kkavithai08

கவிதை 08

ரிஷி லண்டன் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. வந்ததும் வராததுமாக வேலைகள் அவனை முழுதாக உள்வாங்கிக் கொண்டது. ஒரு வாரம் இலங்கை போயிருந்ததால் செவ்வனே அனைத்தும் தான் சொன்னது போல நடைபெற்றிருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டான். 

இனி அடுத்து வரும் ஒரு மாதத்திற்கான வேலைகளை ஒழுங்கு படுத்தி ஆஷ்லி கையில் கொடுக்க வேண்டும். அந்தந்தக் கிளை மானேஜர்களுக்கும் அவர்களுக்கான பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான் ரிஷி. இதற்கிடையில் தனக்கான திருமண ஆடைகள் அனைத்தையும் தேர்வு செய்தும் முடித்திருந்தான். ஆடைகளில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்குக் குறைந்தது ஒரு மாதமாவது தேவைப்படும் என்பதால் முதலாவதாக அந்த வேலையை முடித்துவிட்டான்.

எல்லோரோடும் தொழில் முறைப் பழக்கம், நட்பு இருந்தாலும் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சில மானேஜர்களுக்கு மட்டுமே தனது திருமண விபரத்தைத் தெரியப்படுத்தி இருந்தான். வெளிப்படையாக எல்லோருக்கும் தனது வாழ்க்கையின் முக்கியமான நாளை அம்பலப்படுத்த அவன் விரும்பவில்லை. அது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழி கோலும் என்பது அவன் எண்ணம்.

இலங்கையிலிருந்து வந்த நாள் முதல் ஆலிவர் ரிஷியை தொடர்பு கொண்ட படியே இருந்தான். மிகவும் பிஸியாக இருந்தது ஒரு காரணமாக இருந்த போதிலும், ஆலிவரை வேண்டுமென்றே அப்போதைக்குத் தவிர்த்தான் ரிஷி. ஆலிவர் எல்லோரோடும் எப்போதும் இயல்பாகப் பழகுபவன். நல்லவன்தான், இருந்தாலும்… கொஞ்ச நேரம் பேச்சுக் கொடுத்தால் அவன் வாயிலிருந்து பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இனிமேலும் அவனைத் தவிர்ப்பது நியாயமில்லை என்பதால் ரிஷி இன்றைக்கு ஆலிவரை அவனது ஆஃபீஸிற்கு வரச்சொல்லி இருந்தான். ஆலிவர் எத்தனைப் பெரிய இக்கட்டில் இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கின்றான் என்று ரிஷிக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அன்றைய சந்திப்பையே தவிர்த்திருக்கக் கூடும்.

ஆலிவரை பார்த்த மாத்திரத்தில் ரிசப்ஷனிஸ்ட் நேராக அவனை ரிஷியின் ரூமிற்கு அனுப்பி விட்டாள். முகத்திலும் மனதிலும் ஏகப்பட்ட குழப்பத்தைச் சுமந்து கொண்டுதான் வந்திருந்தான் ஆலிவர். ஷார்லட்டின் தாய் இதுவரை அவனை இரண்டு மூன்று முறை அழைத்துப் பேசிவிட்டார். ஒருவேளை ஷார்லட்டே இவனைத் தொடர்பு கொண்டிருந்தால் ஆலிவர் இத்தனை வருத்தப்பட்டிருக்க மாட்டானோ என்னவோ?!

ஆனால் அந்த வயதான பெண்மணியை அவனால் தட்டிக் கழிக்க முடியவில்லை. எப்படியாவது இன்றைக்கு ரிஷியிடம் இதைப்பற்றிப் பேசி விடவேண்டும். திடமாக முடிவு பண்ணிய படிதான் ரிஷியின் ரூம் கதவைத் திறந்தான் ஆலிவர். தன் நண்பன் தான் சொல்வதைக் கேட்டால் ஆத்திரப்படுவான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

“ஹாய் ஆலிவர்!” ஆர்ப்பாட்டமாக இருந்தது ரிஷியின் வரவேற்பு. ஆலிவர் இப்போது ஒரு கணம் திகைத்தான்.

‘தான் பேச வந்திருக்கும் விஷயத்திற்கும் இந்த குதூகலமான வரவேற்பிற்கும் சம்பந்தமே இல்லையே!’ 

“என்னாச்சு மேன்?! இவ்வளவு டல்லா இருக்கே?!” ரிஷி சட்டென்று கேட்டான். ஏனென்றால் ஆலிவர் இருக்கும் இடம் எப்போதும் குதூகலமாக இருக்கும்.

“ஒன்னுமில்லை ரிஷி, ட்ரிப் எப்பிடி இருந்துச்சு?”

“வாவ்! சூப்பர் ஆலிவர்!”

“ரியலி?!”

“ஆமா, உனக்கு நான் சர்ப்ரைஸ் ஒன்னு வெச்சிருக்கேன், அதைக் கேட்டா நீ சும்மா அசந்து போயிடுவே!”

“ஆஹா! அப்பிடி என்ன சொல்லப்போறே ரிஷி, நான் அசந்து போற மாதிரி?” பேச வந்த விஷயத்தை அடியோடு மறந்துவிட்டு ஆலிவரும் இப்போது ஆர்ப்பரித்தான்.

“இதைப் பாரு.” சொல்லிவிட்டு தனது ஃபோனை எடுத்து ஆலிவரின் பக்கமாக ஸ்கிரீனை காட்டினான். ரிஷியின் கையிலிருந்த ஃபோனை சட்டென்று வாங்கினான் ஆலிவர். வரிசையாக ரிஷி, பவித்ராவின் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள். ஆலிவர் நிச்சயமாக இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

“ரிஷி!” என்றான் பிரமித்துப் போய்.

“எப்பிடி இருக்கா என்னோட ஏஞ்சல்?” முகம் முழுவதும் மகிழ்ச்சி கொப்பளிக்கக் கேட்ட தன் நண்பனை நிமிர்ந்து பார்த்தான் ஆலிவர்.

“ரிஷி! முடிவே பண்ணிட்டியா?”

“இன்னும் டூ வீக்ஸ் ல வெட்டிங், டென் டேய்ஸ் ல நான் திரும்பவும் ஸ்ரீ லங்கா போறேன்.”

“வாட்?!”

“ஹா… ஹா…”

“நம்ம சர்க்கிள் ல யார்க்கிட்டயும் எதுவுமே சொல்லலையே ரிஷி? எங்கிட்டக் கூட எதுவுமே சொல்லலையே நீ? இப்பிடித் திடீர்னு வெட்டிங் ன்னு சொல்றே?!” 

“காரணமாத்தான் யார்க்கிட்டயும் சொல்லலை.” ரிஷியின் குரல் இப்போது லேசாக இறுகியது.

“எங்கிட்டயுமா?”

“உனக்குத்தான் இன்னும் தேவையில்லாத சகவாசங்கள் நிறைய இருக்கே, அப்போ எப்பிடி உங்கிட்டச் சொல்லுறது?”

“அதுக்காக…” எதையோ சொல்ல ஆரம்பித்துவிட்டு ஆலிவர் வாயை மூடிக்கொண்டான். ரிஷி இப்போது தன் நண்பனைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

“ஆலிவர்… நம்ம ஃப்ரெண்ட்ஸ் யாரும் ஒன்னும் தெரியாத பேபி கிடையாது, எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டுத்தான் வர்றாங்க, என்னமோ ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி சீன் போட்டு என்னைக் கவுக்க நினைச்சா…” ரிஷியின் முஷ்டி இறுகியது.

“அது எனக்கும் புரியுது ரிஷி…”

“என்னோட டேஸ்ட் வேற ப்பா, வாழ்க்கையில இந்தக் கல்யாணம், ஃபேமிலி இதைப்பத்தியெல்லாம் நான் என்னைக்குமே நினைச்சதில்லை.

“……………”

“அப்பிடியே நினைச்சிருந்தாலும் கண்டிப்பா அதுக்கு ஷார்லட் ஒத்து வரமாட்டா.”

“…………….”

“அவ தெரிஞ்சேதான் இந்த ஆட்டத்துல இறங்கினா, ப்ளடி ஏஷியன்தானே, இந்த உப்புப் பெறாத சென்டிமென்ட்டை கட்டிக்கிட்டு அழுவான்னு நினைச்சிருப்பா… நடக்காது ஆலிவர்.” 

“…………….”

“சொல்லி வை அவக்கிட்ட, இந்த ஃபோனை போட்டு உங்கிட்டப் புலம்புறது, அதைக் கேட்டுக்கிட்டு நீ எனக்கு ஃபோனை போட்டுப் புலம்புறது… இதெல்லாம் நல்லா இல்லை… நிறுத்திக்கச் சொல்லு.” ரிஷி கர்ஜித்தான்.

“ஷார்லட்டோட நான் பேசி ரொம்ப நாளாச்சு ரிஷி.”

“வெரி குட், ரொம்ப நல்லதாப் போச்சு, ஆளை விடு, நான் நிம்மதியா என்னோட கல்யாண வேலைகளைப் பார்க்கிறேன்.” 

அதுக்கு மேல் ஆலிவருக்கு என்னப் பேசுவது என்று புரியவில்லை. ரிஷி மேல் எந்தத் தவறும் இல்லை. அவனைத் தன் வலையில் வீழ்த்த ஷார்லட் செய்த சதிதான் இது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். சதி செய்தவள் தன் ஆசை பலிக்காது என்று தெரிந்ததும் இன்னொரு புளியங்கொம்பைப் பிடித்துக்கொண்டு அமெரிக்கா போய்விட்டாள்.

அவள் அவளுடைய வாழ்க்கையை நினைத்தது போல வாழும் போது ரிஷிக்கு என்ன வந்தது?! அவன் மட்டும் தன் தோளில் சுமையைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை முட்டாள்தனம்! ஆலிவர் இப்போது எழுந்து தன் நண்பனை இறுகக் கட்டிக் கொண்டான்.

“கன்க்ராட்ஸ் ரிஷி, ரொம்ப சந்தோஷமா இருக்கு, வெட்டிங் முடிஞ்சு இங்க வந்ததும் க்ரான்ட்டா ஒரு ரிசப்ஷன் வை.”

“கண்டிப்பா.”

“நான் கிளம்புறேன் ரிஷி.” சொல்லிவிட்டு ஆலிவர் கிளம்பவும் ரிஷியும் அவனோடு ரூம் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தான். ஆலிவர் எதையோ தன்னிடம் பகிர்ந்து கொள்ள வந்துவிட்டு பகிர்ந்து கொள்ளாமலேயே போவது ரிஷிக்கும் புரிந்துதான் இருந்தது.

ஆனால்… அதை என்ன, ஏது என்று தூண்டித் துருவ அவன் விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் அது அவன் வரையோடு இருக்கட்டும். தன்னை நெருங்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான். பார்ப்பதற்கு ஆயிரம் வேலைகள் இருந்ததால் அந்த நிமிஷமே ஆலிவரை மறந்துவிட்டு ரிஷி ஒரு ஃபைலுக்குள் மூழ்கிவிட்டான்.

***

அன்று காலையிலேயே பவித்ராவின் வீடு மிகவும் குதூகலமாக இருந்தது. காரணம், கடைக்குட்டி தர்ஷினியின் பிறந்தநாள் அன்று.

“ஹாப்பி பெர்த்டே தர்ஷி ம்மா.” எல்லோரது வாயிலும் இந்த வாழ்த்தொலியே ஒலித்த வண்ணம் இருந்தது. பிறந்தநாள் என்றால் பெரிதாக விசேஷமெல்லாம் அங்கே ஒன்றும் இராது. பாஸ்கர் பிள்ளைகளுக்கு அன்றைக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுப்பார், மதிய விருந்தாக நிச்சயம் ரேணுகா பிரியாணி பண்ணி விடுவார்.

“தர்ஷி ம்மா, இந்தா.” பவித்ரா எதையோ நீட்டவும்,

“என்னக்கா அது?” என்று கேட்டபடி தர்ஷினி வந்தாள். குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் அப்போது ஹாலிலேயே இருந்ததால் இவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். பவித்ரா சின்னதாக ஒரு பாஸ்புக்கை அவளிடம் நீட்டினாள். பெற்றுக்கொண்ட இளையவள் அதைப் புரட்டிப் பார்த்தாள். தர்ஷினி பெயரில் புதிதாக ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு அதில் பத்தாயிரம் ரூபாய் போடப்பட்டிருந்தது.

“அக்காவோட சின்னப் பரிசு.” 

“தான்க் யூ க்கா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் காலிங் பெல் அடிக்கும் ஓசைக் கேட்டது.

“யாரது?” கேட்டபடியே பாஸ்கர் எழுந்து போனார். வெளியே ஒரு இளைஞன் நின்றிருந்தான். இவர்கள் முகவரியை அவன் கூறி அதை பாஸ்கர் உறுதிப் படுத்தவும், கையிலிருந்த பெரிய பெட்டியையும் ஒரு ரோஜாக் கொத்தையும் பாஸ்கர் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். பாஸ்கருக்கு எதுவுமே புரியவில்லை. குழப்பத்தோடு உள்ளே நுழைந்தவரை வீடே வேடிக்கைப் பார்த்தது.

“என்னங்க இதெல்லாம்? யாரு குடுத்தா?”

“ஒன்னுமே புரியலை ரேணு, ஒரு பையன் வந்தான்… நம்ம வீட்டு அட்ரஸை சொன்னான், ஆமாப்பா… இந்த வீடுதான்னு சொல்லவும் குடுத்துட்டுப் போயிட்டான்.” 

“யாரு என்னக் கூடுத்தாலும் வாங்கிடுவீங்களா? என்னங்க நீங்க?” ரேணுகா சலித்துக் கொண்டார்.

“ஹை! எவ்வளவு அழகான ரோஸஸ்!” பைரவி குதித்தபடி அப்பாவின் கையிலிருந்த பூக்களை வாங்கிக் கொண்டாள். உயர்ஜாதி மஞ்சள் நிற ரோஜாக்கள்.

“பைரவி, அதுல ஏதோ கார்ட் மாதிரி இருக்கு, என்னன்னு பாரு.” அகல்யா சொல்லவும் சட்டென்று அந்த கார்டை எடுத்துப் பார்த்த பைரவி மலர்ந்து சிரித்தாள்.

“ஏய்! தர்ஷி இங்கப்பாரு, அத்தான்தான் உன்னோட பெர்த்டே க்கு இதெல்லாம் அனுப்பி இருக்காங்க!” பைரவியின் பேச்சில் வீடு முழுவதும் அவளைச் சூழ்ந்து கொண்டது.

“என்னக்கா சொல்றே?!”

“ஆமா தர்ஷி, இங்கப்பாரு.” பைரவி கார்டை எடுத்து நீட்ட அதில் அழகாக ஆங்கிலத்தில் டைப் பண்ணப் பட்டிருந்தது.

 ‘எங்கள் வீட்டின் கடைக்குட்டிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!’

 அந்த வார்த்தைகளில் அங்கிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போனார்கள். எவ்வளவு அழகாக, உரிமையோடு அந்த வார்த்தைகளை அவர்கள் வீட்டு மாப்பிள்ளை எழுதி இருக்கிறான்! ரேணுகாவும் பாஸ்கரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். ரேணுகாவின் கண்கள் லேசாகக் கலங்கிவிட்டன.

சரியாக அப்போது பார்த்து அவர்கள் வீட்டுத் தொலைபேசி சிணுங்கியது. தர்ஷினி ஓடிப்போய் அதை எடுத்தாள். அவளுக்கு நிச்சயம், அழைப்பது அத்தான்தான் என்பது.

“ஹலோ.”

“ஹாப்பி பெர்த்டே தர்ஷினி!”

“தான்க் யூ அத்தான்.” பெண் மகிழ்ச்சியில் கூப்பாடு போட்டது.

“கேக் வந்துதா ம்மா?”

“ஆமா த்தான், இப்போதான் வந்துது.”

“பிடிச்சிருக்கா?”

“இன்னும் ஓபன் பண்ணலை, ஃப்ளவர்ஸ் ரொம்ப அழகா இருக்கு த்தான்.” 

“அப்பிடியா.” ரிஷி புன்னகைத்தான்.

“உங்களுக்கு எப்பிடித்தான் தெரியும் இன்னைக்கு என்னோட பர்த்டே ன்னு?!”

“அதெல்லாம் அப்பிடித்தான், நாங்க கண்டு பிடிப்போமில்லை.”

“அக்கா சொன்னாங்களா?” கேட்டுவிட்டு தர்ஷினி பவித்ராவை திரும்பிப் பார்த்தாள். அவள் இல்லை என்பது போலத் தலையை ஆட்டினாள்.

“ஹா… ஹா… கேக்கை கட் பண்ணிட்டு நல்லா என்ஜாய் பண்ணுங்க, ஓகே யா தர்ஷினி?”

“அக்காக்கிட்டப் பேசுறீங்களா அத்தான்?”

“இல்லைம்மா, ரொம்ப டயர்டா இருக்கேன், நான் அப்புறமா அக்காக்கிட்டப் பேசுறேன், இப்ப வெச்சுடட்டுமா?”

“ஓகே அத்தான், தான்க் யூ சோ மச்!”

“ஓகே டா, பை.”

“பை.” ரிசீவரை வைத்துவிட்டு பவித்ராவை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் இளையவள்.

“நீதான் சொன்னியா க்கா இன்னைக்கு என்னோட பர்த்டே ன்னு? அத்தான் ரொம்ப ஸ்வீட் இல்லைக்கா?” சின்னவள் ஆர்ப்பரிக்க பவித்ரா எதுவுமே பேசவில்லை. 

உண்மையிலேயே அன்று தர்ஷினியின் பிறந்த நாள் என்று ரிஷியிடம் அவள் கூறி இருக்கவில்லை. அவனாகக் கண்டுபிடித்து இதையெல்லாம் பண்ணி இருக்கின்றான். இளம்பெண்கள் மூவரும் அதன்பிறகு அந்தப் பெட்டியைத் திறந்து கேக் கட் பண்ணினார்கள், பாட்டுப் பாடினார்கள். பெற்றவர்களும் பவித்ராவும் புன்னகை முகமாக இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தபடி இருந்தார்கள்.

“மாப்பிள்ளையோட வேலையைப் பார்த்தியா ரேணு?” மெதுவாக மனைவியிடம் கேட்ட பாஸ்கரின் குரலில் அத்தனைப் பெருமை.

“ஆமாங்க, வீட்டுக்கு வர்ற மூத்த மருமகன்… இப்பிடி அன்பா, அனுசரணையா இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!”

“மனசுல கொஞ்சம் கவலை இருந்துது ரேணு.”

“ஏங்க?”

“கண் காணாத தேசத்துக்கு நம்ம பொண்ணை அனுப்புறோமே, அவ வாழ்க்கை எப்பிடி இருக்குமோன்னு.” 

“………………..”

“ஆனா இப்போ அந்தக் கவலை இல்லைம்மா, மாப்பிள்ளை நம்ம பவியை நல்லாப் பார்த்துக்குவாரு.”

“ம்… எவ்வளவு இயல்பா ‘எங்கள் வீட்டுக் கடைக்குட்டி’ ன்னு எழுதி இருக்காரு, இதை அவரோட வீடா நினைக்கப் போகத்தானே அந்த வார்த்தை அவ்வளவு சுலபத்துல வந்திருக்கு?!”

“ஆமா.” 

வீட்டிற்கு வர இருக்கும் மாப்பிள்ளையை பற்றி பெற்றவர்கள் இப்படி மகிழ்ந்து போனார்கள் என்றால், இளையவர்கள் தங்கள் வருங்கால அத்தானைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார்கள்.

இரவின் தனிமையில் இவை எல்லாவற்றையும் அசைபோட்டபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவள் சொல்லாமல் ரிஷிக்கு எப்படி தர்ஷினியின் பிறந்த நாள் இன்றுதான் என்று தெரிந்தது?! இதோ… அதற்கான பதிலை நானே சொல்லிவிடுகிறேன் என்பது போல அவளுடைய ஃபோன் சிணுங்கியது. ரிஷிதான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ.” அவன்தான் அழைக்கிறான் என்று தெரிந்திருந்தும் தெரியாதது போலப் பேசியது பெண்.

“பவியோட அந்த அழகான அத்தான் ங்கிற அழைப்பு இன்னைக்கு மிஸ்ஸிங்!” அந்தக் காதலான வார்த்தைகளில் பவித்ரா மௌனமாகச் சிரித்தாள்.

“சொல்லேன் டா.” அவள் சொல்லும் அத்தானில் அவன் கிறங்கிப் போவான் என்றால், அவன் பேச்சில் அவள் முழுதாகச் சொக்கிப் போவாள்.

“சொல்லுங்க த்தான்.”

“என்னப் பண்ணுறே டா?”

“டின்னர் முடிச்சாச்சு, இனித் தூங்க வேண்டியதுதான்.”

“தூக்கம் அவ்வளவு சீக்கிரத்துல வந்திருமா எம் பேபிக்கு?” அந்த மயக்கும் குரலில் பவித்ரா சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

“ஏய்! என்னாச்சு?”

“எப்பக் கிளம்புறீங்க த்தான்?”

“இன்னும் நாலே நாலு நாள்தான், அதுக்கப்புறம் ஐயா அங்க.”

“ம்…”

“ட்ரெஸ் எல்லாம் ரெடி ஆகிருச்சு.”

“ஓ…” 

“உன்னோடது எல்லாம் வந்திருச்சா பவி?”

“ஆமா த்தான், இன்னைக்குத்தான் வந்திச்சு, தர்ஷினியோட பெர்த் டே இன்னைக்குன்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்? நான் சொல்லவே இல்லையே?!”

“டேய்! நம்ம பொண்ணுடா அவ, அவளோட பெர்த் டே எப்பன்னு நான் தெரியாம இருப்பேனா?”

“அம்மாக்கும் அப்பாக்கும் இன்னைக்கு அவ்வளவு சந்தோஷம்.”

“ஏனாம்?”

“வீட்டுக்கு வர்ற மூத்த மாப்பிள்ளை இப்பிடி எல்லார் மேலயும் அக்கறையா இருந்தா நாளைக்கு எந்தச் சண்டை சச்சரவும் வராதாம்.” 

“ம்…”

“ரெண்டு பேரும் இன்னைக்குப் பூராவும் உங்களைப் பத்தியே பேசித் தீர்த்துட்டாங்க.”

“ம்…”

“போதாததுக்கு உங்க மச்சினிங்க மூனு பேரும் ஒரு பக்கமா உக்கார்ந்து, அவங்க வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க.”

“என்னன்னு?”

“வேறென்ன? எல்லாம் அத்தான் புகழ்தான்.”

பவித்ராவை பேச விட்டுவிட்டு ரிஷி அமைதியாகக் கேட்டபடி இருந்தான். இந்த ஒரு மாத காலத்தில் ரிஷி அறிந்து கொண்டதெல்லாம் ஒரேயொரு விஷயம்தான். அவனிடம் அளந்து அளந்து பேசும் பெண் அவள் குடும்பம் என்று வந்துவிட்டால் பொங்கி விடுவாள். தன்னை மறந்து அவள் பேசும் பொழுது என்றால் அது நிச்சயமாக அவள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றியதாகவே இருக்கும்.  அதனாலேயே பவித்ராவின் குடும்பத்தின் மேல் ரிஷிக்கு அளவில்லாத ஒரு பற்று ஏற்பட்டது. அவனுக்கு நிச்சயமாகத் தெரியும், அன்றைக்கு அவள் அதிகம் பேசுவாள் என்று.

“எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க சரி, என்னோட பேபி சந்தோஷப்படலைப் போல இருக்கு?”

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அத்தான்.”

“அப்பிடியா?”

“ம்…”

“அப்பிடித் தெரியலையே… ரொம்ப சந்தோஷமா இருந்திருந்தா அத்தானை நீங்க வேற மாதிரியில்லை கவனிச்சிருப்பீங்க.”

“…………….”

“பவி…” அவன் குரலில் இதுவரை இருந்த சிரிப்பு, சரசம் எல்லாம் இப்போது காணாமல் போக,

“சொல்லுங்க த்தான்.” என்றாள் பவித்ராவும் அவசரமாக.

“இதுவரைக்கும் அம்மா, அப்பா, தங்கைங்க ன்னு நிறைய உறவுகளோட வாழ்ந்திருக்கே… ஆனா இனி வாழ்க்கை அப்பிடி இருக்காதுடா.”

“……………..”

“உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும், நான் இல்லேங்கலை.”

“இல்லையில்லை, நான் அப்பிடி நினைக்கலை த்தான்.”

“அப்பா… அம்மா ன்னு ஒருத்தர் பின்னாடி இன்னொருத்தர் போய் சேர்ந்தப்ப… நானும் இப்பிடித்தான் தவிச்சுப் போய் நின்னேன்.”

“உங்க அன்னம்மா உங்களுக்காக இங்கே இருந்தாங்க.”

“அங்க இருந்தாங்க, இங்க எங்கூட இருக்கலையேம்மா? அப்போதான் படிப்பை முடிச்சிருக்கேன், தொழிலைப் பத்தி ஓரளவுதான் தெரியும், முழுசா எல்லாமே தெரியுறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் என்னோட தலையில தூக்கி வெச்சுட்டுப் போய் சேர்ந்தா என்ன அர்த்தம் பவி?” அவன் குரலில் தெரிந்த கோபம் அவளைத் திடுக்கிடச் செய்தது. எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக நின்று சமாளித்த வலி அவனைப் பேசச் செய்கிறது என்று புரிந்து கொண்ட பெண் அமைதியாக இருந்தாள்.

“இவ்வளவு காலமும் அப்பா கஷ்டப்பட்டு உருவாக்கின தொழில்… இனிமேல் என்னோட கனவும் அதுதாங்கிறப்போ எப்பிடி பவி எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுட்டு அன்னம்மாவோட அங்க வந்து என்னால சோகம் கொண்டாட முடியும்?”

“……………..” பவித்ரா எதுவும் பேசாமல் இப்போதும் அமைதியாகவே இருந்தாள். அவன் மனதில் இருக்கும் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கட்டும் என்று வாளாவிருந்தாள்.

“இதெல்லாம் எதுக்கு உங்கிட்ட நான் இப்போ சொல்றேன்னு உனக்குப் புரியுதாடா?”

“புரியுது த்தான்.”

“கல்யாணம் பண்ணி நிறையப் பொண்ணுங்க ஃபாரின் வர்றாங்க, இல்லேங்கலை… அவங்களுக்கெல்லாம் அவங்க போற இடத்துல ஒரு குடும்பம் அவங்களுக்காக இருக்கும், இங்க… நான் மட்டுந்தான் உனக்காக இருக்கேன் பவி.” 

“எனக்கு நீங்க மட்டும் போதுமே த்தான்.”

“பவி…” அந்தக் குரல் நெகிழ்ந்து போனது.

“இப்பிடி யோசிச்சுப் பாருங்க, இவ்வளவு நாளும் நீங்க தனியா இருந்தீங்க, இனி உங்களோட நானும் இருக்கப் போறேன்.”

“அது சந்தோஷந்தான், இல்லேங்கலை… ஆனா உன்னோட குடும்பத்தை நீ மிஸ் பண்ணுவேடா.”

“அதான் நீங்க எங்கூடவே இருப்பீங்களே த்தான்.”

“கண்டிப்பா… அம்மா, அப்பா இருந்தப்போ சிட்டியை விட்டுக் கொஞ்சம் தூரமா பெரிய வீட்டுல இருந்தோம், என்னால அதைப் பராமரிக்க முடியலை, அதால சிட்டிக்குள்ள சின்னதா ஒரு டூ பெட்ரூம் ஃப்ளாட் வாங்கி அதுலதான் இப்போ இருக்கேன், நீ வந்ததுக்கு அப்புறமா எங்க உனக்கு இருக்கப் பிடிச்சிருக்கோ அங்க இருக்கலாம் என்ன?”

“ம்…”

“நான் இங்க என்ன பிஸினஸ் பண்ணுறேன்னு நீ இதுவரைக்கும் கேட்கவே இல்லையே பவி?”

“நான் எதெதைத் தெரிஞ்சுக்கணுமோ அதை அத்தான் எங்கிட்டச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன்.” 

“ஹா… ஹா… உன்னை அநியாயத்துக்கு நல்லவளா வளர்த்து வெச்சிருக்காங்கடி செல்லம்!” 

“டி சொல்றீங்க?!”

“சொல்லும் போது செம ரொமாண்டிக்கா இருக்கில்லை?”

“இருக்கும் இருக்கும்!”

“நீயும் டா சொல்லு பவி.”

“ம்க்கும், குடும்பம் வெளங்கிடும்!”

“ஹா… ஹா… நீ இப்பிடியெல்லாம் பேசுவியா பவி?!” ஆச்சரியப்பட்ட படி சிரித்தான் ரிஷி. அவன் முன்பாக அவள்தான் பேசுவதே இல்லையே!

“பாரடைஸ் எங்கிற பேர்ல நம்மளோட ஐம்பது ஹோட்டல்ஸ் யூகே பூரா இருக்குடா.” தொழில் என்று வந்துவிட்டால் அவன் வேறாகிப் போவான் என்று அவன் குரலில் இருந்து கண்டுபிடித்தாள் பவித்ரா.

“முக்கியமான எல்லா சிட்டிலேயும் நம்ம ப்ரான்ச் இருக்கு, கொஞ்சம் பெரிய சிட்டின்னா ரெண்டு ப்ரான்சஸ் இருக்கும்.”

“ஓ… எல்லாத்தையும் நீங்கதான் பார்த்துக்கணுமா த்தான்?” 

“ம்… இதுவரைக்கும் என்னையும் இது எல்லாத்தையும் நானே ஒத்தையாப் பார்த்துக்கிட்டேன், இனி என்னை நீங்க பார்த்துக்கங்க, தொழிலை நான் பார்த்துக்கிறேன், சரியா?”

“கண்டிப்பா த்தான்.”

“அப்போ அத்தானை நீங்க எப்பிடி பார்த்துக்குவீங்கன்னு எனக்கு இப்போ கொஞ்சம் சாம்பிள் காமிக்கலாமே!” அதன் பிறகு சிறுது நேரம் அவள் முகம் சிவக்கும் படி பேசிவிட்டுத்தான் அழைப்பைத் துண்டித்தான் ரிஷி.

தன்னைத் தாங்கிக் கொள்ளத் தனக்கொரு உறவு வரப்போகிறது என்று ரிஷி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அதேவேளை… தன்மேல் இத்தனைப் பிரியம் வைக்கும் அத்தான் அதேயளவு பிரியத்தைத் தன்னிடமும் எதிர்பார்ப்பான் என்ற புரிதலோடு தலையணையில் சாய்ந்து கொண்டாள் பவித்ரா.

அவன் தன் பெற்றோரை இழந்த போதே அன்பையும் அரவணைப்பையும் பாசத்தையும் இழந்திருக்கிறான். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இனி தன்னிடமிருந்தே அவன் எதிர்பார்ப்பான் என்பதையும் பெண் புரிந்து கொண்டது. அந்த நொடி அவன் மேல் அளவுகடந்த நேசம் உருவாக ஃபோனை எடுத்து முதன்முதலாக அவனுக்கு “ஐ லவ் யூ அத்தான்” என்று மெஸேஜ் அனுப்பினாள் பவித்ரா.

அங்கே மெஸேஜை பார்த்த அந்த நொடி ரிஷி எவ்வளவு சந்தோஷப்பட்டான் என்று பெண்ணுக்குத் தெரியாது. தொடர்ந்தாற் போல ஒரு குரல் பதிவு அவனிடமிருந்து வரவும் அதை ஓடவிட்டாள் பெண்.

அவன் எதுவுமே பேசியிருக்கவில்லை, மாறாக ஒரு முத்தச் சத்தம் அவள் காதில் வந்து ஒட்டிக் கொண்டது. நாணிய படி கண்ணயர்ந்தாள் பவித்ரா.