kkavithai05

கவிதை 05

அன்று சனிக்கிழமை என்பதால் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் பாஸ்கர். வீட்டைச் சுற்றி நல்ல செம்மண் இருக்கவே அங்கே வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டிருந்தார் ரேணுகா. வீட்டிற்கு முன்னால் சர்ரென்று ஒரு கார் வந்து நிற்கவும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்தார் பாஸ்கர். கை இயல்பாகத் தூக்கிக் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து விட்டது.

“என்ன பாஸ்கரா, காலையிலேயே சுறுசுறுப்பா வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டே போல இருக்கு?” கேட்டபடியே காரிலிருந்து இறங்கினார் பாண்டியன்.

வந்திறங்கியது பாண்டியன் மாத்திரமல்ல, கூடவே அன்னபூரணியும் வந்திறங்கினார். பாஸ்கருக்கு ஏனோ மனைவி தன்னோடு நேற்றுப் பேசிய விஷயம் சட்டென்று ஞாபகம் வந்தது.

“வாங்க வாங்க.” மனதில் தோன்றிய சஞ்சலத்தை மறைத்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்றார்.

“ரேணு, இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்க ன்னு!” மனைவியையும் சட்டென்று அழைத்தார் மனிதர்.

“உள்ள வாங்கத்தான், வாங்கக்கா.”

“என்ன பாஸ்கர், கல்யாணத்தன்னைக்குப் பார்த்தது, அதுக்கப்புறம் வீட்டுப் பக்கம் வரவேயில்லை?” கேட்டபடியே அன்னபூரணி உள்ளே போக பாண்டியனும் மனைவியோடு கூட நடந்தார். கணவரின் குரல் கேட்டு அப்போதுதான் வெளியே வந்த ரேணுகாவும் சட்டென்று ப்ரேக் அடித்தாற் போல நின்றுவிட்டார். 

“வாங்க வாங்க.” வாய் வரவேற்றாலும் கண்கள் என்னவோ கணவரைத்தான் ஒரு எச்சரிக்கை உணர்வோடு பார்த்தது.

“உட்காருங்க, உட்காருங்க அண்ணி.”

“பொண்ணுங்க எங்க ரேணு?”

“சின்னதுங்க ரெண்டும் படிக்குதுங்க, அகல்யாக்கு இன்னைக்கு ஏதோ செமினார் இருக்காம், ரெடியாகிட்டு இருக்கா, பவித்ரா எங்கூட கிச்சன்ல இருக்கா.”

“இருக்கட்டும் இருக்கட்டும்.” சொல்லிவிட்டு அன்னபூரணி கணவரை ஒரு பார்வைப் பார்த்தார்.‌ அதற்குள்ளாக பாஸ்கரே பேச்சை ஆரம்பித்தார்.

“காயத்ரி எப்போ ஹோம் கம்மிங் முடிஞ்சு வர்றா அத்தான்?”

“இன்னைக்கு வர்றதாத்தான் இருந்துது பாஸ்கரா, ஆனா மாப்பிள்ளை வீட்டுல இன்னும் விருந்தாளிங்க வந்தபடியே இருக்காங்களாம், அதால இன்னும் ரெண்டு நாள் நிற்கட்டுமேன்னு சம்பந்தியம்மா கேட்டாங்க, நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.”

“அப்பிடியா…” 

“அதுசரி, நீ எப்போ பவித்ராவுக்கு கல்யாணம் பண்ணப் போறே?” திடீரென்று பாண்டியன் கேட்க, பாஸ்கர் சிரித்தார்.

“இப்பதான் படிப்பை முடிச்சு வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கா, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே அத்தான்.”

“கொஞ்ச நாள் ன்னா? எவ்வளவு காலம் பாஸ்கரா?”

“அப்பிடியில்லை அத்தான்…”

“வயசுப் பொண்ணுங்களை வீட்டுல வெச்சிருக்கே, நல்ல வரன் வரும்போது சட்டுப் புட்டுன்னு கல்யாணத்தைப் பண்ணுறதுதானே புத்திசாலித்தனம்?” 

“………….” பாஸ்கர் இப்போது எதுவும் பேசாமல் மனைவியை நிமிர்ந்து பார்த்தார். என்ன வரப்போகிறது என்று புரிந்தது.

“எனக்குச் சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது பாஸ்கரா, நாங்க இப்போ உன்னோட வீட்டுக்கு பவித்ராவை பொண்ணு கேட்டுத்தான் வந்திருக்கோம்.” 

“அத்தான்!”

“எதுக்கு இவ்வளவு ஆச்சரியப் படுறே? பையன் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும், பூரணியோட தங்கைப் பையன் ரிஷிதான், கல்யாணத்துல நீயே பார்த்திருப்பே.” படபடவென்று பேசினார் பாண்டியன்.

“அத்தான்… அது பெரிய இடம்.”

“என்னய்யா பெரிய இடம், சின்ன இடம்… பொண்ணை அருமையா வளர்த்து வெச்சிருக்க, பையனுக்கு நம்ம பவியை ரொம்பப் புடிச்சுப் போச்சு, உனக்கு நல்லாத் தெரியும், தாய், தகப்பன் இல்லாத பையன், பெரியப்பா நீங்கதான் எனக்கு முன்ன நின்னு எல்லாத்தையும் பண்ணிக் குடுக்கணும்னு சொல்லிட்டான்.” பேச்சு முடிந்தது என்பது போல பாண்டியன் சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். பாஸ்கர் இப்போது மனைவியைப் பார்த்தார்.

“அவ்வளவு தூரத்துல எப்பிடிண்ணா?” இது ரேணுகா.

“என்னம்மா தூரம்? இந்தா இருக்கிற லண்டன்தானே? தூரம், தொலைவு ன்னு சொன்னதெல்லாம் அந்தக் காலம், இப்போ நினைச்சா ஃப்ளைட் ஏறிடலாம், அதைப் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க, பையன் நல்ல நிலைமைலதான் இருக்கான்.”

“சொந்தமா ஹோட்டல் தொழில் பண்ணுறாங்க தம்பி, அவங்கப்பா ஆரம்பிச்ச தொழில், இப்போ ரிஷிதான் எல்லாத்தையும் பார்த்துக்கிறான், அம்பது இடத்துல இவங்க ஹோட்டல் இருக்காம் இப்போ.” இதுவரை அமைதியாக இருந்த அன்னபூரணி இப்போது வாயைத் திறந்தார்.

“அது மட்டுமில்லை ரேணு, ஒத்தைப் புள்ளை, தொழில் முழுசும் அவனுக்குத்தான், எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லை, நாத்தனார், மாமியார் தொல்லைக் கூட இல்லை.” சொல்லிவிட்டு அன்னபூரணி சிரிக்க, அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.

“பையன் ரொம்ப நல்ல மாதிரி பாஸ்கரா, பணம் இருக்குங்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லாம எல்லார் கூடவும் ரொம்ப மரியாதையாப் பழகுற பையன், நீயே காயத்ரி கல்யாணத்துல பார்த்திருப்பே.”

“ஆமா அத்தான்.”

“நான் கூட அங்க யாரையாவது பார்த்துக் கட்டிப்பான்னுதான் நினைச்சேன், ஆனா அவனுக்கு நம்ம பொண்ணை ரொம்பப் புடிச்சுப் போச்சு, இனி நீங்கதான் எங்களுக்கு நல்ல பதிலாச் சொல்லணும்.”

“…………….”

“நாலு பொண்ணுங்களை வீட்டுல வெச்சிருக்கப்பா, வீட்டுக்கு வர்ற மூத்த மருமகன் உன்னோட காலத்துக்கு அப்புறமாவும் உன்னோட ஸ்தானத்துல இருந்து இந்தக் குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்துறவனா இருக்கணும், அதுக்கு ரிஷி பொருத்தமா இருப்பான்னு நான் நினைக்கிறேன்.”

“பையனைப் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாதே அத்தான், இப்பதான் முதல்முதலாப் பார்க்கிறோம்…”

“அதைப்பத்தி நீ கவலையே படாதே பாஸ்கரா, எனக்கொரு பையன் இருந்து நான் உங்கிட்டப் பொண்ணு கேட்டிருந்தா என்ன பண்ணி இருப்பியோ அதையே இப்போ தாராளமா நீ பண்ணலாம், உன்னோட பொண்ணு வாழ்க்கைக்கு நான் பொறுப்பு.”

“கல்யாணம் ஆனா அங்கதானே இருப்பாங்க?” ரேணுகா இப்போது கவலையோடு இழுக்க அன்னபூரணி சிரித்தார்.

”நல்ல விஷயம் ஒன்னு நடக்கும் போது ஒரு சில விஷயங்களை விட்டுக் குடுத்துத்தான் ஆகணும் ரேணு, இதுவரைக்கும் எப்பிடியோ… ஆனா இனி பொண்டாட்டி, மாமனார், மாமியார் ன்னு வரும்போது அடிக்கடி வரத்தானே வேணும்.” 

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால், கண்காணாத தேசத்திற்கு தங்கள் பெண்ணை அனுப்புவதா என்று அந்தப் பெற்றோர்கள் வெகுவாக யோசித்தார்கள்.

“முன்னெல்லாம் பொண்ணுங்களை இப்பிடிக் கல்யாணம் பண்ணி வெளிநாட்டுக்கு அனுப்ப யோசிச்சாங்க, இப்பதான் அதெல்லாம் ரொம்ப சாதாரணமாப் போச்சே தம்பி, எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க?” அன்னபூரணி இப்போது நேரடியாகவே பாஸ்கரிடம் கேட்டார்.

“இல்லைக்கா, பவித்ராவோட மனசுல என்ன இருக்குன்னும் தெரியணுமில்லை?”

“கண்டிப்பா… பவித்ராவும் கல்யாணத்தப்போ ரிஷியை பார்த்திருக்கா, நீங்க குடும்பமா உட்கார்ந்து பேசி இன்னைக்கே நல்லதா ஒரு முடிவைச் சொல்லுங்க.”

“இன்னைக்கேவா?”

“ஆமா தம்பி, ரிஷி ஒரு வாரம் தங்குற மாதிரித்தான் வந்திருக்கான், நீங்க நல்லதா ஒரு வார்த்தைச் சொல்லிட்டீங்கன்னா ஊருக்குப் போறதுக்கு முன்னாடியே நிச்சயதார்த்தத்தைப் பண்ணிடலாம்னு நாங்க நினைக்கிறோம்.”

“ஓ…”

“ஏற்பாட்டைப் பத்தியெல்லாம் நீ கவலையே படவேணாம் பாஸ்கரா, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், நீ சம்மதம் ன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு, அது போதும் எனக்கு.”

“அத்தான்…” 

“எங்க பையனுக்கு உன்னோட பொண்ணைக் குடுக்க உனக்குச் சம்மதம்னா நாளன்னைக்கே நிச்சயதார்த்தத்தை வெச்சுக்கலாம், ஏன்னா அதுக்கு அடுத்த நாள் ரிஷி கிளம்புறான், கல்யாணத்தை ஒரு மாசம் கழிச்சு வெச்சோம் ன்னா திரும்பவும் ரிஷி வர வசதியா இருக்கும்.” 

தங்கள் முடிவில் உறுதியாக இருந்த பாண்டியன், அன்னபூரணி தம்பதியர் இன்னும் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“என்னம்மா இப்பிடித் திடுதிடுப்புன்னு பேசிட்டுப் போறாங்க?” 

“நான்தான் நேத்தே சொன்னேன் இல்லீங்க? அவங்களுக்கு நம்ம பவியை ரொம்பப் புடிச்சுப் போச்சு.”

“அதுக்காக? பையன் எப்பிடி… நல்லவனா, கெட்டவனா… எதுவுமே தெரியாதே? யாருக்கிட்டப் போய் நாம விசாரிக்க முடியும் சொல்லு?”

“பார்க்கிறதுக்கு நல்ல பையன் மாதிரித்தான் தெரியுது…”

“அது போதுமா ரேணு?”

“எனக்கு ஒன்னுமே புரியலைங்க… சட்டுன்னு ஏத்துக்கவும் முடியலை, அதேநேரம்… வீடு தேடி வர்ற ஒரு நல்ல சம்பந்தத்தைத் தட்டி விடுறோமான்னும் புரியலை.”

“பவித்ரா!” இப்போது சத்தமாக உள்ளே குரல் கொடுத்தார் பாஸ்கர். 

இதுவரை அமைதியாக எல்லாவற்றையும் கிச்சனில் நின்றபடி கேட்டிருந்த பெண் வெளியே வந்தாள். கூடவே அவள் சகோதரிகளும் ஹாலுக்கு வந்தார்கள்.

“அப்பா, நேத்து டியூஷனுக்கு போகும் போது அவங்களை நான் பார்த்தேன், செம ஸ்மார்ட் டா இருந்தாங்க, நம்ம பவித்ராக்காக்கு அப்பிடி மாட்ச் ஆவாங்க தெரியுமா?” கடைக்குட்டி தனது அபிப்ராயத்தைச் சொன்னது.

“ஆமாப்பா, நானும் அவங்களைப் பார்த்திருக்கேன், நீங்க சரின்னு சொல்லுங்கப்பா, அக்காக்கு செமையா சூட் ஆவாங்க.” இளைய பெண்ணும் தனது மனதில் பட்டதைச் சொன்னது.

“அப்ப நான் மட்டுந்தான் அத்தானைப் பார்க்கலையா?” மூன்றாவது பெண் புலம்பியது.

இப்போது பாஸ்கரும் ரேணுகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இளையவர்கள் அவர்கள் வயதுக்கு உரித்தான ஆர்வத்தோடு பேசுகிறார்கள். ஆனால் பெற்றவர்கள் அப்படி முடிவெடுக்க முடியாதே! ரேணுகா மகளை நோக்கித் திரும்பினார். பெற்றவர்கள் என்ன முடிவை எடுப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு அந்த முகத்தில் நிறையவே இருந்தது.

சட்டென்று இப்போது கணவருக்கு ஜாடை காட்டினார் ரேணுகா. பாஸ்கரும் மகளை இப்போது கூர்ந்து பார்த்தார். தங்கைகளின் பேச்சு அவளுக்கும் ஒப்பானதாக இருக்க வேண்டும் போலும். முகம் மலர்ந்து கிடந்தது.

“பவித்ரா.”

“அப்பா.”

“உன்னோட அபிப்பிராயம் என்னம்மா?”

“…………” பவித்ரா அமைதியாக நின்றிருந்தாள்.

“சரின்னு சொல்லுக்கா.” அகல்யா வற்புறுத்தினாள்.

“எனக்குப் புடிச்சிருக்குன்னு சொல்லுக்கா.” கடைக்குட்டி தர்ஷினி ஓடி வந்து பவித்ராவின் காதில் முணுமுணுத்தாள். 

“நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க, பவித்ரா… நீ சொல்லும்மா, இது விளையாட்டில்லை, இந்தக் கல்யாணம் நடந்தா நீ எங்களையெல்லாம் விட்டுட்டு ரொம்ப தூரத்துல போய் வாழணும்.”

“அதான் நம்ம ஹீரோ அக்கா கூடவே இருப்பாரில்லை!” மெல்லிய குரலில் இளையவள் அகல்யா சொன்னாள். மூன்று தங்கைகளும் இப்போது தங்கள் அக்காவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“அத்தான் ரொம்ப சூப்பரா இருப்பாங்களா?” மூன்றாவது பெண் பைரவி கேட்டாள்.

“பைரவிக்கா, நேத்து டியூஷன் ல இருந்து வரும்போது அத்தானை பார்த்தேன், எனக்கு அப்போ அவங்க யாருன்னு தெரியாது, என்னோட ஃப்ரெண்ட் நித்யாதான் சொன்னா, நம்ம அன்னபூரணி அத்தை வீட்டுக்கு லண்டன் ல இருந்து வந்திருக்கிறது இவங்கதான்னு.”

“ஓ…”

“அத்தனைப் பொண்ணுங்களும் அப்பிடி சைட் அடிச்சாளுங்க தெரியுமா?”

“நீங்க என்னப் பண்ணினீங்க?”

“நானுந்தான், எனக்கு அப்போ இவங்க நம்ம பவிக்காவை கேட்பாங்கன்னு தெரியாதில்லை!”

“என்ன அங்க ஆளாளுக்கு முணுமுணுக்கிறீங்க?” ரேணுகா ஒரு அதட்டல் போட பெண்கள் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார்கள்.

“குடும்பத்துல யாருக்கிட்டயும் விசாரிக்கவும் முடியாது ரேணு, அப்பிடி விசாரிச்சா அது பாண்டியன் அத்தானோட காதுக்குப் போகும்.”

“ஆமாங்க, அது வீணான மனஸ்தாபத்தை உண்டாக்கும்.”

“வேற என்னதாம்மா பண்ணுறது?”

“சரின்னு சொல்லிடுங்கப்பா.” இது அகல்யா, இளையவள்.

“எப்பிடிம்மா? பையனைப் பத்தி நமக்கு எதுவுமே தெரியாதே.”

“பையன் நல்லவரா இருக்கப் போகத்தானே அத்தையும் மாமாவும் இவ்வளவு தைரியமா வந்து உங்கக்கிட்டப் பேசுறாங்க?”

“அதுவும் சொந்தக்காரங்க வேற, நாளைக்கு அக்காக்கு ஏதாவது பிரச்சினைன்னா அவங்க கழுத்தைத்தான் நீங்க புடிப்பீங்கன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?” இது மூன்றாவது பெண் பைரவி.

“அதானே!” இது கடைக்குட்டி தர்ஷினி.

இப்போது பெற்றவர்கள் மூக்கில் விரலை வைக்காத குறையாக ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இந்தப் பெண்கள் எத்தனை விவரமாக இருக்கிறார்கள்! எவ்வளவு எளிதாக ஒவ்வொன்றிற்கும் விடை காண்கிறார்கள்! தெளிவாகச் சிந்திக்கிறார்கள்!

“எனக்கென்னமோ நீங்க சரின்னு சொல்றதுதான் கரெக்ட் ன்னு படுதுப்பா, அக்கா… நீ என்ன சொல்றே? அத்தானை உனக்குப் பிடிச்சிருக்கா?” சட்டென்று கேட்டாள் அகல்யா. இப்போது பவித்ரா வெலவெலத்துப் போனாள். இதற்கு அவள் என்னவென்று பதில் சொல்வது?!

“எதுக்குக்கா இப்பிடி நடுங்கிறே? பிடிச்சிருக்கு, பிடிக்கலை… இதுல ஒன்னைச் சொல்லு, அவ்வளவுதானே?”

“அப்பா… அம்மாக்குப் பிடிச்சிருந்தா… எனக்கும் ஓகே.” சொல்லிவிட்டு பவித்ரா மெதுவாக உள்ளே போய்விட்டாள். தங்கைகள் மூவரும் அவளைப் பின்தொடர்ந்து உள்ளே போனார்கள்.

“அகல்யா! உனக்கு செமினாருக்கு நேரமாகலை?” வெளியே இருந்து சத்தமாகக் குரல் கொடுத்தார் ரேணுகா.

“இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேம்மா.” உள்ளேயிருந்து பதில் வந்தது. தங்கைகள் மூவரும் அக்காவின் கட்டிலில் அவளோடு வந்து அமர்ந்து கொண்டார்கள்.

“அக்கா, காயத்ரி கல்யாணத்தப்போ நீ அத்தானைப் பார்த்ததானே?”

“ஆமா அகல்யா.”

“எப்பிடி இருந்தாங்க?” அவசரமாகக் கேட்டாள் பைரவி. இப்போது பவித்ரா மலர்ந்து புன்னகைத்தாள்.

“ஹை! அக்காக்கு அப்போ பிடிச்சிருக்கு!”

“உஷ்! சத்தம் போடாதே பைரவி.”

“நீ சொல்லுக்கா.” 

“அகல்யா…”

“சும்மாச் சொல்லு, உனக்கு அத்தானைப் பிடிச்சிருந்தா அப்பாக்கிட்டப் பேச வேண்டியது எங்கப் பொறுப்பு.”

“ஆமா ஆமா!” இப்போது எல்லோரும் கோரஸ் பாடினார்கள்.

“நேத்துக்கூட அவங்களைப் பார்த்தேன்.”

“எங்க?”

“டவுன் ல.”

“பேசினியாக்கா?” ஆவலான குரல்கள் கேட்டன.

“வழக்கமா நான் மேக்கப் ஐட்டம்ஸ் வாங்கினா எவ்வளவு ஆகும்னு உங்களுக்குத் தெரியுமில்லை?”

“மேல சொல்லுக்கா.”

“நேத்து… நான் பணம் குடுக்கலை.”

“என்னது?!” 

“அவங்கதான் குடுத்தாங்க… என்னைக் குடுக்க விடல்லை.”

“அப்பிடியா?!”

“ஆமா அகல்யா, நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன், கடைல நின்னப் பொண்ணு கூட தெரிஞ்சவங்களான்னு கேட்டா.”

“ம்…”

“அதுக்கு உறவுக்காரங்கன்னு அவங்களே பதில் சொன்னாங்க.”

“உண்மையாவா அக்கா?!”

“ம்…” 

“வேற என்ன சொன்னாங்க?” 

“தர்ஷி… ரூம் கதவை மூடிட்டு வா.” பவித்ரா சொல்ல ஓடிப்போய் கதவடைத்துவிட்டு வந்தாள் கடைக்குட்டி.

“கொஞ்சம் பேசணும்னு சொன்னாங்க.”

“ஓ…”

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா பவின்னு சட்டுன்னு கேட்டாங்க.” இப்போது இளையவர்கள் மூவரும் வாய் பிளந்து கட்டிலில் சாய்ந்து விட்டார்கள்.

“என்னக்கா அத்தான் இவ்வளவு ஸ்பீடா இருக்காங்க?!”

“எனக்குச் சும்மா நடுங்கிடுச்சு பைரவி.”

“சொதப்பிட்டியா க்கா?”

“நீ பதில் சொல்லாம இங்க இருந்து நகர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.”

“ஹை ஜாலி!” தர்ஷினி குதிக்க அவள் தலையில் தட்டினாள் அகல்யா.

“சினிமா பார்த்துப் பார்த்து நீ நல்லாக் கெட்டுப் போயிட்டே தர்ஷி, இரு உன்னை அம்மாக்கிட்ட மாட்டி விடுறேன்.” பெரியவள் அதட்டவும் இளையவளின் முகம் வாடிப் போனது. 

பேச்சு இவ்வாறு இருக்க அப்போது பவித்ராவின் ஃபோன் சிணுங்கியது. புதிய நம்பராக இருக்க யாரோ கஸ்டமர்கள் அழைக்கிறார்கள் என்று அழைப்பை ஏற்றாள் பவித்ரா.

“ஹலோ.”

“பவி…” அந்தக் குரலில் பவித்ரா திணறிப் போனாள். தங்கள் அக்கா பேசிவிட்டு வரட்டும் என்று காத்திருந்த இளையவர்கள் அவள் முகம் போன போக்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“பவி… நான் ரிஷி பேசுறேன்.”

“…………..” பவித்ராவின் முகத்தைப் பார்த்த அகல்யா ஃபோனை சட்டென்று அவளிடமிருந்து வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.

“பவி… லைன்ல இருக்கியா?” அந்தக் குரலில் இப்போது இளைய பெண்கள் மூவரும் உஷாரானார்கள். 

“பேசுக்கா…” கிசுகிசுத்தாள் தர்ஷினி. அந்தக் கிசுகிசுப்பு ரிஷிக்கும் கேட்டிருக்கும் போலும்.

“பவி… பக்கத்துல யாரு இருக்காங்க? உன்னால இப்போ பேச முடியுமா?” என்றான் அவசரமாக.

“அதெல்லாம் தாராளமா அவங்களால பேச முடியும், ஆனா என்ன? அவ்வளவு சீக்கிரத்துல பேச மாட்டாங்க.” குறும்பாக பைரவி சொல்ல ரிஷி அந்தப்பக்கம் கொஞ்சம் திகைத்துப் போனான். 

“அவங்கதான் பேச மாட்டாங்க, சரி… இப்போ பேசுறது யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” சட்டென்று சமாளித்தவன் பேச்சை ஆரம்பித்தான்.

“பொண்ணு கேட்டா மட்டும் போதாது அத்தான், பொண்ணைப் பத்தின எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கணும்.” இது அகல்யா. அந்த ‘அத்தான்‘ என்ற அழைப்பு ரிஷிக்கு பிடித்திருந்தது.

“ஓஹோ! பொண்ணு தங்கமான பொண்ணுதான்… என்ன, கூட மூனு வாயாடிப் பொண்ணுங்க பொறந்திருக்காங்கன்னு அன்னம்மா சொன்னாங்க, அவங்களா இது?” என்றான் சிரித்தபடி.

“இங்கப்பார்றா! கதை அப்பிடிப் போகுதா? அம்மா, அப்பா சம்மதிக்கலைன்னாலும் இந்த அமைதிப் பூங்காவை எப்பிடியாவது உங்களோட லண்டனுக்கு பேக் பண்ணலாம்னு நினைச்சிருந்தோம்! இனிமே அது நடக்காது அத்தான்.”

“ஐயையோ! வாயால கெட்டுட்டானா ரிஷி! அம்மா தேவதைங்களா… யூகே ல எம் பேர்ல இருக்கிற அத்தனை சொத்தையும் உங்க மூனு பேரு பேர்லயும் எழுதி வெச்சிடுறேன், தயவு பண்ணி கருணைக் காட்டுங்கம்மா.” போலியாக ரிஷி கெஞ்ச இளையவர்கள் மூவரும் கிளுக்கிச் சிரித்தார்கள்.

“ஏன் அத்தான்! சொத்தையெல்லாம் எங்க மூனு பேருக்கும் குடுத்திட்டா அப்போ அக்காக்கு ஒன்னுமில்லையா?”

“உங்கக்காக்குத்தான் நான் இருக்கனேம்மா.” ரிஷி சொல்லி முடிக்க பவித்ரா சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஐயோ அத்தான்! உங்க ஆளு அவ்வளவு அழகா இப்போ வெட்கப்படுறாங்க தெரியுமா?” அகல்யா சொல்லி முடிப்பதற்குள் லைன் சட்டென்று துண்டிக்கப்பட்டது.

“என்னாச்சு?”

“அதானே? நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தாங்க?!” இவர்களின் பேச்சைக் குலைத்துக் கொண்டு வாட்ஸ்ஆப் சிணுங்கியது.

“அக்கா! அதே நம்பர்தான், அத்தான்தான் கூப்பிடுறாங்க, வீடியோ கால் பண்ணுறாங்க.” தர்ஷினி ஆர்ப்பரிக்க அவளை அதட்டி அடக்கினாள் பைரவி.

“நான் இந்த விளையாட்டுக்கு வரலை, அம்மா பார்த்தா கொன்னுடுவாங்க.” பவித்ரா அந்த இடத்தை விட்டு நகரப்போக அவளை இழுத்து அமர்த்தினார்கள் சகோதரிகள். வந்த அழைப்பை அவசரமாக ஏற்றாள் அகல்யா. திரையில் ரிஷியின் முகம் தெரிந்தது. அன்னபூரணியின் வீட்டு பால்கனியில் நின்றிருந்தான்.

“ஹலோ அத்தான்.” பெண்கள் மூவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ள அவர்களோடு அளவளாவினாலும் அவன் கண்கள் என்னவோ அவளைத்தான் தேடியது. அந்தப் பார்வையைப் புரிந்து கொண்ட அகல்யா ஃபோனை தன் அக்காவிற்காகத் திருப்பினாள். குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் பவித்ரா. 

“அத்தான், நான் மட்டும் உங்களை இன்னும் பார்க்கலை.” பைரவி குறைப்பட பவித்ராவை பார்த்தபடி புன்னகைத்தான் ரிஷி. 

“இன்னைக்கு மீட் பண்ணலாமா அத்தான்?” ஆர்வமாக பைரவி கேட்க அகல்யாவும் தர்ஷினியும் குதித்தார்கள்.

“அத்தான்! இன்னைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு நீங்க ஃப்ரீயா இருப்பீங்களா?”

“உங்கக்கா கூட வருவான்னா நான் டுவென்டி ஃபோர் அவர்ஸும் ஃப்ரீதான்.”

“அப்ப ஓகே, இன்னைக்கு எனக்கு செமினார் நாலு மணிக்கு முடிஞ்சிடும், ஏய்! உங்களுக்கு டியூஷன் நாலு மணிக்கு முடிஞ்சிடுமில்லை?”

“முடிஞ்சிடும் க்கா.” கோரஸாக வந்தது பதில்.

“அக்கா… நீ ஷார்ப்பா நாலு மணிக்கு டவுனுக்கு வந்திடு, நாம எல்லாரும் அத்தானை மீட் பண்ணலாம்.” அழகாகத் திட்டம் போட்டாள் அகல்யா. மற்றையது இரண்டும் சின்ன அக்காவின் திட்டத்தில் கூத்தாடியது.

“அகல்யா… அம்மாவுக்குத் தெரிஞ்சா…” அப்போதும் பயம் கொண்டாள் பவித்ரா.

“அப்பிடி என்ன கொலையா பண்ணப் போறோம்? அத்தானை மீட் பண்ணப் போறோம், அதுக்கு எதுக்குக்கா இவ்வளவு பயப்பிடுறே?” அந்த இளம் பெண்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்பில் ரிஷிக்கு மனம் குளிர்ந்தது. ஒற்றையாக வளர்ந்தவனுக்கு அந்தச் சின்னப் பெண்களின் மேல் அளவு கடந்த பாசம் உருவானது.

அன்றைய நாளின் நான்கு மணிக்காகக் காத்திருந்தான் ரிஷி.