kkavithai10

கவிதை 10

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், நேரம் காலை ஏழு மணி.

குளிர்காலம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. காலை ஏழு மணிக்கும் இருள் லேசாகக் கவிந்திருக்க எதிரே வருபவர் கண்ணுக்குத் தெரியாத அளவு பனிமூட்டம். அன்றைய வானிலை முன்னறிவிப்புப் பத்து டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது. நுவரெலியாவில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் பவித்ரா ஓரளவிற்கு அந்தக் குளிரைத் தாக்குப் பிடித்தாள்.

ஏர்போர்ட்டிற்கே உரித்தான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு இருவரும் வெளியே வந்த போது ஜில்லென்று குளிர் முகத்தில் மோதியது.

“அத்தான்…” வெடவெடத்த பெண்ணைப் பொது இடம் என்றும் பாராமல் தன்னோடு சேர்த்தணைத்த ரிஷி சிரித்தான். சட்டென்று அவள் சங்கடத்தோடு விலகப் போக தங்களுக்குச் சற்று அப்பால் நின்றிருந்த ஒரு தம்பதியைக் கண்களால் காட்டினான் ரிஷி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் கணவன், மனைவி போலும். இதழொற்றலில் உலகம் மறந்து லயித்திருந்தார்கள். பவித்ராவின் முகம் சிவந்து போனது.

“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!” என்றான் ரிஷி குறும்பாக. ஏற்கனவே டாக்சி புக் பண்ணி இருந்ததால் எந்தவித தாமதமும் இன்றி இருவரும் வீடு நோக்கிப் பயணப்பட்டார்கள்.

ரிஷி முதலில் பவித்ராவை லண்டன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. அது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சின்ன ஃப்ளாட். கொஞ்சம் விசாலமான இடத்தில் வாழ்ந்து பழகிய பெண் பவித்ரா என்பதால் அவளை அந்தச் சிறிய வீட்டிற்கு முதன்முதலாக அழைத்துச் செல்ல அவன் பிரியப் படவில்லை.

பவித்ராவின் பெற்றோர் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியிலேயே இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்கள் என்பதை ரிஷி நன்கு அறிவான். தங்கள் தகுதிக்கு ஏற்றபடி ஒரு அரசாங்க ஊழியனை மாப்பிள்ளையாக எடுத்திருந்தால் அவர்கள் பெண் அவர்கள் கண்ணெதிரிலேயே காலம் முழுவதும் இருந்திருப்பாள்.

ஆனால், தாங்கள் தங்கள் பெண்ணிற்குக் கொடுத்த வாழ்க்கையை விட ரிஷி ஒரு படி மேலே போய் இன்னும் வளமாக அவளை வாழ வைப்பான் என்று நிச்சயமாக அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை எந்த இடத்திலும் பொய்த்துப் போய்விடக்கூடாது என்பதில் ரிஷி மிகவும் உறுதியாக இருந்தான். தாங்கள் சரியான ஒரு மாப்பிள்ளையைத்தான் தங்கள் பெண்ணிற்குத் தேர்வு செய்திருக்கிறோம் என்று அவர்கள் திருப்திப்பட வேண்டும். 

அப்படித் திருப்தியான ஒரு வாழ்க்கையைத் தன் மனைவிக்கு, பாஸ்கர், ரேணுகா தம்பதிகளின் அருமைப் புதல்விக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டான்.

ஏர்போர்ட்டில் இருந்து ஒரு மணிநேரப் பயணம். லண்டனிலிருந்து முப்பத்தியேழு மைல்கள் தொலைவில் இருக்கிறது ‘ஹிட்ச்சின்’ என்னும் அந்த அழகிய கிராமம். பழமை வாய்ந்த அந்த கிராமத்தில் வாழும் மனிதர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களே. வெகு அபூர்வமாக ஒன்றிரண்டு பிற நாட்டவர்களைக் காணலாம்.

‘லாவெண்டர்’ தோட்டத்திற்கு மிகவும் பிரசித்தமான அந்த இடம் இப்போது குளிர்காலம் என்பதால் பசுமையைத் தொலைத்துவிட்டு இன்னொரு விதமான அழகோடு காட்சியளித்தது. ஒரு சில மரங்கள் முழுதாக இலைகளைத் தொலைத்து விட்டுத் துன்பத்தில் தன் சொந்தங்களை இழந்துவிட்ட அப்பாவி மனிதனைப் போல நின்றிருந்தன.

ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்களில் இருந்த இலைகளும் மஞ்சள், சிவப்பு, பழுப்பு என வர்ணஜாலம் காட்டின. ஊர் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. வீதிகளில் நின்றிருந்த மரங்கள் கூட அழகாகப் பராமரிக்கப் பட்டிருந்தன. பொழுது இன்னும் முழுதாகப் புலராததால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை.

“ஊர் எப்பிடி இருக்கு? புடிச்சிருக்கா?” கணவனின் கேள்வியில் சட்டென்று திரும்பினாள் பவித்ரா.

“ரொம்ப அழகா இருக்கு த்தான்!” இதுவரை நேரமும் மனைவியின் முகத்தில் தோன்றிய பாவங்களையே ஒரு ரசனையோடு பார்த்திருந்த ரிஷி இந்த பதிலைத்தான் அவளிடமிருந்து எதிர்பார்த்தான்.

“இன்னும் ரெண்டு நிமிஷத்துல வீட்டுக்குப் போயிடலாம்.”

“ம்… வீட்டுல யாராவது இருக்காங்களா?” பவித்ரா கேட்க ரிஷி மௌனமானான்.

“அத்தான்… நான் தப்பா எதுவும் கேட்டுட்டேனா?”

“இல்லை டா, இந்த வீடு ரொம்ப நாளாப் பூட்டி இருந்துது, ஆஷ்லி கிட்டச் சொல்லி க்ளீனர்ஸ் போட்டு க்ளீன் பண்ணச் சொல்லி இருக்கேன்.”

“ஓ… நீங்க இங்க அடிக்கடி வரமாட்டீங்களா?”

“இல்லை பவி, லண்டன்தான் எனக்கு வசதி, அடிக்கடி வெளியூர் போகவேண்டி வரும், இது கொஞ்சம் பெரிய வீடு எங்கிறதால என்னால மெயின்டெய்ன் பண்ண முடியலை.”

“ம்…” இப்போது பெண் முகத்தில் லேசான புன்னகை. அதற்குள்ளாக வீடு வந்திருக்க இரண்டு பேரும் இறங்கினார்கள். தங்கள் பொருட்களை இறக்கிவிட்டு ரிஷி டாக்சியை அனுப்புவதற்குள்ளாக பவித்ரா அந்த ஏரியாவை நோட்டம் விட்டாள்.

மிகவும் அமைதியாக இருந்தது. தங்கள் வீட்டைப் போல இன்னும் நான்கைந்து வீடுகள் மாத்திரமே அந்தத் தெருவில் இருந்தது. சாலை எங்கும் மரங்கள்தான். இதுபோன்ற ஐரோப்பிய நாடுகளின் வனப்புக்கு இங்கிருக்கும் அதிகப்படியான மரங்கள்தான் காரணம் என்று பவித்ரா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அந்தத் தெருவில் இருந்த வீடுகள் அனைத்தும் ஒன்று போலதான் காட்சி அளித்தது. சுற்றிவர தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஒரேயளவான வெள்ளைப் பலகைகள் சீராக அடுக்கப்பட்ட வேலி. சுற்றி வர அமைக்கப்பட்டிருந்த இந்த வெள்ளை வேலியைத் தாண்டி உள்ளே இருந்த வீடு அழகாகத் தெரிந்தது. 

இலங்கையிலும் இது போலச் செய்யாமல் எதற்காக அழகழகான வீடுகளை மறைத்து ஆளுயர மதில் கட்டுகின்றார்களோ என்று சட்டென்று தோன்றியது பெண்ணுக்கு.

“வீடு எப்பிடியிருக்கு?” அருகில் கேட்ட குரலில் முகம் மலர புன்னகைத்தது பெண்.

“இந்த வீட்டை விட்டுட்டு எப்பிடி த்தான் உங்களால இருக்க முடியுது?!” பவித்ரா இப்படிக் கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் வார்த்தைகள் தானாக வந்து வீழ்ந்தது.

முகம் மலர ரிஷி இப்போது புன்னகைத்தான். வீதியில் வைத்திருந்த அவர்கள் பொருட்களை அவன் தூக்கியபடி உள்ளே செல்லப் பெண்ணும் உதவி பண்ணியது. வீதியிலிருந்து வீடு ஒரு இருபத்தைந்து மீட்டர் இடைவெளியில் இருந்தது. அந்த இடைவெளியில் பசிய புல் கம்பளம் விரித்திரிந்தது. 

அந்தக் காலை நேரப் பனியில் அங்கிருந்த புற்களெல்லாம் தலைக்குக் குளித்திருக்க அவற்றினூடே செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த செங்கல் பாதையில் நடந்து உள்ளே போனது பெண். வீட்டிற்கு முன்பாக நல்ல விசாலமாக போர்டிகோ இருந்தது. இருபது பேர் போல அங்கே உட்கார்ந்து உணவருந்தலாம். வீடு முழுவதும் வெள்ளையும் சாம்பல் நிறமுமே மாறி மாறி இருந்தது. ஆளுயர பெரிய ஜன்னல்கள், கதவுகள்… அனைத்தும் வெள்ளைச் சட்டங்களோடு அத்தனை அழகாக இருந்தது. ரிஷி வீட்டின் முன் வாசல் கதவைத் திறந்தான்.

“வெல்கம் டு அவர் பேலஸ் டார்லிங்!” கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தவன் வாசலில் நின்றிருந்தவளின் முன்பாக ஒற்றைக் காலில் மண்டியிட்டுக் கூறினான். பவித்ரா உண்மையிலேயே மயங்கிப் போனாள். எதற்கோ கட்டுப்பட்டவள் போல அவனை நெருங்கியவள் குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள். நிலத்தில் மண்டியிட்டிருந்தவனை அப்படியே எழுப்பி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“புதுப் பொண்ணை வரவேற்க இங்க என்னோட அம்மா இல்லை.” முதல் முறையாக ரிஷியின் கண்ணீர்க் குரலைக் கேட்கிறாள் பெண். அவள் இப்போது அண்ணார்ந்து அவனைப் பார்க்க முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டான் ரிஷி.

“அத்தான்…” அவன் முகத்தைத் தன் புறமாகத் திருப்பிய பெண் அவன் கன்னத்தில் எம்பி முத்தம் வைத்தது.

“நிறைய இழந்திருக்கீங்க, இல்லேங்கலை… ஆனா அதையே நினைச்சு வருத்தப்படுறதுல இனி எந்த அர்த்தமும் இல்லை, தன்னிரக்கம் எங்கிறது ரொம்ப மோசமான விஷயம் த்தான், அது நம்மளை முழுசாச் சாய்ச்சிடும்.” பெண் கோர்வையாகப் பேச, இவளுக்கு இவ்வளவு பேச வருமா என்பது போல ஆச்சரியமாகப் பார்த்திருந்தான் ரிஷி.

“இவ்வளவு நாளும் இந்த ரிஷி தனியாள், இனி அப்பிடியில்லை… உங்களுக்கு நானிருக்கேன் த்தான், இனி இந்த மாதிரியெல்லாம் நீங்க பேசக்கூடாது.” தனது பெயரை அழகாக உச்சரித்த பெண்ணை மெதுவாகத் தன்னருகே இழுத்து அந்த இதழ்களில் முத்தமிட்டான் இளையவன். சட்டென்று விலகத் தோன்றாமல் அவன் அங்கேயே தாமதிக்க பெண் மெதுவாக விலகப் பார்த்தது. 

“ம்ஹூம்…” விலக மறுத்தவன் இன்னும் சில நிமிடங்கள் அவளுக்குள் புதைந்து போனான். நிதானமாக நிமிர்ந்தவன் அவன் கன்னத்திலும் முத்தம் வைத்தான்.

“வீட்டைப் பார்க்கலாமா?” இது ரிஷி.

“ம்… குளிருது…” அவள் சொல்லவும் கிச்சனுக்கு அவளை அழைத்துச் சென்றவன் அங்கிருந்த பாய்லரை ஆன் பண்ணினான். அங்கிருந்த உபகரணங்களை எப்படி இயக்க வேண்டும் என்று அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான் ரிஷி. கீழ் தளத்தில் நல்ல பெரிய ஹாலும் கிச்சனும் ஒரு ரூமும் மாத்திரமே இருந்தது.

அங்கிருந்த காஃபி மிஷினில் இருவருக்கும் காஃபி போட்டு ஒன்றை அவளிடம் நீட்டினான். இப்போது வீட்டினுள் இதமான வெப்பம் பரவ அந்தக் காஃபியை அனுபவித்துக் குடித்தாள் பவித்ரா.

“இன்னைக்கு நானே சமையல் பண்ணுறேன் த்தான்.” கப்பை சின்க்கில் கழுவி வைத்தவளைப் பின்னோடே அணைத்த ரிஷி அவள் காதோரமாக,

“பேபி, சமையல் நாளைக்குப் பண்ணலாம், இன்னைக்கு வெறும் பீட்ஸாதான், இந்த வாரம் ஃபுல்லா ஷாப்பிங், அம்மா, அப்பா, தங்கைங்கன்னு அத்தானை நீங்கத் திரும்பிக் கூடப் பார்க்கலை.” என்றான் சோகமாக. பவித்ரா இப்போது சிரித்தாள். உண்மையிலேயே இந்த வாரம் முழுவதும் அவள் ரிஷியோடு சரியாகப் பேசக்கூட இல்லை. 

எல்லோரையும் விட்டு விட்டுக் கிளம்பப் போகிறோம் என்ற உணர்வு அவளை ஏதோ செய்யக் குடும்பத்தினரோடு ஒட்டிக் கொண்டாள். ரிஷிக்கும் அவள் மனது புரிந்திருந்ததால் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு அடிக்கடி அன்னம்மாவின் வீட்டிற்குப் போய்விடுவான். 

பெற்றவர்களும் கூடப் பிறந்தவர்களும் அந்த ஒரு வார காலத்தில் பவித்ராவோடு கொஞ்சிக் குலாவினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டின் மேல்தளத்தில் மூன்று படுக்கையறைகள் இருந்தன. ஒவ்வொரு அறைக்கும் சேர்ந்தாற் போலத் தனித்தனியாக பால்கனி இருந்தது. 

“இது அம்மா, அப்பா யூஸ் பண்ணின ரூம்.” ஒரு அறையைக் காட்டினான் ரிஷி.

“இந்த ரூம் நான் யூஸ் பண்ணுவேன், அது விசிட்டர்ஸ் யாராவது வந்தா தங்குறதுக்கு.” சொன்ன படியே அவனது அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான். அறை நல்ல பெரிதாக இருந்தது. பெரிதாக ஒரு பெட், வாட்ரோப், ட்ரெஸ்ஸிங் டேபிள் என ஒரு சில பொருட்களே அங்கிருந்தது. 

கால் புதையும் கார்பெட், அறையோடு ஒட்டிய பெரிய குளியலறை. மிகவும் சாதாரணமாக இருந்த அந்த வீட்டில் செல்வச் செழுமையை பவித்ரா ஒவ்வொரு இடத்திலும் உணர்ந்தாள். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்கவில்லை. ஆனால் அங்கிருந்த ஒன்றிரண்டு பொருட்களின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது.

“அத்தான்.”

“என்னடா?”

“அத்தை, மாமாவோட ஃபோட்டோ வீட்டுல எங்கேயும் இல்லையே?”

“நான் வெக்கலை பவி, பார்க்கிறப்பெல்லாம் ரொம்பக் கஷ்டமா இருக்கும், எதுக்கு நம்மளை நாமே ரணப்படுத்திக்கணும் சொல்லு?”

“ம்…”

“அப்புறமா ஆல்பம் காட்டுறேன், ஓகே.”

“ம்…” தலையை ஆட்டியவள் ஜன்னல் திரையை லேசாக விலக்கினாள். அங்கிருந்து பார்த்தால் வீட்டின் பின்புறம் முழுதாகத் தெரிந்தது.

“வீடு ரொம்ப அழகா இருக்கு.” பவித்ரா சொல்லி முடிப்பதற்குள்,

“என்னோட பவியை போல!” என்று ரிஷி முடித்து வைத்தான். அதற்கு மேல் பேச அங்கே எதுவும் இல்லை என்பது போல வார்த்தைகள் ஓய்வெடுக்க, இளமையும் உறவும் மட்டும் ஓயாது ரீங்காரம் செய்தது.

***

பத்து நாட்கள் பறந்தோடிப் போயிருந்தன. பவித்ரா இந்த வாழ்க்கைக்குத் தன்னை வெகு இலகுவாகப் பழக்கப்படுத்திக் கொண்டாள். அதற்கு முழுமுதற் காரணம் ரிஷி என்றுதான் சொல்ல வேண்டும். எங்கேயும் அவளை விட்டு நகராது அவளுக்கு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொடுத்தான். இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளே ஊருக்கு ஃபோனை போட்டு வீடியோ காலில் அனைவருக்கும் வீட்டைக் காட்டிவிட்டாள் பெண்.

“அப்பா! அத்தானோட வீடு சூப்பரா இருக்கு பவிக்கா!” தர்ஷினி ஆர்ப்பரித்த போது அங்கேயே உட்கார்ந்து ஏதோ ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த ரிஷி,

“அத்தானோட வீடு இல்லை தர்ஷி, உங்கக்காவோட வீடு.” என்று சட்டென்று திருத்தினான். அவன் சொன்ன அந்த நொடி பாஸ்கரும் ரேணுகாவும் திருப்திகரமான பார்வை ஒன்றைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள்.

“தர்ஷி, வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் கார்டன் இருக்கு, அது அவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?”

“அப்பிடியா?! கொஞ்சம் காட்டேன் க்கா.”

“ம்ஹூம்… ரொம்பக் குளிருது, என்னால இப்போ வெளியே போக முடியாது, நாளைக்குக் காட்டுறேன் என்ன?”

“ம்… சரி க்கா.” அதன் பிறகு ஒவ்வொருவராகப் பேசி முடித்திருந்தார்கள். பெண்களுக்குள் பேச ஆயிரம் கதைகள் இருந்தன. ரிஷி அவற்றைக் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் மூழ்கி விட்டான்.

பார்க்க வேண்டிய அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்த படியே பார்த்துக் கொண்டான். கீழ்தளத்தில் இருந்த அறை அவன் ஆஃபீஸ் அறையாகத்தான் உபயோகத்தில் இருந்தது. இதற்கு நடுவே ஒரு நாள் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர்கள் இருபது பேரை வீட்டிற்கே அழைத்து ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருந்தான்.

இது போல விழாக்களை நடத்தும் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுக் கணவனும் மனைவியும் விழா நாள் கதாநாயகன் கதாநாயகியாக நின்றிருந்தார்கள். வீட்டின் முன் தோட்டம் அழகுற வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, குஷன் நாற்காலிகள் போடப்பட்டு, அந்த இடமே பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. ஆலிவர் கூட அந்த விழாவிற்கு வந்திருந்தான். மறந்தும் அவர்களின் ‘பௌர்ணமி நாள்’ நண்பர்களை ரிஷி அழைத்திருக்கவில்லை.  

“இன்னும் கொஞ்சம் க்ரான்ட்டா இந்த ஃபங்ஷனை நான் எதிர்பார்த்தேன் ரிஷி.” ஆலிவர் குறைப்பட்ட போது ரிஷி எதுவுமே பேசவில்லை. ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான். ரிஷியின் அருகே அழகோவியமாக நின்றிருந்த பெண்ணைப் பார்த்த போது ஆலிவருக்கு அவ்வளவு திருப்தி. 

திருமணம் பற்றிய நினைவே இல்லாமல் இருந்த தன் நண்பன் தன் கொள்கையை விட்டுவிட்டுச் சட்டென்று சம்சாரியான காரணம் அப்போது அவனுக்குப் பிடிபட்டது.

‘இத்தனை அழகாகப் பெண் கிடைத்தால் எவன்தான் மயங்காமல் போவான்?!’ மனதுக்குள் நினைத்தபடி மணமக்களை மனதார வாழ்த்தினான். பார்ட்டி என்பதால் உணவு வகையறாக்களோடு அன்று மதுவும் பரிமாறப்பட்டது. ரிஷியும் தன் கையில் ஒரு கிண்ணத்தை ஏந்திக் கொள்ள பவித்ராவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

திருமணம் முடிந்திருந்த இத்தனை நாட்களில் இந்தப் பழக்கத்தை கணவனிடம் அவள் பார்த்ததில்லை. பாஸ்கர் இந்தப் பழக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதர் என்பதால் பெண்ணுக்கு இதெல்லாம் புதிது!

“பேபி, என்னாச்சு?!” மனைவியின் பயந்த பார்வைப் பார்த்து அவளருகே வந்தான் ரிஷி.

“அத்தான்! என்ன இது?!”

“எதுடா? ட்ரிங்க்ஸா?”

“ஆமா…”

“என்னாச்சு பேபி? பார்ட்டின்னா இதெல்லாம் சகஜந்தானே?!” என்றான் இலகுவாக.

“ம்ஹூம்… அது அவங்களுக்கு, உங்களுக்கு வேணாம்.” பவித்ரா சொல்லி முடிக்க ரிஷி கடகடவென்று சிரித்தான்.

“நீ சொல்ற மாதிரி பண்ணினா இங்க இருக்கிற அத்தனைப் பேரும் என்னை இப்போ பேபின்னு சொல்லப் போறாங்க.” அவன் ஏதோ ஹாஸ்யத்தைச் சொல்லிவிட்டது போலச் சிரிக்க அவளிடம் அதற்கான பிரதிபலிப்பு ஏதுமில்லை.

“ஹேய் பேபி! கொஞ்சம் புரிஞ்சுக்கோ டா, இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, இனிமே இதெல்லாம் வராம நான் பார்த்துக்கிறேன் என்ன?”  அவன் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவள் முகம் அப்போது தெளிவடையவில்லை. இருவருக்கும் இடையே நடந்த முதல் மனஸ்தாபம் அது.

அன்றைக்கு இரவு ரிஷி தன் மனைவியை நாடிய போது முழுதாக அவனை நிராகரித்தது பெண். ரிஷி அவளிடம் கொஞ்சம் திணறிப் போனான் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றைய பின்னேரப் பொழுது முழுவதும் இளமஞ்சள் நிற லெஹெங்கா அணிந்து, கூந்தலை உயரத் தூக்கிக் கொண்டைப் போட்டு அழகே உருவாக நின்றிருந்த காதல் மனைவி அன்றைக்கு அவனுக்கு மிகவும் தேவைப்பட்டாள். 

உயிரும் உடலும் அவளுக்காக ஏங்கி நின்ற போது வந்த அந்த மறுப்பு ரிஷியை வெகுவாகத் தாக்கியது. மனைவியின் மென்மையான பக்கங்களை மட்டுமே ரிஷி இதுவரை அறிந்திருக்கிறான். ஆனால்… இன்று தன் இன்னொரு பக்கத்தைக் கணவனிடம் காட்டினாள் மனைவி. ரிஷியின் கெஞ்சல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.

“பேபி ப்ளீஸ்… இன்னைக்கு ஒரு நாள் மட்டும், இனி இப்பிடி நடக்காது டா.” அவன் கெஞ்சிப் பார்த்தான்.

“அத்தான், நான் இன்னைக்கு அந்த ரூம்ல தூங்குறேன்.” உறுதியாக விருந்தினர்கள் அறையைக் கை காட்டிவிட்டு அவள் நகர அவள் கரம்பிடித்துத் தடுத்தான் ரிஷி.

“பேபி… ஐ நீட் யூ டுடே வெரி பேட்லி.” கரகரத்த அந்தக் குரலுக்கும் கூட அவள் கருணைக் காட்டவில்லை. ரிஷி அன்று தனியாகவே தங்கள் அறையில் தூங்கினான். 

“குட் மார்னிங் அத்தான்.” அடுத்த நாள் காலை எதுவுமே நடக்காதது போல தனக்குக் காலை வணக்கம் சொன்னப் பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தான் கணவன். ஒரு அழகான சிரிப்போடு அவனிடம் டீயை நீட்டிய பெண்ணிடம் ரிஷி எந்த விவாதத்திற்கும் போகவில்லை. அன்றைய நாளை சுமூகமாகவே அவனும் ஆரம்பித்தான்.

ஆனால்… மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடியபடி இருந்தன. பாசம் என்று வந்துவிட்டால் பணிந்து போகும் தன் மனைவிக்கு கொள்கை என்று வந்துவிட்டால் பணியத் தெரியாது போலும்! அவள் முதல் மறுப்பு அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. வேறு எந்த விஷயத்திலாவது அவள் தன்னை மறுத்திருந்தாலும் அவன் கண்டுகொண்டிருக்க மாட்டான். தான் அத்தனை ஆசையாக நெருங்கிய பின்பும் தன்னை அவள் நிராகரித்தது ரிஷிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அதே பெண்… இன்றைக்கு இரவு, நேற்று அணிந்திருந்த அதே இளமஞ்சள் நிற லெஹெங்கா அணிந்து, தூக்கிக் கட்டிய கொண்டையோடு அவன் முன் வந்து நின்றபோது ரிஷி மலைத்துப் போனான். மதி மயங்கிப் போய் முரட்டுத்தனமாக அவளை அவன் நெருங்கிய போது பெண் அவனை ஆனந்தமாக அனுமதித்தது.

“நேத்தைக்கு இல்லைன்னு சொல்லிட்டு… இன்னைக்குக் குடுக்கிறியா நீ?” மூர்க்கத்தனமான முத்தங்களுக்கு நடுவே அவன் கேட்டபோது பெண் சிரித்தது.

“பண்ணுறதையும் பண்ணிட்டு சிரிக்கிறியா நீ? என்னைக் கொல்லுறடி நீ!” அவன் சொல்லிய போது அவன் பாணியில் அவனது இதழ்களை மூடியது பெண்! இது அவன் கற்றுக் கொடுத்தது!

“நேத்து அத்தான் எனக்குப் பிடிக்காத மாதிரி இருந்தாங்க.” அவள் குழைந்தாள்.

“அப்போ இன்னைக்கு?”

“இந்த அத்தானை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே.” சொன்னவளைத் தனக்குள் சுருட்டிக் கொண்டது அந்தப் புயல்!

“அப்போ… அத்தான் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்தாத்தான் பக்கத்துல வருவீங்களோ?”

“ஆமா.” 

“இந்த அத்தானை உனக்கு எப்பிடிப் பிடிக்காமப் போகுதுன்னு இப்போ நானும் பார்க்கிறேன் பொண்ணே!” அவனது சில்மிஷங்களில் கூச்சப்பட்டுச் சிரித்தவளை அலாக்காக அள்ளிக் கொண்டான் ரிஷி. 

பெண்… அவன் செய்த சாகசங்களில் மதிமயங்கிப் போனது!