Kiyaa-5

coverpage-57e94bfb
Akila Kannan

கிய்யா – 5

படகு சவாரியை முடித்து கொண்டு கரைக்கு வந்ததும் காரை வீட்டை நோக்கி செலுத்தினான் விஜயபூபதி. அவனருகே, துர்கா அமர்ந்திருக்க, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது.

   இப்பொழுது காரில் உள்ள ஸ்பீக்கரை ஆன் செய்திருந்தான்.

“அத்தான், பாட்டி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கொண்டு போக ஆம்புலன்ஸ் கூப்பிடலாமுன்னு பார்த்தா, கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு தான் அட்மிட் பண்ணுவோமுன்னு சொல்றாங்க. நீங்க நம்ம ஃபமிலி டாக்டரை வீட்டுக்கு வர சொல்லுங்களேன். நான் அவரை கூப்பிட்டா வருவாங்களானு தெரியாது.” இலக்கியா அழுத்தமாக பேசி கொண்டே போனாள்.

“நான் நம்ம ஃபமிலி டாக்டரை வர சொல்றேன். கொஞ்ச நேரத்தில் நான் வீட்டில் இருப்பேன். நீ பயப்படாத. பதட்டப்படாத” என்று விஜபூபதி கூற, “நான் ஒன்னும் பயப்படலை. பதட்டப்படலை” அந்த நேரத்திலும் இலக்கியா மெட்டுவிடாமல் பேசினாள்.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இவளுக்கு பிரச்சனை வந்தா மட்டும் அத்தான் நொத்தான்னு என் கிட்ட வர வேண்டியது” மனதிற்குள் கடுகடுத்து கொண்டான் விஜயபூபதி.

அவன் மருத்துவருக்கு அழைத்து, அவரை வீட்டிற்கு அனுப்பினான்.

“துர்கா, உன்னை வழியில் இறக்கி விடுறேன்.” அவன் கூற, “சரி பூபதி. நீ சீக்கிரம் போய், பாட்டியை பாரு.” துர்கா வழியில் இறங்க, அவன் வண்டி வீட்டை நோக்கி பறந்தது.

மருத்துவர் உள்ளே பாட்டியை பரிசோத்தித்து கொண்டிருக்க, வெளியே ரங்கநாத பூபதி, நிர்மலாதேவி, ஸ்ரீராம், இலக்கியா நின்று கொண்டிருந்தனர்.

“நான் தான் உங்க அம்மாவை இங்க வந்து இருக்க வேண்டாம். நம்ம வீட்டில் வந்து இருக்கலாமுன்னு சொல்றேன்னில்லை. கேட்க வேண்டியது தானே?” என்று கடுகடுத்தார் நிர்மலாதேவி.

“அம்மா, இப்ப எதுக்கு அதை பேசிகிட்டு…” விஜயபூபதி கூற, அவன் தாய் மௌனித்து கொண்டார்.

“நீ ஏன் இப்படி இருக்க?” விஜயபூபதி இலக்கியாவை அதட்டினான்.

“பாட்டிக்கு எதுவும் ஆக கூடாது. அப்படி ஏதாவது ஆகிட்டா, நாங்க திரும்ப அனாதை ஆகிருவோம்” இலக்கியாவின் குரலில் மெல்லிய தடுமாற்றம்.

“லூசா நீ. நாங்கெல்லாம் இல்லை.” அவன் பற்களை நறநறத்துக்கொண்டு அவளை நெருங்கினான்.

“விஜயபூபதி குடும்பம் கிட்ட கையேந்துற நிலைமை வந்திற கூடாதுன்னு தான் நான் வேண்டுறேன். என் செலவில் என் தம்பியை படிக்க வைப்பேன். என் செலவில் பாட்டியை பார்த்துப்பேன். பாட்டி எங்க கூட இருந்தா மட்டும் போதும். எனக்கு பக்க பலமா இருக்கும்.” இலக்கியாவின் கண்கள் கலங்கியது.

“உனக்கு கல்யாணம் காட்சி எல்லாம், மேல போன உன் அம்மா அப்பாவா வந்து பண்ணுவாங்க” நிர்மலாதேவி இலக்கியாவை இடித்துரைத்தார்.

“எனக்கு கல்யாணம் கண்ராவி எல்லாம் வேண்டாம். நான் உங்க கிட்ட வந்து எனக்கு கல்யாணம் செய்ங்கன்னு கெஞ்சிக்கிட்டு நிக்கலை.” இலக்கியா முகத்தை திருப்பி கொண்டாள்.

“இலக்கியா…” விஜயபூபதி அவளை அதட்டினான்.

“பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?” அவன் அவளை மிரட்ட, “பெரியவங்க, பெரியவங்க மாதிரி பேசினா நான் ஏன் இப்படிப் பேச போறேன்.” அவள் முறுக்கி கொண்டாள்.

“திமிர பார்த்தியா டா?” நிர்மலா தேவி தன் மகனிடம் குற்றப்பத்திரிக்கை படிக்க, “நான் உங்க வீட்டில் இல்லை. நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட. நீங்க தப்பா பேசினா, தப்புனு சொல்லுவேன்.” என்று இலக்கியா சீறினாள்.

‘இவர்கள் சண்டை ஒரு நாளும் முடியாது’ என்று ரங்கநாத பூபதியும், விஜயபூபதியும் அமர்ந்து விட, “அக்கா, இப்ப பாட்டிக்கு உடம்பு சரி இல்லை. இந்த பேச்செல்லாம் அவசியமா? கொஞ்சம் அமைதியா இரேன்.” ஸ்ரீராம், தன் தமக்கையை கண்டித்தான்.

இலக்கியா மேலே எதுவும் பேசாமல் மௌனித்தாள்.

“உங்க பாட்டி என்னடா இப்படி நேரங்கெட்ட நேரத்துல படுத்துட்டாங்க. நாம கல்யாணம் வேற வச்சிருக்கோம். ஏதாவது ஒன்னுக்கடக்க ஒன்னு ஆகிருச்சுன்னா?” என்று நிர்மலாதேவி புலம்ப, இலக்கியா விசுக்கென்று அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“நிர்மலா…” ரங்கநாத பூபதியின் குரல் அவரை அதட்ட, அவர் கப்சிப் என்று மௌனித்து கொண்டார்.

அங்கு மௌனம் நிலவ, மருத்துவர் வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது. அவர் சில மருந்தை எழுதி கொடுக்க, விஜயபூபதி வாங்கி கொடுத்தான்.

“பிரஷர் தான். வயசு ஆகுதில்லையா?” என்று அவர் முடித்து கொண்டார்.

கொஞ்ச நேரத்தில் பாட்டி கண்விழித்து கொள்ள, “என்ன எல்லாரும் பயந்துடீங்களா? நான் அதுக்குள்ளே எல்லாம் மேல போகமாட்டேன். என் ரெண்டு பேரன் கல்யாணத்தை பார்க்கணும். இலக்கியா குழந்தையை வளர்க்கணும். எனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கு?” என்று அவர் கண்விழித்த  கொஞ்ச நேரத்தில் கம்பீரமாக பேசினார்.

கடமை முடிந்தது என்று நிர்மலாதேவி வீட்டிற்கு செல்ல,  தந்தையும் மகனும் சற்று நேரம் அமர்ந்து பேசிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

திருமண நாள் நெருங்கி கொண்டிருக்க, கல்யாண வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது.

திருமணத்திற்கு  சில நாட்களுக்கு முன்.

“துர்கா, இன்னைக்கு ஃபிரெண்ட்ஸ் கூட  பச்சேலர்ஸ் பார்ட்டி” என்று விஜயபூபதி கூற, “ட்ரிங்க்ஸ் எல்லாம் உண்டா?” வருங்கால மனைவி என்ற உரிமையில் அதிகாரமாக கேட்டாள் துர்கா.

“மேடம், பூபதி இஸ் எ டீடோட்டலர். என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. ஜாலியா இருக்கனுமுன்னு நினச்சா பைக் ரைடு போவோம். அவ்வுளவு தான். இன்னைக்கு ஒரு ஜாலி டே. நல்ல ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு, பைக் ரைட் போயிட்டு வருவேன். உனக்கு நைட் கூப்பிடுறேன்.” மேலும் சிலபல காதல் பேச்சுக்களை பேசிவிட்டு அலைபேசி பேச்சை முடித்து கொண்டான் விஜயபூபதி.

துர்கா முகத்தில் ஒரு பெருமித புன்னகை. சந்தோஷ புன்னகை.

‘என்கிட்ட சொல்லாம, என்கிட்டே கேட்காம எதையும் செய்யறதில்லை.’ அவள் தன் வருங்கால கணவனை மெச்சி கொண்டாள்.

விஜயபூபதி, தன் நண்பர்களோடு உணவை முடித்து கொண்டு  பேசிவிட்டு கிளம்ப  மணி இரவு பத்தை எட்டி இருந்தது.

அதன் பின் அந்த பைபாஸ் சாலையில் உல்லாசமாக தன் பைக்கை  செலுத்தி கொண்டிருந்தான்.

அவனுக்கு பின் பக்கமாக வந்த லாரி, சற்று வேகமாக வந்தது. அதன் வேகத்தை கணக்கிட்ட விஜயபூபதி சற்று வண்டியை ஓரமாக செலுத்தினான்.

அதற்குள் ஒரு நாய் குறுக்கே வந்துவிட, வேகமாக இவனை கடக்க எத்தனித்த லாரி, இவன் மீது மோத, விஜயபூபதியின் பைக் தூரே எறியப்பட்டது.

அம்மா என்ற அலறலோடு ரத்த வெள்ளத்தில் விஜயபூபதி மெல்ல மெல்ல மயங்கி சரிந்தான்.

அதன் பின், விஜபூபதியின் வீட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    கொரோனா காலம் என்பதால், டெஸ்ட் எடுத்துவிட்டு, ரிசல்ட் வந்தபிறகே அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  விஜயபூபதிக்கு அவசர சிகிச்சை நடந்தது.

‘ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் எந்த காயமும் இல்லை’ என்று மருத்துவர்கள் கூறினர். தோள்பட்டை, கை என்று சரமாரியாக அவனுக்கு அடிபட்டிருந்தது.

“ஸ்பைனல் கார்ட் இஞ்சூரி” என்று கூறினர். அதன் பின்னும் பல விஷயங்களை கூறினர்.

சுமார் இருபத்தி ஒரு நாட்கள் அவனுக்கு சிகிச்சை நடந்தது.

 துர்கா வீட்டினரும், இலக்கியா ஸ்ரீராம்  என அனைவரும் மருத்துவமனையில் தான் குடி இருந்தனர்.  தொற்று காலம் என்பதால் இவர்களுக்கு, விஜயபூபதியை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

 முப்பது நாட்களுக்கு பின், அவனை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

      அவர்கள் கூறியதில் அனைவருக்கும் புரிந்தது என்னவென்றால், விஜயபூபதியால்  இனி நடக்க முடியாது. அவன் இடுப்பிற்கு கீழ் பகுதி அதன் உணர்வை இழந்துவிட்டது.

இப்பொழுது அவனுக்கு இருக்கும் உடல்நிலையில் எந்த அறுவை சிகிச்சையையும் செய்ய முடியாது. சில மாதங்களுக்கு பின் செய்யலாம். அதுவும்  இந்த கொரோனா காலத்தில், பல மருத்துவர்கள் இல்லாததால், சில காலம் கடந்தே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறினர்.

துர்கா கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். இலக்கியா தான் அவளை தேற்றி கொண்டிருந்தாள். 

விஜயபூபதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். அவன் எதுவும் பேசவில்லை.  அவன் முகம் பாறையாக இறுகி இருந்தது. அவனுக்கு உடல் எங்கும் வலித்தது.

நிர்மலாதேவி, ரங்கநாத பூபதி இடிந்து போய் அமர்ந்திருந்தனர். பேரனின் வாழ்வை எண்ணி  பாட்டி மனதோடு விசும்பி கொண்டிருந்தார்.

இலக்கியாவிற்கு பாட்டியை சமாதானம் செய்யவே நேரம் சரியாக இருந்தது.

         நிர்மலாதேவியின் மொத்த வருத்தமும், இயலாமையும்  கோபமாகவே இலக்கியாவின் மீதே திரும்பியது. நிர்மலா தேவியின் திட்டுக்கு பயந்தே விஜயபூபதி வீட்டிற்கு சென்று அவனை பார்க்கவே அஞ்சினாள் இலக்கியா.

விஜயபூபதிக்கு தனி அறை ஏற்பாடு செய்திருந்தனர். அவன் இருக்கும் அறைக்கு செல்லவே அனைவரும் அஞ்சினர். கேட்ட கேள்விக்கு கூட விஜயபூபதி பதில் சொல்லவில்லை.

அவனிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று தெரியாமல் அனைவரும் விழித்து கொண்டிருக்க, துர்கா அவன் அறைக்கு சென்றாள்.

அவன் தலை கோதினாள். அவன் அருகே அமர்ந்து அவன் மார்பில் சரிந்து விம்மினாள்.

“சீக்கிரம் என் கழுத்தில் தாலியை கட்டிடு பூபதி. நான் உன் பக்கத்துலயே இருந்து உன்னை பார்த்துக்கிறேன்.” துர்கா அவன் தலை கோதி கூறினாள்.

“அதாவது, நான் உன்னை இனி பார்க்க முடியாது. நீ தான் என்னை பார்க்க முடியுமுன்னு சொல்லாம சொல்லறீயா துர்கா?” அவன் கேள்வி கூர்மையாக வந்து விழுந்தது.

அவன் கேள்வியில் துர்கா அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்த துர்காவின் தந்தை, விஜயபூபதியின் பெற்றோர் எல்லோரும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர்.

“எல்லாம் சரியாகிரும் விஜய்” அவன் தாயார் கூற, அவன் எதுவும் பேசவில்லை. தலை அசைத்து கொண்டான்.

“துர்கா, கிளம்புவோமா?” என்று அவள் தந்தை கேட்க, “அப்பா, நான் இங்கயே இருக்கேனே?” அவள் கேட்க, “சீக்கிரம் கல்யாணம் செய்துகிட்டு இங்கயே இருக்கலாம்” நிர்மலாதேவி தன் வருங்கால மருமகளிடம் அன்பாக பேசினார்.

துர்காவின் தந்தையின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.  அவருக்கு நடப்பது எதுவும் பிடிக்கவில்லை. 

“கிளம்பலாம் துர்கா” அவர் கூற, வேறு வழியின்றி அவள் தன் தந்தையோடு கிளம்பினாள்.

“விஜய்…” அவன் தாயார் அழைக்க, “எனக்கு தனிமை வேணும். எல்லாரும் வெளிய போறீங்களா?” அவன் குரல் கடினமாக ஒலித்தது.

“உனக்கு ஏதாவது வேணுமின்னா…” அவர் தயங்க, “என் பக்கத்தில் இருக்கிற பெல்லை அடிக்கிறேன். வெளிய போங்க” அவன் முடித்து கொண்டான்.

கம்பீரமாக வளைய வரும் தன் மகனின் இந்த நிலைமையை பார்த்து அறைக்கு வெளியே வந்து விம்மி வெடித்தார் நிர்மலா தேவி.

“நிர்மலா எல்லாம் சரி ஆகும்.” தன் மனைவியை சமாதானம் செய்தார் ரங்கநாதபூபதி.

“கல்யாணமும் நிச்சயம் செய்த அன்னைக்கு நடக்கலை. துர்கா இங்க வந்திருந்தா கூட அவன் கிட்ட பேசி அவன் மனநிலையை மாத்திருப்பா. இப்ப அவளும் இல்லை. விஜய் நம்ம கிட்ட பேச கூட மாட்டேங்குறான். சீக்கிரம், கல்யாணம் செய்யணும்ங்க. உடல் நிலையை விட அவன் மனநிலை ரொம்ப முக்கியம்ங்க” அவர் தாயாக விம்மி வெடித்தார்.

அவரை சமாதானம் செய்யும் வழி தெரியாமல், ரங்கநாத பூபதி மௌனம் காத்தார். ‘திருமணம் இப்பொழுது இவனுக்கு சாத்தியமா?’ அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை. மகனை இப்படியே விட முடியாது. ஆனால், அவர் குழம்பிப்போனார்.

விஜயபூபதி தன் அறையில் அமர்ந்திருந்தான். ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டிருந்தான்.

“கிய்யா… கிய்யா…” என்று சத்தம் செய்து கொண்டு, இரு குருவிகள் அவனை ஜன்னல் வழியாக எட்டி பார்த்தன.

அந்த பறவைகள் அதன் சிறகுகளை அசைத்து அசைத்து மெல்ல மெல்ல நடந்தன.

விஜயபூபதி தன் கால்களை அசைக்க முயற்சி செய்தான். அவனால் முடியவில்லை. அவனுள் சினம் கிளம்பியது. சினத்தின் அளவு ஏறிக்கொண்டே போக, “அம்மா…” என்று அலறினான்.

நிர்மலாதேவி பயந்து கொண்டே உள்ளே வர, சுதந்திரமாக பறக்கும் பறவைகளை கூட காண சகியாமல், “அந்த ஜன்னலை மூடுங்க” அவன் குரலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாரம் சூழ்ந்து இருந்தது.

அவரும் ஜன்னலை மூடினார். அறையில் இருள் சூழ்ந்து கொண்டது.

 “ரூம் இருட்டா இருக்கு. லைட் போடவா விஜய்?” அவர் தன் மகனிடம் பரிவாக கேட்டார்.

“என் வாழ்க்கையே இருட்டா போச்சு. இதுல ரூம் எப்படி போனா என்ன?”  அவன் மேலே பேச எதுவும் இல்லை என்பது போல் தன் கண்களை இறுக  மூடிக்கொண்டான்.

அவன் விழிகளுள் இருள்!

அவன் மனமெங்கும் இருள்!

அவன் அறையெங்கும் இருள்!

அவன் வாழ்வு?

      விடையறியா வினாவோடு அவன் விழிகளில் நீர்த்துளி.

அவனது சிறகுகள் விரியுமா?

 சிறகுகள் விரியும்…