kkavithai07

கவிதை 07

நிச்சயதார்த்த நாள் அழகாக விடிந்திருந்தது. காலை பத்து மணிக்கு மேல் நிகழ்வை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். கால அவகாசம் அதிகமில்லாததால் மண்டபம் கிடைக்கவில்லை. பாண்டியன் தன்னால் இயன்ற மட்டும் முயற்சி செய்து பார்த்தார். இருந்தாலும், ரிஷி ஒரு பிரபலமான ஹோட்டலின் ஹால் ஒன்றை புக் பண்ணி இருந்தான். ஐம்பது பேர் போல அங்கே கூட முடியும். 

மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்று அளவாக விருந்தினர்களை அழைத்திருந்தார்கள். பத்து மணிக்கு நிச்சயதார்த்தம், அதன் பிற்பாடு மதிய விருந்து என்று ஏற்பாடாகி இருந்தது. மண்டபம் என்றால் மாப்பிள்ளை, பெண்ணுக்கென்று தனித்தனியாக அறைகள் இருக்கும். அங்கேயே போய் அலங்காரங்களை முடித்துக் கொள்ளலாம்.

இது ஹோட்டல் ஹால் என்பதால் அது போல வசதிகள் இருக்கவில்லை. இரு வீட்டாரும் அனைத்தையும் தங்கள் வீட்டிலிருந்தே ஆயத்தம் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பாண்டியனும் அன்னபூரணியும் அவர்களது காரில் வந்து இறங்க கூடவே ரிஷியும் வந்திருந்தான். பட்டு வேஷ்டி, சட்டையில் இருந்தான்.

அதன் பின்னாலேயே இன்னொரு கார் வர அதிலிருந்து காயத்ரியும் சாரங்கனும் இறங்கினார்கள். மணமகன் தரப்பில் அத்தனைக் கூட்டம் இருக்கவில்லை. ஆனால், பெண் வீட்டார் தரப்பில் ஜனக்கட்டு அதிகமாக இருந்தது. அத்தனைப் பேரையும் எந்தக் குறையும் இல்லாமல், முகம் கோணாமல் வரவேற்றார்கள் மாப்பிள்ளை தரப்பினர்.

சரியாக நேரம் பத்தை நெருங்கும் போது பெண்ணை அழைத்துக் கொண்டு பெண்ணின் குடும்பம் வந்து சேர்ந்தது. பாஸ்கர் தனது சொந்த பந்தங்களோடு ஏற்கனவே ஹோட்டலுக்கு வந்திருந்தார். பவித்ரா அத்தனை சீக்கிரத்தில் ஹோட்டலுக்கு வந்தால் எல்லோரினதும் பார்வைப் பொருளாக ஆகிவிடுவாள் என்பதால் அன்னபூரணியே இந்த ஏற்பாட்டைப் பண்ணி இருந்தார்.

ஹோட்டலுக்கு வந்த நொடியிலிருந்து வாயிலையே ஆவலோடு பார்த்திருந்த தனது அண்ணனை பார்த்துச் சிரித்த காயத்ரி அதைக் கணவரிடமும் காட்டினாள்.

“என்ன மச்சான், அன்னைக்கு நான் பட்ட அவஸ்தை என்னன்னு உங்களுக்கு இப்பப் புரியுதா?” சாரங்கன் கேட்க ரிஷி உல்லாசமாகச் சிரித்தான்.

“அவஸ்தையைப் புரிஞ்சுக்கிட்டு நான் ஏதேதோ உதவி பண்ணினதா ஞாபகம் இருக்கு மாப்பிள்ளை.” அவனா சளைத்தவன்?! பதில் கொடுத்தான்.

“அது சரி! கொஞ்சம் பொறுங்க, பொண்ணு இன்னும் வரலையே, அதுக்கப்புறமாப் பாருங்க நம்ம பர்ஃபாமென்ஸை!”

“அப்பிடியா சொல்றீங்க?!”

“ஆமா!” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் அந்த வேன் ஹோட்டல் வாசலில் வந்து நின்றது. 

ரேணுகா முதலில் இறங்க, பின்னால் இளைய பெண்கள் மூவரும் வரிசையாக வந்திறங்கினார்கள். எல்லோரும் இறங்கிய பிற்பாடு கடைசியாக பவித்ரா இறங்கினாள். ரிஷி நிச்சயதார்த்தத்திற்காக அனைவருக்கும் ஜவுளி வாங்கி இருந்தான். பவித்ராவிற்கு மட்டும் புடவை எடுக்காமல், அவள் குடும்பத்துப் பெண்கள் அனைவருக்கும் ஆடைகள் வாங்கி இருந்தான். 

“பாஸ்கரோட பொண்ணுங்க சும்மா நாள்லயே அழகு, இப்ப கேட்கவும் வேணுமா?!” சொந்தத்தில் ஒரு பெண் சொல்ல ரேணுகாவிற்கு பக்கென்றது.

எப்போதுமே பெண்களை வெளியே அழைத்துக் கொண்டு போவதற்குத் தயங்குவார் ரேணுகா. சொந்தத்தில் நடக்கும் விசேஷம் என்றாலும் அவருக்கு அதில் அத்தனை உடன்பாடு இல்லை. காயத்ரி நிச்சயதார்த்தத்தின் போதும் இதைச் சொல்லித்தானே கணவரிடம் புலம்பினார். இப்போது அந்த வயதான பெண்மணி அதையே சொல்லவும் அவரைக் கவலைப் பிடித்துக் கொண்டது.

ஆனால் இவை எதையும் கவனத்தில் கொள்ளாது வாகனத்திலிருந்து இறங்கிய அந்த மோகனாங்கியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ரிஷி. ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த சாமுத்ரிகா பட்டு உடுத்தி இருந்தாள். அடுத்தடுத்ததாக அடுக்கி வைத்தாற்போல மாங்காய் டிசைன் தங்க நிற பார்டரில் மின்னியது. உடம்பு முழுவதும் அதே தங்க நிற மாங்காய் டிசைன்.

கூந்தலைத் தளர்வாகப் பின்னி பூ வைத்திருந்தாள். மிதமான ஒப்பனை. ஆபரணங்கள் அத்தனை அணிந்திருக்கவில்லை. நெற்றி வகிட்டில் சின்னதாக ஒரு நெற்றிச்சுட்டி, சிவப்பு நிற முத்தோடு அவள் பிறை நுதலைக் கொஞ்சி விளையாடியது.

தங்கப் பாவைப் போல ஹோட்டலுக்குள் நுழைந்த பெண்ணை ரிஷி விழி விலக்காமல் பார்த்திருந்தான். அவள் கண்கள் ஒரு முறை அண்ணார்ந்து அங்கிருந்த மனிதர்களைப் பார்த்தது. அதன் பிறகு அந்தக் காந்த விழிகள் மறந்தும் யாரையும் நோக்கவில்லை. மாப்பிள்ளை தரப்பில் ஒரு சுமங்கலி ஆரத்தி எடுக்க, நிகழ்வுகள் ஆரம்பித்தன. சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவு பெற… இன்னாரது பெண் இன்னார்க்கு என்று சுற்றம் சூழ உறுதிப்படுத்தப்பட்டது. ஒரு மாதம் கழித்துத் திருமணம் என்றும் முடிவானது.

மாப்பிள்ளை வீட்டார் சார்பாக காயத்ரி ஒரு பெரிய ஆரம் அணிவித்தாள். மாப்பிள்ளையின் தங்கை என்ற முறையில் அனைத்துக் காரியங்களிலும் அவளே முன்னின்று அனைத்தும் பண்ணினாள்.

“ரேணு!” அன்னபூரணி ரேணுகாவை மகிழ்ச்சி பொங்க இறுக அணைத்துக் கொண்டார். 

“நான் அன்னைக்கே சொல்லலை, குடும்பத்துல இருக்கிற யாருக்காவது பவித்ராவை நான் கேட்பேன், நீ கண்டிப்பாக் குடுக்கணும்னு.” 

“ஆமாங்கண்ணி.”

“அப்போ எம் மனசுல ரிஷிதான் இருந்தான், இன்னாருன்னு சொல்லி உன்னை ரொம்பப் பயமுறுத்த வேணாம்னுதான் நான் யாருன்னு சொல்லலை.” சொல்லிவிட்டு அன்னபூரணி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“ஐயோ! என்னண்ணி இது? எதுக்கு இப்போ கண் கலக்குறீங்க?”

“இல்லை ரேணு, தாய் தகப்பன் இல்லாத பையன், நம்ம பக்கத்துல இருந்தாக் கூட நம்மால நல்லாப் பார்த்துக்க முடியும், கண்காணாத தேசத்துல வேற இருக்கான், அவனை நினைச்சு நான் அழாத நாளில்லை.”

“…………….”

“அவனுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்துரு ஆண்டவா ன்னு நான் எப்பவும் பிரார்த்தனை பண்ணுவேன், அவனை நல்லாப் பார்த்துக்கிற மாதிரி, பொறுப்பா ஒரு பொண்ணு அமையணும்னு வேண்டிக்கிடுவேன், என்னோட பிரார்த்தனை வீண் போகலை ரேணு.” 

“அழாதீங்க அண்ணி.”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ரேணு, பவித்ரா எம் புள்ளையை நல்லாப் பார்த்திக்கிடுவா, அவனுக்கு அம்மா இல்லேங்கிற குறை இல்லாம செஞ்சிடுவா.” 

“கண்டிப்பா.”

“எனக்கு அது போதும் ரேணு.”  

விருந்தினர்கள் அனைவரும் கலைந்து போயிருக்க ஒரு சம்பிரதாயத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வந்திருந்தார்கள். ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வீடு. எந்த ஆர்ப்பாட்டமோ அநாவசிய செலவோ இல்லாமல் கைக்கடக்கமாக இருந்தது. எந்தக் குறையும் இல்லாமல் தன் பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஸ்கர் செய்து கொடுத்திருந்தார்.

“வாங்க மாப்பிள்ளை.” மாமனாரின் அழைப்பில் முதல் முறையாக அந்த வீட்டிற்குள் நுழைந்தான் ரிஷி.

“அத்தான், முதல்ல எங்க ரூம்ஸ் வந்து பாருங்க.” ஆசையாக கடைக்குட்டி தர்ஷினி அழைக்கவும் அவளோடு போனான். மூன்று அறைகள் கொண்ட வீடு அது. ஒன்று பெற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்க, மற்றைய இரு அறைகளையும் பெண்கள் உபயோகித்தார்கள்.

“அதுல அகல்யா க்காவும் பைரவி க்காவும், இதுல நானும் பவித்ரா க்காவும்… உள்ள வாங்க த்தான்.” தன் அத்தானின் கையைப் பிடித்து தங்கள் அறைக்குள் அழைத்துச் சென்றாள் இளையவள்.

“தர்ஷி, அத்தானை ரொம்பத் தொல்லைப் பண்ணக்கூடாது.” ரேணுகா ஒரு சத்தம் போடவும் ரிஷி சிரித்தான்.

“இல்லையில்லை… பரவாயில்லை, விடுங்கத்தை.” சொன்னவன் சின்னவளோடு ரூமிற்குள் போனான். மற்றையவர்கள் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து கொண்டார்கள். அகல்யாவும் பைரவியும் வந்தவர்களைக் கவனிக்க அம்மாவிற்கு உதவிக் கொண்டிருக்க பவித்ரா மெதுவாக அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

“இது பவித்ரா க்கா பெட், இது என்னோடது, நான் இந்த டேபிள்லதான் உட்கார்ந்து படிப்பேன், அந்த கப்போர்ட் முழுக்க அக்காவோட மேக்கப் ஐட்டம்ஸ், அந்தப் பக்கமே நாங்க போக மாட்டோம்…” இளையவள் அனைத்தையும் கடை பரப்பிக் கொண்டிருந்தாள்.

“உட்காருங்க த்தான்.” நின்றுகொண்டிருந்த ரிஷியை அவசர அவசரமாக தர்ஷினி தன் அக்காவின் கட்டிலில் உட்கார வைத்தாள். படுக்கை மெத்து மெத்தென்று இருந்தது. இதுவரை அவனறியாத அவளின் ஸ்பரிசமும் இப்படித்தான் இருக்குமோ?!

“உள்ள வாக்கா, ஏன் அங்கேயே நிக்குற?” தர்ஷினி பேசிய பிறகுதான் கதவை நோக்கித் திரும்பினான் ரிஷி. அங்கே…

பவித்ரா நின்றிருந்தாள். இன்று முழுவதும் அவள், அவன் கண்ணெதிரேதான் நின்றிருந்தாள். ஆனால் இத்தனை உரிமையாக அவனால் அவளைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. சுற்றிவர அத்தனை உறவுகளை வைத்துக் கொண்டு அப்படிப் பார்ப்பதும் நன்றாக இராது என்பதால் ரிஷியும் தன்னை அடக்கிக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் கண்ணிரெண்டும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. தன் சொத்து அவள் என்று அங்குலம் அங்குலமாக அவளை ரசித்தது.

“வந்து உட்காரேன் க்கா.” என்ற தர்ஷினி தன் அக்காவின் கையைப் பிடித்து இழுத்து அவள் படுக்கையில் உட்கார வைத்தாள். எதிரெதிரே இருந்த படுக்கைகள். அத்தானிடம் இப்போது தான் என்ன பேசினாலும் எடுபடாது என்று புரிந்து கொண்ட இளையவள்,

“நான் அத்தானுக்கு டீ கொண்டு வர்றேன்.” என்று மெதுவாக நழுவி விட்டாள்.

“பவி…” அந்தக் குரலில் இதுவரைத் தலைகுனிந்து அமர்ந்திருந்த பவித்ரா மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். 

ரிஷியின் முகத்தில் இருந்தது என்ன?! காதலா, ஆசையா, சந்தோஷமா?! எதுவெனப் பிரித்தறிய முடியாத ஏதேதோ உணர்ச்சிகள் அவன் முகத்தில் கலந்து கொட்டிக் கிடந்தன. பெண்ணுக்கு இப்போது பேச்சு வரவில்லை. ஒரு புன்னகையோடு மீண்டும் குனிந்து கொண்டாள்.

“எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? இப்பவே அள்ளிக்கிட்டு அப்பிடியே லண்டன் போயிடலாமான்னு தோணுது.” 

“……………”

“புடவையில பார்க்க ரொம்ப அழகா இருக்கே!” 

“…………..”

“ஏதாவது பேசேன் பவி… இன்னைக்கு ஃபங்ஷன் நல்லா இருந்துதில்லை?”

“ரொம்ப நல்லா இருந்துச்சு.”

“ம்… பெரிய மண்டபத்துல பண்ணலைன்னு உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கா?”

“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லை, இதுவே ரொம்ப க்ராண்ட்டா இருந்துது.”

“பெரியப்பா மேக்ஸிமம் ட்ரை பண்ணினாங்க, முடியலை… ஆனா கல்யாணத்தை ஜமாய்ச்சுடலாம், அதுக்குத்தான் இன்னும் நிறைய நாள் இருக்கே.”

“ம்…”

“ஆனா எனக்கு…” அவன் தயங்கினான்.

“என்ன?!”

“நடுவுல இவ்வளவு நாள் இருக்கேன்னு வருத்தமா இருக்கு.” அவன் சோகமாகச் சொல்ல இதுவரை இயல்பாக அவன் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று குனிந்து விட்டாள். ரிஷி மௌனமாகச் சிரித்தான். தான் பேசும் சின்னச் சின்ன வார்த்தைகளுக்கும் அவள் நாணுவது, முகம் சிவக்கத் தலை குனிவது… பார்க்க அவ்வளவு இன்பமாக இருந்தது இளவலுக்கு.

“நான் எப்பிடி இருக்கேன்னு சொல்லவே இல்லையே?”

“அழகா இருக்கீங்க.” குனிந்த தலை நிமிராமல் பதில் வந்தது.

“அப்பிடியா?”

“இன்னைக்குத்தான் ரெண்டாவது தடவை வேஷ்டி கட்டியிருக்கீங்கன்னு நல்லாவேத் தெரியுது.”

“ஏய்! எப்பிடிக் கண்டு பிடிச்சே?!” அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டான்.

“……………” அவள் இப்போது மௌனமாகச் சிரித்தாள்.

“உண்மையாவே இன்னைக்குத்தான் ரெண்டாவது வாட்டி வேஷ்டி கட்டியிருக்கேன், காயத்ரி கல்யாணத்தப்போ முதல் முதலாக் கட்டினேன்.”

“பார்த்தேன்… நீங்க எப்பப் பார்த்தாலும் வேஷ்டியிலேயே ஒரு கண்ணை வெச்சிருந்ததை.”

“ஹா… ஹா… அப்போ நீங்க எம்மேல ஒரு கண்ணை வெச்சிருந்தீங்கன்னு சொல்லுங்க.” அவன் குறும்பாகக் கேட்கவும் பற்கள் தெரிய அழகாகப் புன்னகைத்தது பெண். சரியாக அந்நேரத்தில் இளைய பெண்கள் மூவரும் தங்கள் அத்தானுக்கு தின்பண்டங்கள் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்கள். 

“ஐயையோ! என்னம்மா இதெல்லாம்?”

“அதெல்லாம் தெரியாது அத்தான், இதெல்லாம் உங்களுக்குத்தான், நல்ல புள்ளையாச் சாப்பிட்டு முடிக்கணும்.” சொன்னபடியே தன் பக்கத்தில் அமர்ந்த அகல்யாவின் காதில் ஏதோ முணுமுணுத்தான் ரிஷி.

“நோ ப்ராப்ளம் அத்தான்.” என்று சட்டென்று பதில் சொன்னவள்,

“அக்கா, எவ்வளவு நேரத்துக்கு இந்த ஜ்வெல்ஸ் எல்லாம் போட்டிருப்பே, கழட்டு.” என்றாள்.

“ஆமா… பவி க்கா தலையில எவ்வளவு பூ!” பைரவியும் உதவிக்கு வர… நகைகள், பூ என பவித்ராவை அலங்கரித்திருந்த அனைத்தையும் அகற்றினார்கள்.

“முகத்தைக் கழுவி கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகுக்கா.”

“ம்…” பவித்ரா அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய,

“நாளைக்கு எத்தனை மணிக்கு த்தான் ஃப்ளைட்?” என்றாள் அகல்யா.

“ஈவ்னிங், காயத்ரியும் மாப்பிள்ளையும் ஏர்போர்ட் வரைக்கும் வருவாங்க, பவியை அனுப்பச் சொன்னா அனுப்புவாங்களா?” 

“ம்ஹூம்… நான் நினைக்கலை த்தான்.”

“இனி ஒரு மாசம் கழிச்சுத்தான் பார்க்க முடியும், அனுப்பினா நாளைக்கு எங்கூடக் கொஞ்ச நேரம் இருப்பா இல்லை அகல்யா?” ரிஷி கேட்டபோது பெண்கள் மூவருக்கும் உருகி விட்டது.

“அப்பாவை எப்பிடியாவது சம்மதிக்க வெக்கலாம், ஆனா அம்மா…” அகல்யா தயங்கினாள்.

“சத்தியமா விட மாட்டாங்க.” இது பைரவி.

“நீங்க ப்ளான் பண்ணின மாதிரி இப்போக் கூட்டிக்கிட்டுப் போங்க த்தான்.”

“ஓ… அதைத்தான் உங்கிட்ட அத்தான் இப்போச் சொன்னாங்களா அகல்யா க்கா?”

“ஆமா… காயத்ரி அண்ணி நம்ம நாலு பேரையும் இப்போ அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவாங்க, அதுக்கப்புறமா அக்காவை அவங்க வழிக்குக் கொண்டு வர்றது அத்தான் பாடு.” சொல்லிவிட்டு அகல்யா சிரித்தாள்.

“அக்கா உங்கக்கூட தனியா எல்லாம் வராது த்தான்.” பைரவியும் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

“ஏன்? பாவம் அத்தான்! எவ்வளவு ஆசையாக் கேட்குறாங்க, இந்தக்கா போனாத்தான் என்னவாம்? அதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சில்லை?!” தர்ஷினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாத்ரூம் கதவு திறக்க அனைவரும் வாயை மூடிக் கொண்டார்கள்.

***

அந்த டாக்ஸி அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. உள்ளே ரிஷி, அவனருகே… வெட்கம், பயம், சங்கோஜம் என அனைத்தையும் முகத்தில் தேக்கி அமர்ந்திருந்தாள் பவித்ரா. பெண்களை அனுப்ப வெகுவாகத் தயங்கிய ரேணுகாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி இருந்தாள் காயத்ரி. அனைவரும் அன்னபூரணியின் வீட்டுக்கு வந்த கையோடு ரிஷி கிளம்பிவிட்டான். 

“ஐயோ ரிஷி! நம்மக்கூட பொண்ணுங்களை அனுப்பவே ரேணு அவ்வளவு தயங்கினா, இதுல நீ தனியா வேற கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்றே? பெரியப்பா கேட்டா நான் என்ன பதில் சொல்றது?” பதறிய அன்னபூரணியை சமாளிக்கவே ரிஷி திண்டாடினான்.

“ப்ளீஸ் அன்னம்மா, இன்னைக்கு ஒரு நாள்தான் அவ கூட நான் இருக்க முடியும், அதுக்கப்புறம் ஒரு மாசம் பார்க்கவே முடியாது, பெரியப்பா கேட்டா எதையாவது சொல்லிச் சமாளியுங்க.” 

“மச்சான், காரை எடுத்துக்கிட்டுப் போங்க.” இது சாரங்கன்.

“இல்லை மாப்பிள்ளை, ஹில் ஸ்டேஷன்… பழக்கமில்லாத ரோட்ஸ், நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை.” எல்லோரையும் சமாளித்து விட்டு ஒரு பாடாக அவன் வெளியே வந்த போது அப்பாடா என்றிருந்தது. டாக்ஸி அன்று அவர்கள் வந்திருந்த அதே ஹோட்டலின் முன்பாக வந்து நின்றது.

“வா பவி.” பெண்ணை அழைத்துக் கொண்டு உள்ளே போனான் ரிஷி. 

அன்றைக்குப் போல இன்று அவன் டேபிள் புக் பண்ணி இருக்கவில்லை. ஹோட்டலின் உள்ளே இன்னும் சற்று தூரம் நடந்து போக அழகான மரத் தடுப்புகளால் ஆன அறைகள் போன்ற அமைப்புகள் இருந்தன. ஒரு ஆள் உயரத்திற்கு அழகிய மர வேலைப்பாடுகள் கொண்ட தடுப்புகள். உள்ளே அரைவட்ட சோஃபா போடப்பட்டிருந்தது.

இருவர் மாத்திரம் அமரும் ஏற்பாடு. ஆங்காங்கே அழகான மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. உள்ளே போய் அமர்ந்தால் அங்கு நடப்பது எதுவும் வெளியே தெரியாது. கால்கள் பின்ன பவித்ரா அங்கேயே நின்று விட்டாள். பெண்ணின் முகத்தைப் பார்த்த ரிஷியின் இதழ்களும் லேசாக வளைந்து சிரித்தன.

“அன்னைக்கு ஆசை மட்டுந்தான் இருந்துச்சு, கூடவே தங்கைங்களும் இருந்தாங்க, இன்னைக்கு… ஆசையோட உரிமையும் இருக்கு, கூட யாருமே இல்லை, என்னோட காதல் இன்னைக்குக் கண்ணியம் பார்க்காது பவி.” அவள் காதோரம் அவன் சரசமாகச் சொல்ல பவி விக்கித்துப் போனாள். இப்படிப் பேசுபவனிடம் என்ன சொல்வது? மருண்டு போய் அவள் அவனைப் பார்க்க, 

“கொல்லுற பேபி நீ என்னை!” என்றான் கிறக்கத்தோடு.

இவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை ஒரு ஊழியர் காட்ட ரிஷி பெண்ணை அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.

“இப்போதைக்கு ரெண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வாங்க, அப்புறமா ஃபூட் ஆர்டர் பண்ணுறேன்.” ரிஷி சொல்ல அந்த ஊழியர் நகர்ந்து விட்டார்.

“உட்காரு டா.” அவன் சொல்ல அவள் அமர்ந்து கொண்டாள்.

“பக்கத்துல உட்கார பர்மிஷன் உண்டா? இல்லை… தள்ளி உட்காரணுமா?” அவன் குரலில் ஏகத்துக்கும் கேலி இருந்தது.

“தள்ளி உட்காரச் சொல்லி நான் சொன்னா நீங்க கேட்டுக்குவீங்களா?” லேசாகத் தலையை உயர்த்திக் கேட்டாள் பவித்ரா.

“சத்தியமா இல்லை!”

“அப்புறம் எதுக்கு இந்தத் தேவையில்லாத கேள்வி?” அவன் கண்களை இப்போது அவள் பார்க்க அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.

எதுவும் பேசத் தோன்றவில்லை ரிஷிக்கு. அந்த மெழுகுவர்த்தி ஒளியில் நிச்சயதார்த்தப் புடவையில் ஜொலித்தவளை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“இப்பிடி… பார்த்துக்கிட்டே இருந்தா… எப்பிடி?” பெண் தட்டுத் தடுமாறியது.

“பேசவே தோணலையே ம்மா!”

“ஏன்?”

“இவ்வளவு அழகா இருந்தா எப்பிடிப் பேச்சு வரும்?” சொல்லியபடியே அவள் கரத்தை மெதுவாகப் பிடித்தான் ரிஷி. 

பெண்களை அறிந்தவன் அவன். ஆனால்… இந்தப் பெண்மை, அவனுக்குப் புதிது புதிதாக ஏதேதோ நூதனங்களை அறிமுகப் படுத்தியது. மெல்லிய கரம், அழகான விரல்கள். சிரத்தையுடன் அவள் பராமரித்திருப்பதை நகங்கள் எடுத்துக் காட்டின. அந்த விரல்களில் மென்மையாக முத்தம் வைத்தான் ரிஷி. 

“எவ்வளவு சாஃப்ட்டா இருக்கே நீ!” சொல்லியபடியே அவன் அவளை நெருங்கி உட்காரவும் பவித்ரா தவித்துப் போனாள்.

“யாராவது வந்திரப் போறாங்க அத்தான்!” சட்டென்று கையை இழுத்துக் கொண்டாள்.

ரிஷி அந்த ஒற்றை வார்த்தையில் முழுதாக வீழ்ந்து போனான். உயிராகிப் போனவள் முதன் முதலாக உறவு சொல்லி அழைக்கிறாள். அவள் இடையோடு தன் கரத்தைக் கொடுத்து இடைவெளியைக் குறைத்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தம் வைத்தான். 

“அத்தான்… ப்ளீஸ்.” அந்த ஒற்றை வார்த்தையைத் தவிர்த்தாலே அவன் கிறக்கம் தணிந்து போகும் என்று புரியாமலேயே அவனை அழைத்துப் போதை ஏற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. ரிஷி அவள் மென்மையை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளவில்லை. கழுத்து வளைவிலிருந்து அவள் இதழ்களுக்கு முன்னேறினான்.

“அத்தான்!” இப்போது முழுதாகத் தடை போட்டது பெண். அவள் மெல்லிய விரல்கள் அவன் உதடுகளை மூடியது.

“ஏன் டா?!” அப்போதுதான் நிதானத்திற்கு வந்த ரிஷி அவள் கலங்கிய விழிகளைப் பார்த்துத் திகைத்துப் போனான்.

“ஏய் பேபி! என்னாச்சு?!” அவன் ஆச்சரியப்பட, அந்தக் கண்ணீர் விழிகள் அவன் மார்புக்குள் சரண் புகுந்தது.

“ம்ஹூம்… வேணாம் அத்தான்.” கலங்கிய குரலில் அவள் சொல்ல ரிஷி புன்னகைத்தான். அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டன அவன் கரங்கள்.

“ஓகே ஓகே… இதுக்குப் போய் யாராவது கண் கலங்குவாங்களா? ம்…” அவள் மென்மை அவனை இன்னும் இன்னும் வசீகரித்தது. மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

“பவி…”

“ம்…” இப்போதும் அவன் கைகளுக்குள் அடங்கிக் கிடந்தபடியே பதில் சொன்னாள்.

“நாளைக்கு எனக்கு ஃப்ளைட், இந்நேரம் கிளம்பி இருப்பேன்.” அவன் சொல்லி முடிக்க சட்டென்று அவளிடத்தில் ஓர் அமைதி. அவள் இதயம் கூட துடிப்பை ஒரு நொடி நிறுத்தியதோ?! அவன் மார்பில் புதைந்திருந்த முகத்தை நிமிர்த்தி அண்ணார்ந்து பார்த்தாள். ரிஷியும் இப்போது அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் வலி இருந்தது.

“நீயும் ஏர்போர்ட் வரைக்கும் கூட வந்தா நல்லா இருக்கும் டா, ஆனா… உங்க வீட்டுல விடமாட்டாங்க.” சொல்லிவிட்டு ரிஷி பெருமூச்சு விட்டான்.

“அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சுத்தான் உன்னைப் பார்க்க முடியும் பேபி.” ரிஷியின் அணைப்பு இப்போது இறுகியது. பவித்ரா இப்போது அவனிலிருந்து விலகி அந்த வலி மிகுந்த முகத்தையே பார்த்தாள். ஒரு சின்னப் புன்னகையோடு தன்னைச் சுதாரித்துக் கொண்டான் ரிஷி.

“கண்டிப்பாப் போய்த்தான் ஆகணுமா?”

“ம்… வந்த இடத்துல இப்பிடி ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்ணைப் பார்ப்பேன்னு எனக்குத் தெரியாதே! ஒரு வீக்குக்கான வேலைகளை இப்பிடி இப்பிடிப் பண்ணுங்கன்னு கைட் பண்ணிட்டு வந்திருக்கேன்.”

“ஓ… இப்போ அங்க யாரு பாத்துக்கிறா?”

“ஆஷ்லி, என்னோட அசிஸ்டன்ட்… ஒவ்வொரு ப்ராஞ்ச்சையும் அந்தந்த மானேஜர் பார்த்துக்குவாங்க.” 

“ஓ… இன்னும் கொஞ்ச நாள் அவங்களே பார்த்துக்க மாட்டாங்களா?” 

“அப்பிடி பிஸினஸை விட முடியுமா பவி?”

“…………..”

“அடுத்த முறை வரும்போது ஒரு மாசம் தங்குற மாதிரித்தான் வருவேன், உனக்கு வீசா எடுக்கணும், கையோட கூட்டிக்கிட்டுப் போயிடணும், இனி இப்பிடியெல்லாம் விட்டுட்டு இருக்க முடியாது பேபி.”

பவித்ரா இப்போது எதுவும் பேசவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ஆர்டர் பண்ணிய ஜூஸ் வந்து விடவும் அதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

“இப்பிடியே அமைதியா உட்கார்ந்திருந்தா எப்பிடிம்மா? ஏதாவது பேசு, உங்கூட நான் இருக்கப் போற நேரம் இன்னும் கொஞ்சந்தான்.” ரிஷி சொல்லி முடித்த போது ஒரு கேவலோடு அவன் தோளில் சாய்ந்தது பெண். 

அதற்கு மேல் பொறுக்க முடியாதவன் போல அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் ரிஷி. அவள் முகம் முழுவதும் இப்போது அவன் முத்தம் பதிக்க பெண் அவனை அனுமதித்தது. அவள் இதழ்களை மீண்டும் நெருங்கியவன் அந்தக் கண்களை ஒரு நொடி ஆர்வத்தோடு பார்த்தான். இப்போது அங்கே மறுப்பிருக்கவில்லை! 

ரிஷி வெகு நிதானமாக அந்த இதழ்களில் தன் முதல் முத்திரையைப் பதித்தான்.