kiyaa-2

coverpage-6b495601

kiyaa-2

கிய்யா – 2

விஜயபூபதி தோட்டத்தில் இருக்கும் இலக்கியாவின் வீட்டில் விஜயபூபதிக்கும், இலக்கியாவிற்கும் விவாதம் சற்று காட்டமாகவே அரங்கேற, குருவிகளோ கிய்யா… கிய்யா… என்று சத்தம் எழுப்பி கொண்டு பறந்து கொண்டிருந்தன.

“எங்க ஆடம்பரம் வேண்டாம் அப்படின்னா, எதுக்கு இலக்கியா எங்க வீட்டில் இருக்க? உங்க அம்மா, இதெல்லாம் வேண்டாமுன்னு போனவங்க தானே. நீயும் இதெல்லாம் வேண்டாமுன்னு போகவேண்டியது தானே?” விஜயபூபதி ஏளனமாக உதட்டை சுளித்தான்.

“எங்களுக்கு கிள்ளி கொடுக்க தெரியாது. அள்ளி கொடுக்க தான் தெரியும்” அவன் உதட்டின் புன்னகை இன்னும் பெரிதாக விரிந்தது. ஸ்ரீராமின் முகம் வாட பாட்டி சோர்வாக அமர்ந்தார்.

இலக்கியாவின் கண்கள் பளபளக்க, தன் கண்ணீரை வெளிக்காட்டாமல், “அவங்க , இவங்க சொல்ற வார்த்தைக்கு பயந்தெல்லாம் நான் இந்த வீட்டை விட்டு போக முடியாது.” அழுத்தமாக கூறினாள்.

“அவங்க, இவங்கன்னு சொன்ன, செவுட்டை பேத்துருவேன் பார்த்துக்கோ. ஏன் முறை சொல்ல மாட்டீங்களா நீங்க?” பூபதி கைகளை ஓங்க, “முறை சொல்ற மாதிரி நீங்க நடந்துக்கலை. உங்க அம்மாவும் நடந்துக்கலை. என் மாமா சொல்பேச்சை கேட்டு மட்டுந்தான் நான் இங்க இருக்கிறேன். என் சம்பாத்தியத்தில் நான் வாழறேன்.” அவள் அசட்டையாக தோள்களை குலுக்கினாள்.

“அம்மா சொன்னது சரி தான். திமிர் பிடித்தவள்.” அவன் முணுமுணுக்க, “அது இல்லைனா, அம்மாவும், பிள்ளையும் சேர்ந்து என் தலையில் மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்த்து அரைச்சிருவீங்க ” அவள் நக்கலாக கூறினாள்.

“ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” பாட்டி கேட்க, “பாட்டி, உங்க பேத்தி தலையில் அவ சொல்றதை எல்லாம் வைத்து, அம்மி குழவியால் இடிக்கணும்” விஜயபூபதி மீண்டும் பெருங்குரலில் சிரித்தான்.

“நீங்க என் தலையில் குழவியை வச்சா நான் உங்க தலையிலும், உங்க அம்மா தலையிலும் அம்மியையே வைத்து தட்டுவேன்” அவன் முன் மூக்கு வெடவெடக்க நின்றாள் இலக்கியா.

“அம்மாவை ஏன் இழுக்கற? உனக்கு நிறைய செய்யணுமுன்னு நினைக்குற அவங்க நல்ல மனசை புரிஞ்சிக்க  உனக்கு தான் தெரியலை” அவன் பற்களை நறநறக்க, “சரி, நான் புரியாதவளாகவே இருந்துட்டு போறேன்” அவள் உதட்டை பிதுக்கினாள்.

“பாட்டி, அம்மா எல்லாருக்கும் ட்ரெஸ்ஸும், இலக்கியாவுக்கு நகையும் கொடுத்துவிட்டிருக்காங்க.” அவன் வைத்துவிட்டு கிளம்ப எத்தனிக்க, “நீங்களா எடுத்திட்டு போனா, உங்களுக்கு மரியாதை. இல்லைனா, எல்லாத்தையும் விட்டெறிவேன், உங்க எல்லார் முகத்திலையும்.” அவள் அவனை இப்பொழுது சற்று கோபமாக எச்சரித்தாள்.

“ஒய்…” அவன் தன் ஆள்காட்டி விரலை உயர்த்த, “நான் உங்க பிச்சையில் வாழலை” அவள் குரல் நடுங்கியது.

அவன் கோபம் அடங்கியது. “ஏன் அப்படி நினைக்குற இலக்கியா?” அவன் தன்மையாக கேட்டான்.

“இன்னைக்கு கொடுப்பீங்க. இன்னொரு நாள் சொல்லி காணப்பீங்க. இப்ப கொஞ்சம் நேரம் முன்னாடி கேட்டீங்களே, ஏன் உங்க வீட்டில் இருக்கிறேன்னு? அந்த மாதிரி…” அவள் தன் மூச்சை உள்ளிழுத்து கொண்டாள்.

“இலக்கியா, அது ஏதோ கோபத்தில்” அவன் குரலில் உரிமை கலந்த சமாதானம் இருக்க, “எந்த கோபத்துக்காகவும், என் தன்மானத்தை நான் விட்டுக்கொடுக்க முடியாது.” அவள் குரலில் உறுதி இருக்க, அவன் முகத்தில் குறும்பு புன்னகை எட்டி பார்த்தது.

“என்ன விஜய்யபூபதிக்கு சிரிப்பு?” அவள் முகத்திலும் புன்னகை.

“அது என்ன விஜய்யபூபதி? எஸ்ட்ராவா ஒரு ‘ய்’…” அவன் அவள் தலையை தட்ட, “கையை எடுங்க… உங்களுக்கு ராஜ பரம்பரைன்னு நினைப்பு. அது தான் உங்க பெயரை மாஸா சொல்றேன்.” அவள் கைகளை விரித்து குறும்போடு கூறினாள்.

அவன் சிரித்து கொண்டான்.

“இப்படி ஒற்றுமையா இருங்க. விஜய் என் காலத்துக்கு அப்புறம், இலக்கியா ஸ்ரீராம்க்கு நீ தான் பொறுப்பு. இலக்கியாவுக்கு நீ நல்ல மாப்பிள்ளை பார்க்கணும். ஸ்ரீராமை நல்லா படிக்க வைக்கணும்.” பாட்டி கூறிக்கொண்டே செல்ல  பேரன் பாட்டியை இடைமறித்தான்.

“அது என்ன பாட்டி, உங்க காலத்துக்கு அப்புறம்? நீங்க இருக்கும் பொழுதே இரண்டு பேரும் என் பொறுப்பு தான் பாட்டி. உங்க பேத்தியை மட்டும் கம்மியா பேச சொல்லுங்க.” அவன் இலக்கியாவை பார்த்து உதட்டை சுளித்தான்.

பாட்டி இப்பொழுது பெருங்குரலில் சிரிக்க, இலக்கியா இப்பொழுது அவனை பர்த்து முறைத்தாள்.

“சரி பாட்டி. நான் கிளம்புறேன்” அவன் கிளம்ப, “என்ன அரசர், அவர் மனம் கவர்ந்த காதலியை பார்க்க செல்கிறாரோ?” அவள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூற, அவன் அகப்பட்டுக்கொண்டவன் போல் திருதிருவென்று முழித்தான்.

“யாருக்கும் தெரியாத விஷயம் உனக்கு மட்டும் எப்படி தெரியும்?” அவன் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுக்க, “நீங்க அரசரா இருக்கலாம். அரசியை தேடி போகலாம். நான் மதி மந்திரியா இருக்க கூடாதா?” அவள் கண்சிமிட்டி சிரித்தாள்.

 அவன் முகத்தில் வெட்கம்  சூழ, “என்ன பேசிட்டே இருக்க இலக்கியா? இன்னைக்கு நீ எதோ புது கேக் செய்தியே அதை கொடு” என்று பாட்டி கூற, இலக்கியா வேகமாக உள்ளே சென்றாள்.

“இல்லை பாட்டி, நேரம் ஆச்சு…” அவன் கூறி முடிப்பதற்குள் இலக்கியா அவனிடம் தட்டை நீட்ட, அவன் கண்களை விரித்தான்.

“ஏய், பார்க்கவே செம்மையா இருக்கு. பழங்கள் போட்டு பண்ணிருக்க, இடையில் க்ரீம். அதுக்கு மேல ஒரு ட்ரான்ஸ்பரென்ட் லேயர். அது என்ன?” அவன் கேட்க, “அதெல்லாம் சொல்ல முடியாது. அது என் தொழில் ரகசியம். ஆனால், அதை விட,  நான் வேற ஒரு விஷயம் சொல்லட்டுமா?” இலக்கியா தன் புருவத்தை உயர்த்தினாள்.

‘அப்படி என்ன விஷயம்’ அவன் ஆர்வமாக கண்களை விரிக்க, “இந்த கேக் உங்க ஆளுக்கு டெலிவரி செய்தேன் அவங்க பிறந்த நாளுக்கு. அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.” இலக்கியா அவனை கேலி செய்து தன் தலை முடி அசைய சிரித்தாள்.

“அப்படியா, நான் துர்காவை பார்க்க தான் போறேன். எனக்கு இன்னொரு பீஸ் தா” அவன் கேட்க, “அட, அரசரும் இந்த ஏழையிடம் கையேந்தும் நிலையா? அரசர் கேட்டு நான் மறுக்க முடியுமா? இந்த ஏழையால் முடிந்த செயல். உடனே தரேன்” அவள் சிட்டாக பறந்து, சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவனும் அவள் பின்னோடே சென்றான்.

“என்னை அரசர் உன்னை ஏழைன்னு ஏன் சொல்ற? நீ தான் அப்படி நினைக்குற.” அவன் எடுத்துரைக்க முயன்றான்.

 “அப்படி நினைக்க வச்சிட்டாங்க உங்க அம்மா. உங்க அம்மா,  சொல்றது ஓரளவுக்கு  நிஜம். எங்களுக்கு வெளிய பாதுகாப்பு கிடையாது. நான் உங்க வீட்டு நிழலில் தானே இருக்கேன். ஆனால், என் சுய உழைப்பில் வாழறேன். என் கேக் பிசினெஸ் என்னை காப்பாற்றுது. இதோ நீங்களே என்னிடம் காத்து நிக்குற மாதிரி.” அவள் சற்று இலகுவான குரலில் ஆரம்பித்து கம்பீரமாக முடித்தாள்.

“உன் தொழிலை பற்றி ரொம்ப பேச வேண்டாம். உன் தொழில் ரகசியம் கண்டுபிடித்து, உனக்கெதிராவே நான் பிசினெஸ் ஆரம்பிக்கிறேன்.” அவனும் கேலி போல் சமாதானம் செய்ய, “கிய்யா… கிய்யா…” என்று குருவி அவனை கொத்துவது போல அவனை நெருங்க அவள் கிண்கிணியாக சிரித்தாள்.

“என் பிசினெஸ் பத்தி பேசினா, என் வீடு குருவிக்கு கோபம் வரும்” அவள் கண்களை விரித்து அவனை மிரட்ட, “ஏய், இது என்ன உனக்கு பாதுகாப்பா?” அவன் கடுகடுக்க, அந்த குருவி அவள் முகத்தை தடவி பறந்து சென்றது.

அவன் கிளம்ப எத்தனிக்க, “ரொம்ப நேரம் ரொமான்ஸ் பண்ணாம சீக்கிரம் வாங்க” அவள் அவனிடம் வம்பிழுக்க, அவன் அவளை பார்த்து முறைத்து விட்டு, ஸ்ரீராம் பாட்டியிடம் முறைப்படி கூறிக்கொண்டு கிளம்பினான்.

துர்கா, விஜயபூபதியின் வருகைக்காக காத்திருந்தாள். அவன் அவளருகே பின்னோடு சென்று, “ப்…பா…” என்று சத்தம் செய்ய, அவள் பயந்து பின்னே சரிந்து அவன் மார்பில் சாய, அவன் அவளை வாகாக பிடித்து கொண்டான்.

அவள் இதயம் வேகமாக துடிக்க, “பயந்துட்டியா?” அவன் அவளை பாதுகாப்பாக கைகளில் பிடித்துக்கொண்டு செவியோரமாக கிசுகிசுத்தான்.

“வந்தது லேட். இதுல என்னை பயம்புடுத்தினா எப்படி?” துர்கா காதலியாய் முகம் திருப்பிக்கொள்ள, அவள் கேசம் அவனை தீண்டி காதல் பேசியது.

அவள் முகம் திருப்பிக்கொள்ள, அவன் அவளை தன்பக்கம் திருப்பினான்.

“எப்பாவது தான் பார்க்க முடியுது. இதுல, இப்படி முகம் திருப்பிக்கிட்டா எப்படி?” அவன் குறும்பாய் கண்சிமிட்ட, “பொய்… அது தான் தினமும் ஆஃபிசில்  பார்க்கிறோமே” அவள் இன்னும் கோபம் கொண்டாள்.

“நான் என் காதலியா இப்ப தானே பார்க்குறேன்” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்.

“நான் ஏன் லேட்ன்னு கேட்டேன்.” அவள் செல்லமாக கோபித்து கொண்டு முன்னே நடக்க, அவன் அவளை இடையோடு அணைத்து தன் கைவளைவிற்குள் நிறுத்தினான்.

சென்னையிலிருந்து சற்று வெளியே இருந்த அந்த மாலில் அத்தனை கூட்டம் இல்லை. அவளும் உரிமையாய் அவன்  மீது சாய்ந்து கொண்டு கோபித்து கொண்டாள்.

அவன் அவளிடம் தன் கைகளிலிருந்த டப்பாவை நீட்டினான்.”இதனால் தான் லேட்.” அவன் கூற, “ஹே… எனக்கு பிடித்த கேக். வெளிய பார்க்க நுங்கு மாதிரி. ஆனால், நுங்கு இல்லை. ஆனால், நுங்கு டேஸ்ட் வரும். நுங்கு வாசனையில் ஜெல்லி கேக். அதுவும், உள்ள நிறைய பழங்கள் போட்டு, அது வெளியில் தெரியுற மாதிரி ட்ரான்ஸ்பரெண்டா.” துர்கா கண்களை விரித்தாள்.

“உனக்கு பிடிக்குமுன்னு இலக்கியா சொன்னா.” அவன் கூற,  துர்கா புரியாமல் பார்த்தாள்.

“நீ லாஸ்ட் வீக் இலக்கியா கிட்ட தானே கேக் ஆர்டர் பண்ணிருக்க?” அவன் கேட்க, “எஸ்… எஸ்… அவங்க பேரு இலக்கியா தான். அவங்களை உனக்கு தெரியுமா?” துர்கா ஆர்வமாக கேட்டாள்.

“என் கஸின் தான்.” விஜயபூபதி தன் தோள்களை குலுக்கினான்.

“அவங்க கிட்ட நான் கிளாஸ் போகட்டுமா? எனக்கு இதை கத்துக்கணும்னு ரொம்ப ஆசை. இப்படி விதவிதமா கேக் செய்து எல்லாத்தயும் அசத்தனும்முனு எனக்கு ரொம்ப ஆசை. எனக்காக அவங்க கிட்ட பேசறியா?” துர்கா ஆர்வமாக வினவ, “இலக்கியா இந்த பிசினெஸ் தான் செய்யறா. நீயா கேட்டால் கூட சொல்லி தருவா. நான் கேட்டேன்னு வை, சத்தியமா சொல்லி தர்ற ஐடியா இருந்தா கூட செய்ய மாட்டா. எங்களுக்குள் அவ்வளவு ஏகா பொருத்தம்.” அவன் கூற, துர்கா முகத்தை சுருக்கி கொண்டாள்.

அவன் அவளை தன் பக்கம் திருப்பி, அவள் இதழ்களை ஆசையாக வருடினான்.

“இது சுருங்கினா, என் மனசு தாங்காது. நீ கேளு, அவ சொல்லி கொடுப்பா. இல்லைனா, நான் அவளை மிரட்டிடுறேன்.” அவன் கண்களை உருட்ட, “ஐயோ, வேண்டாம். அவங்க பாவம். நானே பேசிக்குறேன்.” துர்கா விலகி கொண்டாள்.

“எதுக்கு இப்படி தள்ளி போற?” அவன் கோபித்து கொள்ள, “நம்ம ஜஸ்ட் லவ்வர்ஸ். இன்னும் கல்யாணம் ஆகலை” அவள் கூற, “கல்யாணத்துக்கு அவசரமுன்னு சொல்லறீயா?” அவன் பெருங்குரலில் சிரிக்க, அவள் அவன் வாயை மூடினாள்.

“எதுக்கு இப்படி சிரிக்கிற பூபதி. எல்லாரும் நம்மளை பார்க்க போறாங்க” அவள் கூற, அவன் அவள் தோள்களில் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டான்.

“எங்க வீட்டில் மாப்பிளை பார்க்குறாங்க பூபதி.” அவள் கூற, அவன் முகத்தில் சீற்றம்.

“இதை என்ன இவ்வளவு நேரம் கழித்து சொல்ற துர்கா?” அவன் கோபித்துக்கொள்ள, “நீ இப்ப தானே வந்த? ஆஃபிசில் இதை பேச வேண்டாமுன்னு…” அவள் இழுக்க, “உன் கொள்கைக்கு ஒரு அளவே இல்லை.” அவன் விலகி நடக்க ஆரம்பித்தான்.

“பூபதி…” அவள் குரல் ஏக்கமாக அழைக்க, அவன் சட்டென்று திரும்பி அவளை அணைத்து கொண்டான். அந்த ஏக்கம் கூட தாங்க முடியாதவன் போல்!

“என் மேல கோபப்படுவியா?” அவள் சிணுங்க, “ச்… ச்ச…” அதெல்லாம் இல்லை அவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“நீ உடனே சொல்லலையேன்னு…” அவன் அவளை சமாதானம் செய்ய, “நீ என் மேல கொஞ்சம் கோபம் பட்டா கூடா நான் தாங்க மாட்டேன்.” அவள் கண்கலங்க, “வருஷ பிறப்பு அதுவுமா இப்படி கண்கலங்குவாங்களா?” அவன் அவள் விழிநீரை துடைத்தான்.

“கண்ணை மூடு” அவன் ஆணையிட, அவன் அவள் கழுத்தில், மெல்லிய சங்கிலியையே அணிவித்தான்.

அவன் விரல்கள் அவள் கழுத்தை தீண்ட, அவள் பதறிக்கொண்டு விலகினாள்.

“பூபதி என்ன பண்ற?” அவள் குரலில் அதிகாரம் இருக்க, “அப்படியே நில் துர்கா. இது என் பரிசு.” அவன் வைரம் பதித்த சங்கிலியை அவளுக்கு அணிவித்தான்.

“இது எதுக்கு பூபதி. இந்த விலை உயர்ந்த பரிசு எனக்கு வேண்டாம். உன் பணத்துக்காக நான் உன்னை காதலிக்கலை” அவள் கழட்ட முயற்சிக்க, “நான் அணிவித்திருக்கேன். உனக்கு தாலி போல. விரைவில் உன்னை பொண்ணு கேட்டு வருவேன்.” அவன் கைகளை தன் கைகளுக்குள் புதைத்து கொண்டு வாக்களித்தான்.

“அக்கினி சாட்சியா, பெரியவங்க வாழ்த்து சொல்லி கட்டினா தான் அது தாலி. எல்லாம் தாலி ஆகுமா? நீ என்னை பொண்ணு கேட்டு, கல்யாணம் செய்திட்டு என்ன வேணும்ன்னாலும் கொடு. நான் வாங்கிக்குறேன்.” அவள் கழட்ட முயற்சிக்க, “என்ன வேண்டுமினாலும் கொடுக்கலாமா?” அவன் பேச்சை மாற்றினான் அவள் கன்னத்தை ரசனையோடு வருடியபடி.

“பேச்சை மாத்தாத பூபதி.” அவள் குழைய, அவளை தன்னோடு சேர்த்து கொண்டு, “இது என் காதல் பரிசு. நீ கழட்ட கூடாது.” அவள் கூற, “நீ கொடுத்த கேக் போதும் எனக்கு. நான் இப்படி உன்கிட்ட பரிசு வாங்கினா, நான் உன்னை பணத்துக்காக விரும்புறேன்னு யாரவது சொல்லிட்டா, நான்…” அவள் இதழ்களை மூடினான் அவன்.

“நீ ஏதாவது லூசு மாதிரி பேசினா, என் தண்டனை இப்படி தான் இருக்கும்.” அவன் குரல் அவள் செவியை தீண்டி, அவள் மனதை தொட்டது.

“என் பரிசு என்னைக்கும் இப்படி தான் பெருசா இருக்கும். எனக்கு தெரியாதா என் துர்காவை பத்தி.” அவன் குரலில் அழுத்தம். அவன் பிடியில் அழுத்தம். அவன் காதலில் அவள் கரைந்தாள். அவன் பிடிவாதத்தில் அவள் கரைந்தாள்.

“நான் சீக்கிரம் உன்னை பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வருவேன்.” அவன் அவள் சுவாசத்தை உணர்ந்து கொண்டே கூறினான்.

“ம்…” அவள் சம்மதம் கொட்டினாள். அவள் உடல் எங்கும் ஆனந்த பரவசம்.

“என்னை அவ்வளவு பிடிக்குமா?” அவன் காதலில் பிதற்றினான்.  அவள் காதல் மயக்கத்தில் “ம்…” கொட்டினாள்.

“ஏன்?” அவன் அவளில் மயங்க முயன்றான். அவள் அவன் கைவளைவில் அண்ணாந்து  உதட்டை பிதுக்கி, கண்களில் காதலை தேக்கி அவனை உரிமையாய் பார்த்தாள்.

அவள் பார்வை போதும், என்று அவன் காதலில் கிறங்கி நின்றான்.

அவன் ஒற்றை விரல் அவள் கழுத்தை தீண்டாமல், அவன் அணிவித்த சங்கிலியை தீண்டியது. “இதை கழட்ட கூடாது.” அவன் கைகளை நீட்டி வினவ, அவள் தன் இதழ்களை பதித்து, சம்மதம் தெரிவித்தாள்.

அவர்கள் மனம் மணம் புரிந்து கொள்ளத்தான் விழைந்தது. காலம் கனிய காத்திருந்தது.

காதல் காலம் கனிய காத்திருக்க

             காலம் கனியுமா?

சிறகுகள் விரியும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!