காரில் சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் மனதோ ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தேன்மதியின் ஒவ்வொரு செயலும், அசைவும் அவனை அவன் உறுதியை நன்றாகவே ஆட்டம் காணச் செய்தது.

அந்த தருணத்திற்கே ஏற்றாற் போல ‘காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?’ என்று ஒலித்த பாடல் வேறு அவனை, அவன் உள்ளத்து உணர்வுகளை தடுமாறச் செய்தது.

“இதற்கு என்ன தான் தீர்வு?” யோசித்த கவிகிருஷ்ணா பதில் கிடைக்காமல் சிந்தனை வயப்பட்டவனாகவே வீட்டினுள் நுழைந்தான்.

காரைப் பார்க்கிங்கில் நிறுத்தியவன் இதே சிந்தனையோடு வீட்டினுள் சென்றால் தன் அன்னையின் கேள்வியில் தான் திக்குமுக்காடி போய் விடக்கூடும் என்ற எண்ணத்தோடு சிறிது நேரம் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தான்.

ஐந்து நிமிடங்கள் கடந்த பின்னர் தன்னை சிறிது நிலைப்படுத்தி கொண்டவன் முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

வேதவல்லி கவிகிருஷ்ணாவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே தன் வேலைகளை செய்து கொண்டிருக்க அவனோ யாரும் தன் மாற்றத்தை கவனிக்கவில்லை போலும் என்றெண்ணிக் கொண்டு தன் அறையை நோக்கி சென்றான்.

வழக்கம் போல இரவுணவை முடித்து விட்டு அவரவர் அவரவர் அறைகளுக்குச் செல்ல கவிகிருஷ்ணா மாத்திரம் ஹாலில் தயங்கி தயங்கி நின்றான்.

வேதவல்லி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே
“என்ன கண்ணா இங்கே நின்னுட்டு இருக்க? இன்னும் தூங்கப் போகலயா?” எனவும்

அவரை தயக்கத்துடன் ஏறிட்டவன்
“அது வந்து ம்மா…அது” என்றவாறே தன் பேச்சை இழுத்து கொண்டு நின்றான்.

புன்னகையோடு தன் மகனை பார்த்தவர் அவனைக் கை பிடித்து அழைத்து சென்று அங்கிருந்த ஷோபாவில் அமரச் செய்து விட்டு பின்னர் அவனருகில் அவரும் அமர்ந்து கொண்டார்.

“சொல்லு கண்ணா அம்மாகிட்ட என்ன சொல்ல நினைக்குற?” தன் அன்னையின் நேரடியான கேள்வியில் அவர் சாதுர்யத்தை எண்ணி மெச்சிக் கொண்டவன் தன் கை விரல்களை கோர்ப்பதும், பிரிப்பதுமாக அமர்ந்திருந்தான்.

“என்ன கண்ணா?” கவிகிருஷ்ணாவின் தலையை கோதி விட்டவாறே கேட்ட வேதவல்லியின் மடியில் தலை சாய்த்து படுத்து கொண்டவன் தேன்மதி தங்கள் வைத்திய சாலைக்கு வந்தது முதல் இன்று வரை நடந்த குழப்பங்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கூறி முடித்தான்.

கவிகிருஷ்ணா எல்லாம் கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்
“அந்த பொண்ணைப் பற்றி நீ என்ன நினைக்குற கண்ணா?” என்று கேட்டார்.

“எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த அபிப்பிராயமும் இல்லம்மா ஆனா அந்த பொண்ணு என்னை தவறாக அவ மாமா பையனாக மனசில் நினைத்து ஆசையை வளர்த்துக்கிறதைப் பார்த்தால் எனக்கு கவலையாக இருக்குதும்மா உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவ இல்லை ஒரே குழப்பமாக இருக்குது” கவலையுடன் கூறிய கவிகிருஷ்ணாவை முகம் மாறாத புன்னகையோடு பார்த்து கொண்டிருந்த வேதவல்லி அவன் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டார்.

“நீ இதில் குழப்பமடையற அளவுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை கண்ணா அந்த பொண்ணு எனக்கு என்னவோ கூடிய சீக்கிரம் தன்னோட பழைய நினைவுகளை மீட்டெடுத்துடுவானு தோணுது அதே மாதிரி நீயும் ஒரு தப்பான எண்ணத்திலும் அந்த பொண்ணைப் பார்க்கலயே சீஃப் டாக்டர் சொன்ன மாதிரி இது மாதிரி ஆட்களை நீ இப்போ தான் பார்க்குற இல்லையா அது தான் நீ கொஞ்சம் குழப்பமாகிட்ட கொஞ்சம் கொஞ்சமாக அந்த பொண்ணு நிதர்சனத்தை உணர்ந்து கொள்ளும் நீ வீணாக உன் மனசைப் போட்டு குழப்பமாக்கி கொள்ளாமல் போய் தூங்கு கடவுள் சீக்கிரமாக ஒரு நல்ல வழியை அந்த பொண்ணுக்கு காண்பிப்பார்” என்ற வேதவல்லியின் வார்த்தைகள் கூடிய விரைவில் உண்மையாக கூடும் என்பதை அந்த நொடி யாரும் அறிந்திருக்கவில்லை.

தன் தாயின் ஆறுதலான வார்த்தைகளில் சிறிது மனதளவில் நம்பிக்கையை வளர்த்து கொண்டவன்
“சரி ம்மா நீங்களும் போய் தூங்குங்க லேட் ஆச்சு” என்றவாறே அவரது அறை வரை சென்று அவரை விட்டு தன்னறையை நோக்கி சென்றான்.

மலை ராணிகளுக்குப் பின்னால் ஒழிந்து தூங்கி கொண்டிருந்த சூரியன் மஞ்சள் பூசிய வானத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து வர தன் முகம் மேல் பட்ட அந்த மஞ்சளொளியில் மெல்ல கண் விழித்தாள் தேன்மதி.

ஒவ்வொரு நாள் காலையிலும் தன் அன்னையின் முகம் பார்த்து எழுந்து பழக்கப்பட்டவள் இப்போது வெற்றுச் சுவரைப் பார்த்து கொண்டே எழும் தன் கஷ்டத்தை எண்ணி மனம் கசந்தவளாக
“அம்மா நீ எங்கே இருக்க?” என்று மனதிற்குள் அழுது கொண்டே கட்டிலில் இருந்து இறங்கி தன் மற்றைய கடமைகளை கவனிக்க சென்றாள்.

வழக்கம் போல கவிகிருஷ்ணா ஹாஸ்பிடல் செல்ல தயாராகி வர அவன் முன்னால் வந்த வேதவல்லி
“கண்ணா நீ நேற்று அந்த பொண்ணைப் பற்றி சொன்னதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப கவலையாக போச்சுடா நம்ம வீட்டுலேயும் ஒரு பொண்ணு இருக்கா இல்லையா? அதனால இன்னைக்கு நான் அந்த பொண்ணை வந்து பார்த்துட்டு போகவா?” வேதவல்லியின் கேள்வியில் சிறிது யோசித்தவன் தன் அன்னையை தேன்மதியிடம் அறிமுகப்படுத்தினால் நிச்சயமாக அவள் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளக் கூடும் என்றெண்ணிக் கொண்டு சரியென்று தலை அசைத்தான்.

தேன்மதி வழமை போன்று கவிகிருஷ்ணாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க அவளது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கவிகிருஷ்ணா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

கவிகிருஷ்ணாவைப் பார்த்து புன்னகையோடு கையசைக்க எண்ணி தன் கையை உயர்த்தியவள் அவனருகில் வந்த அவனது அன்னையைப் பார்த்து குழப்பமாக கவிகிருஷ்ணாவை நோக்கினாள்.

அவளருகில் வந்து சேர்ந்த கவிகிருஷ்ணா புன்னகை மாறாத முகத்தோடு
“குட் மார்னிங் தேன்மதி! இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்கவும்

“ஆஹ் பரவாயில்லை நல்லா இருக்கு” என்றவளின் பார்வையோ வேதவல்லியின் மீதே இருந்தது.

அவளின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன்
“பை த வே இவங்க என்னோட அம்மா வேதவல்லி உங்களைப் பற்றி சொல்லவும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க அது தான் இங்கே அவங்களை கூட்டிட்டு வந்தேன்” என்று கூறவும்

“அம்மா!” என அதிர்ச்சியாக அவரைப் பார்த்தவள் பேச வார்த்தைகள் இன்றி அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எப்படி மா இருக்க?” வேதவல்லியின் கேள்வியில்

“இருக்கேன் அம்..ஆன்..அம்” என்று தடுமாறியவளைப் புன்னகையோடு பார்த்தவர்

“அம்மானே சொல்லு மா” என்றார்.

“சரி ம்மா நீங்க பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று விட்டு கவிகிருஷ்ணா அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று விட தேன்மதியோ வேதவல்லியையும், நடந்து சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவையையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் தேன்மதி சகஜமாக வேதவல்லியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் நிம்மதியாக பெருமூச்சு விட்டு கொண்டவன் தன் மற்றைய வேலைகளை கவனிக்க சென்றான்.

மதிய வேளை வேதவல்லி தேன்மதியிடமும், கவிகிருஷ்ணாவிடமும் சொல்லி விட்டு விடைபெற்றுச் சென்று விட அவர் சென்ற சிறிது நேரத்தில் விருத்தாசலம் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

விருத்தாசலத்திடம் தேன்மதி தன் அன்னையிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிக் கூற அதைக் கேட்டு கொண்டே அவர் தேன்மதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்.

அங்கு அவளோ அத்தனை நேரம் வேதவல்லியுடன் பேசும் போது இருந்த சந்தோஷ நிலை காணாமல் போய் வெளியே தெரிந்த வானத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

“தேன்மதி” விருத்தாசலத்தின் குரலில் திடுக்கிட்டு அவரைப் பார்த்தவள் மறந்தும் கூட அவரருகில் நின்ற கவிகிருஷ்ணாவை திரும்பியும் பார்க்கவில்லை.

அவளின் இந்த திடீர் மாற்றம் ஏனோ அவன் மனதை வலிக்கச் செய்தது.

‘அவ பார்த்தாலும் உனக்கு பொறுக்காது பார்க்கலனாலும் பீஃல் பண்ணுற உனக்கு என்ன தான் டா வேணும்?’ என்று கேள்வி கேட்ட மனதை அடக்கியவன் அலளையே பார்த்து கொண்டு நின்றான்.

“அம்மா கிட்ட நிறைய நேரம் பேசிட்டு இருந்தீங்க போல?” விருத்தாசலம் கேட்க

புன்னகையோடு ஆமென்று தலையசைத்தவள்
“அவங்க கிட்ட பேசும் போது நேரம் போனதே தெரியல எனக்கு என் அம்மா கிட்ட பேசுற மாதிரியே இருந்துச்சு அவங்க சின்ன வயசு பற்றி நிறைய பேசிட்டு இருந்தாங்க இன்னும் கொஞ்ச நேரம் அவங்க பேசிட்டு இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுது டாக்டர்” எனவும்

அவளைப் பார்த்து புன்னகத்தவர்
“கிருஷ்ணாவைப் பற்றியும் சொன்னாங்களா?” என்று கேட்டார்.

ஆமென்று தலையசைத்தவள்
“அவங்க பையன் கவிகிருஷ்ணா பற்றி சொன்னாங்க ஆனா என்னோட கவியைப் பற்றி எதுவும் சொல்லல” என்று கவிகிருஷ்ணாவை நோக்கி தேன்மதி கை காட்ட

“அய்யோ! கடவுளே! மறுபடியுமா?” என புலம்பிக் கொண்டே கவிகிருஷ்ணா அங்கிருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தான்.

தேன்மதியின் பதிலில் விருத்தாசலத்தின் புருவங்களும் யோசனையில் முடிச்சிட்டது.

“இது என்ன இப்படி நடக்குது டாக்டர்?” கவிகிருஷ்ணா கவலையுடன் விருத்தாசலத்திடம் வினவ தேன்மதியிடம் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறி விட்டு எழுந்து கொண்டவர் கவிகிருஷ்ணாவை அழைத்து கொண்டு அவனது அறைக்குள் வந்து சேர்ந்தார்.

“இந்த விஷயம் இவ்வளவு சிக்கலாக மாறும்னு நான் எதிர்பார்க்கல அவங்க மனசில் நீ தான் அந்த பொண்ணோட கவினு ஆழமாக பதிந்துடுச்சு சீக்கிரமாக அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணியே ஆகணும் இல்லேனா அந்த பொண்ணு வாழ்க்கை”

“டாக்டர்!”

“நோ நோ எதுவும் ஆகாது டோன்ட் வொர்ரி நாளையில் இருந்து அவங்களுக்கு வேற ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் இப்போ நான் ஸ்டேஷனுக்கு போறேன் தேன்மதி பற்றி எதாவது தகவல் தெரிந்ததானு பார்த்துட்டு வர்றேன் பாய் கிருஷ்ணா” என்று விட்டு விருத்தாசலம் சென்று விட கவிகிருஷ்ணாவோ தேன்மதியை எண்ணி கவலை கொண்டான்.

“இந்த வயதில் இந்த பெண்ணிற்கு ஏன் இத்தனை கஷ்டம்?” என்று எண்ணி வருந்தியவன் மெல்ல எழுந்து சென்று ஜன்னலின் அருகில் நின்றான்.

தேன்மதி இந்த வைத்திய சாலையில் வந்து சேரும் போது அவள் இரண்டு மாதங்களுக்கு மேலாக மயக்கத்தில் இருப்பதை பார்த்து மிகவும் மனம் வருந்தியவன் கவிகிருஷ்ணா.

ஆனால் தற்போது அவள் மயக்கத்தில் இருந்து விழித்ததன் பின்னர் இன்னும் மேலாக அவன் மனம் வருந்தி கொண்டிருக்கிறான்.

விருத்தாசலம் சென்றதன் பின்னர் தேன்மதி கவிகிருஷ்ணாவை சாரமாரியாக மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

“என் கிட்டயே பொய் சொல்லுறான் எருமை ஒரு அம்மாவை கூட்டிட்டு வந்து என் கூட பேச வைத்தால் அவன் கவி இல்லைன்னு ஆகிடுமா? எதற்காக அவன் இப்படி எல்லாம் பண்ணுறான்? அவன் என்னதான் மாற்ற நினைச்சாலும் அவன் பேரில் இருக்கும் கவியை அவனால் விட்டு கொடுக்க முடியாது ஏன்னா அந்த கவி என்கிற அழைப்பு எனக்கு மட்டும் தான் சொந்தம்னு அவன் என் கிட்ட பல தடவை சொல்லி இருக்கான் அப்படி இருக்கும் போது எதற்காக அவன் தன்னோட பெயரை மாற்றி அடையாளத்தை மாற்றணும்?” தேன்மதியின் மனம் முழுவதும் அந்த சிந்தனைகளுக்குள்ளேயே சுற்றி வந்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்த வேதவல்லி நேராக பூஜையறைக்குச் சென்று தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்த விடயங்கள் எல்லாவற்றையும் மொத்தமாக கடவுளிடம் ஒப்புவித்தார்.

மனதில் இருந்து பாரம் எல்லாம் இறங்கியது போல உணர்ந்தவர் புன்னகையோடு கண் மூடி எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தன் வேலைகளை கவனிக்க செல்ல
ஒரு புறம் கவிகிருஷ்ணா தன் உண்மை நிலையை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்க மறுபுறம் தேன்மதி தன்னை ஏன் அவன் வெறுக்க வேண்டும் என்று யோசனையோடு அமர்ந்திருந்தாள்…..

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!