kkavithai22

கவிதை 22

அன்னபூரணியின் பேச்சில் ரிஷி தவித்துப் போனான். தனக்கு ஆசையாசையாக பவித்ராவை கட்டிவைத்த அதே உறவே அவளை இன்றைக்கு வேண்டாம் என்று சொல்வது அவனுக்கு வேதனையாக இருந்தது. பவித்ராவின் நிலைமையும் சொல்லில் வடிக்க இயலாததாக இருந்தது. அன்னபூரணி ரிஷிக்கு எத்தனை முக்கியம் என்று அவள் அறிவாள். அதற்காக தன் கணவனை அவள் எப்படி அவருக்காக விட்டுக் கொடுக்க முடியும்?!

“ரிஷி, பவித்ராவை மேலே ரூமுக்கு கூட்டிட்டுப் போ.” பாண்டியன் நிலைமையைச் சுலபமாகச் சமாளித்தார்.

“பெரியப்பா… அன்னம்மா…”

“அது கோபத்துல அப்பிடி நாலு வார்த்தை பேசுறதுதான், உன்னோட அன்னம்மாவை எப்பிடிச் சமாளிக்கிறதுன்னு உனக்குத் தெரியாதா?”

பெரியப்பாவின் பேச்சு ரிஷிக்கும் சரியென்றுதான் தோன்றியது. அன்னபூரணி தன் வாழ்க்கையின் நன்மையை மட்டுமே நாடுபவர். அவர் ஒருபோதும் தனக்குக் கெடுதல் நினைக்க மாட்டார். பவித்ராவின் தந்தை தன்னைக் கை நீட்டி அடித்து விட்டார் என்கின்ற கோபம்தான் அவருக்கு. அந்தக் காயம் குணப்பட சிறிது நாளாகலாம். அதற்காகத் தன் மனைவியை தள்ளி நிறுத்த முடியுமா?

“வா பவி.” மனைவியின் கைப்பிடித்து அவளை மாடிக்கு அழைத்துச் சென்றான் ரிஷி. பல நாட்கள் கழித்து இன்று அவளைப் பார்க்கிறான். ரிஷிக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது பெரும்பாடாக இருந்தது.

“பவீ!” ரூம் கதவை அடைத்ததுதான் தாமதம், மனைவியை இறுக அணைத்துக் கொண்டான். பவித்ரா எந்த மறுப்பும் சொல்லவில்லை. அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். மனைவியின் முகம் முழுவதும் ஒரு ஆவேசத்தோடு ஆசைதீர முத்தமிட்டான் கணவன். எதிர்ப்பு இல்லாதது போல எந்த இணக்கமும் அவளிடம் இருக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் ரிஷி பொருட்படுத்தவில்லை.

“பவி… பவி…” என்று அவளைக் கொஞ்சித் தீர்த்தான்.

“ஏய்! எத்தனை நாளாச்சு பேபி இப்பிடி உங்கூட இருந்து?!” அவர்களுக்கு நடுவில் எந்த மனஸ்தாபமும் வராதது போல பேசிக் கொண்டிருந்தான் ரிஷி. 

“பவி…” அந்த ஆழ்ந்த குரலில் பவித்ராவுக்கு இப்போது திக்கென்றது.

“பவி ஒரேயொரு தடவை, ப்ளீஸ்டா…” எங்கே அவள் மறுத்து விடுவாளோ என்கிற பயத்தில் ரிஷி மனைவியின் இதழ்களை மென்மையாக ஆக்கிரமித்தான். சில நிமிடங்களைத் தனதாக்கி அவளை அவன் விடுவித்த போது பவித்ராவின் கண்கள் கலங்கி இருந்தன.

“பவி! என்னாச்சு? பிடிக்கலையா?” குரலில் வலியைத் தேக்கி அவன் கேட்ட போது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“என்ன பவி?”

“ஒன்னுமில்லை த்தான்.” 

“எங்கிட்ட எதையும் மறைக்காதே, சொல்லு!” அவள் முகத்தைத் தன்னிரு கைகளாலும் பற்றிப் பிடிவாதமாகக் கேட்டான் ரிஷி.

“வேணாம், சொன்னா வருத்தப்படுவீங்க.”

“பரவாயில்லை, நீ சொல்லு பவி.”

“இந்தக் கை… இதுக்கு முன்னாடி… எத்தனைப் பொண்ணுங்களை…” முழுதாக முடிக்காமல் உதட்டைப் பற்களால் அழுத்தி வார்த்தைகளுக்குத் தடைபோட்டாள் பெண்.

“பவீ!” மனைவியை இறுக அணைத்த ரிஷியின் உடல் அழுகையில் இப்போது குலுங்கியது. அப்போதும் அவளை விலக்க அவன் நினைக்கவில்லை.

“தப்புப் பண்ணிட்டேன் பவி, சாரி ம்மா, என்னை மன்னிச்சுடு பவி.” அழுகையினூடே அவன் அவளிடம் கெஞ்ச பவித்ராவிற்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை. 

வாழ்க்கையை வாழத் தெரியாமல் நாகரிகம் என்ற பெயரில் திரியும் பல இளைஞர்கள் இன்று இப்படித்தானே இருக்கிறார்கள்! நம் முன்னோர்கள் வேலை வெட்டி இல்லாமலா இத்தனைப் பண்பாடுகளை நமக்கு வகுத்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்?! அனுபவசாலிகள், வாழ்ந்து பார்த்தவர்கள்… இப்படியிப்படி வாழ்ந்தால் நீ சுகப்படுவாய் என்று அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டுதானே நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்?! பவித்ரா கணவனைத் தேற்ற நினைக்கவில்லை. அதற்காக அவன் கண்ணீரில் அவள் குளிர் காயவும் நினைக்கவில்லை. சட்டென்று பேச்சை ஆரம்பித்தாள்.

“அத்தான்… நான் உங்கக் கூடக் கொஞ்சம் பேசணும்.”

“ம்…” மனைவியிடமிருந்து விலகிய ரிஷி முகத்தைத் தன் இரு கைகளாலும் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

“உட்காரு டா.” அவன் கட்டிலைக் காட்ட பவித்ரா அங்கே அமர்ந்து கொண்டாள். சற்று இடைவெளி விட்டு மனைவியைப் பார்த்தாற் போல ரிஷியும் அமர்ந்து கொண்டான்.

“சொல்லு பவி.”

“அத்தான்… நான் சில முடிவுகள் எடுத்திருக்கேன்.” அவள் சொல்லி முடிக்க ரிஷி விலுக்கென்று நிமிர்ந்தான்.

“முடிவுன்னா?!” அவன் சிந்தனை விபரீதமாக இருந்தது.

“பிரச்சினைகளுக்குள்ள உழல்றதே வாழ்க்கை இல்லை த்தான், அதுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்கணும், நம்மளைச் சார்ந்தவங்களைக் காயப்படுத்தாம ஒரு வாழ்க்கையை வாழணும்.”

“………..”

“அப்பா பண்ணினது ரொம்பப் பெரிய தப்பு, அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.” இப்போது பவித்ரா தொண்டை அடைக்கப் பேச்சை நிறுத்தினாள்.

“பரவாயில்லை ன்னு சொல்ல மாட்டேன், அவருக்கு என்னைத் தட்டிக் கேட்க, தண்டிக்க உரிமை இருக்கு, அதை அவர் நான் தனியா இருக்கும்போது பண்ணி இருக்கலாம், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு முன்னாடி… அது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.” ரிஷியும் தன் மன வேதனையைக் கொட்டினான்.

“சாரி…”

“நீ சொல்லும்மா.”

“அத்தான்… எது நடந்திருந்தாலும் இனி என்னோட வாழ்க்கை உங்களோடவும் ஹரியோடவும்தான், அதுல எந்த மாற்றமும் இல்லை.” 

“ம்…” இப்போது ரிஷியின் கண்கள் பளிச்சிட்டன.

“ஊர்ல கேட்கிறவங்க யாருக்கிட்டயும் நான் எதையும் மறைக்கலை, ஹரி உங்கக் குழந்தைன்னுதான் சொல்லி இருக்கேன்.”

“ஓ…”

“என்ன… கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த உண்மை எனக்குத் தெரியும், வீட்டுல யாருக்கும் தெரியாதுன்னு சின்னதா ஒரு பொய் சொல்லி இருக்கேன்.”

“ஓ…” ரிஷி இப்போது லேசாகத் திகைத்தான்.

“நீங்க ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் ஹரிதான் என்னோட மூத்த குழந்தை, அதுல எந்த மாற்றமும் இல்லை த்தான், நாளைக்கு எனக்கு எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் ஹரிதான் எல்லாத்துக்கும் முன்னாடி நிற்பான், அதுலயும் எந்த மாற்றமும் இல்லை.”

“ம்…” 

“ஏதாவது பேசுங்க த்தான்.”

“இந்தக் குழந்தை விஷயத்தை இந்த நிமிஷம் வரைக்கும் என்னால ஏத்துக்க முடியலை பவித்ரா, ஆனா எனக்கு நீ முக்கியம், என்னோட வாழ்க்கை முழுசுக்கும் எனக்கு நீ வேணும், நீயில்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனைக் கூடப் பண்ண முடியாது.”

“………”

“ஆனா, இந்தக் குழந்தையை மறுக்கும் பட்சத்துல நீ என்னை மறுப்பியா இருந்தா, இந்தக் குழந்தையை நான் ஏத்துக்கிறேன், உனக்காக… என்னோட பவித்ராவுக்காக ஏத்துக்கிறேன்.”

“ம்… காலம் நாம முடியாதுன்னு நினைக்கிற பல விஷயங்களைச் சுலபமா மாத்திடும் த்தான்.”

“அப்பிடி என்னையும் அதே காலம் மாத்தினா நான் சந்தோஷப்படுவேன், ஏன்னா… அந்தக் குழந்தையை நான் ஏத்துக்கிட்டா எம் பொண்டாட்டி ரொம்ப சந்தோஷப்படுவா.”

“கண்டிப்பா!”

“மேலே சொல்லு.”

“இப்போதைக்கு நான் யூகே வர்ற ஐடியால இல்லை த்தான்.”

“ஓ…” இப்போது ரிஷியின் முகம் வாடியது.

“எனக்காக ஒரு சில விஷயங்கள் நீங்க பண்ணிக் குடுக்கணும்.”

“என்ன வேணும் கேளு, உனக்கு இல்லாததுன்னு எங்கிட்ட எதுவுமே இல்லைடா!” ரிஷியின் குரல் இப்போது குழைந்தது.

“எனக்கு இதே ஊர்ல ஒரு வீடு வேணும் த்தான்.”

“சரி.”

“உங்களால முடியுமான்னு எனக்குத் தெரியலை, கொஞ்ச நாள் இதே ஊர்ல நாம மூனு பேரும் சேர்ந்து இருந்தா நல்லா இருக்கும் ன்னு எனக்குத் தோணுது.”

“யாருக்கு எதை நிரூபிக்கணும்னு நினைக்கிற பவி? நாம வாழுறது நமக்காக டா.”

“அது சரிதான், நான் இல்லேங்கலை, ஆனா ஒரு சில இடங்கள்ல மத்தவங்களுக்காகவும் நாம வாழ வேண்டி இருக்கு த்தான்.”

“ஓ…”

“என்னோட குடும்பம் இப்போ பயங்கரமா மனசளவுல காயப்பட்டிருக்கு, அதுக்கு மருந்து போட வேண்டிய கடமை எனக்கிருக்கு, அத்தான் எனக்கு முக்கியம்தான், அதுக்காக இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு வளர்த்த பெத்தவங்களை என்னால அம்போன்னு விட முடியாதில்லையா?”

“ம்…”

“ஊர், உலகம் என்ன வேணும்னாலும் பேசட்டும், எனக்கு யாரைப்பத்தியும் கவலை இல்லைன்னு உங்கக்கூட என்னால கிளம்பி வர இப்போ முடியாது த்தான்.”

“………”

“உனக்கு இப்பிடியொரு வாழ்க்கையைத் தேடித் தந்துட்டேனேம்மா ன்னு என்னோட அப்பா வருந்துறாங்க.” இப்போது ரிஷியின் முகம் லேசாகக் களையிழந்து போனது.

“அப்பிடியெல்லாம் இல்லைப்பா, நான் அத்தான் கூட சந்தோஷமா ஒரு வாழ்க்கை வாழுறேன்னு நான் அவங்க கண்ணு முன்னாடி வாழ்ந்து காட்டணும், அதுதானே த்தான் அவங்களுக்கு நான் குடுக்கிற சந்தோஷம்?”

“கண்டிப்பா.” சொல்லிவிட்டு ரிஷி தன் முகத்தை இன்னுமொரு முறை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

“கண்காணாத தேசத்துல நான் அமோகமா வாழலாம், நீங்க என்னை உள்ளங்கைல வெச்சுத் தாங்கலாம், ஆனா அது என்னோட அப்பாக்குத் தெரியாதே! காலம் பூரா அவர் ஒரு குற்ற உணர்ச்சியோடயே வாழப் போறாரே!”

“இப்ப நீ எடுக்கிற இந்த முடிவுக்கு உங்கப்பா ஒத்துக்குவாரா பவி?”

“கண்டிப்பா மாட்டாரு, அதுக்காக அவர் சொல்றபடி நான் கேட்க முடியுமா த்தான்?” 

“ம்…” ரிஷி அங்கே மேஜை மேல் இருந்த தனது அலைபேசியை எடுத்தான். யாரையோ அழைத்துவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தான். எதிர்முனை அழைப்பை ஏற்றிருப்பார்கள் போலும்.

“மாப்பிள்ளை, நான் ரிஷி பேசுறேன்.”

“சொல்லுங்க மச்சான்.” சாரங்கன் பேசுவது பவித்ராவுக்கும் கேட்டது.

“இதே ஊர்ல எனக்கொரு வீடு வேணுமே.”

“என்ன மச்சான் திடீர்னு?”

“இருந்தா நல்லதுன்னு தோணுது, அதுதான் குடும்பம் ன்னு ஆகிப் போச்சுதில்லை.”

“அதுவும் சரிதான்.” சாரங்கன் சிரித்தார்.

“எனக்கு இங்க யாரையும் தெரியாது, நீங்கதான் ஹெல்ப் பண்ணணும் மாப்பிள்ளை.”

“நோ ப்ராப்ளம் மச்சான், உங்க பட்ஜெட் என்ன?”

“பட்ஜெட்டெல்லாம் இல்லை மாப்பிள்ளை, பவித்ராவுக்கு வீடு புடிச்சிருந்தா சரி, அதுதான் இப்ப முக்கியம்.”

“ஓ… கதை இப்ப அப்பிடிப் போகுதா? நடத்துங்க நடத்துங்க.” சாரங்கன் சத்தமாகச் சிரிக்க பவித்ராவின் முகம் சிவந்து போனது. மனைவியின் கையை அன்போடு பற்றிக் கொண்டான் ரிஷி. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனைவியின் நாணம் கொண்ட முகம் அவனுக்கு விருந்தாக இருந்தது.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாப் பாருங்க மாப்பிள்ளை.”

“சரி மச்சான்.”

அந்தப் பேச்சை முடித்துக்கொண்டு இன்னும் யாரையோ அலைபேசியில் அழைத்தான் ரிஷி. அழைப்பு கொஞ்சம் தாமதமாகவே ஏற்கப்பட்டது.

“குட்மார்னிங் ஆஷ்லி, டிஸ்டர்ப் பண்ணுறேனா?” அழகான ஆங்கிலம் அவன் நாவில் புரண்டது.

“இல்லை சார், சொல்லுங்க.” தூக்கக் கலக்கத்தில் ரிஷியின் உதவியாளர் பேசுவது பவித்ராவுக்கு கேட்டது.

“புதுசா ஆரம்பிக்க இருக்கிற ‘லிவர்பூல்’ ப்ரான்ச் ஓட வேலையை அப்பிடியே நிறுத்துங்க ஆஷ்லி.”

“சார்!” ஆஷ்லி அங்கே அதிர்வது இங்கே இருப்பவர்களுக்குப் புரிந்தது.

“அவசரமா இங்க எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது ஆஷ்லி.”

“ஓ…”

“அங்க ரெடியா இருக்கிற அமௌன்ட்டை வேற எதுக்கும் இப்போதைக்கு யூஸ் பண்ண வேணாம்.”

“எவ்வளவு அமௌன்ட் தேவைப்படும் சார்?”

“சரியாத் தெரியலை, ப்ராப்பர்ட்டி ஒன்னு வாங்கப் போறேன், ரெண்டு சீ வரைக்கும் போகும்னு நினைக்கிறேன்.”

“அவ்வளவு பெரிய அமௌன்ட்டை எப்பிடி சார் அனுப்புறது?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது ஆஷ்லி, லீகல் ஆர் இல்லீகல்…” ரிஷியை மேலே பேச விடாமல் மனைவியின் கை அவனது விரல்களை அழுத்தியது. ரிஷி சட்டென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.

“லீகலா எப்பிடியெல்லாம் அனுப்ப முடியுமோ அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க ஆஷ்லி, ஆலிவர் கிட்டயும் சொல்றேன், அவனும் ஏதாவது ஐடியா குடுப்பான்.”

“ஓகே சார்.” ரிஷி பேசி முடித்த போது பவித்ராவின் முகம் சிந்தனையைக் காட்டியது. ரிஷி மனைவியின் முகத்தையே இமைக்காமல் சில நொடிகள் பார்த்திருந்தான்.

“என்னம்மா?”

“வீடு வாங்கணும்னு அவசியமில்லை த்தான்… வாடகைக்கும் எடுக்கலாம்.” தயங்கிய படி சொன்னது பெண்.

“பவி… நீ எம் பக்கத்துல இருக்கும் போது நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன், எவ்வளவு நிம்மதியா ஃபீல் பண்ணுறேன்னு உனக்குத் தெரியாது, அதுக்காக என்ன விலை குடுக்கவும் நான் தயார் பேபி.” கரகரத்த குரலில் ரிஷி சொன்ன போது பவித்ராவின் கண்களும் கலங்கிப் போனது.

ரிஷி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். இருவருமே அப்போது அழுதார்கள். ஒருவர் மேல் மற்றையவர் அபரிமிதமான பாசம் வைத்திருந்த அந்த இருவருமே அப்போது அழுதார்கள்!

***

அன்றைக்கு இரவு உணவின் போது அத்தனைப் பேரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள். அன்றைய பொழுது முழுவதும் அன்னபூரணி ரிஷியிடம் பேசவில்லை. ரிஷிக்கு தன் பெரிய தாயின் கோபம் புரிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதி காத்தான். இப்போது எது பேசினாலும் தேவையில்லாத மனஸ்தாபமே விளையும்.

“பெரியப்பா.” உணவு உண்ணும் போது ரிஷி பேச்சை ஆரம்பித்தான். யார் என்ன சொன்னாலும் அவன் செய்யத் திட்டமிட்டு இருப்பதை குடும்பத்தவர்களிடம் சொல்ல வேண்டிய கடமை அவனுக்கிருந்தது.

“சொல்லு ரிஷி, பவித்ரா என்ன சொல்றா?” பவித்ரா என்ற பெயரைச் சொன்னதும் அன்னபூரணியின் முகம் கடுகடுத்தது. பெரிய தாயின் முகத்தை ஒரு நொடி பார்த்த ரிஷி புன்னகைத்தான்.

“குடும்பம் ன்னா எல்லாம்தான் ரிஷி, எல்லாரையும் எல்லா நேரத்திலயும் திருப்திப்படுத்த முடியாதுப்பா.” இது பாண்டியன்.

“தனியா வீடொன்னு பார்த்து அங்க இருக்கலாம் ன்னு சொல்றா.”

“ம்… நல்லதுதான்.”

“ஆமா ண்ணா, பவித்ரா சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது.” காயத்ரியும் சட்டென்று சொன்னாள்.

“அவங்க வீட்டுல இப்போ அந்தப் பொண்ணை ஏதாவது சொல்லிக் குடைச்சல் குடுத்துக்கிட்டே இருப்பாங்க, சீக்கிரமா வீட்டு விஷயத்தை முடிக்கிறதுதான் சரி மச்சான்.” இது சாரங்கன்.

“பவித்ராவோட அப்பா மட்டுந்தான் கொஞ்சம் ஆத்திரப்படுறாரு போல மாப்பிள்ளை.” ரிஷி மனைவியின் வீட்டு நிலைமையை விளக்க முயன்றான்.

“ஓ… அப்போ அவங்க அம்மா கொஞ்சம் அவருக்கு எடுத்துச் சொல்லலாமே மச்சான்.”

“கேட்கிறவங்களுக்குத்தானே சொல்லலாம், தான் மட்டுமேதான் பேசுவேன்னா அவங்களும் என்ன பண்ணுவாங்க மாப்பிள்ளை?”

“அதுவும் சரிதான்.”

“இப்ப என்ன பண்ணப் போறே ரிஷி?” பேச்சைத் தொடர்ந்தார் பாண்டியன்.

“வீடொன்னு வாங்கலாம் ன்னு முடிவு பண்ணி இருக்கேன் பெரியப்பா.”

“நல்லது, சீக்கிரமா வேலையை முடி, பணம் ரெடியா வெச்சிருக்கியா?”

“இருக்கு பெரியப்பா.”

“நல்லது, தெரிஞ்சவங்க ஒரு வீடு விலைக்கு வருதுன்னு அன்னைக்குப் பேசினாங்க, நாந்தான் சரியாக் காதுல வாங்கலை, நாளைக்கே அதை என்னன்னு பார்க்கிறேன்.”

“சரி பெரியப்பா.”

“மாப்பிள்ளை, நீங்களும் உங்களுக்குத் தெரிஞ்ச இடங்கள்ல கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க.”

“சரி மாமா.” இப்படி இங்கே இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கே பவித்ராவும் அவள் வீட்டில் இதே பேச்சையேப் பேசிக்கொண்டு இருந்தாள்.

“அப்பா, இன்னைக்கு நான் அத்தானை போய் பார்த்தேன்.” எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் தடாலடியாகப் பேச்சை ஆரம்பித்தாள். வீட்டிலிருந்த அத்தனைப் பேரும் ஆடிப் போய் விட்டார்கள்.

“அத்தானா?!” ஒரு பிரளயமே வெடிக்கப் போகிறது என்று அனைவரும் ஏதிர்பார்த்திருக்க நிதானமாகக் கேட்டார் பாஸ்கர்.

“ஆமா ப்பா.” எந்தவித பதட்டமும் இல்லாமல் பதில் சொன்னாள் பெண். பாஸ்கர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. முகத்தில் அத்தனை வேதனைத் தெரிந்தது. தான் நேற்று அத்தனைச் சொல்லியும் இன்றைக்குத் தன் பெண் அவள் கணவனைப் போய் பார்த்திருக்கிறாள் என்றால்… இதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்று நினைத்திருப்பார் போலும்.

“இப்போ என்னால அவர் கூட கிளம்பி யூகே வர முடியாதுன்னு சொல்லிட்டேன் ப்பா.”

“இப்போ முடியாதுன்னா என்ன அர்த்தம்? அப்புறமா முடியும்னா?!”

“கொஞ்ச நாள் போகட்டும் ன்னு பார்க்கிறேன் ப்பா.”

“………….”

“அதுக்காக இப்பிடியே இங்க உட்கார்ந்திருந்தா உங்களுக்குத்தான் வீணான கஷ்டம். அதனால…” என்று ஆரம்பித்து சிறிது நேரம் பேசினாள் பவித்ரா. தன் மனதில் இருப்பவற்றைக் கொட்டினாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்கு எதிராக அங்கே யாரும் எதுவும் பேசவில்லை. இதுதான் என் முடிவு என்பது போல திட்டவட்டமாகப் பேசினாள் பவித்ரா!