Katre-26
Katre-26
ஊட்டியில் வேதவல்லி தங்கள் வீட்டின் முன்னால் அமர்ந்து கொண்டு வீட்டு வாயிலைப் பார்ப்பதும் தன் கையில் இருந்த புத்தகத்தை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தார்.
ஏற்கனவே கவிகிருஷ்ணா சென்னையில் இருந்து புறப்படும் போதே காயத்ரியிடம் போனில் தான் ஊட்டி வரும் விடயத்தை கூறி இருந்ததால் அவர் அவனது வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார்.
என்னதான் வீம்புக்காக கவிகிருஷ்ணாவோடு பேச மாட்டேன் என்று அவர் கூறி இருந்தாலும் தன் மகன் மனதளவில் எவ்வளவு தூரம் வருந்தி கொண்டு இருக்கிறான் என்று அந்த தாய் மனம் அறியாமல் இல்லை.
கவிகிருஷ்ணாவை பற்றி வேதவல்லி சிந்தித்து கொண்டு இருக்கும் போதே அவனது கார் அவர்களது வீட்டு வாயிலைத் தாண்டி உள் நுழைந்தது.
அவனை பார்த்ததுமே வேதவல்லி எழுந்து நிற்க கவிகிருஷ்ணாவோ
“அம்மா!” என்று சந்தோஷமாக அழைத்து கொண்டு அவரருகில் வந்து நின்றான்.
“எப்படி ம்மா இருக்கீங்க?”
“காயத்ரி நைட் பூராவும் காரில் வந்தது டயர்டாக இருக்கும் போய் முதல்ல ரெஸ்ட் எடுக்க சொல்லு” வீட்டிற்குள் இருந்த காயத்ரியைப் பார்த்து வேதவல்லி கூறவும்
புன்னகையோடு அவர் முன்னால் வந்து நின்றவன்
“அம்மா அது தான் உங்க ஆசையை நிறைவேற்ற போறேன் தானே? அப்புறமும் என்ன சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம்?” அவர் தாடையைப் பிடித்து ஆட்டிக் கேட்க அவனது கையை தட்டி விட்டவர்
“காயத்ரி வீணாக என் கோபத்தை கிளறாமல் போகச் சொல்லு அந்த பொண்ணு தான் இவனைப் பார்த்தாலே தலை தெறிக்க ஓடுறாளே! அப்புறம் எந்த நம்பிக்கையில் இந்த வெட்டி பேச்சு?” எனவும்
அவர் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டவன்
“அம்மா நான் எடுத்த விடயத்தை முடிக்காமல் விடமாட்டேன் உண்மையாகவே தேன்மதிக்கு என் மேல இஷ்டம் இல்லைன்னு தெரிந்தால் நான் இப்படி எல்லாம் பண்ணுவேனா சொல்லுங்க? அவளுக்கு என் மேல காதல் இருக்கு ம்மா அதை நான் முழுமையாக உணர்ந்து கொண்டதற்கு அப்புறம் தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன் நிச்சயமாக யாருக்கும் எந்த மனக் கஷ்டமும் வராமல் இந்த விடயத்தை நான் வெற்றிகரமாக முடிக்கிறேன் ம்மா” என்று விட்டு வீட்டினுள் சென்று விட வேதவல்லியோ தன் மகனை எண்ணி வருந்தி நின்றார்.
“மனதில் எவ்வளவு ஆசையை வைத்து இவன் பேசுறான்? ஆனால் தேன்மதி! கடவுளே! என் பிள்ளைக்கு எப்போதும் துணையாக இருப்பா!” தன் மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டவர் அதன் பிறகு தன் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.
கிட்டத்தட்ட பத்து, பன்னிரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்ததால் களைப்பு மேலோங்க அசந்து தூங்கிய கவிகிருஷ்ணா வேதவல்லி வந்து அவன் அறைக் கதவை தட்டும் வரை எழுந்து கொள்ளவில்லை.
அவர் வந்து அறைக் கதவை தட்டிய பின்பே தன் கண்களை கசக்கி கொண்டு எழுந்து வந்து கதவைத் திறந்தவன் அவரைப் பார்த்து புன்னகத்து விட்டு மீண்டும் சென்று கட்டிலில் வீழ்ந்து கண் மூடி கொண்டான்.
“இவ்வளவு டயர்டா இருக்குறவங்க நைட் டைம்ல பிரயாணம் செய்து வரலாமா? அதுவும் வளைவு, நெளிவு நிறைந்து போய் இருக்கும் ஊட்டி ரோட்டில்!” களைந்து கிடந்த அவனது பையை ஒழுங்கு படுத்தி கொண்டே வேதவல்லி கூறவும்
ஒற்றை கண்ணைத் திறந்து அவரை பார்த்தவன்
“உங்களைப் பார்த்து, உங்க குரலை கேட்டு மூணு நாள் ஆச்சு இல்லையா? அது தான் நைட் டைம்னும் பார்க்காமல் வந்துட்டேன்” என்று விட்டு மீண்டும் தன் கண்களை மூடிக் கொள்ள வேதவல்லியின் கைகளோ அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு அப்படியே பொருட்களை எடுத்தவாறே அந்தரத்தில் நின்றது.
தன் அன்னையிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தவன் அவரது அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்து புன்னகத்து கொண்டே அவரருகில் எழுந்து வந்து நின்றான்.
“அம்மா!” கவிகிருஷ்ணா அவரது தோளில் கை வைத்த பின்னரே தன் சுய நினைவுக்கு வந்தவர் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தார்.
தன் அன்னையைப் பார்த்து கவிகிருஷ்ணா கண்ணடித்து சிரித்துக் கொண்டே கேள்வியாக தன் புருவத்தை உயர்த்த தன் தோளில் இருந்த அவனது கையை தட்டி விட்டவர்
“அவ்வளவு கஷ்டப்படுறவன் மூணு மாதம் எதற்காக அங்கே போய் இருக்கணும்?” என்று வேறு ஒரு பக்கத்தைப் பார்த்து கொண்டு கேட்டார்.
“என்ன பண்ணுறது இந்த வீட்டில் பேரக்குழந்தைங்க விளையாடணும்னு என் அம்மாவுக்கு ஆசை, அந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக தேன்மதி வரணும்னு எனக்கு ஆசை இந்த இரண்டு ஆசையையும் நிறைவேற்ற இந்த மூணு மாத சோதனை அவசியமாக இருக்கே!” போலியாக அலுத்துக் கொள்வது போல கவிகிருஷ்ணா கூறவும்
அவனது தோளில் செல்லமாக தட்டிய வேதவல்லி
“இந்த கௌசிக், காயத்ரியோட சேர்ந்து நீயும் நல்லா பேசப் பழகிட்ட” என்று கூற
“ஹைய்யா! அம்மா என் கூட பேசிட்டாங்க இந்த ஆறு மாத மௌன விரதம் இன்னையோடு முடிந்தது” என்றவாறே அவரைத் தூக்கி கொண்டு சுற்ற
அவரோ பயத்தில்
“டேய்! கிருஷ்ணா! இறக்கி விடுடா தலை சுற்றுது! கிருஷ்ணா!” என அலறிக் கொண்டு இருந்தார்.
வேதவல்லியின் சத்தம் கேட்டு ராகிணியும், காயத்ரியும் பதட்டத்துடன் கவிகிருஷ்ணா அறைக்குள் ஓடி வந்து அங்கு நடந்து கொண்டிருந்த விடயத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.
அவர்கள் இருவரது சிரிப்பு சத்தம் கேட்டு தன் அன்னையை சுற்றுவதை நிறுத்தி விட்டு அவரை கீழே இறக்கி விட்டவன்
“என்ன என்ன சிரிப்பு? அம்மாவும், பிள்ளையும் தனியா கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கக் கூடாதே? உடனே மூக்கு வேர்த்த மாதிரி ஓடி வந்துடுறது?” எனவும்
அவனெதிரில் வந்து நின்ற காயத்ரி
“நாங்க ஒண்ணும் அம்மா, பிள்ளை விளையாட்டுக்கு நடுவில் வரல அம்மா கத்துன சத்தத்தை பார்த்து ஏதோ பூதம் வந்துடுச்சோனு தான் பயந்து போய் ஓடி வந்தோம் இங்க வந்து பார்த்தா உண்மையாகவே பூதம் ஒண்ணு தான் எங்க அம்மாவை பிடித்து வைத்திருக்கு” கவிகிருஷ்ணாவை பார்த்து காயத்ரி சிரித்துக் கொண்டே கூற
“என்ன நான் உனக்கு பூதமா? உன்னை!” தன் அருகில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து கொண்டே அவன் அவளருகில் வரவும்
“அய்யோ! அம்மா பூதம் வருது காப்பாற்றுங்க!” என்றவாறே காயத்ரி சத்தமிட்டு கொண்டு ஓட கவிகிருஷ்ணாவும் அவளை பின் தொடர்ந்து ஓடினான்.
ராகிணி சிரித்துக் கொண்டே சற்று தள்ளி இருந்த வேதவல்லியின் அருகில் சென்று அவர் தோள் தொட கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டே அவளைப் பார்த்து புன்னகத்தவர்
“எப்போதும் இவன் இப்படி சந்தோஷமாக இருக்கணும்னு தான் நான் தினமும் அந்த கடவுள் கிட்ட கேட்டுட்டே இருக்கேன் இரண்டு வருஷமாக கடமைக்காக பேசி, சிரிச்சுட்டு இருந்தவன் இப்போ மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்து இருக்கான் எல்லாம் அவன் தேன்மதியைப் பார்த்ததும் தான் வெளி வர ஆரம்பிக்குது அந்த தேன்மதி மேல் அவன் எவ்வளவு அன்பு வைத்து இருக்கான்னு இப்ப தான் எனக்கு புரியுது அவன் ஆசைப்பட்ட மாதிரி தேன்மதி அவனுக்கு கிடைத்துட்டா காலம் பூராவும் இவன் இப்படியே சந்தோஷமாக இருப்பான்”
எனவும்
புன்னகையோடு அவரது தோளில் ஆதரவாக அழுத்தி கொடுத்தவள்
“கவலைப்படாதீங்க அத்தை! நிச்சயமாக எல்லாம் நல்லதாகவே நடக்கும் நீங்க வேணும்னா பாருங்க கிருஷ்ணா அத்தான் சென்னையில் இருந்து திரும்பி வரும் போது கண்டிப்பாக தேன்மதியை இந்த வீட்டுக்கு மருமகளாக தான் கூட்டிட்டு வருவாரு பாருங்க” என்று கூற வேதவல்லியும் புன்னகையோடு அவளை பார்த்து கொண்டு நின்றார்.
அன்று முழுவதும் கவிகிருஷ்ணா தங்கள் வீட்டில் சிரிப்பும், சந்தோஷமுமாக பேசி தன் நாளை சந்தோஷமாக கழித்து கொண்டு இருக்க மறுபுறம் தேன்மதியோ எதையோ பறி கொடுத்தாற் போல சோகமாக தன் அறை பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து இருந்தாள்.
கவிகிருஷ்ணா தங்கள் வீட்டில் இருந்து சென்றதை ஏனோ அவளால் இலகுவாக எடுத்து கொள்ள முடியவில்லை.
அவனை மொத்தமாக வேண்டாம் என்றும் ஒதுக்கி வைக்க முடியவில்லை.
அதேபோன்று முழுமையாக அவனை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
இருதலைக் கொள்ளி எறும்பாக தேன்மதி இங்கே உழன்று கொண்டிருக்க அதற்கு காரணமானவனோ தங்கள் வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
முழுமையாக ஒரு வாரம் கழிந்து இருந்தது.
தேன்மதி முழுமையாக இயல்பான நிலைக்கு வராவிட்டாலும் ஏதோ அவளால் முடிந்த மட்டும் தன்னை இயல்பாக எல்லோருக்கும் காட்டி கொண்டு இருந்தாள்.
கவிகிருஷ்ணா சென்னை வந்ததும் அவன் ஏற்கனவே சொன்னது போல கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கி இருந்ததுடன் அவனது நாள் முழுவதும் ஹாஸ்பிடலுடனேயே கடந்தது.
அவ்வப்போது தேன்மதி வீட்டினருடன் தொலைபேசியில் அவன் உரையாடினாலும் நேரில் சென்று அவர்களை பார்ப்பதற்கான நேரம் தான் அவனுக்கு கிட்டவில்லை.
அன்று வழக்கம் போல ஆபிஸ் செல்ல தயாராகி வந்தவள் சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறி செல்லும் போது ஜானகி மற்றும் சம்யுக்தா பேசுவதை கேட்டு ஒரு கணம் அந்த இடத்திலேயே நின்றாள்.
“அண்ணி! நாம இரண்டு பேரும் கிருஷ்ணா ஹாஸ்பிடல் வரை போய் அவனைப் பார்த்துட்டு வரலாமா? பாவம் அவனுக்கு நேரமே இல்லை வெளியே கூட போக முடியலயாம்”
“போகலாம் ஜானகி ஆனா இது அவனோட வேலை நேரம் இல்லையா? இந்த நேரத்தில் போனால் அவனை டிஸ்டர்ப் பண்ணுற மாதிரி இருக்காதா? நேற்று போனில் பேசும் போது கிருஷ்ணா சொன்னானே இன்னும் இரண்டு நாள்ல எல்லாம் பழக்கம் படி மாறிடும் அப்புறம் ஒவ்வொரு நாள் ஈவ்னிங்கும் இங்கே வந்துட்டு போறேன்னு சொன்னான் தானே? நீ எதுவும் யோசிக்காமல் இரு ஜானகி இரண்டு நாள்ல கண்டிப்பாக கிருஷ்ணா வந்துடுவான் சரியா?”
“ஹ்ம்ம்ம் அதுவும் சரிதான் ஆனா இந்த இரண்டு நாள் எனக்கு இரண்டு யுகமாக இல்லாமல் இருந்தால் சரி தான்!” சகஜமாக சிரித்துப் பேசி கொண்டே சம்யுக்தா மற்றும் ஜானகி தங்கள் வேலைகளை பார்த்து கொண்டு இருக்க அவர்கள் பேசிய விடயங்களோ தேன்மதியை வெகுவாக பாதித்தது.
சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் இதை பற்றி பேசி இருந்தால் இவ்வளவு தூரம் அந்த விடயம் அவளை பாதித்து இருக்காது ஆனால் இன்று மனதளவில் அவளும் அவனை பார்க்க ஏங்கி கொண்டு இருக்கிறாள் இந்த நேரத்தில் அவர்களது இந்த பேச்சுஅவளை மேலும் ஆர்வமாக்கி இருந்தது.
காரில் ஏறி சென்று கொண்டிருந்த தேன்மதியின் எண்ணங்களோ கவிகிருஷ்ணாவை பற்றியே வட்டமிட்டுக் கொண்டு இருந்தது.
அவனை பற்றிய சிந்தனையோடே காரின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலை பார்த்ததும் மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டு
“ட்ரைவர், மீரா நீங்க இரண்டு பேரும் ஆபிஸ் போங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நான் ஆபிஸ் வர்றேன்” என்று கூறவும்
“பரவாயில்லை மேடம் நான் இங்கே இருந்து பஸ்ஸில் ஆபிஸ் போறேன் நீங்க வேலைகளை எல்லாம் முடித்து விட்டு காரில் வாங்க” என்றவாறே மீரா காரில் இருந்து இறங்கி கொள்ள தேன்மதி ட்ரைவரிடம் அந்த ஹாஸ்பிடலைக் காட்டி அங்கே செல்லுமாறு கூறினாள்.
“நீங்க இங்கேயே இருங்க” ட்ரைவரிடம் வெளியே இருக்கும் படி கூறி விட்டு முன்னே நடந்தவள் தடதடக்கும் இதயத்துடன் அந்த ஹாஸ்பிடலிற்குள் நுழைந்தாள்.
அங்கு சென்று ரிஷப்சனில் இருந்த பெண்ணிடம்
“நான் டாக்டர் கவிகிருஷ்ணாவை மீட் பண்ணணும்” என்று கூற
அந்த பெண்ணோ
“நீங்க யாரு? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்று கேட்டார்.
“அது நான் அவரோட ப்ரண்ட் தேன்மதி நீங்க என் பெயரை சொல்லுங்க அவருக்கு தெரியும்” என்ற தேன்மதியைப் பார்த்து சரியென்று தலை அசைத்தவள் சிறிது நேரத்தின் பின்னர்
“மேடம் டாக்டர் ஒரு முக்கியமான வேலையாக இருக்கார்னு அவங்க அசிஸ்டெண்ட் சொன்னாங்க நீங்க ஒரு இருபது நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா?” என்று கேட்க
அவளோ
“யா ஸ்யூர் நான் வெயிட் பண்ணுறேன்” என்று விட்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அங்கு அவனது வருகைக்காக காத்திருந்த நேரம் அவள் மனமோ ஊட்டியில் கவிகிருஷ்ணாவை பார்த்தது முதல் சென்னை வரும் வரை அவள் செய்த ஒவ்வொரு செயலையும் எண்ணி பார்த்தது.
அவன் விலகி செல்ல செல்ல அவனை நிழலாக பின் தொடர்ந்து சென்றது முதல் அவளுக்கு உண்மையான நிலவரம் தெரிய வரும் போது அவனை விட்டு விலகி சென்றது வரை எண்ணி பார்த்தவள் இப்போது மறுபடியும் அவனை தேடி தான் வந்து இருப்பதை எண்ணி வியந்து போனாள்.
“மூணு நாள் பேசிட்டு ஒரு வாரம் விலகி போனதுக்கே எனக்கு இந்த நிலைமைன்னா அப்போ எப்படி மொத்தமாக நான் அவனை விட்டு விலகி போவேன்?” முதன்முதலாக ஒரு அச்ச உணர்வு அவளை சூழ்ந்து கொண்டது.
“என்ன தேன்மதி இந்த பக்கம்?” சிந்தனை வயப்பட்டவளாக அமர்ந்திருந்தவள் தன் முன்னால் கேட்ட பரிச்சயமான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.
“டாக்டர் விருத்தாசலம்!” ஆச்சரியம் கலந்த புன்னகையோடு எழுந்து நின்றவள்
“டாக்டர்! நீங்க? இங்க எப்படி?” என்று கேட்கவும்
“அது நான் கேட்க வேண்டிய கேள்வி நான் டாக்டர் மா ஹாஸ்பிடல்ல தான் இருக்கணும்! நீங்க என்ன இந்த பக்கம் யாரையாவது பார்க்க வந்தீங்களா?” என விருத்தாசலம் கேட்டார்.
“ஆமா நான் கிருஷ்ணாவை இல்ல இல்ல நான் சும்மா ஒரு பிரண்ட் இல்ல ரிலேட்டிவ் இல்ல அது…”
“கூல்! கூல்! எதற்கு இவ்வளவு பதட்டம்? கிருஷ்ணாவை தானே பார்க்க வந்த?”
“…….”
“இங்க வேற யாரை நீ பார்க்க வரப்போற? கிருஷ்ணாவை மட்டும் தான் இங்கே உனக்கு தெரியும் அது எனக்கும் நல்லாவே தெரியும் பரவாயில்லை பையன் மூணு மாதம் இருந்து செய்ய வேண்டியதை ஒரே வாரத்தில் சக்ஸஸ் ஆக்கிட்டான் போல!”
“என்ன? என்ன சொன்னீங்க மூணு மாத வேலையா? என்ன சொல்றீங்க டாக்டர்?”
“அய்யோ! நான் எதுவும் சொல்லலமா நான் வேறு ஏதோ ஞாபகத்தில் பேசிட்டு இருந்துட்டேன்” மெதுவாக அங்கிருந்து விருத்தாசலம் நழுவி செல்ல போக
அவள் முன்னால் வந்து நின்றவள்
“இப்போ ஒழுங்காக நீங்க சொல்லலேன்னா நான் கிருஷ்ணா கிட்ட நேரடியாக இதைப் பற்றி கேட்பேன் டாக்டர்” என்று கூற
சுற்றிலும் ஒரு தடவை பார்த்து கொண்டவர் தேன்மதியின் கையை பிடித்து சற்று தள்ளி அழைத்து சென்றார்.
“இங்கே பாரும்மா நான் சொன்னேன்னு நீ இதை அவன் கிட்ட சொல்ல கூடாது சரியா? உனக்கு இந்த விஷயம் தெரியக்கூடாதுனு அவன் சொல்லி இருக்கான் இந்த ஹாஸ்பிடல்ல மூணு மாதம் அவனை வேலைக்கு சேர்த்தது என்னவோ நான் தான் ஆனா சேர்த்துக்க சொன்னது அவன் இங்கே இருந்தால் தான் உன்னை அவன் மனசை புரிஞ்சுக்க வைக்க முடியும்னு இப்படி பண்ண சொன்னான்”
“அப்படினா என் மனசை மாற்ற வைக்குறதுக்காக ஒரு சாக்கு இந்த வேலை அப்படி தானே?”
“கிட்டத்தட்ட அப்படி தான் ஆனா அவனுக்கு இங்க இருக்க முழுமையாக மனது இல்லை உனக்காக தான் இங்கே அவன் இருக்கான் அவனால அவன் அம்மாவை பார்க்காமல் இருக்க முடியாது ஒவ்வொரு வாரமும் அவன் ஊட்டிக்கு போய் வந்துட்டே இருக்கான் நேற்று தான் மறுபடியும் ஊட்டிக்கு போயிட்டு வந்தான் பாவம் பையன் ரொம்ப நொந்து போய் இருக்கான் ஆனா அவன் முயற்சிக்கு பலன் கிடைச்சுடுச்சே அது போதும்!”
“என்ன டாக்டர் உளர்றீங்க? அப்படி எல்லாம் எதுவும் இல்லை நான் அத்தைக்காக தான் கிருஷ்ணா கிட்ட பேச வந்தேன் அத்தை அவனை பார்க்கணும்னு ரொம்ப பீல் பண்ணாங்க” தன் பதட்டத்தை மறைத்து கொள்ள படபடப்பாகதேன்மதி பேசியது புரியாமல் இருக்க விருத்தாசலம் ஒன்றும் சிறு பிள்ளை இல்லையே.
“நீ கிருஷ்ணாவையும், மற்ற ஆளுங்களையும் ஏமாற்றலாம் தேன்மதி என்னை ஏமாற்ற முடியாது”
“இல்லை டாக்டர் நான் யாரையும் ஏமாற்றல”
“அப்படியா? சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு! ஒரு வேளை உன் வாழ்க்கையில் கவியரசன் உனக்கு வெறும் அத்தை பையனாக மட்டும் இருந்து கிருஷ்ணா உன் லைஃப்ல ஒரு காதலனாக வந்து இருந்தால் நீ அவனை ஏற்று இருப்பியா? இல்லையா?”
“டாக்டர்!”
“கேட்டதற்கு நல்லா உன் ஆழ் மனதில் இருந்து யோசித்து பதில் சொல்லு? ஏற்று இருப்பியா? இல்லையா?”
“அது இல்லை! அது எப்படி!”
“ஏற்று இருப்பியா? இல்லையா?”
“அது…அது….”
“சொல்லு தேன்மதி! ஏற்று இருப்பியா? இல்லையா?”
“அது…”
“சொல்லு ஆமாவா? இல்லையா?”
“டாக்டர்!”
“ஆமாவா? இல்லையா? சொல்லு தேன்மதி!”
“அது எப்படி…”
“ஆமாவா? இல்லையா?”
“ஆமா! ஆமா! ஆமா! ஏற்றுக்கிட்டு தான் இருப்பேன் நான் கிருஷ்ணாவை ஏற்றுக்கிட்டு தான் இருப்பேன்” சத்தமிட்டு கத்தியவள் தன் முகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டு தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க விருத்தாசலமோ புன்னகையோடு தேன்மதியைப் பார்த்து கொண்டு நின்றார்……
JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.