KATRE
KATRE
பச்சை நிறத்தை தன் ஆடையாக போர்த்திய மலைகள், அந்த மலை எங்கும் சூழ்ந்து இருக்கும் காலை நேரத்துப் பனி, காதில் ரீங்காரமாக வந்து விழுந்த பறவைகளின் இன்னிசை என இயற்கை அரண்களை தன்னகத்தே கொண்டு மலைகளின் ராணியாக தலை நிமிர்ந்து நின்ற ஊட்டியின் அழகை கண் இமைக்காது பார்த்து கொண்டு நின்றாள் தேன்மதி.
தேன்மதி இருபத்தைந்து வயது நிரம்பிய இளமங்கை.
அவள் முகத்தில் அவளுக்கே உரிய துடுக்குத்தனத்தின் சாயல் கொட்டிக் கிடந்தது.
ஒற்றை பார்வையிலேயே மனதை கொள்ளை கொள்ளும் வசீகர அழகை கொண்ட தேன்மதி அந்த மலர்த்தேனிலும் இனியவள்.
ஊட்டியின் காலை நேரத்துக் குளிர் மேனியை ஊசியாய் துளைக்க தன் மேல் போர்த்தி இருந்த சாலை மேலும் இறுக்கமாக தன் மேல் போர்த்திக் கொண்ட தேன்மதி தன் கைகள் இரண்டையும் ஒன்றோடொன்று உரசி அந்த கதகதப்பை தன் கன்னங்களில் வைத்து அழுத்தி கொண்டாள்.
ஊட்டி குளிரை அந்த சிறிய கதகதப்பினால் அவளால் ஈடு செய்ய முடியாது போகவே மீண்டும் உள்ளே செல்லலாம் என்று எண்ணித் திரும்ப அவளை திரும்ப விடாமல் அவளின் பின்னால் இருந்து இரு வலிய கரங்கள் அவளை அணைத்துக் கொண்டது.
அந்த திடீர் அணைப்பில் ஒரு நொடி பதறிப் போன தேன்மதி அடுத்த கணமே அந்த அணைப்பின் உரிமையாளனை கண்டு கொண்டாள்.
திரும்பிப் பார்க்காமலேயே அந்த கரங்களில் தன் கரங்களை வைத்து அழுத்தி கொடுத்தவள்
“என்ன கவி ஸார்? இப்போ தான் என் ஞாபகம் வந்ததா?” எனக் கேட்டாள்.
“உன்னை மறந்தா தானே மதி நினைக்க முடியும்?”
காதலாக வந்த அவளது உரிமையாளனின் குரலில் புன்னகத்து கொண்டே அவனது புறம் திரும்பியவள்
“மூவி டயலாக் எல்லாம் சுட்டு இங்க என்கிட்ட ரொமாண்ஸ் பண்ண ட்ரை பண்ணுறீங்களா?” என்று கேட்கவும்
அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தவன்
“பரவாயில்லை உனக்கும் கொஞ்சம் பொது அறிவு இருக்குது தான் போல” எனவும் கோபமாக அவனை முறைத்து பார்த்தவள் அவனது தோளில் அடிக்க அவளது கைகளை தன் கைகளுக்குள் சிறைப்பிடித்துக் கொண்டான் தேன்மதியின் கவி என்கிற கவியரசன்.
எப்போதும் போல தன்னை கட்டி இழுக்கும் அவனது வசீகர புன்னகையில் தன் மனம் தொலைத்த தேன்மதி உடனே தன் பார்வையை சரி செய்து கொண்டு தன் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.
புன்னகையோடு அவள் கைகளை வருடிக் கொடுத்தவன்
“நீ கோபப்பட்டால் தான் ரொம்ப அழகாக இருக்கு மதி…கன்னம் இரண்டும் அப்படியே தக்காளி மாதிரி சிவந்து போய்…மூக்கு குடைமிளகாய் மாதிரி விரிந்து…என்ன அழகு தெரியுமா?” என்றவாறே அவள் மூக்கைப் பிடித்து அவன் ஆட்ட
கோபமாக அவனது கைகளை தட்டி விட்டவள்
“உங்களை இன்னைக்கு நான் சும்மா விடமாட்டேன். என்னை சீண்டிப் பார்க்குறதே உங்க வேலையாகப் போச்சு. உங்களை…” என்றவாறே சுற்றிலும் ஒரு முறை பார்த்த தேன்மதி
கீழே கிடந்த ஒரு குச்சியை தன் கையில் எடுக்க
“அய்யோ! அம்மா! தாலி கட்டுன புருஷனையே கொல்லப் பார்க்குறாளே! யாராவது காப்பாற்றுங்க…” அலறிக் கொண்டே கவியரசன் ஓடி செல்ல அவனை பின் தொடர்ந்து தேன்மதியும் ஓடிச்சென்றாள்.
“கவி நில்லுங்க…சொன்னா கேளுங்க…”
“நான் நின்னா இன்னையோட என் கதை முடிந்துடுமே…உன் கையில் நான் சிக்க மாட்டேனே…” என்று கூறி கொண்டே ஒற்றையடிப் பாதை ஒன்றில் கவியரசன் ஓட தேன்மதி சிரித்துக் கொண்டே அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.
இன்னும் சற்று நேரத்தில் தன் வாழ்க்கை தலைகீழாக போவதை அறியாமல் ஓடி கொண்டிருந்த தேன்மதி திடீரென்று தன் முன்னால் கிடந்த ஒரு மரக்கட்டையில் கால் தடுக்கி
“அம்மா…” என்று அலறலோடு கீழே விழுந்தாள்.
தேன்மதியின் அலறலில் கவியரசன் பதட்டத்துடன்
“மதி…” என்று கத்தி கொண்டே அவளை நோக்கி ஓடி வந்தான்.
பதட்டத்தில் வழியை சரியாக பார்க்காமல் ஓடி வந்தவன் ஒரு வாரமாக பெய்த மழையில் சேறு நிறைந்து இருக்க அதைக் கவனிக்காமல் அதன் மேல் கால் வைக்க சேற்றில் வழுக்கி கொண்டு மலை பள்ளத்தாக்கில் உருண்டு வீழ்ந்தான்.
கவியரசன் உருண்டு வீழ்வதைப் பார்த்து பதறியடித்து கொண்டு தன் அடிபட்ட காலையும் பொருட்படுத்தாமல் அவனை நோக்கி ஓடியவள்
“கவி….” என கூவி கொண்டே அவனை வேகமாக நெருங்கினாள்.
இயற்கையின் வேகத்தில் கவியரசன் சிக்கி தவிக்க அவனை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தன் வலியை மறந்து தேன்மதி
“கவி…கவி…” என்று அலறி கொண்டே அவனை நோக்கி ஓடினாள்.
பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் ஒரு சிறு மரத்தில் தன் கைகளை கோர்த்து பிடித்த கவியரசன் தன் உடலில் இருந்து மொத்த சக்தியும் வடிந்து போக மெல்ல மெல்ல தன்னை அறியாமலே மயக்கத்தில் ஆழ்ந்து கொண்டு இருந்தான்.
“கவி…..” என்ற தேன்மதியின் அழைப்பில் மெல்ல கண் திறந்தவன்
“மதி…” என்றவாறே அவளின் புறமாக கை நீட்ட வேகமாக அவனருகில் ஓடி வந்து அவன் கைகளை பிடித்து கொண்டவள் தன் முழுப் பலம் கொண்டும் அவனை மேல் நோக்கி இழுக்க முயன்றாள்.
ஆனால் அவளால் வெறும் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.
மெல்ல மெல்ல கவியரசனின் கைகள் தேன்மதியின் கையில் இருந்து நழுவி கொண்டு செல்ல பதட்டத்துடன் அவனது கைகள் இரண்டையும் இறுக்கமாக பற்றி கொண்டவள்
“கவி…ப்ளீஸ் கவி என்னை தனியா விட்டுட்டு போயிடாதீங்க கவி ப்ளீஸ்…”
“நான் எங்கே…யும் போக மாட்டேன் டா…நான்…எப்போ…வும் உன்…னோட கவி தான்…டா…மதி…” என்றவாறே கவியரசனின் கைகள் தேன்மதியின் கையில் இருந்து விலக
ஒரு கணம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனவள் மறுகணமே எதைப் பற்றியும் யோசிக்காமல்
“கவி…” என்றவாறே அவனை நோக்கி பாய்ந்தாள்.
சுற்றிலும் புகைமூட்டம் பார்வையை மறைக்க வழி தெரியாமல் கைகளால் அந்த புகைமூட்டத்தை விலக்க முயன்ற தேன்மதி அது முடியாது போகவே சோர்வாக நின்றவள் சட்டென்று கால்கள் தடுமாறி கீழே விழுந்தாள்.
“அம்மா…” என்ற அலறலோடு எழுந்து அமர்ந்த தேன்மதி அப்போது தான் தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டாள்.
மருத்துவமனைக்கை உரிய பிரத்தியேக வாடை அவள் நாசியை வந்தடைய அந்த வாடையில் தலை சிறிது வலிக்கவே வலியால் சற்று முகம் சுளித்தவள் மெல்ல சுற்றி பார்த்தாள்.
சூழ இருந்த எல்லோரும் அவளையே விநோதமாக பார்க்க எதுவும் புரியாமல் அவர்களை ஆச்சரியமாக பார்த்தவள் மெல்ல தன் தலையில் கை வைத்து பார்த்தாள்.
தலையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டிருக்க அதிர்ச்சியாக தன் தலையை தொட்டு தொட்டு பார்த்தவள்
“எனக்கு எனக்கு என்ன ஆச்சு? நான்…நான் எங்கே இருக்கேன்…இது எந்த இடம்? நான் எப்படி இங்க? என் அம்மா, அப்பா எங்கே? கவி…கவி எங்கே? யாராவது சொல்லுங்க…அம்மா அப்பா” பதட்டத்துடன் ஆரம்பித்து கோபமாக தேன்மதி கத்தத் தொடங்க
அப்போது தான் அந்த இடத்திற்கு வந்த நர்ஸ் ஒருவர் தேன்மதியின் அருகில் ஓடி வந்து
“மேடம் ரிலாக்ஸ் கொஞ்சம் பொறுமையாக இருங்க நீங்க இப்படி சத்தம் போட்டு கத்தக் கூடாது மேடம் ப்ளீஸ்” என அவளை சமாதானப்படுத்த முயன்றார்.
“ஏன் கத்தக் கூடாது? நான் எங்கே இருக்கேன்? எனக்கு என்ன ஆச்சு? என் தலையை யாரோ பிடித்து அழுத்துற மாதிரி எனக்கு தலை வலிக்குது எனக்கு என்ன ஆச்சு சொல்லுங்க ப்ளீஸ்” கண்ணீர் வடிய கைகள் இரண்டையும் கூப்பி தேன்மதி கெஞ்சலாக கேட்க அவளருகில் நின்ற நர்ஸ் பரிதாபமாக அவளைப் பார்த்தார்.
“சொல்லுங்க சிஸ்டர் எனக்கு என்ன ஆச்சு?” தேன்மதியின் அதட்டலான கேள்வியில்
அவளருகில் வந்து அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த நர்ஸ்
“மேடம் ஒரு இரண்டு நிமிஷம் நீங்க கோபப்பட்டு சத்தம் போடாமல் அமைதியாக இருங்க நான் இப்போவே போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன் அவர் உங்களுக்கு எல்லாம் தெளிவாக சொல்லுவார் அது வரைக்கும் நீங்க தயவுசெய்து டென்ஷன் ஆக கூடாது ப்ளீஸ்” என்று விட்டு சென்று விட தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிப்போடு அந்த நர்ஸ் சென்ற வழியையே பார்த்து கொண்டு இருந்தாள் தேன்மதி.
“பாப்பா கண்ணு முழிச்சிட்டியா?” பாசமாக அவளருகில் வந்து ஒரு வயதான பெண்மணி கேட்கவும்
குழப்பமாக அவரைப் பார்த்தவள்
“நீங்க யாரு? உங்களுக்கு என்னைத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“நான் இந்த ஆஸ்பத்திரியில் தான் கூட்டிப் பெருக்குற வேலை பார்க்குறேன் கண்ணு உன்னை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தது நான் தான் எங்க வீட்டுக்கு போற வழியில் ஒரு காடு இருக்கு அங்கே தான் நீ தலையில் அடிபட்டு கை, கால் எல்லாம் இரத்தம் வடிய விழுந்து கிடந்த”
“நான் காட்டுக்குள்ளேயா? நான் எப்படி அங்கே? எவ்வளவு நேரமாக நான் மயக்கத்தில் இருந்தேன் பாட்டி?”
“நேரமாகவா? எவ்வளவு மாசமாகனு கேளு கண்ணு! இரண்டு மாசமாக நீ மயக்கத்தில் தான் இருந்த உன்னை பற்றி எந்த தகவலும் தெரியல அதனால உன்னை தெரிஞ்சவங்களை தேடி வரச் சொல்லி தகவலும் கொடுக்க முடியல கண்ணு”
“இரண்டு மாசமாகவா? அய்யோ! கடவுளே! நான் இப்போ என்ன பண்ணுறது? ஏன் யாரும் என்னை தேடி வரல? சென்னையில் தானே இருக்கேன் அப்புறம் ஏன் வரல?” கவலையுடன் யோசித்து கொண்டிருந்த தேன்மதி அப்போது தான் அங்கே இருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பசுமையாக இருந்த அந்த சூழலை பார்த்து குழப்பம் அடைந்தவள்
“பாட்டி இது என்ன ஊர்? சென்னை தானே?” என குழப்பமாக கேட்டாள்.
“இல்லை கண்ணு இது ஊட்டி…” என்றவரிடம் தேன்மதி மேலும் கேள்வி கேட்க போக
அவசரமாக அவளை பார்த்து வேண்டாம் என்று தலை அசைத்தவர்
“பெரிய டாக்டர் வர்றாங்க கண்ணு நீ சாய்ந்து படுத்துக்கோ உன் கூட பேசிட்டு இருந்ததைப் பார்த்தா வேலை செய்யாமல் என்ன வெட்டி பேச்சுனு டாக்டர் என்னைத் திட்டுவாரு நான் அப்புறம் வர்றேன் கண்ணு” என்று விட்டு சென்று விட தேன்மதியோ அடுத்தடுத்து வந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி போய் இருந்தாள்.
“நான் ஊட்டியில் எப்படி? யாரோடு வந்தேன்? ஏன் இங்கே தனியாக இருக்கேன்? எனக்கு என்ன ஆச்சு? யோசிக்க யோசிக்க தலை வலிக்குதே! அம்மா!” கத்தி கொண்டே தலையை இரு கைகளாலும் தேன்மதி தாங்கிக் கொள்ள
“எக்ஸ்கியுஸ் மீ மிஸ் என்ன ஆச்சு?” என்று புதிய ஒரு குரல் கேட்க தன் தலையை மெல்ல உயர்த்தி பார்த்தாள் தேன்மதி.
நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ச்சியாக அவளையும் அறியாமல் மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி நிற்க அவளருகில் நின்றவர்கள் குழப்பமாக அவளைப் பார்த்தனர்.
“மிஸ் ஆர் யூ ஓகே? தலையில் இப்போவும் வலி இருக்குதா?”என்றவாறே தன் அருகில் வந்தவனை
“கவி…” என்று கூவலோடு தேன்மதி தாவி அணைத்துக் கொள்ள எதிரில் நின்றவனோ அதிர்ச்சியில் செய்வதறியாது சிலையென உறைந்து நின்றான்….