kkavithai20

kkavithai20

கவிதை 20

அடுத்த நாள் காலை பாண்டியன் தனது பால்பண்ணை வரை ஏதோ வேலையாகப் போயிருந்தார். காயத்ரியும் சாரங்கனும் கூட எங்கோ வேலையாக வெளியேப் போயிருந்தார்கள். வீட்டில் அன்னபூரணி சதா புலம்பியபடியே இருந்தார். ரிஷி செய்த தவறு அவருக்கு இப்போது மறந்து போனது. பாஸ்கர் நேற்று தங்கள் வீட்டுக்கு வந்து நடந்த கொண்ட முறையை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

“எவ்வளவு தைரியம் இருந்தா மாப்பிள்ளைன்னு கூடப் பார்க்காம கையை நீட்டுவாரு அந்த மனுஷன்?!” இதையே திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பிய படி இருந்தார். ஒரு கட்டத்தில் பாண்டியன்,

“பூரணி! நீ கொஞ்சம் வாயை மூடுறியா?” என்று ஒரு அதட்டல் போட்ட பிற்பாடுதான் லேசாக அடங்கினார். அப்போதும் சேலைத் தலைப்பால் முகத்தை அடிக்கடி துடைத்துக் கொண்டார். ரிஷிக்கு தன் அன்னம்மாவை அப்படிப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரு பத்து மணி போல காலிங் பெல் அடிக்கவும் அன்னபூரணி எழுந்து போனார். ரிஷி கூட அப்போது அங்கிருந்த சோஃபாவில்தான் அமர்ந்திருந்தான். 

‘யார் வருகிறார்கள்?!’ என்று ரிஷி வாசலைப் பார்க்க அன்னபூரணியின் குரல் ஓங்கி ஒலித்தது.

“வாடிம்மா, வா! என்ன? உங்கப்பன் அனுப்பி வெச்சானா? நான் நேத்துப் போய் ஒரு கன்னத்துல அறைஞ்சு வெச்சேன், இன்னைக்கு நீ போய் இன்னொரு கன்னத்துல அறைஞ்சு வெய்யின்னு அனுப்பினானா?” அன்னபூரணியின் வார்த்தைகள் ரிஷியின் காதிலும் விழ சட்டென்று எழுந்து போனான். வாசலில் அகல்யா நின்றிருந்தாள். அவள் உள்ளே வருவதற்கு வழி கூட விடாமல் அன்னபூரணி வழியை மறைத்துக்கொண்டு தர்க்கம் புரிந்து கொண்டிருந்தார். ரிஷி தன் பெரிய தாயைச் சற்று அப்பால் இழுத்தான்.

“அன்னம்மா! என்னப் பண்ணுறீங்க நீங்க?!”

“நீ போடா அந்தப் பக்கம்!” தங்கை மகன் மேல் பாய்ந்தார் அன்னபூரணி.

“வீட்டுல யாருக்கும் தெரியாம வந்திருக்கேன் அத்தான்.” நடுங்கிய குரலில் அகல்யா சொல்லவும் ரிஷி அன்னபூரணியை தன் பக்கம் முழுதாக இழுத்துக் கொண்டு இளையவள் உள்ளே வர வழிவிட்டான். 

“ரோட்டுல போறவங்க வர்றவங்க எல்லாருக்கும் நம்ம வீட்டு விஷயம் தெரியணுமா அன்னம்மா? ஏன் இப்பிடி நீங்களும் என்னைக் கஷ்டப்படுத்துறீங்க?” ரிஷியின் கலங்கிய குரலைக் கேட்டு அன்னபூரணி சற்று நிதானித்தார்.

“உள்ள வா அகல்யா.”

“ம்…” தலையை ஆட்டியபடி உள்ளே வந்தது பெண்.

“க்ளாஸுக்கு வந்தியா?”

“இல்லைத்தான், ஒரு செமினார் இருக்கு…”

“ஓ… செமினாருக்கு போகலையா?”

“உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“அதான் பார்த்துட்டே இல்லை, நீ கிளம்பு.” இது அன்னபூரணி.

“அத்தை…”

“யாருடி அத்தை? யாருக்கு யாரு அத்தை? உங்கப்பன் என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கான்? எங்க வீட்டுக்கே வந்து மாப்பிள்ளைன்னு கூடப் பார்க்காம கையை நீட்டுவான், உனக்கு இனிமேலும் நான் அத்தையா?”

“அத்தான்!” இரண்டாவது முறையும் சொல்லப்பட்ட அந்தச் சேதி அகல்யாவின் மூளையில் அப்போதுதான் உறைக்க அதிர்ந்து போனாள்.

“இனி அத்தானும் இல்லை, பொத்தானும் இல்லை, நீ இடத்தைக் காலி பண்ணு, போய் சொல்லு அவளுக்கிட்ட, இனி புருஷன்னு சொல்லிக்கிட்டு இங்க யாராவது வந்தாச் செருப்புப் பிஞ்சிடும்னு, வீட்டுக்குள்ள ஊமைக் கொட்டான் மாதிரி உட்கார்ந்துக்கிட்டு அப்பனை அனுப்பி இருக்காளா ரௌடித்தனம் பண்ண?!” அன்னபூரணி வாய்க்கு வந்த படி பவித்ராவை திட்டினார்.

“அன்னம்மா… ப்ளீஸ்…” அன்னபூரணியின் வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழ ரிஷி வாயைத் திறந்தான். நல்லவேளையாக வெளி வேலையாகப் போயிருந்த சாரங்கனும் காயத்ரியும் அப்போது உள்ளே நுழைந்தார்கள். தன் தாயின் குரல் வீதி வரைக் கேட்ட போதே காயத்ரிக்கு புரிந்து போனது, வீட்டில் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு நடக்கின்றது என்று.

“அம்மா! நீ கொஞ்ச வாயை மூடுறியா? நாலு தெருவுக்கு அங்கால கேட்குது உன்னோட குரல்!” வந்ததும் வராததுமாக அன்னையை அடக்கினாள் காயத்ரி. ஆனால் அன்னபூரணி அடங்கவில்லை.

“அத்தை ப்ளீஸ்… நம்ம வீட்டு விஷயம் நாலு பேருக்குத் தெரியணும்னு அவசியம் இல்லை, கொஞ்சம் பொறுமையா இருங்க.” சாரங்கன் இப்போது பேசினான்.

“என்னால தாங்க முடியலை மாப்பிள்ளை.” கண்ணீர் மல்க அன்னபூரணி அழுதபோது ரிஷி தன் பெரிய தாயை  அணைத்துக் கொண்டான்.

“உட்காரு அகல்யா.” காயத்ரி சொல்லவும் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு அமர்ந்தது பெண். 

“நீங்க பேசிக்கிட்டு இருங்க.” அகல்யாவை பார்த்துச் சொல்லிவிட்டு காயத்ரி தன் அம்மாவையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்கட்டுக்குப் போய்விட்டாள்.

“ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்தர்றேன் மாப்பிள்ளை.” சாரங்கனும் நாகரிகமாக அப்பால் நகர்ந்து விட்டார். இப்போது ரிஷி அகல்யாவை பார்த்துப் புன்னகைத்தான். உயிர்ப்பே இல்லாத அந்தப் புன்னகையைப் பார்த்த போது இளையவளுக்கு வலித்தது.

“அக்கா எப்பிடி இருக்கா அகல்யா?”

“ம்… ஏதோ இருக்கா அத்தான்.”

“நான் இங்க வந்திருக்கிறது அக்காக்குத் தெரியுமா?”

“தெரியும்.”

“ஓ…” 

“நேத்து அப்பா… இங்க வந்து…” அகல்யா மேலே பேச முடியாமல் தடுமாறினாள். கண்களில் நீர் திரண்டது. ரிஷி பதிலேதும் சொல்லாமல் அமைதியாகப் புன்னகைத்தான்.

“சாரி அத்தான்.”

“நேத்து இங்க வந்தது பவித்ராவோட அப்பா… அதால பரவாயில்லை.” இது அவன் பெருந்தன்மை.

“………..” வீடு வரை வந்துவிட்ட அகல்யாவுக்கு ரிஷியிடம் என்னப் பேசுவதென்று புரியவில்லை. பவித்ரா இலங்கைக்கு வந்த நாளிலிருந்து அவர்கள் வீட்டில் என்னென்னவோ நடக்கின்றன. அப்பா தினமும் கோபமாகச் சத்தம் போடுகிறார். யார் மேல் எரிந்து விழுகிறார், யாரைத் திட்டுகிறார் என்று எதுவுமேப் புரியவில்லை.

அம்மா ஆரம்பத்தில் அழுது புலம்பியவர் இப்போதெல்லாம் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டவர் போல அமைதியாக இருக்கிறார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல இருந்தது பவித்ராவின் நடவடிக்கைகள். அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி, புலம்பி… என்று எதுவும் இல்லாமல் அவள் போக்கில் அவளது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

வீட்டில் இருக்கும் மற்றைய மூன்று பெண்களுக்கும் தங்கள் அக்கா தன் கூடவே அழைத்து வந்திருந்த குழந்தையைப் பார்த்த போது ஆரம்பத்தில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் இரண்டொரு நாட்கள் செல்லச் செல்ல அந்தக் குழந்தையின் அழகும் அது தங்கள் அக்கா மேல் வைத்திருந்த பாசமும் அவர்களுக்கு விந்தையான விஷயமாக இருந்தது.

தன் தாய் பவித்ராதான் என்பது போல அந்தக் குழந்தை நடந்து கொண்டதைப் பார்த்து ஆரம்பத்தில் ஒதுங்கிப் போன ரேணுகா கூட பிற்பாடு ஆச்சரியப்பட்டார்.

“அகல்யா!” ரிஷியின் அழைப்பில் திகைத்து நிமிர்ந்தாள் இளையவள்.

“ஏதோ பேச வந்திருக்கேன்னு தெரியுது, ஆனாப் பேசாமலேயே உட்கார்ந்திருக்க.”

“அத்தான்…”

“சொல்லும்மா, எதுவா இருந்தாலும் அத்தான்கிட்ட நீ பேசலாம்.”

“அக்கா… அக்காவும் நீங்களும் சேர்ந்து வாழுவீங்கல்லை?” தயங்கிய படியேக் கேட்டது பெண்.

“அதுலென்ன சந்தேகம் உனக்கு அகல்யா?”

“அப்பா இப்பிடியெல்லாம் நடந்துக்கிட்டதுக்குப் பிறகு… உங்க வீட்டுல… இங்க…”

“உங்கப்பா இடத்துல நான் இருந்திருந்தாலும் இப்பிடித்தான் நடந்திருப்பேன், அதை நீ பெரிசு படுத்தாதே.”

“ஆனா எங்க வீட்டுல… அப்பா…”

“சொல்லு, என்ன சொல்றாரு?”

“தினமும் அக்காவோட வாக்குவாதம் பண்ணுறாரு.”

“என்னன்னு?”

“குழந்தையை உங்கக்கிட்டக் குடுத்துட்டு வரணுமாம்.”

“ம்…”

“அக்காக்கு… அக்கா…”

“பரவாயில்லை சொல்லு அகல்யா, எங்கிட்ட என்னத் தயக்கம்?”

“அக்காக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கப் போறாராம்.”

“ஓ… அம்மா என்ன சொல்றாங்க?”

“அம்மாக்கும் சேர்த்துத்தான் அப்பா பேசுறாரே! அம்மா வாயைத் திறக்கிறதே இல்லை.”

“ம்… பவி ஏதாவது பேசுவாளா?”

“ம்ஹூம்… அக்காவோட உலகமே இப்போ அந்தக் குட்டிப் பையன்தான்.” இதைச் சொல்லும்போது அகல்யாவின் முகத்தில் லேசான சங்கடம் உண்டானது.

“அகல்யா…”

“சொல்லுங்கத்தான்.”

“உனக்கு எப்பிடி என்னோட நிலைமையைச் சொல்றதுன்னு எனக்குப் புரியலை, நான் தப்பானவன் கிடையாதும்மா, நான் வாழ்ந்த நாடு வேற, இங்க தப்பாத் தெரியுற ஒரு சில விஷயங்கள் அங்க ரொம்பச் சாதாரணம்…”

“…………”

“அதுக்காக நான் பண்ணினதை நான் சரின்னு சொல்ல வரலை.”

“புரியுது அத்தான்.”

“எனக்குத் தெரியாமலேயே என்னைச் சுத்தி என்னென்னவோ நடந்திருக்கு, அங்க எப்பிடி வேணும்னாலும் வாழலாம், ஆனா… துணைன்னு ஒன்னு வந்துட்டா அதுக்கு நியாயம் பண்ணணும்னு நினைப்பாங்க… நானும் அதே போக்குல வாழ்ந்துட்டேன்.”

“……….”

“எனக்கு பவித்ராவை பார்க்கும் வரைக்கும் இந்தக் காதல், கல்யாணத்துல எல்லாம் ஆசை வரலை அகல்யா, என்னோட வாழ்க்கையில அதுக்கெல்லாம் இடமில்லைன்னு நினைச்சிருந்தேன்.”

“போனது போகட்டும் விடுங்கத்தான்.”

“நீங்க யாரும் இந்த அத்தானை வெறுத்துடக் கூடாது.” ரிஷி இப்போது லேசாகக் கலங்கினான். அகல்யாவிற்கு சங்கடமாகிப் போனது.

“ஆரம்பத்துல வருத்தம் இருந்தது உண்மைதான் அத்தான், நான் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்.”

“ம்… இப்போ?”

“அத்தான் தப்பானவங்க இல்லைன்னு மனசு சொல்லுது.”

“அத்தான் தப்பானவன் இல்லைம்மா.” ரிஷி அழுத்திச் சொன்னான்.

“அக்காவை எப்போ வந்து பார்க்கப் போறீங்க அத்தான்?”

“உங்கப்பா என்னைப் பாத்தா வெட்டிப் போட்டிருவாரே?”

“அதுக்காக இப்பிடியே இருந்திட முடியுமா?”

“அதுவும் சரிதான்.”

“ஏதாவது பண்ணுங்க அத்தான்.”

“அக்கா ஏதாவது பேசினாளா உங்கிட்ட?”

“ம்ஹூம்… அவ உண்டு, ஹரி உண்டுன்னு இருக்கா அத்தான்.”

“ம்…” ரிஷி அகல்யா சொன்ன அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான். பவித்ராவின் மனதில் இருப்பது என்ன என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆனால் செமினாருக்கென்று கிளம்பிப் போன பெண் மதியம் போல வீடு திரும்பவும் வீட்டிலிருந்த அத்தனைப் பேரும் திகைத்துப் போனார்கள்.

“என்னாச்சு அகல்யா? ஏன் சீக்கிரமாவே வந்துட்டே? உடம்புக்கு முடியலையா?” ரேணுகா கேட்டார்.

“அப்பா ஸ்கூல்ல இருந்து இன்னும் வரலையில்லை?” தந்தை எங்கே இருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டது பெண்.

“இல்லை, என்னடி ஆச்சு?” ரேணுகா பதறினார்.

“இப்போ பதறுங்க, நேத்து இந்த அப்பா என்னப் பண்ணி இருக்காங்கத் தெரியுமா?”

“என்ன?” ரேணுகாவிற்கு எதுவோச் சரியில்லை என்று தோன்றியது. கடைக்குட்டி தர்ஷினி பாடசாலைக்குப் போயிருந்தாள். ஆனால் பைரவி வீட்டில்தான் இருந்தாள்.

“நினைச்சேன், நான் நேத்தே நினைச்சேன், இந்த அப்பா எதுக்கு இவ்வளவு ஆவேசமாக் கிளம்பிப் போறாங்கன்னு! அங்கப் போய் அத்தான் கூட சண்டைப் போட்டாங்களாமா?” இது பைரவி.

“சண்டைப் போட்டாக்கூடப் பரவாயில்லை பைரவி, அத்தானை கை நீட்டி அடிச்சிருக்காங்க அப்பா!”

“என்ன?!”

“ஐயையோ!” எந்த வார்த்தை முதலில் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆளாளுக்குத் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

“என்னடீ சொல்றே?!” ரேணுகாவின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. 

“எதுக்கு இப்போ நீங்க அழுறீங்க? அக்கா இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து அப்பா ஆடுற ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை, நீங்களும் அதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கீங்க!”

“நான் வேற என்னப் பண்ணுறது பைரவி?” 

“அப்பாவை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லலாமில்லை?”

“உங்கத்தான் மேல தப்பிருக்கு பைரவி, அப்பாவோட கோபம் நியாயமானதுதானே?”

“அதுக்காக அத்தானை கைநீட்டி அடிக்கிற அளவுக்குப் போகலாமா?” அம்மாவும் இளைய பெண்கள் இருவரும் இவ்வளவு வாக்குவாதம் பண்ணும் போதும் பவித்ரா அங்கேதான் அமர்ந்திருந்தாள். ஹரி உறங்கிக் கொண்டிருந்ததால் அவளும் விச்ராந்தியாக அங்கேதான் அமர்ந்திருந்தாள். ஆனால் தங்கை சொன்ன விஷயங்களைக் கேட்ட போது அவள் முகத்தில் ஈயாடவில்லை.

“அந்த அன்னபூரணி அத்தை எவ்வளவு நல்லவங்க! எப்பப் போனாலும் வாய் நிறைய வாம்மா ன்னு எத்தனை அன்பா ஆதரிக்கிற மனுஷி, இன்னைக்கு என்னை நிக்க வெச்சுக் கேள்வி கேட்டாங்க.” அகல்யா புலம்பினாள்.

“அதோட விட்டாங்களேன்னு சந்தோஷப்படு க்கா.”

“அதோட விடல்லை பைரவி, அப்பாவை அனுப்பி வெச்சுட்டு அங்க ஊமைக்கொட்டான் மாதிரி இருக்கிறவ இனி புருஷன்னு சொல்லிக்கிட்டு இங்க வந்தாச் செருப்புப் பிஞ்சிடும் ன்னு சொன்னாங்க!” அகல்யா எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இன்றைக்கு நடந்ததை அப்படியேச் சொன்னாள்.

அவளுக்குமேத் தன் அக்கா இப்படி அப்பாவை ஆடவிட்டு வேடிக்கைப் பார்ப்பது பிடிக்கவில்லை. தங்கைகளுக்கும் அவர்களின் பிரியத்திற்குரிய அத்தான் மேல் ஆரம்பத்தில் கோபம் இருந்தது. இளைய தலைமுறை என்பதாலோ என்னவோ அவர்களால் நடந்தவற்றை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.

“அத்தான் பண்ணினது தப்புத்தான் அகல்யா க்கா, ஆனா இதெல்லாம் வெளிநாட்டுல சகஜம்தானே?” பைரவி அப்போது இப்படித்தான் சொன்னாள்.

“அதுக்காக இது சரியா பைரவி? கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி நடந்துக்கிறது சரிங்கிறியா?” 

“நான் சரின்னு சொல்லலை அகல்யா க்கா, ஆனா இப்பெல்லாம் லிவிங் டுகெதர் ரொம்ப சாதாரணமா நடக்குது, இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம நாட்டுலயே இதெல்லாம் சின்ன விஷயம் ஆகிடும்.”

“என்ன பைரவி சொல்றே?”

“ஆமா க்கா, இங்க திரியுறவன் எவன் நல்லவன்னு நினைக்கிறே? எல்லாரும் எல்லாத்தையும் பண்ணிட்டு ராமன் வேஷம் போடுறவங்கதான்.”

“என்னடீ வயித்துல புளியைக் கரைக்கிற?!”

“என் ‘பேட்ச்’ ல சில பசங்களோட சொந்தக்காரங்க ஃபாரின் ல இருக்காங்க, அவனுங்க கதை கதையாச் சொல்லுவானுங்க.”

“அப்பிடியா?!”

“ம்… இதெல்லாம் அங்கே ஒன்னுமே இல்லையாம்.”

“என்னால இதையெல்லாம் சட்டுன்னு ஏத்துக்க முடியலை பைரவி.”

“அக்கா, இப்பிடி யோசிச்சுப் பாரு, இங்கப் பொறந்து வளர்ந்தப் பசங்களே இதையெல்லாம் சுலபமா ஏத்துக்கும் போது அத்தானுக்கு இது பெரிய விஷயமா? சும்மா ஜாலியா பழகி இருக்கலாமில்லை?”

“என்ன ஜாலியோ!”

“தப்புப் பண்ணினது அந்தப் பொண்ணு, ஆனா நாம அத்தானை குறைச் சொல்றோம்.”

“அது கரெக்ட்தான்.”

“கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமா அத்தான் இப்பிடி நடந்திருந்தா நாம அத்தானை நிக்க வெச்சுக் கேள்வி கேட்கலாம்.”

“ம்…”

“பவித்ரா க்கா மேல அத்தான் வெச்சிருக்கிற பாசம் பொய்யுன்னு நீ நினைக்கிறியா க்கா?”

“ஐயையோ! இல்லையில்லை… அப்பிடிச் சொன்னா அது மகா பாவம்.”

“அந்த மனுஷன் இவ மேல பைத்தியமா இருக்காரு, அதான் இவ இங்க வந்த உடனேச் சொன்னதையெல்லாம் நீயும் கேட்டேயில்லை, அந்த மனுஷன் இவ போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடி இருக்காரு.”

“ம்…”

“வேற யாருமா இருந்திருந்தா இந்நேரத்துக்கு சரிதான் போடி ன்னு போயிருந்திருப்பாங்க.” 

 இப்படித்தான் பவித்ரா இலங்கை வந்த ஆரம்பத்தில் தங்கைகள் பேசிக் கொண்டார்கள். ஆனால் இப்போது அது ரிஷியால் ஊர்ஜிதப் படுத்தப் பட்டிருந்தது. ரிஷி தன் மனைவி மேல் எத்தனைப் பாசம் வைத்திருக்கிறான் என்பதை இப்போது அங்கிருந்த பெண்கள் நால்வரும் ஐயமற புரிந்து கொண்டார்கள்.

“அத்தானோட நீ பேசினியா அகல்யா க்கா?”

“ஆமா.” இப்போது ரேணுகாவும் பவித்ராவும் சட்டென்று அகல்யாவை பார்த்தார்கள்.

“என்ன சொன்னாங்க? கோபப்பட்டாங்களா?”

“இல்லையே! அப்பா நடந்துக்கிட்ட முறைக்கு நான் சாரி சொல்றேன், வந்தது பவித்ராவோட அப்பா, அதால பரவாயில்லை ன்னு சொல்றாரு அந்த மனுஷன்.” 

“ஓ…”

“உங்கப்பாவோட நிலைமைல நான் இருந்திருந்தாலும் இப்பிடித்தான் நடந்திருப்பேன் அகல்யா ன்னு சொல்றாரு.”

“சரியான லூசா இருப்பாரோ?!”

“அப்பிடித்தான் தெரியுது, ஆனா இனி அன்னபூரணி அத்தை சும்மா இருப்பாங்கன்னு எனக்குத் தோணலை, ஆடித் தீர்த்துட்டாங்க.”

“யாராவது ஒருத்தருக்காவது கோபம் வரணுமில்லை! வேற யாரும் வீட்டுல இருக்கலையா?”

“காயத்ரியும் அவங்க வீட்டுக்காரரும் எங்கயோ வெளியே போய் அப்பதான் வீட்டுக்குள்ள வந்தாங்க, பாண்டியன் மாமா இல்லைப் போல.”

“ஓ… அவங்க ஏதாவது சொன்னாங்களா?”

“இல்லை… அத்தை சத்தம் போடவும் அவங்களைத்தான் திட்டினாங்க, நீங்க பேசுங்கன்னு சொல்லிட்டு உள்ளேப் போய்ட்டாங்க.”

“இங்க யாரு மாப்பிள்ளை வீடு, யாரு பொண்ணு வீடுன்னே எனக்கு டவுட்டா இருக்கு!” இளையவர்கள் இருவரும் இப்போது உள்ளேப் போய்விட்டார்கள்.

ரேணுகா மகளின் முகத்தைப் பார்த்தார். அதில் சிந்தனையே விரவிக் கிடந்தது. மகளின் வாழ்வைப் பற்றிய கவலை மிதமிஞ்சி இருந்தாலும் முடிவெடுக்க வேண்டியவள் அவள்தான் என்பதால் அமைதியாக நகர்ந்து விட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!