்மதி சட்டென்று தன்னை தள்ளி விட்ட பின்னரே கவிகிருஷ்ணாவிற்கும் தான் செய்து கொண்டிருந்த காரியம் புரிந்தது.
தேன்மதியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் துணிச்சல் இன்றி தலை குனிந்து நின்றவன்
‘என்ன காரியம் பண்ணிட்ட கிருஷ்ணா?’ என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.
“ஹேய் கிருஷ்ணா! எப்போ ஊட்டியில் இருந்து வந்த?” தேன்மதி தன் பின்னால் கேட்ட சுரேந்திரனின் குரலில் திரும்பி அவரையும், கவிகிருஷ்ணாவையும் ஒரு முறை பார்த்து விட்டு சமையலறையை நோக்கி சென்று விட நரசிம்மனும், சுரேந்திரனும் தேன்மதியையும், கவிகிருஷ்ணாவையும் மாறி மாறிப் பார்த்தனர்.
அவர்கள் பார்வையை உணர்ந்து கொண்டாற் போல சங்கடமாக சிரித்துக் கொண்டே
“காலையில் தான் அங்கிள் வந்தேன் ஒரு கான்பரன்ஸ் விஷயமாக” என்றவனது பார்வையோ தேன்மதி சென்ற பக்கமே நிலைகுத்தி நின்றது.
“என்ன இரண்டு வருடங்களுக்கு அப்புறம் மீட்டிங் நல்ல ரெஸ்பாண்ஸ் போல?” சிரித்துக் கொண்டே கவிகிருஷ்ணா தோளில் தட்டி கொடுத்த வண்ணம் சுரேந்திரன் கேட்கவும்
“அய்யோ அங்கிள்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க எப்படி இவ்வளவு ஸார்ப்பாக இருக்குறீங்க?” என்று கேட்டான் கவிகிருஷ்ணா.
“இப்படி ஸார்ப்பாக இல்லைன்னா எப்படி இவ்வளவு பேமஸ் லாயர் ஆக முடியும்?”
“அதுவும் கரெக்ட் தான் ஆனா உங்க பொண்ணு உங்க அளவுக்கு ஸார்ப் இல்லை அங்கிள்” போலியாக அலுத்துக் கொண்டே கவிகிருஷ்ணா கூற
“அதற்கு தான் நீ இருக்குறியே கிருஷ்ணா! தேன்மதியை ஸார்ப்பாக மாற்றி எடுக்க” என்று கேலியாக கூறினார் நரசிம்மன்.
“கடைசியில் ஒரு டாக்டரை பென்சில் சீவி கொடுக்குற ஸார்ப்பனராகவே மாற்றப் போறீங்க போல!” என்று கவிகிருஷ்ணா கூறவும் அவனைப் பார்த்து மற்ற ஆண்கள் இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.
அதன் பிறகு சிறிது நேரம் அவர்களோடு இணைந்து சிரிப்பும், கேலியுமாக கவிகிருஷ்ணா பேசி கொண்டு இருக்க அவனது குரலை கேட்டு தேன்மதியோ கோபமாக குறுக்கும் நெடுக்கும் சமையலறைக்குள் நடந்து கொண்டிருந்தாள்.
சம்யுக்தா மற்றும் ஜானகி தேன்மதியின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டு இருந்தாலும் அவளது கோபத்திற்கான காரணம் தெரிந்து இருந்ததால் அவளிடம் அதை பற்றி அவர்கள் பேசவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ஜானகியின் முன்னால் வந்து நின்ற தேன்மதி
“அத்தை! அந்த கிருஷ்ணா எப்போ போவான்? இங்கேயே அப்படியே டேரா போடுறதா உத்தேசம் போட்டு வந்துட்டானா என்ன?”
“மதி என்ன பேச்சு இது? அவன், இவன்னு எல்லாம் பேச உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தா? கிருஷ்ணா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கும் விருந்தாளி அதை ஞாபகம் வைத்து பேசு” சம்யுக்தா சிறிது கண்டிப்போடு கூற தேன்மதியோ இன்னும் விறைப்பாக நின்று கொண்டிருந்தாள்.
“கிருஷ்ணா இன்னும் மூணு மாசத்துக்கு சென்னையில் தான் தங்கப் போறான் இங்கே அவனுக்கு டிரான்ஸ்பர் ஆகி இருக்கு அதுவும் இல்லாம அவனுக்கு சென்னை முன்ன, பின்ன பழக்கம் இல்லாத இடம் அதனால கொஞ்ச நாளைக்கு கிருஷ்ணா நம்ம வீட்டில் தான் இருக்கப் போறான் டீடெய்ல்ஸ் போதுமா?” சம்யுக்தா தேன்மதியின் முன்னால் வந்து நின்று கேட்டு விட்டு
“ஜானகி சமைச்சதை எல்லாம் எடுத்துட்டு வா” என்றவாறே அவளை கடந்து சென்று விட
“என்ன மூணு மாதம் சென்னையில் இருக்குப் போறானா? அதுவும் நம்ம வீட்டில்?” அதிர்ச்சியில் பேச வார்த்தைகள் இன்றி சிலையாகி நின்றாள் தேன்மதி…..
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.