Kattangal 8

Kattangal 8

கட்டங்கள் – 8

                  மதுசூதனன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். ” அனைத்திலும் முதன்மையாக திகழும் நான்  திருமணம் என்னும் நிகழ்வில் தோற்றுவிட்டேன். “,  இந்த எண்ணம் மதுசூதனனை  வெறுப்பில் ஆழ்த்தியது. 

         அவன் கோபம் நித்யாவின் பக்கம் திரும்பியது. ” நகை, பகட்டு வாழ்க்கைக்கு  ஆசைப்பட்டு  இந்த திருமணத்திற்கு சம்மதித்திருப்பாள்.  அவளை என்ன செய்தால் தகும்..?”, நித்யாவை  மனதிற்குள் திட்டிக் கொண்டே பால்கனியில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் கண் மூடி அமர்ந்தான்.

           பல அறிவுரைகளுக்கு பின் நித்யாவிற்கு சற்று தனிமை கிடைத்தது. “இவன்  ஏன் இன்று திருமணத்தை நிறுத்தவில்லை. அவன் வேறு ஒரு பெண் என்றானே, அவள் என்னானாள்? நிதானமாக யோசித்தாள்.  இவனோடு எப்படி காலம் தள்ளுவது. இங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா..? சொந்தங்கள் அனைவரும்  வெளியில் இருக்கிறார்கள்.  நித்யா முட்டாள் மாதிரி யோசிக்காதே.  நீ என்ன தவறு செய்தாய் ஒளிந்து கொள்வதற்கு..  வாழ்க்கை ஒரு போர்க்களம்…  வாழ்ந்து தான் பார்க்கணும்..” , என்று நித்யா தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டிருக்கும் பொழுது, அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக “இன்னுமா குளிக்கிற?” , என்று குரல் கேட்டது.

       அவசரமாக குளித்து விட்டு, புடவைக்கு மாறினாள் நித்யா.

“முறைப்படி நம்ம வீட்டுக்கு தான் போயிருக்கனும்… ஆனால்  மாப்பிள்ளைக்கு நம்ம வீடு வசதியா இருக்காது… “, என்று பத்மா  தயக்கமாக  கூற,  ” அப்படி ஒத்து போகாத மாப்பிள்ளையை ஏன் பார்க்கணும்?” , என்று  நித்யா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.   இதை கேட்டு தாயை காய படுத்த  அவள் விரும்பவில்லை.

                       பல அறிவுரைகளோடு மதுசூதனின் அறைக்குள் சென்றாள்.

      சக பயணிகளை பற்றி தெரியாமல், பயணிக்கும் ரயில் பயணம் போல் நம்மில் பலர்  தன்  துணையை பற்றி தெரியாமல் திருமணம் என்னும் பயணத்தை துவங்குகிறோம்.

இதற்கு  மதுசூதனனும், நித்யாவும் மட்டும் விதி விலக்கா?   

         நித்யா மதுசூத னனின் அறைக்குள் நுழைந்தாள்.  அவள் அவன்  அறையை கண்களால் படம் பிடித்தாள்.

         மிக பிரமாண்டமான படுக்க அறை… பல வேலைப்பாட்டோடு அமைந்திருந்த  அழகான கட்டில்.. நம்  அழகை முழுதாக எடுத்து காட்ட கூடிய முழு கண்ணாடியோடு அமைந்திருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள்..  மியூசிக் சிஸ்டம்.. 

         அந்த அறையை ஒட்டியபடி ஒரு அறை. அங்கு லேப்டாப் , ” flies” என நேர்த்தியாக  அடுக்கப்பட்டிருந்தது.  “அவனுடைய  அலுவலக அறை  போலும்.” , என்று நினைத்துக் கொண்டாள்.   

“நம் வீட்டை இவன் வீட்டோடு ஒப்பிட்டு கூட பார்க்க முடியாது.. அது தான்  நம் வீட்டில் தங்கவில்லை போல.. செல்வ செழிப்பில் வாழ்பவன் போலும்… “, என்று அவள் சிந்தனை ஓட,  “வீடு எப்படி இருக்கு ..? ” , என்று அழுத்தமாக கோபமாக ஒரு குரல் மிக அருகில் ஒலித்தது.

             அந்த குரல் தன் உடலுக்குள் அச்சம் என்னும் குளிரை பரவச்  செய்தாலும், ” நான் ஏன் பயப்பட வேண்டும் ?” , என்று தனக்குள்  இருக்கும் தன்னம்பிக்கையையும்  தைரியத்தையும் ஒன்றாக  திரட்டி  அவனை நேராக பார்த்தாள் நித்யா.

மதுசூதனனின் தொழில் என்ன ?  அவன் எப்படி பட்டவன்.?  பணத்திமிர் பிடித்தவன் இது மட்டுமே அவள் அறிந்த மதுசூதனன்!!!  மேல் தட்டு வழக்கமும் அவளுக்கு தெரியாது.. அவன் பழக்கமும் அவளுக்கு தெரியாது.  ஆனால்  இவனோடு நான் போராட வேண்டும் இது மட்டுமே நித்யாவின் மன ஓட்டமாக இருந்தது. இந்த எண்ண ஓட்டத்தோடு அவனை கம்பீரமாக நிமிர்ந்து பார்த்தாள் நித்யா.

       நித்யா  எங்கு பணி புரிகிறாள்?  இதை பற்றி மதுசூதனனும்  தெரிந்து கொள்ள வில்லை.  மதுசூதனன்  தொழிலை நிர்வகிப்பவன். அவனுடைய செல்வ  செழிப்பு  அவனுடைய தொழிலின்  அளவை பற்றி கூறினாலும் என்ன தொழில்  என்று நமக்கும் தெரியாது.

   நாம் இது வரை மதுசூதனனின் அலுவலக  வேலையை  பற்றியும் நித்யாவின் பணியை பற்றியும் ஆர்வம் காட்டவில்லை.  கதையின் போக்கு நம்மை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து செல்லும்.

        அவனை நேராக கம்பீரமாக நிமிர்ந்து பார்த்த நித்யாவை ஆழமாக பார்த்தான்  மதுசூதனன்.

      அவன்  கம்பெனியில் பல பெண்கள் பணி புரிந்தாலும் அவர்கள் கண்களில் தன் மீதான  மரியாதையை பார்த்திருக்கிறான். சில கண்களில் மேல் அதிகாரி என்ற பயத்தை பார்த்திருக்கிறான். சில பெண்களின் கண்களில் ஆர்வத்தை கூட பார்த்திருக்கிறான்.  ஆனால் இத்தனை கம்பீரமான , நிமிர்ந்த பார்வையை  முதன் முதலாக பார்ப்பது போன்ற பிரமை, எண்ணம் அவனுள்.

           பச்சை நிற காட்டன் புடவை, அன்று அவன் கட்டிய தாலி,  சின்னதாக ஒரு செயின், காதில் ஜிமிக்கி, நெற்றியில் வட்டமாக ஒரு  பொட்டு , நேர் வகிட்டில் குங்குமம்.  எந்த வித ஒப்பனையுமின்றி இருந்தாள். 

                 அவன் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. அவளும் அவனை அளவிட்டுக் கொண்டிருந்தாள்.” பார்ப்பதற்கு கம்பீரமாக , இத்தனை செல்வந்தனாக இருப்பவனுக்கு ஏன் என்னை போல் ஒரு மிடில் கிளாஸ்  பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்?” , என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

        நித்யாவை பற்றிய அவனது அபிப்ராயத்தை அவள் நிமிர்ந்த கம்பீரமான நடை, அதிலிருந்த தன்னம்பிக்கை அவனை சிந்திக்க செய்தது.

      அவள் பார்வை, அவன் கேட்க நினைத்த கேள்விகளை கேட்க  விடாமல் வாய் அடைக்க செய்தது..

“உனக்கு பேச வருமா..? வராதா..?  ” , என்று மதுசூதனன் ட்ரெஸ்ஸிங் டேபிளில் சாய்ந்தபடி  கேட்க, புன்னகைத்தாள் நித்யா.

“எதுக்கு சிரிக்கிற…?” , தன் வாழ்க்கையின்  போக்கையே மாற்றி விட்டு இவளுக்கு என்ன சிரிப்பு என்று எண்ணியவாறே கடுப்பாக கேட்டான்  மதுசூதனன்.

“முதன் முதலா  என்கிட்டே பேசினப்ப இந்த கேள்வியை  கேட்ருக்கனும்.” , என்று நித்யா  கைகளை கட்டிக் கொண்டு  நிதானமாக கூறினாள்.

          தான் திருமணத்தை நிறுத்தும் படி கால் செய்து கூறியது  நினைவு வர, “அன்னைக்கே உன்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாதுனு சொல்ல வேண்டியது தானே?” , என்று மதுசூதனன் ஆழமாக கேட்டான்.

” பேசும் சந்தர்ப்பத்தை… கடைசி வரைக்கும் நீங்க கொடுக்கலை.. ” , என்று நித்யா கூற, “திரும்ப ஒரு கால் பண்ணிருக்கலாமே ?” ,என்று மதுசூதனன் ஸ்டைலாக வினவினான்.

        அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “என்னை ஒருத்தர் மதிக்கலைன்னா , நான் அவங்க கிட்ட திரும்ப பேச மாட்டேன்…  அப்படி இருந்தும் இது என் வாழ்க்கை சம்பந்த பட்ட விஷயம் என்கிற எண்ணத்துல, உங்களுக்கு call பண்ணேன்.. இரண்டு தடவை… நீங்க  பேசல.. மெசேஜ் அனுப்பிச்சேன் … “Ok I will take care..” நீங்க அனுப்பிச்ச மெசேஜ்.. உங்க மெசேஜ் பார்த்த பிறகு நீங்க பார்த்துப்பீங்கன்னு நினச்சேன்…”, என்று தன் பெட்டியிலிருந்து மொபைலை எடுத்து அவனிடம் காட்டியபடி  நிதானமாக  பதில் கூறினாள் நித்யா.

              அவள் மொபைலில் மெசேஜ் பார்த்த மதுசூதனன் சற்று அதிர்ந்தான். இது முகிலனின் வேலையாகத்தான் இருக்கும் என்று அவனுக்கு தோன்றினாலும், தன் தம்பியை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல், “ஒரு மெசேஜ் பார்த்து நடக்கற படி நடக்கட்டுமுன்னு இருந்திருவியா….? பணக்கரான் கிடைத்தா கல்யாணம் செய்யலாமுன்னு எண்ணம்… ” , என்று தவறை அவள் பக்கம் திசை திருப்பினான் மதுசூதனன்.

           அமைதியாக  அவனைப்  பார்த்தாள்  நித்யா. மனதிற்குள் , “1..2…. 3…4..5…” , என்று எண்ணிக் கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள் நித்யா.  

        “இவனுக்கு 5 கட்டங்கள்… அதாவது 25  சந்தர்ப்பம்.. அந்த 25 சந்தர்ப்பங்கள் முடியும் நாளில், என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்”,  என்று சிந்தித்து கொண்டிருந்தாள் நித்யா.

        அவளை பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனன், “உங்க அம்மா, அப்பாவை  சொல்லணும்… பணக்காரன் கிடைத்தா குடும்பத்தோடு  செட்டில் ஆகிரலாம்ன்னு எண்ணமா இருக்கும்…” , என்று நக்கலாக  கூற, “என்னை பற்றி மட்டும்  பேசுங்க.. என் அம்மா அப்பாவை பற்றி பேசுற உரிமை  உங்களுக்கு கிடையாது.. இந்த மாதிரி பேசினா, நீங்களும் , நீங்க கட்டின தாலியுமுன்னு போய்கிட்டே இருப்பேன்… ” , என்று நித்யா கோபமாக கூறினாள்.

“அடேங்கப்பா… என்ன ஒரு கோபம்…  என்கிட்டே நயா பைசா இல்லைனா என்னை கல்யாணம் செய்திருப்பியா..? ” , என்று அவள் முகம் அருகே சென்று கனல் கக்கும் விழிகளோடு வினவினான் மதுசூதனன்.

      தன் தலையை இரு பக்கமும் அசைத்து,” திருமணம் செய்திருக்க மாட்டேன்… ” , என்று நித்யா கூற, “அது தானே பார்த்தேன் ..”, என்று கூறி  பெருங்குரலெடுத்து சிரித்தான் மதுசூதனன். 

“இந்த திருமணம் என்னை மீறி  நடந்த விஷயம்…  நான் எவ்வளவு சொல்லியும்  என் விருப்பம் இல்லாமல் நடந்த விஷயம்…  பணம்   இருந்தாலும் இல்லையென்றாலும் உங்களை போன்ற ஒரு பணப் பைத்தியத்தை… ஸ்டேட்டஸ் பைத்தியத்தை  நான்   மனதாலும்  நினைக்க மாட்டேன் … திருமணமும் செய்திருக்க மாட்டேன்.. ” ,என்று நித்யா  காட்டமாக கூற, “யாரை பார்த்து பைத்தியம்ன்னு சொல்ற?” , என்று அவளை அறைய கை ஓங்கினான் மதுசூதனன் . 

        அவனை தடுத்த நித்யா,  “அடி  வாங்குற பெண்கள் இருக்கிற தலைமுறை போன தலைமுறையோடு முடிந்து போய்ட்டாங்க…  என் கிட்ட இந்த வேலை வேண்டாம்… நானும் திருப்பி அடிப்பேன்…  ” , என்று நித்யா  கடுமையாக கூறினாள்.  

சுய நினைவு வந்தவனாக , “ I am really Sorry…..  ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்கும் அளவுக்கு நான் கேவலமானவன் இல்லை…” , என்று தன்மையாக கூறினான் மதுசூதனன்.  அவன் குரலில் உண்மையான வருத்தம் தெரிய, ” ஒருத்தர்  தப்பே பண்ணிருந்தா கூட , அவங்களை    கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் நான் நினைப்பேன்…  நானும் இன்னக்கி அதிகமா பேசிட்டேன்.. “, என்று இறங்கிய குரலில் பேசினாள்  நித்யா.

“நீ தூங்கி ரெஸ்ட் எடு…  நாளைக்கி பேசிக்கலாம்” , என்று கூறிவிட்டு மதுசூதனன் பால்கனியில் உள்ள மூங்கில் ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தான்.

              நித்யா  தன் டைரியை திறந்து, 5^2 –  25 கட்டங்கள் வரைந்தாள்.    

         
         
         
         
         

 

 

இந்த கட்டங்கள் நிறம் மாறுவதற்குள் தன் வாழ்க்கைக்கும் ஒரு முடிவு வரும் என்று நினைத்துக் கொண்டாள்.

வெண்பா முரளிக்கும் அவளுக்கும் ஒதுங்கியிருந்த அறையில், கட்டிலின் மீது தன் புடவை முந்தானையை  தன் கைகளால் சுருட்டியபடி அமர்ந்திருந்தாள்..

      முரளி வீட்டில் சத்தம்  குறைந்தப்பாடில்லை.  முரளியின்  தாயின்  குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.   கிட்சேன் பாத்திரங்கள் உருண்டு ஓடியது. வெண்பாவிற்கு தலை விண்வினென்று வலித்தது

       கிச்சேனிலிருந்து  பாத்திரம் சத்தம் கேட்டால்,  அவள் வேலைக்காரர்களிடம் சண்டை போடுவது நினைவுக்கு வந்தது. “வெண்பாக்கு பிடிக்காதுன்னு தெரியும் இல்லை.. சத்தம் வராம சமையல் பண்ணுங்க ” , என்று கூறும் சதாசிவத்தின் பேச்சு குரல் அவள் காதில் விழுந்தது.  அவள் கண்களில் இருந்து கண்ணீர் வரவா என்று எட்டிப் பார்த்தது.

” வெண்பா அழுவது கோழைத்தனம்.” , என்று அவள் அறிவும், மனமும் ஒன்றாக அறிவுறுத்தினாலும், அவளறியாமல் அவள் கண்ணில் இருந்து நீர் துளிகள் கீழே விழுந்தது.

             ஒரு பெண் தன் திருமணத்தால் தன் சுயத்தை  இழக்கிறாளா..? இல்லை  திருமணம் அவளுக்கு அவள் சுயத்தை காட்டுகிறதா…?

         நித்யாவிற்கும் , வெண்பாவிற்கும்  இதே சந்தேகம்..

“நான் கண்ணீர் விடும் அளவிற்கு பலவீனமானவளா ?” , என்று வெண்பா சிந்திக்க,  ” நிதானம் இல்லாமல் நான் யாரிடமும் இப்படி பேசியதில்லை… ஒருவரை பைத்தியம்ன்னு சொல்ற அளவுக்கு நான் முன் கோபியா ? ” , என்று நித்யா  சிந்திக்க தொடங்கினாள்.

வாழ்வின் போக்கு ஒவ்வொருவரையும் எங்கு அழைத்து செல்ல போகிறது?

 

                               கட்டங்கள் நீளும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!