KATRE-5
KATRE-5
சென்னையில் மேல்தட்டு வர்க்கத்தினர் பரவலாக வாழும் ஒரு பகுதி அந்த பகுதி என்பதை அந்த பகுதியில் காணப்பட்ட அடுக்குமாடி வீடுகளே நன்கு பறைசாற்றியது.
கிட்டத்தட்ட ஒரு மாளிகையின் தோற்றத்தில் இருந்த அந்த வீட்டின் உள்ளே இருந்த நபர்களோ ஆளுக்கொரு மூலையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர்.
அந்த வீடு இருந்த தோற்றத்திலேயே அந்த வீட்டு நபர்கள் அந்த வீட்டை காலி செய்து கிளம்பத் தயாராக இருப்பது நன்கு தெரிந்தது.
அழுதழுது முகம் சிவந்து போய் இருந்த இரு பெண்களில் ஒருவர் தேன்மதியின் புகைப்படத்தையும், மற்றொருவர் கவியின் புகைப்படத்தையும் வைத்து அழுது கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க இரு ஆண்கள் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அதில் ஒரு நபரின் போனும் அடித்தது.
போனை கையில் எடுத்து வைத்து கொண்டு யோசித்த வண்ணம் நின்றவரின் தோளில் கை வைத்த மற்றைய நபர்
“போனை எடுத்து பேசுங்க நரசிம்மன்” எனவும்
“சரி மாமா” என்று விட்டு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தார் மற்றையவரால் நரசிம்மன் என்று அழைக்கப்பட்டவர்.
“ஓஹ் சரி…சுரேந்திரன் மாமாவும் இங்கே தான் இருக்காங்க அப்படியா? சரி நாங்க இப்போவே கிளம்பி வர்றோம்” என்று விட்டு போனை வைத்த நரசிம்மன்
“டிக்கெட் கன்பர்ம் ஆயிடுச்சாம் மாமா நாம இப்போ கிளம்பி போனால் தான் ஏர்போர்ட் போய் சேர சரியாக இருக்கும்” எனவும் நரசிம்மனால் சுரேந்திரன் என்று கூறப்பட்டவர் அவரை பார்த்து சரியென்று தலை அசைத்து விட்டு தேன்மதியின் புகைப்படத்தை வைத்திருந்த பெண்ணின் அருகில் சென்றார்.
முக சாயலில் சற்று தேன்மதியை ஒத்திருந்த அவரது தோற்றமே அவர் தேன்மதியின் அன்னை என்பதை காட்டியது.
“சம்யுக்தா பிளைட்க்கு நேரமாச்சு வாம்மா போகலாம்” என்ற சுரேந்திரனை கண்கள் கலங்க ஏறிட்டு பார்த்தவர்
“தேன்மதி….” என்றவாறே அவர் தோள் மேல் சாய்ந்து கதறி அழுதார்.
மறுபுறம் நரசிம்மன் தன் மனைவியை பார்க்க அவரோ இலக்கின்றி தன் கையில் இருந்த கவியின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மெல்ல தன் மனைவியை நெருங்கி வந்த நரசிம்மன்
“ஜானகி எழுந்திரும்மா போகலாம்” என்க அவரோ சாவி கொடுத்த பொம்மை போல எழுந்து நின்றார்.
சந்தோஷம் நிறைந்து இருந்த தங்கள் குடும்பம் இன்று சந்தோஷம் என்ற நாமமே இல்லாமல் உருக்குலைந்து போய் விட்டதே என்ற கவலையுடன் தன் மனைவியை கை பிடித்து காரில் ஏறி அமரச் செய்த நரசிம்மன் தங்கள் வாழ்ந்த வீட்டை ஒரு முறை ஆழ்ந்து பார்த்து விட்டு காரின் மறுபுறம் ஏறி அமர்ந்து கொண்டார்.
சுரேந்திரன் சம்யுக்தாவை தோளோடு அணைத்தவாறு கூட்டி வந்து மற்றைய காரில் ஏறி கொள்ள அவர்களது கார் இரண்டும் ஏர்போர்ட் நோக்கி புறப்பட்டது.
சந்தோஷமாக திருமணம் முடித்து சென்ற தன் மகளும், மருமகனும் சந்தோஷமாக திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த சுரேந்திரனுக்கு வந்த சேர்ந்த செய்தியோ முற்றிலும் எதிர்பாராதது.
இரண்டு, மூன்று நாட்களாக வெளியூர் சென்ற தம் பிள்ளைகளிடம் இருந்து எந்த தகவலும் வராது போகவே பெரியவர்கள் நால்வரும் அச்சம் கொண்டனர்.
தெரிந்தவர்களிடம் சொல்லி விசாரித்த போது கிடைத்த விடயமோ அவர்கள் அனைவரது வாழ்க்கையையும் மொத்தமாக புரட்டிப் போட்டது.
மலையில் இருந்து வீழ்ந்ததால் கவியரசன் இறந்து விட்டதாகவும் அதனால் அவனது உடல் சிதைந்து போன நிலையில் கிடைத்திருப்பதாகவும் தகவல் அவர்கள் வீடு வந்து சேர்ந்தது.
தன் மகனை இப்படியொரு நிலையில் எதிர்பார்க்காத ஜானகியோ பேச்சு மூச்சின்றி மயங்கி விழ நரசிம்மனோ முற்றிலும் இடிந்து போனார்.
அதேநேரம் கவியரசன் உடலில் கிடைத்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு பெண்ணின் உடல் முகம் முழுவதும் சிதைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்ட தகவல் கிடைக்க சம்யுக்தா நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தார்.
ஆனால் பிற்பாடு அது தேன்மதி இல்லை என்று தெரிந்த பின்பே அவர்கள் சிறிது நம்பிக்கை கொண்டனர்.
சுரேந்திரன் தன் மகளை பற்றி எந்த தகவலும் தெரியாமல் தவித்துப் போய் இருக்க சம்யுக்தாவோ தடுமாறி போனார்.
ஆசையாக வளர்த்த ஒரே மகள் என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? என்று எந்த தகவலும் இல்லாமல் போகவே கடந்த இரண்டு மாதங்களாக ஊட்டி நகரம் முழுவதையும் சல்லடை போட்டு தேடிப் பார்த்தார் சுரேந்திரன்.
ஆனால் கடவுள் நினைத்தது வேறு ஒன்றாக இருக்க தேன்மதியைப் பற்றிய எந்த தகவலும் அவர்களுக்கு தெரியாமலேயே போனது.
பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தும், போலீஸ் மூலமாக தேடிப் பார்த்தும் சரியான எந்த விபரமும் அவர்களை வந்து சேரவில்லை.
இங்கேயே இருந்தால் சம்யுக்தா மற்றும் ஜானகி அழுதழுதே உடைந்து போய் விடுவர் என்று அச்சத்தில் சுரேந்திரனும், நரசிம்மனும் ஒரு சில மாதங்களுக்கு லண்டனில் உள்ள தங்கள் ஹெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்து விட்டு வரலாம் என்று முடிவு எடுத்து இருந்தனர்.
தேன்மதியைப் பற்றி எந்த தகவல் கிடைத்தாலும் உடனே தங்களுக்கு அறிவிக்கும் படி தங்கள் நண்பர்களிடம் கூறி வைத்தவர்கள் கனத்த மனதோடு லண்டன் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
தேன்மதியை ஊட்டியில் பார்த்த நபர்கள் ஒரு சிலரே.
அவர்களாக முன்வந்து தகவல் சொன்னாலே தவிர தேன்மதியைப் பற்றி வேறு எந்த விதத்திலும் அவளது குடும்பத்தினர் அறிந்து கொள்ளப் போவதில்லை.
போலீஸ் ஒருபுறம் தேன்மதியைப் பற்றி விசாரித்து கொண்டு இருக்க மறுபுறம் தேன்மதி இந்த குழப்பங்களை பற்றி எதுவும் அறியாமலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
கவியரசனின் உடல் கிடைக்கப் பெற்ற பகுதியோ ஊட்டியின் மேற்கு மலை அடிவாரப்பகுதி.
தேன்மதி தற்போது இருக்கும் பகுதியோ ஊட்டியின் கிழக்கு பகுதி.
தேன்மதியை எப்போது இவர்கள் கண்டுபிடிக்க போகிறார்கள் என்பது தான் இங்கே புரியாத புதிர்.
அப்படியே கண்டுபிடித்தாலும் தேன்மதி கவியரசன் இறந்த விடயத்தை உணர்ந்து கொள்வாளா?
காலை நேரம் எப்போதும் போல கௌசிக்கோடு ஜாக்கிங் சென்று விட்டு வந்த கவிகிருஷ்ணாவின் முன்னால் சுடச்சுட காஃபி கப்பை நீட்டினார் வேதவல்லி.
“தாங்க்ஸ் ம்மா” என்றவாறே அதை வாங்கி ருசித்து பருகியவன்
“இன்னைக்கு ஒரு முக்கியமான பேஷண்ட் ஒருத்தரை சீஃப் டாக்டரோட பார்க்க போறேன் மே பீ நைட் கொஞ்சம் லேட் ஆகலாம் ஷோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று விட்டு படியேறி செல்ல
வேதவல்லியோ
“சரி ப்பா எப்படியாவது நேரத்துக்கு வரப்பாரு” என்று விட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
குளித்து விட்டு தயாராகி வந்த கவிகிருஷ்ணா வேகமாக சாப்பிட்டு விட்டு தன் காரை எடுத்துக்கொண்டு சென்று விட வேதவல்லி யோசனையோடு கவிகிருஷ்ணாவைப் பார்த்து கொண்டு நின்றார்.
“என்ன அவசரம் இந்த பையனுக்கு? வர வர இவன் போக்கே சரி இல்லை சரியாக சாப்பிட கூட இல்லை” மனதிற்குள் கவலையுடன் நினைத்து கொண்ட வேதவல்லி தற்காலிகமாக தன் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.
“டாக்டர் வர்றாங்க” என்று குரல் கேட்டதுமே மூடி இருந்த தன் இமைகளை சட்டென்று திறந்து கொண்ட தேன்மதி ஆவலுடன் கவிகிருஷ்ணா வரும் வழியைப் பார்த்து கொண்டிருந்தாள்.
குட்மார்னிங் சொன்ன அனைவருக்கும் புன்னகையோடு ஒரு தலை அசைப்பை பதிலாக கொடுத்தவன் தேன்மதியைப் பார்த்ததும் ஒரு நொடி தயங்கி நின்றான்.
தேன்மதி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க சட்டென்று தன் பார்வையை தாழ்த்தி கொண்டவன் தன் போனை எடுத்து எதையோ பார்ப்பது போல பாவனை செய்து கொண்டு தன்னறைக்குள் வந்து சேர்ந்தான்.
“நான் ஏன் இவ்வளவு பதட்டம் ஆகுறேன்? எல்லார் மாதிரியும் அவளும் ஒரு பொண்ணு தானே? அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் எனக்கு? நோ இது சரி இல்லை கிருஷ்ணா உன் மனசை நீ தான் கட்டுப்படுத்தணும்” என்று தனக்குத்தானே கண் மூடி கூறிக் கொண்டவன் சிறிது நேரத்தில் தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
“இனி என்ன ஆனாலும் நோ டென்ஷன்” தனக்குள்ளேயே கூறிக் கொண்ட கவிகிருஷ்ணாவைப் பார்த்து அவனது மனம் கை கொட்டி சிரித்தது.
சிறிது நேரத்தில் சீஃப் டாக்டர் விருத்தாசலமும் வந்து விட கவிகிருஷ்ணா அவருடன் பேசிக் கொண்டே தேன்மதியைப் பார்க்க சென்றான்.
தேன்மதி கவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் உற்சாகமாக கை அசைக்க கவிகிருஷ்ணா சற்றே சங்கடத்துடன் விருத்தாசலத்தை திரும்பி பார்த்தான்.
“என்ன கிருஷ்ணா நீ? அவங்க ஒரு பேஷண்ட் அவங்களுக்கு குணமாக நம்மால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணணும் இப்போ அந்த பொண்ணு உன்னை பார்த்து கை அசைக்கும் போது நீயும் கை அசைக்கணும் அப்போ தான் அவங்களுக்கு ஒரு செக்யூர் பீல் இட்ஸ் அ கைன்ட் ஆஃப் ட்ரீட்மெண்ட்”
“ஆனா டாக்டர் அவங்க மனசில் வேற ஏதாவது எண்ணம் வளர இது காரணம் ஆகிடுச்சுனா?” கேள்வியாக நோக்கிய கவிகிருஷ்ணாவைப் பார்த்து வாய் விட்டு சிரித்த விருத்தாசலம்
“என்ன கிருஷ்ணா உனக்கு ஏதாவது அப்படி எண்ணம் இருக்கா?” என்று கேட்க
“அய்யோ டாக்டர்! அப்படி எல்லாம் இல்லை” என்று அவசரமாக மறுப்பாக கூறினான் கிருஷ்ணா.
“அவங்களுக்கு பழைய நினைவுகள் வரும் போது கண்டிப்பாக இப்போதைய நிகழ்வுகளை அவங்க விளங்கிக் கொள்ளுவாங்க அது தான் மனித மனத்தின் இயல்பு
புதிதாக ஒன்றை பார்த்தா பழைய விடயத்தை மறக்குறதும் திரும்ப பழைய விடயம் கிடைத்தா புதியதை விலக்குறதும் மனித இயல்பு நீ வா அவங்க கிட்ட பேசலாம் அப்புறம் நம்ம ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் தேன்மதி பற்றி தகவல் கொடுத்து இருக்கேன் மிஸ்ஸிங் கேஸ் ஏதாவது இருந்தால் சொல்ல சொல்லிட்டு வந்து இருக்கேன் அதையும் கொஞ்சம் பார்த்துக்கோ” என்று விட்டு விருத்தாசலம் தேன்மதியை நோக்கி செல்ல கவிகிருஷ்ணா அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.
“ஹாய் மிஸ்..”
“தேன்மதி” விருத்தாசலத்தின் பக்கத்தில் நின்ற கவிகிருஷ்ணாவைப் பார்த்து கொண்டே அவரது கேள்விகளுக்கு பதில் கூறினாள் தேன்மதி.
“மிஸ். தேன்மதி ஓகே உங்க பேமிலி டீடெய்ல்ஸ் எல்லாம் கிருஷ்ணா சொன்னார் பட் உங்க வீடு எங்கே இருக்குன்னு அவர் சொல்லல உங்க அட்ரஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?”
“அட்ரஸ்…” நெற்றியை நீவி விட்டு கொண்டே சிறிது நேரம் யோசித்தவள்
“இல்லை டாக்டர் எனக்கு அப்பா, அம்மா, கவி கூட இருந்தது மட்டும் தான் ஞாபகம் வருது எங்க வீடு ரொம்ப பெரிதாக இருக்கும் வீடு சென்னையில் இருக்கு ஆனா இடம் சொல்லத் தெரியலையே”
“கொஞ்சம் நல்லா யோசித்து பாருங்க தேன்மதி”
“……….”
“ஏதாவது ஞாபகம் வந்ததா?”
“எனக்கு கவியோட முகம் தான் டாக்டர் கண்ணுக்குள்ள வருது எதை யோசித்தாலும் அவன் முகமும், சிரிப்பும் தான் கண்ணுக்குள்ளே நிற்குது” கவிகிருஷ்ணாவை ரசனையோடு பார்த்து கொண்டே தேன்மதி கூற கவிகிருஷ்ணாவிற்கோ அங்கே நிற்பது முள் மேல் நிற்பதைப் போன்று இருந்தது.
“ஓகே உங்களுக்கு கவியைத் தான் ரொம்ப பிடிக்குமா?”
கவிகிருஷ்ணாவை திரும்பி ஒரு தடவை பார்த்து விட்டு தேன்மதியிடம் விருத்தாசலம் கேட்கவும்
ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“ஆமா கவி தான் எனக்கு எல்லாமே கவியும், நானும் சின்ன வயதிலிருந்தே நல்ல க்ளோஸ் பிரண்ட்ஸ் அதுமட்டுமில்ல கவியும், நானும் ஒருத்தரை ஒருத்தர் மனதார காதலிக்கிறோம்”
தேன்மதி இறுதியாக சொன்ன வார்த்தைகளைக் கேட்ட கவிகிருஷ்ணாவிற்கு தூக்கி வாரிப்போட்டது.
“இத்தனை நாள் மாமா பையன்னு உரிமை எடுத்து பேசுறானு பார்த்தா இப்போ லவ் பண்ணுறேன்னு சொல்லுறா! டேய் கவி! யார்ரா நீ? எங்கே இருந்துடா வந்த? இப்படி என்னை சிக்க வைச்சுட்டியேடா பாவி” மனதிற்குள் புலம்பிக் கொண்டு நின்றவனைப் பார்த்து தேன்மதி புன்னகக்க கவிகிருஷ்ணாவோ சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் விழித்துக் கொண்டு நின்றான்….