Katre-epilogue

Katre-epilogue

மூன்று வருடங்களுக்கு பின்னர்…

“அபி, கவி சீக்கிரமாக வாங்க கண்ணா கீழே எல்லோரும் ரொம்ப நேரமாக காத்துட்டு இருக்காங்க இல்லையா?”

“இந்த கிருஷ்ணா வேற இன்னும் சின்ன குழந்தை மாதிரி விளையாடிட்டு இருக்கான் கிருஷ்ணா! கிருஷ்ணா”
தங்கள் அறையில் பரவிக் கிடந்த பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்து கொண்டே தேன்மதி கூறி கொண்டு நிற்க தன் தோளில் தன் இரு மகள்களையும் தூக்கி வைத்து கொண்டு நடந்து வந்தான் கவிகிருஷ்ணா.

அவனது தோளில் இருந்த இரு குழந்தைகளும் உருவத்தில் ஒரே மாதிரி அச்சடித்தாற் போலவே இருந்தனர்.

“அம்மா கிட்ட போங்க” குழந்தைகள் இருவரையும் கீழே இறக்கி விட்ட படி அவன் கூற குழந்தைகள் இருவரும் புன்னகையோடு தங்கள் அன்னையின் அருகில் ஓடி சென்று நின்றனர்.

“குட் மார்னிங் ம்மா” ஒவ்வொரு வார்த்தையாக மழலை மொழியில் உச்சரித்த தன் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டவள் அவர்கள் இருவரது கன்னத்திலும் அழுத்தமாக தன் முத்தத்தை பதித்தாள்.

“அபி, கவி வாங்க கீழே போகலாம் எல்லோரும் வெயிட்டிங்” என்றவாறே தன் இரு கைகளிலும் இரு குழந்தைகளையும் தூக்கி கொண்டவன் தேன்மதியைப் பார்த்து புன்னகையோடு கண்சிமிட்டி விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றான்.

கவிகிருஷ்ணாவின் வீடு முழுவதும் பல பேர் கூடி இருக்க காயத்ரி சற்று மேடிட்ட வயிற்றோடு அந்த ஹாலின் நடுவில் இலேசான அலங்காரத்தோடு அமர்ந்து இருந்தாள்.

தன் குழந்தைகள் இருவரையும் கீழே இறக்கி விட்ட கவிகிருஷ்ணாவோ சுற்றிலும் என்ன நடக்கிறது என்று திரும்பி பார்த்தான்.

சற்று தள்ளி ராகிணியின் பின்னால் கௌசிக் ஜூஸ் நிறைந்த கிளாஸ் ஒன்றை வைத்து கொண்டு வலம் வந்து கொண்டிருக்க அதை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே அவனருகில் வந்து நின்ற கவிகிருஷ்ணா அவனது கையை பிடித்து நிறுத்தி அவனது கையில் இருந்த ஜூஸை ஒரே மிடறில் குடித்து முடித்தான்.

“அய்யோ! அண்ணா என்ன காரியம் பண்ணிட்டீங்க?” கௌசிக் சோகமாக தன் தலையில் கை வைத்து கொள்ள

அவனது கையை தட்டி விட்டவன்
“காயத்ரிக்கு வளைகாப்பு பங்ஷன் நடக்குது அதற்கு வேலை பார்க்காமல் ஒரே ஒரு ஜூஸ் கிளாஸை வைத்துட்டு ஓவரா அலப்பறை பண்ணுற” என்று கேட்க

அவனைப் பார்த்து வெட்கப்பட்டவாறே புன்னகத்து கொண்டவன்
“அய்யோ! அண்ணா! உங்களுக்கு விஷயமே புரியல அடுத்த ஐந்து மாதத்தில் வளைகாப்பு ராகிணிக்கு தானே நடக்கப் போகுது அது தான் இப்போ இருந்தே அவளை நல்லா கவனித்துட்டு வர்றேன்” என்று கூற

கவிகிருஷ்ணாவோ அதிர்ச்சியாக
“அடப்பாவி இது எப்போ? சொல்லவே இல்லை!” என்று கேட்டான்.

“பங்ஷன் முடிந்ததும் சொல்லலாம்னு இருந்தோம் பட் நீங்க அவசரப்பட்டு கேட்டுட்டீங்க” அலுத்துக் கொள்வது போல கூறிய தன் தம்பியின் தோளில் தட்டியவன்

“எனி வே கங்க்ராட்ஸ் மை டியர் பிரதர் நம்ம பரம்பரையில் அடுத்த வாரிசு வரப்போகுது” என்று கூற புன்னகையோடு தன் அண்ணனை கௌசிக் அணைத்துக் கொண்டான்.

அதன் பிறகு உறவினர்கள் ஒன்று கூட காயத்ரியின் வளைகாப்பு நிகழ்வு இனிதே ஆரம்பித்தது.

காயத்ரியின் அருகில் புன்னகையோடு நின்று கொண்டிருந்த தன் காதல் மனைவியை கவிகிருஷ்ணா காதலாக பார்த்து கொண்டு நின்றான்.

கவிகிருஷ்ணா, தேன்மதியின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து இருந்த நிலையில் கவிகிருஷ்ணாவிற்கு சென்னை ஹாஸ்பிடலில் வேலை செய்வதற்காக வழங்கி இருந்த நாட்கள் முடிந்து இருந்தது.

மீண்டும் அவன் ஊட்டி செல்வதற்காக தயாராக தேன்மதியோ தன் ஆபிஸை விட்டு எப்படி வருவது என்று புரியாமல் விழித்து கொண்டு நின்றாள்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக அரும்பாடுபட்டு நல்ல நிலையில் கொண்டு வந்த கம்பெனியை எப்படி அப்படியே விட்டு செல்வது என்று புரியாமல் அவள் தவித்து கொண்டு இருக்க மறுபுறம் கவிகிருஷ்ணாவோ தன் பிறந்த ஊரை எண்ணி ஏங்கி கொண்டு இருந்தான்.

சுரேந்திரன் மற்றும் நரசிம்மன் கம்பெனியை தாங்கள் பார்த்து கொள்வதாக கூறி இருந்தாலும் அவர்களை விட்டு பிரிந்து செல்வது ஏனோ அவளுக்கு அத்தனை சுலபமானதாக இல்லை.

அவள் மன எண்ணங்கள் புரிந்து கவிகிருஷ்ணா அரை மனதோடு சென்னையில் இருக்க சம்மதிக்க தேன்மதிக்கோ கவிகிருஷ்ணாவின் மன எண்ணங்கள் புரியாமல் இல்லை.

தனக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிக் கொண்ட கவிகிருஷ்ணாவிற்காக தன் மனதை மாற்றி கொண்டவள் அவனோடு சந்தோஷமாக ஊட்டி நோக்கி பயணித்தாள்.

ஆரம்பத்தில் ஒரு சில நேரங்களில் பழைய நினைவுகளை எண்ணி அவள் அச்சம் கொண்டாலும் கவிகிருஷ்ணாவின் காதல் அவளை மொத்தமாக மாற்றி இருந்தது.

கவிகிருஷ்ணா சொன்னது போல இருவரும் தாங்கள் ஒருவர் மீது ஒருவர் காதலை உணர்ந்து கொண்ட பின்னரே தங்கள் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தனர்.

அவர்கள் காதலின் பரிசாக அவர்கள் வாழ்க்கைக்கு கிடைத்த விலை மதிப்பற்ற பொக்கிஷமே அபிநயா மற்றும் கவிலயா என்னும் இரட்டை குழந்தைகள்.

தன் வாழ்வில் தென்றல் காற்றென வந்து எல்லையில்லா சாமரத்தை அள்ளி வீசும் தன் மனைவியை எண்ணி பெருமிதம் கொண்ட கவிகிருஷ்ணாவின் மனமோ இன்னும் இன்னும் அவளை காதல் செய்ய தூண்டியது.

இன்று தேன்மதியை அவன் பார்த்தாலும் முதல் தடவை தன்னை அவள் பார்த்து அத்தனை பேர் முன்னிலையில் அணைத்துக் கொண்டதே அவனுக்கு நினைவில் வரும்.

காயத்ரியின் வளைகாப்பு நிகழ்வு முடிந்து எல்லா உறவினர்களும் சென்று விட மீதமாக அங்கே இருந்த நபர்களும் ஆளுக்கொரு புறமாக சென்று அமர்ந்தனர்.

பெரியவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளின் மழலை பேச்சை ரசித்து மெய் மறந்து அமர்ந்து இருக்க மறுபுறம் கௌசிக் ராகிணியின் பின்னால் சுற்றி வந்து கொண்டிருந்தான்.

காயத்ரியை அவள் அறையில் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி விட்டு விட்டு வந்து அமர்ந்த தேன்மதி அத்தனை நேரம் செய்த வேலை அலுப்பு தாங்காமல் சிறிது நேரம் கண் மூடி அமர்ந்தாள்.

அப்போது அவள் நெற்றியில் இதமான ஸ்பரிசம் பட மெல்ல கண் திறந்து பார்த்தவள் தன் அருகில் புன்னகையோடு தன் நெற்றியை பிடித்து விட்டவாறு அமர்ந்திருந்த கவிகிருஷ்ணாவை கேள்வியாக நோக்கினாள்.

“வேலை செய்து ரொம்ப டயர்டா இருப்பே!” என்ற கவிகிருஷ்ணாவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டவள்

“நீங்க என் பக்கத்தில் இருந்தாலே போதும் கிருஷ்ணா எல்லா வழியும் பறந்து போயிடும்” என்று கூற அவனோ புன்னகையோடு அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“க்கும் போதும் போதும் நாங்க எல்லோரும் வந்துட்டோம்” கௌசிக் சிரித்த வண்ணம் அவர்கள் முன்னால் வந்து நிற்க வெட்கத்தோடு கவிகிருஷ்ணாவிடம் இருந்து தேன்மதி விலக போக அவனோ அவளை அசைய விடாமல் பிடித்து கொண்டான்.

“அய்யோ கிருஷ்ணா! விடுங்க எல்லோரும் வந்துட்டாங்க” வெட்கத்தால் நெளிந்து கொண்டே அவள் கூற

அவனோ
“இது என்ன அநியாயம்? என் பொண்டாட்டியை கட்டி பிடிக்க நான் யார் கிட்ட பர்மிஷன் கேட்கணும் என் பொண்டாட்டி என் உரிமை” என்றவாறு சிரித்துக் கொண்டே கூற சுற்றி நின்ற அனைவரும் அவன் சொன்னதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தனர்.

குழந்தைகளுக்கு அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் தங்கள் பெற்றோர் சிரிப்பதை சத்தம் போட்டு சிரித்துக் கொண்டவர்கள் அதே குதூகலத்துடன் தங்கள் பெற்றோர் மடியில் சென்று ஏறி அமர்ந்தனர்.

மனைவி, குழந்தைகள் சகிதம் இருந்த தன் மகனை பார்த்து ஆனந்தம் கொண்ட வேதவல்லி அவர்கள் அருகில் வந்து
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு எப்போதும் இப்படியே சிரித்து சந்தோஷமாக நீங்க எல்லோரும் இருக்கணும்” என்றவாறே கௌசிக் மற்றும் ராகிணியையும் அவர்கள் அருகில் நிற்க செய்து திருஷ்டி சுற்றி போட்டவர் இந்த சந்தோஷத்தை தந்த கடவுளுக்கு மனதார நன்றி செலுத்திக் கொண்டார்.

கௌசிக்கின் கேலியிலும், கவிகிருஷ்ணாவின் பதில் பேச்சிலும் அவர்கள் வீடே சிரிப்பு சத்தத்தில் நிறைந்து போய் இருந்தது.

எப்போதும் போல அவர்கள் சந்தோஷமாக பேசி கொண்டு இருக்க அந்த சந்தோஷத்தை பார்ப்பதற்காகவே காற்றாக கரைந்து இருந்த கவியரசனின் ஆன்மா தான் எதிர்பார்த்த விடயம் நடந்து விட்ட திருப்தியோடு காற்றோடு காற்றாக அவர்கள் எல்லோரையும் தழுவி சென்று மறைந்தது……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!