kkavithai21

கவிதை 21

பவித்ரா அன்று முழுவதும் ஆழ்ந்த சிந்தனையிலேயே  இருந்தாள். குழந்தையைக் கூட அவள் சரிவர கவனிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அகல்யா தன் கணவனைப் பார்த்துவிட்டு வந்து சொன்ன சேதிகள் பெண்ணைப் புரட்டிப் போட்டிருந்தன. தன் அப்பா ரிஷியிடம் இந்த விதத்தில் நடப்பார் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

ரிஷி தவறு செய்திருக்கிறான், அதை அவள் மறுக்கவில்லை. ஆனால் அவனைக் கை நீட்டி அடிக்க அப்பாவிற்கு என்ன உரிமை இருக்கிறது?! அப்பா அவனைக் கை நீட்டி அடித்தது தவறென்றால், அடியை வாங்கிக் கொண்டு ரிஷி இவ்வளவு தூரம் அமைதியாக இருப்பது பெண்ணுக்கு இன்னும் வலித்தது.

தன் ஒருத்திக்காக ரிஷி இத்தனை அவமானங்களைத் தாங்க வேண்டுமா பவித்ராவிற்கு கொஞ்சம் அழுதால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. குழந்தையைப் பற்றித் தெரிய வந்தது முதல் பவித்ரா எல்லாவற்றையும் தெளிவாக யோசித்தே முடிவெடுத்தாள். 

ஆரம்பத்தில் ரிஷி அவற்றிற்கு மறுப்புத் தெரிவித்தாலும் பிற்பாடு எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்தான். குழந்தையைத் தத்தெடுப்பதிலிருந்து தாய் நாட்டிற்குத் தனியாக வருவது வரை அனைத்தும் பவித்ரா எடுத்த முடிவுதானே. முடிவென்று எடுத்த பிற்பாடு பவித்ரா எதற்கும் தயங்கவில்லை. அந்தக் குழந்தைக்கு எந்த அங்கீகாரத்தை அவள் கொடுக்க நினைத்தாளோ அதை எல்லா இடத்திலும் சரிவர நிறைவேற்றினாள்.

ஆரம்பத்தில் இலங்கை வந்த போது சுற்றிவர இருந்த அத்தனைப் பேரும் குழந்தையைப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் பவித்ரா பதில் சொல்லத் தயங்கவில்லை. வீட்டிலிருந்த அனைவரும் அந்தக் குழந்தையை ஒரு அவமானச் சின்னமாகப் பார்த்த போது பவித்ரா நிமிர்ந்து நின்றாள்.

“இந்தக் குழந்தை அத்தானோடதுதான் மாமி.” பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்டபோது மறைக்காமல் உண்மையைச் சொன்னாள்.

“என்னடீ பவித்ரா சொல்றே?!” ஆச்சரியமாக ஊர் வம்புக்கு அலைந்தவர்கள் கேள்வி கேட்ட போது அதற்கும் அவளிடம் பதிலிருந்தது.

“அத்தானுக்குக் குழந்தை இருக்கிறது எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியேத் தெரியும், ஆனா வீட்டுல யாருக்கிட்டயும் நான் சொல்லலை, சொல்லி இருந்தா இந்தக் கல்யாணப் பேச்சையே எடுத்திருக்க மாட்டாங்களே மாமி!”

“உண்மையாத்தான் சொல்றியா பவித்ரா?!”

“ஆமா மாமி, பார்த்த உடனேப் பிடிச்சுப் போச்சு, அப்போ கூட அத்தான் எங்க வீட்டுல உண்மையைச் சொல்லலாம்னு ஒத்தக் கால்ல நின்னாங்க, ஆனா நான் சம்மதிக்கலை, நம்ம வீட்டைப் பத்தி நமக்குத் தெரியாதா மாமி?” தன்னைக் கேள்வி கேட்ட சுற்றத்தாருக்கு அழகாகப் பதில் சொன்னது பெண். ரேணுகா கூட மகள் சொன்ன கதையில் ஆடிப்போய் விட்டார்.

“என்ன பைரவி உங்கக்கா இப்பிடிப் பொய் சொல்றா?!” ரேணுகா வாயைப் பிளந்தார்.

“விடும்மா, அக்கா தெளிவாத்தான் இருக்கா, எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணித்தான் பண்ணுறா.” 

பவித்ரா போட்ட நாடகம் சுற்றி வர இருந்த சுற்றத்தார்கள், உற்றார் உறவினர்களால் ஏகமனதாக ஏற்கப்பட்டது.

“அது சரி, என்னதான் ஆசைப்பட்டாலும் உண்மையை மறைச்சுக் கல்யாணம் பண்ணினா பாஸ்கருக்கு கோபம் வரத்தானே செய்யும்? அதான் அடிக்கடி சத்தம் போடுறாரு.” பக்கத்து வீடு இப்படிச் சொன்னது.

“பாஸ்கர் எத்தனை அமைதியான மனுஷன்! இப்பிடிப் பண்ணினா அந்த மனுஷனுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? ஆனாலும் குழந்தை வெள்ளைக்கார துரை மாதிரி அவ்வளவு அழகா இருக்கான்.” இது முன் வீடு. பவித்ரா வீட்டுச் சங்கதியை இரண்டு வாரங்கள் மென்றுவிட்டு அடுத்த தெருவில் நடந்த இன்னொரு சேதியைப் பார்க்கப் பக்கத்து வீடும் முன் வீடும் போய் விட்டது. பவித்ரா எதிர்பார்த்ததும் இதைத்தானே! ரிஷியை தன்னோடு அவள் வர வேண்டாம் என்று தடுத்ததும் இதற்காகத்தான்.

இந்தக் கால தாமதம் சில விஷயங்களை மக்கள் மறந்து போக அவளுக்குத் தேவைப் பட்டது. எல்லாம் பவித்ரா நினைத்தது போலத்தான் நடந்தது. ஆனால் ரிஷி இப்படித் திடீரென்று வந்து குதிப்பான் என்று மட்டும் அவள் எதிர்பார்க்கவில்லை. அன்று மாலை பாஸ்கர் பாடசாலையிலிருந்து வந்து ஓய்வு எடுக்கும் வரை பவித்ரா தன் தந்தையிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அன்றிரவு பேசினாள்.

“அப்பா…” சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பாஸ்கர் அண்ணார்ந்து பார்த்தார். பவித்ரா நின்றிருந்தாள்.

“சொல்லும்மா பவி.”

“நேத்து அத்தை வீட்டுக்குப் போயிருந்தீங்களா?” அந்தக் கேள்வியில் பாஸ்கரின் முகம் கடுகடுவென மாறிப் போனது.

“சொல்லுங்கப்பா, போனதோட நிறுத்தாம அத்தானை கை நீட்டி அடிச்சிருக்கீங்க, என்னப்பா இதெல்லாம்?” பவித்ரா அப்பாவை கேள்வி கேட்கும் போது அத்தனைப் பேரும் ஹாலில் கூடி விட்டார்கள்.

“பவி, அந்தப் பொறுக்கியைப் பத்தி இந்த வீட்டுல இனிப் பேசாதே.”

“அப்பா, அவரு உங்க மருமகன் ப்பா.” பவித்ரா இதைச் சொன்ன போது பாஸ்கர் சாய்வு நாற்காலியை உதைத்துத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

“அந்த வார்த்தையை இன்னொரு தடவைச் சொல்லாதே, யாரு யாருக்கு மருமகன்?”

“……….” 

“இங்கப்பாரு பவித்ரா, இந்தக் குழந்தையை அதைப் பெத்தவனோட கையில குடுத்திட்டு வா, நடந்தது அத்தனையையும் துடைச்சுப் போட்டுட்டு அப்பா உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்.”

“என்னங்க பேச்சு இது?!” ரேணுகா இப்போது கணவரின் பேச்சை ஆட்சேபித்தார்.

“என்னோட பேச்சுக்கு எதிர் பேச்சுப் பேசுற யாரா இருந்தாலும் அவங்க தாராளமா இந்த வீட்டுக்கு வெளியே போய் நின்னுப் பேசலாம்.” பாஸ்கர் பொதுப்படையாகப் பதில் சொன்னார். ஆனால் அந்தப் பேச்சில் அனைவருக்குமான பதில் இருந்தது. இருந்தாலும் பவித்ரா அசைந்து கொடுக்கவில்லை.

“தப்பாப் பேசுறீங்க ப்பா, நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதா எப்போ சொன்னேன்?”

“நான் சொல்றேன் பவி, அப்பா சொல்றதைக் கேளும்மா, இந்தக் கல்யாணத்தை நான்தான் உனக்குப் பண்ணி வெச்சேன், யாரோட கண்ணுப் பட்டுச்சோ, அது இப்பிடி நாசமாப் போச்சு, தலை முழுகிடு ம்மா.”

“அப்பா… திரும்பத் திரும்பத் தப்பாவேப் பேசுறீங்க, நான் எடுத்த சில முடிவுகளுக்கு அத்தான் சம்மதிக்காதப்போ அத்தானைத்தான் நான் ஒதுக்கினேனே தவிர என்னோட முடிவுகளை மாத்திக்கலை ப்பா.” பவித்ராவும் தன் தந்தையைப் போல நாசூக்காகப் பேசிவிட்டு உள்ளேப் போய்விட்டாள். 

என் பேச்சைக் கேட்காதவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேப் போகலாம் என்று பாஸ்கர் மறைமுகமாகச் சொல்ல, என் முடிவுகளை மறுப்பவர்களை நான் ஒதுக்கி வைப்பேன் என்று மகளும் சொல்லி விட்டாள். நெற்றியில் சிந்தனை முடிச்சுகள் விழ பாஸ்கர் அமைதியாக வெளியே வீதிக்கு நடந்தார். ரேணுகா மலைத்துப் போய் நின்றுவிட்டார். 

அகல்யாவும் பைரவியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். தர்ஷினி வீட்டில் நடக்கும் எதுவும் புரியாமல் மலங்க விழித்தபடி நின்றிருந்தாள்.

***

அடுத்த நாள் காலை வீடே அமைதியாக இருந்தது. பவித்ரா எங்கோ வெளியேக் கிளம்பவும் ரேணுகா மகளின் அறைக்கு வந்தார்.

“அம்மா, நான் கொஞ்சம் வெளியேப் போயிட்டு வர்றேன், ஹரியை பார்த்துக்கோங்க.”

“ம்…” தலையாட்டிய ரேணுகா தயங்கிய படி அங்கேயே நிற்கவும் பவித்ரா அம்மாவைப் பார்த்தாள். அம்மாவின் மனதில் ஓடுவது என்னவென்று பெண்ணுக்குப் புரிந்தது.

“அத்தானைத்தான் பார்க்கப் போறேன் ம்மா.” தானாகவே தகவல் சொன்னது பெண்.

“பவி…”

“சொல்லுங்க ம்மா.”

“அப்பா கோபத்துல நியாயம் இருந்தாலும் அவரு பண்ணுறது, பேசுறது எல்லாம் சரின்னு நான் சொல்ல மாட்டேன் ம்மா.” 

“…………..”

“உன்னோட புருஷன் தப்புப் பண்ணி இருக்காரு, நான் இல்லேங்கலை, ஆனா அவர் தப்பானவர் இல்லைன்னு எனக்குத் தோணுது.”

“அத்தான் தப்பானவர் ன்னு நானும் சொல்லலையே ம்மா!”

“சொல்லலை, ஆனா காயம்பட்ட உன்னோட மனசு எவ்வளவு வேதனைப்படும் ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது பவி.” இதை அம்மா சொன்ன போது மகளின் கண்கள் குளமானது.

“அழாதே, நீ தைரியமா முடிவெடுக்க வேண்டிய நேரம் இது, வீணாக் கலங்கி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே.”

“…………”

“என்னதான் இந்த உலகத்துல பெண்ணியம் பேசினாலும் பொண்ணுங்க சில இடங்கள்ல விட்டுக் குடுக்கத்தான் வேண்டி இருக்கு.”

“என்னோட விஷயத்துல இதுவரைக்கும் நான் எதையும் விட்டுக் குடுக்கலை ம்மா, அத்தான்தான் விட்டுக் குடுத்திருக்காங்க.”

“கரெக்ட், அதைத்தான் நானும் சொல்றேன், உம் புருஷன் தான் தப்புப் பண்ணிட்டோம் எங்கிற காரணத்துக்காக ரொம்பவே பணிஞ்சு போறார் ன்னு எனக்குத் தோணுது பவி.” 

“ம்…”

“உண்மையைச் சொன்னா, உன்னோட கல்யாணத்துல எனக்கு ஆரம்பத்துல அவ்வளவு விருப்பம் இருக்கலை பவி, ஆனா… மாப்பிள்ளை உன்னோட வாழ்ந்த வாழ்க்கையை எங்கண்ணால நானே பார்த்தேனே!”

“ம்…” இப்போது பவித்ராவின் முகம் மலர்ந்தது.

“கொஞ்ச நாள்தான்னாலும் அது எனக்குப் போதாதா? அந்தப் புள்ளையோட மனசை எடை போட?”

“ரொம்பப் பாசமானவங்க ம்மா.”

“அது எனக்கும் தெரியுது, உங்கப்பாக் கை நீட்டின பிறகும் அமைதியா இருக்காங்கன்னா… அது உனக்காக மட்டுந்தான் பவி.”

“ம்…”

“தப்பு நடந்து போச்சு, பெரிய தப்புத்தான், இல்லேங்கலை… அதால உம்மனசு எவ்வளவு வேதனைப்படும்னும் என்னால புரிஞ்சுக்க முடியுது, ஆனா இதோட வாழ்க்கை முடிஞ்சு போயிடாதுடி.”

“………..”

“நான் தப்புப் பண்ணிட்டேன் பவி ன்னு உங்கிட்ட மன்னிப்புக் கேட்கிற புருஷனை மன்னிச்சு நீ நல்லதா ஒரு வாழ்க்கை வாழப் போறியா? இல்லை… நீ செஞ்ச தப்பை என்னால மன்னிக்க முடியாதுன்னு ஒத்தையா நிற்கப் போறியா?”

“…………”

“இந்த ரெண்டு கேள்வி மட்டுந்தான் உம் முன்னால இப்போ இருக்கு பவி, அதை விட்டுட்டு அப்பா சொல்ற மாதிரி… தூக்கிப் போட்டுட்டு வா, இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்… இதெல்லாம் இந்த வீட்டுல நடக்காது பவி.”

“அப்பா ஏதோவொரு ஆதங்கத்துல பேசுறாங்க ம்மா.” இப்போது பவித்ரா சிரித்தாள்.

“இருக்கலாம், உங்கப்பாக்கிட்ட என்னால பேச முடியலை, கோபப்படுறாரு, கத்துறாரு… ஆனா எம்மனசுல இருக்கிறதை நான் உங்கிட்டச் சொல்லணும் இல்லை?”

“ம்…”

“நல்லா யோசிச்சு முடிவெடு, இது உன்னோட வாழ்க்கை, இனி நீ உம் புருஷனோட சேர்ந்து வாழ்ந்தாலும் சரி, தனிச்சு நின்னாலும் சரி… எதுவா இருந்தாலும் இந்த அம்மா உனக்குத் துணையா இருப்பேன்.”

“அம்மா…” ஒரு கேவலோடு அம்மாவை அணைத்துக் கொண்டாள் பெண்.

“அழாதே! தைரியமா இரு, தைரியமா முடிவெடு, யாருக்கும் எதுவுமேத் தெரியாம எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டு அமோகமா நீ ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.”

“……..”

“நீ சொல்லித்தான் இங்க அத்தனைப் பேருக்கும் எல்லாம் தெரிய வந்திச்சு.”

“மனசாட்சி ன்னு ஒன்னு இருக்கில்லை ம்மா?”

“அந்த மனசுக்கு ஆண்டவன் எல்லாத்தையும் நல்லதா நடத்திக் குடுப்பான், அப்பா மனசை நோகடிக்கிறோமே ன்னு உன்னோட வாழ்க்கையை நீ பாழாக்கிடாதே, நீ நல்லா வாழணும்னுதான் அப்பாவும் ஆசைப்படுறாங்க, நீ வாழ்ந்து காட்டு, இந்த ஊருக்கு முன்னால, பாஸ்கரோட பொண்ணு என்ன அமோகமா வாழுறா ன்னு நாலு பேரு சொல்ற மாதிரி வாழ்ந்து காட்டு, அதுதான் அப்பாக்கு நீ குடுக்கிற சந்தோஷம்.”

“புரியுது ம்மா.” 

“பத்திரமாப் போயிட்டு வா.”

அதன் பிறகு பவித்ரா தாமதிக்கவில்லை. சட்டென்று ஆயத்தமானவள் ஒரு ஆட்டோ பிடித்து அன்னபூரணியின் வீட்டிற்கு வந்து விட்டாள். ரிஷியை பார்த்துப் பல நாட்கள் ஆகின்றன. குழந்தைப் பற்றிய விஷயம் தெரிய வந்த போது ஆரம்பத்தில் அவன் மேல் வருத்தம் உண்டானது. வேதனை என்றால் என்னவென்று பெண் அப்போதுதான் முழுதாக உணர்ந்தாள்.

தன் அத்தான் தனக்கு மாத்திரமானவன் அல்ல என்ற எண்ணம் அவளைப் பந்தாடியது. அதனாலேயே அவனைச் சுலபமாக உதறிவிட்டு அவளால் ‘விட்பி’ போக முடிந்தது.

ஆனால் அங்கேயும் அவளைத் தேடி வந்து அவளுக்குச் சகாயம் பண்ணினான் ரிஷி. உண்மையிலேயே அவள் எதையெல்லாம் நடத்த வேண்டும் என்று பிரியப்பட்டாளோ, அத்தனையையும் அவன் நடத்திக் கொடுத்தான்.

எங்கே தன் மனைவி தன்னை வெறுத்து விடுவாளோ என்று ரிஷி பார்த்துப் பார்த்துச் செய்த அனைத்துக் காரியங்களும் அவளை லேசாக இளக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு அகல்யா சொன்ன சேதியை பவித்ராவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளுக்கும் அவள் கணவனுக்குமான இந்தப் பிரச்சினையில் அப்பா தலையிடலாம். ஆனால் கை நீட்டி ரிஷியை அடிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?!

அந்தச் சேதியைக் கேட்ட மாத்திரத்தில் இருந்து அவள் மனம் பதைபதைத்தது. தன்னால் தன் கணவன் இத்தனைத் தூரம் அவமானப் படவேண்டுமா என்று அவள் மனதே அவளிடம் கேள்வி கேட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் வீட்டிற்குள் போனாள். வீடு திறந்துதான் இருந்தது. பாண்டியன் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தார்.

“வாம்மா பவித்ரா.” இவளைப் பார்த்ததும் வரவேற்றார் மனிதர். அந்தச் சத்தத்தில் அன்னபூரணி புயல் போல உள்ளேயிருந்து வந்தார்.

“நில்லுடீ அங்கே! வீடு திறந்திருந்தா எது வேணும்னாலும் உள்ள வந்தர்றதா?” ஆங்காரமான பேச்சு. பவித்ரா இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் வந்திருந்தாள்.

“பூரணி!” பாண்டியன் மனைவியை அதட்டினார்.

“நீங்க யாரும் பேசக்கூடாது! இவளுக்கு இந்த வீட்டுல காலடி எடுத்து வைக்க இனி எந்த உரிமையும் இல்லை, நீ வெளியே போ!” அன்னபூரணி காட்டுக் கத்தலாகக் கத்த சாரங்கனும் காயத்ரியும் கூட உள்ளே ஏதோ வேலையாக இருந்தவர்கள் அங்கே வந்தார்கள்.

“வாம்மா பவித்ரா, காயத்ரி… நீ மச்சானைக் கூப்பிடு.” எதுவும் நடக்காதது போல பேசினான் சாரங்கன். 

“இல்லை மாப்பிள்ளை, முதல்ல இவளை வெளியேப் போகச் சொல்லுங்க!”

“என்னத்தை பேசுறீங்க? இது புருஷன், பொண்டாட்டி விவகாரம், இதுல நீங்களும் நானும் தலையிடக் கூடாது.”

“அது இவ அப்பனுக்குத் தெரிஞ்சுதா? என்ன அட்டகாசமா வந்து எம் புள்ளையை, எங் கண்ணு முன்னாலேயே கை நீட்டி அடிப்பான்?!”

“அது தப்புதான் அத்தை, அவர் பண்ணின அதே தப்பை நீங்களும் பண்ணணுமா என்ன?” 

இவர்கள் பேச்சு விவாதமாக நீண்டு கொண்டிருக்க பவித்ரா மௌனமாக நின்றிருந்தாள். இப்போது அவள் எது பேசினாலும் அன்னபூரணியிடம் அது எடுபடப் போவதில்லை. மௌனமேச் சிறந்தது என்று அமைதியாக நின்றிருந்தாள். 

“பவீ…” ரிஷியின் குரலில் சட்டென்று திரும்பினாள் பவித்ரா. மாடிப்படிகளின் முடிவில் நின்றிருந்தான் கணவன். ரிஷியின் குரல் கேட்டதும் அன்னபூரணி மீண்டும் வெடித்தார்.

“வாடா, வா! ரோஷமே இல்லாம உம் பொண்டாட்டி வந்ததும் வந்து கொஞ்சு, இவ அப்பன்தான் நேத்து உன்னை எங்க அத்தனைப் பேரு முன்னாடியும் கை நீட்டி அடிச்சான், ஞாபகமிருக்கா?”

“அன்னம்மா… ப்ளீஸ்.”

“எங்கிட்ட எதுக்குடாக் கெஞ்சுறே? முதல்ல இவளை வெளியேப் போகச் சொல்லு! இல்லைன்னா நான் என்னப் பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது!” கோபத்தின் உச்சத்தில் இருந்தார் அன்னபூரணி.

“பூரணி! நீ கொஞ்சம் வாயை மூடுறியா? பேசிப் பேசி இன்னும் பிரச்சினையைப் பெருசு பண்ணத்தான் பார்க்கிறே நீ!” 

“ஆமா! பிரச்சினை பெருசாகட்டும், இவ இனி ரிஷிக்கு தேவையில்லை!” ஒரே முடிவாக அன்னபூரணி சொல்ல பவித்ரா திகைத்துப் போனாள். 

“ரிஷி, நீ உம் பொண்டாட்டியை மேலே கூட்டிட்டுப் போ.” பாண்டியன் சொல்ல அன்னபூரணி அதை மறுத்தார்.

“ரிஷி! இதுக்கு மேலேயும் இவ உனக்கு வேணும்னு நீ நினைச்சீன்னா, இந்த அன்னம்மாவை இத்தோட மறந்திடு!” உறுதியாகச் சொல்லி விட்டு அன்னபூரணி கண்ணீரைத் துடைத்த படி உள்ளேப் போய்விட்டார்.

இப்போது திக்பிரமைப் பிடித்து நின்றது பவித்ரா மட்டுமல்ல, ரிஷியும்தான்!