KATRE-24

KATRE-24

டைனிங் டேபிளில் அமர்ந்து எல்லோருடனும் சகஜமாக பேசிக் கொண்டே கவிகிருஷ்ணா சாப்பிட்டு கொண்டிருக்க தேன்மதியோ தன் தட்டில் இருந்த உணவுப் பருக்கைகளை ஒவ்வொன்றாக கொறித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன மதி சாப்பாடு பிடிக்கலயா? சாப்பிடாமல் அப்படியே வைத்து இருக்க?” ஜானகி தேன்மதிக்கு மாத்திரம் கேட்கும் வகையில் மெல்லிய குரலில் அவளருகில் வந்து நின்று கேட்க

அவரைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
“அப்படி எல்லாம் இல்லை அத்தை சாப்பாடு எல்லாம் நல்லா தான் இருக்கு எனக்கு தான் பசி இல்லை” என்று கூறினாள்.

“அப்படியா? எங்கே என் முகத்தை பார்த்து சொல்லு உனக்கு பசி இல்லைன்னு”

“……”

“மதி கண்ணா எனக்கு எல்லாம் தெரியும் நீ எதற்காக இவ்வளவு தயங்கணும் உன் மனசுல என்ன இருக்குன்னு எங்க எல்லோருக்கும் தெரியும் நீ தான் வீணாக பிடிவாதமாக இருக்க”

“இல்லை அத்தை நீங்களும் என்னை புரிந்து கொள்ளாமல் பேசுறீங்க!”

“சரி அப்படியே இருக்கட்டும் அந்த யோசனை எல்லாம் அப்புறமாக பண்ணலாம் முதல்ல இப்போ ஒழுங்காக சாப்பிடு மனசில் இருக்குற குழப்பத்திற்கு வயிற்றை ஏன் பழி வாங்குற அதாவது சந்தோஷமாக இருக்கட்டுமே! நல்லா சாப்பிடு”

“சரி அத்தை” அதற்கு மேல் ஜானகியின் கருத்தை தேன்மதியினால் மறுத்து பேச முடியவில்லை.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு எழுந்து கொள்ள இறுதியாக அந்த டைனிங் டேபிளில் கவிகிருஷ்ணாவும், தேன்மதியும் மாத்திரமே இருந்தனர்.

தேன்மதி அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு எழுந்து கொள்ள கவிகிருஷ்ணாவோ சட்டென்று அவள் முன்னால் வந்து நின்றான்.

அவனை திடீரென்று தன் முன்னால் எதிர்பார்க்காத தேன்மதியோ அதிர்ந்து போய் நிற்க அவள் முன்னால் சொடக்கிட்டவன் அவளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“மிஸ்டர் நடு வீட்டில் நின்னு என்ன வேலை பார்க்குறீங்க? மரியாதையாக என் வழியில் இருந்து விலகி நில்லுங்க!” எச்சரிக்கை விடுப்பது போல தேன்மதி கூறவும் அவளை பார்த்து புன்னகத்து கொண்டவன் மேலும் இரண்டடி அவளை நெருங்கி வந்து நின்றான்.

கவிகிருஷ்ணா தன் அருகில் வரவும் கலவரம் கொண்ட தேன்மதியோ மேலும் இரண்டடி பின்னால் நகர்ந்து சென்றாள்.

“ஹேய்! எதற்கு இவ்வளவு பயப்படுற? நான் என்ன பேயா? பிசாசா?”

“இரண்டும் இல்லை நீங்க ஒரு இம்சை! என்னை விடாமல் தொடர்ந்து வந்து என்னை டார்ச்சர் பண்ணுற இம்சை!”

“வாவ்! எனக்கு ப்ரொமோஷன் கொடுத்துட்டியா? யூ சீ தேனு! மனதுக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் இப்படி செல்ல பெயர் எல்லாம் வைக்கத் தோணும்”

“கிருஷ்ணா திஸ் இஸ் யுவர் லிமிட்! இதற்கு மேல தேவையில்லாமல் என்னை வம்பு பண்ணுணா அப்புறம் நடக்குறதே வேற சொல்லிட்டேன் என் வீட்டில் எல்லோரும் உங்களுக்கு சப்போர்டா இருக்கலாம் அதற்காக நானும் அப்படி இருப்பேன்னு நினைச்சுடாதீங்க!” கோபமாக படபடவென எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள் தன் வழியில் நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ளி விட்டு விட்டு செல்ல கவிகிருஷ்ணாவோ புன்னகையோடு தேன்மதியையே பார்த்து கொண்டு நின்றான்.

“தேனு ம்மா! உன்னை அப்படியே விட்டுட்டு போகவா இத்தனை வருஷம் காத்து இருந்தேன்? உன் மனசில் இருக்குறதை கூடிய சீக்கிரம் உன் வாயாலேயே சொல்ல வைக்குறேன்டா மை டியர் தேனு!” மனதிற்குள் தனக்குத்தானே கூறிக் கொண்டவன் புன்னகையோடு மற்றைய புறம் நடந்து சென்றான்.

சிறிது நேரம் எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க ஜானகியும், நரசிம்மனும் கண்கள் கலங்க கவிகிருஷ்ணாவையே பார்த்து கொண்டு இருந்தனர்.

பேசிக் கொண்டே தற்செயலாக அவர்கள் இருவரையும் பார்த்த கவிகிருஷ்ணா அவர்கள் மன எண்ணங்களை புரிந்து கொண்டாற் போல தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து அவர்கள் இருவரின் நடுவிலும் சென்று அமர்ந்து கொண்டான்.

தேன்மதியோ அவன் ஒவ்வொரு செயலையும் விசித்திரமாகவே பார்த்து கொண்டு இருந்தாள்.

ஜானகி மற்றும் நரசிம்மனின் கரங்களை ஆதரவாக பற்றி கொண்டவன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க அந்த ஆதரவான கைப் பற்றுதலே அவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.

தேன்மதியின் ஆழ் மனமோ அவனது ஒவ்வொரு செய்கையையும் பார்த்து
“எல்லோரையும் ஈஸியாக தன் பக்கம் இழுத்துக்குறானே? எங்கே தான் இந்த வித்தையை கண்டு பிடித்தானோ?” என அவனை மெச்சிக் கொண்டு இருக்க வெளியிலோ அவள் அவனைக் கவனிக்காததைப் போல அமர்ந்து இருந்தாள்.

சிறிது நேரத்தின் பின்னர் எல்லோரும் தங்கள் அறைகளுக்குள் சென்று விட கவிகிருஷ்ணா மாத்திரம் ஹாலில் தனியாக அமர்ந்திருந்தான்.

தான் அமர்ந்திருந்த இருக்கையில் பின்புறமாக தன் தலையை சாய்த்து அமர்ந்திருந்தவன் மனமோ பல்வேறு வகையான சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தது.

‘நான் தேன்மதி கிட்ட நடந்து கொள்ளும் முறை சரியா? அவளை தேவையில்லாமல் நான் கஷ்டப்படுத்துறேன்னா? அவளை பிரிந்து என்னால இருக்க முடியுமா? அவ எப்போ என்னை, என் மனசை புரிந்து கொள்ளுவா? நான் அவளை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கேன்னா?’ பல கேள்விகள் அவன் முன்னால் அணி வகுத்து நின்றது.
ஆனால் அதற்கான பதில் எல்லாம் அவனிடம் இல்லை.

சிறிது நேரம் அந்த ஹாலில் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவன் அங்கிருந்த பூஜையறையை பார்த்து விட்டு அந்த இடத்தை நோக்கி சென்றான்.

தன்னுடைய அறைக்குள் தூக்கம் வராமல் கட்டிலில் உருண்டு புரண்டு கொண்டிருந்த தேன்மதி ஒரு கட்டத்திற்கு மேல் தாளாமல் எழுந்து அமர்ந்தாள்.

“ஏன் எனக்கு இன்னைக்கு தூக்கமே வர மாட்டேங்குது?” கவலையாக தலையில் கை வைத்து யோசித்து கொண்டு இருந்தவள் அன்று மாலை கவிகிருஷ்ணா கோவிலில் இருந்து அவள் புறப்பட்டு செல்லும் போது கூறிய வார்த்தைகளை நினைத்து பார்த்தாள்.

“நைட் ட்ரீம்ஸ்லயும் என்னை நினைச்சுட்டு இருக்கக் கூடாது சரியா தேனு?” மீண்டும் மீண்டும் அவன் கூறிய அந்த வார்த்தைகள் அவள் காதிற்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்க

“நோ!” என்றவாறே தன் காதுகளை இறுக மூடிக் கொண்டவள் கண்களையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.

“மதி பீ கூல்! கூல்! கூல்!” தனக்குத்தானே பலமுறை அதை கூறிய வண்ணம் அமர்ந்திருந்தவள் சிறிது நேரம் கழித்து தன் கண்களை திறந்து கொண்டாள்.

ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து வந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தன் அருகில் இருந்த தண்ணீர் குவளையை தூக்கி பார்க்க அதுவோ காலியாக இருந்தது.

“இந்த அம்மா என்ன தான் வேலை பண்ணிட்டு இருக்காங்களோ? தண்ணீர் கூட நிரப்பி வைக்கல” முணுமுணுத்துக் கொண்டே தன் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் படியிறங்கி சமையலறையை நோக்கி சென்றாள்.

கவிகிருஷ்ணா ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்ததை மும்முரமாக திட்டி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த தேன்மதி கவனித்திருக்கவில்லை.

தன் கையில் இருந்த குவளை முழுவதும் தண்ணீரை நிரப்பி கொண்டு சமையலறைக்குள் இருந்து வெளியேறி வந்தவள் கவிகிருஷ்ணா பூஜையறையை நோக்கி செல்வதைப் பார்த்து விட்டு சட்டென்று அந்த இடத்திலேயே நின்றாள்.

“இந்த நேரத்தில் இவன் இங்கே என்ன பண்ணுறான்?” யோசனையோடு சுவற்றில் இருந்த கடிகாரத்தை திரும்பி பார்த்தாள்.

“பன்னிரண்டு மணி ஆச்சு இன்னும் தூங்காமல் இந்த நேரத்தில் இவனுக்கு என்ன இவ்வளவு பக்தி?” யோசித்து கொண்டே மெல்ல சப்தமில்லாமல் அடியெடுத்து வைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்றவள் பூஜையறை வாயிலில் மறைந்து நின்று அவன் என்ன செய்கிறான் என்று கண்காணித்து கொண்டு நின்றாள்.

பூஜையறைக்குள் வந்து நின்றவன் கடவுள் படங்களுக்கு நடுவில் இருந்த கவியரசனின் புகைப்படத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றான்.

“நீங்க ரொம்ப லக்கி கவியரசன்! நீங்க இப்போ இந்த இடத்தில் இல்லைனாலும் உங்க மேல தேன்மதி இன்னும் அன்பு வைத்து இருக்கா அந்த அளவில்லாத அன்பு தான் என்னை தேன்மதி பக்கமாக இழுத்துட்டே இருக்கு உங்க இடத்தில் நான் இருக்கக்கூடாதானும் சில நேரம் தோணும் அவ கண் முன்னால் இருந்தும் அந்த அன்பு கிடைக்காமல் இருக்குறதை விட இப்படி இருந்தாலாவது அவ அன்பு கிடைக்கலாம் இல்லையா? முருகா! ஆனாலும் நீங்க எனக்கு இப்படி பண்ணி இருக்கக் கூடாது இந்த இடத்தில் என்னை வைத்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் இல்லை?” கவிகிருஷ்ணா அங்கிருந்த எல்லாக் கடவுள் படங்களையும் பார்த்து பேசி கொண்டு நிற்க வெளியே நின்று அதை கேட்டு கொண்டிருந்த தேன்மதியோ தன் கையில் இருந்த குவளையை அங்கிருந்த மேஜை மேல் வைத்து கோபமாக பூஜையறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தான் வந்த வேகத்திலேயே கவிகிருஷ்ணாவின் தோளைப் பற்றி தன் புறமாக திருப்பியவள் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

“தேனு!” அதிர்ச்சியாக கவிகிருஷ்ணா அவளை பார்க்க

அவன் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றியவள்
“என்ன பேசுறதுனு யோசித்து பேச மாட்டியா? உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? நான் உன் மேல அன்பு காட்டலேன்னா உயிரை விட்டுடுவியா? சொல்லு உயிரை விட்டுடுவியா? உயிரை காப்பாற்றுற தொழில் பார்க்குற உனக்கு ஒரு உயிரோட மதிப்பு தெரியாதா? வாய் இருந்தால் என்ன வேணும்னா பேசுவியா?” பல்லைக் கடித்து கொண்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்கவும்
கவிகிருஷ்ணாவோ அவள் கைகளை தன் சட்டைக் காலரில் இருந்து பிரித்து எடுத்து விட்டு வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினான்.

“ஸ்டாப் இட் கிருஷ்ணா! எதுக்கு இப்படி சிரிக்குற? நீ என்ன லூஸா?” தேன்மதி சற்று கோபமாக தன் குரலை உயர்த்த

சட்டென்று அவளருகில் வந்து அவள் வாயில் கை வைத்தவன்
“உஸ்! சத்தம் போடாதே! அப்புறம் வீட்டில் உள்ளவங்களுக்கு நம்ம பிரச்சினை தெரிந்துடும்” என்று கூற அவளோ கோபமாக அவனைத் தள்ளி விட்டாள்.

“நான் ஏதோ என் மனசில் பட்டதை பேசிட்டு இருந்தேன் அதற்கு ஏன் நீ இவ்வளவு கோபப்படுற? நான் ஒண்ணும் இப்போவே என்னை லவ் பண்ணு இல்லைனே நான் செத்துப் போயிடுவேன்னு எதுவும் சொன்னேனா இல்லையே? அந்த இடத்தில் நான் இருந்தால் அப்படி நடந்து இருக்குமானு தானே கேட்டேன் அதற்கு போய் இப்படி பளாரென ஒண்ணு விட்டுட்டியே!” கவிகிருஷ்ணா தன் கன்னத்தை தடவி விட்டு கொண்டே கூற

தேன்மதியோ
“மனசில் பட்டதை எல்லாம் பேசுவியா? உன்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க அதை எல்லாம் யோசித்து பேச மாட்டியா? கடவுள் முன்னால் நின்று உன் இஷ்டப்படி நீ பேசுற! நீ விளையாட்டுக்கு சொல்றியா? இல்லை சீரியஸாக
சொல்லுறியான்னு அவருக்கு தெரியுமா?” கோபம் சிறிதும் தணியாமல் கேட்க அப்போது தான் கவிகிருஷ்ணாவிற்கு தான் பேசிய வார்த்தைகளே புரிந்தது.

“சே! அவசரப்பட்டு ஏதேதோ பேசிட்டேன் போல!” தன்னை தானே கடிந்து கொண்டவன்

தேன்மதியின் புறம் திரும்பி இரு கைகளையும் தலைக்கு மேல் எடுத்து கும்பிட்டு கொண்டே
“தப்பு தான் தெய்வமே! தப்பு தான்! ஐ யம் ஸாரி!”
எனவும்

“எனக்கு எதற்கு ஸாரி சொல்லிட்டு இருக்க? போய் நீ எங்கே சொன்னியோ அங்கே போய் ஸாரி கேளு” என்று கூறினாள் தேன்மதி.

“ரைட்டு! யப்பா! முருகா! இந்த பச்சை மண்ணு ஏதோ ஒரு யோசனையில் உன் கிட்ட ஏதேதோ உளறிட்டேன் மன்னிச்சுக்கோ ப்பா! தெரியாமல் உளறிக் கொட்டுனதுக்கே இந்த அடின்னா நான் தெரிந்தே நல்லா உளறுவேன் இன்னும் எவ்வளவு அடிகளை தாங்க என் கன்னம் காத்து இருக்கோ! உன் பக்தனுக்கு எப்போதும் துணையாக இருந்து என்னை காப்பாற்றுப்பா!” ஓரக் கண்ணால் தேன்மதியைப் பார்த்து கொண்டே கவிகிருஷ்ணா கூற தேன்மதியோ கோபமாக அவனை முறைத்து பார்த்தாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் நான் இங்கே நின்னு பேசுனது உனக்கு எப்படி தெரியும்? நீ தான் தூங்கப் போறேன்னு எல்லோருக்கும் முன்னாடியே உன் ரூமுக்கு போயிட்டியே அப்புறம் எப்படி இங்க வந்த?” கவிகிருஷ்ணா கேள்வியாக அவளை பார்க்க

‘அச்சோ! அவசரப்பட்டு உணர்ச்சி வசப்பட்டு மாட்டிக்கிட்டோமோ? இவன் சும்மாவே அவன் பின்னால் நான் வர்றேன்னு பேசுவான் இப்போ அதுவே நடந்து போச்சா? சரி சமாளிப்போம்’ என தனக்குள்ளேயே நினைத்து கொண்டவள்

“நான் ஒண்ணும் உங்களை பாலோ பண்ணி எல்லாம் வரல தண்ணீர் எடுத்து போலாம்னு கிச்சனுக்கு வந்தேன் நீங்க பூஜை ரூம் போறதைப் பார்த்துட்டு இந்த நேரத்தில் அங்கே உங்களுக்கு என்ன வேலைன்னு கேட்க வந்தேன் அப்போ தான் நீங்க பேசுனது காதில் விழுந்தது அது தான் கோபமாகிடுச்சு இனியும் இப்படி கிறுக்குத்தனமாக பேசாமல் போய் தூங்குங்க” என்று விட்டு தேன்மதி பூஜையறையிலிருந்து வெளியேறி செல்ல கவிகிருஷ்ணாவும் அவளை பின் தொடர்ந்து வந்தான்.

தேன்மதி படியேறி செல்ல போக அவள் கைகளை பற்றி தன் புறமாக அவளை திருப்பியவன்
“நான் பேசுனது உன்னை ரொம்ப அபெக்ட் பண்ணிடுச்சு போல” என்று கேட்க

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை யாரு அந்த இடத்தில் அப்படி பேசி இருந்தாலும் நான் அப்படி தான் ரியாக்ட் பண்ணி இருப்பேன்” என்று கூறினாள் தேன்மதி.

“ஓஹ்! ஆனாலும் உனக்கு உடம்பு முழுவதும் பிடிவாதம் தான் டி!”

“வாட்? டி யா? மரியாதையாக பேசக் கத்துக்கோங்க மிஸ்டர்!”

“மரியாதையா? அப்படின்னா என்ன மேடம்? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முதல் நீங்க என்னை வாயா, போயானு எல்லாம் சொல்லி பேசுனிங்களே அதுவா?”
கவிகிருஷ்ணா கூறியதை கேட்டு தன் நாக்கை கடித்து கொண்டவள்

“சரி ஓகே ஸாரி!” என்று விட்டு செல்ல போக அவளால் அசைய முடியவில்லை.

குழப்பமாக திரும்பி பார்த்தவள் அப்போது தான் தன் கையை கவிகிருஷ்ணா பற்றி இருந்ததை கவனித்தாள்.

“கிருஷ்ணா என்ன இது? தேவையில்லாமல் நீங்க ரொம்ப உரிமை எடுத்துட்டு இருக்கீங்க இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப பாரதூரமான விளைவுகளைத் தரும்” அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்ற வண்ணம் தேன்மதி கூறவும்

மேலும் இறுக்கமாக அவள் கைகளை பற்றி கொண்டவன்
“நீ எந்த உரிமையில் என்னை அடிச்சியோ அதே உரிமையில் தான் இப்போ நான் உன் கையை பிடித்து இருக்கேன் இதற்கு மேலேயும் நீ என் மனதில் எதுவும் இல்லைன்னு சொன்னேன்னு வை அதை சின்ன பாப்பா கூட நம்பாது போய் நல்லா யோசி! குட் நைட்!”
அவள் கைகளை விட்டு விட்டு அவளது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட தேன்மதியோ அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு குழப்பம் கொண்டவளாக அதை பற்றி சிந்தித்து கொண்டே தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்…….

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!