Katre-final

Katre-final

வாசலில் வாழை மரங்கள் இரண்டு கம்பீரமான காவல் காரன் போல நிமிர்ந்து நிற்க சுற்றிலும் மாவிலை தோரணங்களும், பூக்களினாலான தோரணங்களும் தேன்மதியின் வீட்டை அலங்கரித்து இருந்தது.

ஏற்கனவே அரண்மனையின் தோற்றத்தை கொண்டு கம்பீரமாக இருந்த அந்த வீடு தற்போது இந்த திருமணத்திற்கான அலங்கரித்தினால் பன்மடங்கு கம்பீரமாக தோற்றமளித்தது.

வீட்டின் வாயிலில் ராகிணி மற்றும் காயத்ரி வருவோர் எல்லோருக்கும் பன்னீர் தெளித்து இனிப்பு வழங்கி கொண்டு இருக்க மறுபுறம் கௌசிக் மும்முரமாக வேலைகளை கவனித்து கொண்டு இருந்தான்.

வீட்டின் ஹாலில் பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் அய்யர் மந்திரங்களை கூறி கொண்டு இருக்க சுரேந்திரன், நரசிம்மன், சம்யுக்தா, ஜானகி மற்றும் வேதவல்லி பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.

“மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க” என்று அய்யர் கூறவும் தான் செய்து கொண்டிருந்த வேலையை வேறோருவரிடம் கொடுத்து விட்டு படியேறி மணமகன் அறையை நோக்கி சென்றான் கௌசிக்.

கதவைத் தட்டி விட்டு உள் நுழைந்தவன் வெண்ணிற வேஷ்டி, சட்டையில் கம்பீரமான ஆண் மகனாக நின்ற தன் அண்ணனைப் பார்த்து புன்னகையோடு நெருங்கி சென்று அவன் தோள் மேல் கை வைக்க தன் தலையை கோதிக் கொண்டே அவனைப் பார்த்து புன்னகத்தான் கவிகிருஷ்ணா.

“அண்ணா செம்ம ஸ்மார்டா இருக்கீங்க ண்ணா கல்யாண மண்டபத்தில் இருக்குற பொண்ணுங்க எல்லாம் உங்களைப் பார்த்தாங்கனு வைங்க அப்படியே உங்களை அலாக்காக தூக்கிட்டு போயிடுவாங்க அப்புறம் அண்ணி சண்டை போட்டு தான் உங்களை திரும்ப கூட்டிட்டு வரணும் அதற்கு அப்புறம் உங்க கதி அதோ கதி தான்!”

“ஏன்டா ஏன்? கல்யாணத்துக்கு முதல்லே என் பொண்டாட்டியை சண்டைக்கு அனுப்ப பார்க்குற? நான் நல்லா இருந்தால் உனக்கு பொறுக்காதே!”

“அப்படி எல்லாம் இல்லை ண்ணா! இப்போ பொண்டாட்டி என்ன சொன்னாலும் அப்படியே கவிதை மாதிரி நல்லா தான் இருக்கும் போகப்போக தான் பொண்டாட்டி கவிதை சொன்னாலும் நம்மை திட்டுற மாதிரியே ஒரு பீல் ஆகும்”

“என்ன தம்பி அனுபவம் பேசுதோ? நீ என்ன தான் சொன்னாலும் சரி என் தேனு எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான்!” கண் மூடி ரசனையாக கூறிய தன் அண்ணன் தோளில் தட்டிய கௌசிக்

“ஹலோ பாஸ்! நீங்க டூயட் எல்லாம் கல்யாணம் முடிந்ததற்கு அப்புறமாக பாடுங்க இப்போ முஹூர்த்தத்திற்கு நேரம் ஆகுது வாங்க” என்றவாறே அவன் கழுத்தில் மாலையை போட்டு விட்ட படி கூற புன்னகையோடு முன்னால் நடந்து சென்றான் கவிகிருஷ்ணா.

கௌசிக்குடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்து வந்த தன் மகனை பார்த்து ஆனந்த கண்ணீரோடு நின்ற வேதவல்லியின் தோளில் ஆதரவாக கை வைத்து அழுத்தி கொடுத்த காயத்ரி
“ம்மா இந்த சின்ன விஷயத்திற்கு எல்லாம் எமோஷனல் ஆகலாமா? சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் சின்ன பாப்பா மாதிரி கண் கலங்காமல் கண்ணைத் துடைத்துட்டு சிரிங்க ம்மா” என்று கூற

புன்னகையோடு தன் கண்களை துடைத்து கொண்டவர்
“இந்த ஒரு தருணத்திற்காக தானே இத்தனை வருஷமாக காத்து இருந்தேன் காயத்ரி கிருஷ்ணாவை இப்படி சந்தோஷமாக பார்க்கணும்னு தான் இத்தனை நாளாக நான் கடவுள் கிட்ட தினமும் வேண்டிக்கிட்டு இருந்தேன் இப்போ இதை கண் கூடாக பார்த்ததும் சந்தோஷத்தில் கண் கலங்கிடுச்சு” எனவும் அவர் தோளில் காயத்ரி புன்னகையோடு சாய்ந்து கொண்டாள்.

அய்யர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொல்லி கொண்டு இருந்த கவிகிருஷ்ணாவோ மனதிற்குள் தன் மனம் கவர்ந்தவளைப் பார்க்கும் அந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருந்தான்.

“பொண்ணை கூட்டிட்டு வாங்க” என்று அய்யர் கூறவும் தேன்மதி வரும் வழியை ஆவலுடன் திரும்பி பார்த்தவன் ஜானகி மற்றும் சம்யுக்தாவின் நடுவில் நாணத்தோடு தலை குனிந்து முகத்தில் தவழ்ந்த புன்னகையோடு வந்தவளைப் பார்த்து சொக்கிப் போய் அமர்ந்திருந்தான்.

“அண்ணா போதும் ண்ணா அப்படியே அண்ணியை பார்த்துட்டு இருந்தால் மீதி சடங்குகளை எல்லாம் யாரு செய்யுறது?” கவிகிருஷ்ணா அருகில் குனிந்து அவனது முகத்தை துடைத்து விடுவது போல அவன் காதில் மெல்லமாக கேட்ட கௌசிக்கைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகத்து கொண்டவன் மற்ற சடங்குகளை கவனிக்க தொடங்கினான்.

சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகை பார்டரும் அதே நிற வேலைப்பாடுகளும் நிறைந்து இருந்த பட்டு சேலை அணிந்து ஒற்றை ஜடை பின்னல் அசைந்தாட தான் அணிந்து இருந்த தங்க ஆபரணங்களின் ஜொலிப்பையும் மிஞ்சும் ஜொலிப்போடு நடந்து சென்ற தேன்மதி நாணத்தோடு கவிகிருஷ்ணாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

யாரும் பார்க்காத நேரங்களில் அவ்வப்போது கவிகிருஷ்ணாவின் கரங்கள் அவள் இடையை உரசி செல்ல வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களை நேர் கொண்டு காண முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.

சடங்குகளை முடித்து விட்டு அய்யர் தாலியை நீட்ட அதை வாங்கி தன் மனதை கொள்ளை கொண்ட அந்த கன்னியவளின் சங்கு கழுத்தில் கட்டியவன் யாரும் எதிர்பார்க்காத நேரம் அவள் கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டு விட தேன்மதியோ அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்தாள்.

சூழ நின்ற அனைவரும் அவர்கள் இருவரையும் கேலி செய்ய வெட்கத்தோடு கவிகிருஷ்ணாவின் தோளில் சாய்ந்து கொண்டவள் ஒரு சில மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தாள்.

கவிகிருஷ்ணா மயக்கத்தில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவள் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த பின்பும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.

கடைசியாக கவியரசன் தன்னிடம் கூறிய அதே வார்த்தைகளை இன்று கவிகிருஷ்ணா கூறியதை ஏனோ அவளால் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

மறுபடியும் ஒரு இழப்பை தாங்கும் சக்தி அவள் மனதிலும் இல்லை, உடலிலும் இல்லை.

கவிகிருஷ்ணா அந்த வார்த்தைகளை என்ன எண்ணத்தோடு கூறினான் என்று அவளுக்கு தெரியாது ஆனால் அந்த வார்த்தைகளில் ஏதோ ஒரு உள் அர்த்தம் இருக்கிறது என்று அவள் மனம் விடாமல் நம்பியது.

அவனது தலையில் ஏற்பட்ட காயம் சிறிது தான் அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் வந்து கூறும் வரை தேன்மதியின் உயிர் அவள் வசம் இல்லை.

“கிருஷ்ணா இஸ் ஆல்ரைட் தேன்மதி” விருத்தாசலம் கூறி முடித்த அடுத்த கணமே தன் அருகில் நின்ற சுரேந்திரன் மேல் தேன்மதி சாய்ந்து கதறி அழ தன் மகளது மனப்போராட்டத்தை எண்ணி அவரது கண்களும் சிறிது கலங்கவே செய்தது.

ஒரு வாரத்திற்கு பின் கவிகிருஷ்ணா இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க தேன்மதி மாத்திரம் எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையுடனே வலம் வந்து கொண்டிருந்தாள்.

சகஜமாக பேசுவது போல் அவள் தன்னை காட்டி கொண்டாலும் அவளது மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது என்பதை கவிகிருஷ்ணா அறியாமல் இல்லை.

ஒரு சில நாட்களாக அவளை கவனித்து வந்தவன் அன்று இதை பற்றி அவளோடு பேசி விட வேண்டும் என்று எண்ணத்தோடு அவள் வீடு நோக்கி சென்றான்.

தன் அறை பால்கனியில் ஏதோ ஒரு சிந்தனையில் நின்று கொண்டிருந்தவளை நெருங்கி சென்றவன்
“தேனு!” என்றவாறே அவள் தோள் மேல் கை வைக்க திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் அங்கு கவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் அதிர்ச்சியாக அவனை நோக்கினாள்.

“ஸாரி ஸாரி தேனு! பயந்துட்டியா?”

“ஆஹ் இல்லை! இல்லை!”

“என்னாச்சு தேனு உனக்கு? கொஞ்ச நாளாகவே நீ ஏதோ ஒரு யோசனையோடே இருக்க சரியா யார் கூடவும் பேச மாட்டேங்குற அன்னைக்கு கடைசியாக ஆபிஸில் வைத்து பேசும் போது நல்லா தானே பேசுன அதற்கு அப்புறம் என்ன ஆச்சு உனக்கு? ஏன் இந்த திடீர் மாற்றம்?”

“……”

“தேனு இப்படி அமைதியாக இருக்குறதால பிரச்சினை இல்லாமல் போகாது இன்னும் அதிகம் தான் ஆகும்”

“இல்லை கிருஷ்ணா பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை நான் உங்க கிட்ட ஆல்ரெடி டைம் கேட்டுத் தானே இருந்தேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ் அவ்வளவு தான்”

“என்னை பார்த்து சொல்லு தேன்மதி உனக்கு எந்த பிரச்சினையும் இல்லைன்னு”
அவள் முகத்தை தன் புறமாக நிமிர்த்திய வண்ணம் அவன் கேட்க அவன் கைகளை தட்டி விட்டவள் மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

“அப்போ ஏதோ பிரச்சினை இருக்கு அப்படி தானே?”

“கிருஷ்ணா ப்ளீஸ் இங்கே இருந்து போங்க என்னை தனியா விடுங்க ப்ளீஸ் நான் உங்களுக்கு வேண்டாம் ப்ளீஸ் போங்க”
முகத்தை மூடி கொண்டு அழுதவள் கைகளை விலக்கி அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்

“என்ன ஆச்சு தேனுமா சொல்லு?”
எனவும்

“கிருஷ்ணா!” என்றவாறே அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் விசும்பியபடி நின்றாள்.

“தேனு இங்க பாரு மா என்ன டா ஆச்சு உனக்கு சொல்லு?” தேன்மதியின் முகம் நிமிர்த்தி கவிகிருஷ்ணா கேட்க

தன் கண்களை துடைத்து கொண்டே அவனைப் பார்த்தவள்
“அன்னைக்கு ஆம்புலன்சில் ஹாஸ்பிடல் போகும் போது நீங்க கடைசியாக என் கிட்ட என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?” என்று கேட்க சிறிது நேரம் யோசித்து பார்த்தவன் இல்லை என்று தலை அசைத்தான்.

அவன் கடைசியாக கூறிய வசனங்களை அவனிடம் கூறியவள்
“இது கடைசியாக கவி மலையில் இருந்து விழும் போது என்னை பார்த்து சொன்னது”

“என்ன?”

“ஆமா கிருஷ்ணா அதை கேட்டதில் இருந்து நான் நானாக இல்லை  என்னால தானே எல்லா பிரச்சனையும் என்கிற குற்ற உணர்ச்சி என் மனதில் ஓடிட்டே இருக்கு என்னால தானே கவி அந்த மலையில் இருந்து விழுந்தான் அன்னைக்கு என்னை காப்பாற்ற போய் தானே உங்களுக்கு அடிபட்டது என்னால உங்க லைஃப் பாழாகிடக் கூடாது கிருஷ்ணா அதனால தான் சொல்றேன் நீங்க என்னை விட்டு போயிடுங்க”

“ஓஹ்!சரி நான் போறேன்! நான் போயிட்டா  நீ சந்தோஷமாக இருப்பியா சொல்லு?”

“…..”

“பதில் சொல்லு தேனு இருப்பியா?”

“எனக்கு தெரியல கிருஷ்ணா ஆனா நான் உங்க லைஃப்ல வந்தால் நிச்சயமாக உங்களுக்கு நிம்மதி கிடைக்காது என் பயமே உங்க வாழ்க்கையை இல்லாமல் ஆக்கிடும்”

“நீ இல்லாத லைஃப் தான் டி எனக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை பிரச்சினை இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை நீ என்னை விட்டு பிரிந்து தினம் தினம் அதை நினைத்து நினைத்தே  என் உயிர் போறதை விட அன்னைக்கு அந்த ஆக்சிடெண்ட் ஆன போதே என் உயிர் போய் இருக்கலாம்”

“கிருஷ்ணா!” அதிர்ச்சியாக அவன் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலை அசைத்தவள்

“ஏன் கிருஷ்ணா இப்படி எல்லாம் பேசுறீங்க?
நீங்க நல்லா இருக்கணும்னு தானே நான் விலகி போறதாக சொல்றேன்”

“இதோ பாரு தேனு உன் மனதில் இருக்கும் குழப்பம் தேவையில்லாதது இப்போ என்ன அந்த வசனங்கள் தானே உன் குழப்பத்திற்கு காரணம் சரி நீ சொல்ற படி பார்ப்போம் கவியரசன் கடைசியாக உன் கிட்ட சொன்ன வசனங்கள் உண்மை தான் அது தான் இப்போ உன்னையும், என்னையும் இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்து இருக்கு”

“என்ன உளறல் இது?”

“இது உளறல் இல்லை தேனு நிதர்சனம் எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்னு அன்னைக்கு சொன்னது ஒரு நாளும் பொய் ஆகாது அது நூறு சதவீதம்  உண்மை இல்லைனே எதற்கு கவியரசன் மாதிரியே நான் இருக்கணும்? உன் முன்னால் என்னை கொண்டு வரணும்? உன் மேல எனக்கு காதல் வரணும்? நீயும் எதற்காக எனக்காக ஏங்கணும்? அதை யோசித்து பார்த்தியா? இத்தனை வருஷமாக ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் இல்லாத நாம எதற்காக அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கணும்? இது எல்லாவற்றையும் விட மேல என் பெயர் கூட கவிகிருஷ்ணாவாக ஏன் இருக்கணும்? வேறு ஏதாவது பெயராக இருந்து இருக்கலாமே?” கவிகிருஷ்ணா ஒவ்வொரு விடயங்களாக கூற கூற தேன்மதியும் ஒவ்வொரு விடயங்களை பற்றியும் சிந்தித்து பார்க்க தொடங்கினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் கூறியதன் அர்த்தங்கள் எல்லாம் அப்போது தான் அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

“இது தான் நடக்கணும்னு ஏற்கனவே எழுதப்பட்டது தேன்மதி அதை யாராலும் மாற்ற முடியாது உன் மனசை நீயாக தான் கன்பியுஸ் பண்ணுற இப்போ நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் உனக்கு பதில் எப்போ புரியுதோ அப்போ என்னை தேடி வா அப்போவும் உனக்காக நான் காத்துட்டு தான் இருப்பேன் கவிகிருஷ்ணாவாக! நான் வர்றேன்” திரும்பி கவிகிருஷ்ணா நடந்து செல்ல

“கிருஷ்ணா!” என்று கூவலோடு அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டவள்

“கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று மட்டுமே கூறி கொண்டு நின்றாள்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது முகத்தில் தெரிந்த கலக்கத்தையும், பரிதவிப்பையும் கண்டு மேலும் அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.

“எனக்கு அடிக்கடி என்ன பண்ணுறதுனு தெரியாமல் என்ன பேசுறதுனு தெரியாமல் இப்படி எல்லாம் பண்ணிடுறேன் கிருஷ்ணா என் மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் இல்லாமல் போகுமானு எனக்கு தெரியல ஆனா நீங்க இல்லாமல் என்னால இருக்க முடியாது கிருஷ்ணா”
அப்போதும் அவன் முகம் தெளியாமல் இருக்கவே

மேலும் அவன் மேல் நன்றாக சாய்ந்து கொண்டு
“நீங்க ஒவ்வொரு விடயமாக எனக்கு எடுத்து சொல்லும் போது அதோட உண்மை நிலை எனக்கு புரியுது எனக்கு எடுத்து சொல்ல ஆள் இருந்தால் நான் கண்டிப்பாக புரிஞ்சுப்பேன் கிருஷ்ணா” என்று கூறவும்

“ஆமா சொன்ன உடனே கேட்டுடப் போற! அரசியல் மீட்டிங் மாதிரி தொண்டை தண்ணீர் வற்ற பேசுனால் தான் கொஞ்சமாகவாது பல்பு எரியுது” கவிகிருஷ்ணா முணுமுணுத்துக் கொண்டே கூற அவன் கூறியதை கேட்டு புன்னகத்து கொண்டவள் அவன் கன்னத்தில் சட்டென்று எம்பி தன் இதழ் பதித்தாள்.

“எங்க நீங்களும் என்னை விட்டு போயிடுவீங்களோனு பயந்து தான் நான் விலகி இருந்து உங்களை பார்த்துட்டே இருக்கலாம்னு நினைத்து இதெல்லாம் பண்ணுணேன் ஆனா எங்கே இருந்தாலும் உங்க காதல் என்னை உங்க கூட சேர்த்து வைத்துடும்னு இப்போ எனக்கு நல்லாவே புரிஞ்சுடுச்சு கிருஷ்ணா”

“உனக்கு புரிஞ்சாலே எல்லோருக்கும் புரிந்த மாதிரி தான்!”

“கிருஷ்ணா” செல்லமாக அவன் தோளில் தட்டியவள்

அவன் கண்களைப் பார்த்து கொண்டே
“கிருஷ் ஐ லவ் யூ சோ மச்! இப்போவும் அப்போவும் எப்போவும்” என்று கூற கவிகிருஷ்ணாவோ புன்னகையோடு அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“மதி! மதி! மெட்டி போடணும் எழுந்துரிச்சு நில்லு மா” ஜானகி தேன்மதியின் தோளில் தட்டவுமே பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டு கொண்டவள் சுற்றிலும் திரும்பி பார்க்க அங்கே எல்லோரும் அவளையே விநோதமாக பார்த்து கொண்டு நின்றனர்.

“என்ன அண்ணி இப்போவே கனவில் டூயட்டா?” காயத்ரி கண்ணடித்தவாறே தேன்மதியைப் பார்த்து கேட்க வெட்கத்தோடு கவிகிருஷ்ணாவைப் பார்த்தவள் அதன் பிறகு அதே சந்தோஷ மனநிலையோடு எல்லா சடங்குகளையும் செய்து முடித்தாள்.

மாலை நேரம் ரிசப்ஷனும் நிறைவாக முடிந்து விட பெரியவர்கள் எல்லோரும் இந்த சந்தோஷம் எப்போதும் நீடிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டனர்.

இரவு நேரம் தங்கள் அறை பால்கனியில் கவிகிருஷ்ணா நின்று கொண்டிருக்க அவன் கை வளைவுக்குள் வெட்கத்தோடு அவன் மேல் சாய்ந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள் தேன்மதி.

மெல்லிய காற்று அந்த இடத்தை சுற்றிலும் வீசிக் கொண்டிருக்க அந்த ஏகாந்தமான சூழ்நிலையை அவர்கள் இருவரும் கண் மூடி ரசித்து கொண்டு நின்றனர்.

“தேனு!” ஆசையாக ஒலித்த கவிகிருஷ்ணாவின் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கேள்வியாக புருவம் உயர்த்த

அவள் இரு விழிகளிலும் தன் இதழ் பதித்தவன்
“உன்னை முதல் முதலாக பார்த்த போதே என் மனதை பறி கொடுத்துட்டேன் ஆனா அதை உணர எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவைப்பட்டது அதே மாதிரி நீ உன் மனதை எப்போ முழுமையாக உணர்ந்து கொள்றியோ அப்போ நம்ம வாழ்க்கையை நாம ஆரம்பித்து கொள்ளலாம் சரியா?” என்று கேட்க கண்கள் கலங்க அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள் தேன்மதி.

“கிருஷ்ணா நான் மனதில் நினைத்து இருந்தது உங்களுக்கு எப்படி?”

“எப்படி எனக்கு தெரியும்னு கேட்குறியா? உன் மனதில் நினைக்கும் எல்லா விடயங்களையும்
என்னால கண்டு பிடிக்க முடியலனாலும் அப்போ அப்போ இந்த குட்டி மூளை என்ன யோசிக்கும்னு எனக்கு புரியும் முதல்ல ஒருத்தரை ஒருத்தர் நல்லா காதல் பண்ணலாம் ஓகே வா?” புன்னகையோடு கேட்ட கவிகிருஷ்ணாவின் கன்னத்தில் இதழ் பதித்தவள் சந்தோஷமாக அவன் மார்பில் சாய்ந்து கண் மூடி கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து கவிகிருஷ்ணாவும், தேன்மதியும் அவர்கள் அறையின் உள்ளே சென்று விட அவர்கள் இருவரையும் எப்போதும் போல வருடிச் செல்லும் அந்த இதமான காற்று இன்று போல என்றும் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தோடு ஜன்னல் வழியே வந்து அவர்களை வருடிச் சென்றது……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!