kkavithai01

கவிதை 01

நேரம் மாலை ஐந்து மணி, வெள்ளிக்கிழமை, லண்டன்.

ரிஷி தனக்கு முன்பு பிரமாண்டமாக நின்றிருந்த அந்த ‘லண்டன் ஐ’ யை பார்த்தபடி நின்றிருந்தான். ராட்சத அமைப்பில் அமைந்திருந்த அந்த ராட்டினம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெள்ளி மாலை, வார இறுதியின் ஆரம்பம். இனி அந்த இடமே ஜனத்திரளால் அல்லோல கல்லோலப்படும்.

ரிஷியின் முகத்தில் ஒரு இளஞ்சிரிப்பு உருவானது. மிகவும் களைப்பாக உணர்ந்தான் இளையவன். வேலை அவனை முழுதாக உள்வாங்கி இருந்தது. ஓய்வு வேண்டும். இந்த வார இறுதி அவனுக்கு அவசியம் ஓய்வுக்காக மட்டும் வேண்டும். இல்லாவிட்டால் உடம்பு ஒத்துழைக்காது.

கண்ணாடிச் சுவரிற்குப் பின்னால் தெரிந்த லண்டனின் பரபரப்பை இன்னுமொரு முறைப் பார்த்தவன் அந்த அறையில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டான். கை தானாக இப்போது அவன் உதவியாளரை இன்டர்காமில் அழைத்தது.

“சொல்லுங்க சார்.”

“ஆஷ்லி, சூடா ஒரு டீ அனுப்புங்க.”

“ஓகே சார்.” 

சற்று நேரத்தில் டீ வர அதை அருந்திய படி அமைதியாக அமர்ந்து இருந்தான் ரிஷி. அலைபேசி சிணுங்கியது. ஆலிவர் அழைத்துக் கொண்டிருந்தான். ஒரு புன்னகையோடு அவசரமாக அழைப்பை ஏற்றான் ரிஷி.

“ஹாய் ஆலிவர்!” ரிஷியின் குரலில் அவ்வளவு உற்சாகம்.

“ஹேய் ரிஷி! என்ன மேன் உன்னைக் கையிலேயே பிடிக்க முடியலை!”

“சாரிடா, ரொம்ப பிஸி.” இப்போது ரிஷியின் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது.

“புரியுது புரியுது, அதான் இன்னைக்கு உன்னைக் கண்டிப்பாக் கூப்பிடணும்னு கால் பண்ணினேன்.”

“சொல்லுடா, என்ன விசேஷம்?”

“ஹேய் ரிஷி! இன்னைக்கு ஃபுல் மூன் மேன்.”

“அட! ஆமால்ல!” ரிஷி ஆச்சரியப்படவும் ஆலிவர் அந்தப்புறமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“ரொம்ப நாளாச்சு ரிஷி நீ எங்கக் கூட ஜாயின் பண்ணி.” ஆலிவர் குறைப்பட்டான்.

“நானும் ரொம்பவே ட்ரை பண்ணினேன்டா, சாரி.” 

“நோ ப்ராப்ளம், இன்னைக்கு நீ கண்டிப்பா வர்றே.”

“ஷ்யூர், இதுக்கு மேல ஓட என்னாலயும் முடியாது, யாரெல்லாம் வர்றாங்க இன்னைக்கு?”

“நம்ம செட் அத்தனைப் பேரும் டான்னு டைமுக்கு வந்திடுவாங்க, யாரு வர்றாங்களோ இல்லையோ வில்சன் வந்திடுவான், அவங்கூட…” ஒரு இடைவெளி விட்டு இப்போது ஆலிவர் பெருங்குரலில் சிரித்தான். அவன் எங்கே வருகிறான் என்று புரிய இப்போது ரிஷி முகத்திலும் ஒரு புன்னகைத் தோன்றியது.

“ஆலிவர், நீ என்னைக் கேலி பண்ணுறே.”

“சத்தியமா இல்லை ரிஷி, ஒவ்வொரு முறை மீட் பண்ணும் போதும் ‘எல்லா’ உன்னைத்தான் கேட்கிறா, நான் என்னப் பண்ணட்டும் சொல்லு?”

“நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது ஆலிவர்.”

“ஹேய் ரிஷி, அவ ரொம்ப ஆர்வமா இருக்காளே டா.”

“அதான் யோசிக்கிறேன், எந்த வம்புலயும் என்னை மாட்ட வெச்சிடாதப்பா.”

“அதெல்லாம் ஒன்னுமில்லை, சும்மா இன்னைக்கு ஒரு நாள் ட்ரை பண்ணிப் பாரேன் ரிஷி.”

“நீ இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கே.” ரிஷி சொல்லி முடிக்க ஆலிவர் இப்போதும் அட்டகாசமாகச் சிரித்தான்.

“உனக்கொன்னு தெரியுமா ரிஷி?”

“சொல்லு.”

“இன்னைக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வரலைன்னா ‘இனி உங்கூடப் பேசவே மாட்டேன்’ னு என்னை மிரட்டி வெச்சிருக்கா அந்தப் பொண்ணு.”

“ஓஹோ!”

“கம் ஆன் ரிஷி, நீ இன்னைக்குக் கண்டிப்பா வர்றே!” ஆணை போலச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் ஆலிவர்.

தொழில் துறையில் ரிஷியின் நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது. ஹோட்டல் துறையில் இருக்கிறான். லண்டனை தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தில் ஐம்பது கிளைகள் அவனுக்கு உண்டு. நாட்டின் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் ரிஷியின் ஹோட்டல் கிளைகள் அமைந்துள்ளன.

‘பாரடைஸ்’ இதுதான் ரிஷியின் இன்றைய மூச்சு, பேச்சு, சிந்தனை எல்லாமே. அவன் தந்தை ஆரம்பித்து வைத்த தொழில். இவன் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு இந்தத் துறைக்கான அனைத்துப் பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் போது தந்தை உலக வாழ்வை நீத்திருந்தார்.

ரிஷி நிறையவே அப்போது திணறிப் போனான். தந்தை அவனை விட்டுப்போன இரண்டு ஆண்டுகளிலேயே தாயும் உலகை விட்டுப் பிரிந்தார். பெற்றோரின் இழப்பைக் கூட அவனை முழுதாக உணர விடாமல் தொழில் அவனை இழுத்துக் கொண்டது. 

தனது இருபத்தி ஒன்பதாவது வயதில் ஹோட்டல் துறையின் அனைத்து நெளிவு சுளிவுகளையும் ரிஷி கற்றுக் கொண்டான். கடந்த ஒரு வருடத்தில் அவன் பார்த்தது எல்லாம் லாபம் மட்டுமே. இப்போது அவனுக்கு வயது முப்பது. மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய இளம் தொழில் அதிபர்.

தனது கேபினை மூடிக்கொண்டு கார் பார்க்கிங் ற்கு வந்தான் ரிஷி. அவனது ப்ளாக் ஆடி அவன் வருகைக்காகக் காத்திருந்தது. நேராகத் தனது வீட்டிற்கு வந்தவன் களைப்புத் தீர நன்றாகக் குளித்தான். உடம்பில் வெதுவெதுப்பான நீர் பட்டபோது அந்தப் பெண்ணின் முகம் ஞாபகம் வந்தது ரிஷிக்கு.

இரண்டு மூன்று முறை அவளைப் பார்த்திருக்கிறான். வில்சனின் அந்தரங்க காரியதரிசி. தொழில்முறைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது வில்சனோடு வந்திருந்தாள். ஆரம்பத்தில் அவள் பார்வைத் தன் மீது ஆர்வத்தோடு படிவதை ரிஷி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கண்டும் காணாதது போலப் போய்விட்டான்.

ரிஷி பெண்களைத் தவிர்ப்பவன் அல்ல. ஆனால் இந்த அதீத ஆர்வம் அவனுக்கு ஒத்துவராது. அது ஆபத்து என்று அவன் அனுபவத்தில் அறிந்ததுண்டு. வந்தாயா, பழகினாயா, கூட இருந்தாயா, போனாயா என்று இருக்க வேண்டும். அதையும் தாண்டி யாரும் போக அவன் அனுமதிப்பதில்லை.

அதனாலாயே ‘எல்லா’ வை அவன் தவிர்க்க நினைத்தான். அதற்கு ஏற்றாற் போல தொழிலும் அவனை உள்வாங்கிக் கொள்ள ரிஷி அந்தப் பெண்ணை மறந்தே போயிருந்தான். ஆனால்… அவள் அவனை மறக்கவில்லைப் போலத் தெரிகிறதே!

வொயிட் ஷேர்ட்டும் ப்ளூ டெனிமுமாக காரில் ஏறி உட்கார்ந்தான் ரிஷி. அவன் வசிப்பது வெஸ்ட் லண்டனில். சரியாக முப்பது நிமிடங்களில் வழமையாக நண்பர்கள் கூடும் இடத்திற்குப் போய்விடலாம். போக்குவரத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவன் நகரின் சந்தடியிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்டான். 

ஆர்ப்பாட்டம் இல்லாத அந்த அழகிய கிராமத்திற்குள் ரிஷியின் ப்ளாக் ஆடி நுழைந்தது. சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் பசிய புல்வெளி பரந்திருந்தது. புல்வெளிக்குச் சம்பந்தமே இல்லாதது போல ஒரு பெரிய ‘ஹாலிடே இன்’ ஹோட்டல் அங்கே அமைந்திருந்தது. ஹோட்டலின் கார் பார்க்கிங் கில் காரை நிறுத்தினான் ரிஷி. நண்பர்களின் ஆரவாரம் இங்கே அவன் காதுகளுக்குக் கேட்டது. 

முகத்தில் புன்னகைத் தோன்ற ஹோட்டலின் ‘பப்’ ஐ நோக்கி நடந்தான் ரிஷி. பார்க்கிங் கில் நின்றிருந்த வில்சனின் ஜாக்குவரை அவன் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

“ஹேய் ரிஷி! என்ன மேன் தனியா வந்திருக்கே?” ஆச்சரியமாகக் கேட்ட இன்னொரு நண்பனை விழி விரித்துப் பார்த்தான் ரிஷி.

“ஏன்? என்னாச்சுப்பா?”

“ஓ ரிஷி… ஆலிவர் உங்கிட்டச் சொல்லலையா?”

“இல்லையே, என்ன விஷயம்?”

“இன்னைக்கு ‘கீ செயின்’ கண்டிப்பா இருக்கு.” 

“ஓ…” ரிஷியின் கண்கள் இப்போது ஆலிவரை அவசரமாகத் தேடியது. சட்டென்று கூட்டத்திலிருந்து வெளியே வந்த ஆலிவர் ரிஷியை பார்த்து விஷமமாகச் சிரித்தான்.

“கீ செயின்னு சொன்னா நீ கண்டிப்பா வரமாட்டே ரிஷி.” ஆலிவர் கண்ணடித்துச் சிரிக்க இப்போது ரிஷிக்கும் சிரிப்பு வந்தது. இது அவர்களுக்குள் நடக்கும் விளையாட்டுத்தான். மேல்தட்டு இளம் வாலிபர்களின் இன்ப விளையாட்டு. மாதம் ஒரு முறை பௌர்ணமி நாளில் இந்த இடத்தில் அனைவரும் ஆஜராகி விடுவார்கள், தனியாக அல்ல… அவர்களுக்குப் பிடித்தமான துணையோடு. அதன் பிறகு பாகுபாடின்றி யார் யாருக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவர்களோடு பொழுது உல்லாசமாகக் கழியும்.

“ஆலிவர்…” தன் உற்ற நண்பனைப் பிறர் அறியாமல் மெதுவாக அதட்டினான் ரிஷி.

“கமான் ரிஷி, ஒரு தடவைத் தப்பு நடந்ததுக்காக நீ இப்பிடி ஓடி ஒதுங்கிறது நல்லா இல்லை, ப்ளீஸ் யா.” ஆலிவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ரிஷியின் அருகே அரவம் கேட்டது. சட்டென்று திரும்பினான் இளவல். 

அழகே உருவாக அவனருகில் நின்றிருந்தாள்… எல்லா. ரிஷியின் விருப்பங்கள் எப்போதும் சற்று வித்தியாசமாக இருக்கும். அதை அறிந்ததாலோ என்னவோ, அன்றைக்கு அழகானதொரு மெரூன் வண்ண ஷிஃபான் ஆடை அணிந்திருந்தாள். அவள் இளரோஜா வண்ண மேனி நிறத்திற்கு அந்த ஆடை அத்தனைப் பொருத்தமாக இருந்தது. மிதமான ஒப்பனை, மயக்கும் நீல நிற விழிகள். 

அந்த விழிகளுக்குள் வீழ்ந்த யாரும் அவளை வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள். ரிஷியின் விழிகளில் ஒரு நொடி மயக்கத்தைப் பார்த்த அந்தப் பெண் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. உரிமையோடு அவன் கரத்தைப் பற்றியவள் அவனை அந்த ப்ளாக் ஆடியை நோக்கி இழுத்துச் சென்றாள்.

“ஹோ!” நண்பர்களின் ஆர்ப்பாட்டமான கூச்சல் தன் முதுகைத் துளைக்க, புன்னகை முகமாக அந்தப் பெண்ணோடு நடந்தான் ரிஷி.

“ரிஷி…” அந்த வசீகர அழைப்பில் ரிஷி அவளைப் பார்த்தான். பெண்ணின் கண்களில் காதல் கணக்கின்றி வழிந்தது. 

“எல்லா…” ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.

“சொல்லுங்க ரிஷி.”

“இன்னைக்கு ஃபுல் மூன்.” பேச்சை மாற்றினான் ரிஷி.

“ஆமா… உங்களுக்கு முழு நிலாவை ரசிக்க ரொம்பவே பிடிக்குமில்லையா ரிஷி.” உன் விருப்பு வெறுப்புகள் எனக்கு அத்துப்படி என்று நிரூபித்தது பெண். ரிஷி எதுவுமே பேசாமல் ஷூவை கழட்டிவிட்டு பசும்புல்லில் கால் பதிய நடந்தான். பெண்ணிற்கும் அவன் செய்கை ரசனைக்குரியதாக இருந்திருக்கும் போலும், அவனைப் பின்பற்றியது.

புற்களின் மெல்லிய ஈரம் காலை நனைக்க இருவரும் கொஞ்ச தூரம் நடந்து போனார்கள். சற்றே குன்று போல இருந்த இடத்தை அடைந்ததும் ரிஷி கால்நீட்டி அமர்ந்து கொண்டான். அண்ணார்ந்து பார்த்த போது முழு நிலா வானிலும், மோகன நிலா அவனருகிலும் நின்றிருந்தது. இயல்பாக அவன் கை அவளை நோக்கி நீள அதற்காகவே காத்திருந்தவள் போல அந்தக் கரத்தைப் பற்றி அவனருகே அமர்ந்தாள் எல்லா.

ரிஷியின் விரல்கள் அந்த வெண்டைப்பிஞ்சு விரல்களோடு இப்போது விளையாடியது. வெகு அபூர்வமாக இது போன்ற வேளைகளில் அவனுக்கு ஒரு பெண் துணைத் தேவைப்படும். அந்தப் பொழுதுகளிலெல்லாம் தன் இளமைக்கு அவன் தடை விதிப்பதில்லை. ஒரேயொரு முறை மாத்திரம் ஓர் உறவு அவனை விடாப்பிடியாக ஒட்டிக்கொள்ள நினைத்தது. 

தன்னை நெருங்கிய அந்த தேகத்தின் ஸ்பரிசத்தில் பழைய நினைவுகளைத் தூக்கித் தூரப்போட்டான் ரிஷி. தன் உதடுகளை நெருங்கிய பெண்மைக்கு இப்போது அனுமதி வழங்கினான் இளையவன். உறவுக்கும் அது முன்னேறிய போது முழுதாக அவளோடு உருகிக் கரைந்தான். 

கடந்த சில மாதங்களாக அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்த சலிப்பு, களைப்பு அனைத்தும் அந்த நொடி அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றன. அவனைப் புத்தம் புதிதாக மாற்ற அவளுக்குத் தெரிந்திருந்தது! உலகம் மறந்திருந்தான் ரிஷி!

***

கண்ணாடி முன்னமர்ந்து முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் பவித்ரா.

“எல்லாம் போதும், இதெல்லாம் போடாமலேயே நீ அழகுதான் க்கா.” தங்கையின் குரலில் புன்னகைத்தவள் திரும்பிப் பார்த்தாள். ரூமிற்குள் அகல்யா வந்து கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்தாற் போல மற்றைய இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். பவித்ராவிற்கு மூன்று தங்கைகள்.

அன்றைக்கு அவர்கள் அப்பாவின் சொந்தத்தில் ஒரு நிச்சயதார்த்த விழா. அதற்குப் போவதற்காகத்தான் அரச குமாரிகள் நான்கு பேரும் ஆயத்தம் ஆகி இருந்தார்கள். மூத்தவள் பவித்ரா, அழகான பட்டுப் புடவைக் கட்டி இருந்தாள். அடுத்தவள் அகல்யா, பட்டில் பாவாடை, தாவணி அணிந்திருந்தாள். அடுத்தது இரண்டும் அனார்கலி அணிந்திருந்தார்கள்.

“எல்லாரும் ரெடியா என்ன?” வெளியே இருந்து அப்பாவின் குரல் கேட்கவும் நான்கு பேரும் அவசர அவசரமாக வெளியே வந்தார்கள். அடுத்ததாக ஒரு ஆண் பிறக்காதா என்ற ஆர்வத்திலேயே நான்கு பெண்களைப் பெற்றிருந்தார்கள் பாஸ்கர், ரேணுகா தம்பதியர். ஆனால் பெற்ற பெண்கள் நான்கும் அழகு தேவதைகள். அதில் அந்தப் பெற்றோருக்கு அத்தனை மகிழ்ச்சி, பெருமை.

“உனக்கென்ன பாஸ்கரா, நாலும் பொட்டைப் புள்ளையாப் பெத்திருந்தாலும் தங்க விக்கிரகம் மாதிரி இல்லைப் பெத்து வெச்சிருக்கே! அவனவன் சும்மா வந்து கொத்திக்கிட்டுப் போவான்.” சொந்தத்தில் இருக்கும் அத்தனைப் பேரும் இப்படித்தான் சொல்வார்கள்.

பாஸ்கர் ஒரு அரசாங்கப் பாடசாலையில் பிரின்ஸ்சிபாலாக பணியாற்றுகிறார். ரேணுகா குடும்பத்தலைவி. மிடில் கிளாஸ் வாழ்க்கை, ஆனாலும் நிம்மதியாக வாழ்ந்தார்கள். பெரியவள் பவித்ரா இப்போதுதான் படிப்பை முடித்திருந்தாள். உயர்தரத்தில் வர்த்தகத் துறையைத் தெரிவு செய்து படித்திருந்தாள். அவள் எடுத்திருந்த மதிப்பெண்ணிற்கு வெறும் பிகாம் டிகிரிதான் முடிக்க முடியும். மானேஜ்மென்ட் கிடைக்கவில்லை. 

அதனால் அவளுக்குப் பிடித்தமான அழகியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டாள். படிப்பை முடித்த போது வீடு தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கல்யாணப் பெண் அலங்காரம், புதிதாகக் கட்டிய வீடுகளுக்கான உட்புற அலங்காரங்கள் என அவள் ரசனைகள் இப்போது வடிவம் பெற்றுக் கொண்டிருந்தன. வீட்டின் வருமானமும் இப்போது அதிகரித்திருந்தது.

இன்றைக்குப் போகும் நிச்சயதார்த்த வீட்டிலும் அனைத்தும் பவித்ராவின் கைவரிசைதான். பாஸ்கரின் உறவுக்கார மனிதர்கள் என்பதால் பவித்ராவிடமே அனைத்து அலங்காரங்களையும் ஒப்படைத்திருந்தார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம்.

“எதுக்குங்க நாலு பொண்ணுங்களையும் கூட்டிக்கிட்டுப் போகணும்? சின்னவளை மாத்திரம் கூட்டிக்கிட்டுப் போனாப் பத்தாதா?” கணவரின் காதில் முணுமுணுத்தார் ரேணுகா. 

“சொந்தக்காரங்க வீடு, எல்லாரும் வாங்கன்னு கூப்பிட்டிருக்காங்க, போகலைன்னா நல்லா இருக்காதும்மா.” மனைவியின் மனதிலிருக்கும் கவலை பாஸ்கருக்கும் புரிந்துதான் இருந்தது. ஆனாலும் என்னதான் செய்ய முடியும்?!

“காலம் கெட்டுக் கிடக்குதுங்க, இப்பிடிப் பொண்ணுங்களை அலங்காரம் பண்ணி வரிசைக் கட்டிக் கூட்டிக்கிட்டுத் திரியுறது நல்லதில்லைங்க, நான் அங்க போயும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் உக்கார்ந்திருக்கணும்.”

“கூப்பிட்ட மரியாதைக்குத் தலையைக் காட்டிட்டு வந்திரலாம் ரேணு, இல்லைன்னா நல்லா இருக்காது.” ரேணுகாவிற்கும் கணவரின் நிலை புரிந்துதான் இருந்தது. தூரத்துச் சொந்தம் என்றால் தவிர்த்துவிடலாம். பாஸ்கரின் சொந்த அத்தை மகன் இந்த உறவுக்காரர். 

பாண்டியன் என்று பெயர். மிகவும் நல்ல மனிதர். அவர் மட்டுமல்ல, அவர் மனைவியும் நல்ல குணவதிதான். அது தெரிந்ததால்தான் பவித்ராவை அவர்கள் அலங்காரங்களுக்கென வீடுவரை அழைத்த போது ரேணுகா சம்மதித்திருந்தார். ஊரில் நல்ல செல்வாக்கான மனிதர். பெரிய பால் பண்ணைக்குச் சொந்தக்காரர். என்னதான் இருந்தாலும் விசேஷ வீட்டிற்குப் பெண்களை வரிசைக்கட்டி அழைத்துக் கொண்டு போக அந்தத் தாய்க்குப் பிடிக்கவில்லை.

“அடடே ரேணு, வா வா!” வாய் நிறைய அழைத்தார் அன்னபூரணி, பாண்டியனின் மனைவி.

“பொண்ணுங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வந்திருக்க இல்லை?” ஆவலாக அவர் கேட்ட போது ரேணுகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ஆமாங்கண்ணி.” என்றார் பொதுவாக. நிச்சயதார்த்த வீடு ஜேஜே என்றிருந்தது. ரேணுகாவின் மலைத்த பார்வையைப் பார்த்து அந்தப் பெண்மணி புன்னகைத்தார்.

“எதுக்குத் தயங்குறே ரேணு, இது நம்ம வீடு, நம்ம வீட்டுக்குப் பொண்ணுங்களைக் கூட்டிக்கிட்டு வர எதுக்குத் தயங்குறே நீ?”

“அப்பிடியில்லை அண்ணி…” ரேணுகாவிற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் அன்னபூரணி அவர் கையைப் பற்றிக் கொண்டார்.

“பவித்ராவை இந்த ஒரு வாரத்துல எனக்கு அவ்வளவு புடிச்சுப் போச்சு ரேணு.” அந்த வார்த்தைகள் பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியைக் கொடுக்க லேசாகப் புன்னகைத்தார்.

“எனக்கொரு பையன் இருந்திருந்தா அப்பிடியே உம் பொண்ணை எம் பையனுக்குக் கேட்டிருப்பேன்.” 

“………………”

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை ரேணு, இவ்வளவு அழகான, பதவிசான பொண்ணை வேற யாருக்கும் நீங்க குடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்.” 

“அண்ணீ?” அன்னபூரணியின் பேச்சில் தாய் மனது பக்கென்று அடித்துக் கொண்டது.

“எனக்கு இல்லைன்னா என்ன? குடும்பத்துக்குள்ள எத்தனைப் பசங்க இருக்காங்க, அதுல யாருக்காவது ஒருத்தருக்கு நீங்க பவித்ராவை கண்டிப்பாக் குடுக்கணும்.” அந்தப் பெண்மணி தீர்மானமாகச் சொல்ல ரேணுகா எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

வயதுக்கு வந்த பெண்கள் வீட்டில் இருந்தால் இப்படியெல்லாம் சொந்த பந்தங்கள் பேசுவது வழமைதானே. ஆனால் அன்னபூரணி எதையோ முடிவு பண்ணிவிட்டுத்தான் பேசுகிறார் என்று அப்போது ரேணுகாவிற்கு புரியவில்லை.

அந்தப் பேச்சை அத்தோடு மறந்து போனார். நிச்சயதார்த்தம் இனிதாக நிறைவு பெற்றது.