kkavithai11

கவிதை 11

இன்றோடு பவித்ரா அந்த வீட்டிற்கு வந்து இரண்டு மாதமாகிறது. இப்போது முழுதாகத் தன் நிர்வாகத்தின் கீழ் வீட்டைக் கொண்டு வந்திருந்தது பெண். இலங்கையின் உணவுப் பழக்க வழக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு சட்டென்று ஆங்கிலேயரின் முறைக்கு மாற இயலவில்லை. அத்தோடு அவர்கள் வசிக்கும் ‘ஹிட்ச்சின்’ இல் ஆசிய உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காது என்பதால் ரிஷி ஒரு நாள் அவளை லண்டன் அழைத்துப் போனான்.

அவர்களது ஃப்ளாட்டில் அன்று தங்கியிருந்து மனைவிக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி இருந்தார்கள். லண்டன் வீடு ஃப்ளாட் என்றாலும் கச்சிதமாக அழகாக இருந்தது. ரிஷி சார்ந்த எல்லா இடங்களிலும் பவித்ரா பார்த்தது செழுமையையும் அழகையும்தான். இருந்தாலும் ஏனோ பெண்ணுக்கு நகருக்குச் சற்று அப்பால் தள்ளி, எந்த பரபரப்பும் நெருக்கடியும் இல்லாமல் இருக்கும் கிராமத்து வீட்டையே பிடித்திருந்தது.

காலையில் எழுந்து டீ போடுவதிலிருந்து அனைத்து வேலைகளுக்கும் பவித்ரா இப்போது பழகி இருந்தாள். கொஞ்சம் அதிகமாக அவளை வாட்டிய குளிரைத் தவிர வேறு எதையும் கஷ்டமாகப் பெண் உணரவில்லை. கணவன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும். தனது வேலைகள் அனைத்தையும் வீட்டிலிருந்த படியே கவனித்துக் கொண்டான். சில பொழுதுகளில் மனைவியை உட்கார வைத்து அவன் சமைத்துப் போட்டான். வீட்டு வேலைகளில் அவன் சாதாரணமாகப் பங்கெடுத்த போது பவித்ரா ஆச்சரியப்பட்டாள்.

“என்னத்தான் இதெல்லாம் நீங்க பண்ணுறீங்க?!”

“ஏன் பேபி? நீ வர்றதுக்கு முன்னாடி நான்தானே இதெல்லாம் பண்ணினேன்.” இலகுவாக அவன் அவள் வாயை அடைத்துவிட்டான். தினமும் வீட்டாரோடு பேசினாள் பவித்ரா. அன்னபூரணி கூட இரண்டொரு முறைப் பேசினார். அன்றொரு நாள் அது போலப் பேசும்போது ரிஷியும் அங்கேதான் சோஃபாவில் ஏதோ வேலையாக உட்கார்ந்து இருந்தான்.

“பவித்ரா, எப்பிடிம்மா இருக்கே?”

“நல்லா இருக்கேன் அத்தை, நீங்க எப்பிடி இருக்கீங்க? காயத்ரி என்னப் பண்ணுறா?”

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம், காயத்ரி இப்பதான் ஏதோ பெயருக்குக் கொஞ்சம் சாப்பிடுறா, வாந்தி இன்னும் முழுசா நிக்கலைம்மா.”

“ஓ…” பவித்ரா மெதுவாகச் சிரித்தாள். இவர்கள் இங்கிலாந்து வந்த சிறிது நாட்களிலேயே காயத்ரியின் கர்ப்பம் உறுதிப் படுத்தப்பட்டிருந்தது. ரிஷிக்கும் அந்த விஷயம் தெரியும். இருந்தாலும் கணவன் அங்கேயே அருகில் இருக்கும் போது அது பற்றி மேலும் பேச பெண்ணுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

“நீ எப்போ பவிம்மா அத்தைக்கு இதுபோல நல்ல சேதி சொல்லப் போறே?” சட்டென்று அன்னபூரணி கேட்கவும் பவித்ரா வெலவெலத்துப் போனாள். ரிஷியின் தலை இப்போது சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்தது. அவளது முகத்தைப் பார்த்தவன் ஒரு சிரிப்போடு திரும்பிவிட்டான்.

“என்ன பவிம்மா பேச்சையே காணோம்?” அன்னபூரணி விடுவதாக இல்லை. 

“அத்தை…” பதில் சொல்லத் தெரியாமல் பெண் தடுமாறியது.

“இப்போ வேணாம்னு ஏதாவது முடிவுல இருக்கீங்களா என்ன? காலா காலத்துல, வயசோட பெத்துக்கணும் பவி.” அன்னபூரணியின் பேச்சு தொடர்ந்து கொண்டே போனது.

“யாரது எம் பொண்டாட்டியைக் கேள்வி கணக்குக் கேட்கிறது?” சட்டென்று கேட்ட படி எழுந்து வந்த ரிஷி திருதிருவென விழித்தபடி நின்றிருந்த மனைவியிடமிருந்து ஃபோனை வாங்கிக் கொண்டான், அவளைக் காப்பவன் போல.

“ஆமாண்டா, உம் பொண்டாட்டியை நாங்க ஏதாவது சொல்லிட்டா நீ எங்களைச் சும்மா விட்டுட்டுத்தானே மறுவேலை பார்ப்பே!” 

“அதான் தெரியுதில்லை, அப்புறமா என்ன கேள்வி…” ரிஷி அன்னபூரணியுடன் பேச்சைத் தொடர அதற்கு மேல் பவித்ரா அங்கே நிற்கவில்லை. விட்டால் போதுமென்று ரூமிற்கு வந்துவிட்டாள். ரிஷியும் அவள் வெட்கம் பார்த்து அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் அன்றிரவு பேசினான். நிறைவான அமைதியில் களைத்திருந்த மனைவியின் தலையைக் கோதியவன்,

“பவி…” என்றான்.

“ம்…” 

“அன்னம்மா இன்னைக்கு ஏதோ உங்கிட்டக் கேட்டாங்களே.” திடுமென அவன் ஆரம்பிக்கவும் பெண் திணறிப் போனது. மனைவியிடமிருந்து எந்தப் பதிலும் வராமற் போகவும் தன் கழுத்து வளைவில் முகம் பதித்திருந்தவளைக் குனிந்து பார்த்தான் ரிஷி. அந்த நிலா முகம் அவனுக்குள் இன்னும் ஒளிந்து கொண்டதே தவிர பதில் ஏதும் சொல்லவில்லை. ரிஷி புன்னகைத்தான்.

“பவிக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே.”

“……………” அவள் பேசவில்லை.

“எதாவது பேசுடா.”

“உங்க இஷ்டம் அத்தான்.”

“நான் உன்னோட அபிப்பிராயத்தைக் கேட்கிறேன் பேபி.”

“எனக்கு… அதெல்லாம் தெரியாது…” தடுமாறியவளை கட்டிலில் கிடத்திவிட்டு இப்போது அவள் முகம் பார்த்துப் பேசினான் ரிஷி.

“இங்க வந்து இன்னும் முழுசா ஒரு இடம் கூட பார்க்கலையே பவி நீ?” அவன் ஆதங்கப்பட்டான். பவித்ரா இங்கே வரும்போதே குளிர்காலம் ஆரம்பித்து விட்டதால் அவர்களால் பெரிதாக எங்கேயும் வெளியே போக முடியவில்லை. அப்போதும் ரிஷி மனைவியை அழைத்துக்கொண்டு இரண்டொரு இடங்கள் போனான். ஆனால் அந்தக் குளிரைச் சமாளிக்கப் பெண் பெரிதும் கஷ்டப்பட்டது.

அந்த வருடம் பார்த்துக் குளிரும் கொஞ்சம் அதிகமாக இருக்கவே ரிஷி வெளியே அவளை அழைத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டான். வெயில் காலம் ஆரம்பித்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். இப்போது அன்னம்மா கேட்ட கேள்வி அவனை லேசாக சலனப்படுத்தி இருந்தது. இதுவரை இல்லாத ஆசை மனதுக்குள் மெதுவாக வேர்விட்டது.

‘ஏன் கூடாது?’ என்ற எண்ணம் தோன்றிய போதே அது சுயநலம் என்றும் தோன்றியது. தன் ஆசைக்காக பவித்ராவை அவசரப்படுத்துவது நியாயமல்ல என்பது அவன் மனசாட்சியின் குரல்.

“அத்தான்…”

“ம்…”

“என்ன யோசிக்கிறீங்க?” தன் முகம் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனைக் கலைத்தாள் மனைவி.

“ஒன்னுமில்லைடா, கொஞ்சம் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சுட்டயே ரிஷின்னு உள்மனசு கேள்வி கேட்குது.” சொல்லிவிட்டுச் சிரித்த கணவனை விசித்திரமாகப் பார்த்தாள் மனைவி.

“அப்பிடி எதை சுயநலமா யோசிச்சீங்க?”

“அன்னம்மா கேட்டது நடந்தா நல்லா இருக்குமேன்னு ஒரு கணம் தோணுச்சு.”

“அது சுயநலமா?”

“சுயநலம்தானே பவி, அதுவும் இவ்வளவு சீக்கிரமா?”

“என்ன பேசுறீங்க த்தான் நீங்க?” சட்டென்று கோபப்பட்ட மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான் ரிஷி.

“பவிக்கு கோபமெல்லாம் வருமா என்ன?!” 

“வரும்.”

“ஓஹோ! இந்த அத்தான் மேல கூட கோபம் வருமா என்னோட பேபிக்கு?”

“தப்புத் தப்பாப் பேசினாக் கண்டிப்பா அத்தான் மேல கூட கோபம் வரும்.”

“ம்ஹூம்!” அவள் பாவத்தை அவன் ரசித்துச் சிரித்தான், ஆனாலும் பேச்சை அத்தோடு முடிக்கவில்லை.

“கல்யாணம் முடிஞ்சு இப்பதானே பவி கொஞ்ச நாளாகுது? அதான் யோசிக்கிறேன்.”

“அப்ப காயத்ரி எல்லாம் என்ன அவசரப்…” ஏதோ சொல்ல வந்துவிட்டுச் சட்டென்று நிறுத்தினாள் பவித்ரா.

“ம்… மேல சொல்லு பவி, என்ன சொல்ல வந்தே இப்போ? அப்ப காயத்ரி எல்லாம் என்ன அவசரப்பட்டுட்டாங்கன்னா சொல்ல வர்றீங்க, அப்பிடித்தானே கேட்க நினேச்சே?” அவள் மனதைப் படித்தது போல கேட்டான் ரிஷி. பவித்ரா இப்போது அவன் முகம் பார்க்காமல் சிரித்தாள். உண்மையிலேயே அவள் கேட்க நினைத்தது அதைத்தான்.

“அப்போ… பவிக்கு ஓகேவா?” தயங்கியபடி கணவன் கேட்க அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள் பெண். அந்தப் பார்வை ரிஷியின் உயிரை அசைத்தது. 

“பேபி!” என்றான் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன் போல. இது போல அவள் பார்க்கும் பார்வைகள் மிகவும் அரிது. அந்தக் கண்கள் அப்படிப் பார்க்கும்போது அதைத்தாண்டி ரிஷியால் யோசிக்கவே முடியாது. மனைவியை இப்போது இறுக அணைத்துக் கொண்டான் இளவல்.

“எனக்கு ஒன்னெல்லாம் பத்தாது டார்லிங்.”

“அப்போ எத்தனையாம்?”

“நாலு வேணும்.”

“நாலா?!”

“ஆமா, எம் மாமனாரைப் போல.” 

“இதானே வேணாங்கிறது.” அவன் கேலி பேசுகிறான் என்றுதான் அவள் நினைத்தாள், ஆனால் அப்படியல்ல என்று சொன்னான் ரிஷி.

“நாலும் பொண்ணுங்க… வீடு சும்மா மார்கெட் மாதிரி இருக்கணும்.” 

“அத்தான்?!”

“ஆமா பேபி… உங்க வீட்டைப் பாரு, எப்பவும் கலகலன்னு பார்க்க எவ்வளவு அழகா இருக்கு, பொண்ணுங்க வீட்டுல இருந்தாலே ஒரு சந்தோஷந்தான்.”

“அதுக்காக நாலா?!”

“அதுவே கம்மிதான், பவி பாவங்கிறதாலதான் நான் நாலோட நிப்பாட்டிட்டேன்.” அவன் ஏதோ அவள் நன்மை கருதி பேசுவது போல பாவனைச் செய்யவும் பவித்ரா குலுங்கிச் சிரித்தாள். ரிஷியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“எனக்கு… அத்தான் மாதிரி ஒரு பையன் வேணும்.” முதல் முதலாகத் தன் ஆசை சொன்னது பெண்.

“சான்சே இல்லை பேபி, பொண்ணுதான்.”

“ம்ஹூம்… பையன்தான்.”

“பார்க்கலாமா?”

“பார்க்கலாமே!” விதி வகுத்து வைத்திருக்கும் விளையாட்டை அறியாமல் அங்கே இருவரும் காதலோடு ஒரு யுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

***

அன்றைக்குப் பவித்ரா வெகுவாகச் சலித்துப் போனாள். வேலைகள் எதுவும் ஓடமாட்டேன் என்றது. குளிர்ந்தாலும் பரவாயில்லை என்று வெளியே சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தாள். சாப்பாட்டிலும் மனம் பெரிதாக லயிக்கவில்லை. பசித்தது, அதற்காக இரண்டு தோசை வார்த்துச் சாப்பிட்டாள். டீவி பார்க்கும் பழக்கமும் இல்லாததால் பொழுது போகவேயில்லை.

‘அம்மாவோடு பேசலாம்.’ என்று எண்ணிய படி ஃபோனை எடுத்து ரேணுகாவை அழைத்தாள். அம்மா தாமதிக்காமல் லைனுக்கு வந்தார்.

“பவீ… எப்பிடிம்மா இருக்கே?”

“ம்… இருக்கேன்.” சுரத்தேயில்லாமல் வந்த அந்த பதில் தாய்க்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.

“என்னாச்சு பவி?” என்றார் அவசரமாக.

“ஒன்னுமில்லை ம்மா.”

“அப்ப ஏன் வாய்ஸ் டல்லடிக்குது? உடம்புக்கு முடியலையா என்ன?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை.” அந்தக் குரலில் அத்தனை சலிப்பு.

“நீ முதல்ல வீடியோவை ஆன் பண்ணு.” அம்மா கட்டளைப் போடவும் பெண் பணிந்தது. திரையில் ரேணுகாவின் முகத்தைப் பார்த்ததும் பவித்ராவின் கண்கள் கலங்கிப் போனது.

“பவிம்மா, என்னாச்சு? எதுக்கு இப்போ கண் கலங்குற நீ?” தாய் அங்கே பதற கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி புன்னகைத்தாள் பெண்.

“ஒன்னுமில்லை ம்மா.”

“மாப்பிள்ளை எங்கே?” ரேணுகா பதறினார்.

“லண்டன் போயிருக்காங்க, காலையிலேயே கிளம்பிப் போய்ட்டாங்க.” மகளின் குரல் மருமகனை குறை சொல்லவும் ரேணுகா இப்போது நிதானித்தார்.

“ஃபோன் பண்ணிப் பேசேன்.”

“நாலு தரம் கூப்பிட்டுட்டேன், ஃபோனை சைலண்ட் ல போட்டிருக்காங்க போல, ஆன்ஸர் பண்ணவேயில்லை.” 

“ஓ…” மகளின் பிரச்சனை என்னவென்று புரிய இப்போது ரேணுகா மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

“எப்பிடியும் இன்னைக்கு நைட்டுக்குள்ள வந்திடுவாங்க இல்லை?”

“ம்… ம்…” ஏதோ ரேணுகாதான் அவள் கணவனை லண்டனுக்கு அனுப்பியது போல சலித்துக் கொண்டாள் பவித்ரா.

“அப்புறமென்ன? வேலைங்களைக் கவனி, நல்லதா எதையாவது சமைச்சு வை.”

“ம்ப்ச்…”

“நீ ஏதாவது சாப்பிட்டியா பவி?”

“தோசை சாப்பிட்டேன்.”

“லன்ச்சுக்கு என்ன பண்ணப் போறே?”

“நீங்க ஏம்மா தொண தொணக்கிறீங்க? இப்ப நான் சமையல் பண்ணி இங்க யாரு சாப்பிடப் போறா?” அம்மாவின் மேல் சட்டென்று பாய்ந்தாள் பெண். 

“இங்க வந்து இத்தனை நாளும்… அத்தான் இப்பிடி…” அதற்கு மேல் பொறுக்க முடியாமல் குலுங்கி அழுத பெண்ணை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் ரேணுகா அமைதியாக இருந்தார். மகள் அழுவது கவலையாக இருந்தாலும் அம்மாவின் மனது நிறைந்து போனது. மருமகன் தன் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார் என்பது அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனால்… எத்தனை அன்னியோன்யம் அவர்களுக்குள் இருந்தால் இந்தச் சிறு பிரிவிற்கு மகள் இவ்வளவு வேதனைப்படுவாள்! 

“மாப்பிள்ளை உன்னை நல்லாப் பார்த்துக்கிறாரா பவி?” அம்மா உடனடியாகப் பேச்சை மாற்றவும் பெண்ணும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“ம்… அத்தான் ரொம்ப நல்ல மாதிரி ம்மா.”

“ம்…”

“இன்னைக்கு அவங்களே பார்க்க வேண்டிய முக்கியமான வேலை போல.”

“புரியுது… இல்லைன்னா உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிருக்க மாட்டாங்க.”

“இப்பவும் நீயும் கூட வா பவி ன்னு கூப்பிட்டாங்க.”

“போயிருக்கலாமே பவி.”

“இல்லைம்மா, போனாலும் லண்டன் வீட்டுல நான் தனியா உட்கார்ந்திருக்கணும், அதுக்கு இங்கேயே இருக்கலாமில்லை?”

“அதுவும் சரிதான்.”

“அவங்க இப்பிடிப் போனதே இல்லையா? அதான்… கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.” சிரித்தபடி அன்னையிடம் அசடு வழிந்தது பெண்.

“புரியுது பவி.”

“என்னை எந்த வேலையும் பெருசாப் பண்ண விடமாட்டாங்க, எனக்கும் சேர்த்து அவங்களே டீ போடுவாங்க.”

“ம்…” இப்போது அம்மா சிரித்தார்.

“எதுக்கு த்தான் இதெல்லாம் நீங்க பண்ணுறீங்கன்னு கேட்டா, பழகிடுச்சு பவி ன்னு சொல்லுவாங்க.”

“பாவம், அவங்கம்மா போன பின்னாடி எல்லா வேலையையும் அவங்களே பார்த்திருப்பாங்க போல.”

“ஆமா, வீட்டுல எங்கேயும் அத்தை, மாமா ஃபோட்டோ இல்லை, அதைப் பார்த்தா ரொம்பக் கஷ்டமா இருக்கும் ன்னு சொன்னாங்க.”

“பாவம்தான்.” பெருமூச்சு விட்டார் ரேணுகா.

“சரிம்மா, நான் சமையலை கவனிக்கிறேன், நான் தனியா இருப்பேன்னு எப்பிடியும் சீக்கிரமாத்தான் வரப் பார்ப்பாங்க, நான் வெக்கட்டுமா?”

“சரிம்மா, கவலைப்படாதே… சீக்கிரமாவே மாப்பிள்ளை வந்திருவாங்க.”

“சரிம்மா, பை.” பவித்ரா லைனை துண்டித்து விட்டு சமையலறைக்குள் வந்தாள். அம்மாவிடம் பேசிய பிறகு மனது கொஞ்சம் லேசானது போல இருந்தது. ஆனால் இப்போது லேசாக வெட்கம் வந்தது. எதற்குக் காரணமே இல்லாமல் இப்போது அம்மாவிடம் எரிந்து விழுந்தோம்?! அம்மா என்ன நினைத்திருப்பார்கள்?!

அதேவேளை… அங்கே அவள் அம்மா நிறைந்த மனதோடு அப்பாவிடம் நடந்ததை விபரித்துக் கொண்டிருந்தது பவித்ராவிற்கு தெரியாது. ஒரு நிமிடம் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் பெண். சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தாள்.

“எல்லாம் உங்களால வந்தது அத்தான்! என்னைப் பைத்தியகாரி மாதிரி வேலை பார்க்க வெக்கிறீங்க!” அவன் அங்கே இருப்பது போல எண்ணிக்கொண்டு சத்தமாகவேப் பேசினாள்.

“இன்னைக்கு வீட்டுக்கு வந்து சேருங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு! ஒரு ஃபோன் கூட பண்ணலை!” பொருமிய படியே பகலுணவைச் சமைத்து முடித்தாள். மட்டன் பிரியாணி அவனுக்கு மிகவும் பிடிக்கும். ரசித்து உண்பான் என்பதால் இன்றைக்கு அதையே சமைத்தாள். ஆனால் ரிஷி அத்தனைச் சீக்கிரத்தில் அன்றைக்கு வீடு வந்து சேரவில்லை. பிற்பகல் நான்கு மணி போல ஃபோன் பண்ணினான்.

“அத்தான்.”

“பேபி, வர கொஞ்சம் லேட்டாகும் போல இருக்குடா.”

“சாப்பிட்டீங்களா?”

“ஆஷ்லி ஏதோ வாங்கி வெச்சிருக்கான், நான் இன்னும் என்னன்னு அதைப் பார்க்கலை.”

“நாலு மணி ஆச்சுது, நீங்க இன்னுமா சாப்பிடலை?”

“நீ சாப்பிட்டியா பவி?”

“தோசை சாப்பிட்டேன்.”

“அது காலைல சாப்பிட்டிருப்ப, லன்ச்சுக்கு என்ன சாப்பிட்டே?”

“பிரியாணி பண்ணினேன், ஆனா நீங்க இன்னும் வரலையே.”

“அடிதான் வாங்கப் போறே, முதல்ல ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு பவி, எவ்வளவு லேட்டானாலும் நான் வந்திடுவேன், பயப்பிடாதே ஓகே.”

“ம்… ஓகே.” அத்தோடு ரிஷி பேச்சை முடித்துவிட்டான். சாப்பிடவும் பிடிக்காமல் தூக்கமும் வராமல் பவித்ரா திண்டாடிப் போனாள். அவளை நினைத்த போது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ரிஷி மேல் அவளுக்கு அளவுகடந்த காதல் இருந்தது உண்மைதான். ஆனால்… ஒரு பொழுது அவனைப் பார்க்காவிட்டால் தான் இத்தனைத் தூரம் வேதனைப்படுவோம் என்பது அவளுக்கு அன்றைக்குத்தான் புரிந்தது. இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தன் பெற்றோரை, தங்கைகளைப் பிரிந்த போது தான் இவ்வளவு வருந்தவில்லை. ஒரு சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தவன் உயிரோடு கலந்து போனான்!

ரிஷி வீடு வந்து சேர்ந்த போது இரவு எட்டு மணி தாண்டி இருந்தது. மாடியிலிருந்து வீதியையே பார்த்திருந்த பவித்ரா அந்த ப்ளாக் ஆடி தூரத்தில் வரும் போதே பார்த்துவிட்டாள். இது நேரம் வரை சோர்ந்து போய் கிடந்தவளுக்கு, ரிஷி வந்தபிறகு ஒரு மூச்சு சண்டைப் போடவேண்டும் என்று கறுவிக் கொண்டிருந்தவளுக்கு, அவனைப் பார்த்த கணம் அனைத்தும் மறந்து போனது.

குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிக்கே ஓடிவந்து விட்டாள் பெண். காரை உள்ளே பார்க் பண்ணுவதற்காகத் திருப்பிய ரிஷி மனைவியைப் பார்த்து விட்டு சட்டென்று காரிலிருந்து இறங்கினான். அவனிடம் காட்டாற்று வெள்ளம் போல ஓடி வந்த பெண் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டது. ரிஷியும் ஒரு புன்னகையோடு மனைவியை இறுக்கிக் கொண்டான். அன்றைக்கு முழுவதும் அவளைப் பாராதது அவனுக்குமே எதையோ இழந்தது போலதான் இருந்தது. 

“ஏய் பேபி…” அவன் எதையோ பேச ஆரம்பித்த போதும் பெண் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவனை அணைத்தபடி அப்படியே நின்றிருந்தது.

“இன்னைக்கு ரொம்பக் குளிரா இருக்கு பேபி, நீ தாங்க மாட்டே… உள்ள போ டா.” அவன் சொல்லிய பிறகே குளிரை உணர்ந்தவள் மெதுவாக விலகி உள்ளே போனாள். ரிஷி காரை ஷெட்டில் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்தான். பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது.

“அத்தான், சாப்பிடுறீங்களா?”

“இல்லைடா, குளிச்சிட்டு வந்திடுறேன்.” வாடிப் போய் நின்றிருந்த மனைவியின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு மாடிக்குப் போய்விட்டான் கணவன். சற்று நேரத்தில் குளித்து முடித்து விட்டு ரிஷி கீழே வந்த போது டைனிங் டேபிளில் அனைத்தும் தயாராக இருந்தது.

“சாப்பிடுங்க த்தான்.”

“நீயும் உட்காரு பவி.”

“ம்ஹூம்… நீங்க முதல்ல சாப்பிடுங்க.” சொல்லிவிட்டு அவனுக்கு அருகில் நின்றபடியே பரிமாறியது பெண். முதலில் ரிஷி அதைக் கவனிக்கவில்லை. பாதி சாப்பாடு தீரும் போதுதான் அதை உணர்ந்தான். மனைவியின் இடது கை அவன் தோளை லேசாக உரசிய படி இருந்தது. அன்றைக்கு ஏனோப் புடவைக் கட்டி இருந்தாள். ரிஷி வலது புறமாகத் தன் தலையைத் திருப்பிய போது சேலை மறைக்காத அந்தச் சிறுத்த இடை அவன் கண்ணைக் கவர்ந்தது. 

இவை எதையும் கவனிக்காமல் அவன் அருகாமை ஒன்றே போதும் என்பது போல  அவனை உரசிக்கொண்டு நின்றிருந்தாள் பவித்ரா. ரிஷி புன்னகைத்தான்.

“பவி…”

“ம்… என்ன வேணும் த்தான், இன்னும் கொஞ்சம் பிரியாணி போடவா?”

“ம்ஹூம்… நீயும் வந்து உட்கார்ந்து சாப்பிடு.” மனைவியை இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்தவன் அவளுக்குப் பரிமாறினான்.

“சாப்பிடு, இன்னைக்கு என்ன ஆச்சுதுன்னா…” என்று பேச ஆரம்பித்து அவள் உண்டு முடிக்கும் வரை அவள் கவனம் அங்கே இங்கே சிதறாமல் பார்த்துக் கொண்டான்.

“ஐயையோ! போதும்.”

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” அவள் இன்றைக்கு முழுவதும் பெரிதாக எதுவும் உண்டிருக்க மாட்டாள் என்று தெரிந்திருந்ததால் ரிஷி அவள் ப்ளேட்டை இன்னும் கொஞ்சம் நிரப்பினான்.

“போதும் போதும், இதுக்கு மேல முடியாது.” சட்டென்று எழுந்துவிட்ட பவித்ரா இருவரது ப்ளேட்டையும் எடுத்துக்கொண்டு சின்க்கிற்கு நகர்ந்து விட்டாள். அவள் கை கழுவி முடிக்கும் நேரம் ரிஷியும் பின்னோடு வந்து அவளை உரசியபடி தன் கையைக் கழுவினான். இது போன்ற ஆசிய உணவுகளுக்கு ரிஷி ஃபோர்க், ஸ்பூனை நாடுவதில்லை.

கை கழுவி முடித்துவிட்டு டேப்பை மூடியவன் அவள் சேலைத் தலைப்பால் அவன் கையைத் துடைத்துக் கொண்டான். மறந்தும் அவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை. பவித்ரா இப்போது அவளாகவே அவனை நோக்கித் திரும்பினாள். ரிஷி பெண்ணை அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான். 

“அத்தான்.” அவள் உயிரிலிருந்து வந்த வார்த்தை அது. தாபத்தையும் மோகத்தையும் சம விகிதத்தில் கலந்து வந்தது. ரிஷியின் கண்கள் இப்போது பளபளத்தது, கைகள் பரபரத்தது. ஆனாலும் அமைதியாகவே நின்றிருந்தான். மனைவியின் தொடுகைக்காகக் காத்திருந்தான்.

பவித்ரா காலதாமதம் செய்யவில்லை. அவன் கழுத்தை வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தவள் அந்தச் சிவந்த இதழ்களில் முத்தம் வைத்தாள். மென்மையான தன் மனைவியின் முரட்டுத்தனமான முதல் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தபடி அப்படியே நின்றிருந்தான் ரிஷி. ஒரு சில நிமிடங்கள் அந்த சுகத்தில் திளைத்திருந்த பெண் அதற்கு மேல் தாங்க மாட்டாது தொய்ந்து போனது. அவள் கால்கள் துவள ஆரம்பிக்கும் போது மனைவியைக் கைகளில் அள்ளிக் கொண்டான் ரிஷி. மாடிக்குப் போகும் வரைப் பொறுத்திருக்க முடியாமல் அவன் உதடுகள் இப்போது மனைவியின் கழுத்து வளைவில் புதைந்தன.

“ஆக… என்னோட ரோஸ் பெட்டலுக்குள்ளயும் ஒரு சுனாமி இருக்கு! அந்த சுனாமி என்னையே சுருட்டப் பார்க்குதே!” குறும்பாகச் சொன்னவன் மனைவியை முழுதாகச் சுருட்டித் தனக்குள் புதைத்தான்.

அன்று அவர்கள் இருவரும் தூங்க நெடுநேரம் ஆனது!