kkavithai13

kkavithai13

கவிதை 13

எத்தனை நேரம் பவித்ரா அப்படியே சோஃபாவில் உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கேத் தெரியாது. வெளியே கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. அடுத்தாற்போல கதவு திறக்கப்பட ரிஷி உள்ளே நுழைந்தான். பவித்ரா மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். கம்பீரமே வடிவாக உள்ளே நுழைந்தவனைப் பார்த்த போது சம்பந்தமே இல்லாமல் அந்தச் சிறுவனின் முகம் ஞாபகம் வந்தது.

சட்டென்று கண்களில் திரண்ட நீரைச் சமாளித்துக் கொண்டாள் பெண். தனக்கு முன்னால் இருக்கும் பொருட்கள் சொல்லும் செய்தி பொய் எனும் பட்சத்தில் எதற்காக இந்தக் கண்ணீர்?!

“பவி, சாப்பிட்டியா?” கேட்டபடி நிதானமாக உள்ளே வந்தான் ரிஷி. சோஃபாவில் அனைத்துப் பொருட்களும் அவன் பார்வைக்குப் படும்படியாகவேக் கிடந்தன.

“எதுக்கு இப்போ ஆல்பத்துல இருந்த ஃபோட்டோவை எடுத்து இங்கே வெச்சிருக்கே?” கணவனின் அந்தக் கேள்வியில் பவித்ரா முதல்முறையாக நொறுங்கினாள். அவளைக் கடந்து போன ரிஷி சட்டென்று நின்றான். அவன் செய்கைகளையே இமைக்காமல் பார்த்திருந்தது பெண். கண்கள் கூர்மையுற அந்த ஃபோட்டோவை கையில் எடுத்தான்.

“என்ன இது?!” முகம் கோபத்தில் சிவந்து போகக் கர்ஜித்தவனை விழி அகற்றாமல் பார்த்திருந்தாள் மனைவி. அங்கிருந்த கடிதத்தைக் கையில் எடுத்துப் பார்த்தவன்,

“டாமிட்!” என்று கத்தினான். பவித்ரா எதற்கும் அசையவில்லை. அப்படியே சிலைப் போல அமர்ந்திருந்தாள்.

“பவீ!” கணவன் அவளை அழைத்தபோதும் கூட எந்தச் சலனமும் இல்லாமல் பெண் அப்படியேதான் உட்கார்ந்திருந்தது. இதுவரை நேரமும் நெஞ்சின் ஒரு மூலையில் ஒட்டியிருந்த நம்பிக்கைத் துகள் துகளாக உதிர்வதை நிதானமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தது பெண்.

மூளை சொன்ன அறிவுறுத்தல்களைக் கேளாமல் ஆசைக் கொண்ட நெஞ்சத்தின் பின்னே ஒளிந்து கொண்டவள் இப்போது எதுவும் புரியாமல் அமைதியாக இருந்தாள். ரிஷியின் நிலைமை இப்போது மிகவும் மோசமாக இருந்தது. தன்னெதிரே இருக்கும் மனைவிக்கு நடந்தது அனைத்தும் தெரிந்துவிட்டது என்பதை விட, தனக்கெதிராக வேலை செய்ய இவர்கள் புறப்பட்டதுதான் அவன் புத்திக்கு இப்போது பெரிதாகத் தெரிந்திருக்கும் போலும்.

“ஆலிவர்.” தன் நண்பனை உடனே அழைத்திருந்தான்.

“என்ன நடக்குது இங்க? வீட்டுக்கே லெட்டர் போடுற அளவுக்கு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் துணிச்சல் வந்திடுச்சா?” மனிதன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தாலும்… சில பொழுதுகளில் முட்டாளாகி விடுகிறான். வெற்றி மேல் வெற்றி காணும் அவனும் தோற்றுப் போகும் இடமும் ஒன்றிருக்கும். ரிஷி இப்போது அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருந்தான். வியாபாரத்தில் ஜெயிக்க முடிந்திருந்த அந்த இளஞ்சிங்கம் தோற்று நின்ற இடம் பவித்ரா! தன் வாய்மொழி மூலமாகவே மனைவிக்கு வாக்குமூலம் கொடுக்கிறோம் என்று புரியாமல் ரிஷி தன் நண்பனோடு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தான்.

“கொன்னுடுவேன் ஆலிவர், சொல்லி வை!” ரிஷியின் பேச்சுத் தொடர்ந்தது. ஆக… இன்று காலையில் கணவன் சொன்ன இரு பெண்களும் இவர்கள்தானா?! கோபமே வந்திராத அத்தானுக்குக் கூட கோபத்தை உண்டு பண்ணிய பெண்கள் இவர்கள்தானா?!

“பவித்ரா.” கணவன் தன்னை அழைக்கவும் நிமிர்ந்து பார்த்தாள் பெண். அந்தப் பார்வை அவனைச் சுட்டிருக்கும் போலும். சட்டென்று அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“ஏதாவது பேசு பவி.” அவன் குரல் உடைந்தது. பெண் தீர்க்கமாக இப்போது அவள் கணவனைப் பார்த்தது.

“இந்த ஃபோட்டோ ல இருக்கிறது யாரு த்தான்?”

“தெரியாது டா.” அந்தப் பதிலில் மீண்டும் அவளுக்குள் ஒரு நம்பிக்கைத் துளிர்விட்டது.

“ஓ… பையன் உங்களை மாதிரியே இருக்கானே த்தான்?!”

“அதுக்கு?”

“நீங்களே ஒரு கணம் இது உங்க ஃபோட்டோ தானோன்னு நினைச்சுட்டீங்க இல்லை?”

“…………….”

“நானும் அப்பிடித்தான் நினைச்சேன்.” சொல்லிவிட்டு தனது விரல்களைக் குனிந்து ஆராய்ந்தது பெண்.

“பவி…”

“சொல்லுங்க த்தான், இதுக்கு வாய்ப்பே இல்லை பவி ன்னு சொல்லுங்க த்தான்.” பெண்ணின் கண்ணீர் குரல் ரிஷியின் மனதைக் கிழித்தது.

“பவி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு.” ரிஷி தவித்துப் போய் ஆரம்பித்தான்.

“நீங்க சொல்லுங்கன்னுதான் நானும் கேட்கிறேன், இது அத்தனையும் பொய் பவி, என்னோட வளர்ச்சியில பொறாமைப்பட்டு யாரோ இப்பிடி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இருக்காங்க பவி ன்னு சொல்லுங்க த்தான்.” பவித்ரா இப்போது கதறி அழுதாள். ரிஷி திக்பிரமைப் பிடித்தவன் போல அமர்ந்து விட்டான்.

“உங்களால சொல்ல முடியாது, ஏன்னா இதுல இருக்கிற எதுவுமேப் பொய்யில்லை.” இப்போது பெண் தன் முழு பலம் கொண்டு கிறீச்சிட்டது.

“இல்லை!” இப்போது ரிஷியும் கத்தினான்.

“எது இல்லைன்னு சொல்றீங்க த்தான்? அச்சு அசல் உங்களை மாதிரியே இருக்கானே அந்தப் பையன்! அது எப்பிடி?!”

“…………..”

“சரி… அப்பிடியே இருக்கட்டும், இந்தப் பையனோட அம்மா யாரு? அவங்களை நீங்க பார்த்ததே இல்லைன்னு சொல்லப் போறீங்களா?”

“………….”

“ரிஷி ரிஷின்னு அந்த வயசான அம்மா கடிதம் முழுக்க உங்களை இத்தனை உரிமையாச் சொல்லி இருக்கே… அதை இல்லைன்னு சொல்லப் போறீங்களா?”

“பிஸினஸ் பண்ணுறவங்க எங்கிற முறையிலதான் அவங்களை எனக்குத் தெரியும் பவி…” 

“சரி… அம்மாவோட பிஸினஸ் பண்ணினீங்க, பொண்ணோட என்னத்தான் பண்ணினீங்க?” அவனை முழுதாக முடிக்க விடாமல் குறுக்கிட்டாள் பெண்.

“பவி… இங்கப்பாரு… நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு.” ரிஷி தன் மனைவியின் முகத்தைக் கைகளில் ஏந்தியபடி கெஞ்சினான்.

“…………”

“உன்னைப் பார்க்கிற வரைக்கும் இந்தக் கல்யாணத்துல எல்லாம் எந்த ஈடுபாடும் எனக்கு வரலைம்மா.”

“…………”

“இந்த நாட்டுல இதெல்லாம் தப்பேக் கிடையாது.” இதை ரிஷி சொல்லும் போது பெண்ணின் முகம் கசங்கியது.

“சாரி பவி, சாரிடா… என்னோட நிலைமையில இருந்து நீ கொஞ்சம் சிந்திச்சுப் பாரு, எனக்கு இதெல்லாம் அப்போத் தப்பாத் தெரியலை, உன்னைப் பார்த்த பிறகு… இனிமேல் உனக்கு நேர்மையா இருக்கணும்னு நினைச்சனேத் தவிர, என்னோட கடந்த காலத்தைப் பத்தி நான் கவலைப்படலை.”

“இதையே நானும் சொல்லலாமா த்தான்?” சட்டென்று கேட்டது பெண். அவள் கேட்ட நொடி ரிஷியின் முகம் சிவந்து போனது. 

“…………”

“என்னோட கடந்த காலமும் எப்பிடி வேணும்னாலும் இருக்கலாமா த்தான்? உங்களைக் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமா நான் உங்களுக்கு நேர்மையா இருந்தாப் போதுமில்லை?”

“………..”

“எந்தளவுக்கு என்னோட கடந்த காலம் இருந்தா உங்களுக்கு வசதியா இருக்கும் த்தான்? நான் யாரோட எப்பிடிப் போயிருந்தாலும் உங்களுக்கு ஓகேவா? இல்லை… ஒரு புள்ளையைப் பெத்திரு…” பவித்ரா முடிக்கும் முன்பாக ரிஷியின் கை அவள் கன்னத்தில் இறங்கி இருந்தது. பெண் எதுவுமேப் பேசவில்லை. கன்னத்தை உள்ளங்கையால் அழுத்திப் பிடித்த படி சிறிது நேரம் அமர்ந்திருந்தது.

“தப்புன்னு புரியுதில்லை… பவித்ரா பண்ணினாத் தப்பாத் தெரியுறது ரிஷி பண்ணினா மட்டும் எப்பிடி த்தான் நியாயமாகும்?” 

“திட்டம் போட்டு அத்தனையையும் பண்ணி இருக்கா, அதைப் புரிஞ்சுக்காம நீ என்னென்னவோப் பேசுறே.” ரிஷியின் குரல் இப்போது மீண்டும் உயர்ந்தது.

“அத்தான்… ஒன்னை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கோங்க, இப்போப் பிரச்சினை இங்க யாரை யாரு ஏமாத்தினாங்க எங்கிறது இல்லை, நீங்க தப்புப் பண்ணினீங்களா இல்லையாங்கிறதுதான்.” ரிஷி வாயடைத்துப் போய்விட்டான். இதற்கு அவனால் என்ன பதில் சொல்ல முடியும்?! திருமண ஆசையே இல்லாத அவனைத் தன் வலையில் வீழ்த்த ஷார்லட் நினைத்ததென்னவோ உண்மைதான். அவனுக்குத் தெரியாமலேயே அவன் குழந்தையைப் பெற்றுக் கொண்டு ரிஷியை வளைக்க அவள் முயன்றது நிஜம். அது நடக்காமல் போன போது ஆலிவர் மூலமாக ரிஷியை மிரட்டிப் பார்த்ததும் நிஜம்.

ஒரு கட்டத்தில் ரிஷி தனக்கு வளைந்து கொடுக்க மாட்டான் என்று புரிந்த போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு கொழுத்த செல்வந்தனைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் நிம்மதியாக வாழ்வதும் நிஜம். இதில் விந்தையான விஷயம் என்னவென்றால்… ஷார்லட் பெற்றுக்கொண்டது தன் குழந்தையே அல்ல என்று ரிஷி இன்றுவரை நம்பியதுதான்.

அதன்பிறகு பவித்ரா ரிஷியிடம் எதுவுமேப் பேசவில்லை. மாடிக்குச் சென்றவள் தங்கள் அறையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே இரண்டொரு மணிகள் கடந்து போயின. பசி மேலிடவும் ரிஷி உணவை ஆர்டர் பண்ணினான்.

“பவி… வா சாப்பிடலாம்.” அவன் அழைத்த போதும் அவளிடம் அசைவில்லை.

“உடம்புக்கு வேற முடியாம இருக்கே, ப்ளீஸ்… எந்திரிச்சு வா ம்மா.” அந்தக் கனிவான அழைப்பில் அவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

“வா டா.” அவன் எவ்வளவு கெஞ்சியும் பெண் அசைந்து கொடுக்கவில்லை.

“எம்மேல இருக்கிற கோபத்தைச் சாப்பாட்டுல காட்டாதே, வா சாப்பிடலாம்.” 

“என்னைக் கொஞ்சம் தனியா விடுறீங்களா?” 

“முதல்ல நீ வந்து சாப்பிடு.”

“ப்ளீஸ்.” அவன் முகம் பார்க்காமலேயே பேசியது பெண். ரிஷி என்ன நினைத்தானோ… அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. அவளுக்கான உணவை ஒரு ப்ளேட்டில் போட்டு ரூமில் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விட்டான்.

மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் பெருக அசையாமல் படுத்திருந்தாள் பவித்ரா. இனி அவள் வாழ்க்கையில் என்ன மீதமிருக்கிறது?! ஆறு மாதங்கள் எத்தனை இன்பமாகக் கழிந்தது வாழ்க்கை. யார் கண்பட்டு இப்படி ஆகிப்போனது?! வீட்டாரை நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் பொங்கிப் பெருகியது. விம்மி, வெடித்து ஓவென்று அழுதாள் பெண். எத்தனை ஆசையாக இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வைத்தார்கள் அவர் பெற்றோர்கள்.

இன்றைக்கு அத்தனையும் ஒன்றுமில்லை என்று ஆகிப்போனதே! இங்கு நடப்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் தாங்கிக் கொள்வார்களா?! மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று உயிரை விட்டார்களே! அத்தான் அத்தான் என்று எத்தனைப் பாசமாக இருந்தார்கள்! இன்றைக்கு அத்தனையும் ஒரு துளி விஷம் பட்டது போல ஆகிப்போனதே!

உடலும் மனதும் சோர்ந்து போக பவித்ரா அப்படியே சிறிது நேரம் கண்ணயர்ந்து போனாள். மீண்டும் அவள் எழுந்த போது மாலை ஆகியிருந்தது. ரூமில் இருந்த உணவைப் பார்த்தவள் அதை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு போனாள். உணவைச் சூடு பண்ணி சிறிது உண்டாள்.

“பவி…” ரிஷியின் குரல் அவள் பின்னேக் கேட்டது. எப்போதும் அவளைப் பின்னோடிருந்து ஆசையாக அணைக்கும் அத்தான். இன்று நெருங்கத் தயங்கி விலகி நிற்கிறான். பவித்ரா மெதுவாகத் திரும்பினாள். அவன் விரல் தடம் பதிந்திருந்த அவள் கன்னத்தைத் தடவிக் கொடுக்க ரிஷி கையை நீட்டினான். ஆனால் பவித்ரா முகத்தைப் பின்னே இழுத்துக் கொண்டாள்.

“சாரி பவி, நீ என்னோட நிலைமையைப் புரிஞ்சுக்கணும், என்னோட கடந்தகாலம் அது, அதுல நான் நல்லவனா வாழ்ந்தனா இல்லையான்னு எனக்குத் தெரியாது, ஆனா உன்னைப் பார்த்தப்புறம் நான் நல்லவனா மட்டுந்தான் இருந்திருக்கேன்.”

“…………….”

“வாழ்க்கைன்னா என்னன்னு அப்பப் புரியலை, வழிநடத்தப் பெத்தவங்களும் இல்லை, நானா ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட்டேன்… அது சரின்னு நானுமே இப்பச் சொல்லலை, தப்புத்தான்… அந்தத் தப்பை நீ மன்னிக்கணும் பவி.” ரிஷியின் குரல் மனைவியின் முன் மண்டியிட்டுக் கெஞ்சியது.

“நான் தப்பானவன் கிடையாது ம்மா, எப்ப உன்னைப் பார்த்தனோ அன்னையிலிருந்து எல்லாமே எனக்கு நீதான்.”

“எனக்கு அது மட்டும் போதலையே த்தான்.”

“பவிம்மா… ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கோ, உங்கால்ல வேணும்னாலும் விழுறேன், என்னோட தப்பை மறந்து போ.” ரிஷி வெட்கத்தை மறந்து மனைவியிடம் கெஞ்சினான்.

“எப்பிடி த்தான் மறக்க முடியும்? இனி என்னோட வாழ்நாள்ல அத்தானுக்கு இப்பிடியொரு கடந்தகாலம் இருந்துச்சுங்கிறதை என்னால மறக்க முடியுமா? அது சாத்தியமா?” சொல்லிவிட்டுப் பெண் கசப்பாகப் புன்னகைத்தது.

“முடியும், உன்னால மறக்க முடியும், என்னால அதை மறக்க வைக்க முடியும்.”

“எத்தனை அழகா உங்களை மாதிரியே பண்ணின தப்புக்கு ஒரு சாட்சியை உருவாக்கி வெச்சிருக்கீங்க, அதை மறந்துட்டுப் பேசுறீங்களே த்தான்.” இப்போது ரிஷி தனக்குப் பக்கத்திலிருந்த சுவரில் ஓங்கிக் குத்தினான்.

“டாமிட்!” இன்னும் ஏதேதோ கெட்ட வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன. சட்டென மனைவியை நோக்கித் திரும்பினான் ரிஷி.

“நீ நினைக்கிற அளவுக்கு ஷார்லட் ஒன்னும் அப்பாவி கிடையாது பவித்ரா, எம்மேல அவ்வளவு காதல் பொங்கி வழிஞ்சதால புள்ளையைப் பெத்துக்கிட்டவ எதுக்கு இப்போ அதை அநாதையா விட்டுட்டு அமெரிக்கா போயிருக்காளாம்?!”

“…………….”

“அவ எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பண்ணினா, என்னை வளைச்சுப் போட அவ போட்ட திட்டம் இது, அதுக்கு நான் பிடி குடுக்கலைன்னதும் எல்லாத்தையும் தூக்கித் தூரப் போட்டுட்டுக் கிளம்பிட்டா.”

“…………….”

“இதுக்கு முன்னாடி இப்பிடி யாரை வளைச்சுப் போட என்னத் திட்டம் போட்டாளோ?” ரிஷியின் பேச்சில் பவித்ராவின் முகம் அருவருப்பைக் காட்டியது.

“மேல மேல பேசி உங்க தரத்தை நீங்களே இன்னும் தாழ்த்திக்காதீங்க த்தான், இதையெல்லாம் கேட்க எனக்கு ரொம்பக் கேவலமா இருக்கு.” 

“பவி…” ஏதோ பேசியபடி தன்னை நெருங்கி வந்தவனைக் கை நீட்டித் தடுத்தாள் பெண்.

“என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க த்தான், உடம்பு, மனசு ரெண்டுமே ரொம்ப வலிக்குது… எனக்கு நிம்மதி வேணும், நான் தனியா இருக்கணும், ப்ளீஸ்.” 

மாடியில் இருந்த விருந்தினர் அறையையே அன்றைக்கு பவித்ரா பயன்படுத்தினாள். ரிஷி அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. நேரத்திற்கு உணவை மாத்திரம் அவள் இருந்த அறையில் கொண்டு போய் வைத்தான். கண்களில் நீர் வடிய படுத்திருந்தவளைப் பார்த்த போது கொலைவெறி வந்தது. 

ஆலிவருக்கு ஃபோனை போட்டு வெளுத்து வாங்கினான். ஷார்லட்டை கொன்றுவிடும் வெறி தோன்றியது. எத்தனை அழகாக அமைந்த தனது வாழ்க்கையை அந்த வில்லங்கம் பிடித்தவள் இப்படி மாற்றிவிட்டாளே. ரிஷிக்கு நன்றாகத் தெரியும். அவள் தன்னோடு மாத்திரம் உறவு வைத்திருந்தவள் அல்ல. பலரோடு சுற்றித் திரிந்தவள். அதில் யாருக்குப் பிறந்த குழந்தையை என் தலையில் கட்டப்பார்க்கிறாள்?!

இப்போது ரிஷியின் சிந்தனைச் சற்றே நிதானித்தது. இதுநாள்வரை ஆலிவர் அழைத்துக் குழந்தையைப் பற்றிச் சொன்ன போதெல்லாம் அது யார் குழந்தையோ என்கின்ற விட்டேற்றியான எண்ணமே இருந்தது. ஆனால்… இன்று பார்த்த அந்தக் குழந்தையின் புகைப்படம் ரிஷியை லேசாகச் சிந்திக்க வைத்தது. அப்படியும் இருக்குமோ?! அவனைப் போலவே அச்சு அசல் ஜாடை இருக்கிறதே?! ரிஷி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

தான் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட அத்தானின் ஆண்வாரிசு ஏற்கனவே உருக்கொண்டு நிற்பதை நினைத்து பவித்ராவிற்கு அழுவதா சிரிப்பதா என்றேத் தெரியவில்லை. அந்தப் புகைப்படத்தை மீண்டும் கையில் எடுத்துப் பார்த்தாள். குழந்தை அவ்வளவு அழகாக இருந்தது. ரிஷியை உரித்து வைத்தாற்போல இருந்தது.

தன் தேவை நிறைவேறவில்லை என்று தெரிந்த போது தாய் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டாள். பாட்டிக்கு இப்போது முதுமை வயது. அநாதைப் போல வளருகிறது இந்தக் குழந்தை! கடிதத்தில் வரிக்கு வரி அந்தப் பெண்மணி அதைத்தான் குறிப்பிட்டிருந்தார். தான் தள்ளாத வயதில் இருப்பதாகவும், பிஸினஸை பார்த்துக் கொள்வதேப் பெரும் பாடாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எல்லா வசதிகளும் இருந்தும், எல்லா உறவுகளும் இருந்தும் அந்தக் குழந்தை அநாதைப் போல வளருவதைக் குறிப்பிட்டிருந்தார். தாய்தான் பொறுப்பில்லாமல் இருக்கிறாள். தந்தையாவது இந்தக் குழந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டி இருந்தார். இதற்கு முன்பே இது சம்பந்தமாகப் பல முறை அவர் ரிஷியை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். அது முடியாமல் போயிருக்கிறது. அதனாலேயே பவித்ராவை அணுகி இருக்கிறார்.

இங்கு வாழும் மனிதர்களின் கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் பவித்ராவிற்கு பிடிபடவில்லை. என்ன மாதிரியான உலகம் இது?! திருமணத்திற்கு முன்பே அவரவர் விருப்பம் போல வாழ்கிறார்கள்! ஒரு நெறிமுறை இல்லாத வாழ்க்கை முறை. ஆண்கள்தான் அப்படியென்றால் பெண்கள் கூட அதே நாகரிகத்தைப் பின்பற்றுகிறார்கள்! ரிஷிக்கு திருமணம் ஆகி மனைவி என்ற ஒரு பெண் வந்த பிற்பாடும்… இவை எதையும் பொருட்படுத்தாமல் அவன் கடந்தகாலத்தை அவன் மனைவியிடமேக் கடை விரிக்கிறது அந்த அம்மா!

இதனால் அவன் வாழ்க்கை எத்தனைத் தூரம் பாதிக்கப்படும் என்ற எண்ணமே இல்லையே! இல்லையென்றால்… இந்த நாட்டில் இதுவெல்லாம் சகஜமா?! இவர்களுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா?! நிகழ்காலத்தில் தன் இணைக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?! தன் துணையின் கடந்தகாலம் பற்றி இங்கு யாரும் கண்டு கொள்வதே இல்லையா?!

மனம் விண்டுவிடும் போல வலித்தது. உடலும் உபாதையால் சோர்ந்து போனது. கண்களை மூடிய போது அந்தச் சின்ன உருவமே பவித்ராவின் கண்களுக்குள் வந்து சிரித்தது. ஃபோட்டோவை தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு அப்படியே கண்ணயர்ந்தாள் பவித்ரா. அவள் உறங்கிய பிறகு அங்கு வந்த ரிஷி வெகுநேரம் வரை அவளையேப் பார்த்திருந்தது அவளுக்குத் தெரியாது!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!