Katre-Pre final

Katre-Pre final

என் சுவாசம் 21

சுடும் பாலை மணலில் தூக்கி வீசப்பட்ட கோழிக் குஞ்சு போல, கதிரின் மனம் துள்ளித் துடித்துக் கொண்டிருந்தது. காட்டு மன்னார் குடியில் இருந்து கடலூர் வந்து சேரும் வரை, ஆயிரம் முறையாவது அவளது அலைபேசிக்கு அழைத்துப் பார்த்திருப்பான். 

பதிவு செய்யப்பட்டக் குரலே மீண்டும் மீண்டும் ஒலித்து, அவனை நிலைகுலைய வைத்தது.  பயமென்றால் என்னவென்றே அறியாதவனுக்கு, ஏதேதோ எண்ணங்கள் குழப்பியடிக்க  உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது. 

அவள் தனது புரபசர் ஏதோ ஒரு வீட்டினுள் நுழைவதைக் கூறியதும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் பேசியதே செவியில் எதிரொலித்தது.   அது மட்டுமல்லாமல் அந்த ஜெயக்கொடியின் வீடு அந்த ஏரியாவில் கிடையாது.   அந்த ரோட்டில் எம்எல்ஏ குமாருக்கு   கெஸ்ட்ஹவுஸ் இருக்கிறது. 

மனதிற்குள் கணக்குப் போட்டவன், அங்கே சட்ட விரோதமாக ஏதோ நடக்கிறது என்று உறுதி செய்து, அவளை அங்கிருந்து போகச் சொல்லிவிட்டு, உடனே ஸ்ரீதருக்குதான் ஃபோன் போட்டான்.  

இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் வரச் சொன்னதால், அவனைச் சென்று சந்தித்திருந்தான் கதிர்.  

கதிர்…  அன்னைக்குச் சொன்னேன் இல்ல…   வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தி பிணையக் கைதியா வச்சிகிட்டு, அவங்க உறவினர்கள்கிட்ட பணம் பறிக்கிறாங்கன்னு.  இந்த முறை   கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு.  

நார்வேல இருந்து வயதான தம்பதிகள் மருத்துவ சிகிச்சைக்காக, நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருக்காங்க.  அவங்க இங்க வந்து சேர்ந்ததுக்கான எவிடன்ஸ் இருக்கு.  

ஆனா அவங்க அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்குப் போகலை.  பேரண்ட்ஸ் கிட்டயிருந்து எந்தத் தகவலும் வராததால  அவங்க பையன் உடனடியா நார்வே போலீசைத் தொடர்பு கொண்டு கம்ப்ளெயிண்ட்  செய்திருக்கார். 

நார்வே காவல்துறைஇந்தியத் தூதரகம் மூலமா இந்திய உள்துறை அமைச்சரைத்  தொடர்பு கொண்டு, வயதான தம்பதிகள் தமிழ்நாட்டுல காணாமப் போனதைச் சொல்லி  உதவி கேட்டிருக்காங்க. 

மத்திய உள்துறை அமைச்சர், நேரடியா தமிழக முதல்வர்கிட்ட இந்த விவகாரத்தை எடுத்துட்டுப் போயிருக்காங்க. முதல்வரோட நேரடி கண்காணிப்பில்  தனிப்படை அமைத்து, ரகசியமா தேடிகிட்டு இருக்கிறோம். 

நாங்க  ஏர்போர்ட்ல சிசிடீவி கேமராவை செக் பண்ணதுல, அவங்க ஒரு டிராவல்ஸ் கார்ல ஏறிப் போறாங்க.  ஆனா அது போலி வண்டி. 

 அவங்களைப் பிக்கப் பண்ண வந்தவனோட ஃபோட்டோதான் இதுவரை கிடைச்சிருக்கற ஒரே ஒரு எவிடன்ஸ்.  ஆனா, அது பழைய குற்றவாளிகளோட மேட்ச் ஆகல. அவங்களோட மொபைல் ஃபோன் லக்கேஜ் எல்லாம், சென்னை செம்பரம்பாக்கம் ஏரிகிட்ட கிடைச்சிருக்கு. 

அவங்க பையனை ஃபோன்ல பணம் கேட்டு மிரட்டியிருக்காங்கஅவங்க அநேகமா சாட்டிலைட் ஃபோன்ல பேசியிருக்கலாம்.  அதனால லொகேஷன் இதுவரை கண்டுபிடிக்க முடியலை.    அந்த பிராசஸ் போயிட்டு இருக்கு. 

ஏற்கனவே மூன்று முறையும் கடத்தல் கடலூர் மாவட்டத்துல நடந்ததால, இப்பவும் இங்கதான் இருக்கனும்னு விடாம தேடுதல் வேட்டை நடத்திகிட்டு இருக்கோம்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கற பில்டிங், குடோன்,  லாட்ஜ்னு ஒரு இடத்தைக் கூட விடாம தேடிகிட்டு இருக்கிறோம். பணத்தை  அக்கவுண்ட்டில் போட இன்னும் இரண்டு நாட்கள் டைம் குடுத்திருக்கிறானுங்க.   அதுக்குள்ள கண்டு பிடிச்சிடனும்.

ஸ்ரீதர் கூறியதை மனதில் எண்ணியபடி, அவனுக்கு அழைத்து   தன்னுடைய சந்தேகத்தைக் கூறி, சிவரஞ்சனி கூறிய ரோட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், சோதனை செய்து  பார்க்கும்படி கூறினான். தான் பண்ருட்டி அருகே இருப்பதாகக் கூறிய ஸ்ரீதர்கடலூர் வந்ததும் உடனே சென்று பார்ப்பதாகக் கூறினான். 

அவனிடம் பேசிவிட்டு அலைபேசியை அணைத்த வேகத்திற்கு, வந்து விழுந்த புகைப்படங்களையும் காணொளிக் காட்சியையும் பார்த்தவன் வெகுவாக   அதிர்ந்து போனான்.

  சிவரஞ்சனியின் அலைபேசியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்களில்  இருப்பவர்கள்மூன்று   நாட்களாக ஸ்ரீதர் தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளிகள் என்பதை அறிந்ததும் ஆடிப் போனான்.  அவள் இவ்வளவு தைரியமாக உள்ளே சென்று படம் பிடிப்பாள் என்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. 

அவள் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள்,  தான் அந்த வீட்டினுள் ஏதோ சரியில்லை என்று கூறியதும்  பயந்து அங்கிருந்து சென்றிருப்பாள் என்று நினைக்க,   அந்த வீட்டினுள் சென்றது மட்டுமல்லாமல், புகைப்படங்களையும் காணொளிக் காட்சியையும் எடுத்து அனுப்புவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

மனதிற்குள் அவளை  வெகுவாக கடிந்து கொண்டவன்,  அவளுக்கு அழைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தான்.  தான் அழைக்கப் போய் அவள் அந்த இடத்தில் இன்னும் இருந்தால் மாட்டிக் கொள்வாளே என்ற தயக்கத்தில் தத்தளித்தவன்,  சிறிது நேரம் கழித்தே அழைத்துப் பார்த்தான். 

அவளது ஃபோன் அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்ற பதிவு  செய்யப்பட்டக் குரலே மீண்டும் மீண்டும் வரவும்,  நொடி கூட தாமதிக்காமல் கிளம்பி விட்டான்.  காரில் செல்லும் போதே, தனக்கு வந்த அத்தனை புகைப்படங்களையும்  காணொளிக் காட்சியையும் உடனடியாக ஸ்ரீதருக்கு அனுப்பியவன்,  அவனுக்கு அழைத்தான்.  

கதிர்…   ஃப்ரூட் ஃபுல் எவிடன்ஸ்…   எங்க கிடைச்சது?  எப்படிக் கிடைச்சது?”   அலைபேசியை எடுத்ததும் நிற்காமல் பேசிய ஸ்ரீதரை இடைமறித்தவன், 

கடலூர் போக உனக்கு எவ்வளவு நேரமாகும்?”

ஒரு ஃபார்ட்டி ஃபைவ் மினிட்ஸ்ல போயிடுவேன்.

உடனே போ ஸ்ரீதர்.  சிவரஞ்சனிதான் இந்த ஃபோட்டோஸ் வீடியோஸ் எடுத்து அனுப்பியிருக்கா.  அவ ஃபோன் ரீச் ஆக மாட்டேங்குது.  என்ன ஆச்சுன்னே தெரியல.  நானும் கிளம்பி வந்துகிட்டு இருக்கேன்.

அவனுடைய குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு கொண்ட ஸ்ரீதர்,  “கதிர்…  பதட்டப் படாதடா.  நான் உடனே அந்த ஸ்பாட்டுக்கு காப்ஸை அனுப்புறேன். பத்து  நிமிஷத்துல போயிடுவாங்க அவங்க. ஃபுல்லா  ரவுண்டப் பண்ணிடுவாங்க, ஒன்னும் ஆகாது. சிவரஞ்சனி  ஸேப்பாதான் இருப்பாங்க.  நீ பதட்டப் படாம வண்டியை ஓட்டிட்டு வா.

சரி என்றபடி அலைபேசியை அணைத்தவனின் மனது ஏனோ சமாதானப்பட மறுத்தது.  உடனே ஸ்டீபனுக்கு அழைத்தவன், ஸ்டீபன், இப்ப நீ எங்க இருக்க?

படகுத் துறையிலதான் இருக்கேன் ண்ணா.  ஏன் ண்ணா?  என்ன ஆச்சு?கதிரின் குரலில் இருந்த பதட்டம் அவனையும் தொற்றிக் கொண்டது

சிவரஞ்சனி இருக்கும் இடத்தைச் சொன்னவன், உடனடியாக ஸ்டீபனை அங்கு போகச் சொன்னான். 

எவ்வளவு நேரம் ஆகும் நீ அங்க போக?  சிவா அங்க ஏதோ பிரச்சனைல இருக்காடா.  நானும் வந்துகிட்டே இருக்கேன்.

அதிகபட்சம் பத்து நிமிஷத்துல போய்டுவேன் ண்ணா.  இதோ உடனே கிளம்பிட்டேன்.

தனியா போகாத…  நம்ம ஆளுங்க யாரையாவது கூட்டிட்டு போ.

ம்ம்…  சரிண்ணா.  ஜெகா  இங்கதான் இருக்கான்.   நம்ம பசங்களும் இருக்கானுங்க.  நாங்க உடனே அங்க போறோம்.  போய் பார்த்துட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்.  நீங்க பதட்டப்படாம வாங்க.

பதட்டத்தில் ராகவன் வாசுகி அழகர் ஒருவரும் நினைவுக்கு வரவில்லை அவனுக்கு.  அழகர்தான்   அவனை அலைபேசியில் அழைத்தார். 

என்னப்பா தனியா கிளம்பிட்ட?  வாசுகிக்கு தெரிஞ்சா சத்தம் போடும்.  கல்யாண நெருக்கத்துல உன்னைத் தனியா விடக்கூடாதுன்னு சொல்லுச்சி.

ஒன்னும் இல்ல மாமா.  கொஞ்ச நேரத்துல நாங்க வந்துடுவோம்.  அக்காகிட்ட எதுவும் சொல்ல வேணாம்.”  

அவனது குரலில் தென்பட்ட தவிப்பும் பதட்டமும் அழகரை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

 “என்ன மாப்ள?  என்ன ஆச்சு?  ஏன் ஒருமாதிரியா பேசற?

ஒன்னும் இல்ல மாமா.  கொஞ்ச நேரத்துல நானே ஃபோன் போடுறேன் உங்களுக்கு.

அலைபேசியை அணைத்தவன் புயல் வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.  மனமோ விடாமல் சிவரஞ்சனி நலமுடன் இருக்க வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தது.  அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் தானும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. 

நொடிக்கொரு முறை அலைபேசியைப் பார்த்துக் கொண்டான், ஏதேனும் செய்தி வருகிறதா என்று. அவளுக்கு என்னவாயிற்றோ’ மனதுக்குள் ஆற்றாமை தாங்க முடியவில்லை  அவனால்.  

உன்னை யாருடி அந்த வீட்டுக்குள்ள போகச் சொன்னா?”  தனக்குள் புலம்பிக் கொண்டான்.  சிவா சிவா என்று மனது  கிடந்து அடித்துக் கொண்டது. 

மனித மனம் விசித்திரமானது.  ஒரு நொடியில்  ஆயிரம் எண்ணங்களைக் கடத்தக் கூடியது.  அதுவும் பதட்டமான சூழ்நிலையில்   நமது மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு, அவ்வளவு எளிதில் கடிவாளம் போட முடியாது நம்மால்.  

கதிரின் மனமும் அவ்வாறே அலை பாய்ந்தது.  ஏதேதோ எண்ணங்கள் முட்டி மோதியது.  கடலுக்குள் விழுந்து தத்தளித்தவளின் முகமே, மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அலைகழித்தது. அவளை மீண்டும் ஒரு முறை பார்க்கும் வரை, இந்த சித்ரவதை தீராது என்பதை நன்கு  புரிந்து கொண்டான். 

முடிந்த வரை வாகனத்தை விரைவாகச் செலுத்தியவனின் அலைபேசி இசைத்தது.   ஸ்டீபன் அழைத்திருந்தான்.   இணைப்பை ஏற்றவன், 

என்னாச்சு ஸ்டீபன்?  அங்க போயிட்டியா? சிவா இருக்காளா அங்க?

அண்ணா…  நீங்க சொன்ன ரோட்டுக்கு வந்துட்டோம்.  போலீசும் வந்திருக்காங்க ண்ணா.  நிறைய பேரை அரெஸ்ட் பண்றாங்க. ஆனா அண்ணி இங்க இல்லண்ணா. ஒருவேளை காலேஜுக்குப் போயிருப்பாங்களோ?  நான் அங்க போய் பார்க்கட்டுமா?

இல்லடா…  காலேஜ்க்குப் போயிருந்தா என்னைக் காண்டாக்ட் பண்ணியிருப்பா. அவ அங்கதான் எங்கயோ இருக்கனும்.   கொஞ்சம் தேடு ஸ்டீபன்.”  குரல் பதட்டத்தோடு கெஞ்சியது. 

அண்ணாஎன்னண்ணாநீ போய் கெஞ்சிகிட்டுநீ பதட்டப் படாம வா. நாங்க இந்த ஏரியா முழுக்கத்  தேடுறோம்.

அலைபேசியை அணைத்தவன்,  ‘ஒரு வேளை ஸ்டீபன் சொல்ற மாதிரி காலேஜ் போயிருப்பாளோ…  அப்ப அவ ஃபோன் ஏன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கு?’  மனம் ஒருநிலையில் இல்லாமல் யோசிக்க உடனடியாக தீனதயாளனுக்கு அழைத்தான். 

தீனதயாளன்காலேஜ்ல சிவரஞ்சனி இருக்காளான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.

என்னாச்சு கதிர்? ஏதும் பிரச்சனையா?

இல்லைஒன்னும் இல்லை.  அவ இருக்காளான்னு மட்டும் பார்த்துச் சொல்லுங்க.

அடுத்த பத்து நிமிடத்தில், அவள் கல்லூரியில் இல்லை என்ற செய்தி அவனை வந்தடைந்தது.   அடுத்த சிறிது நேரத்தில், ஸ்ரீதரும் தொடர்பு கொண்டு ஸ்பாட்டுக்கு சென்று விட்டதாகவும், சிவரஞ்சனியைக் காணவில்லை என்றும் கூற நொந்து போனான்

எங்கடிப் போன?”  கண்களோரம் கசிந்தது.  மனம் பதைபதைக்க அடுத்த  இருபது நிமிடத்தில் கடலூரை வந்தடைந்தவனை அந்த சாலையின் ஆரம்பத்திலேயே எதிர் கொண்டான் ஸ்ரீதர். 

உடை கூட மாற்றாமல் ஓய்வெடுக்கப் போட்டிருந்த பெர்முடாஸும் பனியனுமாக,  முகத்தில் பயத்தையும் பதட்டத்தையும் ஏந்தி,  வியர்த்து விறுவிறுத்து வந்து இறங்கிய கதிரைக் கண்ட ஸ்ரீதருக்கும் மனம் பதைபதைத்தது 

கதிர்…  இது ஒரே நேரான ரோடுதான்.  சின்ன வளைவுகள் இருந்தாலும், அதுவும் வளைஞ்சு மறுபடியும் இந்த ரோட்டுலதான் முடியுது.  ஒன்னு சிவரஞ்சனி நேரா காலேஜ்க்கு போயிருக்கனும், இல்லையா இந்தப் பக்கம் மெயின் ரோட்டுக்குப் போயிருக்கனும்.  இங்க இல்லைடா.

சுற்றுப்புறத்தை அளந்தது கதிரின் விழிகள். ஸ்ரீதர் சொல்வது போல அந்த சாலையில் பிரிவுகள் அவ்வளவாக இல்லை.  இருந்த ஒரு வளைவும் மீண்டும் அதே சாலையில், அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு சற்று அருகாமையில் முடிந்தது. 

அந்த பட்டப் பகலிலும் அவ்வளவு களேபரத்திலும் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இன்றி, ஒருசில மனிதத் தலைகளே அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டது.  தூரத்தில் ஸ்டீபனும் ஜெகாவும் அவர்களது நண்பர்களுமாக நான்கைந்து பேர் நின்றிருந்தனர். காவல் துறையினர் ஒரு சிலரும் நின்றிருந்தனர்.  

அது மட்டுமில்ல இங்க   அந்த எம்எல்ஏ குமாருக்கு  சொந்தமான கெஸ்ட்ஹவுஸ்ல இருந்து, அந்த லேடி புரபசரோட சேர்த்து மொத்தம் நாலு பேர அரெஸ்ட் பண்ணியிருக்கோம். அந்த லேடி அவ புருஷன் அப்புறம் ரெண்டு பேர் இருந்தானுங்க.

அந்த லேடிய தவிர்த்து, அவனுங்க மூனு பேருமே சிவரஞ்சனி ஃபோட்டோ எடுக்கறத பார்த்ததும் துரத்தியிருக்கானுங்க.   

ஆனா சிவரஞ்சனி அவங்களோட ஃபோனத் தூக்கிப் போட்டுட்டு ஓடியிருக்காங்க.   ஃபோன் தரையில விழுந்து நொறுங்கிப் போயிருக்குது. 

இவனுங்களும் ஃபோனை எடுத்து செக் பண்ணிப் பார்க்க ட்ரை பண்ணிட்டுஅப்புறம் சுதாரிச்சு அவங்களைத் தேடியிருக்காங்க.  ஆனா அவங்க எங்க போனாங்கன்னு  தெரியலைன்னு சொல்றானுங்க. 

 நான் நல்லா விசாரிச்சிட்டேன் கதிர். அவனுங்க அவங்களைத் தேடிகிட்டு இருக்கும் போதே இங்க போலீஸ் வந்துடுச்சி.  கண்டிப்பா அவங்க தப்பிச்சி போயிருப்பாங்க.”  என்றபடி உடைந்து நொறுங்கிய சிவரஞ்சனியின் அலைபேசியை, கதிரிடம் கொடுத்தான் ஸ்ரீதர். 

இல்ல ஸ்ரீதர்…  அவ காலேஜ்க்குப் போகலை.  நான் விசாரிச்சிட்டேன்.  மெயின் ரோட்டுக்குப் போயிருந்தாலும்9 இந்நேரம் எனக்கு ஃபோனப் போட்டிருப்பா.  அவ  பயந்த சுபாவம் கொண்டவடா. பயந்து போய் இங்கதான் எங்கயோ இருக்கா. அந்த குமாரோட வீட்டுக்குள்ள செக் பண்ணிட்டீங்களா?

அந்த வீட்டுக்குள்ள முழுக்க செக் பண்ணிட்டோம் கதிர்.  அந்த நார்வே தம்பதிகளைத்தான் கண்களையும் கை கால்களையும் கட்டி மயக்க நிலையில் வச்சிருந்தாங்க. 

 அவங்களை மீட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கேன்.   ஆனா, சிவரஞ்சனி அந்த வீட்டு சைடுல ஒரு தொட்டி மேல ஏறி படம் எடுத்திருக்காங்க.  அங்க அவங்க செப்பல் கிடக்குது.

அப்ப எங்கடாப் போயிருப்பா…?  ஒன்னுமேப் புரியல.”   பதட்டம் அப்பியிருந்தது கதிரின் முகத்தில். 

கதிர் முதல்ல பதட்டப் படாம யோசி…   அவங்க சேஃப்பா தான் இருப்பாங்க.  புத்திசாலித்தனமா   அவனுங்க ஃபோனுக்காகத்தான் துரத்துறானுங்கன்னு, ஃபோனை தூக்கிப் போட்டு அவனுங்க கவனத்தை திசை திருப்பிட்டு ஓடியிருக்காங்க. 

 அவங்க சந்துல வளைஞ்சு ஓடினதை, ஒருத்தன் பார்த்திருக்கான்.  அந்த சந்து மறுபடியும் இந்த ரோட்டுலதான் வந்து முடியும், எங்கயும் தப்பிக்க முடியாதுன்னுதான் அவனுங்க கொஞ்சம் அசால்டா இருந்திருக்கானுங்க. 

ஆனா, அப்புறம் தேடிப் பார்த்தா இந்த ரோட்டுல அவங்களைக் காணோம்னு சொல்றானுங்க.   அவனுங்க அடுத்து அவங்களை  மும்முரமா  தேடறதுக்கு முன்னாடி, போலீஸ் இங்க வந்துடுச்சி.

அந்த சாலையில் இருந்த வளைவில், சுற்றுப்புறத்தை அலசியபடி நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.  அந்த வளைவிலும் வீடுகள் நெருக்கமாக இல்லை.  பூட்டப்பட்ட கேட்டுகளோடு அளவில் பெரிய வீடுகள், சுற்றிலும் பரந்த தோட்டத்தோடு தென்பட்டது. 

இந்த ஏரியால இருக்கற எல்லா வீடுகளும் பெரிய பெரிய ஆளுங்களோட கெஸ்ட்ஹவுஸ்தான்.  எப்பவுமே பூட்டிதான் இருக்கும் போல. மதிய  நேரம்ன்றதால வாட்ச் மேனும் ஒருத்தனையும் காணோம்.  இந்தப் பக்கம் வந்தவங்க எங்க போனாங்கன்னு ஒன்னும் புரியல.

ஸ்ரீதர்  பேசிக் கொண்டே வர…  சுற்றுப்புறத்தை கூர்மையாக அலசியபடி நடந்து வந்த கதிரின் பார்வையில், ஒரு வீட்டின் பின்புறச்   சுற்றுசுவற்றில் லேசாக வழிந்து   உறைந்து போயிருந்த இரத்தம் பட்டது.  உயிரையே யாரோ உருவி எடுத்தது போலத் துடித்துப் போனவனின் உள்ளுணர்வுகள் கூப்பாடு போட்டது, அது சிவரஞ்சனியின் இரத்தம்தான் என்று. 

சுமாரான உயரமுள்ள அந்த சுவற்றின் மேல், கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு இருந்தது.  அந்த சுவற்றை ஒட்டி நகராட்சி குப்பைத் தொட்டி ஒன்றும் இருந்தது.  அவள் கண்டிப்பாக அந்த குப்பைத் தொட்டியில் ஏறி, அந்த சுவற்றில் கால் பதித்து அந்தப் பக்கம் குதித்திருப்பாள் என்று முடிவு செய்தவன், 

ஸ்ரீதர் இங்க பாரு இந்த காம்பௌண்டு சுவருல இரத்தம்.  சிவா இந்த வீட்டுக்குள்ளதான் இருக்கனும்.  இது யாரோட வீடுடா?”

இது அந்த எம்எல்ஏ குமார் கெஸ்ட்ஹவுஸோட பின் பக்கம்டா…” 

 ஸ்ரீதர் கூறிய அடுத்த நொடி, கதிர் அந்த மதிலில் ஏறி அந்தப் பக்கம் குதித்திருந்தான்.  பின்னே ஸ்ரீதரும் ஏறிக் குதிக்க…  அந்த இடம் பராமரிப்பு இன்றி புதராகச் செடிகள் வளர்ந்து கிடந்தது.

சிவா…”   

கதிர் குரல் கொடுத்த சில நொடிகளில், செடிகளுக்கு இடையே கால்களில் இரத்தம் வழிந்தவாறு, மிகவும் பயந்து போய் அரை மயக்கத்தில், அந்த செடிகளின் மறைவில் ஓரமாக மறைந்து ஒடுங்கி அமர்ந்திருந்த  சிவரஞ்சனி, எழுந்து அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தாள். 

அவளை முழுதாகப் பார்த்ததும் அதுவரை மனதில் அடைபட்டிருந்த தவிப்பு முற்றிலும் விலக, ஓடிச் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.  பருந்தைக் கண்ட தாய்க் கோழி குஞ்சுகளை சிறகில் பொத்தி வைப்பது போல, அவளைத் தனக்குள் பொதிந்து கொண்டான். 

அவன் கை வளைவுக்கு வந்த பின்னும், சிவரஞ்சனியின் உடலில் நடுக்கம் நிற்கவில்லை.  அதை உணர்ந்தவனின் கரங்கள் ஆதரவாக அவளது முதுகை தடவிக் கொடுத்தது.  

பயத்தில் பேச்சு வராமல்  கண்களில்   கண்ணீர் வழிய, அவனோடு ஒட்டி ஒடுங்கி நின்றிருந்தாள். அவனுக்குமே எதுவும் பேச வாயெழவில்லை.  அவளைக் கண்ணால் கண்டதே போதுமாயிருந்தது அவனுக்கு. 

அத்தனை நேரத் தவிப்பும் சேர்ந்து, அவளை அணைத்திருந்த கரங்கள் மேலும்   மேலும் இறுகியது. காடு மேடெல்லாம் சுற்றிக் களைத்தவன் வீடு வந்து சேர்ந்தது போல, ஆசுவாசப்பட்டுக் கொண்டான். 

 அவன் அணைப்பில் மூச்சு முட்ட, கால்களிலும் கண்ணாடிச் சில்லுகள் கிழித்திருந்ததால் ரணமாகியிருந்த பாதங்களை ஊன்ற முடியாமல் தடுமாறியவளை  விடுவித்தவன்,  அவளை   இரு கரங்களாலும் தூக்கிக் கொண்டு  அந்த வீட்டின் முன்புறம் வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான்

எங்கிருந்தோ குடிக்க தண்ணீர் தருவித்துத் தந்தான் ஸ்ரீதர்.  பயத்தில் முகம் வெளிறி நா உலர்ந்து  இருந்தவளுக்கு, மிகவும் தேவைப்பட்டது அந்தத் தண்ணீர்.  அதை வாங்கி அருந்தியவளுக்கு பயமும் பதட்டமும் சற்று மட்டுப்பட்டது. 

நான் அந்த வீட்டுப் பின்னாடியும்  வந்து தேடினேனே சிஸ்டர்.  என்னைப் பார்த்ததும் நீங்க வெளிய வந்திருக்கலாமே.”  ஸ்ரீதர் கேட்க, 

தயக்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்,  கதிரையும் பார்த்து, 

இல்ல…  எனக்கு போலீஸ்னா கொஞ்சம் பயம்  அதான்…  இவங்க என்னோட மெஸேஜ் பார்த்துட்டு எப்படியும் வந்துடுவாங்கன்னு நம்பிக்கை இருந்தது.   அதனாலதான் அவங்க குரல் கேட்டதும் வந்தேன்.

அவள் கூறியதைக் கேட்டு அழவா சிரிக்கவா என்பது போல பார்த்த ஸ்ரீதரைப் பார்த்து, கதிருக்கும் சிரிப்பு வந்தது. 

இந்த வீட்டுக்குள்ள வந்து ஃபோட்டோ எடுக்கும் போது பயமா இல்லையாம்டா…  என்னைப் பார்த்து பயமா இருக்காம்.

சரிசரிவிடு உன்னைப் பார்த்தா பூச்சாண்டி மாதிரி தெரிஞ்சிருக்கு சிவாக்கு.  இல்ல சிவா…”

ஏன்டா பேச மாட்ட?   இவ்வளவு நேரம் அவங்களைக் காணோம்னு பேயறைஞ்சவன் மாதிரி இருந்தவன்,  இப்ப உன் ஆளைப் பார்த்ததும் நக்கல் வருது உனக்குசிஸ்டர் உனக்கும் மேல…”

ஓரளவு பதட்டம் தணிந்து இருவரும் இயல்புக்கு வரும் வரை பேச்சுக் கொடுத்த ஸ்ரீதர், 

கதிர் நீ சிஸ்டர கூட்டிட்டு கிளம்பு.  இப்ப மீடியாக்கு சொல்லி வரச் சொல்லப் போறேன்.  நீயோ அவங்களோ இங்க இருக்க வேணாம்.   அந்த குமார் இனி ஒழிஞ்சான்னு நினைச்சிக்கோ.  அவன் இனி ஜென்மத்துக்கும் தலையெடுக்க முடியாது. 

நீ இதுல சம்பந்தப் பட்டதா நாம காட்டிக்க வேணாம்.  மத்திய உள்துறை அமைச்சர், முதலமைச்சர்  இரண்டு  பேரோட நேரடி கண்காணிப்பில் இருக்கற கேஸ் இது.  சோ, இதுல சிக்கியிருக்கற யாருமே மீள முடியாது. 

அந்த  லேடியும்   அவ புருஷனும் இங்க வச்சு உதைச்ச உதையிலயே மடமடன்னு எல்லாத்தையும் ஒத்துகிட்டாங்க. இன்னும் இதுல யார் யார் சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு விசாரணை போயிட்டு இருக்கு. 

குமாருக்கு சொந்தமான  கெஸ்ட்ஹவுஸ்  இது.  இந்த ஒரு எவிடன்ஸ் போதும், அவனை ஆயுசுக்கும் உள்ள தள்ள.  சிஸ்டர் எடுத்த வீடியோவும் பக்கா எவிடன்ஸ்.   இனி உனக்கு எந்த பிரச்சினையும் வராது. ஜாலியா கல்யாணத்துக்கு ரெடியாகு.”

ஓகே ஸ்ரீதர்.  தேங்க்ஸ்டா…  வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா தலைவர்ட்ட பேசுடா.   இந்தக் கேஸோட டீடைல்ஸ் அப்புறமா எனக்கு தெரியப் படுத்து.  கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடு.

ஸ்ரீதரிடம் விடைபெற்றுக்   கொண்டு,   ஸ்டீபன் ஜெகா இருவரிடமும் விடைபெற்றுக்  கொண்டான்.  சிவரஞ்சனியை பாதம் தரையில் படாதவாறு தூக்கிச் சென்று காரில் ஏற்றியவன்,  தானும் ஏறி வண்டியைக் கிளப்பினான்.   அதுவரை சாதாரணமாக இருந்த அவனது முகம், கோபத்தில் இறுகத் தொடங்கியது. 

ராட்சசி…  ஒரு மணி நேரத்தில் என்னை எவ்வளவு கலங்க வைத்து விட்டாள்இவளுக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று பதறித் துடித்த துடிப்பு, என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது.   

கல்யாணத்தை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு, மதில் ஏறிக் குதித்து காலைப் புண்ணாக்கி சாகசம் செய்திருக்கிறாள். ஒழுங்காக, கல்லூரிக்கு போ என்று நான் கூறியதைக் கேட்டிருந்தால், இது நடந்திருக்குமா?

மனதில் அவளை  ஏகபோகமாக வறுத்தபடி  வந்தவன்,  அவ்வப்போது  அவளைத் திரும்பி முறைக்கவும் தவறவில்லை. 

அவளும் அவனது கோபத்தை உணர்ந்தாள்தான்.  கோபத்தைக் கட்டுப்படுத்தும் இறுகிய முகமும்,  அவ்வப்போது பார்க்கும் அனல் வீசும் பார்வைகளும் அடி வயிற்றில் பயத்தைக் கிளப்பியது.   

வழியில் இருந்த மருத்துவமனையில் வண்டியை நிறுத்திவிட்டு அவளைத் தூக்க  வந்தவனை, 

இல்ல…  நானே நடந்து வரேன்.  என்னால நடக்க முடியும்ங்க.”  என்று கூற  அவளை முறைத்தவன்,  

கால்ல கண்ணாடி பீஸ் இருந்தா காலுக்கு அழுத்தம் குடுக்கும் போது இன்னும் உள்ள போகும். அதான் தூக்குறேன்.  இல்லைன்னா எனக்கிருக்கற கோபத்துக்கு…”  பல்லைக் கடித்தவனை பரிதாபமாகப் பார்த்தவள்  அமைதியாகிப் போனாள். 

உள்ளே மருத்துவரிடம் காட்டி காயத்தை சுத்தம் செய்து, கண்ணாடித் துகள்கள் ஏதும் இருக்கிறதா என்று பார்த்து, மருந்து வைத்து கட்டு கட்டிக் கொண்டாள். கண்ணாடித் துகள்கள் ஏதும் உள்ளே இல்லை என்றது, அவனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. 

 வலி தெரியாமல் இருக்க மருந்து எழுதித் தந்த மருத்துவர், செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போடச் சொன்னார்கீழே விழுந்ததில் கை கால்களில் இருந்த சிராய்ப்புக்கும் மருந்துகள் எழுதித் தந்தார். 

ஊசி வேண்டாம் டாக்டர்.   மாத்திரை குடுத்திடுங்க.”  என்றவளின் முகத்தில் ஊசி பயம் அப்பட்டமாகத்  தெரிய… 

அவளை முறைத்தவன், ஊசி போட்டாதான் செப்டிக் ஆகாது. சீக்கிரம்   ஆறும். நீங்க போடுங்க டாக்டர்.”

அவள் அவனைப் பரிதாபமாகப் பார்த்திருக்க,  முறைத்தபடி வெளியேறினான்.  ஊசியைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றியவன்,  எதுவும் பேசாமல் வண்டியைச் செலுத்தினான். 

சிறிது நேரம் அமைதியாக வந்தவள்அவனை சமாதானப்படுத்தலாம் என்று எண்ணி மெதுவாக, 

இல்லைங்க…  அது வந்து…”  என்று ஆரம்பிக்கவும் திரும்பி முறைத்தவன்,   வண்டியை ஒரம் கட்டி நிறுத்திவிட்டு,

வாயத் தொறக்காத…  ஏதாவது பேசுன,  பிச்சிடுவேன் உன்ன…  ஒரு மணி நேரத்துல என் உயிரே போயிடுச்சிடி.  நான் என்ன ஸ்பைடர் மேனா? நீ ஆபத்துல இருக்கன்ன உடனே பறந்து வர்றதுக்கு.

 உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போய், உயிரைக் கையில பிடிச்சிகிட்டு ஓடி வந்தேன். கடவுள் புண்ணியத்துல அவனுங்க கையில நீ மாட்டல…   உன்னை நேர்ல பார்க்கற வரை ஆயிரம் முறை  செத்துப் பொழைச்சேன். 

நான் உன்னை என்ன சொன்னேன்அந்த இடத்துல நிக்காத ஹாஸ்டலுக்குப் போன்னுதான சொன்னேன். உன்னை யாருடி அந்த  வீட்டுக்குள்ள போகச் சொன்னாபெரிய ஜான்சிராணின்னு நினைப்பா  உனக்குஉன் பயமே உன்னைக் காட்டிக் கொடுத்திருக்குமே.

அவன் திட்டத் திட்ட அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தவள்,  அவனது பேச்சின் கடைசி வரியில் மெதுவாக விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். 

அதைக் கண்டவன், என்ன?  உண்மையாவே உன் பயம்தான உன்னைக் காட்டிக் கொடுத்துச்சி?”

ஆமாம் என்று தலையை ஆட்டியவள்  மெல்லிய குரலில்,  “கால் நடுங்குனதுல பூந்தொட்டி சறுக்கி விட்டுடுச்சி.  இல்லைன்னா ஃபோட்டோ எடுத்ததும் நிக்காம வெளிய வந்திருப்பேன்.

அவளை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தவன், உன்ன…  ஊருக்குப் போய் பேசிக்கிறேன்…”

மீண்டும் வண்டியைக் கிளப்பியவன்,  தனது அலைபேசி இசைக்கவும் எடுத்துப் பார்த்தான்.  அழகர்தான் அழைத்திருந்தார். 

மாப்ள…  சிவரஞ்சனி ஃபோனு ஸ்விட்ச் ஆப்னு வருது.  நீ அங்க போயிட்டியா?  சிவாவ பார்த்தியா?

ரெண்டு பேரும் வந்துகிட்டு இருக்கோம் மாமா.  அவ ஃபோன் உடைஞ்சு போச்சு.  அதான் ஸ்விட்ச் ஆப்னு வருது.

ஏன் மாப்ள கடுகடுன்னு பேசுற?   எதுவும் பிரச்சனையா?

உங்க மக வீரசாகசம்லாம் நிறைய்ய்ய பண்ணியிருக்காங்க.  நான் கொஞ்சம் அவார்டு குடுத்துட்டேன்.  மீதிய அங்க வந்துதான் குடுக்கனும். நீங்களும் ரெடியா இருங்க.

ஏன் மாப்ள?   என்னாச்சுடா?

இன்னும் ஒரு மணி நேரத்தில வந்துடுவோம் மாமா.  வந்து சொல்லுறேன்.

அலைபேசியை அணைத்தவன்,   அவளை முறைத்தபடி காட்டு மன்னார்குடி  நோக்கி வண்டியைச் செலுத்தினான்

காற்று வீசும்

 

error: Content is protected !!