கிழவிகளும் தங்கராசுவும் ஆரம்பி ஆரம்பி என்று மலருக்கு உற்சாகம் தந்தனர்.
அவளும் “டீச்சர், டீச்சர்” என்று அழைத்தாள். குரல் கேட்டு, அஞ்சுதம் வெளியே வந்தார்.
“அன்னிக்கி, சொன்ன மாதிரி பாஸாயிட்டேன். தங்கராச எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கு கல்யாணம் கட்டி வைங்க டீச்சர்” என்றாள், முடிந்த அளவு நயமாக.
“சந்தோஷம். அன்னிக்கு நானும் சொன்ன மாதிரி, வீட்டுக்குள்ளாற வர முடியாது. வாசல்லயே நில்லு. முடியலன்னா, அப்படியே வெளிய போயிரு.” என்றார், நாகரீகம் இல்லாமல்.
மலருக்கு, அந்தச் சொல்லைப் பொறுக்க முடியவில்லை. சிலையாக நின்ற மூன்று பேரையும் பார்த்தாள். அவர்கள் யாரும் அஞ்சுதத்திற்கு எதிராகப் பேசமாட்டார்கள், என்று தெரிந்தது. அதனால், மலர் கவலை கொண்டு திரும்பி நடக்கலானாள்.
சற்றும் தாமதிக்காமல், தங்கராசு ஓடிச் சென்று, மலரின் கை பிடித்து நிறுத்தினான்.
“மலரு போகாதீக”
“வாசல்லயே நிக்க சொல்றீகளா”
“இல்லே மலரு, செத்த தேரம் பொறுங்கன்னு சொல்றேன்”
“ஒங்கள பிடிக்கும் ராசு, அதுக்காக இதெல்லாம் கேட்க முடியாது”
அதற்குள் கிழவிகளுக்கு கோபம் வந்துவிட்டது. இருவரும் படியிலிருந்து இறங்கி வந்து, அஞ்சுதத்தின் முன்னால் நின்று கொண்டனர்.
“ஏன்ட்டி மலரு, செத்த தேரம் பொறுட்டி” என்று மலரிடம் சொல்லி, அவளை நிறுத்தி வைத்தனர்.
“ஏன்ட்டி, அந்தப் புள்ள படிச்சிருக்கிங்கிற, ஒரே காரணத்துக்காக, அத வேண்டாம்னு சொல்லாதட்டி”
“அவ படிச்சவளா? பிகாம் பாஸாக இத்தனை வருஷம் எடுத்திருக்கா! இவளெல்லாம் படிச்சவனு சொல்லாதீக”
“டிஸ்டிங்ஷன்ல படிச்சி, டிப்டாப்பா டிரஸ் பண்ணி, டக்கரா சம்பளம் வாங்கனாதான் படிச்சவங்கனு, அர்த்தமா? இல்லட்டி. டிலேயா படிச்சாலும், டீசன்ட்டா பேசிகிட்டு, டிசிப்பிளின்னா வாழ்றவுகளும் படிச்சவுகதான்” – பேச்சிக்கிழவியின் வாய்மொழி.
ஒருகணம் அனைவரும், பாகுபலி வில்லனின் வசனங்களை, பழவிளை வில்லேஜில் பேசுவது போல் உணர்ந்தனர்.
“பேச்சி, நம்ம இன்ங்கிலீஷ், இவுகளுக்குப் புரியாதுட்டி. நீ தமிழ்ல புரியிற மாதிரி பேசு”
“செரிட்டி. “
“ஏன்ட்டி, படிச்சேன் படிச்சேனு சொல்றீயே? எதுக்கு படிச்ச?”
“ஏன்? நான் வேல பார்க்கிறது, ஒங்களுக்குத் தெரியாதா?”
“அடிப் போடி! படிக்கிறது எதுக்கிட்டி, ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கிறதுக்கு! எது புடிக்கும், எது புடிக்காததுனு தெளிவா சொல்றதுக்கு! தைரியமா நின்னு பேசுறதுக்கு! “
“….? “
“நீ, ஒனக்கு பிடிக்காததப் பத்தி, பெத்த தாய்கிட்டயே சொல்லல. ஆனா அந்தப் புள்ள, எனக்கு இந்தப் பையனைத்தான் புடிச்சிருக்குன்னு தெளிவா சொல்லுது.” – பேச்சிக்கிழவி.
“செரியா சொன்ன பேச்சி. இவளுக்குப் பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா போதும், என் பையன இவளுக்குக் கட்டி வச்சிருக்கவே மாட்டேன்.” – முத்தாச்சி.
“…? “
“கண்டிப்பா நீ திட்டுவேன்னு தெரியும். இருந்தும் தைரியமாக, இங்கன வந்து நிக்குதுல, அது தைரியமான புள்ள. அவள சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, வீட்டுக்குள்ளாற சேர்க்க மாட்டிக்கப் பார்த்தியா, நீ தைரியம் இல்லாதவ! ” – பேச்சிக்கிழவி.
“அப்படிச் சொல்லுட்டி பேச்சி. இவ தைரியம் இல்லாதவனு, இசக்கி பிரச்சனை அன்னிக்கே தெரிஞ்சதுல” – முத்தாச்சி.
“…?”
“ஒன் பையன் மனசுல என்னா இருக்குதுனே, நீ புரிஞ்சிக்கலட்டி! ஆனா அந்தப் புள்ள, அவன் மனசப் புரிஞ்சுக்கிட்டு, நீ பேசறதெல்லாம் கேட்டுக்கிட்டு நிக்குது.” – பேச்சிக்கிழவி.
“இவ யாரத்தான் புரிஞ்சிக்கிட்டா ? ” – முத்தாச்சி.
“…? “
“படிக்கலனு ஒரு காரணத்தச் சொல்லி, ஒருத்தரப் பிடிக்கலைன்னு சொல்றதே தப்பு! அந்தத் தப்பை நீ செஞ்சது மட்டுமில்லாம, இன்னொருத்தரும் செய்வாகனு நினைக்கிற பார்த்தியா, அது பெரிய தப்புட்டி”
“…? “
அஞ்சுதம் முகம் முழுவதும் கேள்விக் குறிகள்.
“கடைசியா ஒன்னு சொல்றேன்ட்டி, கேட்டுக்கோங்க! ஏன்ட்டி மலரு நீயும்தான். நம்ம எல்லார விட ஒசந்தவன் தங்கராசுதான்! “
“ஏன்னு சொல்லுட்டி, அப்பம்தான் இவளுகளுக்குப் புரியும்”
“அன்பா பேசாம, அதட்டிப் பேசற அம்மா! நிதானமா பேசாம, நிறுத்தாம பேசற பொண்டாட்டி! ஒழுங்கா பேசாம, ஓயாம பேசற ஆச்சிங்க! என்ன பேசுறோம்னே தெரியாம பேசற மாமனார்! ரெம்ப பிடிச்சதால, இவிய அம்புட்டு பேரையும் புரிஞ்சி நடக்கிறான்ல, அதனால! “
நிசப்தங்கள்.
தங்கள் கடமை முடிந்தது போல, மேல் மூச்சு வாங்க, பேச்சுக்கிழவியும் முத்தாச்சியும் திரும்பி நடக்க ஆரம்பித்தனர்.
“எப்படி முத்து, இந்தப் பேச்சியோட பேச்சு”
“சூப்பர்ட்டி, சோடா மட்டும்தான் இல்லே”
” ஒத்துப்பாளா?”
“இதுக்கு அன்னிக்கி ஏதோ சொன்னாள்களே.”
” என்னாட்டி?”
“ஆங், வெயிட் ஆண்டு வாட்ச்”
அவர்கள், சற்றுத் தள்ளி போடப்பட்டிருந்த வயர் கட்டிலில் சென்று அமர்ந்துகொண்டனர்.
“லே, தங்கராசு ஒங்க ஆச்சிகளுக்கு கழஞ்சி வாங்கிக் கொடு. ரெம்ப பேசிருக்காக” – அஞ்சுதத்தின்
மலருக்கு கோபம் வந்துவிட்டது. திரும்பவும் வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். கைப் பிடித்து, தடுத்து நிறுத்தினான் தங்கராசு.
“போதும், விடுங்க தங்கராசு”
அவளின் அந்த அழைப்பு எப்படி இருந்தது என்றால், தகரத்தை தரையில் வைத்து ‘தரதர’ வென்று தேய்ப்பது போல் இருந்தது.
தங்கராசு, மலர் கையைப் பிடித்துக் கொண்டு, விருவிருவென்று அஞ்சுதத்தை நோக்கிச் சென்றான்.
“அம்மா” என்று அழைத்தான்.
இதுவரை, அம்மாவைப் பற்றி, இசையமைக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும், ஒருங்கே அஞ்சுதத்தின் பின் திரையில் ஒலிபரப்பானது.
“அம்மா எனக்கு மலரத்தான் ரெம்ப பிடிச்சிருக்கு”
“செரி தங்கராசு”
“மலரத்தான் கல்யாணம் கட்டனும்னு ஆசைப் படறேன்”
“செரி தங்கராசு”
“வேற யாரையும் நீங்க கட்டி வச்சா, நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்.”
“செரி தங்கராசு”
“நாளே, அவுக அப்பாகிட்ட போயி பெண்ணு கேட்கலாம்”
“செரி தங்கராசு”
“எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் செய்ங்க “
” செரி தங்கராசு “
இருவரும் காலில் விழுந்தவுடன், அஞ்சுதம் ஆசீர்வாதம் செய்தார்.
தன் மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ” இன்னிக்குத்தான் அம்ம கூட பேசனும்னு தோனிச்சா. எம்புட்டு நாளு, அம்ம ஒன் பேச்சக் கேட்க, காத்திருந்தேன் தெரியுமா? ” என்றார், தழதழுக்கும் குரலில்.
“என்னா அம்மா, சின்னப்புள்ள கணக்கா. ஆச்சி நீங்களாவது சொல்லுங்க.”
“போதும்லே. இனி என்னா வேனும்னாலும் நீயே கேளு. அவிய யாரு, நம்ம ரெண்டு பேருக்கும் இடையில”
” செரி அம்ம “
“டீச்சர், மே ஐ கம் இன் ” – மகனுக்கும் அம்மாவிற்கும் இடையே வரப்போகும் மருமகளின் குரல்.
“யூ ஆல்வேஸ் வெல்கம், மை மருமகளே” – மாமியார்.
இரு கிழவிகளும்…
“என்னாட்டி நடக்குது இங்கன.”
“வேற ஒன்னுமில்ல முத்து, மூக்க நேராவும் தொடலாம். சுத்தியும் தொடலாம். நாம சுத்தித் தொடப்பாத்தோம்! அம்புட்டுத்தான்.”
பின் கிழவிகளும் அஞ்சுதத்துடன் சேர்ந்து, ஜோடிகளை ஆசீர்வாதம் செய்தனர்.
“ராசு மாமா, எங்கூட வாங்க.” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.
இரு கிழவிகளும், அந்தச் சோடிக் கிளிகளைப் பின் தொடர்ந்தனர்.
“இப்பம் என்னாத்துக்கு எங்க பொறவாலயே வந்து, கொறச்சல் தர்றீக”
“ஏன்ட்டி, ஒனக்குத் தேவைப்படுறப்ப கொறச்சலா தெரியல. இப்பம் தெரியுதோ?”
“பாருங்க டீச்சர், இந்த ஸ்டுடென்ட்ஸ் எங்க பொறவாலயே வர்றாக.” என்றாள்.
“உள்ளாற வாங்க ரெண்டு பேரும்” – அஞ்சுதம்.
“ஏன்ட்டி, இவளுக அடிச்சிக்காட்டாலும் புடிச்சிக்கிட்டாலும், நம்மளத்தான் “
“அத்த, அம்மா உள்ளாற வர்றீகளா. அவிய ரெண்டு பேரும் பேசட்டும்.”
இத்தனை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சுதத்தின் இந்த அழைப்பைக் கேட்கிறார்கள். மறுவார்த்தை பேசாமல், வீட்டின் உள்ளே சென்றனர்.
தனிமையில் ராசுவும் ராசாத்தியும்,
“சொல்லுங்க மலரு, இப்பம் சந்தோஷமா? “
“…. “
“என்னா மலரு, பேச மாட்டிக்கீக”
“அதே, ஒங்க ஆச்சி சொன்னாகள. நான் ரெம்ப பேசறேனு. இனிமேட்டு பாருங்க நான் பேசவே மாட்டேன். நீங்களா வந்து பேசினாலும் பேச மாட்டேன்.”
இன்னும் இன்னும்! மலர் நிறுத்தவே இல்லை, தங்கராசு சிரிக்கும் வரை.
“என்னா சிரிக்கிறீக”
“பேச மாட்டேன்னு சொல்றதுக்கே, எம்புட்டு பேசறீக “
தன் அசட்டுத் தனத்தின் அடையாளமாக, அவனை அணைத்துக் கொண்டாள்.
“ராசு மாமா, எனக்குப் பரிசு தாரீகளா”
“இப்பம் எதுக்கு மலரு?”
“அதான் ஒங்க அம்மா ஒத்துக்கிட்டாகளே, அதுக்கு”
“ம்ம்ம், நான் டவுனுக்குப் போறப்ப, வாங்கித் தாரேன். “
“டவுனுக்குப் போறப்பவா? டக்குனு வேனும்,ராசு மாமா”
“மலரு, நீங்க ஏதோ பரிசு வாங்கி வச்சிருக்கீக. அதேன் இப்படி பேசுறீங்க. செரியா? “
“செரிதான் ராசு மாமா, கண்ண மூடுறீகளா, தரேன். “
ராசு மாமா கண்களை மூடியதும், ராசாத்தி ‘ப்ச்சக் ப்ச்சக்’ என்று பஞ்சுமிட்டாய் முத்தங்களை, அவன் கன்னங்களில் பதித்து விட்டாள்.
“நீங்களும் இதுகணக்கா தாரீகளா “
“இல்லே மலரு, கட்டிக்கிட்டு பொறவு தாரேன்”
“ராசு மாமா “
“… “
“தங்கராசு “
“…. “
” லே”
“….”
“எம்காம் அப்ளிக்கேஷன் வாங்கித் தாரீகளா? இல்லே பரிசு தாரீகளா?”
இத்தனை நாள் அவர்களைப் பின் தொடர்வதால், நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்! ராசு என்ன முடிவு எடுத்திருப்பான் என்று!
******
அஞ்சிதம் முறைப்படி செல்லத்துரை வீட்டிற்குச் சென்று, மலரைப் பெண் கேட்டார். இனிதே நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதியும் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட தேதியில் திருமணமும் நடந்தது.
திருமணத்திற்கு இசக்கி, கண்ணன் தம்பதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களைப் பார்த்த, செல்லத்துரைக்குச் சந்தோஷமாக இருந்தது. எனினும் சிறு நிம்மதி இல்லை.
இரு பெண்களும், அவர்களாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்லவா! அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையே, அவருக்கு அந்த நிம்மதியைத் தரும். காலப்போக்கில் அந்த நிம்மதி, கண்டிப்பாக கிட்டும்!
திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமண இரவும் வந்தது.
திருமணம் நிச்சயமானதைக் கொண்டாடவே, கன்னங்களால் மிட்டாய் உண்டவர்கள். கல்யாண இரவைக் கதியின்றி விடுவார்களா? இருந்தும் ‘நாளை, என்ற ஒன்று உண்டு’ என்ற வாசகத்தின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையில், நடுச்சாமத்திற்கு மேல் நித்திரைக் கொண்டார்கள்.
*****
உச்சசாமத்தில், பொறவாசலில், கயிற்றுக்கட்டிலில் – இருகிழவிகளும்.
“என்னாட்டி பேச்சி, எல்லாருக்கும் கார்டு போட்டு முடிச்சாச்சா?”
“இல்லே முத்து, ஒன்னொரு காரடு மிச்சம் இருக்கு.”
“என்னாட்டி அது?”
“எண்டு காரடுதான்”
“போட்டுருவோமா”
******* the end card *******