தேன்மதி சிந்தனை வயப்பட்டவளாக அமர்ந்திருக்க அவளருகில் வந்த அந்த வயதான பாட்டி
“என்ன கண்ணு எதையோ யோசித்துட்டு இருக்க போல இருக்கே?” என்று கேட்கவும்

அவரைப் பார்த்து சிறிது புன்னகைத்தவள்
“வாழ்க்கையே யோசனையாக தான் இருக்கு பாட்டி என்ன நடக்குதுனு புரியாமல் ஒரு வாழ்க்கை” என்று கூற அவளருகில் அமர்ந்து கொண்டவர் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

“நீ ஏன் கண்ணு அப்படி யோசிக்குற? இதுலயும் ஏதாவது ஒரு நல்லது உனக்கு கிடைக்கலாம் இல்லையா?”

“நல்லதா? போங்க பாட்டி இத்தனை நாளாக பாசமாக இருந்தவங்க கூட இப்போ என்னை கண்டுக்காம விட்டுட்டாங்க இதுல நல்லது வேற நடக்கணுமா? நடக்குற விஷயம் எல்லாம் பார்க்கும் போது இப்படி ஒரு வாழ்க்கை தேவையானு தோணுது”

“அப்படி பேசாத கண்ணு இப்படி நீ கவலைப்படுறதுக்காகவா உன்னை அந்த கடவுள் என் கண்ணில் காமிச்சாரு அது மட்டும் இல்லாமல் யாரும் உன்னை கண்டுக்காமலாம் விட மாட்டங்கமா என் வீட்டுக்காரர் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார் என்ன நடந்தாலும் அது நம்ம நல்லதுக்கு தான் நடக்கும் அதனால நடந்த விஷயத்தை யோசித்து வரப்போகும் நல்லதை தொலைச்சுடக் கூடாது அதே தான் நான் உனக்கும் சொல்லுறேன் உன்னை கடந்து போன விடயத்தை யோசித்து பின்னால் வர்ற உன் வாழ்க்கையை அழிச்சுக்காதே கண்ணு”

“பாட்டி என் மனசார ஒரு விஷயம் சொல்லவா? நீங்க யாரு? எப்படி பட்டவங்க? எந்த ஒரு விஷயமும் எனக்கு தெரியாது ஆனா நீங்க எனக்காக எவ்வளவு தூரம் கவனமெடுத்துக்குறீங்க! உண்மையாகவே எனக்கு இங்க உள்ளவங்க எல்லாம் பேசிட்டு இருக்குற மாதிரி பழைய விடயம் எல்லாம் மறந்து போய் இருக்குறதாகவே இருந்தாலும் உங்களை மட்டும் என் வாழ்க்கையில் நான் மறக்கவே கூடாது பாட்டி” கண் கலங்கியவாறு கூறிய தேன்மதியை தன் தோளோடு அவர் அணைத்துக் கொண்டார்.

“நீ எதை பற்றியும் கவலைப்படாமல் இரு கண்ணு உனக்கு எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்க நான் இருக்கேன்” என்றவரைப் பார்த்து புன்னகத்தவள் மீண்டும் அவர் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.

வெளியே செல்வதற்காக தயாராகி வந்த கவிகிருஷ்ணா தேன்மதியினதும், அந்த பாட்டியினதும் உரையாடலைக் கேட்டு ஒரு நொடி வியந்து போனான்.

யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிற்காக அந்த பாட்டி இவ்வளவு காலமாக உதவி செய்து கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்தவன் அவன்.

ஆரம்பத்தில் அவன் கூட இத்தனை தூரம் இந்த பாட்டி எதற்காக இந்த பெண்ணிற்காக இவ்வளவு கவலைப் பட வேண்டும் என்று கூட அவன் யோசித்தது உண்டு.

ஆனால் இன்று அந்த பாட்டியின் பேச்சு அவன் மனதை ஏதோ செய்தது.

அந்த நொடி அவன் தன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டான்.

என்ன நடந்தாலும் சரி எப்பாடு பட்டாவது தேன்மதியை குணப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அவர்கள் இருவரும் கவனிக்கா வண்ணம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.

போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்ற விருத்தாசலம் தேன்மதியைப் பற்றி தகவல்கள் ஏதாவது கிடைத்ததா என்று விசாரிக்க அவர்களது நல்ல நேரம் தேன்மதியைப் பற்றி அவளது குடும்பத்தினர் அளித்திருந்த கம்ப்ளயிண்ட் அவருக்கு கிடைத்தது.

தொடர்பு கொள்வதற்காக அவர்கள் கொடுத்திருந்த எண்ணை பெற்றுக் கொண்டவர் உடனே இந்த செய்தியை கவிகிருஷ்ணாவிடம் தெரிவித்தார்.

காரில் சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவோ விருத்தாசலத்திடம் இருந்து வந்த அந்த செய்தியை கேட்டு சட்டென்று ஓட்டிக்கொண்டிருந்த தன் காரை நிறுத்தினான்.

“என்ன டாக்டர் சொல்லுறீங்க நிஜமாகவா?” அவர் சொன்ன செய்தியை இன்னும் அவனால் முழுமையாக உள்ளெடுத்துக் கொள்ள முடியவில்லை.

“ஆமா கிருஷ்ணா இத்தனை நாளாக போலீஸும் தேன்மதிங்குற பெயரை வைத்து தான் அவங்களைத் தேடிட்டு இருந்துருக்காங்க தேன்மதி மயக்கத்தில் இருந்ததால் தான் நம்மளாலும் எதுவும் செய்ய முடியாது போயிட்டு இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு அவங்க வீட்டுக்கு தகவல் கொடுத்தா கண்டிப்பாக அவங்க தேன்மதியோட கவியைக் கூட்டிட்டு வந்துடுவாங்க நமக்கும் அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியாக இருக்கும்”  என்று விருத்தாசலம் கூறவும் மறுமுனையில் கவிகிருஷ்ணா அமைதியாக இருந்தான்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே குழப்பமாக தன் போனை பார்த்தவர்
“கிருஷ்ணா லைன்ல இருக்கியா?” என்று கேட்டார்.

“ஆஹ் இருக்கேன் ஸார் அப்போ எவ்வளவு சீக்கிரமாக அவங்க வீட்டு ஆளுங்களை வர வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வர வைங்க” என்று விட்டு அவரது பதிலைக் கேட்காமலேயே கவிகிருஷ்ணா போனை வைத்து விட விருத்தாசலம் தன் போனை பார்த்து புன்னகத்து கொண்டார்.

“எந்த ஒரு எண்ணமும் இல்லைனு சொன்ன கிருஷ்ணாவா இது?” மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டவர் தேன்மதியின் வீட்டு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டார்.

மறுமுனையில் அழைப்பு எடுக்கப்படாமல் போகவே யோசனை கொண்டவர் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த வேறு ஒரு எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டார்.

இந்த முறை அவரது பொறுமையை சோதிக்காமல் அழைப்பு எடுக்கப்பட்டது.

“ஹலோ மிஸ்டர் சுரேந்திரன்?”

“சுரேந்திரன் இல்லைங்கலே அவர் லண்டனில் இருக்கார் நீங்க யாரு?” மறுமுனையில் கேட்ட கேள்வியில்

“லண்டனா?” என்று சிறிது நேரம் யோசித்தவர்

“அவங்க பொண்ணு தேன்மதி…”

“என்ன தேன்மதியா? அவங்க பற்றி எதாவது தகவல் கிடைத்ததா? நீங்க எங்க இருக்கீங்க ஸார்? தேன்மதி கிடைத்துட்டாங்களா? தேன்மதி இப்போ எப்படி ஸார் இருக்காங்க?” ஒரே மூச்சில் எதிரில் இருந்தவர் கேள்வி கேட்ட வண்ணம் இருக்க விருத்தாசலம் தலையில் கை வைத்து நின்றார்.

“ஹலோ ஸார் லைன்ல இருக்கீங்களா?” மறுமுனையில் இருந்த நபர் கேள்வியாக கேட்கவும்

போனை ஒரு தரம் காதில் இருந்து எடுத்து பார்த்தவர்
“எதிரில் இருக்குறவர் சொல்ல வர்றதை கொஞ்சம் முழுமையாக சொல்ல விடுங்க ஸார்” எனவும்

மறுமுனையில் இருந்த நபர்
“ஸாரி ஸார் சுரேந்திரன் என் பிரண்ட் தான் இரண்டு மாசமாக அவர் பொண்ணைத் தேடி கஷ்டப்பட்டு திரிந்ததைப் பார்த்தவன் நான் அது தான் ஒரு ஆர்வத்தில் இப்படி பண்ணிட்டேன்” என்றார்.

“சரி ஸார் பரவாயில்லை ஐ கேன் அன்ட்டர்ஸ்டண்ட் தேன்மதி இப்போ ஊட்டி லோட்டஸ் ஹாஸ்பிடலில் தான் இருக்காங்க எவ்வளவு சீக்கிரமாக அவங்க குடும்பத்தினரை வர சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவங்களை வர சொல்லுங்க ஏதாவது மேலதிக தகவல் வேண்டும்னா இந்த நம்பரை தொடர்பு கொள்ள சொல்லுங்க”

“கண்டிப்பாக சொல்லுறேன் ஸார் ரொம்ப நன்றி” என்று விட்டு போனை வைத்த அந்த நபர் உடனடியாக லண்டனில் இருந்த சுரேந்திரனிற்கு அழைப்பை மேற்கொண்டார்.

மறுமுனையில் சம்யுக்தா தான் அந்த அழைப்பை எடுத்து பேசினார்.

தேன்மதி பற்றிய தகவல் தெரிந்ததும் உச்சகட்ட ஆனந்தம் கொண்டவர் பேச வார்த்தைகள் இன்றி சுரேந்திரன் மேல் சாய்ந்து கதறி அழுதார்.

சம்யுக்தாவின் இந்த திடீர் அழுகையை பார்த்து பதட்டம் கொண்ட சுரேந்திரன் மனமோ
‘தேன்மதிக்கு ஏதாவது ஆபத்தோ?’ என அச்சம் கொண்டது.

தன் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் சம்யுக்தாவை தன்னை விட்டு பிரித்து நிறுத்தியவர்
“என்ன ஆச்சு சம்யுக்தா? போனில் யாரு? என்ன சொன்னாங்க?” என்று கேட்கவும்

அழுது கொண்டே அவர் கை பற்றி பூஜையறை நோக்கி இழுத்து சென்றவர் அதன் வாயிலில் மாட்டப்பட்டிருந்த தேன்மதியின் புகைப்படத்தை காட்ட சுரேந்திரனின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

“தே..ன்..தேன்மதி யா? என்ன ஆச்சு?” எவ்வளவு முயன்றும் அவரது குரல் நடுக்கத்துடனே வெளி வந்தது.

“நம்ம…மதி…நம்ம பொண்ணு கிடைச்சுட்டாங்க” அழுகையினூடே புன்னகையோடு கூறிய சம்யுக்தாவின் வார்த்தைகள் சுரேந்திரனை மெய் சிலிர்க்க வைத்தது.

“நி…நிஜமாகவா? நீ சொல்றது உண்மையா?” சம்யுக்தா கூறிய செய்தி பொய்யாகி விடக்கூடாதே என்று ஆர்வத்தோடு கேட்ட சுரேந்திரனை பார்த்து தன் கண்களை துடைத்து கொண்டவர் தன் கையில் இருந்த போனை சுரேந்திரனிடம் கொடுத்தார்.

திரையில் ஒளிர்ந்த மாணிக்கம் என்ற பெயரை பார்த்ததும் உடனே போனை தன் காதில் வைத்தவர்
“மாணிக்கம் என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

சுரேந்திரனால் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டவர் விருத்தாசலம் சொன்ன தகவல்கள் எல்லாவற்றையும் கூற சுரேந்திரனின் கண்கள் இரண்டும் தாரை தாரையாக கண்ணீரை வடித்தது.

தன் கணவரின் கண்ணீரை துடைத்து விட்ட சம்யுக்தா அப்போது தான் வாயிலில் நின்று கொண்டிருந்த நரசிம்மன் மற்றும் ஜானகியை பார்த்தார்.

சந்தோஷமாக அவர்கள் அருகில் வந்தவர்
“ஜானகி நம்ம தேன்மதி கிடைச்சுட்டா நரசிம்மன் நம்ம தேன்மதி கிடைச்சுட்டா” என்று கூறவும்

ஆனந்த அதிர்ச்சியாக அவரைப் பார்த்தவர்கள்
“உண்மையாகவா?” என்று ஒரு சேர கேட்டனர்.

“ஆமா ஜானகி இப்போ தான் மாணிக்கம் போன் பண்ணி சொன்னார் நம்ம வேண்டுதல் வீண் போகல” பல நாட்கள் கழித்து தன் அண்ணியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து ஜானகியின் முகத்திலும் சிறு புன்னகை வந்து குடி கொண்டது.

“இந்த நல்ல நேரத்தில் கடவுளுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகணும் வா ஜானகி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்” என்று விட்டு சம்யுக்தா முன்னால் செல்ல ஜானகியும் புன்னகையோடு அவரை பின் தொடர்ந்து சென்றார்.

நரசிம்மன் தன் மனைவியின் மனநிலையை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் சுரேந்திரன் அருகில் அமர்ந்து கொள்ள சுரேந்திரனோ எல்லையில்லா ஆனந்தத்தோடு நரசிம்மனை ஆரத்தழுவிக் கொண்டார்.

“நரசிம்மா அடுத்த பிளைட்ல இந்தியாவிற்கு டிக்கெட் போடு நாம எல்லாரும் உடனே ஊட்டிக்கு போகணும்” உற்சாகமாக வந்த சுரேந்திரனின் குரலில் அவரைப் பார்த்து புன்னகத்தவர்

சரியென்று விட்டு தன் போனை எடுத்துக் கொண்டு எழுந்து கொள்ள
“நரசிம்மா!” என்றவாறே அவர் கை பிடித்தவர்

“கவியை நினைத்து பார்த்தீயா?” என்று கேட்க நரசிம்மன் எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றார்.

“நான் உன் மனசை கஷ்டப்படுத்திட்டேனா?” என்ற சுரேந்திரனின் கேள்வியில் அவசரமாக இல்லை என்று தலை அசைத்தவர்

“தேன்மதி எனக்கும் ஒரு பொண்ணு மாதிரி தான் மாமா அவ கிடைத்ததா செய்தியை கேட்டதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு ஆனா கவியும் அப்படி கிடைத்ததா ஒரு செய்தி வரக்கூடாதானு தான் என் மனசு கிடந்து அடிச்சுக்குது ஆனால் அது தான் ந..ட..க்காதே” கதறி அழுதவரை தன் தோளோடு அணைத்துக் கொண்டவர்

“நரசிம்மா என்ன இது எல்லாம்? நீ இப்படி அழுதால் ஜானகியை யாரு பார்ப்பாங்க?” என்று கேட்கவும்

தன் கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தவர்
“கடவுள் நினைத்தது தான் மாமா நடக்கும் அது மாறாது இதுவும் அவனோட ஒரு சோதனை தான் நான் டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றேன் முதல்ல தேன்மதியை பார்க்க போகணும்” என்று விட்டு நகர்ந்து செல்ல கனத்த மனதோடு சுரேந்திரன் நரசிம்மனை பார்த்து கொண்டு நின்றார்.

அடுத்த நாள் இந்தியாவிற்கு செல்லும் பிளைட்டில் டிக்கெட் புக் செய்தவர்கள் அதற்கு அடுத்த நாள் ஊட்டி செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தனர்.

விருத்தாசலத்தை தொடர்பு கொண்ட சுரேந்திரன் இன்னும் இரண்டு நாட்களில் தாங்கள் எல்லோரும் ஊட்டி வரும் செய்தியை அறிவித்தவர் தன் மகளை காணப் போகும் அந்த நொடியை எதிர்பார்த்து காத்திருந்தார்.

மறுபுறம் விருத்தாசலம் கவிகிருஷ்ணாவிடம் இந்த விடயத்தை பற்றி கூற அவன் மனமோ தேன்மதி இங்கிருந்து செல்லப் போகின்றாளா? என கவலை கொண்டது.

தன் மனப்போக்கை எண்ணி குழப்பம் கொண்டவன் முயன்று தன்னை தன் வேலைகளில் ஈடுபடுத்தி கொண்டான்.

வேதவல்லியிடமும் கவிகிருஷ்ணா இதை பற்றி பகிர்ந்து கொள்ள தேன்மதியின் உறவினர்கள் வரும் அன்று தானும் ஹாஸ்பிடல் வரப்போவதாக வேதவல்லி அவனிடம் கூறினார்.

இரண்டு நாட்கள் இதமாக கடந்து சென்றது.

காலை நேரப் பரபரப்பு அடங்கி இருந்த நேரம் சுரேந்திரன் மற்றும் நரசிம்மன் தங்கள் மனைவியரோடு லோட்டஸ் ஹாஸ்பிடலை வந்து சேர்ந்தனர்.

விருத்தாசலம் ஹாஸ்பிடல் வாயிலில் காத்து நின்று அவர்கள் எல்லோரையும் அழைத்து கொண்டு தேன்மதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்.

மறுபுறம் தேன்மதியின் அருகில் கவிகிருஷ்ணா அவளது குடும்பத்தினர் வருகையை எதிர்பார்த்தவாறே அவளது மருத்துவ குறிப்பேட்டை பார்த்து கொண்டு நின்றான்…..

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!