Katre-28

கவிகிருஷ்ணாவிற்கு ஒரு நொடி அங்கே என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.

அவனை பார்த்தாலே பேயைப் பார்த்தது போல பயந்து விலகி சென்றவள் இன்று அவளாகவே அவனைத் தேடி வந்தது மட்டுமில்லாமல் அவனைப் பார்த்து வெட்கம் கலந்த புன்னகையோடே அங்கிருந்து சென்றது வேறு அவனுக்கு பன்மடங்கு ஆச்சரியத்தை அள்ளி வழங்கி இருந்தது.

“என்னடா நடக்குது இங்கே? ஒரு வாரத்தில் இப்படி ஒரு மாற்றமா? ஒரு வேளை டாக்டர் ஏதாவது மருந்து கொடுத்து ஆளை மாற்றிட்டாரோ? இவ இப்படி பண்ண மாட்டாளே! ஏதோ நடந்து இருக்கு டாக்டர் கிட்டயே கேட்போம்” மனதிற்குள் நினைத்துக் கொண்டே விருத்தாசலத்தின் அறையை நோக்கி சென்றான் கவிகிருஷ்ணா.

“டாக்டர் மே ஐ கம் இன்?” அவரது அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவன் அவரது முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்து கொண்டு நின்றான்.

“என்னடா கிருஷ்ணா இன்னைக்கு தான் புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற? என்ன விஷயம்?” கையில் இருந்த புத்தகத்தை மேஜை மேல் மூடி வைத்து விட்டு அவனை கேள்வியாக நோக்கினார் விருத்தாசலம்.

“தேனு கிட்ட என்ன சொன்னீங்க?” கவிகிருஷ்ணாவின் நேரடியான கேள்வியில் அவனது சாமர்த்தியத்தை எண்ணி அவர் புன்னகத்து கொண்டார்.

“இந்த சிரித்து சமாளிக்குற வேலை எல்லாம் வேண்டாம் சொல்லுங்க டாக்டர் தேனு கிட்ட என்ன சொன்னீங்க?”

“என்ன நீ ஏதோ நான் கொலை குற்றம் செய்த மாதிரி இவ்வளவு விறைப்பாக நின்னு கேள்வி கேட்குற? நான் என்ன சொன்னேன் தேன்மதி கிட்ட? எதுவும் சொல்லலயே! அவ பேசுனதுக்கு பதில் பேசிட்டு இருந்தேன் அவ்வளவு தான்! அதற்கு போய் இப்படி ஓவரா எமோஷனல் ஆகுற ஏன் உன் தேனு அப்படி வெளியே வைத்து என்ன சொன்னா?”

“அவ ஏதாவது சொல்லி இருந்தாலாவது என்ன? ஏது? ன்னு தெரிந்து இருக்கும் அவ தான் ஒரு மார்க்கமாக பார்த்து சிரிச்சுட்டு போயிட்டா அது தான் ஒரு சின்ன குழப்பம் திடீர்னு எப்படி இப்படி ஒரு மாற்றம்னு?”

“ஏன்டா கிருஷ்ணா! இது உனக்கே நியாயமா? அவ பேசலனாலும் புலம்புற பேசுனாலும் புலம்புற உன்னை பார்த்து சிரிச்சது ஒரு குற்றமா? உன் கூட சத்தியமாக முடியல டா!” அலுத்துக் கொண்டே கூறிய விருத்தாசலத்தை பார்த்து புன்னகத்தவன்

“அவ இப்படி என் கூட பேசுறதும் நல்லா தான் இருக்கு ஆனா திடீர்னு அவ மாறிடுறாளே! நல்லா பேசுறானு நினைத்து நானும் அவளை நெருங்கி போனா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்பா அது தான் என் பயமே!” என கவலையுடன் கூற எழுந்து வந்து அவனது தோளில் விருத்தாசலம் ஆறுதலாக தட்டி கொடுத்தார்.

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது கிருஷ்ணா இதற்கு முதல் அவ நீ சென்னை வந்ததுக்கு அப்புறமாக இப்படி உன் கூட பேசி இருக்காளா? இல்லையே? இந்த ஒரு வாரத்தில் அவ உன்னை பற்றி ஏதாவது பீல் பண்ணி இருக்கலாம் அதனால கூட இந்த மாற்றம் வந்து இருக்கலாமே?”

“அப்படிங்குறீங்க?”

“அப்படி தான்! நீ அவளாகவே உன்னை தேடி வரணும்னு தானே அவங்க வீட்ல இருந்து என் கெஸ்ட் ஹவுஸுக்கு மாறி வந்த இப்போ என்னடானா எதுவுமே நீ எதிர்பார்க்காமல் நடந்த மாதிரி பில்டப் பண்ணுற?”

“எதிர்பார்த்தது தான் பட் இவ்வளவு சீக்கிரமாக நடக்கும்னு எதிர்பார்க்கலயே டாக்டர்!” விருத்தாசலத்தை பார்த்து கண்ணடித்தவாறு கூறிய கவிகிருஷ்ணாவின் தோளில் செல்லமாக தட்டியவர்

“உன் கிட்ட அந்த பொண்ணு சிக்கி என்ன பாடு படப் போறாளோ? கடவுளே! நீ தான் காப்பாற்றணும்” என்று கை இரண்டையும் தலைக்கு மேல் எடுத்து கும்பிட்ட படி கேட்க அதைப் பார்த்து கவிகிருஷ்ணா வாய் விட்டு சிரித்த வண்ணம் இருந்தான்.

ஜானகியிடம் போனில் கூறி இருந்தது போல இரண்டு நாட்கள் கழித்து அவரது வீட்டை நோக்கி புறப்பட்டான் கவிகிருஷ்ணா.

தேன்மதியை இறுதியாக அன்று ஹாஸ்பிடலில் வைத்து பார்த்ததன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து இன்று தான் அவளைப் பார்க்க போகிறான்.

அவளது அந்த மாற்றம் இன்று வரை அவன் கண்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

அவளை இன்று நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலுடன் அவளது வீட்டிற்குள் அவனது கார் உள் நுழைந்தது.

அவனது வருகைக்காக காத்திருந்தது போலவே வாசலில் நின்று கொண்டிருந்த ஜானகி கவிகிருஷ்ணாவை பார்த்ததுமே புன்னகையோடு அவனருகில் வந்து நின்றார்.

“ஹாய் ம்மா!” இயல்பாக அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டவனை பார்த்து நரசிம்மனும், சுரேந்திரனும் புன்னகத்து கொண்டனர்.

“என்ன அங்கிள் டுடே எல்லோரும் லீவ் போட்டாச்சு போல?” என்று கவிகிருஷ்ணா சுரேந்திரனிடம் கேட்கவும்

அவனை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர்
“ஆமா கிருஷ்ணா இன்னைக்கு நீ வர்றேன்னு ஜானகி நேற்றுல இருந்தே தடபுடலாக எல்லாம் ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டா அது தான் நாங்களும் இரண்டு நாளாக லீவ் எடுத்து உன்னை வரவேற்க காத்திருந்தோம்” என்று கூற
அவனோ புன்னகையோடு ஜானகியின் கை பற்றி கொண்டே வீட்டிற்குள் நடந்து சென்றான்.

“எல்லோரும் லீவு போட்டீங்களா?” ரகசியமாக சுரேந்திரன் காதில் கவிகிருஷ்ணா கேட்க அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவர் ஆமென்று தலை அசைத்தார்.

“ரியலி?!”
ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்து கேட்டவன் தன் பார்வையை அந்த வீட்டைச் சுற்றிலும் பரவ விட்டான்.

“நீ தேடுற ஆள் இப்போதைக்கு கீழே வரமாட்டா சாப்பிடுற நேரத்துக்கு தான் வருவா நீ இன்னைக்கு வர்றேன்னு சொல்லி அவளை லீவு எடுக்க வைக்க ஜானகியும், சம்யுக்தாவும் பட்ட பாடு இருக்கே! எங்களுக்கே வேர்த்து விறுவிறுத்து போச்சு இதுல அவளை இங்கே இருக்க சொல்லி சொன்னா வீடே ரணகளமாகி இருக்கும்” சுரேந்திரன் கவிகிருஷ்ணாவின் அருகில் அமர்ந்து கூறி கொண்டு இருக்க

அவனோ தன் மனதிற்குள்
“அது தானே பார்த்தேன் அவளாவது மாறுவதாவது! இன்னைக்கு என்ன நடந்தாலும் அவ கிட்ட நேரடியாக பேசிட வேண்டியது தான்” என நினைத்து கொண்டே இருந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ள அங்கே தேன்மதி அவர்கள் எல்லோரையும் பார்த்த வண்ணம் படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்.

அங்கு நின்ற அனைவருமே அந்த காட்சியை நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருக்க கவிகிருஷ்ணாவோ உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

“என்ன எல்லோரும் ஏதோ பேயைப் பார்த்த மாதிரி இவ்வளவு ஷாக் ரியாக்ஷன் கொடுக்குறீங்க? ஏன் நான் இங்கே வரக்கூடாதுனு நீங்க நினைத்து இருந்தீங்களா? அது தான் என்னை கீழே வர சொல்லி கூப்பிடலயா?” புன்னகையோடு அவர்கள் எதிரில் வந்து நின்று கேட்டவளை பார்த்து

தன்னை சுதாரித்துக் கொண்ட ஜானகி
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை டா மதி நீ மேல வேலையாக இருப்பேன்னு நினைத்தோம் அது தான் யாரும் உன்னை கூப்பிட வரல சரி நீ எல்லோர் கூடவும் பேசிட்டு இரு நாங்க சமையல் வேலையை பார்க்க போறோம்” என்று விட்டு சம்யுக்தாவின் கை பற்றி சமையலறைக்குள் அழைத்து செல்ல சுரேந்திரன் மற்றும் நரசிம்மன் கூட ஒரு நொடி தேன்மதியை ஆச்சரியமாக பார்த்தனர்.

“நேற்று ஆபிஸிற்கு இன்னைக்கு லீவு போட சொன்னதற்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இப்போ வந்து ஏன் என்னை கீழே வரச்சொல்லலனு கேட்குறா? என்ன நரசிம்மா நடக்குது இங்கே?” குழப்பமாக நரசிம்மன் காதில் சுரேந்திரன் கேட்க

அவரைப் பாவமாக பார்த்தவர்
“அது தானே எனக்கும் புரியல” என்று கூறினார்.

“என்ன அப்பா இது? இப்படி நின்னுட்டே இருக்குறதா உத்தேசமா?” தேன்மதியின் கேள்வியில் தங்கள் சிந்தனைகளில் இருந்து வெளி வந்த ஆண்கள் மூவரும் அவளை பார்த்து சமாளிப்பது போல புன்னகத்து விட்டு அமர்ந்து கொள்ள அவளோ அவர்களைப் பார்த்து பதிலுக்கு புன்னகத்து விட்டு சமையலறையை நோக்கி சென்றாள்.

“அங்கிள் இது உங்க பொண்ணு தானா? நேற்று ஏதோ பெரிய ரணகளம் நடந்த மாதிரி சொன்னீங்க இப்போ என்னடானா ரொம்ப கேசுவலா வந்து பேசிட்டு போறா? ஏதோ மர்மமாக இருக்கே!” தன் தாடையில் தட்டி கொண்டே கவிகிருஷ்ணா கேட்கவும்

அவனை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர்
“அது தானே மாப்பிள்ளை எனக்கும் குழப்பமாக இருக்கு” எனவும்

அவரது மாப்பிள்ளை என்ற அழைப்பில்
“அங்கிள்!” என அவரை அதிர்ச்சியாக பார்த்தான் கவிகிருஷ்ணா.

சுரேந்திரன் கூட ஒரு கணம் தான் கூறியதை எண்ணி அதிர்ச்சியடைந்து போக நரசிம்மனோ புன்னகையோடு அவர்கள் இருவரது தோளிலும் தட்டி கொடுத்தார்.

“எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் இப்படித்தானே நீங்க கிருஷ்ணாவை கூப்பிட வேணும் அதற்கு இப்போ இருந்தே ட்ரைனிங் எடுத்துக்குறதாக நினைத்துக்கோங்க மாமா!” புன்னகையோடு கூறிய நரசிம்மனையும், அவரது கைகளை சந்தோஷமாக பற்றி கொண்ட சுரேந்திரனையும் புன்னகை முகமாக பார்த்து கொண்டு இருந்தான் கவிகிருஷ்ணா.

அன்றைய நாள் முழுவதும் சகஜமாக தேன்மதி எல்லோருடனும் பேசி கொண்டு இருக்க கவிகிருஷ்ணாவோ அவளது இந்த சகஜமான பேச்சையும், நடவடிக்கைகளையும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்.

அவ்வப்போது பேச்சு வாக்கில் அவளது பார்வை அவனை தழுவி செல்ல அந்த ஒவ்வொரு நொடியும் சிறகின்றி அவன் மனம் இறக்கை கட்டி பறந்து கொண்டு இருந்தது.

மாலை வேளையில் எல்லோரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க தேன்மதி மாத்திரம் சற்று தள்ளி இருந்த மல்லிகை பந்தலின் கீழ் தன் கையில் இருந்த புத்தகத்தை படித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

சுரேந்திரன் மற்றும் நரசிம்மன் ஒரு அவசர வேலை நிமித்தம் வெளியே சென்று விட ஜானகியும், சம்யுக்தாவும் வீட்டிற்குள் இருந்த ஒரு சில வேலைகளை கவனிக்க சென்றனர்.

வேதவல்லியுடன் போனில் பேசி கொண்டு நின்ற கவிகிருஷ்ணா போன் பேசி முடித்து விட்டு மீண்டும் அவர்கள் எல்லோரும் இருந்த இடத்தை வந்து பார்க்க அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை.

தேன்மதி மாத்திரம் அவள் இருந்த இடத்தில் அப்படியே இருந்து கொண்டு இருந்தாள்.
“எல்லோரும் உள்ளே போயிட்டாங்க போல! சரி நாமும் போவோம்” என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்குள் திரும்பி செல்ல போனவன் காற்றோடு கலந்து அவன் முகத்தில் வந்து மோதிய மல்லிகை பூக்களின் நறுமணத்தில் அந்த இடத்திலேயே நின்றான்.

மனம் கேளாமல் மல்லிகை பந்தலின் புறம் திரும்பி பார்த்தவன் மெய் மறந்து புத்தகத்தை படிப்பதில் மூழ்கி இருந்த
தன் மனம் கவர்ந்தவளை சிறிது நேரம் பார்வையினாலேயே ரசித்து கொண்டு நின்றான்.

ஒற்றை கையில் புத்தகத்தை வைத்து கொண்டு மற்றைய கையினால் தன் காதின் ஓரம் விழுந்து கிடந்த முடிக் கற்றைகளை அவள் விலக்க அவள் செய்கை ஒவ்வொன்றையும் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு நின்றான் கவிகிருஷ்ணா.

மனமோ அவளை நெருங்கி செல்ல அவனை தூண்ட கால்களோ தயக்கத்துடன் முன்னால் செல்லாமல் அடம் பிடித்து நின்றது.

மனமா? மூளையா? என ஒரு விவாதமே அவனது உடலுக்குள் நடந்து கொண்டிருக்க அவனது காதலோ அவனை அவளை நோக்கி இழுத்து கொண்டு சென்றது.

தன் முன்னால் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்த தேன்மதி தன் முன்னால் நின்ற கவிகிருஷ்ணாவை பார்த்து அதிர்ச்சியாக எழுந்து நின்றாள்.

சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவள் அங்கே யாரும் இல்லை என்பதை கண்டு கொண்டு வேகமாக அங்கிருந்து செல்ல போக அவனோ அவள் முன்னால் வழி மறித்தவாறு வந்து நின்றான்.

“கிருஷ்ணா வழி விடுங்க யாரும் பார்த்தால் தப்பாக எடுத்துக்கப் போறாங்க” பதட்டத்துடன் வந்த அவளது குரலில் புன்னகத்து கொண்டவன்

“யார் தப்பாக எடுத்துக்கப் போறாங்க தேனு? இங்கே நீயும், நானும் தானே இருக்கோம்” கேள்வியாக அவளை பார்க்க அவனது பார்வையில் நாணம் கொண்டவள் புன்னகையோடு உடனே தன் தலையை தாழ்த்தி கொண்டாள்.

அன்று ஹாஸ்பிடலில் கண்டு கொண்ட அதே புன்னகையை அவளிடம் மறுபடியும் இன்று கண்டு கொள்ளவும் சிறிது தைரியம் மேலோங்க கவிகிருஷ்ணா அவளை நோக்கி நெருங்கி சென்றான்.

அவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் சற்று அச்சத்தோடு அவள் பின்னோக்கி நகர அடுத்த நொடி அவளை தன் கைகளுக்குள் அவன் சிறைப் பிடித்து கொண்டான்.

தேன்மதி பயத்தில் கண்கள் கலங்க அவனை பார்க்க வேண்டாம் என்று தலை அசைத்து கொண்டே அவள் கலங்கிய கண்களை துடைத்து விட்டவன்
“இதற்கு முதல் உன் வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம் அது பற்றி எனக்கு கவலையில்லை தேனு கடந்து போன எல்லாம் கடந்து போனது தான் திரும்பி வரப்போவது இல்லை இனி வரப்போகுற விடயங்களும் முக்கியம் இல்லை இந்த நொடி இப்போ என்ன நம்ம கண் முன்னால் இருக்கோ அது மட்டும் தான் நமக்கு சொந்தம் நான் ஒரு இடத்தில் இதை படித்து இருக்கேன் இன்று என்பது கடவுள் நமக்கு கொடுத்த அன்பளிப்பு அதனால தான் அதை நாம ப்ரஸண்ட்னு சொல்லுறோம் இந்த நொடி உனக்கு எது முக்கியம், சந்தோஷம்னு உன் மனதிற்கு தோணுதோ அதை பண்ணு இப்போ சொல்லு தேனு என்னை உனக்கு பிடிக்குமா? இல்லையா? எதுவாக இருந்தாலும் சொல்லு நான் அதை தாங்கிப்பேன் பிடித்து இருந்தாலும் சொல்லு பிடிக்கலனாலும் சொல்லு” ஆசையோடும், ஏக்கத்துடனும் அவளது கண்களையே அவன் பார்த்து கொண்டு நிற்க அவளோ பேச வார்த்தைகள் இன்றி கண்கள் கலங்க நின்றாள்.

“சரி இதற்கு மேலும் நான் இப்போ இதை பற்றி பேசல நான் வர்றேன்” என்று விட்டு அவளை சிறைப் பிடித்து இருந்த தன் கரங்களை விலக்கி கொண்டு திரும்பி செல்ல போனவன் நகர முடியாமல் இருக்கவே திரும்பி தேன்மதியைப் பார்த்தான்.

அவன் அவளை தன் கைகளுக்குள் சிறைப் பிடித்து கொள்ளும் போது அவளையும் அறியாமல் அவனது சட்டையை பற்றி இருந்த அவளது கரங்கள் இன்னும் அவனது சட்டையின் மீதே இருக்க
“தேனு!” என அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான் கவிகிருஷ்ணா……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.