kkavithai12

கவிதை 12

அன்று காலையிலிருந்தே பவித்ரா கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தாள். மாதாந்திரத் தொல்லைகளுக்கான தேதி அன்று. எப்போதும் அந்த நாட்களில் பெண் சிரமப்படும். வயிற்று வலியால் வாடுவாள். சில பொழுதுகளில் வாந்தி எடுப்பதுவும் உண்டு. போன மாதமும் இது போலவே நடந்தது. சாதாரணமாக வரும் வயிற்று வலி என்பதால் இரண்டு பாரசிட்டமோலை போட்டுக் கொண்டு ரெஸ்ட் எடுத்தது பெண்.

ஆனால் ஒரு கட்டத்தில் முடியாது போகவே பாத்ரூமிற்குள் ஓடிச்சென்று வாந்தி எடுத்தாள். கீழே ஆஃபீஸ் அறையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி அவசரமாக ஓடி வந்தான்.

“பவி! என்னாச்சு?!” மனைவிக்கு அன்று வயிற்றுவலி இருந்தது அவனுக்குத் தெரியாது.

“ஒன்னுமில்லை த்தான்.” களைத்துப் போய் அவன் மேல் சாய்ந்தவளை இரு கைகளிலும் ஏந்தியவன் கட்டிலில் கொண்டு போய் கிடத்தினான்.

“என்னாச்சு டா?” கணவனின் குரலில் இருந்த பரவசத்தை அப்போதுதான் உணர்ந்த பெண் அவனை அண்ணார்ந்து பார்த்தது. இது போல அவள் இதுவரை வாந்தி எடுத்து அவன் பார்த்திராததால் ரிஷியின் மனதுக்குள் வேறு விதமான கற்பனைகள் முளைவிடத் தொடங்கி இருந்தன.

கண்கள் பளபளக்கத் தன்னையே பார்த்திருந்த கணவனைப் பார்த்த போது பெண்ணுக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. கண்கள் கலங்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்னம்மா ஆச்சு?” மனைவியின் கண்கள் கலங்கவும் ரிஷி தவித்துப் போனான்.

“எதுக்கு இப்போ இந்தக் கலக்கம் பவி?”

“வயிறு வலிக்குது த்தான்.”

“ஓ… டாக்டருக்கு கால் பண்ணட்டுமா?”

“தேவையில்லை.”

“வாமிட் வருதே?”

“சிலநேரம் இது போல வரும்.”

“ஓ…” மனைவிக்கு சமாதானம் சொன்னவன் அன்று முழுவதும் அவளுடனேயே இருந்தான். அவள் ஓரளவு தெளிந்த பிறகுதான் தனது வேலையைத் தொடர்ந்தான் ரிஷி. இந்த மாதமும் வயிற்று வலி வரவே பெண் சோர்ந்து போனது. வலியைத் தாங்கிக் கொள்வதை விட மனதிலிருந்த எதிர்பார்ப்பு இல்லையென்று போனபோது மிகவும் வலித்தது.

அதுவும் தன்னைவிட கணவன் குழந்தை ஒன்றை ஆவலோடு எதிர்பார்ப்பது அவள் அறிந்ததுதான். நேற்று முன்தினம் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்திருந்த ஒரு சின்னப் பெண் குழந்தையை அவன் ஆவலோடு பார்த்ததை இவள் கவனித்தாள். மனதுக்குள் லேசாக வலித்தது. திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தன. நேற்று பேசும் போது ரேணுகா கூட இவளிடம் ஜாடையாகக் கேட்டிருந்தார்.

“விசேஷம் ஏதாவது உண்டா பவிம்மா?” என்று. பவித்ராவிற்கு மிகவும் கஷ்டமாக ஆகிப்போனது. அன்னபூரணி கல்யாணம் முடிந்த இரண்டாம் மாதமே கேட்க ஆரம்பித்து விட்டார்!

உடம்பில் வலி, மனதில் வலி என்று பவித்ரா சோர்ந்து போனாள். இன்றைக்கும் லேசாக வாந்தி வரும் போல் இருக்கவே வீட்டிற்குப் பின்னால் இருக்கும் கார்டனுக்கு வந்தாள். அழகழகான ரோஜா மலர்கள் அங்குண்டு. சிறிதுநேரம் அந்தத் தூய்மையான காற்றைச் சுவாசித்தால் இதமாக இருக்கும் என்று தோன்றியது.

கிச்சன் கதவைத் திறந்து வைத்தவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கீழேயிருந்த ஆஃபீஸ் அறையில்தான் ரிஷி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இதமான சூழல் மனதுக்கு ஆறுதலாக இருக்க பவித்ராவின் கண்கள் லேசாகச் சொருகியது. குளிர் வெகுவாகக் குறைந்து இப்போது லேசாக வெயிலடிக்க ஆரம்பித்திருந்தது. 

மெதுவாக அவள் நித்திரைக்குச் செல்லும் சமயம் ரிஷியின் கோபமான குரல் உள்ளே கேட்டது. அவன் அறை மூடி இருந்ததால் பவித்ராவிற்கு அவன் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை. திடுக்கிட்டு விழித்தவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். யார் மீது அத்தான் இத்தனைக் கோபமாகப் பேசுகிறார்?! ரிஷி இதுபோல யாரையும் கடிந்து பேசி அவள் இதுவரைக் கேட்டிராததால் பவித்ராவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

எழுந்து உள்ளே போய் பார்க்கும் அளவிற்குத் தெம்பில்லாததால் பெண் அப்படியே உட்கார்ந்திருந்தாள். சற்று நேரத்தில் ரிஷி அறையை விட்டு வெளியே வரும் அரவம் கேட்டது.

“அத்தான்.” மனைவியின் குரலில் அங்கே வந்தான் ரிஷி.

“நீ இங்க என்னப் பண்ணுறே?” கணவனின் குரலில் இருந்த கோபத்தில் பெண் லேசாகத் திடுக்கிட்டது. ரிஷி இப்படி அவளிடம் பேசுபவனல்ல.

“என்னாச்சு த்தான்? ஏன் கோபமா இருக்கீங்க?” கேட்டவளின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து கவனித்தான் ரிஷி. வலியில் கசங்கியிருந்த அந்த முகம் அவனுக்கு எதைச் சொல்லியதோ, சட்டென்று கைக்கடிகாரத்தைத் திருப்பித் தேதியைப் பார்த்தான்.

“என்ன பண்ணுது பவி?” அந்த ஆதரவான குரலில் பெண்ணுக்குச் சட்டென்று கண்கள் கலங்கியது. அவள் கண் கலங்கிய காரணம் வேறாக இருக்க ரிஷி பதறிப் போனான்.

“என்னாச்சு டா? ரொம்ப வலிக்குதா? எதுக்கும் ஒரு தடவை டாக்டர் கிட்டப் போறது பெட்டர் பவி, எனக்கென்னவோ இப்பிடி ஒவ்வொரு மாசமும் பெயின் வர்றது அவ்வளவு நல்லாப் படலை டா.” மனைவியை இதமாக அணைத்துத் தூக்கியவன் மாடியிலிருந்த அவர்கள் படுக்கையறைக்குப் போனான். கட்டிலில் அவளைக் கிடத்திவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தான்.

“அத்தான்…” மனைவியின் கண்ணீர் குரல் ரிஷியை லேசாக அசைத்தது.

“சொல்லு பவி.” என்றான் கனிவாக.

“ஒவ்வொரு மாசமும் உங்களை நான் ஏமாத்துறேன் இல்லை த்தான்?” அப்போதுதான் மனைவியின் கண்ணீருக்கு அர்த்தம் புரிந்த ரிஷி தலையில் கையை வைத்துக் கொண்டான்.

“அட ஆண்டவா! என்ன பேச்சுடி இது?!”

“அத்தான்…” இப்போது விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் பெண்.

“பவிம்மா, லூசா நீ?!”

“அன்னைக்கு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்திருந்த குட்டிப் பொண்ணை நீங்க எவ்வளவு ஆசையாப் பார்த்தீங்க?”

“அதுக்கு?!”

“……………..”

“அடியேய்! பேபீஸ் ன்னா எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்குமே ரொம்பப் புடிக்கும், ஆசையாத்தான் பார்ப்பாங்க, அதுக்கு நீ இப்பிடித்தான் அர்த்தம் எடுத்துக்குவியா?” 

“நேத்து அம்மா கூட பேசும் போது கேட்டாங்க.”

“நேத்து மட்டுமில்லைப் பொண்ணே, இனி அடிக்கடி கேட்பாங்க, அதுக்காக நீ உட்கார்ந்து அழுவியா? லூசாடி நீ?”

“ஆமா, நான் லூசுதான்.” முகத்தை ஒரு தினுசாக வைத்துக் கொண்டு சொன்னாள் பவித்ரா.

“ஆனாலும் இது நியாயமே இல்லை பவி.” ரிஷி இப்போது ஆரம்பிக்க பெண் திடுக்கிட்டுப் போனது.

“அத்தான்?!” என்றாள் கலவரப்பட்டுப் போய்.

“இல்லை… அவனவன் மூனு நாள்தான் காத்திருக்கான், ஆனா என்னோட வைஃப் ஆறேழு நாள் என்னைத் தள்ளி வெச்சிடுறாளே!” ரிஷி அப்பாவியாகப் புலம்பவும் இதுவரைச் சிக்கிக் கொண்ட மூச்சு சீரானது பெண்ணுக்கு. பக்கத்தில் கிடந்த தலையணையை எடுத்துக் கணவனை சரமாரியாக அடித்தாள் பவித்ரா. முகம் சிவந்து போனது. 

“ஏய் பவி, உண்மையைத்தானேடா சொல்றேன்…” மனைவியிடம் அடியை வாங்கிய படி சிரித்தான் ரிஷி.

“சும்மாப் போங்க த்தான்.” வலிகளை மறந்து சிரித்தபடி அவன் மார்பையே சரணடைந்தது பெண்.

***

அடுத்த நாள் ரிஷிக்கு வெளியே தொழில் தொடர்பான ஒரு வேலை இருந்தது. கவுன்சில் வரை போக வேண்டும் என்று நேற்றிரவேச் சொல்லி இருந்தான். பத்து மணிக்கு வரும்படி நேரம் கொடுத்திருந்தார்கள். காலையில் எழுந்து அந்தச் சந்திப்பிற்குத் தேவையான ஆவணங்களை ஆயத்தம் செய்திருந்தான். ஆஃபீஸ் அறையில் அவன் நின்றிருக்க பவித்ரா காலை உணவைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள்.

“உன்னைக் கஷ்டப்படுத்திக்காம பேசாம ரெஸ்ட் எடு பவி.” சொல்லிவிட்டுத்தான் போயிருந்தான் ரிஷி. ஆனாலும் பெண்ணுக்கு மனது கேட்கவில்லை. சட்னி அரைத்துத் தோசை வார்த்திருந்தாள்.

“உனக்கு எத்தனைத் தடவைச் சொல்றது ஆலிவர், என்னை இப்பிடி டிஸ்டர்ப் பண்ணாதே!” மூடியிருந்த ஆஃபீஸ் அறைக் கதவையும் தாண்டி ரிஷியின் கோபக் குரல் சமயலறையில் நின்றிருந்த பவித்ராவிற்கு கேட்டது. அடுப்பை அணைத்து விட்டுப் பெண் ஹாலுக்கு வந்தது. நேற்றும் இதுபோல ரிஷி ஆத்திரமாக எதுவோ பேசியது ஞாபகம் வந்தது. 

நேற்று அவளிருந்த நிலைமையில் பெண் முழுதாக அதை மறந்து போயிருந்தது. ரிஷிக்கு இதுபோல கோபம் வருமென்பதே அவளறியாத விஷயம். எப்போதும் சிரித்த முகமாக, ஒரு கனிவோடு பேசும் கணவனைத்தான் அவளுக்குத் தெரியும். இப்படி உச்சஸ்தாயியில் கத்தும் கணவன் அவளுக்குப் புதிது.

‘இவருக்கு என்ன ஆனது?! எதற்காக இத்தனைக் கோபம், ஆவேசம்?!’ 

“கண்டவங்க சொல்றதையும் கேட்டுட்டு நீ எங்கிட்ட வராதே ஆலிவர், என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க அம்மாவும் பொண்ணும்?” மீண்டும் ரிஷியின் கோபக் குரல். இப்போது பவித்ராவின் முகத்தில் கவலைப் படிந்தது. கணவன் யாரைப் பற்றிப் பேசுகிறான் என்று புரியவில்லை. ஆனால் அவன் கோபத்திற்குக் காரணம் பெண்கள் என்று புரிந்தது.

‘அம்மாவும் பொண்ணுமா?’ அது யாராக இருக்கும் என்று பவித்ராவிற்கு புரியவில்லை. தொழில்துறைப் பேச்சாக இருக்கும் போலும் என்று எண்ணிக் கொண்டாள்.

“ஆலிவரும் அத்தானும் சேர்ந்து தொழில் பண்ணுறாங்களா என்ன? எதுக்கு அவரை இப்போ அத்தான் திட்டுறாங்க?” வாய்க்குள் முணுமுணுத்தபடி பவித்ரா நிற்கும் போது சட்டென்று ஆஃபீஸ் அறை திறந்தது. ரிஷி கோபமாக வெளியே வந்தவன் மனைவியைக் காணவும் சற்று நிதானித்தான். பவித்ரா ரிஷி வெளியே வந்த வேகத்தில் பயந்து போனாள்.

“அத்தான்…” 

“நீ இங்க என்னப் பண்ணுறே?” ரிஷியின் குரலில் லேசான அதிருப்தி.

“யார் கூட த்தான் சண்டைப் போடுறீங்க?”

“நான் உன்னை ரெஸ்ட் எடுக்கச் சொன்னதா ஞாபகம்.” எந்தத் தாமதமும் இன்றி சட்டென்று வந்தது பதில்.

“இல்லை… உங்களுக்கு ப்ரேக் ஃபாஸ்ட்…”

“இப்போதைக்கு வேணாம்.” சொல்லிவிட்டு மடமடவென ரிஷி வெளியே போய்விட்டான். சில நிமிடங்களில் கார் வெளியேறும் ஓசைக் கேட்ட பிறகுதான் பெண்ணுக்கு உணர்வே வந்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ரிஷி கிளம்பிப் போயிருந்தான். இப்படியெல்லாம் கணவன் இதுவரைத் தன்னிடம் நடந்து கொண்டிராததால் பவித்ராவிற்கு கண்கள் லேசாகக் கலங்கியது.

ஒரு புன்னகையோடு தன்னைச் சமாளித்தபடி சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள். வெளியே இருக்கும் கோபத்தை வீட்டில் மனைவியிடம் காட்டுவதுதானே ஆண்களின் இயல்பு!

‘பாவம்! அத்தானுக்கு என்ன பிரச்சினையோ?!’ தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாலும், அவன் உண்ணாமல் போனது வருத்தமாக இருந்தது. இது போல நேரத்தில் உண்ணாமல் நேரம் கடத்தினால் ரேணுகா திட்டுவார். அது ஞாபகம் வரவே இரண்டு தோசைகளை உண்டது பெண்.

“என்ன சாப்பிட்டாங்களோ தெரியலையே?! முக்கியமான மீட்டிங் ன்னு வேற சொன்னாங்க, இன்னைக்குன்னு பார்த்தா அந்த ஃபோன் கால் வரணும்!” புலம்பியபடியே சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொண்டிருந்தவளைக் கலைத்தது வந்து வீழ்ந்த தபால்களின் ஒலி.

“பதினொரு மணி ஆச்சா என்ன?!” என்றபடி வீட்டின் முன் வாசல் கதவருகே வந்தாள் பவித்ரா. நான்கைந்து தபால் உறைகள் நிலத்தில் கிடந்தன. ரிஷிக்கு வரும் கடிதங்களை தினசரி அவன் ஆஃபீஸ் ரூமில் கொண்டு கொடுப்பது அவள் வழக்கம். இன்றைக்கு அவன் அங்கே இல்லாததால் மேசையில் வைத்துவிட்டு வரலாம் என்று நினைத்தவள் சற்று நிதானித்தாள்.

ஒரு கடித உறை சற்று வித்தியாசமாக இருக்கவும் அதைத் தனியே எடுத்துப் பார்த்தாள். அவள் பெயருக்கு வந்திருந்தது லெட்டர். பவித்ரா ஆச்சரியப்பட்டுப் போனாள். அவளுக்கு யார் இங்கே கடிதம் அனுப்புகிறார்கள்?! ஒருவேளை இலங்கையிலிருந்து யாராவது, ஏதாவது அனுப்பி இருக்கிறார்களா?! தபால் முத்திரை அது உள்ளூர் தபால் என்று உறுதிப்படுத்தியது. மற்றைய கடிதங்களை காஃபி டேபிளில் வைத்தவள் அந்த உறையைப் பிரித்தாள்.

உறை கொஞ்சம் கனமாகவே இருந்தது. மனது படபடக்க அந்த உறையைப் பிரித்தது பெண். உள்ளே ஒரு கடிதம், இரண்டொரு புகைப்படங்கள், விசிட்டிங் கார்ட் என ஏதேதோ இருந்தன. புகைப்படத்தை முதலில் கையில் எடுத்த பெண் லேசாகத் திடுக்கிட்டது. ரிஷி காட்டிய பழைய ஆல்பத்திலிருந்த அவனது இளவயது புகைப்படம்!

‘அதை எனக்கு யார் அனுப்பி இருக்கிறார்கள்?! எதுக்காக அனுப்பி இருக்கிறார்கள்?!’ புகைப்படத்தை நன்றாக ஊன்றிப் பார்த்தாள் பவித்ரா. இல்லை… எதுவோ இடித்தது. புகைப்படத்தில் இருந்தது ரிஷிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால், புகைப்படம் சமீபத்தில் எடுத்தது போல இருக்கிறதே?! இது எப்படிச் சாத்தியம்?! இரண்டு வயது குழந்தைப் போல இருந்தது அந்தச் சிறுவனின் முகம். குழப்பம் மேலிட விசிட்டிங் கார்டை பார்த்தாள்.

‘லில்லியன்’ என்று பெயர் போடப்பட்டிருந்தது. ஏதோ ஒரு கம்பெனியின் பெயர் குறிப்பிடப்பட்டு அதன் மானேஜிங் டைரக்டர் என்றிருந்தது. கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் கிறுக்கலான கையெழுத்து. பவித்ரா படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள்.  

‘மை டியர்’ என்று கடிதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடிதத்தைப் படிக்கப் படிக்க பவித்ராவின் தலை சுழன்றது. ஒன்றுமேப் புரியவில்லை. விசிட்டிங் கார்டில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த லில்லியன் என்பவரேக் கடிதத்தைத் தன் கைப்பட எழுதி இருந்தார். புகைப்படத்தில் இருக்கும் சிறுவனைப் பற்றி ஏதோ சொல்லி இருக்கிறார் என்று மட்டும் பவித்ராவிற்கு புரிந்தது. ஆனால் அதை எதற்குத் தன்னிடம் அந்தப் பெண் சொல்கிறார் என்றுதான் பெண்ணுக்குப் புரியவில்லை. முதலில் இந்தப் படத்தில் இருக்கும் பையன் எப்படி அத்தானின் சாயலில் இருக்கிறான்?!

சட்டென்று மூளை, இதயம் என அனைத்தும் வேலை நிறுத்தம் செய்ய பவித்ராவின் உடல் குளிர்ந்து போனது. அந்தப் புகைப்படத்தை மீண்டும் எடுத்து ஊன்றிப் பார்த்தாள். அச்சு அசல் ரிஷியின் முகச்சாயல். அப்படியென்றால்… இதற்கு என்ன அர்த்தம்?! இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையா?! நான் சரியாகத்தான் இதில் இருப்பதை விளங்கி இருக்கிறேனா? இந்த நாட்டில் ஆங்கிலத்தை வித்தியாசமாக உச்சரிப்பது போல அர்த்தங்களும் வேறுபடுமா?!

அதெப்படி ஒரு மொழியின் அர்த்தம் நாட்டுக்கு நாடு வேறுபடும்?! உச்சரிப்பு வேண்டுமானால் அப்படி மாறுபடலாம், அர்த்தம் ஒன்றுதானே?! சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள் பவித்ரா. உலகமே இருண்டது போல இருந்தது. அந்தப் படத்தில் இருக்கும் குழந்தையையும் அத்தானையும் இணைத்துப் பார்க்க அவளால் முடியவில்லை.

கடிதத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள். கண்கள் குளமான போதெல்லாம் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் படித்தாள். எத்தனை முறைப் படித்த போதும் கடிதத்தின் சாராம்சம் ஒன்றாகத்தான் இருந்தது. கடிதத்தை எழுதி இருக்கும் லில்லியன் என்பவரின் பேரன் இந்தப் பையன்.

அவருடைய மகளின் குழந்தை என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது அந்தக் குழந்தை அவர் வசம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் அந்தப் பெண். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணிற்கு இதற்கு மேலும் குழந்தையைத் தன் பொறுப்பில் வைத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். ரிஷியின் பெயரைப் பல இடங்களில் அந்தப் பெண் சாதாரணமாகக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த போது ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் பரிட்சயம் உண்டு என்று பவித்ரா புரிந்து கொண்டாள்.

‘ஒருவேளை… அத்தானின் தொழில் தரப்பு எதிரிகள் யாராவது இப்படி வேண்டுமென்று செய்கிறார்களா?’ சட்டென்று அந்த எண்ணம் தோன்றவும் நிமிர்ந்து உட்கார்ந்தாள் பெண். ஏன் கூடாது?! வேகமாக வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவனது வீழ்ச்சியை விரும்புவர்கள் பலர் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி யாராவது தேவையில்லாமல் இது போல அத்தானுக்கு எதிராக வேலை செய்கிறார்களா?! நிச்சயமாக அப்படித்தான் இருக்க வேண்டும்.

அவளுக்கு ரிஷியை நன்றாகத் தெரியும். தன்னை எவ்வளவு தூரம் நேசித்து, காதலித்துத் திருமணம் பண்ணிக் கொண்டான். அவனுக்கு எப்படி இப்படியொரு குழந்தை இருக்க முடியும்?! அப்படிச் சபல புத்தி இருப்பவனால் தன் தங்கைகளிடம் அத்தனைக் கண்ணியமாக நடக்க முடியுமா? எத்தனைப் பாசமாகத் தன் உடன்பிறப்புகளைப் போல நடந்து கொண்டான்.

அவனைப் போய் தான் எப்படிச் சந்தேகிப்பது?! யாரோ ஒரு முகம் தெரியாத பெண் அனுப்பியிருக்கும் கடிதத்தை வைத்துக் கொண்டு என் மேல் உயிராக இருக்கும் அத்தானை எப்படிச் சந்தேகிப்பது?! இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது. அத்தான் மேல் கோபம் கொண்ட யாரோ ஒருவர்தான் இப்படி வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். அப்படியே இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையாக இருந்தால் இதை அத்தானிடம்தானே அவர்கள் சொல்ல வேண்டும்?! எதற்காக என்னிடம் சொல்கிறார்கள்?!

ஆக… அத்தானின் இன்பமான இல்லறத்தைக் குழப்புவதே அவர்களின் திட்டம். அத்தானிடம் அவர்கள் விளையாட்டுச் செல்லாது என்று என்னிடம் விளையாடிப் பார்க்கிறார்கள்! இல்லை… இதை ஒரு போதும் நான் அனுமதிக்கப் போவதில்லை. முகத்தை அழுந்தத் துடைத்த பவித்ரா அப்படியே சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.

மனதுக்குள் ஏதோ ஒரு பட்சி இதுவெல்லாம் பொய் இல்லைப் பெண்ணே என்று சொல்லியபடியே இருந்தது. 

கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள் காதல் கொண்ட மனைவி!