Katre-25
Katre-25
காலை நேரம் வழக்கம் போல ஆபிஸ் செல்வதற்காக பரபரப்பாக தயாராகி வந்த தேன்மதி ஹாலில் அமர்ந்திருந்த கவிகிருஷ்ணாவை பார்த்ததும் சட்டென்று பிரேக் அடித்தாற் போல நின்றாள்.
“என்ன மதி அங்கேயே நிற்குற? ஆபிஸ் போக நேரம் ஆகுது இல்லையா? வா வந்து சாப்பிடு” சம்யுக்தாவின் அழைப்பில் அவரை பார்த்து சரியென்று தலை அசைத்தவள் கவிகிருஷ்ணாவை பார்த்து கொண்டே டைனிங் டேபிளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“கிருஷ்ணா நீயும் வாப்பா!” ஜானகி கவிகிருஷ்ணாவை அழைக்க
“இல்லை ம்மா ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வந்து சாப்பிடுறேன்!” என்று விட்டு தன் போனை எடுத்து பார்த்து கொண்டிருந்தான் கவிகிருஷ்ணா.
தேன்மதி சாப்பிட்டு விட்டு எழுந்து கொள்ள அந்த நேரம் பார்த்து சரியாக
“குட் மார்னிங் மேடம்” என்றவாறே அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாள் மீரா.
“வாம்மா மீரா! எப்படி இருக்க? சாப்பிட்டியா?” நரசிம்மன் அவளை பார்த்து கேட்க
“ரொம்ப நல்லா இருக்கேன் அங்கிள் வீட்டில் நல்லா கட்டு கட்டிட்டு தான் வர்றேன்” என்றவளது பார்வையோ கவிகிருஷ்ணாவின் மீது நிலை குத்தி நின்றது.
அப்போது கவிகிருஷ்ணாவும் மீராவையே பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தான்.
“இவங்க?” மீரா யோசனையோடு கவிகிருஷ்ணாவை பார்க்க
புன்னகை முகமாக அவளெதிரில் வந்து நின்ற கவிகிருஷ்ணா
“ஹாய் ஐ யம் டாக்டர் கவிகிருஷ்ணா! உங்க மேடம்க்கு ஊட்டியில் ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர்” என்று கூற
“அப்படியா? என்னால என் கண்ணையே நம்ப முடியல நீங்க அப்படியே…”
“உங்க மேடம் வந்துட்டாங்க மீரா” அவளை பார்த்து வேண்டாம் என்பது போல கவிகிருஷ்ணா தலை அசைக்க மீராவும் அதை புரிந்து கொண்டாற் போல புன்னகையோடு அவனை பார்த்து தலை அசைத்தாள்.
“குட் மார்னிங் மேடம்”
“குட் மார்னிங்! வாங்க போகலாம் எப்போதும் தேவையில்லாமல் வெட்டி பேச்சு!” மீராவிற்கு மாத்திரம் கேட்கும் வகையில் தேன்மதி கூறியது அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் செவிகளிலும் நன்றாகவே விழுந்தது.
“இப்போவே பொஸஸிவ்னஸா? முடியலடா” வேண்டுமென்றே தேன்மதியைப் பார்த்து கண்ணடித்துக் கூறி விட்டு கவிகிருஷ்ணா சென்று விட தேன்மதியோ கோபமாக வீட்டில் இருந்து வெளியேறி சென்றாள்.
தேன்மதியும், கவிகிருஷ்ணாவும் பேசியது மீராவிற்கு புரியாவிட்டாலும் அவர்கள் இருவரது பேச்சின் நோக்கம் நன்றாகவே புரிந்தது.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தேன்மதியைப் பின் தொடர்ந்து சென்றவள் அதன் பிறகு தனது வேலைகளில் மூழ்கிப் போனாள்.
தேன்மதியும் தன் வேலைகளை பார்க்க தொடங்க கவிகிருஷ்ணாவும் தன் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான்.
மாலை நேரம் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆபிஸில் இருந்து வெளியேறி வந்த தேன்மதி தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் என்று காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய அதுவோ எந்த அசைவும் இல்லாமல் நிற்க
அன்று பார்த்து வானம் வேறு மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
பத்து, பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து தன் காரோடு போராட்டம் நடத்தியவள் அதற்கு மேல் முடியாமல் போகவே காரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தன் பேகை எடுத்துக் கொண்டு
போனை எடுத்து பார்த்து கொண்டே வாயிலில் நின்று கொண்டிருந்த வாட்ச்மேன் அருகில் சென்று நின்றாள்.
“வாட்ச்மேன் கார் ரிப்பேர் ஆகிடுச்சுனு பார்க்கிங்லயே விட்டுட்டு வந்து இருக்கேன் காலையில் உங்களுக்கு தெரிந்த மெக்கானிக் யாரும் இருந்தால் கூட்டிட்டு வாங்க கார் பத்திரம் சரியா?”
“சரி மேடம்”
காருக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன நடக்கும் தெரியும் தானே?”
“அய்யோ மேடம்! அப்படி எல்லாம் எதுவும் ஆகாது மேடம் நான் கவனமாக பார்த்துக்குறேன்”வாட்ச்மேன் பவ்யமாக கூற அவனைப் பார்த்து புன்னகத்து கொண்டவள் மீண்டும் தன் போனை பார்த்து கொண்டே ஆபிஸில் இருந்து வெளியேறி சென்றாள்.
“அப்பா எங்க இருக்கீங்க?”
“நானும், நரசிம்மனும் ஒரு வேளை விஷயமாக செங்கல்பட்டு வரை வந்து இருக்கோம் டா ஏன் டா கண்ணா? ஏதாவது வேலை இருக்கா?”
“இல்லை ப்பா வேலை எல்லாம் இல்லை கார் ரிப்பேர் ஆகிடுச்சு அது தான் வீட்டுக்கு வர்றதுக்கு உங்களை கூப்பிடலாம்னு பார்த்தேன் பரவாயில்லை நான் ஆட்டோ இல்லேனா பஸ்ஸில் போயிடுறேன்”
“பார்த்து ம்மா ஜாக்கிரதையாக வீட்டுக்கு போய் சேரு இதற்கு முதல் நீ இப்படி தனியாக போனதும் இல்லை எதற்கும் வீட்டுக்கு போய் சேர்ந்ததுமே ஒரு வாட்டி கால் பண்ணி சொல்லிடும்மா”
“சரி ப்பா!” போனை எடுத்து தன் ஹேண்ட் பாக்கினுள் போட்டு கொண்டவள் அவளது ஆபிஸில் இருந்து சற்று தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாள்.
சிறிது நேரம் காத்துக் கொண்டே நின்றவள் எந்த பஸ்ஸும் வராமல் போகவே ஆட்டோவில் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.
அங்கிருந்த நபர்கள் எல்லோரும் அவளையே விசித்திரமாக பார்க்க ஏனோ அவளால் தைரியமாக அவர்களிடம் சென்று பேச முடியவில்லை.
இயல்பாகவே அவளது தோற்றத்தில் வசதியான ஒரு தோற்றம் தெரியவே அங்கு நின்ற எல்லோருமே அவளை
வித்தியாசமாக பார்த்து கொண்டு நின்றனர்.
இது நாள் வரை இப்படி தனியாக பொது வாகனங்களில் எங்கும் சென்று அவளுக்கு பழக்கம் இல்லாததால் அவர்கள் எல்லோரும் தன்னையே பார்ப்பது ஏனோ அவளுக்கு அச்சத்தையே கொடுத்தது.
ஸ்கூலிற்கு செல்லும் போது தேன்மதியுடன் சுரேந்திரன் அல்லது நரசிம்மன் துணையாக வருவர்.
அதேபோல் காலேஜ் செல்லும் நாட்களில் கவியரசன் உடனிருந்து அவளை அழைத்து செல்வான்.
இப்போது ஆபிஸ் வரும் நாட்களில் கூட தன் காரிலேயே வந்து செல்பவள் பொது வாகனங்களில் அதுவும் தனியாக பயணம் செய்ததில்லை.
சிறு வயது முதலே சுரேந்திரன் அல்லது நரசிம்மன் அல்லது கவியரசனோடு இப்படியான பயணங்கள் செய்தவள் முதல் தடவை தனியாக செல்லப் போவதை எண்ணி சற்று கலவரம் அடைந்தவளாக தயங்கி நிற்க அந்த நேரம் பார்த்து அவள் முன்னால் ஒரு கார் வேகமாக வந்து நின்றது.
பயத்தில் சற்று கலவரமடைந்தவளாக தேன்மதி அந்த காரை பார்க்க அதற்குள்ளோ அவர்கள் வீட்டு ட்ரைவருடன் கவிகிருஷ்ணா புன்னகையோடு அவளை பார்த்த கொண்டு அமர்ந்திருந்தான்.
கவிகிருஷ்ணாவை அங்கு பார்த்த பின்னரே தேன்மதிக்கு சிறிது நிம்மதியாகவும், பயம் சற்று விலகினாற் போலும் இருந்தது.
“என்ன தேன்மதி இங்க நிற்குற? வீட்டுக்கு போகலயா? ஆமா காலையில் நீ காரில் தானே வந்த?”
“அது வந்து கார் ரிப்பேர் ஆகிடுச்சு ஆபிஸ் பார்க்கிங்லயே காரை விட்டுட்டு வந்துட்டேன் பஸ் இல்லைனே ஆட்டோவில் வீட்டுக்கு போகலாம்னு பஸ் ஸ்டாண்ட்ல நின்னேன் பஸ் வரல சரி ஆட்டோவில் போகலாம்னு இங்கே வந்தேன்”
“அப்போ ஆட்டோவில் ஏறி போக வேண்டியது தானே?”
“இல்லை அது வந்து அது”
“ஏன் இதற்கு முன்னாடி இப்படி தனியாக எங்கேயும் போனது இல்லைன்னு பயமா?”
“உங்களுக்கு எப்படி அது தெரியும்?”
“உன் முகத்தை பார்த்தாலே எல்லோருக்கும் அது தெரியுமே!” என்று கூறிய
கவிகிருஷ்ணாவை
தேன்மதி முறைத்து பார்க்க
“ஆமா என்னை மட்டும் நல்லா முறைத்து முறைத்து பாரு உன் வீராப்பு எல்லாம் என் கிட்ட தான்” என்று முணுமுணுத்துக் கொண்டவன் காரில் இருந்து இறங்கி தேன்மதி எதிரில் வந்து நின்றான்.
“அவ்வளவு பெரிய ஆபிஸை தனியாக நடத்துற ஒரு பொண்ணு இந்த விஷயத்தை பார்த்து பயப்படலாமா? நீ தைரியமாக போய் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு போ ஒண்ணும் ஆகாது போ” அவளை பல்வேறு வகையில் சமாதானப்படுத்தி ஆட்டோவில் அவள் ஏறும் வரை அவளையே பார்த்து கொண்டு நின்றவன் அந்த ஆட்டோ புறப்பட்டு சென்ற பின்னர் தன் காரில் இருந்த ட்ரைவரிடம் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து செல்லுமாறு கூறினான்.
ஆட்டோவில் சென்று கொண்டிருந்த தேன்மதி தற்செயலாக ஆட்டோவில் இருந்த பக்க கண்ணாடி வழியாக அவனது காரை பார்த்து விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
தேன்மதி வீட்டிற்குள் செல்லும் வரை அவர்கள் வீட்டு வாயிலில் நின்று பார்த்து கொண்டு நின்றவன் அவள் வீட்டிற்குள் சென்றதை நன்றாக உறுதி படுத்தி கொண்ட பின்னரே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றான்.
தேன்மதியோ அவனது செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் செல்ல ஹாலில் அமர்ந்திருந்த ஜானகி மற்றும் சம்யுக்தா விசித்திரமான ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“என்ன மதி ஆட்டோவில் வர்ற? கார் என்ன ஆச்சு?”
ஜானகி சற்று பதட்டத்துடன் கேட்கவும்
அவரருகில் வந்து அமர்ந்து கொண்டவள்
“கார் ரிப்பேர் அத்தை அது தான் ஆட்டோவில் வந்தேன்” எனவும்
“நீ தனியாக ஆட்டோவில் வந்தியா?” ஆச்சரியமாக கேட்டார் சம்யுக்தா.
“அது என்ன இவ்வளவு அதிசயமாக கேட்குறீங்க? ஏன் நான் தனியாக வரக்கூடாதோ?”
“இல்லை மதி கண்ணா நீ தான் யாராவது துணைக்கு இல்லாமல் தனியாக வர மாட்டியே அது தான் கேட்டோம்” ஜானகி சற்று தணிந்த குரலில் கேட்க
அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டவள்
“எல்லோரும் என்னை நல்லா புரிந்து வைத்திருக்கீங்க நான் தனியாக எல்லாம் வரல கிருஷ்ணா நம்ம ட்ரைவரோடு அவர் காரில் நான் வந்த ஆட்டோவிற்கு பின்னாடி வந்தாரு” என்று கூற
சம்யுக்தாவோ
“அது தானே பார்த்தேன்! என் பொண்ணு என்ன திடீர்னு இவ்வளவு தைரியசாலியாக மாறிட்டாளேனு? கிருஷ்ணா இருந்ததால் தான் இவ்வளவு தைரியமா?” வேண்டுமென்றே கடைசியாக சொன்ன வார்த்தைகளை அழுத்தி சொல்ல தேன்மதியோ அவரது வார்த்தைகளை கேட்டு எதுவும் பேசாமல் நின்றாள்.
“கிருஷ்ணா இருந்ததால் தான் எனக்கு தைரியமா? இல்லை! இல்லவே இல்லை!” மனதிற்குள் மீண்டும் மீண்டும் கூறி கொண்டவள் அவசரமாக அந்த இடத்தில் இருந்து எழுந்து தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.
“நான் அவனை விட்டு தூரமாக போக நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று அவனையும், என்னையும் சேர்த்து வைத்துடுதே! இதற்கு என்ன அர்த்தம்? ஒருவேளை கிருஷ்ணா சொன்ன மாதிரி கடவுள் உண்மையாகவே நினைத்து இருக்குறது எனக்கும், கிருஷ்ணாவிற்குமா? நோ! நோ! நோ!” தன் கையில் இருந்த தன் ஹேண்ட் பாக்கை தூக்கி எறிந்தவள் அங்கிருந்த கட்டிலில் ஓடிச்சென்று வீழ்ந்தாள்.
“அப்போ இது தான் எனக்கு நிர்ணயிக்கப்பட்டதுனா எதற்காக கவியை என் வாழ்க்கையில் கொண்டு வரணும்? அநியாயமாக அவன் உயிர் எதற்காக போகணும்? ஆரம்பித்திலேயே கிருஷ்ணா என் வாழ்க்கையில் வந்து இருந்தால் கவியரசன் இப்போ சந்தோஷமாக இருந்து இருக்கலாம் அத்தை, மாமா கஷ்டப்பட்டு இருக்க தேவையில்லை ஏன்?
கிருஷ்ணா ஏன்? எதற்காக இப்படி எல்லாம்?” தன் மனம் எழுப்பிய கேள்விகளின் உண்மையான அர்த்தம் புரியாமல் கதறி அழுது கொண்டிருந்தாள் தேன்மதி.
காரில் சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் எண்ணம் முழுவதும் தேன்மதியையே சுற்றி வந்து கொண்டிருந்தது.
அவள் தன்னை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் உரிமை, பாசம் என எல்லா உணர்வுகளும் கலந்து இருந்தாலும் அதை ஏற்கும் தைரியம் தான் இன்னும் அவளுக்கு வரவில்லை.
கூடிய சீக்கிரமே அந்த உரிமை அவனுக்கு கிடைக்குப் போகிறது என்பதை அந்த நொடி அவன் உணர்ந்து இருக்கவில்லை.
இரவு நேரம் ஹாஸ்பிடலில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தன் காரை நோக்கி சென்றவன்
“டிரைவர் நீங்க பின்னால் உட்கார்ந்துக்கோங்க நான் இப்போ காரை ஓட்டிட்டு வர்றேன் நாளையில் இருந்து நானே வண்டியை ஓட்டிட்டு வர்றேன் இன்னைக்கு தெரியாத ரூட் எல்லாம் பழகியாச்சு தானே?” என்றவாறே காரில் ஏறி அமர்ந்து கொள்ள
“சரி ஸார்” என்றவாறு ட்ரைவரும் அவனது காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.
தேன்மதியின் வீட்டை வந்து சேர்ந்தவன் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.
ஹாலில் தேன்மதி கையில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு சம்யுக்தாவின் மடியில் தலை சாய்ந்து அமர்ந்து இருக்க மறுபுறம் ஜானகி அவள் தலையை வருடிக் கொடுத்தவாறே அமர்ந்து இருந்தார்.
கவிகிருஷ்ணாவை பார்த்ததும்
“வாப்பா கிருஷ்ணா! வேலை எல்லாம் முடிந்ததா?” என்றவாறே ஜானகி எழுந்து நிற்க
“ஆஹ்! வேலை எல்லாம் ஆச்சும்மா! என் பேக் இங்கே இருக்குது தானே அதை எடுத்துட்டு போக வந்தேன் ஊருக்கு போய் கொஞ்சம் திங்க்ஸ் எடுத்துட்டு அப்படியே ஹாஸ்பிடல் பக்கத்திலேயே இருக்குற எங்க சீஃப் டாக்டர் கெஸ்ட் ஹவுஸில் தான் மூணு மாதமும் ஸ்டே பண்ண போறேன்” என்ற கவிகிருஷ்ணாவை தேன்மதி அதிர்ச்சியாக நோக்கினாள்.
“ஏன் கிருஷ்ணா இங்கேயே தங்கி இருக்கலாமே?” ஜானகி சற்று கவலையுடன் கேட்க
அவரருகில் வந்து அவர் தோளில் கையை போட்டு கொண்டவன்
“அம்மா நீங்க என்னை பார்க்க நினைக்குற நேரம் போன் பண்ணுங்க உடனே ஓடி வர்றேன் பட் இங்கேயே தங்கி இருக்குறது சரி இல்லை வெளியாட்கள் எப்போ அடுத்தவன் பெயரை கலங்கப்படுத்தலாம்னு இருக்காங்க ஷோ கொஞ்ச தூரம் தள்ளி இருந்தாலும் நடக்க வேண்டியது எல்லாம் கரெக்டா நடக்கும் சரியா? டோன்ட் வொர்ரி!” கடைசியாக கூறிய வார்த்தைகளை அவருக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூற அவன் கூறியதன் அர்த்தம் புரிந்ததும் ஜானகியும் புன்னகையோடு தலை அசைத்தார்.
சிறிது நேரத்தில் கவிகிருஷ்ணா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட தேன்மதியோ என்னவென்று சொல்ல முடியா ஓர் உணர்வில் இலக்கின்றி எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவனை விலகி போக சொன்னவள் அவன் விலகி போன பின்பும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்போடு அமர்ந்திருக்க மறுபுறம் கவிகிருஷ்ணாவோ
“பர்ஸ்ட் பிளான் சக்ஸஸ்” என்று புன்னகையோடு நினைத்து கொண்டே ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தான்……
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.