kkavithai18

kkavithai18

கவிதை 18

ரிஷி அதே ஹோட்டலின் இன்னொரு அறையில் தங்கிக் கொண்டான். பவித்ராவோடு அந்தக் குழந்தை சதா இருந்ததை அவனால் அத்தனைச் சுலபத்தில் ஜீரணிக்க முடியவில்லை.

அது தனது குழந்தை என்பதை ஏனோ ரிஷி மறந்து போனான். யாரோ ஒரு மூன்றாம் மனிதனின் குழந்தையைத் தன் மனைவி அரவணைப்பது போலவே உணர்ந்தான். ஆலிவரை அதற்கு மேலும் அங்கே தங்க வைக்க ரிஷி பிரியப் படவில்லை. தன் தொழிலை விட்டுவிட்டுத் தனக்காக அலைந்து திரிந்த நண்பனை லண்டன் அனுப்பி வைத்தான்.

“ரிஷி, கொஞ்சம் அமைதியா இரு, இது உன்னோட வாழ்க்கை, கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துக்காதே, உன்னோட வைஃப் அவங்க முடிவுல இருந்து மாறுவாங்கன்னு எனக்குத் தோணலை.” லண்டன் கிளம்பும் முன்பாக ஆலிவர் தன் நண்பனிடம் தனிமையில் பேசி இருந்தான்.

“அப்ப இந்தக் குழந்தையை என்னை ஏத்துக்கச் சொல்றியா ஆலிவர் நீ?!” வேதனையோடு முரண்பட்டான் ரிஷி.

“இது உன்னோட குழந்தை ரிஷி.”

“அதை நான் எப்பிடி நம்புறது?”

“ரிஷி… ஒரு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே லில்லியன் உங்கிட்டப் பேசணும்னு முயற்சி பண்ணினாங்க, இதை உறுதிப் படுத்திக்காமலா உங்கிட்ட வந்திருப்பாங்கன்னு நினைக்கிறே?”

“ஆலிவர், என்னோட நிலைமைல நீ இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பே?”

“கண்டிப்பா இந்தக் குழந்தையை ஏத்துக்கிட்டிருப்பேன்.” உறுதியாகச் சொன்னான் ஆலிவர்.

“ஆலிவர்!” இப்போது ரிஷி திகைத்துப் போனான்.

“இதைப் பெத்தவ எந்த நோக்கத்துல பெத்தாளோ அந்த எண்ணத்தை ஒரு நாளும் நான் நடக்க விட்டிருக்க மாட்டேன், அதுக்காக… என்னோட குழந்தையை நான் அநாதை மாதிரி வளர விட்டிருக்கவும் மாட்டேன் ரிஷி.”

“………….”

“நானாவது வேலைக்கு யாரையாவது வெச்சுத்தான் என்னோட குழந்தையை வளர்த்திருக்கணும், ஆனா உனக்கு அப்பிடியில்லை, உன்னோட காலரை புடிச்சு உலுக்க வேண்டிய வைஃபே உனக்கு நல்லதுதான் பண்ணுறாங்க.”

“…………”

“பவித்ராவோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் ஸ்ரீ லங்காக்கு டிக்கெட் போட்டிருப்பாங்க, உனக்கும் டிவோர்ஸ் நோட்டீஸ் வந்திருக்கும்.” 

“…………”

“ஆனா அவங்க அப்பிடி எதுவும் பண்ணலை ரிஷி, அந்த நல்ல மனசை நீ புரிஞ்சுக்கோ.”

“இதால குடும்பத்துக்குள்ள எவ்வளவு பிரச்சினைகள் வரும் தெரியுமா ஆலிவர்?”

“கண்டிப்பா வரும்.”

“பவித்ராவோட பேரண்ட்ஸ் எவ்வளவு நம்பிக்கையோட இந்தக் கல்யாணத்தை நடத்தி வெச்சாங்க!”

“இப்பவும் அந்த நம்பிக்கையை நீ காப்பாத்தத்தான் போறே, உன்னோட கடந்தகாலம் கொஞ்சம் சறுக்கிடுச்சு, அதனால பவித்ரா உன்னோட வைஃப் இல்லைன்னு ஆகிடுமா? இல்லை நீதான் அவங்களை விட்டுடப் போறியா?”

“அவ இல்லைன்னா நான் ஒன்னுமே இல்லை ஆலிவர்!”

“அதை அவங்களுக்குப் புரியவை, ஒரு தப்பு உனக்கேத் தெரியாம நடந்திருச்சு ரிஷி, அதை இனி ஆராயுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை, எது நடக்கணுமோ அதை எந்தச் சிக்கலும் இல்லாம பார்த்துக்கோ.”

“……….”

“பவித்ரா கரெக்டாத்தான் எல்லாம் பண்ணுறாங்கன்னு எனக்குத் தோணுது ரிஷி.”

“எனக்கு நடந்த அநியாயத்தோட சாட்சி அந்தக் குழந்தை, அதை நான் எப்பிடி ஏத்துக்குவேன் ஆலிவர்?”

“கஷ்டந்தான், என்னப் பண்ணுறது? பவித்ரா காதுக்கு விஷயம் போயிடுச்சே.”

“எல்லாம் அந்த லில்லியன் பார்த்த வேலை, அவங்களை!” கோபத்தில் பொங்கினான் ரிஷி.

“லில்லியனும் பாவந்தான் ரிஷி, பொறுப்பில்லாத பொண்ணைப் பெத்துட்டாங்க, அவளை நம்பி இனிப் பிரயோஜனம் இல்லைன்னு புரிஞ்சு போச்சு, அவங்க உடம்பு ஆரோக்கியமா இருந்திருந்தாக் கூட அவங்க உன்னைத் தேடி வந்திருக்க மாட்டாங்க, எல்லாமே அவங்களுக்கு எதிராத் திரும்பிடுச்சு.” 

ஆலிவர் அதற்கு மேல் அங்கே தாமதிக்காமல் கிளம்பி விட்டான். இதுவரைத் தன் கண்ணோட்டத்தில் மாத்திரமே நடப்பவற்றை அலசிக் கொண்டிருந்த ரிஷிக்கு நண்பனின் பேச்சு வித்தியாசமாக இருந்தது. மண்டை வெடித்துவிடும் போல இருந்தது. ரூமை விட்டு எங்கேயும் போகாமல் அடைந்து கிடந்த படி சிந்தனை செய்தான் இளையவன்.

அம்மா, அப்பா உயிரோடு இருந்தவரை அவன் வாழ்க்கை ஒரு ஒழுங்கோடுதான் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் ஒற்றைப் பிள்ளை என்று எந்தளவு சலுகைகள் இருந்ததோ அதேயளவு கண்டிப்பும் இருந்தது. பணம் கையில் தாராளமாகவேப் புரண்டாலும் ரிஷி எல்லாவற்றிலும் நிதானமாகத்தான் இருப்பான். ஆனால் எல்லாம் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இல்லாமல் போன போது காணாமற் போய்விட்டது.

தொழில் ரிஷியின் கழுத்தை இறுக்கிப் பிடித்த போது அவன் இறுக்கங்களுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அது போல நேரங்களில் நல்ல மாதிரியான நண்பர்கள் அவனுக்கு அமையவில்லை. ஆலிவர் போன்ற நண்பர்கள் நல்லவர்களாக இருந்த போதும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் வாழாதவர்களாக இருந்ததுதான் ரிஷியின் துரதிருஷ்டம்.

வாழ்க்கையின் இறுக்கங்களைத் தளர்த்த ஆயிரம் நல்ல வழிகள் இருந்த போதும் ரிஷி தடம் மாறிப் போனான். ஆனால் இப்போது நிதானமாக உட்கார்ந்து யோசிக்கும் போது அனைத்தும் தவறாகப் பட்டது. முற்பகல் செய்த சில தவறுகள் வாழ்க்கையின் பிற்பகலில் பூதாகரமாக வெடிக்கின்றது.

அழகான வாழ்க்கை, ஆசையான துணையோடு அமைந்த போதும் அதை அனுபவிக்க விடாமல் விதி அவனைத் துரத்தி அடிக்கிறது. பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல ரிஷி அன்றைக்கு முழுவதும் தன் கடந்தகாலத்தைப் பற்றியே சிந்தித்த வண்ணம் இருந்தான். 

கரைந்து போன காலத்தை மீண்டும் அள்ள முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! சீரழிந்து போன சில பொழுதுகளைச் செப்பனிட்டுக் கொண்டால் எத்தனைச் சுகமாக இருக்கும்!

சிந்தனையோடே இருந்த கணவனை பவித்ரா எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என எதைப்பற்றியும் பேசாது மதிய உணவை அவனுக்காக அவளே கொண்டு வந்தாள்.

“எனக்காக உன்னை நீ சிரமப்படுத்திக்காதே பவி, இந்த ஒரு வாரமும் நீ இல்லாமத்தான் நான் வாழ்ந்தேன்.” கட்டிலில் படுத்துக் கிடந்தவன் இவள் உணவை மேஜை மேல் வைக்கவும் சட்டென்று சொன்னான். பவித்ரா பதிலேதும் சொல்லவில்லை. அவனைத் தனியே விட்டுவிட்டு இவ்வளவு தூரம் வரத்தோன்றியது உண்மைதான். ஆனால் இத்தனைப் பக்கத்தில் அவன் இருக்கும் போது விட்டுவிட இப்போது மனது இடம் கொடுக்கவில்லைப் பெண்ணுக்கு.

அன்றையப் பொழுது மிகவும் அமைதியாகக் கழிந்தது ரிஷிக்கு. மனைவி தன் பக்கத்தில் இருக்கிறாள் என்ற உண்மையே அவனைப் பெரிதும் அமைதிப் படுத்தியது. தொழில் சார்ந்த விஷயங்களை ரூமில் இருந்த படியே லாப்டாப்பில் பார்த்துக் கொண்டான். மாலையும் மனைவியே தேநீர் கொண்டு வந்தாள். 

கணவன் தன்னோடு ஏதாவது பேசுவானா என்று அவள் சற்றுத் தாமதிக்க, அவன் வேலையிலேயே கவனமாக இருந்தான். லில்லியனும் அன்று மாலை பவித்ராவை அழைத்துப் பேசினார். ரிஷி ஏற்கனவே தன்னிடம் வந்து அவளைப் பற்றி விசாரித்தது முதற்கொண்டு அனைத்தையும் சொன்னார்.

“ரிஷி எப்பிடியும் கண்டு பிடிப்பார்னு தெரியும் பவித்ரா, ஆனா இத்தனைச் சீக்கிரமா வந்து சேருவார்னு நான் எதிர்பார்க்கலை ம்மா.”

“நானும் இதையேதான் நினைச்சேன் ஆன்ட்டி.”

“இப்போ நான் அங்க வந்தேன்னா தேவையில்லாத பிரச்சினை வரும், முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.”

“நான் ஏற்கனவே முடிவெடுத்துட்டேன் ஆன்ட்டி.”

“அப்பிடியில்லை பவித்ரா, நீ எனக்கு உதவி பண்ண நினைக்கிறது சந்தோஷந்தான், ஆனா அதுல ரிஷிக்கும் சம்மதம் இருக்கணும்.”

“……….”

“எம் பொண்ணைத்தான் நான் சரியா வளர்க்கலையேத் தவிர நான் அழகான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தவதான் பவித்ரா.”

“………”

“ஹரி எந்தளவுக்கு உனக்கு முக்கியமோ அதைவிட ரிஷி உனக்கு முக்கியம் பவித்ரா.”

“……..”

“ரிஷியோட சம்மதம் இல்லாம எதுவுமே நடக்காதும்மா, அதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன்.” தன் முடிவில் லில்லியன் எத்தனை உறுதியாக இருக்கிறார் என்பதை அவர் குரலே சொன்னது.

ஹரி எப்போதும் ஏழு மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் உள்ளவன் என்பதால் குழந்தை உறங்கிய பிறகு அன்றைக்கு இரவு பவித்ரா ரிஷியின் அறைக்கு வந்தாள். இரவு உணவை முடித்துவிட்டு அப்போதுதான் உடம்பு கழுவிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் ரிஷி. 

வெயில் காலம் என்பதால் வெறும் பைஜாமா அணிந்திருந்தான். இவள் கதவைத் தட்டியதால் மேல் சட்டையைப் போடாமலேயே வந்து கதவைத் திறந்தான். டவலால் உடம்பைத் துடைத்தவன் அதை அங்கிருந்த ஹாங்கரில் போட்டுவிட்டுக் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான்.

“அத்தான்… நான் உங்கக் கூடப் பேசணும்.” பவித்ரா சட்டென்று சொல்லவும் லாப்டாப்பை எடுக்கப் போனவன் கொஞ்சம் நிதானித்தான்.

“சொல்லு.” ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.

“நீங்க எம்மேல கோபமா இருக்கீங்க.” 

“இல்லையே பவித்ரா, லில்லியன் எனக்கு எவ்வளவு பெரிய அநியாயத்தைப் பண்ணி இருக்காங்க, அப்பிடியிருந்தும் நீ இங்க இருக்கறேங்கிற ஒரே காரணத்துக்காக நானும் இங்க இருக்கலையா?” ரிஷி பொறுமையாகக் கேட்ட போது பவித்ராவின் கண்கள் கலங்கிப் போனது.

கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவளைப் பொறுத்தவரை அவள் அறிந்த ரிஷி அவள் மேல் எத்தனைக் காதல் கொண்டிருந்தான் என்று அவள் அறியமாட்டாளா என்ன?

“சாரி அத்தான்.”

“எதுக்கு?”

“உங்கக்கிட்டச் சொல்லாம வீட்டை விட்டு வந்ததுக்கு.”

“என்னைப் பத்திக்கூட நீ நினைச்சிருக்க வேணாம், உன்னை வீட்டுல காணல்லேன்னதும் நான் என்னன்னு எடுத்துக்கிறது? எம் மனசு எவ்வளவு வேதனைப்படும் ன்னு கூடவா உனக்குப் புரியலை?”

“சாரி.”

“அந்தளவுக்கா இந்த அத்தான் உனக்குத் தேவையில்லாமப் போயிட்டேன் பவி?!” இப்போது ரிஷியின் கண்களும் லேசாகக் கலங்கியது.

“அத்தான்!” திகைத்துப் போன பவித்ரா அவனருகே ஓடி வந்தாள். ஆனால் ரிஷி ஒற்றைக் கை நீட்டித் தடுத்தான்.

“ஏதோ பேசணும்னு சொன்னே, சொல்லு.” என்றான் கறார் குரலில். பவித்ரா அவனோடு பேசவேண்டும் என்றுதான் அந்த அறைக்குள் வந்தாள். ஆனால் இப்போது என்னப் பேசுவதென்று புரியவில்லை.

“சொல்லு, டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணப் போறியா?”

“அத்தான்!” அந்த வார்த்தையில் பெண் அதிர்ந்து போனது.

“ஓ… அது இல்லையா? வேற என்ன? நமக்குள்ள இனி எந்த உறவும் கிடையாது, இந்தக் குழந்தைக்காகத்தான் நான் உங்களோட சேர்ந்து வாழ சம்மதிக்கிறேன்னு சொல்லப் போறியா?”

“நான் அப்பிடி எதுவுமே சொல்லலையே த்தான்.” பவித்ரா கணவனின் வார்த்தைகளில் சிறிது நேரம் பேச்சைத் தொலைத்து நின்றிருந்தாள்.

“வேற என்ன சொல்ல வந்தே பவி?” 

“அத்தான்…”

“சொல்லு.”

“எனக்கு இப்போ எல்லா வகையிலயும் உங்க சப்போர்ட் வேணும்.” பேச்சில் தயக்கம் இருந்தது. இருவருக்கும் இடையே இடைவெளியும் இருந்தது. ஆனாலும் நெருங்கி வந்தாள் பெண்.

“அது எனக்குப் புடிக்காத விஷயமா இருந்தாலுமா பவி?”

“எனக்குப் புடிச்சிருக்கு த்தான்.”

“ஓ…”

“உங்களுக்கும் புடிக்கும்.” மனைவி ஆரூடம் சொல்லி முடித்த போது ரிஷி ஒரு பெருமூச்சு விட்டான். ஒருவாரம் கழித்து மனைவியை இன்று பார்த்திருக்கிறான். அவன் இளமை அவளுக்காக மிகவும் ஏங்கித் தவித்தது. ஆனாலும் நெருங்கும் தைரியம் வரவில்லை.

“இந்த வாழ்க்கையைப் பத்தி எனக்குள்ள நிறையக் கனவுகள் இருந்துச்சு பவி, அது உனக்கும் தெரியும்.”

“…………”

“அந்தக் கனவுகளை மூட்டைக் கட்டித் தூக்கிப் போடவா? இல்லை… அந்தக் கனவுகள் நனவாகிறதுக்கு என்னைக்காவது வாய்ப்பு இருக்கா?” வெகு நிதானமாக வார்த்தைகளைக் கோர்த்தான் ரிஷி.

“அத்தான்…”

“நான் உன்னை வற்புறுத்தலை, உன்னோட மனசுல இருக்கிறதை நீ தாராளமா எங்கிட்டச் சொல்லலாம்.” இப்போது அங்கே ஒரு சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.

“இந்த வாழ்க்கையைப் பத்தி நானுமே நிறையக் கனவுகள் கண்டவதான்… குடும்பத்தைப் பத்திக் கவலையேப் படாம இந்த அத்தான் மட்டும் போதும் ன்னு கிளம்பி வந்தவதான்.”

“………..”

“அந்த அத்தான் இப்போ எனக்குப் பலமா ஒரு அடி குடுத்திருக்காங்க.” இப்போது பவித்ராவின் கண்களும் கலங்கியது. ரிஷி நொறுங்கிப் போனான்.

“அந்த அடி வலிச்சாலும் ஹரி முகத்தைப் பார்க்கிறப்போ எல்லாமே மறந்து போகுது, அந்தக் குழந்தையை நானே சுமந்து பெத்த மாதிரி ஒரு பாசம் வருது.”

“ஆனா அது நிஜமில்லையே?”

“அது நிஜமாகணும்! ஹரி சின்னக் குழந்தை, அவனுக்கு இப்போ நடக்கிறது எதுவுமே என்னன்னு தெரியாது, அவன் பெரியவனானதுக்கு அப்புறமும் எதுவும் தெரியக்கூடாது, அவனைப் பொறுத்தவரைக்கும் நான்தான் அவனோட அம்மா, நீங்கதான் அவனோட அப்பா, நம்ம மூத்த குழந்தை அவன்தான், அதுக்கப்புறமா வேணும்னா நீங்க சொன்ன நாலு பொண்ணுங்களையும் பெத்துக்கோங்க.”

“இந்த முடிவுல எந்த மாற்றமுமே இல்லையா பவித்ரா?”

“இல்லை த்தான்.”

“இதை உங்க வீட்டுல ஏத்துக்குவாங்கன்னு நீ நினைக்கிறியா?”

“அத்தான் ஏத்துக்கலைன்னா அவரையேத் தூக்கித் தூரப்போடத் துணிஞ்ச எனக்கு என்னோட வீட்டு ஆளுங்க எம்மாத்திரம்!”

“ம்…”

“உங்களுக்கு எம்மேல இப்ப கோபம் வரலாம், வருத்தம் இருக்கலாம் த்தான், ஆனா காலம் ஒரு நாளைக்கு உங்களுக்குப் பதில் சொல்லும், பவித்ரா பண்ணினது சரிதான்னு.” பேசியது போதும் என்று நினைத்திருப்பாள் போலும். தனது அறைக்காகத் திரும்பிய பவித்ரா சட்டென்று நின்றாள். அவன் பார்வையைப் பார்த்த பிற்பாடு அங்கிருந்து அவள் கால்கள் நகர மறுத்தன. கணவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தது பெண்.

“போயிடு பவி.” தெளிவாக வந்தது ரிஷியின் குரல்.

“அத்தான்?!”

“நான் ஆசையாசையாக் காதலிச்ச பவித்ரா எங்கிட்ட வந்தாப் போதும், கடமைக்காக என்னோட தேவையைத் தீர்க்கத் துணியுற வைஃப் எனக்கு இப்போத் தேவையில்லை, நீ கிளம்பலாம்.”

“சாரி.” ஒற்றை வார்த்தையோடு பவித்ரா போய்விட்டாள். ரிஷி கட்டிலில் உட்கார்ந்த படி எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

வாழ்க்கை அவனை இந்தளவுப் புரட்டிப் போடும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவன் கண்களுக்குள் இப்போது பவித்ராவின் குடும்பமே வந்து நின்றது. பவித்ராவின் அப்பா எத்தனை எதிர்பார்ப்போடு இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தார். அவர் நம்பிக்கையை ஆறே மாதங்களில் குலைக்கும் படி ஆகிவிட்டதே!

‘உங்க பொண்ணை நான் ராணி மாதிரி வெச்சிருக்கேன் மாமா.’ என்று அவரிடம் சொல்ல ரிஷி எவ்வளவு ஆசைப்பட்டான். ஆனால் அது அத்தனையும் தவிடு பொடி ஆகிவிட்டதே!

பவித்ராவின் அம்மாவிற்கு ஆரம்பத்தில் இந்தக் கல்யாணத்தில் இஷ்டமே இல்லை. ஆனாலும் நாளடைவில் எத்தனை இனிதாக என்னோடு நடந்து கொண்டார்கள்! அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்?!

தனது மைத்துனிகளை நினைத்த மாத்திரத்தில் ரிஷியின் தலை சுழன்றது. எத்தனை ஆசையாக என்னை அத்தான், அத்தான் என்று அழைத்துப் பாசத்தைப் பொழிந்தார்கள்.

“எங்கக்காவை நல்லாப் பார்த்துக்கோங்க அத்தான்.” அன்றைக்கு ஹோட்டலில் வைத்து அகல்யா சொன்னது சட்டென்று ரிஷிக்கு இப்போது ஞாபகம் வந்தது. அவர்களுக்கு என்ன பதில் இப்போது என்னால் சொல்ல முடியும்? அவர்கள் முகத்தில் எப்படி நான் விழிப்பேன்? 

ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அது பாட்டில் நகர்ந்து கொண்டே இருந்தது. பவித்ரா போட்ட தாளத்துக்கெல்லாம் ரிஷி கொஞ்சமும் பிசகாமல் ஆடினான் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தையைச் சட்டப்படி தான் தத்தெடுக்க வேண்டும் என்று சொன்னாள். ரிஷி மறுக்கவில்லை. அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் பண்ணினான்.

இரண்டொரு நாட்களில் லில்லியனும் அங்கு வந்துவிட்டார். ரிஷி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லையேத் தவிர அங்கேயே தங்கி இருந்தான். தன் மனைவியை விட்டு எங்கேயும் போக அவன் எண்ணவில்லை.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பழைய அன்னியோன்யம் இல்லை என்றாலும் அனைத்து வேலைகளையும் இருவரும் சேர்ந்தே ஆலோசித்தார்கள், செயற்படுத்தினார்கள். ரிஷி மிகவும் அமைதியாக மனைவி சொன்ன அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றிக் கொடுத்தான்.

விதி தன்னோடு ஒரு பயங்கரமான விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறது என்று தெரிந்திருந்தும் அமைதி காத்தான் ரிஷி, அவளுக்காக… தன் மனம் வென்றவளுக்காக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!