kiyaa-6

coverpage-daca8ae3

kiyaa-6

கிய்யா – 6

விடியற்காலை பொழுது.

 சூரிய ஒளி விஜயபூபதியின் வீடெங்கும் அதன் ஒளியை பரப்பி இருந்தது. ஆனால், ஒளியால் விஜயபூபதியின் அறைக்குள் நுழைய முடியவில்லை. விஜயபூபதி கட்டிலில் இருந்தான். அவன் மார்பு வரை போர்வை போர்த்தி இருந்தது. கைகளை இயல்பாக அசைக்க முடிவதால், போர்வையை பிடித்தபடி படுத்திருந்தான்.

 அவன் அறையின் ஜன்னல் இறுக மூடி இருந்தது அவன் மனக்கதவின் நிலையை சொல்வது போல்.  

 துர்கா, அவசரஅவசரமாக விஜயபூபதி வீட்டிற்குள் நுழைந்தாள்.  

“துர்கா” ஆச்சரியமாக அழைத்தார் நிர்மலாதேவி.

“ஆண்ட்டி, பூபதி எப்படி இருக்காங்க?” அவள் வினவ, “…” அவர் தலை அசைத்தார்.

“என்ன நீ இவ்வளவு காலையிலேயே வந்துட்ட?” அவர் கண்களில் பரமத்திருப்தி.

“பூபதி கிட்ட பேசிட்டு இருக்கலாமேன்னு. பூபதிக்கு நல்லாருக்கும். எனக்கும் மனசு நிம்மதியா இருக்கும்.” பேசிக்கொண்டே, அவன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

அவர்கள் வரும் சத்தத்தில், பூபதி தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.  

“ஜன்னலை திறந்து விடுறேன் ஆண்ட்டி.” துர்கா ஜன்னல் அருகே செல்ல எத்தனிக்க, ‘வேண்டாம்…’ என்று அலற நினைத்த அவன் தன்னை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான்.

“ஜன்னல் கதவை திறக்க வேண்டாமுன்னு விஜய் சொன்னான் துர்கா.” அவன் தாயார் கூற, “ஓ சரி ஆண்ட்டி” என்று தலை அசைத்தாள் துர்கா.

“பூபதி…” அவள் அவன் தோள் தொட்டாள்.

அவன் தோள் மெல்ல அசைந்தது. “மாத்திரையால் ரொம்ப நேரம் தூங்குறான் போல” நிர்மலா தேவி கூற, “ம்…” கொட்டிக்கொண்டாள் துர்கா.

“உங்க அம்மா, அப்பா வரலியா?” நிர்மலாதேவி மெல்ல பேச்சு கொடுத்தார்.

“இல்லை ஆண்ட்டி. அப்பாவுக்கு நான் இங்க வந்ததே தெரியாது. ஏதோ அவசர வேலையா வெளிய போயிருக்காங்க. நான் அம்மா கிட்ட சொல்லிட்டு வந்தேன்.” அவள் அவனை பார்த்தபடி அவன் தாயாருக்கு பதில் கூறி கொண்டிருந்தாள்.

அவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால், அவன் சிந்தனை அவளுடைய அப்பா என்ற சொல்லில் தேங்கி நின்றது.

‘நேத்தே, துர்காவின் அப்பா முகம் சரி இல்லை. என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடுவார். ஆனால், நேத்து ஒரு தடவை கூட கூப்பிடலை.’ அவன் நெற்றி சுருங்கியது.

‘இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு நினைப்பாரோ?’ அந்த கேள்வியில் அவன் சிந்தை ஒரு நொடி திணறி நின்றது.

‘நான் ஏன் இப்படி சுயநலம் பிடித்தவன் ஆனேன். அடிபட்டது என் காலுக்கு தானே? மனசுக்கு இல்லையே.’ அவன் சிந்தை அவன் மீதே பச்சாதாபம் கொண்டது.  

‘என்னை கல்யாணம் செய்து கொண்டால், துர்காவின் வாழ்க்கை?’ அவன் மனதில் அவளை பற்றிய சிந்தை எழ, அவன் கண்களில் நீர் துளி.

தலை அசைத்து கண்ணீரை உள்ளிழுத்து கொண்டான் அவன்.

“முழிச்சிட்டியா விஜய்?” அவள் கேட்க, அவன் தலை அசைத்தான்.

“நீங்க பேசிகிட்டு இருங்க. நான் வரேன்.” கூறிக்கொண்டு வெளியே சென்றார் நிர்மலாதேவி.

அவர் வெளியே சென்றதும், “நீ ஏன் இப்ப வந்த துர்கா?” அவன் கேள்வி கூர்மையாக வெளி வந்தது.  

“இது என்ன கேள்வி பூபதி? உன்னை பார்க்க தான்.” அவள் அவன் கேசம் குலைத்து கூற, அவள் தீண்டல் அவனை வருடியது.

அவள் அவன் அருகாமையில் இருக்க, புத்தம்புது பூவாய் அவள் மனம் அவன் நாசியை வருடியது.

 ‘நான் நன்றாக இருந்திருந்தால் என்ன சோப்? என்ன பெர்ஃபியும்? நிச்சயம் இவளை கேலி செய்திருப்பேன்.’ அவனறிவு கேலியை மௌனமாக நிறுத்தி கொண்டது.

 அவள் சுவாசம், அவனை சூழ, காதல் கொண்ட மனம் அவள் தீண்டலை விரும்பியது. அவளை இடையோடு அணைத்து, அவளுள் பொதிந்து, ‘ஓ ‘ என கதறி தன் வலியை வெளிப்படுத்த துடித்தது.

 ‘அவள் அணைப்பு, ஆறுதல் தருமோ?’ என்ற ஆசையும் அவன் மனதிற்கு வந்தது.  

 அவன் கைகள் மெல்ல உயர்ந்து, அவளை தீண்ட எத்தனிக்க, உரிமையாய் அவன் தீண்டிய இடத்தை அவன் கைகள் நெருங்க காற்று புகும் இடைவெளியில் அவன் மனசாட்சி புகுந்து கொண்டு அவனை காரி உமிழ்ந்தது.

 தன் சுயநலத்தை எண்ணி தானே வெட்கினான். ‘இல்லை, துர்கா நல்லாருக்கணும்.’ அவன் உருப்போட்டு கொண்டு தன் மனதிற்கு கடிவாளமிட்டான்.

 அவன் தன் முகத்தை திருப்பி அவள் தீண்டலின் விருப்பமின்மையை காட்டினான்.  

“ஏன் பேச மாட்டேங்குற பூபதி? நான் உன்னை பார்க்க வர கூடாதா?” என்று துர்கா வினவ, “இல்லை, நீ தான் வரணும். ஏன்னா, என்னால் வர முடியாதில்லை?” அவன் ஒற்றை புருவம் உயர்ந்தது.

“கல்யாணம் ஆகாத ஒருத்தன் ரூமுக்கு இப்படி தான் தனியா போவியா துர்கா?” அவன் கேள்வி சாட்டையாக இறங்கியது.

“பூபதி” அவள் புரியாமல் விழிக்க, “நான் நல்லா இருந்திருந்தா, இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி என் ரூமில் வந்து உட்காந்திருப்பியா துர்கா?” அவன் வினவ, அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள்.

“நாலு பேரு தப்பா பேசுவாங்கன்னு யோசிச்சிருப்ப தானே? நீ மட்டுமில்லை, எங்க அம்மா தான் உன்னை இப்படி இந்த ரூமில் தனியா விட்டுட்டு போயிருப்பாங்களா?” அவன் கேட்க, “ஏன் என்னவோ மாதிரி பேசுற பூபதி?” துர்கா பரிதாபமாக கேட்டாள்.

“நான் என்னவோ மாதிரி தானே இருக்கேன் துர்கா” அவன் பளிச்சென்று கூறினான்.

“உங்க வீட்டில் சொல்லிட்டு வந்தியா துர்கா?” அவன் கண்களை விரிக்க, “அப்பா கிட்ட சொல்லலை. அம்மா கிட்ட சொல்லிட்டு வந்தேன்.” அவள் கூற, “இனி இங்க வராத துர்கா” அவன் அழுத்தமாக கூறினான்.

“ஏன்?” அவள் கோபமாக எழுந்து நின்றாள்.

“கல்யாணம் ஆகாம, நீ இங்க அடிக்கடி வர்றது சரி இல்லை.” அவன் பதில் நிதானமாக வெளி வந்தது.

“சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?” அவள் இப்பொழுது நேரடியாக கேட்டாள்.

“எனக்கு சரியான பிறகு” அவன் மேலே இருக்கும் சுவரை பார்த்தபடி கூறினான்.

“நான் தான் உன்னை பார்த்துக்கணும். அதுவரைக்கும் எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது” அவள் குரலில் அழுத்தம் கூடி இருந்தது.

“ஏன் நீ நர்ஸுக்கு படிச்சிருக்கியா?” அவன் நக்கலாக கேட்டான்.

“பூபதி, நீ ரொம்ப ஓவரா பேசுற. ஏதோ உடம்பு சரி இல்லாம இருக்கன்னு நான் பொறுமையா இருக்கேன். இல்லைனா நடக்கறதே வேற” அவள் அவனை மிரட்ட, விஜயபூபதியின் தாயார் உள்ளே நுழையவும் நேரம் சரியாக இருந்தது.

“ஆண்ட்டி, சீக்கிரம் நல்ல நாள் பாருங்க. கல்யாணத்தை வச்சுக்கலாம். அப்பா, அம்மா கிட்ட சொல்றேன்” உரிமையோடு கூறினாள் துர்கா.

“நல்ல நாள் பார்த்திருக்கிறோம். ஒரு வாரத்தில் கல்யாணம் வச்சுக்கலாம். நானும் உங்க அப்பா கிட்ட பேசுறேன்” என்றார் நிர்மாலாதேவி.

அதே நேரம், துர்காவின் வீட்டில்.

 வீடு திரும்பி இருந்த துர்காவின் தந்தை குமரன், துர்கா விஜயபூபதி வீட்டிற்கு சென்றதற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருந்தார்.

“இப்ப எதுக்கு இப்படி குதிக்கறீங்க? மாப்பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை. துர்கா பார்க்க போயிருக்கா. அவ்வளவு தான்” கலைச்செல்வி கூற, “உனக்கு அறிவு இருக்கா?” அவர் நிதானமாக கேட்டார்.

“கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அவங்க வீட்டுக்கு அடிக்கடி நம்ம பொண்ணு போயிட்டு வந்தா நல்லாருக்கா?” என்று அவர் கண்டிப்போடு கேட்டார்.  

தன் கணவனின் கேள்வி நியாயத்தில், கலைச்செல்வி மௌனித்தார்.

“கல்யாணத்தை பண்ணிடுவோமா?” கலைச்செல்வி தயக்கமாக கேட்டார்.  

“ஏன் கலை தயக்கமா கேட்குற?” அவர் கண்கள் இடுங்கியது.  

“அது… அது…” அவர் இழுக்க, “நான் யோசிக்க மாட்டேன் இதை சொல்ல கலை. இப்படி ஒரு பையனுக்கு என் பெண்ணை நான் கொடுக்க மாட்டேன்.” அவர் அழுத்தமாக கூறினார்.

“இது தப்பு இல்லையாங்க?” என்று கலைச்செல்வி கேட்க, “தப்பு தான். ஆனால், தப்பா இருந்தாலும், என் மகளுக்காக தானே” அவர் கண்கள் கலங்கியது.

“கொஞ்ச நாள் காத்திருப்போம். சரியான இதே மாப்பிள்ளைக்கு கொடுத்திருவோம். இல்லைனா, வேற இடம் பார்ப்போம்” அவர் குரல் தழுதழுத்தது.

“இப்படி ஒருத்தனுக்கு என் மகளை கொடுக்க, நான் தியாகி இல்லை. நான் சராசரி தகப்பன். என் மக வாழ்க்கை நல்லாருக்கணும்னு நினைக்குற ஒரு பாசமான தந்தை” அவர் இறுக்கமான குரலில் கூறினார்.

கலைச்செல்வி ஏதோ கேட்க வர, “இல்லை கலை. எதுவும் கேட்காத. இது தப்பு தான். பாவம் தான். அந்த மாதிரி நல்ல பையனுக்கு நான் செய்யுற துரோகம் தான். ” அவர் தன் மனைவியை ஆழமாக பார்த்தார்.

“நீ நல்லவனா? குடும்பஸ்தனானு கேட்டா, நான் குடும்பஸ்தன்னு தான் சொல்லுவேன் கலை.” அவர் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.

” எல்லாருக்கும் நடக்கிற மாதிரி என் பொண்ணுக்கும் கல்யாணம் நடந்திருக்கலாம். அதை செய்யாத கடவுளை திட்டறதா? இல்லை கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி நம்ம பொண்ணுக்கு வேற வாழ்க்கையை அமைத்து கொடுக்க சொல்றாரு கடவுள்ன்னு அவரை சொல்றதா?” என்று கலைச்செல்வி புலம்பினார்.

“துர்கா கிட்ட எப்படி சொல்றது?” என்று இருவரும் ஒரு சேர கேட்க, துர்கா வீட்டிற்கு வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

துர்கா கோபமாக வந்து சோபாவில் அமர்ந்தாள்.

“என்ன ஆச்சு?” கலைச்செலி கேட்க, “அம்மா, பூபதி ரொம்ப பேசுறான். நான் கல்யாணம் பண்ணிக்காம அவங்க வீட்டுக்கு போக கூடாதாம். அது நல்லா இல்லை. அப்படி இப்படின்னு. அவனுக்கு உடம்பு சரி இல்லைனு தானே போறேன். என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறான்.” அவள் கோபத்தில் முணுமுணுத்தாள்.

‘இப்படி ஒரு நல்ல பையனுக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுக்க முடியலையே’ அவர் மனம் வருத்தியது.

“அப்பா, சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க அப்பா. பூபதி இப்படி இருக்கும் பொழுது, நான் இங்க இருக்கிறது எனக்கு சரியப்படலை. அவங்க அம்மா, உங்க கிட்ட பேசுறேன்னு சொன்னாங்க.” என்று துர்கா கூற, “சரி மா. நான் நாளைக்கு நேரில் போய் பேசுறேன்” என்று முடித்து கொண்டார்.

நேரம் காலை உணவின் நேரத்தை எட்டி இருக்க, இலக்கியா கொழுக்கட்டை செய்து கொண்டிருந்தாள்.

 அவள் கைகள், கார கொழுக்கட்டையை உருண்டை உருண்டையாகவும், பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து கொண்டிருந்தாலும், அவள் மனமோ விஜபூபதியை சுற்றி வந்தது.

இலக்கியா பாட்டிக்கு உணவு கொடுக்க, “எனக்கு வேண்டாம் இலக்கியா. என் பேரனுக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அவன் அம்மா, இங்க வரக்கூடாதுன்னு சொன்னாலும், சும்மா அப்படி இப்படி போகிற மாதிரி வந்து நம்மளை பார்த்திட்டு போவான்” அவர் கண்ணீர் வடித்தார்.

“விஜய்க்கு இந்த கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும். நாம செய்தா சாப்பிடாம போக மாட்டேன்.” அவர் குரலில் கவலை மண்டி கிடந்தது.

“பாட்டி, எல்லாம் சரி ஆகும். நீங்க சாப்பிடுங்க.” இலக்கியா பாட்டியை சமாதானம் செய்ய முயல, “நீ இதை விஜய்க்கு கொண்டு போய் கொடுக்கறியா?” என்று கேட்டார் பாட்டி.

“பாட்டி, அத்தை, என்னை ஹாஸ்பிடல் பக்கமே விடலை. நான் உங்க பேரனை பார்த்து பல நாள் ஆகுது. வீட்டுக்கு போனா, ரொம்ப பேசுவாங்க. அத்தான் இருந்தால் சமாதானம் செய்வாங்க. இப்ப என்ன நிலைமைனே தெரியலை பாட்டி. மாமா மனநிலைமையும் தெரியலை. எனக்கு வேற வாய் ஜாஸ்தி” என்று இலக்கிய மறுப்பு தெரிவித்தாள்.

‘எனக்கும் அத்தானை பார்க்கணும் போல தான் இருக்கு. எப்படி இருக்காங்கன்னு தெரியலை.’ அவள் மனதோடு எண்ணிக்கொண்டாள்.

“சரி என்னை கூட்டிட்டு போ. நான் வரேன். நடக்க முடியலை. அது தான் உன் உதவியை கேட்டேன். சாயங்காலம் போய் என் பேரனை பார்க்கலாமுன்னு பார்த்தேன்” என்று அவர் முணுமுணுக்க, “பாட்டி, புலம்பாதீங்க. நான் போயிட்டு வரேன்.” கூறிக்கொண்டு வேகமாக வெளியே வந்தாள் இலக்கியா.

 “கிய்யா… கிய்யா…” என்று குருவி பறந்து கொண்டு அவளை தொடர, “நீ ஏன் என் பின்னாடி வர? இந்த வீட்டு எஜமானி அம்மா, என்னையே உள்ள விட மாட்டாங்க” அவள் முணுமுணுக்க குருவி பறந்து சென்றது.

விஜயபூபதி வீட்டில் மயான சூழ்நிலை இருந்தது.  

 ‘விஜய் துர்கா கிட்ட சரியா பேசலை. கிளம்பும் பொழுது துர்கா முகம் சரி இல்லை. துர்க்கா அம்மா, அப்பா இன்னைக்கு அவ கூட வரலை. நேத்து துர்க்கா அப்பா அவ்வளவு சரியா நடந்துக்கலை. எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும், எல்லாமே இடிக்குதே’ நிர்மலா தேவி சிந்தனையில் ஆழ்ந்திருக்க, வீட்டிற்குள் நுழைந்தாள் இலக்கியா.

‘மாமா இல்லையா?’ அவள் கண்கள் தன் மாமனை தேடியது.

‘மாமா இங்க இல்லை போல தெரியுதே. செத்த டீ இலக்கியா. இந்த கடுவன் பூனை உன்னை வச்சி செய்யும்’ தன் அத்தையை பார்த்தாள்.

“நான் என் அத்தானை பார்க்க வந்தேன்.” கூறிக்கொண்டு குடுகுடுவென்று அவன் அறை நோக்கி ஓட எத்தனித்தாள்.

அவளை தடுக்க ‘படக்…’ என்று எழுந்தார் நிர்மலாதேவி. எழுந்த வேகத்தில் அவர் குண்டு சருமம் பிடித்து கொண்டது.

இது தான் சாக்கு என்று திரும்பி பார்த்துவிட்டு ஓட்டத்தை பிடித்தாள் இலக்கியா.

“நில்லு டீ. நீ அவன் ரூமுக்கு போகாத” தன் உடலை தூக்க முடியாமல் குடுகுடுவென்று ஓடி வந்தார் நிர்மலாதேவி.

இந்த சூழ்நிலையிலும் அவர் ஓட்டத்தை பார்த்து, இலக்கியாவுக்கு சிரிப்பு வந்தது. அவருக்கு தெரியாதபடி முன் பக்கமாக நாக்கை துருத்தி கொண்டு, வேக நடை போட்டாள் இலக்கியா.  

“அவனை அத்தான்னு கூப்பிடாதன்னு சொல்லிருக்கேனில்லை? அவனுக்கு நீ வந்தா பிடிக்காது.” என்று அவர் சத்தம் செய்து கொண்டே செல்ல, இலக்கியா விஜயபூபதி அறைக்குள் நுழைந்திருந்தாள்.

அதற்குள், ரங்கநாத பூபதியும் வந்துவிட நிர்மலாதேவி நிதானம் காக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

“வெளிய வா. விஜய் தூங்கறான்.” அவர் அறைக்குள் சென்று நிதானமாக கூறினார்.  

“ஏன் இப்படி ஜன்னலை மூடி இருட்டில் இருக்கீங்க?” கேட்டுக்கொண்டே ஜன்னலை திறந்தாள் இலக்கியா.

“விஜய்க்கு பிடிக்கலை.” அவர் கூற, “அப்படியா அத்தான்?” என்று தேனொழுக அழைத்தாள் இலக்கியா.

விஜயபூபதி தன் கண்களை திறந்து பார்த்தான். “ஜன்னலை மூடு இலக்கியா” அவன் குரலில் அழுத்தம் இருந்தது.

அவன் தாய், தந்தை இருவரும் அங்கு தான் நின்று கொண்டிருந்தனர்.

“ஏன்?” என்று கேட்டுக்கொண்டு அவன் முன்னே அமர்ந்தாள்.

“மூடுன்னு நான் சொல்றேன்னில்லை?” அவன் எகிற, “நீங்க சொல்லி நான் என்னைக்கு கேட்டிருக்கேன்? இப்ப மட்டும் கேட்கணுமா? ஏன்?” என்று அவள் தன் அடுத்த கேள்வியை கேட்டாள்.  

“ஏன்? ஏன்? ஏன்? அப்படின்னு சிவாஜி மாதிரி கேட்டு என் மகனை சாகடிக்காத” நிர்மலாதேவி எகிற, “உங்களை பார்த்தே சாகலைனா, என்னை பார்த்தெல்லாம் சாக மாட்டாங்க” என்று இலக்கியா பட்டென்று கூற, விஜயபூபதியின் முகத்தில் சிந்தனை எட்டி பார்த்தது.

“ஆக, நான் சாகாதது தான் உன் பிரச்சனை?” குதர்க்கமாக கேட்டான் விஜயபூபதி.

‘இவன் என்ன இப்படி பேசுகிறான்?’ என்று அவன் பெற்றோர் பதற, “இது என்ன புதுசா கேட்குறீங்க? பல வருஷமா உங்களை போட்டு தள்ள பிளான் பண்றேன். ம்… உங்களை என்னால் ஒண்ணுமே பண்ண முடியலை. கடைசியில, கல்யாணம் அப்படி ஒரு சொல்லுக்கு பயந்து, இப்படி இடுப்பை ஒடச்சிகிட்டு வந்து படுத்துடீங்களே விஜய்யபூபதி?” என்று இலக்கியா கூற, அவன் சிரித்தான்.

அவன் விபத்துக்கு பின் முதல் புன்னகை! அவன் தந்தைக்கு சற்று ஆறுதலாக இருக்க, அவன் தாய்க்கோ பகிர் என்று இருந்தது.

“அத்தை, தட்டு வேணும். நான் சாப்பாடு கொடுத்துட்டு போறேன்.” அவள் சமையலறை நோக்கி செல்ல, “நான் கொடுத்திடுறேன். நீ கிளம்பு” என்றார் நிர்மலா தேவி அவள் பின்னோடு சென்றபடி.

‘நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கு தான் அத்தானை பார்க்குறேன். இப்ப எப்படி கிளம்புறது. பாட்டி வேற, என் பேரன் சாப்பிடான்னா? அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேட்பாங்க.’ என்ற எண்ணம் தோன்ற, “இல்லை, கொழுக்கட்டை நல்லாருக்குனு நீங்க சாப்பிட்டுடீங்கன்னா?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

“உங்க வீட்டு கொழுக்கட்டைக்கு நான் அலையறேன் பாரு?” என்று அவர் சீற, “யாருக்கு தெரியும்?” என்று தோள்களை குலுக்கினாள் இலக்கியா.

“என்னடி, என் பையன் படுத்து கிடக்கிறான். கல்யாணம் நடக்காது. நேரம் பார்த்து அவனை மயக்கி மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாமுன்னு நினைக்குறியா?” என்று நிர்மலாதேவி கேட்க, “தப்பா பேசுறீங்க. இத்தோட நிறுத்திக்கோங்க. உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து, நான் கம்முனு போறேன்” என்றாள் இலக்கியா.

“என்னடி, உன்னால் என்னை என்ன பண்ண முடியும்? நான் சொல்லுவேன். திரும்ப திரும்ப சொல்லுவேன். நீ என் மகனை மயக்க தான் வந்திருக்க. அவனும் சிரிக்காதவன், நீ பேசியதும் சிரிக்குறான்” அவர் கடுப்பாக கூறினார்.

“நல்ல மனசோட பேசினா, அத்தான் சிரிப்பாங்க. நீங்க பேசினா யார் சிரிக்குறது?” என்று உதட்டை சுழித்தாள் இலக்கியா.

“நல்லவ மாதிரி நடிச்சி அவனை மயக்கி…” அவர் பேச, “நிறுத்துங்க…” தன் ஒற்றை விரலை உயர்த்தினாள் இலக்கியா.

“நான் ஏன் நிறுத்தணும்? நீ அவனை மயக்க தான்…” அவர் திரும்ப திரும்ப அதையே சொல்ல, “உங்க மகன் நல்லாருக்கும் பொழுதே நான் அவரை கல்யாணம் செய்யணுமுன்னு நினைக்கலை. இப்ப உங்க மகனை கல்யாணம் செய்ய நினைக்க நான் என்ன சேவை மனம் கொண்ட மதர்தெரேசாவா இல்லை ஃபிளாரென்ஸ் நைடிங்கேலா?” இலக்கியா பட்டென்று கேட்டாள்.

அவள் வார்த்தையில் நிர்மலாதேவி அதிர்ந்து நிற்க, ‘ஐயோ, என்ன வார்த்தை கூறிவிட்டேன். என் அத்தானை நானே என்ன வார்த்தை கூறிவிட்டேன். எனக்கு தான் அத்தானை திருமணம் செய்யும் எண்ணமில்லைனு சொல்றேன்னில்லை. பேசி பேசி என்னை இப்படி பேச வச்சிட்டாங்களே’ படார் படார் என்று தலையில் அடித்து கொண்டு அந்த சமையலறையில் சோர்வாக சாய்ந்தாள் இலக்கியா.

அவர்கள் அறியவில்லை, இந்த வார்த்தை எப்படி இவர்கள் வாழ்வில் விளையாட போகிறது என்று!

சிறகுகள் விரியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!